’ரிஷி’ கவிதைகள்

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

 

  1. சாக்கடையல்ல சமுத்திரம்

 

ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன்.

உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்…

வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து

இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி

அள்ளும் கொள்கல அளவுக்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொள்ளும் நதியின் நன்னீர்

பொங்குமாக் கடலின் மங்கலத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கும்;

இனங்கண்டுகொள்ளும் தன்னை அத னோர் அங்கமாய் என்றே இன்றுவரை நம்பியிருந்தேன்.

தன்மேற் செல்லும் தோணியிலிருந்தும் படகிலிருந்தும்

சாகரப்பரப்பில் சவாரி செய்யும் கப்பலின் பிரம்மாண்டத்தைப்

புரிந்துகொண்டிருக்கும் என்று உறுதியாயிருந்தேன்.

வரம்புக்குட்பட்ட தன் நீரளவிலிருந்து விரிகடலின் அகல்விரிவை

விளங்கிக்கொண்டிருக்கும் என நினைத்தேன்.

சிறுகுழந்தையாய் தன்னில் வந்துசேரும் நதிநீர்களை

அரவணைக்கும் சமுத்திரத்தின் அருமை பெருமையை

ஆராதிக்க அதற்குத் தெரிந்திருக்கும் என்று தீர்மானமாயிருந்தேன்.

நதியோ இன்று சமுத்திரப் பிறப்பைச் சாக்கடையாக்கிப் பழித்து

காறித்துப்பிய வன்மத்தில்

விண்விண் என்று வலிக்கிறது; கண்கலங்குகிறது….

கடந்துவிடும் இதுவும்.

வறண்டுபோகலாம்; வரலாற்றில் மட்டுமே காணக்கிடைக்கலாம்

நதியொரு நாள்;

நிரந்தரம் சாகரம் நான் வாழுங்கால மெல்லாம்.

இதுநாள் வரை நதிக்கரையோரமிருந்தேன் நல்விருந்தாடியாய்….

உரித்தாகும் அதற்கு என் அன்பும் நன்றியும்.

சாகரப் பிரவாகத்தில் நான் இரண்டறக்கலந்துவிட்ட சிறுதுளி யென்றும்.

 

 

  1. பிறவிப் பெருங்கடல்

 

சமுத்திரத் தண்ணீர் சாப்பாட்டிற்கு சரிவராது என்பாய்;

சதாசர்வ காலமும் சுனாமியைக் கக்கக் காத்துக்கொண்டிருக்கிறது என்பாய்.

சாப்பாடு மட்டுமல்லவே வாழ்க்கை!

சத்தியத்திற்குக் கட்டுப்பட்டதேபோல்

தரையரண் தாண்டி ஊரில் புகா சமுத்திரம்

உத்தமம் தான்.

வெளித்தள்ளிய ஆழிப்பேரலைகளினூடே

நேராப் பிரளயம் என் நெஞ்சில் தளும்புகிறது.

நன்றிக்குரியது.

சிறியதும் பெரியதுமாய்

சமுத்திர உயிரிகள் லட்சோபலட்சம்

சொல்லித் தீரா கவிதைவரிகளாய்.

என்றேனும் எழுதிப் பார்ப்பேன்…

சென்று வருகிறேன் நதியே

சாகர சங்கமம் பிறவிப் பயனாக.

 

 

 

 

  1. தந்திர வணிகம்

 

அறிவார்த்தமாய் பேசுவதான பாவனையில்

விலாவரியாய் வர்ணித்துக்கொண்டே போகலாம்

OUT OF CONTEXT_இல் வரிகளைக் கடைவிரித்தால்

விற்பனை அமோகம் தான்.

அரசுப்பேருந்தில் பெண்ணை இடிப்பவனை சாடிக்கொண்டே

அவனை இடம்பெயர்த்துவிடும்

பேராண்மையாளர்களை நிறையப் பார்த்தாயிற்று.

பெண்ணுரிமை முழக்கமிட்டு கூடவே

பெண்ணைப் பொருளாக்கும் வழக்கத்தை வலியுறுத்தும்

ஒளி-ஒலி ஊடகங்களின் இரட்டைவேடம் அருவருப்பூட்டுகிறது.

அங்கங்கே ஒப்பனை கலைந்தொழுக

அம்பலமாகிவிடும் பொய்முகங்கள்.

பொங்கியெழவும் புறக்கணிக்கவுமாய் என்றுமுண்டு

அற்பத்தனங்கள் அன்றாடம் அற்பப்பதர்கள் அனேகம்

 

 

  1. அம்பலம்

 

ஆரூடக்காரியல்ல நான்;

உளவியல்நிபுணரும் அல்ல தான்.

அது ஏதோ தெய்வசக்தி ஒன்றுமில்லை.

என்றாலும் சிலர் எதிரே வரும்போதே

அவர்கள் கேட்கவிருப்பதும்

அந்தக் கேள்விகளுக்குள் கரந்துகிடப்பதும்

தெளிவாகிவிடுகிறது!

காலை வைப்பதற்கு முன்பாகவே கண்வழியே

உணரக் கிடைக்கும் நீரைப்போல் எனலாமா?

வேண்டாம்- சின்னத்தனங்களுக்கும் கல்மிஷங்களுக்கும்

தண்ணீரை உவமையாக்குவது முறையல்ல.

குப்பைத்தொட்டி யிருக்குமிடத்தை நெருங்குகையிலேயே

குமட்டிக்கொண்டுவருவதைப்போல் என்று சொல்லலாமா?

துப்புரவுப் பணியாளர்களைக் கேவலப்படுத்துவதாய்

திரிக்கப்பட்டுவிடலாம். வேண்டாம்.

உள்ளுணர்வோ, பட்டறிவோ, காலமோ, கனிந்துவரும் ஞானமோ……

இன்னும் சில நாட்களில் விரியப்போகும் புத்தகத்தின்

நஞ்சுநிறை பத்திகள் அல்லது பக்கங்கள் இரண்டை

நன்றாகவே வாசிக்கமுடிகிறது என்னால் இன்றே!

———————————————————

Series Navigationவாழ்க நீ எம்மான் (2)அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலிதொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்குமருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்ராதாதினமும் என் பயணங்கள் – 10திண்ணையின் இலக்கியத் தடம் – 28ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்

2 Comments

  1. லதா ராமகிருஷ்ணனின் கவிதை வரிகளில் எதிரொலிக்கும் சுத்தியல் அடிகளில் கனல்பொறிகள் தெறிக்கின்றன.

    இறுதி வரிகள் 20 மேற்பட்டவை மீண்டும் வருவது ஏனென்று தெரியவில்லை. கருத்தைச் சுருக்கி வலியுறுத்தாமல் முழுப் படைப்பை வலுவிழக்கச் செய்கின்றன.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar latha ramakrishnan

    திரு.ஜெயபாரதனுக்கு நன்றி. கடைசியில் தவறுதலாக சில வரிகள் மீண்டும் அச்சாகியுள்ளன. இன்றுதான் பார்த்தேன். திண்ணை ஆசிரியரிடம் அவற்றை நீக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்.
    தோழமையுடன்
    லதா ராமகிருஷ்ணன்[ரிஷி]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *