தினமும் என் பயணங்கள் – 13

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்பது பாவம் ஆகாதா? மனம் ஆயிரத் தெட்டுக் கேள்விகளை இதயத்தின் ஆழத்தைக் கிள்ளி வலி ஏற்படுத்தியபடியே வினா எழுப்பும், ஆரம்ப காலங்களில் ராஜகுருவை வெறுத்த நான், மகள் மடியில் விழுந்த காலக் கட்டங்களில், அவனின் அருகாமைக்காக மிகவும் ஏங்கினேன். அவன் வருகைக்காக வாயிலை நோக்கியபடிக் காத்திருந்த நாட்களும், அவன் கடிதத்திற்காக தபால்காரரை எதிர்பார்த்துத் திண்ணையில் வெயில் உறுத்த படுத்துத் துவண்ட நாட்களும் அதிகம். இன்றோ நாளையோ அவன் வந்து விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும், நிராசையும் என்னைக் கொன்ற நாட்கள் அவை.

 

அப்பொழுது நான் சொர்ப்பனந்தல் கிராமத்தில் வசித்து வந்தேன். அருகாமையில் அண்டை அயலாரிடம் பேசுவது என் தாயாருக்கோ, தகப்பனாருக்கோ பிடிக்காது. சிறுவயது முதல் பக்கத்துவீட்டு குமார் அண்ணாதான் எனக்கு கதைப் புத்தகங்கள் தருபவர். நூலகத்திற்குச் சென்று ஏதேனும் வரலாற்று நாவலைத் தேடி கொண்டு வந்து என் கையில் தந்து விடுவார். பாடப் புத்தகம் படித்ததைவிட நான் கதைப் புத்தகம் படித்ததுதான் அதிகம். குமார் அண்ணாவிற்கு என் தகப்பனாரை ஒத்த வயதிருக்கும். நாட்டின் எல்லைப் பிரச்சனை போல, அனுதினமும் நடப்பது வீட்டின் எல்லைப் பிரச்சனை இங்கு, இடத்தகராறின் காரணமாக ஒட்டுமொத்தக் குடும்பமும் விரோதம் பாராட்ட, எங்களின் கதை புத்தகப் பரிமாற்றம் மட்டும் நின்ற பாடில்லை. எனக்குக் குழந்தை பிறந்த சில மாதங்களில் பாவம் குமார் அண்ணா மாரடைப்பில் இறந்து போனார். அதன் பிறகு எனக்குப் புத்தகம் தர ஒருவரும் இல்லாது போக, என் தனிமையைத் தகர்க்க உதவியது, வேதாகமும் குழந்தையும் தான். குழந்தை மீது ஆரம்பத்தில் வெறுப்பு, அந்த குழந்தையைத் தொடும்போது ராஜகுருவை கையில் வைத்திருப்பது போன்றதோர் உணர்வு, குழந்தை முகம் பார்த்துச் சிரித்த போது அத்தனை வெறுப்பும் காணாமல் போயிருந்தது, கருவில் இருக்கும் போதிருந்தே குழந்தைக்கும் எனக்குமான சம்பாஷணை தொடர்ந்திருந்தது. பிறந்த பிறகு வந்த இடைக்கால வெறுப்பும் காணாமல் போக, அந்த குழந்தையை நான் அளவில்லாமல் நேசித்தேன்.

 

அவளுக்கான தாலாட்டு இப்படித்தான் இருந்தது,

 

கா கா கி கீ கு கூ கே, கை கொ கோ கௌ, இப்படி உயிர்மெய் எழுத்துக்களை ராகமாய் பாடித் தூங்க வைப்பேன். என் அழுகை, என் சிரிப்பு அத்தனையும் அவளைச் சுற்றியே இருந்தது. அவள் முழங்கால் படியிட்டு தவழத் துவங்க நானும் அவளோடு தவழ்ந்து குழந்தை யானேன்.

சிலகாலம், கேட்டவர்களுக்கு கணவர் வெளியூரில் இருக்கிறார் என்று பதில் சொன்னேன். கொஞ்ச நாள் கழித்துக் கணவர் வரவில்லையா என்று வினா எழுப்பினார்கள். இதற்கிடையில் நான் எழுதிய கடிதங்களால் ராஜகுருவிற்கு தலை குனிவு ஏற்பட்டதாகவும், அறைத் தோழர்கள் முன் அவமானப்படுவதாகவும் ஓர் அதிர்ச்சிக் கடிதம் ராஜகுருவிடமிருந்து வந்தது. நான் ராஜகுருவைப் பார்க்கும் விதமும், ராஜகுரு என்னை பார்க்கும் விதமும் வேறு, வேறு என்பதை தெளிவு படுத்திய கடிதம் அது. அதன் பிறகு நான் அவனுக்கு கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அவன் வரவேண்டும் என்ற எதிர்ப்பார்பையும் மாற்றிக் கொண்டேன். சில காலம் எஸ்டிடி பூத்தும், சில காலம், ஐஸ் பேக்டரியும் வைத்துப் பொருள் ஈட்டினேன். ஐஸ்பேக்டரி வைத்த சில மாதங்களில் உதவிக்கு இருந்த விஜய் விபத்தில் இறந்து போனார். அதன் பிறகு அப்பா ஒருவரால் தொழிலைக் கவனிக்க முடியவில்லை. ஐஸ் பேக்டரியை நடத்த பாரதச் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தில் கடன் வாங்கி வைத்திருந்தேன். அதன் நிர்வகிக்கும் திறன் என்னிடத்தில் இல்லை என்பது என் பெற்றோரின் கருத்து. இதனால் அவர்களுக்கும் எனக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

இயல்பில் நான் இளகிய சுபாவம் உடையவள், அநேகருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுபவள், அதுவே என் பெற்றோர் என் மீது ஐயம் கொள்ள பெரும் காரணமாக அமைந்தது. பணத்தை யாருக்கேனும் தூக்கிக் கொடுத்து விடுவேன் என்று சந்தேகிக்கத் துவங்க, அந்த பணியில் எனக்கு நாட்டமில்லாமல் போனது.

 

அதன் பிறகு வேலை தேடி வெளியில் செல்லத் துவங்கினேன். வட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியில் அமர்ந்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய அனுமதி கேட்டு வட்டாட்சியரிடம் சென்றேன். அப்போது வட்டாட்சியராக இருந்தவர் சிவராஜ். என் பெற்றோரின் சிநேகிதர். மாதம் 500 ரூபாய் ஊதியத்தில் செக்ஷன் ரைட்டராக பணியாற்றினார். என் முதல்  வெளியுலக விஜயம் அது.

 

எனக்கு ஒரு குழந்தை இருப்பதை அறிந்து, உன் கணவர் எங்கே என்று கேட்ட போது, இறந்து விட்டார் என்று சொன்னேன். முதல் முறை அவனை இறக்கடித்தது அப்போது தான்.  கணவரைப் பிரிந்து வாழ்வது கேவலம், கணவர் இறந்துவிட்டார் என்பது கௌரவம். பிரிந்து விட்டோம் என்று உண்மை சொன்ன போது, ஏன்? எதற்கு? எப்படி என்று கேள்வி எழுப்பினார்கள். இறந்து விட்டார் என்றதும் பரிதாபத்தில் அடுத்த கேள்வி எழும்பாமல் தடைப்பட்டது எனக்குப் பெரும் நிம்மதியை அளித்தது.

 

கேட்பவருக்கு கணவர் இறந்து விட்டார் என்பதை நிரந்தரப் பதிலாக்கி வைத்தேன். இறந்தவரை பேஸ்புக்கில் ஒருநாள் காணும் வாய்ப்புக் கிடைத்தது. இராஜகுரு உள்ளத்திலும் இறந்து தான் போய் இருந்தான். முதல் முறை எதார்த்தமாக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு பேஸ்புக்கில் பார்த்தபோது என்னையும் அறியாமல் கண்களில் வடிந்த கண்ணீர் தான் சொன்னது, அவன் இன்னும் என் சிந்தையை விட்டு அகலவில்லை. அவன் மீது நான் வைத்திருந்த அன்பு அப்படியே இருக்கிறது என்று. அவனை நான் மறந்திருந்தால் நான் ஏன் அவனை எண்ணி அழவேண்டும். இந்த விசித்திர மனதிற்கு ஏன் புரியவில்லை, இப்பொழுது அவன் எனக்கு அந்நியன் என்பது.

 

[தொடரும்]

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *