தந்தை சொல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

தாரமங்கலம் வளவன்

நான் புறப்படும் போது, டில்லி வேலைக்கு திரும்பவும் போக வேண்டாம் என்றும், தங்கள் மில்லில் எனக்கு எச் ஆர் மேனேஜர் பதவி தருகிறோம் என்றும் பழனிசாமி அண்ணனும், திலகவதியும் என்னை வற்புறுத்தினார்கள்.

படாதபாடு பட்டு, அவர்களைச் சேர்த்து வைத்த எனக்கு அவர்கள் இருவரும் வாழப் போகும் அந்த வாழ்க்கையை இதே கோயம்பத்தூரிலிருந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு புறம் தோன்றியது.

இருந்தாலும், அவர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் போது, ரசிக்க முடியாது என்று தோன்ற, இதே கோயம்பத்தூரில் வேறு வேலை நான் சொந்தமாய் தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ரயில்வே ஸ்டேஷனில் டில்லி ரயிலுக்காக காத்து இருந்த போது,
திடீரென்று கட்சி தொண்டர்களின் வாழ்க கோஷம் கேட்டது. சென்னை ரயிலில் இருந்து இறங்கிய அமைச்சர் மருதுவுக்கு வரவேற்பு பலமாய் இருந்தது. அவர் புன்சிரிப்போடு கையை ஆட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

திலகவதியை அமைச்சர் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போனதிற்கு நானும் ஒரு காரணம் என்று அவருக்கு தெரிந்தால் என் கதி என்னவாகும் என்று நினைத்து பார்த்தேன். திக் என்று ஆகி விட்டது. அதற்காகவாது, நான் கொஞ்ச நாள் டில்லியிலே இருந்து விடுவது நல்லது என்று தோன்றியது. நான் கூட்டத்தில் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டேன்.
இந்த கூட்ட நெரிசலில், நான் எங்கே என்னுடைய டில்லி ரயிலை விட்டு விடுவேனோ என்று பதறிப் போன நான், ஒருவழியாய் சமாளித்து ஏறினேன்.

டில்லி ரயில் புறப்பட்டது.

நான் டில்லியில் வேலைக்கு சேரும் போது, மே மாதத்தின் கடைசி நாட்கள். அப்படி ஒரு அனல் கக்கும் வெயிலை நான் அதற்கு முன் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை.

பூசா ரோடில், வெயிலில் நடக்கும் போது, தலை சுற்றுவது போலிருக்கும். ஊரில் இருக்கும் என் அப்பாவிடம் நான் இதைச் சொன்ன போது, வேலை வேண்டாம், வீட்டிற்கு வந்து விடு, என் பென்ஷன் பணத்தில், உனக்கு சோறு போடுகிறேன் என்றார். நண்பர்களோ, புது இடம், எங்காவது மயங்கி விழுந்து தொலைக்க போகிறாய், எப்போதும் பாக்கெட்டில் விலாசத்தை வைத்துக் கொள் என்றார்கள்.

கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு நண்பன், தனக்கு டில்லியில் ஒரு பெங்களூர்க்காரரை தெரியும் என்று சொல்லி, அவர் ரூமில் நான் தங்குவதற்காக லெட்டர் கொடுத்தான். அவர் பெயர் மஞ்சுநாத் என்றும் சொன்னான். ஆனால், மஞ்சுநாத்திற்கு, அவருடைய ரூமில் நான் தங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்தது. நானும் உடனடியாக வேறு ரூம் பார்த்து விட வேண்டும் என்று அன்றே அலைய ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் மாலையில் மஞ்சுநாத்,

“ சீக்கிரமா சொந்தமா ஒரு ரூம் பாத்துக்கோங்க.. ரூம் பார்க்கிறதுக்கு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்.. நாளைக்கு காலையில ரூம் பாக்க போகலாம்.. புறப்பட தயாரா இருங்கோ..” என்றார்..

காலையில் நான் ரெடியானவுடன், கையில் ஒரு விலாசத்தைக் கொடுத்த மஞ்சுநாத்,

“ இவரு உங்க ஊர்க்காரர் தான். கோயம்பத்தூர் பக்கம். பேங்கல வேல செஞ்சிகிட்டு இருக்கார்.. இப்படி உங்கள மாதரி தமிழ்நாட்டில இருந்து புதிசா வர்ரவங்களுக்கு ரூம் தேடித்தராரு.. போய் பாருங்க.. அவரே, தன்னோட ஸ்கூட்டர்ல பின்னாடி உட்கார வைச்சி, தன் சொந்த செலவில பெட்ரோல் போட்டு, அலைஞ்சி திரிஞ்சி ரூம் பிடிச்சி தருவாரு… இதை ஒரு சேவையா அவரு செய்யறாரு…” என்றார்.

யார் அந்த புண்ணியவான் என்று யோசித்துக் கொண்டு அந்த விலாசத்தை தேடி போனேன். ராஜேந்தர் நகரில் ஒரு மாடியில் குடியிருப்பு.

சரியாக பராமரிக்க படாமல் இருந்த அந்த அறையில், புத்தகங்களுக்கும், குப்பைகளுக்கும் நடுவில் இருந்த அவரைப் பார்த்ததும், ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது எனக்கு.

அது பழனிசாமி அண்ணன் தான்.

என்னைப் பற்றி சொன்ன போது, நன்றாக ஞாபகம் இருப்பதாகச் சொன்னார்.

அவர்கள் கிராமத்தில் என் அப்பா போஸ்ட் மாஸ்டராக வேலை செய்தார். அவருடைய அப்பா குருசாமிக்கு அந்த பகுதி மக்களிடையே ரொம்ப மரியாதை. நிறைய நிலங்களுக்கு சொந்தக்காரர். அப்பாவைப் போல், பழனிசாமி அண்ணனுக்கும் சின்ன வயதிலேயே நல்ல பெயர்.

எனக்கும் அவருக்கும் ஒரு பத்து வயது வித்தியாசம் இருக்கும். வயதிலும், அந்தஸ்த்திலும் எங்கள் இருவருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருந்தால் கூட என்னிடம் வாஞ்சை கொண்டிருந்தவர். என்னிடம் சமமாக பேசுவார்.

அந்த பள்ளி பருவத்தில், பிரமிப்புடன் அவரைப் பார்த்து, மதித்து, அவரின் குணங்களை ரசித்தவன் நான். என்னுடைய பதினைந்தாவது வயது வரை அந்த கிராமத்தில் இருந்த நாங்கள், அப்பாவின் பணி மாறுதலுக்கு பின் வேறு ஊருக்கு சென்று விட்டோம்.

அவரை இந்த டில்லியில், வேலைக்கு போகும் ஒரு நபராக நான் பார்ப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

என்னைப் போன்று வேலைக்கு போய் சம்பாதித்தால்தான் வயிற்றை நிரப்ப முடியும் என்ற நிலைமை இல்லாத அவர் எதற்காக, இந்த டில்லியில், கடுங்குளிரிலும், கடும் வெயிலிலும் வேலைக்கு போய் வாட வேண்டும்.

வீடு நிறைய வேலையாட்கள், தோட்டம், வயல், , கண்ணில் படும் ஊர் மனிதர்கள் எல்லாம் கும்பிடு என்று இருந்தவர், எதற்காக இந்த வங்கி வேலைக்காக டில்லிக்கு வர வேண்டும், மாத சம்பளத்திற்காக காத்திருக்க வேண்டும்.

என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை சொத்துக்கள் எல்லாம் போய் விட்டதா. ஏதாவது பெரும் நஷ்டமா…

நிறைய கேட்க வேண்டும் போல் தோன்றியது.

“ அம்மா, அப்பா எப்படி இருக்காங்க…”

“ ரெண்டு பேரும் போயிட்டாங்க..”

எனக்கு சங்கடமாய் இருந்தது.

அவருடைய தம்பி மருதுவைப் பற்றி கேட்க வேண்டும் என்று மனதில் தோன்றியது.

ஆனால் கேட்கவில்லை.

தம்பி மருது, அண்ணனுக்கு நேர் எதிர் குணம் படைத்தவர். எனக்கு அவரை கொஞ்சம் கூட பிடிக்காது.

என் மனதில் பொங்கிக் கொண்டிருந்த அந்த கேள்வியைக் கேட்டேன்.

“ அண்ணே.. நீங்க எதுக்கு டில்லிக்கு வந்தீங்க…”

“ சொல்றேன்.. விவரமா சொல்றேன்.. இன்னிக்கு ஈவினிங் ஒரு முக்கியமான வேலை இருக்கு.. திலகவதின்னு ஒரு பொண்ணு, அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் சின்ன வயசிலேருந்து சினேகிதங்க. அந்த பொண்ணு கோயம்பத்தூரிலிருந்து வருது. அந்த பொண்ணோட அப்பா காலமாயிட்டதினால அவங்க மில்லுக்கு இப்ப அவதான் முதலாளி, எம்.டி எல்லாம். ஏர்போர்ட்டுக்கு போய் அழைச்சிகிட்டு வந்து, தாஜ்ல தங்க வைக்கணும்.. நீயும் என் கூட ஏர்போர்ட்டுக்கு வா.. ஆமா… நீ எதுக்கு ரூம் தேடி அலையற.. என் ரூமிலேயே தங்கிக்கோ.. போய் பெட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு வா..” என்றார்.

நான் மஞ்சுநாத்தின் ரூமுக்கு திரும்பினேன்.

நான் ரூமை உடனே காலி செய்யப் போகிறேன் என்றதும் மஞ்சுநாத்தின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

நானும் அண்ணனும், ஏர்போர்ட் போவதற்காக, ஒரு டாக்சியை அமர்த்திக் கொண்டோம்.

டாக்சி சங்கர் ரோடை தாண்டி, ஏர்போர்ட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

மௌனமாய் இருந்த அண்ணன் பேச ஆரம்பித்தார்.

“ திலகவதியை நான்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு எங்க அப்பாவும், திலகவதியோட அப்பாவும் சின்ன வயசிலேயே முடிவு செஞ்சாங்க.. ஆனா…”

“ அவங்களுக்கு வேற கல்யாணம் ஆயிடிச்சா..” ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.

“ இல்ல….. நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லைன்னு சொல்லிட்டேன்.. அதனால அவங்க அப்பா மருதுக்கு திலகவதியை கொடுக்கறேன்னு சொன்னாரு.. இப்ப அவரும் இல்ல…”

எனக்கு பழனிசாமி அண்ணன் மேல் கோபமாய் வந்தது.

அதே சமயத்தில் இன்னொரு விஷயமும் நெருடியது.

மருதுக்கு திலகவதியை கல்யாணம் செய்து கொடுப்பதாக இருந்தால், பழனிசாமி அண்ணனைப் பார்க்க ஏன் டில்லிக்கு அவள் வர வேண்டும்..

“ எதுக்கு அவங்க டில்லிக்கு வர்ராங்க..” நான் கேட்டேன்.

“டெக்ஸ்டெயில் மினிஸ்ட்ரியில ஏதோ அவங்க மில் சம்மந்தமா ஒரு வேலை இருக்காம்..”

டில்லி விமான நிலையத்தில், கோயம்பத்தூரிலிருந்து வரும் திலகவதிக்காக நானும், பழனிச்சாமி அண்ணனும் காத்துக் கொண்டிருந்தோம்.

ஜவுளித்துறை அமைச்சகத்தில் வேலை என்பது உண்மையாக இருக்குமா..
இல்லை, பழனிச்சாமி அண்ணனை பார்க்கத்தான் திலகவதி டில்லிக்கு வருகிறாளா..

வெளியில் நின்று கொண்டிருந்தால், கண்டுபிடிப்பது சிரமம் என்றும், டிக்கெட் எடுத்து பார்வையாளர் பகுதிக்கு போய் காத்திருந்தால், கொஞ்சம் சுலபமாய் திலகவதியை கண்டுபிடித்து கூட்டிச்செல்ல முடியும் என்றும் அவர் சொன்னார். நாங்கள் இருவரும் பார்வையாளர் பகுதிக்கு, டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போய் காத்திருந்தோம்.

கோயம்பத்தூர் விமானம் வருவதற்கான நேரம் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஆனால் தகவல் பலகையில் இன்னும் அந்த விமானம் வரவில்லை, என்று காண்பித்துக் கொண்டிருந்தது. நாங்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தோம்.

திடீரென்று, எங்களை கடந்து வேகமாகப் போகும், ஒரு பெண்ணைக் காண்பித்து,

“ அது தான் திலகவதி.. பிளைட் வந்திடிச்சி போலிருக்கு.. போர்டில கோயம்பத்தூர் பிளைட் வர்லேன்னு காண்பிச்சிக்கிட்டு இருக்காங்க.. என்ன மேனேஜ்மெண்ட்..” என்று பழனிசாமி அண்ணன் சொல்ல, நான் அந்த திலகவதியை நோக்கி ஓடினேன். அவரும் என்னுடன் ஓடி வந்தார்.

தாஜ் ஹோட்டலில் திலகவதியை தங்க வைத்துவிட்டு நாங்கள் எங்கள் ரூமுக்கு திரும்பினோம்.

அடுத்த நாள் பழனிசாமி அண்ணன் தன்னுடைய வங்கியில் ஆடிட் நடப்பதாகவும், தான் விடுப்பு எடுக்க முடியாது என்று சொல்லி, டெக்ஸ்டெயில் மினிஸ்ட்ரிக்கு திலகவதியுடன் என்னைப் போகச் சொல்லி விட்டார்.

நான் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு, மான்சிங் ரோடு போய், தாஜ் ஹோட்டலின் ரிசப்ஷனில் காத்திருந்தேன்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைவதற்கு தகுந்த மாதரி என்னிடமிருந்த உடுப்புகளிலே விலை உயர்ந்த ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டு போனேன்.

அப்போதும் கூட, எனது அந்த உடுப்பு, அந்த ஹோட்டலின் பகட்டுக்கு முன் பொருந்தாமல் இருந்தது.

லிப்டில் இறங்கி வந்த திலகவதியைப் பார்த்து,

“ மினிஸ்ட்ரிக்கு புறப்படலாங்களா..” என்றேன்.

“ அப்புறம் போகலாம்.. உட்காருங்க.. உங்க அண்ணனைப் பத்தி கொஞ்சம் பேசலாம்..” என்றாள் திலகவதி.

எனக்கு சற்று திகைப்பாய் இருந்தது.

ரிஷப்ஷன் சோபாவில் உட்கார்ந்தோம்.

அண்ணனைப் பற்றி பேசலாம் என்றவுடன், நானே முதலில், அந்த கேள்வியை திலகவதியிடம் கேட்டேன்

“ அண்ணன், எதுக்காக சொத்து, சுகங்களை விட்டுட்டு, இந்த டில்லி வேலைக்கு வந்து இருக்காரு…”

கொஞ்சம் மௌனமாய் இருந்த திலகவதி பேச ஆரம்பித்தாள்.

“ அவரோட அப்பா குருசாமிக்கு அந்த ஊரு மக்கள்கிட்டே நல்ல செல்வாக்கு…. அது உங்களுக்கு கூட தெரிஞ்சு இருக்கும்… அதை பயன் படுத்தி, அவரோட அப்பாவை தேர்தல்ல நிக்க சொல்லி, வற்புறுத்தினாங்க..”

“ என்னாச்சு.. அவங்க அப்பா நின்னாரா…”

“ இல்ல… அவங்க அப்பா ஒரேயடியாக மறுத்திட்டாரு.. அவருக்கு அதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.. ”

கொஞ்சம் நிறுத்தி விட்டு திலகவதி தொடர்ந்தாள்.

“ ஆனா அதோட விஷயம் முடியல.. அப்பா இல்லாட்டி என்னா, மூத்த மகனுக்கு அந்த பகுதி ஜனங்ககிட்ட செல்வாக்கு இருக்கு, வக்கீலுக்கு படிச்சி இருக்காருன்னு தெரிஞ்சிகிட்டு அவரை, அதாவது உங்க அண்ணனை, சம்மதிக்க வைச்சிட்டாங்க…”

“ ஆச்சர்யமாயிருக்கே.. அண்ணன் எலக்சன்ல நின்னாரா.. டிவியில, பத்திரிக்கையில அப்படி ஒரு நியூஸ் நா பாக்கலியே..” நான் கேட்டேன் நம்ப முடியாமல்.

“ அதிலதான் நிறைய விஷயம் நடந்திச்சு.. அதுதான் அவரு ஊரை விட்டு வர காரணம்..”

“ அப்படியா..” ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்.

“ தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை தன் மகன் செய்வாருன்னு அவங்க அப்பா எதிர்பார்க்கல… அதனாலே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திடிச்சி.. இந்த அளவுக்கு, அப்பாவுக்கு இது பிடிக்காம போகும்னு உங்க அண்ணனும் எதிர்பார்க்கலே.. அப்பாவுக்கு இப்படி ஆச்சின்னு தெரிஞ்சவுடனே, எலக்சன்ல நிக்கறதிலே இருந்து வாபஸ் வாங்கிகிட்டு, ஊரை விட்டே போறேன்னு, கெளம்பிட்டாரு. ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலுக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது, அவரோட அப்பா இறந்து விட்டதாக யாரோ வந்து சொல்ல, அவரு திரும்பி போனாராம்…. அதுல அவர் ரொம்பவும் உடைஞ்சு போயிட்டாரு.. இனிமே ஊர் பக்கமே வர்ரதில்லேன்னு சொல்லிட்டாரு…”

“ அவருக்கு வரவேண்டிய சொத்து…” நான் கேட்டேன்.

“ எல்லாம் அவரோட தம்பி தான் அனுபவிச்சிகிட்டு இருக்காரு.. சொத்திலிருந்து எந்த வருமானமும் உங்க அண்ணனுக்கு போறதில்ல… அதை விட பெரிய அநியாயம் என்னன்னா, எந்த எலக்சன்ல நிக்கக் கூடாதுங்கறதுக்காக அவங்க அப்பா செத்து போனாரோ, எதுக்காக உங்க அண்ணன் ஊரை விட்டு வந்தாரோ, அதே எலக்சன்ல அவரோட தம்பி, நின்னு எம் எல் ஏ ஆனாரு.. அப்புறம் மினிஸ்டராகவும் ஆயிட்டாரு.. அவரு மேல ஏகப் பட்ட புகார். பொண்ணுங்க விஷயம் உட்பட…” திலகவதி.

திலகவதி இப்படி பேசியவுடன், மருதுவை கல்யாணம் செய்து கொள்ள அவளுக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு புரிந்தது, பழனிசாமி அண்ணனைப் பார்க்கத்தான் அவள் டில்லி வந்திருக்கிறாள் என்றும் புரிந்தது.

திலகவதியைப் பார்த்தேன்.

கல்யாண வயதை தாண்டிச் செல்லும் பெண்ணாக எனக்கு தோன்றியது.

“ புறப்படலாங்களா… மினிஸ்ட்ரிக்கு…” மறுபடியும் கேட்டேன்.

கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்துவிட்டு,

“ உங்க அண்ணனைப் பாக்கத்தான் டில்லிக்கு வந்தேன்..”

அவள் கண்கள் கலங்கி இருந்தது.

அதற்கு பிறகு நாங்கள் மூன்று மணி நேரம் பேசினோம்.

திலகவதி நிறைய விஷயங்கள் சொன்னாள்.

பழனிசாமி அண்ணனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தான் காத்துக் கொண்டிருப்பதாகவும், அதற்காக காலம் தாழ்த்த வேண்டும் என்று மேல் படிப்பு படித்தாகவும் சொன்னாள்.

திலகவதியின் திருமணம் தள்ளிப் போகிறதே என்ற கவலையில் தான், திலகவதியின் அப்பாவும் இறந்ததாகச் சொன்னாள். பழனிசாமி கல்யாணத்திற்கு மறுப்பதால் மருதுவை கல்யாணம் செய்து கொள்ள அவள் அப்பா ஏற்பாடு செய்தாராம். அதற்குள் அவரும் இறந்து விட்டாராம்.

அப்பா இறந்து விட்டதால், தானே தங்கள் மில்லின் எம் டி பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டி ஆகி விட்டதாம். தங்கள் மில்லில் தொழிலாளர் பிரச்சினை என்றும் தன்னால் நிர்வாகம் நடத்துவது சிரமமாக இருக்கிறது என்றும் சொன்னாள்.

தொழிலாளர் பிரச்சினை என்றவுடன் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது.

மனித உயிர்களின் மேல் மாளாத அன்பு கொண்டிருந்த பழனிசாமி அண்ணன் அரசியலுக்கு வந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று நினைத்தார். அது நடக்கவில்லை.

ஏன் இப்படி நடக்கக் கூடாது..

அந்த நல்ல குணங்களை, தொழிலாளர் பிரச்சினைகளை சமாளிக்க உபயோகப் படுத்துங்கள் என்று அவரிடம் சொல்லி, சமாதானப் படுத்தி, இந்த டில்லி வேலையை ராஜினாமா செய்ய வைத்து, திலகவதியின் மில்லுக்கு அவரை எம்.டி ஆக்கி விட்டால்..

முதலில் இது நடந்தால், அடுத்து திலகவதியை கல்யாணம் செய்து கொள்ள அவரை சம்மதிக்க வைத்து விடலாம் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

என் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் ராஜினாமா கொடுக்க சம்மதித்தார்.

அவருடைய ராஜினாமாவை ஏற்க, அவர்கள் வங்கியில் ஒரு வாரம் ஆகும் என்றார்கள். திலகவதி அது வரை காத்திருந்து, கையோடு அவரை கூட்டிச் சென்றாள்.

ஒரு மாதம் கழித்து, ஒரு நாள் திலகவதியிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது.

தன்னை கல்யாணம் செய்து கொள்ள அவரை சம்மதிக்க வைத்து விட்டதாகவும், ஒரு மாதம் லீவு எடுத்துக் கொண்டு வந்து கல்யாண வேலையை பார்க்க வேண்டும் என்றும் சொன்னாள்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *