கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

முனைவர் மணி.கணேசன்
காப்பிய இலக்கியக் கால கட்டத்தில்  சிலம்பும் மணிமேகலையும் பெண்ணிய எழுச்சியின் அடையாளங்களாக விளங்கினாலும் வழக்கத்திலிருந்த பலதார மணமுறைக்கான எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை.சீவக சிந்தாமணியோ ஒருபடி மேலே சென்று மணநூல் என்று போற்றும் அளவிற்கு ஓர் ஆண் பல பெண்களை மணமுடிக்கும் வழக்கத்தை வலியுறுத்தி நிலையாமைத் தத்துவத்தை வெகுமக்களிடம் புகட்ட முனைந்தது.இத்தகைய சூழலில் பிற்காலத்தில் உருவாகி,ஒருதார மணத்தை ஆணுக்கு வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் புதியதோர் சமுதாயம் உருவாக மக்களை நல்வழிப்படுத்திய பெருமை கம்பராமாயணத்திற்கே உண்டு.
அதுபோல்,கம்பன் படைத்துக் காட்டிய புதுமைப்பெண் கல்வியறிவும் சொத்துரிமையும் நிரம்பப் பெற்றவளாகக் காணப்பட வேண்டுமென்பதைத் தம் நாட்டுப்படலத்தில் சுட்டிக்காட்டப்படும்,
பெருந்தடங்கண் பிறை நுதலார்க்கு எல்லாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலாய்
என்னும் வரிகளின் வாயிலாக அறியவியலும்.ஏனெனில்,குடும்பம் செழிக்கவும் மகிழவும் முக்கிய காரணமாகத் திகழும் பெண்ணை மதித்து,சங்க காலத்தில் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி விரும்பி ஈன்ற செய்தி ஐங்குறுநூற்றில்(257)காணப்படுகின்றது.மேலும்,கொடையளிக்கும் உரிமையைப் பெண் பெற்றிருந்ததைப் பெருந்தலைச் சாத்தனாரின் புறப்பாடலொன்று(151)தெரிவிப்பது உணரத்தக்கது.
இவற்றைக் கருத்தில்கொண்டு கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெண்கள் மீளவும் பழையபடி அறிவாலும் ஆற்றலாலும் சமுதாய மதிப்புப் பெற்றுக் கோலோச்சிட வேண்டுமானால் சொத்துரிமையுடன் கூடிய சுயசார்பும் கல்வியறிவும் அவசியமென்று அறிவுறுத்துவதை எளிதில் இன்றும் எடுத்துக்கொள்ளவியலாது.பெண் கல்வி கற்பதன் மூலமாகப் பல்வேறு சமூகத்தளைகள்,கட்டுப்பாடுகள்,கடப்பாடுகள்,மூட நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும்.மேலும்,எல்லாவற்றிற்கும் ஆண்களைச் சார்ந்திராமல் பெண்கள் தம் சுய தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொள்ளவும் பிறருக்கு மனமுவந்து கொடுத்துதவி சமுதாயத்தில் உரிய மதிப்புப் பெறவும் மேம்படவும் ஆணுக்கு நிகரான சொத்துரிமை அவர்களுக்கு இன்றியமையாதது என்று எடுத்துரைப்பது சாலச் சிறந்தது.
காலந்தோறும் கம்பனைப் போற்றிக் கொண்டாடும் இத்தருணத்தில் மேற்குறிப்பிடப்பெற்ற  அவருடைய பெண்ணியச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் முன்னத்தி ஏர்களாக விளங்குவது நமது தலையாயக் கடமையாகும்.

முனைவர் மணி.கணேசன்,

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​

1 Comment

  1. Avatar ramu

    சம உரிமை என்றால் எல்லாவற்றிலும் இன்பம் துன்பம் இரண்டிலும் என்னுடன் காட்டிற்கு வரவேண்டாம் என்றான் இராமன் ” நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு ” சீதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *