உயர்ந்த உள்ளம் உயர்த்தும்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

rajid

மண்ணைப் பரப்பி அதில் ஆனா ஆவன்னா எழுதிப்படித்த காலம். எல்லா எழுத்துக்களையும் அப்படித்தான் படித்தேன். எழுதினேன். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வெறும் கூரைவீடுகளும் ஓரிரு ஓட்டு வீடுகளும்தான். எங்கள் வீடு மட்டும்தான் மாடிவீடு. ‘மெத்த வீடு’ என்பது எங்கள் குடும்பப் பெயர். எங்க அத்தா மட்டும்தான் சிங்கப்பூரில் சம்பாதித்துக் கொண்டிருந்தார். சிங்கப்பூருக்குப் போனால்தான் மாடிவீடு கட்டமுடியுமென்று கூரைவீட்டுக்காரர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.  அத்தா இப்போது சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை அடிக்க புளியங்குச்சி சீவி வைத்திருப்பார்கள். எங்கள் வீட்டில் என்னை ‘டா’ போட்டுக்கூட யாரும் பேசியதில்லை. அவ்வளவு மரியாதை எனக்கு.

நேற்றுவரை எனக்குத் தெரியாது அத்தாவோடு நானும் சிங்கப்பூர் போவேனென்று. ஒரு நாள் இரவு அத்தாவும் அம்மாவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது எடுத்த முடிவாகத்தான் இருக்கும். அத்தா என்னிடம் ‘உங்களுக்கு சம்மதமா அய்யா’ என்றார். ‘சம்மதமத்தா’ என்றேன்.

நாகப்பட்டிணம் துறைமுகத்தில் ரஜூலா கப்பல் 5 மைல் தூரத்தில் மிதந்துகொண்டிருந்தது. நாங்கள் கப்பலில் ஏறியதும் அத்தா ஓடோடிப்போய் ஓரிடத்தில் தன்  போர்வையை விரித்து இடம்போட்டார். அப்போதெல்லாம் இருக்கை எண், படுக்கை ஏண், முன்பதிவு என்பதெல்லாம் கிடையாது. யார் யார் எந்த இடத்தை பிடிக்கிறார்களோ அந்த இடத்தில் சிங்கப்பூர் சேரும்வரை இருந்துகொள்ளலாம். அத்தா மடியில்தான் நான் படுத்துக்கொள்வேன். சிறகு முளைக்காத குஞ்சை ஒரு சிட்டுக்குருவி பார்த்துக்கொள்வதுபோல் என்னை அத்தா பார்த்துக்கொண்டார். நான் விழிக்கும்போதெல்லாம் அத்தா உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார். உதட்டில் எப்போதும் மூன்றாம் கலிமாவும் ஆயத்துல் குர்ஷியும்தான் இருக்கும். அத்தா எல்லாருக்கும் சொல்வார். இந்த இரண்டும்தான் நமக்கு இரண்டு கண்கள் என்று.

சிங்கப்பூர் வந்து சேர்ந்துவிட்டோம். இறங்கியபிறகும் இரண்டு மூன்று நாட்கள் சிங்கப்பூரே ஆடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. கேம்பல் லேனில்தான் அத்தா கடை. அது ஒரு ஒட்டுக்கடைதான். சாமான்களை எடுத்து உள்ளே வைத்தால் வெளியே ஒருவர் படுக்கலாம். பின்னால் ஒருவர் படுக்கலாம். பல கடைகளுக்கு ஒரு கழிப்பிடம். எங்கள் கடைக்குப் பக்கத்தில்தான் முக்தார்பாயின் தள்ளுவண்டி உணவுக்கடை. புலாவ் அரிசிக்கஞ்சி, புட்டுமாய், ரொட்டிபரோட்டா, காபி, டீ, வடை என்று எல்லாமே அந்தக் கடைக்குள் எப்படியோ தயாராகிறது. நான் போனால் புலாவ் அரிசிக்கஞ்சி ஒரு கோப்பை கொடுப்பார். ‘நிறைய குடி உடம்புக்கு நல்லது’ என்பார். ஒரு கோப்பை 5 காசுதான். எனக்கு எதற்குமே காசில்லை. ‘இது உன் கடை’ என்பார். அத்தா சொல்லித்தான் அவர் கருஞ்சீரக வடையை அறிமுகப்படுத்தினார். அந்த வடை இனிப்புநீருக்கு நல்லது என்று எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து வாங்கிச் சென்றார்கள். அந்த வடைக்குப் பிறகுதான் அவர் வியாபாரம் பல மடங்கு உயர்ந்தது.

கடைக்குப் பின்னால் முத்தார்பாயின் மகன்  நிஜாம் கோப்பைகளைக் கழுவிக்கொண்டிருப்பான். ‘நான் கழுவுகிறேன். நீ ஸ்கூலுக்குப் போ’ என்பேன். வந்து வந்து பார்த்துக்கொள்வேன். கோப்பைகள் அதிகம் கிடந்தால் கழுவிவிட்டுப் போவேன். தமிழ் படிக்க ரொம்ப தூரம் போகவேண்டும். அத்தாவை விட்டுப்போக எனக்கு மனசு வரவில்லை. படிக்க ஆர்வமுமில்லை. தொழும்நேரம் வந்துவிட்டால் அப்படியே போட்டுவிட்டு அத்தா பின்னால் தொழப்போய்விடுவார். நானாகத்தான் பார்த்துக்கொள்வேன். எந்த வேலையையுமே அத்தா எனக்குச் சொன்னதில்லை. கடைக்குச் சரக்குப் போடுபவர்களுக்கு  அத்தா தவணையில்தான் காசு கொடுக்கிறார். மிக மரியாதையாக வாங்கிக்கொண்டு போவார்கள். அத்தா எப்போதும் கலிமாவிலேயே இருப்பது எனக்கு மட்டும்தான் தெரியும். கையில் மணியெல்லாம் வைத்துக்கொண்டு விளம்பரம் செய்துகொள்ளமாட்டார். முக்தார்பாய் ஒரு தடவை சொன்னார். ‘உங்களுக்கு எந்த வேலையும் பாதிக்காமல் முகம்மது என்  கடையில் வேலை  செய்யட்டும். இப்போதும் அவர் செய்துகொண்டுதான் இருக்கிறார். ஊருக்கு காசு அனுப்புவது என் பொறுப்பாக இருக்கட்டும். நீங்கள் கடை வரவுசெலவை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று. ‘உங்களுக்கு சம்மதமா அய்யா’ என்று அத்தா கேட்டார். ‘சம்மதமத்தா’ என்றேன். நானும் நிஜாமும் நெருங்கிய நண்பர்களானோம்.

சிவாஜிகணேசன் நடித்த தூக்குத்தூக்கி படத்தின் ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ என்ற பாட்டு  போகிற பக்கமெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது. எங்கள் கடையிலும் ஒரு கிராமபோன் பெட்டி இருக்கிறது. அத்தா கே.பி. சுந்தராம்பாள் பாடல்களை விரும்பிக்கேட்பார். வேடிக்கையாகச் சொல்வார். ‘இந்த உலகமே எனக்குச் சொந்தமானால் அத்தனையையும்  கொடுத்துவிட்டு  இந்தக் குரலை வாங்கிக்கொள்வேன்’ என்று. நிஜாம்தான் எனக்கு தூக்குத்தூக்கி பாடல்  இசைத்தட்டை  30 காசுக்கு வாங்கித்தந்தான். அதை அடிக்கடி நான் போட்டுக்கேட்டேன். தட்டில் ஓட்டை விழும்வரை கேட்டேன். ஒரு தடவைகூட அத்தா என்னிடம் குறைபட்டுக்கொள்ளவில்லை. அந்த இசைத்தட்டு எப்படி வந்தது என்றுகூட கேட்கவில்லை. கடையில் காசெடுத்து வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம் என்கிற அறிவும் எனக்கு இருந்ததில்லை.

அப்போதுதான் அந்தப்படம் ரெக்ஸ் தியேட்டருக்கு வந்தது. அந்தப் படத்தை எப்படியாவது பார்த்துவிட ஆசைப்பட்டேன். அத்தாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். தன் எல்லா சுகங்களையும் இழந்துதான் அத்தா மெத்தவீடு கட்டினார். அவர்களிடம்போய் என்சுகம் இதுதான் என்று எப்படிச் சொல்வது. நிஜாம்தான் சொன்னான். ’10 மணி ஆட்டத்துக்கு போ. வெளியேதான் படுக்கிறாய். அத்தா வந்து உன்னை தொந்தரவு செய்ததே இல்லை. இரண்டு தலையணைகளை வைத்து போர்த்திவிட்து நீ போ. 1 மணிக்கெல்லாம் வந்துவிடலாம்.’ என்று. 50 காசு தந்தான். ‘முறுக்கும் மிக்சரும் வாங்கிக்கொள்’ என்றான். படத்துக்கு 25 காசுதான்.

அன்றுமுழுதும் எப்போது அந்த 10 மணி வரும் என்று காத்திருந்தேன். அத்தா 9 மணிக்கே போய் படுத்துவிட்டார். 10  மணிக்கு நான் கிளம்பினேன். படம் இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தது. கையில் இருந்த முறுக்கு நொறுங்கிக்கொண்டிருந்தது. திடீரென்று படம் நிறுத்தப்பட்டது. ‘கேம்பெல் லேனில் ஒரு கடை தீப்பற்றி எரிகிறது.. அங்கிருந்து வந்தவர்கள் உடனே ஓடுங்கள்’ என்று மலாயிலும் தமிழிலும் சொன்னார்கள். கையிலிருந்த முறுக்கையும் மிக்சரையும் கொட்டிவிட்டு விழுந்தடித்து ஓடினேன். எரிந்துகொண்டிருந்தது எங்கள்  கடைதான். நான் போட்டுவைத்த தலையணையும் போர்வையும் புகைந்துகொண்டிருந்தது. ‘அத்தா அத்தா’ என்று கதறினேன். முத்தார்பாய் வந்து என்னை அணைத்துக்கொண்டார். ‘அத்தாவுக்கு ஒன்றுமில்லை. இப்போது ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருக்கிறார்கள்’ என்றார். ‘வாங்க பாய். போவோம்’ என்றேன். உடனே சென்றோம். 3 மணிநேரம் கழித்து அத்தாவை வெளியே கொண்டுவந்தார்கள். நெருப்பு அவரை தீண்டவே இல்லை. புகையில் மயங்கியிருக்கலாம். கலிமா சொல்லும் உதடுகள் குவிந்தபடியேதான் இருக்கிறது. ‘சாப்பிட்டீங்களாய்யா’ என்று கேட்பதுபோல் இருக்கிறது முகபாவனை. கிட்டப்போய் ‘அத்தா’ என்றேன். ‘அத்தாவுக்கு இன்னும் மருந்துகள் கொடுக்கவேண்டும். காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். வா நாம் வீட்டுக்குப்  போவோம்’ என்றார். இரவு முழுதும் தூங்கவில்லை. காலை  10 மணிக்கு அத்தாவை படுக்கையோடு இறக்கி கடைக்கு வெளியிலேயே வைத்தார்கள். அத்தா மவுத்தாகிவிட்டது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ஏகப்பட்ட கூட்டம். அத்தாவுக்கு நெருக்கமாக இத்தனை பெரிய கூட்டம் இருக்குமென்று எனக்குத் தெரியவே தெரியாது. முக்தார்பாய் கடையைத் திறக்கவில்லை. என்னோடுதான் இருந்தார். வந்தவர்களெல்லாம் காகித உரையில் காசு வைத்து என் கைகளிலும் சட்டைப்பையிலும் மடியிலும் சட்டைக்குள்ளுமாக தந்துவிட்டுப் போனார்கள். எனக்குள் ஒரு தீப்பொறி தகித்தது ஒவ்வொரு காகிதஉரையும் அதை ஊதிஊதி எரியவிட்டது. அத்தனை உரைகளையும் அள்ளி வீசினேன். ‘இவ்வளவு காசுகளைத் தரத்தான் நீங்க மகுத்தானீங்களா அத்தா’ என்று கத்தினேன். முக்தார்பாய் என்னை சமாதானப்படுத்தினார். எல்லாரும் உரைகளைப் பொறுக்கி முக்தார்பாயிடம் தந்தார்கள். அரசாங்கம் அத்தாவுக்கு 2000 வெள்ளி தருவதாகச் சொன்னது. எனக்கு 18 வயது ஆகவில்லை. முக்தார்பாய்தான் பாதுகாப்பாளராக இருந்துகொண்டு அந்தக் காசை வாங்கினார். அந்தக்காசு அம்மா கைக்கு சேரும்வரை அவர் சிரிக்கவே இல்லை. அம்மாவும் அக்காவும் எப்படி இதைத் தாங்கிக்கொள்வார்கள்? திகிலாக இருந்தது.

அக்காவுக்கு   டாக்டர்மாப்பிள்ளையை பேசிமுடித்திருந்தார்கள். முக்தார்பாய் காலாங் விமானநிலையம் வந்து என்னை ஊருக்கு அனுப்பிவைத்தார். அக்காவின் கல்யாண ஏற்பாடுகள் அத்தாவின் இழப்பை மறக்க உதவியது. நான் ஊர்போய் இறங்கினேன். ஊரே என்வீட்டில் திரண்டிருந்தது. ஒரு  வயதான பாட்டி என்னைக் கட்டிப்பிடித்து அழுதார். என்னை அழைத்துக்கொண்டு அம்மாவிடம் சென்றார். ஊரே கூடி நின்றது. அம்மாவை வெள்ளைச்சேலையில் பார்க்கிறேன். உலை கொதிக்கும்போது விறகு மோதி பானை உடைகிறது. திகைக்கிறேன். அது  அம்மாவா என்று அனுமானிப்பதற்குள் ‘பறிகொடுத்துட்டியே அய்யா’ என்று கதறினார். அந்தச் சொற்கள் அந்தக் கூட்டத்தையே கதறவைத்தது. மாப்பிள்ளை வீட்டாரும் வந்திருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அம்மா சமாதானமானார். என்னை அருகே அழைத்து என் தலையைக் கோதினார். மாப்பிள்ளையின் தகப்பனார் வந்தார். ‘இனிமேல்தான் நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய காசு கையில் இருந்தது. அக்கா கல்யாணம் வெகு விமரிசையாய் முடிந்தது. அப்போதெல்லாம் 200 ரூபாய்க்கு சென்னையில் ஒரு மனைக்கட்டு வாங்கலாம். 50 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் ஊரில் வாங்கலாம். 1 வெள்ளிக்கு 1 ரூபாய்தான் அன்றைய மதிப்பு. அத்தா இல்லாத சிங்கப்பூர் என்னை சுட்டது. சிங்கை செல்வதை தள்ளிப்போட்டேன். 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனக்கும் திருமணமாகி இப்போது எனக்கு 5 வயதில் ஒரு மகள். எத்தனை சுகங்களை அத்தா இழந்து எங்களை உருவாக்கினார். என்  சுகத்தையே நான் நினைத்துக்கொண்டிருக்கலாமா? அறைந்துகொண்டேன். அடுத்தநாளே சிங்கப்பூர் செல்ல ஏற்பாடுகள் செய்தேன். புறப்பட்டேன்.

கேம்பெல் லேன் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எங்கள் கடை இடிக்கப்பட்டு வேறொரு புது கட்டடம் முளைத்திருந்தது. முக்தார்பாய் இப்போது ஒரு காஸ்மடிக் கடை திறந்து ஜப்பானிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் இன்னும் பல நாடுகளிலிருந்தும் சரக்குகளை நேரடியாக வாங்கி வியாபாரம் செய்துவருகிறார். தனிவீடு வாங்கி எங்கோ தங்கியிருக்கிறாராம். எங்கள் கடைக்கு செய்தித்தாள்களை போட்டுவந்த மனோகரனை சந்தித்தேன். என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். என்னால் மறக்கவேமுடியாது அத்தாவை என்றார். நான் சும்மாதான் இருக்கிறேன் என்றேன். தான் ஊருக்குப் போவதாகவும் இதை எடுத்து நடத்த பலபேர் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார். இதில் உனக்கு நல்ல மிச்சம் கிடைக்கும். நீயே எடுத்து நடத்து என்று அத்தனை வாடிக்கையாளர்கள் முகவரியையும் தந்தார். எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு அடுத்தநாளே ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். முக்தார்பாய் கடையில் பலர் என்னிடம்தான் செய்தித்தாள் வாங்குகிறார்கள். ஒரு தடவை முக்தார்பாயை பார்க்கப்போனேன். அவர் ஜப்பான் போயிருக்கிறார் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஓடியது. ஊருக்கு நிறைய காசு அனுப்பினேன். துணிமணிகள் செண்டுகள் ரொட்டிகள் சாக்லெட்டுகள் காலணிகள்  என்று நிறைய பார்சல் போட்டேன். ஊருக்குப் போய்வரலாம் என்று விரும்பினேன்.  ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன்.

காலை 3 மணியிலிருந்து  நான் செய்தித்தாள் விநியோகிக்கவேண்டும் ஏராளமான மின்தூக்கிகளில் ஏறி இறங்கவேண்டும். மாடிப்படிகளில் ஓடவேண்டும். ஒரு மின்தூக்கியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். சிறுநீர் முட்டியது. மின்தூக்கியிலேயே அதற்கு விடுதலை தந்தேன். பத்தாம் மாடியில் வெளியேறினேன். கையும் களவுமாய் பிடிபட்டேன். நிச்சயமாக தப்பிக்கமுடியாது. பலபேர் இதை செய்துகொண்டிருக்கிறார்கள். நான் மட்டும்தான் பிடிபட்டேன். மொத்தப்பழியும் என்மேல் விழுந்தது. ஒரு பெரிய தொகையை அபராதம் என்றது அரசு. அதை தவணை முறையில் செலுத்தினாலே நாலைந்து மாதத்திற்கு ஊருக்கு ஒன்றும் அனுப்பமுடியாது. ஆறிக்கொண்டிருந்த அந்தப் புண்ணில் இன்னொரு கத்திவெட்டு விழுந்தது. என்னிடம் வேலை செய்த பையன் கள்ளக்குடியேறியாம். வழக்கு பதிவானது. விசாரிக்கப்பட்டேன். சிறைத்தண்டனை அபராதம் இரண்டும் உண்டாம். ‘எனக்கு படிப்பறிவில்லை. எனக்குத் தெரியாது’ என்றேன். அதிகாரிகள் குடைந்தார்கள். ஒரு பட்டாம்பூச்சியைவிட நான் வெகுளி என்று  விளங்கிக்கொண்டார்கள். எனக்குப் படிப்பறிவு இல்லாததால் எனக்குத் தெரியாது என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். சிறைதண்டனையிலிருந்து தப்பித்தேன். எனக்கு படிக்க ஆர்வமில்லாமல் போனதற்குக் காரணம்கூட இந்த நிலையில் நான் தப்பிக்கத்தானோ? யாருக்குத் தெரியும்? மீண்டும் ஒரு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. என் கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது. அதைச் செலுத்துவதென்றால் 6 ஆண்டுகளுக்கு நான் ஊருக்கு காசு அனுப்பமுடியாது. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இரவெல்லாம் தொழுது துஆ கேட்டேன். சில சமயங்களில் 10ஆம் மாடியிலிருந்து குதித்துவிடலாம் என்று நினைத்தேன். மனைவியும் மகளும் சட்டையைப் பிடித்து இழுத்தார்கள். அவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் எப்போது வருவேனென்று. ‘ஒரு கடை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது முடிந்துவிட்டால் நிறைய சம்பாதிக்கலாம். அதை முடித்துவிட்டு வருகிறேன்’ என்று பொய் சொன்னேன். உண்மை தெரிந்தால் உருக்குலைந்து போவார்கள். எத்தனை நாட்கள் மறைப்பது?

மீண்டும் முக்தார்பாயைப் பார்க்கச்சென்றேன். அந்தச் சீருடை காவலாளி என் பெயரை எழுதித்தா என்றான். நான் எழுதினால் அது ஆங்கிலமா தமிழா என்று புரிவதற்கே அவனுக்கு அரைமணி நேரமாகும். என் எழுத்து எனக்கே சகிக்காது. என் பலவீனத்தை அவனிடன் ஏன் காட்டவேண்டும்? திரும்பிவிட்டேன்.

அத்தா அடிக்கடி கனவில் வந்தார். ‘நீங்கள் அனாதையாக்கமாட்டீர்கள் மகனே’ என்றார். உடனே எழுந்து தகஜ்ஜத் தொழுதேன். யாசின் ஓதி ஹதியா செய்தேன். திரும்பத் திரும்ப அதே கனவு. திரும்பத் திரும்ப ஓதியதில் யாசின் சூரா மனப்பாடமாகிவிட்டது. இந்த வேதனை என்மீது இறங்கியதற்குக் காரணமே நான் மனப்பாடம் செய்யத்தானோ? யாருக்குத் தெரியும்? எல்லா நம்பிக்கைகளும் வற்றிவிட்டன. மகுத்தாகிவிட்டால் தேவலாம் என்று ஆசைப்பட்டேன்.

முக்தார்பாய் கடையில் சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் காசு வசூலிக்கப் போனேன். ஒரு கை என் தோளில் விழுந்தது. திரும்பினேன். கோட்டுசூட்டில் ராஜ்கபூர் மாதிரி நின்றுகொண்டிருந்தார் முக்தார்பாய். ‘எங்கே போயிருந்தாய்? எங்கேயெல்லாம் உன்னைத் தேடினேன் தெரியுமா? இப்பவாவது கிடைத்தாயே.’ என் தோள்மீது கைபோட்டு அவர் அறைக்குக் கூட்டிச்சென்றார். நான் கூசிப்போய் இரண்டு கைகளையும் வயிற்றோடு இறுக்கிக்கொண்டேன். நாங்கள் அறைக்குள் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. எல்லாவற்றையும் சொன்னேன். பௌர்ணமியே திரும்பாத நாலைந்து அமாவாசைகளைச் சொன்னேன். அழுதேன். ‘இவ்வளவு நடந்திருக்கிறது நீ என்னைப் பார்க்க வரவேண்டாமா? இந்த முக்தாரை மறந்துவிட்டாயா?’ என்றார். வந்தேன் ஜப்பான் போயிருந்தீர்கள். மறுமுறை வந்தேன். விடமுடியாது என்று விரட்டிவிட்டார்கள்’ என்றேன். என் கழுத்தை அறுப்பதற்காகவே சிலர் கத்தியோடு அலைகிறார்கள் தெரியுமா?’ என்றார். தன் உதவியாளரை அழைத்தார். என் அடையாள அட்டை அவரிடம் தரப்பட்டது. ‘இவருக்கு எவ்வளவு அபராதமிருக்கிறது என்று உடனே பாருங்கள். அதை உடனே செலுத்துங்கள். அவர் பாஸ்போர்டை அவருக்கு உடனே உடனே வாங்கிக்கொடுங்கள். பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு உடனே வந்து பார்’ என்றார். மூன்றே நாளில் என் கடவுச்சீட்டு என் சட்டைப்பையில் வந்து விழுந்து ‘சௌக்கியமா?’ என்றது. அதில் இருந்த என் முகத்தின் அத்தனை பொலிவையும் தொலைத்திருந்தேன்.   எடுத்துக்கொண்டு முக்தார்பாயிடம் ஓடினேன். அந்த சீருடை காவலாளி சல்யூட் அடித்து கதவைத் திறந்துவிட்டான். எல்லாரையும் வெளியே போகச்சொன்னார். என்னை உட்காரச் சொன்னார். ‘வருகிற வியாழக்கிழமை நீ ஊருக்குப் போகிறாய். உன் மகள் நிக்காஹுக்கு என்னென்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும். எல்லாம் வாங்கச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பெட்டி உனக்கு சீக்கிரம் வந்துவிடும். கல்யாணம் முடிந்ததும் அம்மாவையும் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு வந்துவிடு. சென்னையில் நீ இறங்கியவுடன் இதோ இந்த எண்ணுக்கு ஃபோன் செய். அவரைப்போய்ப் பார்க்காமல் போய்விடாதே. எத்தனை லட்சம் வேண்டுமானாலும் அவரிடம் நீ வாங்கிக்கொள்ளலாம். இந்த வெள்ளியை சொந்தச் செலவுக்கு வைத்துக்கொள். வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வந்துவிடு. நானே உன்னை ஏர்போர்ட் வந்து அனுப்பிவைக்கிறேன். ஒன்று மட்டும் சொல்கிறேன் முகம்மத். நான் இதைச்செய்வதால் நீ எனக்குக் கடன்பட்டுவிட்டதாக நினைத்துவிடாதே. நான்தான் உனக்குக் கடன்…………’ சொல்லமுடியாமல் கண்ணீர் முட்டியது. சில ஒற்றுத்தாள்களை ஈரமாக்கினார்.  மீண்டும் சொன்னார். ‘நான் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணமே அத்தாதான். வாழ்க்கையின் அர்த்தத்தை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். நான் எப்படிஎப்படி யெல்லாம் அவரைப் பயன்படுத்திக்கொண்டேன் என்பதுகூட அவருக்குத்தெரியாது. நான் பார்த்த மனிதர்களிலேயே உயர்ந்ந்ந்……………….’  சொல்லமுடியாமல் மீண்டும் கண்ணீர் முட்டியது. தொடர்ந்தார். ‘உயர்ந்த மனிதன் தெரியுமா?’ கொஞ்சநேரம் கண்ணை மூடி அமைதியானார். கண்களைத் திறந்தார். ‘மறந்துவிடாதே முகம்மத். நான் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். எல்லாரையும் அழைத்துக்கொண்டு வந்துவிடு பாஸ்போர்ட்டுகளை சென்னையில் அவரிடம் கொடுத்துவிடு. எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார். என் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதிலே தங்கிக்கொள். அது உனக்குத்தான். எடுத்துக்கொள். நீ புறப்படு. ஊருக்குப் போகவேண்டிய வேலைகளைப் பார்’ என்றார். வெளியேறினேன். கொஞ்சம் நடந்தேன். கால்கள் பின்னின. சுவற்றில் சாய்ந்து லேசாக கண்களை மூடினேன். அத்தா வந்தார்.  ‘நீங்கள் அனாதையாக்கமாட்டீர்கள் மகனே’ என்றார். ‘அத்தா’ என்று கூவி விழுந்தேன். எல்லாரும் ஓடிவந்தார்கள். ‘ஒன்றுமில்லை’ என்று அங்கிருந்து நகன்றேன்.

இதோ விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். மேகங்கள் என்னை அள்ளிக்கொண்டு மிதப்பதுபோல் உணர்கிறேன். எத்தனையோ கேள்விகள் எனக்குள் எழுந்தன. விடைதெரியாமலேயே காணாமற் போயின. பதிலே தேவையில்லாத ஒரு உண்மை எனக்குப் புரிந்தது. வாழ்க்கையை மொத்தமாக சலித்து வடிகட்டிப்பார்த்தால் அந்த ஒன்றுதான் தேறும். உயர்ந்த வாழ்க்கைக்கு பெரிய திட்டங்களோ, நிறைய செல்வங்களோ தேவையே இல்லை. எந்த ஒரு சிறு உதவியையும் மறந்துவிடாமல் அதற்கு நன்றிபாராட்டுகிற உயர்ந்த உள்ளம் ஒன்று போதும்.  வாழ்க்கை உயரும். நிச்சயம் உயரும். அந்த உயர்ந்த உள்ளம் உயர்த்தும். நிச்சயமாக உயர்த்தும்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    Bandhu says:

    My God! what a narration! எவ்வளவு எளிதாக வாழ்வின் சாரத்தை சொல்லிவிட்டீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *