சுருதி லயம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

 

 

”நன்னா யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி. உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா. நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா? என்ன ஆகிப்போச்சின்னு இப்படி கடந்து துடிச்சிண்டிருக்கே. நானும் உனக்குப் புடிச்சா மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றேன். ஆனா என்னமோ தெரியல, இந்த மனசு ஒரு நிலைக்கு வரமாட்டீங்குது. எவ்வளவோ கட்டுப்பாடா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா என்னோட தொழில் என்னை அப்படி இருக்க உடமாட்டீங்குதுடி. புரிஞ்சிக்கோம்மா.. இனிமேல் சத்தியமா குடிச்சுட்டு வரமாட்டேன் .. இந்த ஒரு தரம் மட்டும் மன்னிச்சுடுடி.. என் செல்லம் இல்லியோ நீ.. “

 

“ரகு, என்னை விரட்டி, விரட்டி காதலிச்ச அந்த ரகுதானா நீன்னு எனக்கு அடிக்கடி சந்தேகமே வந்துடுதுடா.. நான் மட்டும்தான் உன் உலகம், உயிர் அப்படீன்னு சொன்னதெல்லாம் வெறும் பிதற்றல்தான் இல்லியா.. இப்பல்லாம் உனக்கு அந்த மதுவில மட்டும்தான் போதை .. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குங்கறதை கூட மறக்க வக்கிற இந்த குடிபோதை உனக்கு தேவையா இருக்கு.. என்னோட குடிகார அப்பன்கிட்ட உன் மொத்த சேமிப்பு, இருபத்தஞ்சாயிரத்தையும் கொடுத்துதானே என்னை வாங்கிட்டு வந்தே.. இப்ப அதே மாதிரி உன் பொண்ணுங்களையும் எவனாவது வந்து வாங்கிட்டுப் போவானுங்கன்னு கோட்டை கட்டி வச்சிருந்தா அத இப்பயே இடிச்சுப்புடு.. ஆமா சொல்லிப்புட்டேன்.. அப்புடி ஒரு நினப்பு உனக்கு இருக்குதுன்னு தெரிஞ்சா உன்னை வெட்டி பொலி போட்டுடுவேன் ஆமா.. உன்னோட திருநீரு பட்டையையும், சாந்தமான மூஞ்சியையும் பார்த்து நான் ஏமாந்தது போதுமடா சாமி…

 

இரண்டு பொட்டப்புள்ளைக இருக்குதே, கொஞ்ச காலத்துல மளமளன்னு வளர்ந்து நிக்கப்போகுதேங்கற விசனம் கொஞ்சநாச்சும் இருக்காடா உனக்கு.. இதோ மூத்தவளுக்கு எட்டு வயசு முடியப்போகுது. இளசுக்கு 6 வயசு ஆச்சு. இன்னும் ஓட்ற ஓட்டத்துல இரண்டு பேரும் வளர்ந்து நிப்பாளுங்க. அதுகள ஏதோ படிக்க வச்சு கரை சேக்க வாணாவா.. நாந்தான் படிக்காத கழுதயா போயி, இன்னைக்கு நாலு ஊட்டுல பத்து பாத்திரம் தேய்ச்சி வவுத்த கழுவுறேன். என் புள்ளைகளுக்குமா அந்த நிலமை வாரோணும்.. எப்புடியாவது என் உசிரக்குடுத்தாவது எம் புள்ளைகள கரை சேர்த்துட்டுதான் இந்தக் கட்டை வேகோணும். நான் வாங்குற காசு வாயுக்கும், வயித்துக்கும்தான் சரியா இருக்கு. புள்ளைக படிப்புக்கு எவ்ளோ கஷ்டப்படோணும்னு நெனச்சுப்பாத்தியா. உன் சம்பளம் உனக்கு சோத்துக்கும், குடிச்சி சீரழியறதுக்குமே சரியாப் போவுது. பத்தாததுக்கு அப்பப்ப வந்து என்கிட்ட இருக்குற சொச்சத்தையும் புடுங்கிட்டுப் போயிடுற.. இதுக்கும் மேல தாக்குப்புடிக்க எனக்கு சத்தில்ல சாமி. நீ எங்கனா போய்த் தொலை. நான் என் புள்ளைகள எப்படியும் காப்பாத்திக்கிறேன். உன்னோட இம்சையாச்சும் இல்லாம இருக்கட்டும்”

 

“நெஜமாவா சொல்ற சுருதி. உன் வாயிலிருந்து இப்படி ஒரு பேச்சை நான் நினச்சுக்கூட பாக்க முடியல.. நானும் எவ்வளவோ கட்டுப்பாடாத்தான் இருக்கேன். எல்லாம் அந்த ஆம்புலன்சுல உசிருக்குப் போராடிக்கிட்டு வரவாளயும், பிழைப்பாங்களா மாட்டாங்களான்னு உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு அழுது புலம்பிக்கிட்டு இருக்கற அவா சொந்தக்காராளையும் பாக்குற வரைக்கும்தான். அதைப் பார்த்து மனசு நொந்து போயிதான் மறக்க முடியாமத்தான் க்ளீனர் செல்லையாகிட்டயிருந்து இந்த பாழாப்போன பழக்கத்தைக் கத்துண்டேன். இப்ப நான் அதை விட நினைச்சாலும், அது என்னை விடாம பிடிச்சிண்டிருக்கு.. நான் என்ன பண்ணட்டும் சொல்லு. இனிமே சத்தியமா குடிக்க மாட்டேண்டி செல்லம். என்னை நம்புடி”

 

அதுக்குமேல் அவனிடம் பேச முடியாது என்று அவளுக்குத் தெரியும். பத்து மணி நேரத்திற்கு மயங்கிக் கிடப்பான். விடிய விடிய வண்டி ஓட்டிவிட்டு காலையில் முழு போதையில் வந்திருக்கிறான். சாப்பிடாமல்கூட இப்படிக் கிடக்கிறானே என்று வருத்தம் மட்டும்தான் படமுடிந்தது. போதை தெளிந்து எழுந்திருக்கும்போது சாப்பிடட்டும் என்று சாப்பாடும் , அவனுக்குப் பிடித்த முருங்கைக்காய் சாம்பாரும் செய்து வைத்துவிட்டு வேலைக்குக் கிளம்பினாள். இரண்டு வயதில் வந்த போலியோ வியாதியால் பாதிக்கப்பட்டு, முழங்காலிருந்து பாதம் வரை பாதியளவிற்கு சூம்பிப்போன இடது காலை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஒன்பது வயதில், சதா சர்வகாலமும் போதையில் விழுந்து கிடக்கும் அப்பாவின் ஓட்டை சைக்கிளில் குரங்கு பெடல் போட்டுக்கொண்டு, வீடு வீடாகச் சென்று சலவைக்கு துணிகளை வாங்கி வந்து, அம்மா பெட்டி தேய்த்த துணிகளை மீண்டும் கொண்டுபோய் சேர்க்கவும் வேண்டி ஆரம்பித்த இந்த ஓட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது அவளுடைய தலைவிதி அல்லாமல் வேறு என்ன…. அன்று குடிகார அப்பனிடம், “நொண்டிக் கழுதை.. கையாலாகாத மூதேவி” என்றெல்லாம் ஏகப்பட்ட அடை மொழிகளுடன் அன்றாடம் வாங்கிய அர்ச்சனைகளையும் ஜீரணிக்கப் பழகியிருந்ததால் இன்று உணர்வுகள் அனைத்தும் மரத்துப்போன நிலையில் ஒரு ஜடமாகவே வாழக் கற்றிருந்தாள்.

 

இடையில் பதின்மத்தில் பூத்த காதல் எனும் வசந்தம் கூட இன்றைய கொடும் வெப்பத்தில் பனிக்கட்டியாய் கரைந்துதான் போய்விட்டது.. காதல் எனும் அந்த மென்மலர் எங்கு, எப்படி, ஏன் மலர்கிறது என்பது ஒருவருக்கும் புரியாத புதிர்தான். எந்த சம்பந்தமும் இல்லாத, எதிர், எதிர் தன்மையுடைய இரண்டு இதயங்கள் ஏதோ ஒரு சிறு புள்ளியின் ஆதாரம் கொண்டு இணைவது சம்பந்தப்படாதவர்களுக்கு வேடிக்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் காதல் வயப்பட்ட அந்த இரு இதயங்களை இரும்புக் கயிற்றால் இணைத்து காலமெல்லாம் காத்து நிற்பது அந்த மையப்புள்ளிதான். கண்ணுக்குத் தெரியாத அந்த மையப்புள்ளியைத்தான் காதல் என்று வார்த்தையலங்காரம் பூசி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வட துருவமும் தென் துருவமும் ஒரே நேர்கோட்டில் இணைந்தது போல முற்றிலும் எதிரும் புதிருமான இரு இதயங்கள் இணைந்தது விதியல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும். அன்றாடம் கோவில், பூஜை என தெய்வீகம் மணக்கும் பரம்பரையில் பிறந்த கடைக்குட்டி ரகுவரன். மும்பையில் ரகுவின் தந்தை ஓரளவிற்கு பரம்பரை சொத்துகளுடன், அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர், அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அதே பிடியில் இருப்பவர். ரகு, படிப்பில் சற்று மந்தம் என்றாலும் அப்பாவின் கண்டிப்பிலும், கட்டாயத்திலும் தத்தித் தத்தி பட்டப்படிப்பிற்குள் நுழைந்துவிட்டான். ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கள்ளம், கபடமில்லாமல் அனைவரிடமும் பழகுவதும், வீட்டிற்குள் அழைத்து வருவதும், சாப்பிட வைப்பதும் குடும்பத்தில் பெரும் பிரச்சனையை உருவாக்கினாலும் அதைப்பற்றிய கவலை துளியும் அவனிடம் இல்லை. தான் நினைப்பதை மட்டும் தயக்கமின்றி செய்யும் அந்த வழக்கம்தான் அவனுடைய தலைவிதியை முடிவு கட்டிவிட்டது.

 

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகளில் அத்தனை பேப்பர்களும் அரியர்சில் இருந்ததை அறிந்த தந்தை, வீட்டில் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார். படிக்கப் பிடிக்கவில்லை என்று விட்டேத்தியாகச் சொன்ன பதில் அவரை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டுசென்றுவிட்டது. கையை ஓங்கிக்கொண்டு வந்தவரை, இள ரத்தம் கொதிப்படைந்து, நரம்புகள் அனைத்தும் முறுக்கேறிக்கொள்ள, ஓங்கிய தந்தையின் கையை அதே அழுத்தத்துடன் பிடித்து தடுத்து நிறுத்தியதில் தடுமாறி விழப்போனவர் சுவரை தாங்கிப் பிடித்து விழாமல் தற்காத்துக் கொண்டார். ஆனாலும் ஆத்திரம் தாங்காமல் ரகுவை ஆன மட்டும் அடித்து நொறுக்கிவிட்டார். காதில் கேட்க முடியாத அளவிற்கு கேவலமான வார்த்தைகளை அள்ளி வீசியவர், “ஒரு பிராமணனா வாழுற தகுதி உனக்கு கொஞ்சமாச்சும் இருக்குதாடா, எச்சக்கலை நாயே. காலம் முழுதும் இப்படி அப்பன் முதுகிலேயே சவாரி செய்யலாம்னு நினைச்சுண்டிருக்கியா நீ. எப்பப் பார்த்தாலும் உன்னோட இதே ரோதனையா போயிண்டிருக்கு. எங்கேயாவது கண்காணாமல் ஒழிந்து போய்த்தொலை” என்று பொரிந்து தள்ளிவிட்டார். அம்மாவும், பாட்டியும் வந்து தடுத்தும் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது. அதே கோபத்துடன், தன் தகப்பன் கொடுத்த எந்த அடையாளமும் தேவையில்லை என்று பூணூல், திருநீரு என எல்லா பாரத்தையும் இறக்கி வைத்துவிட்டு, ஒரு தோல் பையில் நான்கு செட் துணிகளை எடுத்து நிரப்பிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பியவன், திருட்டு இரயில் ஏறி சென்னை வந்து சேர்ந்தான். அன்றோடு பெற்றவர்களின் உறவு முறிந்தே போனதற்கு காரணம் அவர்களை நெருங்க முடியாத அளவிற்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்கள்தான் என்பதை அறிந்திருந்தும் அதை மாற்றிக்கொள்ள ஆணவம் இடம் கொடுக்கவில்லை.

 

ஊரைவிட்டு ஓடி வந்தவன், கையில் காசும் இல்லாமல், படிப்பும் இல்லாமல் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தான். எந்த வேலை கிடைத்தாலும் செய்து வயிற்றுப் பாட்டிற்கு வழி தேட வேண்டிய கட்டாயத்தில், இரயில் நிலையத்தின் அருகில் இருந்த ஒரு ஓட்டலில் பில் போடும் வேலையோடு, மற்ற வேலையாட்களுடன் அங்கேயே தங்கிக்கொள்ளவும் அனுமதி கிடைத்ததால் மௌனமாக ஏற்றுக்கொண்டான்.

 

சாப்பிடுவதற்காகத் தவிர சமயலறைப் பக்கம் போக வேண்டியத் தேவை ஏதும் இல்லையென்றாலும், அந்த இராட்சச அண்டாக்களையும், அடுக்கி வைத்த ஆளுயர டம்ளர்களையும், ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு சூம்பியிருந்த வலது கால் மற்றும், வளைந்த பாதத்தையும் ஒரு புறமாக தனியாக நீட்டி வைத்துவிட்டு, சிரமப்பட்டு கழுவிக்கொண்டிருக்கும் அந்தச் சின்னப் பெண் மீது பரிதாபம் வரத்தான் செய்தது. அடிக்கடி அட்வான்சு பணம் வேண்டும் என்று வந்துகேட்டு முதலாளியிடம் திட்டு வாங்குபவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். கருப்பாக இருந்தாலும், களையான முகம், அன்பான குணம் என்று நினைத்துக்கொள்வான். சுந்தரி என்ற அவளுடைய பெயருக்குப் பொருந்தமான முகம் என்று தோன்றும். மெல்ல மெல்ல அவள்மீது பரிவும், பாசமும் அவன் அறியாமலே தானே வளர்ந்து கொண்டிருந்தது. கண்டதும் காதல் எல்லாம் கவி பாடுவோருக்கு சாத்தியமோ என்னவோ. வாழ்க்கையில் அடிபட்டு, அல்லலுறும் சாதியினருக்கு காதல் கடவுள் போல. ஒரு ஆழ்ந்த பக்தியின் ஊடே மட்டுமே மெல்ல மெல்ல மலரக் கூடியது. அங்கு காமம் என்பது இரண்டாம் பட்சமாகிவிடும். துன்பத்திலிருந்து மீண்டுவரத் துணைக்கழைக்கும் காமத்தின் மறு பெயரல்ல இந்தக் காதல். இது ஒருவருக்கொருவர் அனுசரணையாக, இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்பவராக, மொத்தத்தில் காதலே மானமாக, காதலே உயிராக, காதலே மொத்த வாழ்வாக எண்ணியிருப்பவர்கள்.

 

முதலில் இந்த எண்ணம் தோன்றியது என்னவோ ரகுவிற்குத்தான். ஆனால் சுந்தரி அதைக் கண்டும், காணாமல் போனதற்குக் காரணம், அவன் தன் மேல் கொண்ட பரிதாபத்தைக் காதல் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. முதன் முதலில் அவன் பார்வையில் காதல் தோன்றியதென்னவோ அப்படியொரு சூழலில்தான். மாளாத பாத்திரங்களைப் போட்டுக்கொண்டு சிரமத்துடன் தேய்த்துக் கொண்டிருந்தவளிடம், குடித்துவிட்டு வந்து, முதலாளியிடம் பணம் வாங்கிக்கொடுக்கும்படி தொல்லை செய்து கொண்டிருந்த அப்பன்காரனை விரட்ட முடியாமல், அவன் வாயையும் அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவளை காப்பாற்றுவதற்காக பரிவு காட்டிய அந்த வேளைதான். பதினான்கு அல்லது பதினைந்து வயதே இருக்கும் அந்தப் பெண் மற்ற இளைஞிகளைப்போல எத்தனை ஆசைகளை சுமந்திருப்பாள் பாவம் என்ற நினைவு அவனுக்கு தோன்றியதும் உண்மைதான். ஆனாலும் அன்று துளிர்விட ஆரம்பித்த அந்த விதைதான் பின்னொரு நாளில் படு வேகமாக வளர ஆரம்பித்தது. அது பரிதாபத்தில் விளைந்த செடி அல்ல என்பதை உணர்த்த அவன் சற்று அதிகமாகவே முயல வேண்டியதாக இருந்தது. கண்ணாடி வளையல்களும், காகிதப்பூக்களும் கூட களையான அந்த அழகு முகத்திற்கு அணிகலனானதை வெகுவாகவே ரசிக்க ஆரம்பித்தான் ரகு.

 

ரகுவிற்கு கேட்பார் யாருமில்லாதலால் உடனே திருமணம் என்றாலும் அவனுக்குச் சம்மதம்தான். தனிமைச் சிறையில் வெகு காலம் கடத்த முடியாத தொல்லை அவனுக்கு. ஆனால் சுந்தரியைப் பொறுத்தவரை, அவள் ஒரு சம்பாதிக்கும் இயந்திரம். குடும்பத்தில் மூன்று வேளையும் அரை வயிறு கஞ்சியாவது சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு அவளுடைய வருமானமும் ரொம்ப அவசியம். இதனாலேயே சுந்தரியின் அப்பன், இந்த விசயம் தெரிந்த அடுத்த நிமிடம் முதல் அவளை வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தான். சுந்தரி பயந்தபடியே ஒரு நாள் அந்த அவமானம் நடந்தே விட்டது. அவள் வேலையில் இருக்கும் நேரத்தில் பெற்ற தகப்பனே, தம் மகளைக் கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் கேட்டு வாட்டியெடுத்துவிட்டான். அந்த பெரிய ஓட்டலின் பின் வாசலில் வந்து நின்றுகொண்டு அவளைக் கேட்ட கேள்விகள் சொல்லும்படியானது அல்ல.

 

“நொண்டிக் கழுதை, உனக்கு இந்த வயசுலயே ஆம்பள சுகம் கேக்குதாடி நாயே.. உனக்குக் கீழே இரண்டு சிறுசுங்க இருக்கே, அதுகளும் உன்னப் பாத்து குட்டிச்சுவராப் போவணுமாடி”

என்று படு கேவலமாகப் பேசியவனை அதற்குமேல் சமாளிக்க வேறு ஏதும் வழியில்லாததால், ரகுவின் விருப்பம் போல் உடனடியாகத் திருமணத்திற்குச் சம்மதித்தால் அப்பாவின் பார்வையை விட்டு மறைந்துவிடலாம் என்று கணக்கு போட்டாள். ரகுவும் ஒரு நல்ல நாளில் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி கூட்டிவந்துவிட்டான். சுந்தரி என்ற அவள் பெயரையும் சுருதி என்று மாற்றி வைத்துக்கொண்டான். நாமகரணம் புதிதாக மாறினாலும், வாழ்க்கை என்னவோ அதே போராட்ட நிலையிலிருந்து மாறவே இல்லை. வீட்டு வாடகை, இதர செலவுகள் என்றில்லாமல், அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறப்பும் அவர்களின் மகிழ்ச்சியாக வாழ்க்கைக்கு அச்சாரமாக இருந்தாலும் வருமானம் சுத்தமாகப் போதவில்லை. ஒரு நண்பனிடம் ஆலோசனை கேட்கப்போக அவன் ஆம்புலன்சு ஓட்டினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றான். நல்ல வேளையாக ஓட்டுநர் உரிமமும் இருந்ததால் பிரச்சனை இல்லாமல் அந்த வேலையில் சேர்ந்து கொண்டான். அவன் வளர்ந்த சூழ்நிலைக்கும் தன் தொழிலுக்கும் எட்டாம் பொருத்தமாகவே இருந்தது. பணத்தேவை வேலையையும் விட முடியவில்லை. அதை மறப்பதற்கு குடி ஒன்றே தீர்வாக இருந்தது. வீட்டிற்குத் தெரியாமல் குடித்துக் கொண்டிருந்த பழக்கம் ஒரு நிலையில் மறைக்க முடியாமல் போய்விட்டது. பணம் கொடுப்பதும் குறைந்து போனதால் சுருதியும் மீண்டும் வீட்டு வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்று பிரச்சனை தலைக்கு மேல் போய்க் கொண்டிருந்தது.

 

மூன்று நாட்களாக வீட்டிற்கு வராதவன் அன்று அர்த்த சாமத்தில் வந்து கதைவைத் தட்டி தூங்கும் குழந்தைகளையும் முழிக்க வைத்ததோடு, பெரிய கலாட்டாவும் செய்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் கேவலமாகப் பேசுவது போல நடந்து கொண்ட கணவனை சற்று அதிகமாகத்தான் கடிந்து கொண்டாள். ஆயிரம் முறை நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தது போலவே அன்றும் வசனம் பேசியும், அவள் அதை நம்பத் தயாராக இல்லை. வார்த்தை தடிமனாகிக்கொண்டே போனதில் அவள் அவனை ஒரேயடியாக வீட்டை விட்டு வெளியேறச் செய்ய வேண்டியதாகிவிட்டது.

 

குடிகாரனோ, குறையுள்ளவனோ, எவனாக இருந்தாலும் கணவன் என்ற ஒரு ஆண் துணை இல்லையென்றால், பாதுகாப்பு இல்லாத பயிரைப் போன்று கண்ட மாடுகளும் மேயத் துடிக்கத்தான் செய்கின்றன. இதைவிட மோசமாகத் திட்டிய போதெல்லாம் அடுத்த நாளே ஒன்றுமே நடக்காதது போன்று சிரித்துக் கொண்டே வந்துவிடுவான். ஆனால் இந்த முறைதான் இப்படி இரண்டு மாதங்களாகியும் வீட்டிற்குத் திரும்பாதது என்ன அசம்பாவிதம் நடந்ததோ என்ற அச்சத்தையே ஏற்படுத்தியது. தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று அனைவர் மூலமாகவும் அவனை தேடிக்கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் தகவல் ஏதும் கிடைக்காததால் மனம் நொந்து போயிருந்தாள். குழந்தைகளுக்காக உயிர் வாழ்ந்தே ஆகவேண்டிய அவசியமும் புரியாமல் இல்லை. ஒரு தாயாக தான் பெற்ற குழந்தைகளை அனாதையாக்க மனம் இடம் கொடுக்கவில்லை. வெறுப்பின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கடலில் இறங்கிவிட முடிவெடுத்த அந்த சூழலில்தான் ராமமூர்த்தி ஐயாவைச் சந்தித்தாள். அவருடைய தோற்றமும், பெருந்தன்மையான பேச்சும் அவர்மீது மரியாதையையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

 

சுருதி, ராமமூர்த்தி ஐயா வீட்டில் முழு நேர வேலைக்குச் சேர்ந்து தன் சுறுசுறுப்பு மற்றும் நல்ல குணத்தினால் எளிதாக அவரிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டாள். அவுட் ஹவுஸில் தங்கிக்கொண்டு குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்திருந்தாள். தெய்வ பக்தியும், பொறுமையான குணமும் உடைய நல்ல மனிதர். மனைவி இறந்து நான்கு ஆண்டு ஆகியும், மகன், மகள் என யாருடனும் செல்லாமல் தனியாக இருப்பவர். சொத்து, பத்தெல்லாம் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு தனக்கென்று ஒரு பகுதியை வைத்து அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். சுருதியின் நிலையைக் கண்டு மனம் வருந்தியவர், ரகுவரனைத் தேடவும் முயற்சி எடுத்திருந்தார். ஓராண்டு ஓடிய நிலையில் ரகுவரனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு நாள் அவன் திடீரென்று வந்து நிற்பான் என்ற நம்பிக்கையில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் தங்கியிருந்த பழைய வீட்டிலும், வேலை பார்த்த ஓட்டலிலும் தான் தங்கியிருக்கும் இடத்தின் முகவரியையும் கொடுத்திருப்பதோடு, அடிக்கடி அங்கு சென்று விசாரித்துக் கொண்டும் இருக்கிறாள்.

 

காலம் எப்பொழுதும் ஒரே அலையில் பயணிப்பதில்லை. ஏதோ ஒரு மாற்றமும், விநோதமும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த மாற்றம் நம்ப முடியாத சில பின் விளைவுகளையும் உருவாக்கி விட்டுத்தான் ஓய்கிறது. அதன் பாதிப்பைப் பற்றி எந்த அக்கறையும் அதற்கு இல்லை.. அப்படித்தான் ஒரு நாள் திடீரென்று நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்தார் ராமமூர்த்தி ஐயா. சுருதி வெகு சாமர்த்தியமாக அவருடைய ஆபத்தான உடல் நிலையைப் புரிந்துகொண்டு, சட்டென மருத்துவமனையில் சேர்த்ததால், மாரடைப்பு ஏற்பட்டும் மனிதர் உயிர் பிழைத்தார். மகனும், மகளும் உள்ளூரில் இருந்தும், அவர்களுடைய பிசியான வாழ்க்கை முறைமைகள், அவர்களை பெரியவரை அருகில் இருந்து கவனிக்க முடியாமல் செய்துவிட்டது. ஆனால் சுருதி அருகில் இருந்து அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டதால், பெரியவருக்கு அவள் மீது நல்ல அபிப்ராயம் தோன்றியதோடு நிற்கவில்லை. சுருதியை தனக்கே உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. இறுதிக் காலத்தில் தன்னை அக்கறையாகக் கவனித்துக்கொள்ள உரிமையுடன் ஒரு ஜீவன் வேண்டும் என்ற தன் நினைப்பில் எந்தத் தவறும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.   அவ்வப்போது சுருதிக்கும் அவருடைய எண்ணம் புரிவது போல்தான் இருந்தது. ஆனால் அப்படி இருக்காது என்று மனதை தேற்றிக்கொண்டுதான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள். எப்படியும் அவர் தன் அன்புக் கணவனை கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையிலேயே காத்திருந்தவளுக்கு, அவர் அப்படி ஒரு கேள்வியை நேரிடையாகக் கேட்பார் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை.

 

“சுருதி..   இது என்ன பேரு கொஞ்சம் கூட நல்லால்ல.. வாயில நுழையிற மாதிரி வேற நல்ல பேரா உனக்கு வைக்கணும் முதல்ல.. ” இதைக் கேட்டவுடன் அடி வயிற்றில் ஆயிரம் ஊசிகள் ஒன்றாகக் குத்துவது போல ஒரு வேதனை தன்னிலை மறக்கச் செய்தது. அடுத்து அந்தப் பெரியவர் பேசியது எதுவும் காதில்கூட நுழையவில்லை. நினைவுகள் பின்னோக்கி அன்புக் காதலனின் சுவாசம் தேடி ஆழ்ந்து போனது. திடீரென்று கையைப் பிடித்து யாரோ உலுக்கியது தெரிய, சிலிர்த்துக்கொண்டு கையை உருவிக்கொண்டாள். பெரியவர் வெகு நேரமாக ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார் என்பது அவருடைய பேச்சின் தொடர்ச்சியில் புரிந்தது…

 

”எங்கள் குடும்பத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சவ நீ. என் பையன், பொண்ணு எல்லாம் அவங்கவங்க குடும்பம் என்று செட்டில் ஆயிட்டாங்க. வரவர எனக்கும் உடம்பு முடியாமப் போகுது. உனக்கும் புருசன் உசிரோட இருக்கானான்னே தெரியலியே.. அதனால, பேசாம என்னையே கல்யாணம் பண்ணிக்கோயேன், உன் குழந்தைகளுக்கும் எதிர்காலம் நல்லாயிருக்கும். நானும் இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்கப் போறேனோ.. நீயும் உன் பிள்ளைகளும், இங்கேயே பாதுகாப்பா இருக்கலாமே” என்றார் சர்வசாதாரணமாக.

 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சுருதி அதிர்ச்சியில் அமைதியாக நின்றாள். ராமமூர்த்தியும், “ ஒன்னும் அவசரமில்ல சுருதி. இன்னும் இரண்டொரு நாள் டைம் எடுத்துக்கோ. நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடும்மா” என்றார்.

 

அன்று இரவு முழுவதும் கண் மூடாமல் ரகுவின் நினைவினால் தேம்பித் தேம்பி அழுதவாறு இருந்தவள், விடியலில் மனம் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தாள். குழந்தைகள் இருவரையும் எழுப்பி தன் சொத்தான அந்தப் பழைய ஹோல்டால் பையைத் தூக்கிக் கொண்டு சத்தமில்லாமல் கிளம்பிவிட்டாள். இவ்வளவு பெரிய உலகில் தாங்கள் வாழ வழியில்லாமலா போகும்?.. எப்படியிருந்தாலும் ஒருநாள் தன் அன்புக் கணவன் தங்களை தேடிக்கொண்டு வரத்தான் போகிறான் என்ற நம்பிக்கையில் வீறுநடை போட்டாள் சுருதி…

 

 

Series Navigation
author

பவள சங்கரி

Similar Posts

6 Comments

 1. Avatar
  ஒரு அரிசோனன் says:

  முடிவு எனக்குப் பிடித்திருக்கிறது. உண்மையான காதல் கொண்ட பெண் எப்படி இருப்பாள் என்று வடிமைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

 2. Avatar
  பவள சங்கரி says:

  அன்பினிய அரிசோனன் அவர்களுக்கு,

  தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 3. Avatar
  mahakavi says:

  To think about a husband who abandoned her for a long time and who would not stand by his family in times of their need as “anbuk kaNavan” is ridiculous to say the least. It was she who was responsible for Ragu to leave home. It is absurd that she would wait for a long disappeared husband to return. I don’t agree with her decision to leave the old man who needed her attention. She is ungrateful to him too besides driving out her husband.

  1. Avatar
   பவள சங்கரி says:

   அன்பினிய மஹாகவி அவர்களே,

   வணக்கம். ஒரு மனைவி தன் கணவன் தவறு செய்யும்போது உரிமையுடன் கண்டிப்பது இயல்புதானே. அவன் சற்று முன்கோபி என்பதையும் மறக்கவேண்டிய சூழலுக்கு ஆளாக்கியது அவனுடைய பொறுப்பற்ற தன்மை. ஆயிரம் தவறு செய்தாலும், அவன் தன் அன்பு காதலிமீது கொண்ட அன்பு மாறாதது. அதனால் இது ஊடலாக இருக்க வேண்டியது காலக்கொடுமையால் பிரிவுத் துயராக மாறி நிற்கிறது. அவன் எங்கோ சூழ்நிலை கைதியாகத்தான் சிறைபட்டுக்கிடக்க வேண்டும். மீண்டு வருவான் சொக்கத் தங்கமாக.. உண்மைக் காதல் அழியாதது. பெரியவர் அவளை ஒரு உதவியாளராகப் பார்த்தவரை அவளுக்கு பணிவிடை செய்வதில் எந்தப் பிரச்சனையோ மன உளைச்சலோ இல்லை.. ஆனால் அவர் மனைவி என்ற உரிமையுடன் அவள் தலையெழுத்தையே மாற்ற நினைக்கும் போது அவள் கொண்ட உண்மைக் காதல் அதை ஏற்க மறுத்துவிட்டது. ஏழ்மையிலும், இயலாமையிலும் கூட காதல் வென்றிருக்கிறது.. அந்தக் காதலின் பலம் அவர்களை மீண்டும் இணைந்து வாழவைக்கும் என்று நம்புவோம்!

 4. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள பவள சங்கரி, உங்களின் ” சுருதி லயம் ” சிறுகதை படித்து மகிழ்ந்தேன். பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரகு தந்தையின் கோபத்துக்கு ஆளாகி குடும்பத்தை விட்டு ஓடி வந்து, வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு சாதாரண உணவகத்தில் தங்குவதும், அங்கு பாத்திரங்கள் துலக்கும் உடல் ஊனமுற்ற சுந்தரியைச் சந்தித்து காதல் கொண்டு அவளையே வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்வதும் சுவையாக உள்ளது. அதன்பிறகு அவன் குடிக்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட முடியாமல் அவளுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகி வீட்டை விட்டு இரண்டாம் தரம் காணாமல் போனது சோகமானது. பாவம் ராமமூர்த்தி. அவர் நல்லவர்தான். அவருக்கு சுந்தரி மீது உண்டான கருணை இயல்பானதே. அவள் சம்மதித்தால் அவருக்கு அவள் பாதுகாப்பாகவும், அவளுக்கு அவர் பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்று அவர் எண்ணியதில் தவறில்லை. ஆனால் அந்த ” ஒளி மயமான எதிர்காலத்தையும் ” உதறித் தள்ளியவாளாக சுருதி எடுத்த முடிவு சரிதானா ( இந்த கால கட்டத்தில் ) என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிட்ட பாணி அருமை. பாராட்டுகள் பவள சங்கரி. ..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   பவள சங்கரி says:

   அன்பினிய மரு.ஜான்சன் அவர்களுக்கு,

   வணக்கம். தங்களுடைய ஆழ்ந்த வாசிப்பும் துல்லியமான விமர்சனமும், ஒரு எழுத்தாளர் தம்மை புதுப்பித்துக் கொள்ளச் செய்யும் ஊக்க சக்தி. மிக்க நன்றி ஐயா.

   அன்புடன்
   பவளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *