கம்பனின்அரசியல்அறம்

This entry is part 7 of 19 in the series 6 ஜூலை 2014

 

மணக்கோலத்தில் கண்ட தன் மகன் இராமனுக்குமா முடி புனைவித்து மன்னனாக்க எண்ணம் கொண்டான் மாமன்னன் தயரதன். அமைச்சர் பெருமக்களும் அதனை ஏற்றனர். உடனே தயரதன் தன் குலகுருவான வசிட்டரை அழைத்து, ”இராமனுக்கு நல்லுறுதி வாய்ந்த உரைகளைக் கூறுவாயாக” என்றான்.

வசிட்டமுனிவன்இராமனைஅடைந்து, “ நாளை உனக்கு இந்த நானிலம் ஆளும் உரிமை வழங்கப்பட இருக்கிறது. எனவே நான் ஒன்று கூறுவதுண்டு உறுதிப்பொருள். நன்று கேட்டுக் கடைப்பிடி” என்று கூறி அரசன் கைக்கொள்ளவேண்டிய அறங்களை எடுத்துக் கூறுகிறான்.

வசிட்டன் உரைப்பனவாகக் கம்பன் பதினைந்து பாடல்களை இயற்றி உள்ளான். தெளிந்தநல்லறம், மனத்தில் செப்பம் உடைமை, கருணை ஆகிய மூன்றையும் ஆள்பவர் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறும் வசிட்டன்,”சூது என்பதுதான் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலகாரணமாகும்; அதை அறவே விலக்க வேண்டும்” என்கிறான்.

”சூதானது பொருளை அழிக்கும்; பொய்சொல்லத் தூண்டும்; அருளையும் கெடுக்கும்; அல்லவையும் தரும் “ என்ற பொருளைத்தரும் குறளான,

”பொருள் கொடுத்துப் பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்[து]

அல்லல் உழப்பிக்கும் சூது”

என்பது நினைவுக்கு வருகிறது. மேலும், “ஆள்வோர் எவரிடத்தும் பகைமை பாராட்டலாகாது. பகைமை இல்லாத அரசனின் நாட்டில் போர் இல்லாமல் போகும்; அவனது படையும் அழியாது; அவன் புகழ் பெருகும்” எனும் கருத்தில் ‘போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது” என்று கூறுகிறான். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இன்றைய உலக அரசியலுக்கு இது முக்கியமான அறவுரையாகும். சிறந்த அரசாட்சி எதுவென்பதற்கு வசிட்டனின் கூற்றாகக் கம்பன் ஓர் இலக்கணம் வகுக்கிறான்.

”கோளும்ஐம்பொறியும்குறையபொருள்

நாளும்கண்டுநடுவுறும்நோன்மையின்

ஆளும்அவ்வரசேஅரசுஅன்னது

வாளின்மேல்வரும்மாதவம்மைந்தனே”  என்பதுகம்பனின்பாடல்.

அதன்படி, “மெய்,வாய், கண்,மூக்கு எனும் ஐம்பொறிகள் உண்டாக்கும் ஆசைகளை அடக்கி, தனது நாட்டுக்குத் தேவையான பொருளை நாள் தோறும் நல்ல வழியில் சேர்த்து, நடுநிலைமையில் நின்று ஆளுகின்ற அரசாட்சியே உண்மையான சிறந்த அரசாட்சியாகும் என்பது விளக்கமாகிறது. இப்படி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை விளக்க”அந்தஆட்சிவாளின் முனையில் நின்று செய்கின்ற பெரியதவம் போன்றதாகும்” என்ற உவமையும் கம்பனால் கூறப்படுகிறது.

மேலும் அறிவுசால் அமைச்சரின் சொற்படிதான் ஆட்சியாளர் செயல் படவேண்டும் என்பதை விளக்க மும்மூர்த்திகளின் தோள்வலிமையை ஒருவரே பெற்றிருந்தாலும் “அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே” என்று வசிட்டன் இராமனிடம் கூறுகிறான். அத்துடன் “ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது; மனத்தில் அன்பு கொள்ள வேண்டும்; ஏனெனில் அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?” என்றும் வசிட்டன் கூறுகிறான்.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பதுதான் பண்டைய தமிழ் இலக்கிய மரபாகும். இதன்படி இவ்வுலக மக்களெலாம் உடலாகவும், அவர்தமை ஆளும்மன்னன் உயிராகவும் சித்தரிக்கப்படுகிறான். கம்பன் இதை அப்படியே மாற்றுகிறான்.

”உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”

”வையம்மன் உயிர் ஆகஅம்மன் உயிர்

உய்யத்தாங்கும் உடல் அன்ன மன்னன்”

எனும் அடிகள் மக்களை உயிராகவும், அவ்வுயிரைப்பேணும் உடலாகவும் மன்னனைக் காட்டி மக்களாட்சித்தத்துவத்தைக் காட்டுகின்றன.

அடுத்து, அரசன் கொள்ள வேண்டிய குணங்களைக் கூறும் வசிட்டன் அவற்றைப் பட்டியலிடுகையில், ”இன்சொல், ஈகை, நல்வினையாற்றல், மனத்தூய்மை, வெற்றிபெறல், நீதிநெறிநடத்தல்,” என்ற குணங்களை முன் நிறுத்துகிறான். அரசன் கொள்ள வேண்டிய நடுநிலையைக் கூறும்போது, ”சமன்செய்துசீர்தூக்கும்கோல்போல்” என்று வள்ளுவர் கூறும் துலாக்கோல் உவமையையே கம்பனும் பின்பற்றி, “செம்பொன் துலைத்தாலம் அன்ன” என்று பொன்னைத் துல்லியமாக நிறுத்து நடுநிலைமையைக் காட்டும் தராசைப் போன்று ஆட்சிபுரிவோர் இருக்க வேண்டும் என்று கூறுகிறான்.

மேலும் ஆட்சியாளர்க்கு அறிவு சார்ந்த சான்றோரிடம் தொடர்பு கொள்வதும், அவர் வாக்கின்படி ஒழுகுவதும் முக்கியமானவையாகும்.

அதனால்தான் கண்ணகி நீதிமுறை தவறிய பாண்டியனின் நாட்டில் “சான்றோரும் உண்டுகொல்” என்று கேட்கிறாள். எனவேதான் ஆன்றோரிடம் செலுத்தும் அன்பு ஓர் அரசனுக்கு ஆற்றல் மிக்க ஆயுதமாக விளங்கும் என்று வசிட்டன் இராமனுக்கு விளக்குகிறான்.

’தூமகேது’ எனும் பெயருடைய வால் நட்சத்திரம் தோன்றினால் உலகிற்குக் கேடு சூழும் என்பது ஒரு நம்பிக்கையாகும். மங்கையர் மீது வரும் தீராக்காமமான பெண்ணாசை அத்தகைய தூமகேது போன்றது. அதை விலக்கினால் அரசர்குக்க் கேடு இல்லை எனும் பொருளில்,

”தூமகேது புவிக்கு எனத்தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின் கடுங் கேடுஎனும்

நாமம் இல்லை நரகமும் இல்லையே”

எனக் கம்பன் பாடுகிறான்.

வசிட்டன் கூறும் இந்த அறமுறைகளை எல்லாம் இராமன் நன்றாக மனத்துள் வாங்கிக் கொள்கிறான். கிட்கிந்தைக்கு அரசனாக, சுக்ரீவனுக்கு இலக்குவனைக் கொண்டு முடி சூட்டுவித்த பின்னர் இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் அறங்களை எடுத்துக் கூற வசிட்டன் உபதேசம் மிகவும் உதவுகிறது.

“மங்கையர் பொருட்டால் மாந்தர்க்கு மரணமுண்டாகும்; அத்துடன் பழிப்பும் உண்டாகும்; இதற்கு உருமையைக் கவர்ந்த வாலியே சாட்சி” என்று சுக்ரீவனிடம் இராமன் உரைக்கிறான்.

சுக்ரீவனுக்கு இராமன் கூறும் அறவுரைகளாகக் கம்பன் ஒன்பது பாடல்கள் இயற்றி உள்ளான்.

“அமைச்சர்கள் வாய்மைசால் அறிவில் மேம்பட்டவராய் இருக்க வேண்டும். படைத்தலைவர்கள் குற்றமில்லாத நல்லொழுக்கத்துடன் கூடியவராய் இருக்க வேண்டும். ஆள்வோர் இவ்விருவரோடும் மிகவும் நெருங்காமலும், அதே  நேரத்தில் விட்டு விலகாமலும் பழகி ஆட்சி செய்ய வேண்டும்.

புகை எழுந்தால் அங்கே எரியும் தீ இருக்கிறது என்று ஊகிக்கும் திறனோடு, நூல் வல்லார் அறிவையும் அரசன் பெற்றிருக்க வேண்டும்; பகைமை கொண்டவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பயன் உண்டாகும் படி நடக்க வேண்டும்.

சுக்ரீவனே! ஆட்சி புரிவோரிடம் சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். செய்ய வேண்டியவற்றைச் செய்தல், மற்றவர் தம்மைப் பற்றி வசைமொழி கூறிய போதும் தாம் அவர் பற்றி இனியவையே கூறல், உண்மை பேசுதல், தம்மால் முடிந்த மட்டும் இரப்பவர்க்கு ஈதல், பிறர் பொருளைக் கவராமல் இருத்தல் என்பனவே அவை.

மேலும் ஆட்சியாள்வோர் தாம் வலிமையுடையவர் என்று எண்ணி எளியவரை அவமதிக்கக் கூடாது. அவ்வாறில்லாமல் நான் கூனிக்குச் சிறு கேடு செய்ததால் துன்பக் கடலுள் வீழ்ந்தேன்.

ஆள்வோர் “இவன் நம் தலைவர் அல்லர்; நம்மைப் பெற்றெடுத்த தாய் போன்றவர் என்று குடிமக்கள் கூறுமாறு அவரைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டிற்கு எவரேனும் தீமை செய்தால் அத் தீயவரை அறத்தின் எல்லை மீறாமல் தண்டிக்க வேண்டும்.

அறத்தினது இறுதி வாழ்நாட்டுக்கு இறுதி; அதாவது அறவழியிலிருந்து தவறுதல் ஆயுளின் முடிவுக்கே காரணமாகி விடும், எனவே செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாகாது.”

இவ்வாறு ஆள்வோர் பின்பற்ற வேண்டிய அறநெறிகளையும், ஆளவேண்டிய முறைகளையும் இராமன் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறுகிறான்.

இவற்றோடு வசிட்டன் கூறும் அரசியல் அறங்களாகக் கம்பன் மொழிந்திருப்பதையும் சிந்தித்தால் அவை எல்லா நாட்டு ஆட்சியாளர்க்கும் எப்பொழுதும் பொருந்துவனபோல் தோன்றுகிறது. கம்பன் கூறும் இந்த அரசியல் அறங்களப் பின்பற்றும் ஆட்சியாளரால் வழி அட்த்தப்படும் நாடு மிகச் சிறந்த்தாய்த்தான் விளங்கும் என்று துணிந்து கூறலாம்.

—————————————————————————————————————–

 

Series Navigationமறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடுவால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) 1. என் காதலியுடன் சில பொழுதுகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    சின்னக்கருப்பன் says:

    சிறப்பான கட்டுரை. இதே கருத்துக்கள்தாம் வால்மீகி ராமாயணத்திலும் காணக்கிடக்கின்றனவா என்பதை திரு. வளவ துரையன் அவர்கள் தெரியப்படுத்தினால் நலம்.
    அல்லது இது கம்பனின் தனித்துவ ஆளுமையின் விளைவா என்பதையும் அறிய தர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *