மொழிவது சுகம் ஜூலை 26 2014

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

 

          1. பிரான்சில் என்ன நடக்கிறது? :       கச்சைக் கட்டி நிற்கிறார்கள்

‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா வருடம் பிரெஞ்சு அகராதிகள் புதிதாகப் பதிப்பித்து வெளிவரும். இவ்வருட கல்வி ஆண்டில் Robert அகராதியைச் சேர்ந்தவர்கள் பன்மையில் ‘soutiens-Gorges’ எனப் போட்டிருக்கிறார்களாம். அதாவது Gorge -மார்பு அல்ல Gorges-மார்புகள். மாறாக Larousse அகராதிக்கு ‘soutiens-Gorge’ சரி. அவர்களுக்கு la gorge என்ற பெயர்ச்சொல் ஒருமை சார்ந்த விஷயம் எனவே ஒரு வினைச்சொல்லிலிருந்து (soutenir) பிறந்த இப்பெயர்ச்சொல்லோடு மட்டும்(soutien) S சேர்த்தால் போதும். இரு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தெரிந்தாலும் தற்போதைக்குப் பெரும்பாலோர் ‘soutiens-gorge’ஐ தாங்கிப்பிடிக்கிறார்கள். மூத்த கல்விமான்களின் முடிவுக்குக் காத்திருக்கிறார்கள். இதில் வயதுபோன ஆசாமிகளுக்கு சொல்ல என்ன இருக்கிறது?

 

 1. காஸா பிரச்சினை

காஸா பிரச்சினை மறுபடியும் வெடித்திருக்கிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டினால் நாள்தோறும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ்கள் இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கலாம், தலையங்கத்தில் கண்டிக்கலாம், கட்டுரைகள் எழுதலாம்.   இஸ்ரேலுக்குப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது உண்மை. ஆண்டுகள் பலவாக தொடரும் இப்பிரச்சினைக்கு அரபு நாடுகளும் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு பார்வையும் நம்மிடம் இருக்கிறது. புட்டின் ஒரு பக்கம், ஒபாமா மறுபக்கமென சிரியாவில் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது ரஷ்யர்களோ, அமெரிக்கர்களோ அல்ல சிரிய ராணுவ வீரர்களும், சிரிய புரட்சியாளர்களும், அப்பாவி சிரிய மக்களும். இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிரிய நாட்டு உள்நாட்டுப்போரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டிருக்கிறார்கள். இராக்கில் அமெரிக்க அரசியலின் கைங்கர்யத்தில் ஆரம்பித்துவைத்த உயிர்ப்பலிகள் கடந்த ஒரு மாதமாக இரட்டிப்பாகியிருக்கின்றன. எகிப்தில் தீவிர இஸ்லாமியப் பிரிவினரின் தலைவர் தேர்தலில் ஜெயித்து அதிபரானார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்திய ராணுவ தளபதி தனக்கேற்ப ஒரு தேர்தலை நடத்தி அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் கட்சியைச் சேர்ந்த அநேகர் ராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா?

 

3. மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா

 

டாக்டர் சண்முகம் சிவாவை அண்மையில் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.

 

தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திக்கேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டால்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.

 

நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு·மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.

 

ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.

 

பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.

 

மருந்துக்கு ஒரு உதாரணம்:

 

சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?

 

மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:

 

கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.

 

சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:

 

வலிக்குது மவனே

சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”

 

இறக்கி வைத்தேன் அம்மா

கவிதைகளாக

அதற்குள்ளும்

அழுகின்றன அம்மா

நமது வலிகள்.”

—-

 

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்

மருத்துவ கேள்வி-பதில்

ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா

 

உமா பதிப்பகம், கோலாலம்பூர்

umapublications@gmail.com

——————————

Series Navigation
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

 1. Avatar
  paandiyan says:

  //சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா?

  //
  தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்

  //

  if you openly write these types then our so called “(secular/anti pro tamil group etc..???!!!??)brilliant people” conclude that you are a BRAHMIN and they try you to run away from this field. take care yourself..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *