வாழ்க்கை ஒரு வானவில் 7.

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா

ரங்கன் சேதுரத்தினத்தை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்ததன் பிறகு தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டான். சேதுரத்தினம் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். லலிதா அவனை ஓரத்துப்பார்வை பார்ததவாறு சமையற்கட்டினுள் நுழைந்தாள். ஒரே ஒரு கணம் இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்ட போதிலும், இருவருமே முகத்தில் எதையும் காட்டாமல் இருந்தார்கள்.
ரங்கன் எழுந்து மின்விசிறியைச் சுழலவிட்டபின் மறுபடியும் உட்கார்ந்து கொண்டான்: “லலிதா நல்லா சமையல் பண்ணும்…” என்று இரைந்த குரலில் அறிவித்தான். தன் புகழ் மொழிகள் மனைவியின் செவிகளைச் சென்றடைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டிய ரங்கனின் கரிசனம் சேதுரத்தினத்தின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.
“ரொம்பத்தான் புகழாதீங்க. அவர் முதல்ல சாப்பிடட்டும்!” என்றவாறு வெளியே வந்த லலிதா இருவருக்கும் எதிரில் இருந்த குட்டை முக்காலியில் சேமியா கேசரித் தட்டுகளையும் ஒரு கூஜாவில் தண்ணீரையும் வைத்தாள்.
“இனிப்பைச் சாப்பிட்டுட்டு இருங்க. சூடா பஜ்ஜி எடுத்துண்டு வர்றேன்,” என்றபடி இயல்பான புன்சிரிப்புடன் மறுபடியும் லலிதா சமையலறைக்குள் புகுந்தாள். அவளது இயல்பான நடத்தையின் பின்னணி தெரியாத ரங்கன் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தான்.
“உங்க சொந்த ஊரே மெட்ராஸ்தானா? இல்லாடடா, வேற ஏதாவது ஊரா? இத்தனை நாளாப் பழகுறோம். அதைக் கேக்கணும்னு தோணினதே இல்லே!” என்ற ரங்கன், “சாப்பிடுப்பா…” என்றவாறு கொஞ்சம் கேசரியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
“மெட்ராஸ் இல்லேப்பா. எனக்குச் சொந்த ஊர் வத்தலப்பாளையம்.”
”அட! வத்தலப்பாளையமா! என் மனைவியோட ஊர் கூட வத்தலப்பாளையந்தான்! … லலிதா! இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ!”
“ரெண்டு நிமிஷத்துலே வர்றேன். அடுப்பில பஜ்ஜி வெந்துட்டு இருக்கு….” என்ற லலிதாவுக்குப் படபடப்பாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து அவள் பஜ்ஜித் தட்டுகளுடன் அங்கு வந்த போது ரங்கன் காணப்படவில்லை.
“அவர் எங்கே?” என்று அவள் சேதுரத்தினத்தைக் கேட்டாள்.
“பாத்ரூமுக்குப் போனான்….”
“என்னை அடையாளம் தெரிஞ்சதாக் காட்டிண்டாலும், என்னைப் பத்தின விஷயங்களை இவரண்டை சொல்லிடாதீங்க – ப்ளீஸ்! அப்புறம் என் வாழ்க்கையே பாழாயிடும்!” என்று கிசுகிசுப்பாய்க் கெஞ்சிய வண்ணம் பஜ்ஜித் தட்டுகளை அவள் முக்காலி மீது வைத்தாள்.
“நிச்சயமாச் சொல்லவே மாட்டேன். எனக்குத் தெரியாதா? நீங்க கவலையே படாதீங்க!” என்று அவனும் மெல்லிய குரலில் பதிலிறுத்தான்.
அவன் இவ்வாறு சொல்லி முடித்த கணத்தில் கழிவறைக் கதவுத் தாழ்ப்பாள் ஓசைப்பட்டது. லலிதா அவ்விடம் விட்டு அகன்றாள். இரண்டே நிமிடங்களில் ரங்கன் சிரிப்புடன் வந்து அவனுக்கு அருகில் உட்கார்ந்தான்.
“லலிதா! சேதுவோட சொந்த ஊர் கூட வத்தலப்பாளையமாம். அவன் சொன்னது காதிலே விழுந்ததா?” என்று இரைந்த குரலில் வினவினான்.
அடுப்பைத் தணித்துவிட்டு நிலைப்படி யருகில் நின்று, “வத்தலப் பாளையத்துல எங்கே இருந்தீங்க? அந்த ஊரை விட்டு எப்ப கெளம்பி மெட்ராசுக்கு வந்தீங்க?” என்று லலிதா அவனை நோக்கி வினவினாள்.
“அந்த ஊரை விட்டு நாங்க கெளம்பிப் பத்து வருஷத்துக்கு மேல ஆச்சுங்க. உங்கப்பா யாரு?”
“கனகசபைன்னு பேரு. ரைஸ் மில் வெச்சிருந்தாரு.”
“ஓ. நல்லாத் தெரியுமே! அடேடே. அப்ப ரைஸ் மில் வெச்சிருந்த கனகசபை அய்யாவுடைய மகள் லலிதாதானே நீங்க? இப்ப அடையாளம் தெரிஞ்சுடுத்து. ஸ்கூல் ஆனிவெர்சரியப்ப பாட்டுப் போட்டியில எப்பவும் நீங்கதானே முதல் பரிசு வாங்குவீங்க!”
“நல்லா நினைப்பு வெச்சிருக்கீங்களே! ஆனா நாங்க வத்தலப்பாளையத்தை விட்டுக் கெளம்பி எட்டு வருஷம் ஆயிடுத்து. உங்களுக்கு அப்புறம் நாங்க கெளம்பியிருக்கோம்…”
“உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு, ரங்கா?”
“மூணு வருஷமாச்சுப்பா….”
அப்போது குறுக்கிட்டுப் பேசிய லலிதா, “உங்க மனைவியைக் கூட்டிண்டு ஒரு நாள் வாங்.க,” என்றாள்.
“அவ பிரசவத்துக்குக் கோயமுத்தூர் போயிருக்கா. இது தலைச்சன் பிரசவம்!”
“அப்ப, குழந்தையும் அவங்களும் வந்த பிற்பாடு நாங்க ரெண்டு பேருமா உங்க வீட்டுக்கு வர்றோம். உங்க குடும்பத்தைப் பார்த்த மாதிரியும் இருக்கும். …நீங்க பஜ்ஜி சாப்பிடுட்டு இருங்க. நான் காப்பி எடுத்துண்டு வர்றேன்,.”
“… இன்னும் கொஞ்சம் பஜ்ஜி போட்டுக்குங்க!” என்ற லலிதா கேசரித் தட்டுகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குப் போனாள்.
“போதுங்க. இனிமே சாப்பிட முடியாது…வயித்துல இடமில்லே!”
“இல்லேல்லே இன்னும் ரெண்டே ரெண்டு போட்டுக்குங்க!” என்ற லலிதா அவன் தடுக்கத் தடுக்கக் கேட்காமல் மேலும் பஜ்ஜிகளை எடுத்து வந்து இருவர் தட்டுகளிலும் வைத்துச் சென்றாள்
“உன்னோட மனைவிக்குக் கைமணம் நிறைய இருக்கு. கேசரியும் பஜ்ஜியும் பிரமாதம்…” என்று சேதுரத்தினம் புகழ்ந்தான்.
“அவங்க ஊர்னதும் இன்னும் அதிக அக்கறையோட பண்ணியிருக்காங்க! அதான்!”
“சும்மா வாராதீங்க. நீங்க ரெண்டு பேரும் வர்றதுக்கு முந்தியே நான் கேசரி பண்ணியாச்சு. பஜ்ஜி மாவும் கரைச்சு வெச்சாச்சு…” என்றபடி லலிதா காப்பிக் கோப்பைகளை எடுத்து வந்து வைத்தாள். பிறகு மீண்டும் உள்ளே போனாள்.
“அப்படி ஒண்ணும் அடங்காப் பிடாரியாத் தெரியல்லியேப்பா!” என்று சேதுரத்தினம் கிசுகிசுப்பாய்ச் சொல்ல, “உங்க ஊர்க்காரின்னு தெரிஞ்சிடுத்தில்லையா! அதான் பரிஞ்சு பேசுறே!” என்ற ரங்கன் புன்னகை செய்தான்.
பின்னர், திடீரென்று ஞாபகம் வந்தவனாய், “லலிதா! கொஞ்சம் இங்க வந்துட்டுப் போ!” என்றான்.
லலிதா வந்தாள்.
”நீ நல்லாப் பாடுவேன்றானே சேது? என் காதுபட நீ பாடினதே இல்லையே! ஏன் பாடுறதை நிறுத்திட்டே?”
அவள் பதில் சொல்லும் முன் சேதுரத்தினம் இடைமறித்தான்: “அதெப்படி அவங்களுக்குப் பாடத் தெரியும்கிறது கூடத் தெரியாதவனா இருக்கே? அவங்களைப் பொண்ணு பார்க்கப் போனப்ப நீ பாடசொல்லி யிருப்பே, இல்லையா?”
“ஆமா. ஆனா தனக்குப் பாடவே வராதுன்னு சொல்லிட்டாளே!”
“அப்படியா சொல்லிட்டாங்க? ஆச்சரியமா யிருக்கு!”
“சொல்லு, லலிதா. ஏன் நீ பாடுறதே இல்லே? நான் ஒண்ணும் பெரிய சங்கீத ரசிகன் இல்லேதான். ஆனா நீ பாடினா நான் ஒண்ணும் காதைப் பொத்திக்கப் போறதில்லே. நான் கேள்விப்பட்ட வரைக்கும், பாடத் தெரிஞ்ச வாய் சும்மாவே இருக்காது. ஆனா நீ முனகலாக் கூடப் பாடினது கிடையாதே! ஆச்சரியந்தான்!”
சேதுரத்தினம் மன்னிப்புக் கோரும் பார்வையை லலிதாவின் மீது பதித்தான். `மன்னிச்சுக்குங்க, லலிதா. உங்களுக்குப் பாடத் தெரியும்கிறது ரங்கனுக்குத் தெரியாதுன்றது எனக்குத் தெரியாதில்லையா? அதான் உளறிட்டேன்…’ எனும் சொற்கள் அவன் பார்வையினின்று சிந்திக்கொண்டிருந்தன.
“பாடிண்டுதான் இருந்தேன். அப்புறம் ஒரு வைராக்கியத்துல பாடுறதைக் கம்ப்ளீட்டா நிறுத்திட்டேன்.”
“ஏன், லலிதா?”
“ஒரு தரம் எங்க ஊர்ல பாட்டுப் போட்டி நடந்தது. நான் டென்த் படிச்சிண்டிருந்தப்போ. எனக்குத்தான் ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சிருந்திருக்கணும். ஆனா ஹெட்மாஸ்டருக்கு வேண்டியவரோட பொண்ணுக்குக் குடுத்துட்டாங்க. அந்த வெறுப்பில இனிப் பாடவே கூடாதுன்னு சபதம் பண்ணிட்டேன். அது அசட்டுத்தனந்தான். ….ஆனா சபதம் பண்ணிட்டேனே! அதான்!”
“இப்படியும் ஒரு அசட்டு வைராக்கியமா!” என்று ரங்கன் வியந்தான்.
“அதான் நானே ஒத்துண்டுட்டேனே அசட்டுத்தனம்னு? இது வரைக்கும் சாதிச்சுட்டேன். இனி எப்படியோ?”
“இத்தனை நாளாப் பாடாம இருந்ததுலே உங்க தொண்டை அடைச்சுப் போயிருந்திருக்குமே!”
“ஆமா. அடைச்சுத்தான் போயிடுத்து. என்னையும் மறந்து எப்பவாவது ஒரு பாட்டை முனகிடுவேன். ஆனா குரலே எழும்பாது. இனிமே நானாவது, பாடுறதாவது?” என்று சொல்லிப் பெருமூச்செறிந்த போது லலிதாவின் கண்கள் கசிந்தன.
அவளது நாடகத்தனமான பேச்சையும், தான் பாட்டை நிறுத்தியதற்கு மிகத் தோதாய் ஒரு காரணத்தை உடனுக்குடனாய்க் கற்பித்துச் சொன்ன அவளது கெட்டிக்காரத்தனத்தையும் அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. `சமயோசிதமாய்ப் பேசவும் செயல்படவும் அறிந்திருக்கும் இவள் மகா புத்திசாலிதான்! நம்பத்தகுந்த ஒரு பொய்யை கணத்துக்குள் சொல்லிவிட்டாளே! அதற்கான உண்மையான காரணம ரங்கனுக்குத் தெரியவந்தால்….? இடிந்து போய்விடுவான். பாவம் ரங்கன்! … எனினும் லலிதா கேட்டுக்கொண்டபடி அவளைப் பற்றி எதுவும் தெரிந்ததாய் நான் காட்டிக்கொள்ளவே கூடாது. இருவரது வாழ்க்கையும் பாழாகிப் போகும்…’
ரங்கனோ திகைத்துப் போயிருந்தான். லலிதாவின் கண்களில் ஈரம் படர்ந்திருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை.
“இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடல்லே, லலிதா! நீ முயற்சி பண்ணிப் பாரு. தினமும் விடாம சாதகம் பண்ணினா ஓரளவுக்காவது பழைய குரல் வந்துடும். இவ்வளவு அசட்டுத்தனமா ஒரு சபதம் எடுப்பேன்றதை என்னால ஏத்துக்கவே முடியல்லே. இருந்தாலும் முயற்சி பண்ணு.”
“இல்லே. இனிமே எனக்குப் பாட்டு வராது. தொண்டையை மட்டும் துருப்பிடிக்க வெச்சுட்டா அப்படியே நின்னுடும். பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்னு சொல்லுவாங்க.”
அவள் மனமுடைந்தாற்போல் சொன்ன சொற்களால் தாக்குண்டு ரங்கனும் சேதுரத்தினமும் ஒன்றும் பேசாதிருந்தார்கள்.
லலிதா காலித் தட்டுகள், கோப்பைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சமையலறைக்குப் போனாள்.
மேலும் சற்று நேரம் இருந்த பிறகு சேதுரத்தினம் விடைபெற்றான்.
“லலிதா! நான் பஸ் ஸ்டாப் வரைக்கும் போய் சேதுவை அனுப்பிட்டு வர்றேன்,” என்ற ரங்கன் தானும் அவனுடன் படியிறங்கினான்.
லலிதா கதவைச் சாத்திக்கொண்டாள்.
சில நொடிகள் போல் இருவரும் மவுனமாக நடந்தார்கள்.
தொண்டையைக் கனைத்துக் கொண்ட ரங்கன், “சேது! உங்கிட்ட லலிதாவைப் பத்தி ஒண்ணு கேக்கணும். அவங்க ஊர்க்காரன்கிறதாலே உனக்குத் தெரிஞ்சிருக்கலாம். …” என்றான்.
சேதுரத்தினம் திடுக்கிட்டுப் போய்த் தலை திருப்பி நண்பனைப் பார்த்தான்.
– தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *