பாவண்ணன்
என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம். இளம்பருவத்தில் அம்மா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்கிற சார்லி, ராணுவ வீரர்கள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிப் பாடலுக்குப் பிறகு தொடரமுடியாமல் குரல் இடற தடுமாறிய தருணத்தில், சட்டென்று மேடைக்கு வந்து மீதிப் பாடலைப் பாடுகிறான். அதற்குப் பிறகு சார்லி மேடையை விட்டு இறங்கவே இல்லை. பாடல், ஆடல், நாடக நடிகன் என மாறிமாறி மேடையிலேயே சார்லியின் வாழ்க்கை தொடர்கிறது. பேசாப்படங்களின் மாபெரும் கலைஞனாக வளர்ச்சியடைந்த சார்லி, நடிப்பைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் திரைப்படங்களை இயக்கும் இயக்குநராகவும் பணியாற்றி வெற்றியடைகிறார். இன்னொரு முக்கியமான வாழ்க்கை வரலாறு பெர்க்மனின் ‘மாய விளக்கு’. பிறந்தநாள் பரிசாக தனக்குக் கிடைத்த புகைப்படக்கருவியின்மூலம் படம் பிடிக்கிற விருப்பம், இளமைப்பருவத்தில் திரைப்பட விருப்பமாக மாறி, பிறகு இயக்குநராக மாறும் விருப்பமாக தீவிரம் கொண்டு அவரை சிறந்த கலைஞராக்குகிறது. மாபெரும் ஆளுமையாக உலகம் பாராட்டும் இயக்குநர்கள் ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு விதமாக உருவாகி, திரைப்படப் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தவர்கள்.
திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் தன் திரையுலக அனுபவங்களை விரிவான ஒரு தன்வரலாற்று நூலாக எழுதியுள்ளார். தமிழில் அது ஒரு முக்கிய நூல். என் கல்லூரிக்காலத்தில் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களில் கூட பகிர்ந்துகொள்ளாத பல விஷயங்களை அந்த நூலில் பதிவு செய்துள்ளார். அன்றுமுதல் இன்றுவரை முக்கியமான தமிழ் இயக்குநர்களின் நேர்காணல்களை கிடைத்தவரை படித்துவந்திருக்கிறேன். அந்நேர்காணல்களின் கேள்விகள் பெரும்பாலும் நடிகநடிகையர் சார்ந்தும் படப்பிடிப்பு அனுபவங்கள்சார்ந்தும் அமைந்துவிடுவதால் இயக்குநர்களின் பதில்களும் அவற்றை முன்வைப்பதாகமட்டுமே அமைந்துவிடுகின்றன. காட்சியமைப்புகளை முன்வைத்து நிகழ்த்தும் விவாதங்களோ அல்லது கதையமைப்பை முன்வைத்து நிகழ்த்தும் விவாதங்களோ இல்லை. இயக்குநர் மணிரத்னத்துடன் நிகழ்த்தும் விவாதங்களாகமட்டுமே நீளும் மிகச்சிறந்த ஒரு நேர்காணல் சமீபத்தில் ஒரு நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்தது. தமிழில் மொழிபெயர்த்திருக்கப்பட வேண்டிய ஒரு நூல் அது. துரதிருஷ்டவசமாக அதைப்பற்றிய உரையாடலே அதிக அளவில் எழாமல் போனது.
படைப்பாளிகளுடனான உரையாடல்கள் படைப்பைப்போலவே முக்கியமானவை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக ’வியத்தலும் இலமே’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் உலகின் பல பகுதிகளில் வாழ்கிற இருபது எழுத்தாளர்களை நேரில் சந்தித்து அல்லது இணையம் வழியாக தொடர்புகொண்டு எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு வெளிவந்தது. தமிழில் நிகழ்ந்த முக்கியமான வரவு அது. இப்புத்தகத்தை என் எழுத்து மேசையிலேயே எப்போதும் வைத்திருக்கிறேன். சோர்வாக உணரும் தருணத்தில் சட்டென்று அந்தப் புத்தகத்தை எடுத்து எதோ ஒரு பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கிவிடுவேன். பத்து பக்கம் கடப்பதற்குள் மனத்தில் உற்சாகம் படியத் தொடங்கிவிடும். அந்தச் சிறுகதையாசிரியரோ அல்லது நாவலாசிரியரோ நம்மோடு உரையாடுவதுபோல ஓர் உணர்வு வந்துவிடும். ’வியத்தலும் இலமே’ புத்தகத்தைப்போலவே உற்சாகமூட்டும் உரையாடல்களைக் கொண்ட மற்றொரு புத்தகம் ஜா.தீபாவின் மொழிபெயர்ப்பில் இப்போது வெளிவந்துள்ள ‘மேதைகளின் குரல்கள்’.
கொரியா, ஜப்பான், பிரிட்டன், சீனா, ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா என பல தேசங்களின் திரைப்படத்துறை சார்ந்த இருபது இயக்குநர்களின் நேர்காணல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. இந்திய இயக்குநரான சத்யஜித் ரேயின் நேர்காணலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயக்குநருமே, அந்தந்த மொழியில் மாபெரும் ஆளுமையாக மதிக்கப்படுகிறவர்கள். எனக்கு மிகவும் பிடித்த பெர்க்மன் இப்பட்டியலில் இல்லை. ஒருவேளை, இருபது என்னும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டால் அவர் விடுபட்டிருக்கலாம். ஒவ்வொரு இயக்குநரின் நேர்காணல் முடிவுபெறும் புள்ளியில் அவர் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. தீபாவின் மொழிபெயர்ப்பு நடை தடையற்றதாகவும் தெளிவானதாகவும் உள்ளது. ஆனால், இவை நேரடி நேர்காணல்கள் அல்ல. வேறு ஏதோ ஒரு அச்சிதழில் அல்லது இணைய இதழில் வெளியான நேர்காணல்கள். இதழ் விவரங்களையும் நேர்காணல் எடுத்தவரின் விவரங்களையும் தீபா கொடுத்திருக்கவேண்டும். அவை தவிர்க்கப்பட்டிருப்பது ஒரு பெரிய குறை. இயக்குநர்களைப்பற்றி மேலும் சில விவரங்களைத் தேடி வாசிக்க நினைக்கும் வாசகர்களுக்கு இத்தகு விவரங்கள் மட்டுமே வழிகாட்டியாக அமையமுடியும்.
கொரிய இயக்குநரான கிம் கி டுக் இப்போது உலக அளவில் பேசப்படக்கூடிய ஓர் இயக்குநர். உறைந்து இறுகிய பனிப்பரப்பும் அங்கங்கே தனித்து நிற்கும் ஒற்றைமரங்களும் ஒற்றைவீடும் இவருடைய திரைப்படங்களில் தவறாது இடம்பெறும் காட்சிகள். காட்சிக்கான பின்னணியாக மட்டுமின்றி, பாத்திரங்களின் மன உணர்வை மெளனமாக உணர்த்தியபடியிருக்கும் படிமங்களாகவும் அவை அமைந்துவிடுகின்றன. காதலையும் வெறுப்பையும் சம அளவில் பேசுவதற்கான உந்துதலை எப்படி அடைகிறீர்கள் என்கிற கேள்விக்கு துக் போகிற போக்கில் வெள்ளைநிறமும் கருப்பு நிறமும் வேறுவேறல்ல என்று சொல்லும் பதில் யோசிக்கத் தூண்டும் வகையில் உள்ளது. வெண்மையில் உள்ள கருமையையும் கருமையில் மறைந்துள்ள வெண்மையையும் பார்க்கக்கூடிய நுட்பமான பார்வை அவரிடம் உள்ளது. காதலில் உள்ள வெறுப்பையும் வெறுப்பில் உள்ள காதலையும் இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது. முத்தாய்ப்பாக ’ஒரு மனிதன் சிறப்பாக அடிக்கடி சண்டையிடுகிறான் என்றான் அவன் சிறந்த திறமைசாலி என்கிற அர்த்தம் மட்டுமல்ல, அவன் பயப்படவும் செய்கிறான் என்னும் அர்த்தமும் இருக்கிறது’ என டுக் சொல்லும் வாக்கியம் மிகவும் முக்கியமானது. அடிப்படையில் டுக் ஓர் ஓவியர். பிறகு ராணுவத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவமும் இருக்கிறது. அப்புறம் தொழிற்சாலை ஊழியராக வேலைபுரிந்த அனுபவமும் உள்ளது. பிறகுதான் அவர் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் உருவாகிறார். ’திரைப்படத்தை உருவகமாக மாற்றுவது முக்கியம்’ என்று கூறும் டுக் ‘பார்வையாளர்கள் முன்னிலையில் தன் படத்தை வைத்துவிட்டு படைப்பாளி காணாமல் போய்விடவேண்டும். நான் ஒரு படைப்பாளி, ஒரு கலைஞன்’ என்று சொல்வது கவனிக்கத்தக்கது.
அகிரா குரோசுவாவும் அடிப்படையில் ஓர் ஓவியர். தன் மனம் போன போக்கில் ஓவியம் தீட்டிக்கொண்டு பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய அண்ணன் தற்கொலை செய்து இறந்துபோய்விட்டார். ஜப்பானிய மரபுப்படி ஒரு குடும்பத்தின் மூத்த மகன் இறந்துபோனால், அடுத்த மகன் குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த நியதியின்படி குரோசுவா குடும்பத்தின் பாரத்தை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டிய நெருக்கடி உருவானது. ஓவியம் தீட்டிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தவர் பொருளீட்ட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். தற்செயலாக ’உதவி இயக்குநர்கள் தேவை’ என ஒரு திரைப்பட நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பத்தார். அகிரா குரோசுவாவுடைய திரைவாழ்வு இப்படித்தான் தொடங்கியது. இயற்கையான அவருடைய ஓவியத்திறமை திரைப்பட வாழ்வில் பெரிதும் உதவியாக இருந்தது. தன் மனத்தில் இருப்பதை படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்குப் புரியவைக்க இந்தத் திறமை மிகவும் உதவியது. ’ஒரு சுவாரஸ்யமான கரு கிடைத்ததும் மனம் அதன் பின்னாலேயே செல்லத் தொடங்கும். சினிமாவின் கோட்பாடுகளை முன்னிறுத்தி அதற்குள் கதையை யோசிக்கமாட்டேன். எனக்கு எது வசீகரிக்கிறதோ அதையே யோசித்துக்கொண்டிருப்பேன். கடைசியில் அது மனித இயல்பை ஆராய்வதில் முடியும்’ என்று சொல்கிற குரோசுவா மிகச்சிறந்த வாசகராக விளங்கியுள்ளார். தாஸ்தாவெஸ்கியையும் தல்ஸ்தோயையும் மீண்டும்மீண்டும் வாசிப்பது அவர் பழக்கமாக இருந்திருக்கிறது. ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் எப்படி உருவாக முடியும் என நினைக்கிறீர்கள் என்கிற கேள்விக்குப் பதில் சொல்லும்போது சிறந்த இலக்கிய வாசகர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கிறார். ஒரு திரைக்கதையை எழுதும் முன்பாக உலகின் சிறந்த நாவல்களையும் நாடகங்களையும் படிக்கவேண்டும். ஏன் அவை சிறந்த படைப்புகளாக இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். நீங்கள் படிக்கிறபோது எந்த இடத்தில் உணர்ச்சிவசப்பட்டீர்கள், எப்படி ஒரு பாத்திரத்தை கதையாசிரியர் உருவாக்குகிறார், எந்தக் கோணத்திலிருந்து ஒரு பிரச்சினையைப் பார்க்கவேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கவேண்டும். நல்ல இயக்குநராவதற்கான அடிப்படைத்தகுதி நல்ல திரைக்கதை ஆசிரியராக விளங்குவதாகும் என்று விரிவாக குரோசுவா சொல்லும் பதிலில் அவர் அனுபவம் வெளிப்படுகிறது. படைப்பு என்பது நினைவுத்திறன் என ஒற்றை வாக்கியமாக அவர் சுருக்கிச் சொல்லும் வாக்கியத்தை நாம் மனத்தில் பதியவைத்துக்கொள்ளவேண்டும். தன் சொந்த அனுபவங்களும் தன் வாசிப்பில் நினைவில் தங்கிப்போனவையும் இணைந்தே தனக்கு அடித்தளமாக அமைந்தன என்கிறார் குரோசுவா.
ஈரான் இயக்குநரான ஜாஃபர் பனாகி தன் நேர்காணலில் அரசு அதிகாரமும் தணிக்கைமுறையும் ஈரான் திரைப்படத்துறைமீது செலுத்தும் ஆதிக்கத்தை விரிவாகவே சொல்கிறார். தன் படத்தில் யாரையும் தவறாகச் சித்தரிப்பதில்லை என்கிறார் பனாகி. தொலைதூரக்காட்சியில் ஒரு போலீஸ்காரரை அச்சமூட்டுகிறவராகவும் அருகாமைக்காட்சியில் கனிவுமிக்கவராகவும் அமைப்பதன்மூலம் கெட்டவன் நல்லவன் என்கிற கருத்தாக்கத்தை மறுவரையறை செய்ய முயற்சிசெய்கிறார் பனாகி. ‘என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன், கெட்டவள் என எந்தக் கதாபாத்திரமும் கிடையாது. எல்லோருமே நல்லவர்கள் என்றுதான் நான் நம்புகிறேன். மோசமான ஒரு குற்றவாளியிடம்கூட ஒரு மனிதாபிமானம் இருக்கும். அடிப்படையில் அவனும் ஒரு மனிதனே. இதன் அர்த்தம் குற்றவாளிகளைத் தண்டிக்கக்கூடாது என்பதல்ல. ஏதாவது சமூகக்காரணமே அவனை அப்படிச் செய்யத் தூண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்’ என பனாகி அளிக்கும் பதில் குறிப்பிடத்தக்கது. கலை குறித்த வேறொரு கேள்விக்கு ’கலைகள் எப்போதுமே உடனடியான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தாது. ஒரு கலைக்கு அத்தனை சக்தி இருந்தால், அது மக்களை அணுகிய அடுத்த கணமே சமூக சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கமுடியும். எந்த மனிதருக்கு கலைகள் வேண்டுமோ, அவர்களைத்தான் அது போய்ச் சேர்கிறது. கொடுத்துப் பெறுகிற பரிமாற்றம்தான் இது. ஒரு சமூகத்துக்கு கலை மற்றும் கலைஞனின் தாகம் தேவைப்படுமென்றால் அது தானாகவே நடந்துவிடும்’ என்ற பனாகியின் பதிலும் முக்கியமானது.
’திரைப்படம் என்பது கண்களால்மட்டும் பார்க்கப்படவேண்டிய ஒன்றல்ல’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் அமெரிக்க இயக்குநரான ஸ்டான்லி குப்ரிக் தன் நேர்காணலில் நாவல் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி மீண்டும்மீண்டும் குறிப்பிடுகிறார். நாவல்வழியாக பெறுகிற அகத்தூண்டுதல் நல்ல கலையை உருவாக்கும் என்பது அவர் நம்பிக்கை. ‘மற்றவர்கள் பார்வையில் மிக மோசமான இடமாக நினைக்கப்படுகிற அலபாமாவில் டிரக் ஓட்டுகிற ஓர் ஓட்டுநரும், கேம்பிரட்ஜில் படித்த ஓர் அறிவாளியும் பீட்டிள்ஸ் இசையை ஒரே விதமான மனநிலையில்தான் ரசிக்கிறார்கள். ஏனென்றால் மனிதர்களின் ஆழ்மனத்துக்கும் அறிவுக்கும் தொடர்பே இல்லை’ என்னும் அவர் பதில் முக்கியமானது.
செய்தித்தாள்களில் கட்டுரை எழுதுபவனாகத் தொடங்கி, கவிதை எழுதி, பிறகு ஒரு நகைச்சுவை நடிகனாக சில காலமும் ஒரு குணச்சித்திர நடிகனாக சில காலமும் நடித்துவிட்டு கடைசியில் இயக்குநராக மாறியவர் டகேஷி கிடனோ, ஆரம்ப காலத்தில் ஜப்பானில் அவருடைய படங்களை யாருமே அவ்வளவு பொருட்படுத்திப் பார்க்கவில்லை. ஒரு நகைச்சுவை நடிகன் பொழுதுபோக்குக்காக படம் எடுக்கிறான் என நினைத்துவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தன. மக்கள் அதை இலவசமாகக் கண்டு களித்தார்கள். அதனால், அவர் இயக்கிய படங்கள் கவனிக்கப்படவே இல்லை. அவர் இயக்கிய ஏழாவது படம் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச்சிங்கம் விருது பெற்றது. அந்த விருது எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. அக்கணமே அவர் உலகத்தரமான படங்களை இயக்குபவர்களில் ஒருவரானார். ’முதல் படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?’ என்கிற கேள்விக்கு ‘யாரையும் நம்பாதீர்கள், யார் என்ன சொல்வார்களோ என எதற்கும் கவலைப்படாமல் உங்கள் உள்ளுணர்வைமட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மற்றவர்கள் பேச்சை உங்களுடைய முதல் படத்தில் கொண்டுவந்தீர்கள் என்றால், இரண்டாவது படத்தில் இன்னும் மோசமாகும். நீங்கள் நினைத்ததைமட்டும் செய்யுங்கள். நட்பற்ற வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயர் ஒருவேளை உங்களுக்கு வரக்கூடும். அதற்கும் தயராக இருங்கள். ஏனென்றால் நான் அப்படித்தான் அழைக்கப்பட்டேன்’ என டகேஷி அளித்துள்ள பதில் மனத்தில் பதியவைத்துக்கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
பன்னிரண்டு வயதில் நாடக மேடையில் நடிக்கத் தொடங்கி, படிப்படியாக நாடக இயக்குநராக வளர்ந்து, பிறகு திரைப்பட இயக்குநராகவும் உருமாறியவர் ஈரான் இயக்குநரான மஜித் மஜிதி. அவர் இயக்கிய ‘சொர்க்கத்தின் நிறம்’, ‘விண்ணுலகத்தின் குழந்தைகள்’ மிகவும் புகழ்பெற்றவை. ‘எங்களுடைய நாட்டில் ஆண்டுதோறும் எழுபது முதல் எண்பது படங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஏறத்தாழ ஐம்பது படங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பொழுதுபோக்குவகையிலான படங்கள். பொழுதுபோக்கைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத படங்கள் அவை. ஆனால் எங்களிடம் இருபது, முப்பது இயக்குநர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்குநர்கள் ஆண்டுக்கு பத்து பதினைந்து படங்கள் எடுக்கிறார்கள். இவர்களே ஈரான் தேசத்தின் அடையாளம். உலகப்பட விழாக்களில் பங்கேற்கும் இத்தகைய படங்களே ஈரான் தேசத்துக்குப் பெருமை சேர்க்கின்றன’ என்னும் அவருடைய பதிலில் தெரியும் தெளிவும் மிகையற்ற தன்மதிப்பீடும் முக்கியமானவை. ஒரு கலைஞனுக்கே உரிய கூர்மையான பார்வை இந்தப் பதிலில் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
‘நான் உள்ளுணர்வில் வாழ்பவன்’ என்று கூறும் ரோமன் பொலான்ஸ்கி பாரிசில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது பலவிதமான துன்பங்களுக்கு ஆளானவர். அகதியாகவும் திரிந்திருக்கிறார். சிறைக்கைதியாகவும் இருந்திருக்கிறார். ‘ஒரு படம் தொடங்குவது என்பது எனக்கு உணவகத்தில் உணவைத் தேர்ந்தெடுப்பதைப்போன்றது. இந்த உணவினை ஏன் தேர்ந்தெடுத்தேன் என நினைத்துப் பார்ப்பதில்லை. அதுபோலவே படம் எடுப்பதையும் நினைத்துப்பார்ப்பதில்லை. என்னைச் சுற்றி நிகழும் பல விஷயங்களிலிருந்து எனக்குக் கிட்டும் உந்துதலே ஒரு படத்துக்கான விதை’ என அவர் சொல்லும் பதில் யோசிக்கத்தக்கது.
மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே படங்களை இயக்கியிருந்தாலும் திரைப்பட ஆர்வலர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர் ரஷ்ய இயக்குநரான தார்க்கோவ்ஸ்கி. தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள படம் எடுத்த காரணத்துக்காகவே அவரை ரஷ்ய அரசாங்கம் மரணம்வரைக்கும் துரத்தியது. படைப்புக்கு எதிரான அரசின் அதிகாரத்தைத்தான் அவர் ஒவ்வொரு படத்திலும் முன்வைத்தபடி இருந்தார். தொடர்ந்து அவர் துரத்தப்பட்டபோதும், குடும்பத்தைப் பிரித்துவைத்தபோதும், உடல்நிலை சீரழிந்த நிலையிலும் சொந்த நாட்டுக்குத் திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டபோதும் அவர் சிறிதும் மனம் தளராமல் நம்பிக்கையோடு இருந்தார். அந்த நம்பிக்கையின் வலிமையைத்தான் அவர் தன் படைப்புகளில் தொடர்ந்து முன்வைத்தபடி இருந்தார். 1986 ஆம் ஆண்டில் பாரிசில் இருக்கும்போது அவர் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்தடுத்து அவருடைய மனைவியும் அவர் படத்தில் நடித்த நடிகரும் அதே நோயால் பாதிக்கப்பட்டு மாண்டனர். அப்போது தார்க்கோவெஸ்கியின் மரணம் இயற்கையானதல்ல, ரஷ்ய உளவு அமைப்பின் மூலம் நிகழ்ந்த மரணம் என்ற செய்தி பரவியது. ஒரு படப்பிடிப்பின் சமயத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் மெல்லக் கொல்லும் நஞ்சைக் கலந்திருக்கக்கூடும் என்று அந்தச் செய்தி சொன்னது. ‘தேவதையைத் தரிசித்த மனிதனுக்காக’ என்கிற வாசகம் அவருடைய கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. ’எந்தவொரு படைப்பிலும் சின்னச்சின்ன விஷயங்களிலும் ஆழ்ந்து மனத்தைச் செலுத்துகிற சிரத்தை இருந்தால்மட்டுமே முழுமையான ஒரு படைப்பை படைப்பாளியால் தரமுடியும்’ என்னும் கருத்தில் அவர் காட்டிய உறுதி போற்றத்தக்கது.
மகத்தான படைப்பாளிகளுடைய உரையாடல்கள் ஒருவகையில் கலங்கரைவிளக்கங்களின் பணியைச் செய்கின்றன. நம் ஆழ்மனத்தில் எழும் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் ஏதோ ஒரு கோணத்தில் அவை விடைகளை உணரவைக்கின்றன. தொடரும் பயணங்களுக்கு உந்துசக்தியாகவும் உள்ளன. ஓர் இயக்குநராக உருவாகும் விதம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் மாறுபடும் தன்மை வழங்கும் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
(மேதைகளின் குரல்கள். உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள். தமிழாக்கம். ஜா.தீபா. மலைகள் பதிப்பகம். 119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு. அம்மாப்பேட்டை. சேலம் – 3. விலை. ரூ.150)
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 6
- தினம் என் பயணங்கள் – 19 இரண்டாம் நாள் தேர்வு
- தோல்வியின் எச்சங்கள்
- நம் நிலை?
- பிடிமானம்
- சுந்தோப சுந்தர் வரலாறு
- திண்ணையின் இலக்கியத் தடம்-37
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77 ஓர் அன்னியனுக்கு !
- எரிந்த ஓவியம்
- இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!
- வீடு
- சரியா? தவறா?
- இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }
- பெருங்குன்றூர் கிழார் கவிதைகள் .
- அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…
- தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!
- ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா
- திரைப்படம் உருவாகும் கதை (மேதைகளின் குரல்கள். உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள். தமிழாக்கம். ஜா.தீபா நூல் திறனாய்வு)
- மயிலிறகு
- எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5
- கா•ப்காவின் பிராஹா -3
- ஆப்ரஹாம் லிங்கன் நாடக நூல் வெளியீடு
- பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !
- நீங்காத நினைவுகள் – 48
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது