உடலே மனமாக..

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 19 in the series 6 ஜூலை 2014

– கலைச்செல்வி

வைதேகியின் கணவன் வீட்டிலிருந்து இன்று பஞ்சாயத்து பேச வருவதாக சொல்லியிருந்தனர். திருமணம் முடிந்த இந்த ஓராண்டிற்குள் இதுவரை இரண்டு முறை பேச்சு வார்த்தை நடந்திருந்தது. இரு முறையுமே பஞ்சாயத்தின் வாதமும் பிரதிவாதமும் ஒரு புதிர் நிறைந்த சூழலுக்குள்ளேயே பயணித்துக் கொண்டிருந்தது. இம்முறை உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஏழெட்டு பேராக வருவதாக சொல்லியிருந்தார்கள். வைதேகி வீட்டு தரப்பிலும் வேறு வழியின்றி; ஆள் சேர்க்க வேண்டியதாயிற்று.
அதே மனிதர்கள் தான்.. சென்ற வருடம் அவர்களின் வருகை திருவிழாவாக தெரிந்தது. இந்த வருடம் அது எல்லோரின் மனத்தையும் வெறுமையாக்கியிருந்தது. வைதேகியின் பெரியப்பாவின் குடும்பமும் சித்தியின் குடும்பமும் காலையில் வந்திறங்கினர். வைதேகியின் தாய் வங்கிக்கு விடுப்பு சொல்லியிருந்தார். கவலையின் ரேகைகள் அவரின் முகத்திற்கு வயதிற்கு மீறிய அலுப்பை தந்திருந்தது. மகளின் திருமணம் முடித்த கையோடு விருப்ப ஓய்வு பெற்று விட்ட தந்தை நாற்காலியில் தொய்ந்து போய் அமர்ந்திருந்தார்.
வைதேகி உள்ளறையில் இருந்தாள். சிறிய வயதில் அவளிடமிருந்த கலகலப்பான சுபாவம் அவள் வளர வளர மாறியிருந்தது. அவள் கணவன் வீட்டில் கூட வாயாடி என்பதான புகார் இல்லை. சந்தோஷமோ துக்கமோ அதிர்வுகளை வெளி; எழுப்பாமல்; எப்போதும் ஒரு கவன நிலையிலேயே இருப்பதாக தோன்றும். இத்தனைக்கும் வாழ்க்கையின் முதல் ஏழெட்டு வருடங்களை துடுக்குத்தனம் மிகுந்த சித்தியுடன் கழித்திருக்கிறாள். வைதேகிக்கு நான்கு வயதாகும் வரை சித்தி வைதேகியின் வீட்டிலேயே இருந்தாள். திருமணத்திற்கு பிறகும் கணவனுடன் அருகிலேயே வீடெடுத்து தங்கியதில் சித்தியுடன் வைதேகிக்கு நெருக்கம் அதிகம்.
திருமணத்திற்கு பிறகு சித்திக்கு குடும்ப நெருக்கடிகள் அதிகம் என்றாலும் வைதேகியிடம் பிரியமாகவே இருப்பாள். அவள் கணவனுக்கு நிலையான உத்யோகம் இல்லை. ஏனோ குழந்தை தரிப்பும் தள்ளிக் கொண்டே போனது. அது கூட ஏதோ ஒரு வகையில் வைதேகியின் குடும்பத்திற்கு சாதகமாக போனது. பெற்றோர்கள் வங்கி வேலையிலிருந்து வீடு திரும்பும் வரை வைதேகிக்கு நல்லதொரு அடைக்கலம் இருந்தது. யார் கண்ணோ பட்டது போல சிறிய வாய் தகராறு முற்றியதில் சித்தி தன் கணவனுடன் சொந்த ஊருக்கே சென்று விட்டாள். அந்த நேரம் வைதேகி மூன்றாம் வகுப்பிலிருந்தாள். நீண்ட வருடங்களுக்கு பிறகு வைதேகியின் திருமணம் தான் மீண்டும் இரு குடும்பங்களையும் சேர்த்து வைத்தது.
ஒரே மகளுக்கு வசதியான.. தன்மையான குடும்பம் அமைந்தது குறித்து கனவு போல் ஆட்கொண்ட சந்தோஷம் அந்த குடும்பத்தை கலைத்த போது முழுதாக மூன்று மாதங்கள் தான் முடிந்திருந்தது. இன்று போல அப்போதும் ஒரு பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அது குடும்ப அளவிற்குள்ளேயே முடிந்தது. “உங்களுக்கு தெரியாதத நாங்க சொல்லிட போறதில்ல.. சோத்துக்கு தண்ணிக்கு இல்லாமயா பொண்ணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் பண்றது..?”
“சின்ன பொண்ணு தானுங்களே..?” என்றார் வைதேகியின் அப்பா தயங்கியபடியே.
“என்னாங்க.. சின்னப் பொண்ணு.. இந்த வயசு பொண்ணுங்கெல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு புள்ள பெத்துக்கலீயா..?” பேச்சும் வார்த்தையும் அதிராமல், நாகரீக எல்லைக்குள்ளேயே இருந்தது.
“அஞ்சு வெரலும் ஒண்ணு போலவாங்க இருக்கு..” தாய்க்கு மகளை விட்டுக் கொடுக்க முடியவில்லை. லேசுபாசாக புத்திமதி சொல்லி நல்ல நாள் பார்த்து வைதேகியை அவள் கணவன் வீட்டில் அழைத்து கொண்டு விட்டார்கள். சாதுவான மருமகளை திட்டவோ அதட்டவோ முடியவில்லை அவளது புகுந்த வீட்டினரால்;. அடுத்த வந்த மூன்று மாதங்கள் கூட புதுக்கருக்கு கலையாமலேயே நகர்ந்தது.
இந்த முறை மாப்பிள்ளை வீட்டிலிருந்து நாலைந்து பேர் வந்திருந்தனர். “இன்னும் கொஞ்சம் விட்டு புடிச்சா பரவால்ல.. என்ன ஏதுன்னு தெளிவா பேசி பார்ப்போம்..” என்றார் வைதேகியின் அப்பா தலையை உயர்த்தாமலேயே.
“நம்பளே பேசிக்கிட்டிருந்தா..? டாக்டரை வேணா கன்சல்ட் பண்ணி பாக்கலாமா..?” அம்மாவும் பலகீனமாகவே பேசினார். சம்பந்தியம்மாவிற்கு மட்டும் கேட்கும் அளவிலேயே குரலின் ஒலி இருந்தது.
“இந்த காலத்துல இதெல்லாம் செய்யாம இருப்போமாங்க..? எல்லாம் போயாச்சு.. சில பேருக்கு இந்த விஷயம் மொதல்ல கொஞ்சம் அசூசையா இருக்குமாம்.. அப்றம் போக போக சரியாயிடும்னாரு..” அந்த வீட்டு மாப்பிள்ளை எங்கோ பார்த்தவாறே சேம் சைட் கோல் அடித்தார்.
“அதுக்குன்னு எத்தனை நாளு..? ஏற்கனவே தோஷம்.. அதுஇதுன்னு முப்பதுல தான் கல்யாணம் ஆச்சு தம்பிக்கு.. எங்க வீட்டுக்கு ஒத்த பையன் வேற.. எங்கப்பா அம்மாக்கு மட்டும் பேர புள்ளைங்கள தூக்கி பாக்கணும்னு ஆசையிருக்காதா..” என்றாள்; அந்த வீட்டு பெண்.
“கொஞ்சம் பொறுத்துக்கம்மா.. நான் மறுபடியும் பேசறன்.. என்னை நம்புங்க..” கிட்டத்தட்ட கெஞ்சினார் வைதேகியின் அப்பா. மகளின் கண்களை தவிர்த்து மனைவியை அர்த்தத்தோடு நோக்கினார். அன்று இரவு முழுவதும் வைதேகியிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது அம்மாவுக்கு. தனது கல்யாண கதையையும் வைதேகி வயிற்றில் தரித்த கதையையும்; பிறகு தானாகவே இரண்டு அபார்ஷன்கள் நடந்து போனதையும் மகளி;டம் பகிர்வதற்கு இரவின் இருள் துணை செய்தது.
அடுத்த வாரம் கணவன் வீட்டிற்கு போவதாக சொன்னாள் வைதேகி.
திருமணம் முடிந்து வருடம் ஒன்று ஓடியிருந்தது. சென்ற வாரம் வைதேகியை அவள் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அவள் கணவன். ஏதோ டிரைனிங் போக வேண்டும் என்று சொல்லி மனைவியை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினான். மறுநாள் தான் சம்பந்தியிடமிருந்து ஃபோன் வந்திருந்தது. உறவினர்களுடன் நேரில் வருவதாக சொன்னார். பேச்சு அளந்தது போல் குறைவாகவே இருந்தது. “ஒன் மகளுக்கு புரியுதா.. புரியிலியாடீ..?” என்றார் வைதேகியின் அப்பா புரியாமலேயே.
“புரியலயேங்க.. ஒரே பொம்பளப்புள்ள.. அடக்கவொடக்காம பெத்தவங்க பேச்சு மீறாம நல்லா தானே வளர்த்தோம்.. எதுலங்க குறை அவளுக்கு.. மாப்ளையும் நல்ல பையன் தான்.. அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்க தானே செய்யுது.. ஆச்சு.. வருசம் ஒண்ணு.. இன்னமும் இவ கல்லாவே இருக்குறாளே..” கண்களில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டாள் வைதேகியின் தாய்.
சொன்னது போலவே ஏழு பேர் வந்திருந்தார்கள் மாப்பிள்ளையையும் சேர்த்து.
“ரெண்டு பேரும் மனசொப்பி டைவர்ஸ் கொடுத்துட்டாங்;ன்னா சட்டத்துல அதிகம் சிக்கல் இருக்காதுன்னு நினைக்கிறேன்..” நேரிடையாகவே பேச்சுக்குள் நுழைந்தனர்.
“ஏங்க பெரிய பேச்செல்லாம் பேசிக்கிட்டு.. சமாதானமா முடிக்க பார்ப்போம்.. எங்க பொண்ணுக்கு அழகுல கொறையா.. அறிவுல கொறையா.. அந்தஸ்துல கொறையா.. பணங்காசு போதும் போதுங்க இருக்கு.. எங்கக்கா இன்னமும் சம்பாதிச்சுக்கிட்டு இருக்கிறாங்க.. அதெல்லாம் யாருக்கு.. வைதேகிக்கு மட்டுந்தானே..” யாரும் வாய் திறப்பதற்குள் சித்தி முந்திக் கொண்டாள்.
“இது மட்டுந்தான் வாழ்க்கைன்னா அதெல்லாம் தேவையான அளவுக்கு எங்ககிட்டயும் இருக்கு தானுங்களே..”
“அதுக்காக.. பட்டுபடக்குன்னு வெட்டி விட்டுட முடியுமாங்க.. இது பொம்பள புள்ள வாழ்க்கையில்லையா..” சித்தியின் கணவன் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பேசினான்.
“எல்லாம் சரி தான்.. நீங்க கொஞ்சம் எங்க பக்கம் நின்னு யோசிச்சு பாருங்க.. இந்த காரணத்துக்காக டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு சட்டமே சொல்லுது..”
“என்னங்க வந்ததுலேர்ந்து டைவர்ஸ்.. டைவர்ஸ்ங்கிறீங்க.. எங்களுக்கு மட்டும் பேச தெரியாதா..?” இம்முறை சித்தியின் கணவர் கோபத்தை மறைக்க விரும்பவில்லை. அவரிடம் அமைதியாக இருக்கும்படி கையாலேயே சைகை காட்டி விட்டு தொடர்ந்தார் பெரியம்மா. “இதுவரைக்கும் அவங்கம்மா தான் அவளுக்கு புத்தி சொல்லியிருப்பாங்க.. ஒரு அம்மா எவ்ளோ சொல்ல முடியுமோ அதை தாண்டி அவங்களால பேச முடியாது.. அதான் நாங்கள்ளாம் இருக்கோம்ல.. பேசி சரி பண்ணிடுவோம்.. அதுவரைக்கும் தயவு பண்ணி கொஞ்சம் பொறுத்துப் போங்க..”
“ஒரு புருஷன் எவ்ளோ பொறுத்து போகணுமோ அதுக்கு மேலயே பொறுத்து போயிட்டான் எங்க பையனும்.. ஃப்ரண்ஸெல்லாம் எதும் விசேஷமான்னு கேக்கும் போது கூனி குறுகிடுறான்…” நிதானம் இழக்கவில்லை என்றாலும் சச்சரவுகளின்றி வெட்டிக் கொள்ளும் எண்ணமிருந்தது அவர்களுக்கு.
“எங்க வைதேகிக்கு ஜாதகம் பார்க்கிற எடத்துலெல்லாம் புத்திர பாக்கியம் வலுவா இருக்குன்னு தான் சொல்றாங்க.. அவளுக்கு மாப்ளை மேல ரொம்ப பிரியம்.. அவளால அவரை விட்டுட்டு இருக்க முடியும்னு தோணல..”
“அதுக்காக நாய்க்கு கிடைச்ச தேங்கா மாதிரி வச்சுக்கிட்டு அழகு பாக்கவா முடியும்.. அவனுக்கும் புள்ளக்குட்டின்னு ஆசையிருக்காதா.. வயசுபுள்ள அவ்ளோ ஆசையையும் மனசுல தேக்கி வச்சிக்கிட்டு பேருக்கு ஒரு வாழ்க்கை ரிஷி மாதிரி வாழ்ந்துக்கிட்டு இருக்கான்..”
ஆளாளுக்கு பேசியதில் விவாதம் வளர்ந்துக் கொண்டே போனது.
“எங்க பொண்ணு மாதிரி உங்க பையன் இருந்தார்ன்னா நாங்க மாப்ளை வேண்டாம்ன்னு இப்படி தான் பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருப்போமாங்க..?” வார்த்தைகள் சற்றே வேகமாக வந்து விழுந்தது வைதேகியின் சித்திக்கு.
“எங்களை மாதிரி எத்தனை பேரு மனச்சாட்சியோட நடந்துக்கிறாங்கன்னு நீங்களும் யோசிக்கணும்.. வைதேகி மேல எங்களுக்கென்ன கோவம்.. சூதுவாது தெரியாத பொண்ணு அவ.. எல்லாம் சரியாயிடும்.. சரிப்பண்ணிடலாம்னு நாங்களும் ஒரு வருஷம் விட்டு தான் புடிச்சோம்.. எதும் சரியாவுற மாதிரி தெரியில.. இதை விட்டா வேறு வழி இருக்கறாப்பலயும் தோணல.. வயசும் வாலிபமும் போனா திரும்பியா வர போவுது..?” முத்தாய்ப்பாக பேசிய மாப்பிள்ளையின்; அப்பா ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக நிறுத்தினார். “சரி.. கடைசியா சம்பந்தப்பட்டவங்ககிட்டேயே பேசிப் பார்ப்போம்..”
அவர்கள் வீட்டு மாப்பிள்ளை மைத்துனரை ஒதுக்கிக் கொண்டு போனார்.
மனதிற்கு போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகளெல்லாம் விலகியதில் வைதேகியின் தாய் உடைந்து அழ ஆரம்பித்தார். சித்திக்கும் அழுகை வந்தது. இருவரையும் பெரியம்மா தேற்றிக் கொண்டிருக்க அதிர்ந்து போயிருந்தனர் அப்பாவும் பெரியப்பாவும்.
“ப்ளீஸ்.. நாங்கள்ளாம் இருக்கோம்.. அப்டியே விட்டுடுவோமா..” தேற்றிய சித்தியின் கணவர் “பாப்பா எங்கயிருக்கா..? நான் போய் பேசறேன்..” என்றபடியே வேகமாக எழுந்தார். அவர் வந்ததிலிருந்து இன்னும் வைதேகியை பார்க்கவில்லை.
மின்விசிறி கூட போடாமல் உள்ளறையில் உட்கார்ந்திருந்தாள் வைதேகி. தலை குனிந்திருந்தது. திரைசீலைகளை இழுத்து விட்டிருந்ததால் அறை சற்றே இருண்டிருந்தது. வேகமாக அறைக்குள் நுழைந்தவர் மின்விளக்கை போட சுவிட்ச் போர்டை நோக்கி கையை உயர்த்தினார். தலையை உயர்த்தி பார்த்தாள் வைதேகி.
மொசுமொசுவென்று ரோமம் அடர்ந்த அதே கை. பள்ளி சீருடையை களைந்து உடலில்; கூச்சமின்றி சில்மிஷங்களை அரங்கேற்றிய அதே கை. பயத்தில் உடல் உதற, ஓட முற்பட்டவளை திமிற திமிற அமுக்கி பிடித்து உடலில் மேய்ந்த அதே கை.
வீலென்று வாய் விட்டு அலறி மயங்கி சரிந்தாள் வைதேகி.

Series Navigationகவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *