மனம்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

நானும் பக்கத்துவீட்டு சாமா மாமாவும் கடைத்தெருவுக்குப்போய் ஒரு நர்சரியை த்தேடிக்கண்டுபிடித்தோம். நர்சரி என்றால் அந்த மரஞ்ச் செடி கொடி க்கன்றுகள் முளைக்கவைத்து தொட்டிகளில் விற்பார்களே அந்த கடையைத்தான் சொல்ல வருகிறேன்.இரண்டு பேர் வீட்டிலும் சிறிய தோட்டம் உண்டு.ஆனால் இந்த முருங்கை மரம் மட்டுந்தானில்லை.
முருங்கை மரம் வீட்டில் இல்லாமல் இருந்தால்தான் தெரியும் அதன் தேவை என்ன என்பதும் புரிய வரும்.முருங்கைக்காயை வீட்டுத்தோட்டத்தில் பறிப்பதும் சாம்பாருக்கு அதனைத்தயார் செய்வதும் அத்தனை சௌகரியம். சாம்பாரில் முருங்கைக்காய் சாம்பார்தான் ராஜா. .அத்தனை சுவையுள்ள அந்த முருங்கைமரம் வளர்க்கவோ ஒரு சிரமமும் இல்லை.
மண்ணில் புதைத்து விட்டால் போதும். தண்ணீர் என்ன ஊற்றுகிறீர்களோ இல்லையோ பத்து நாட்களுக்குள் ‘இதோ பாரேன் என்னை’ என்று பச்சை இலைகள் நிறைத்துக்கொண்டு ஒரு வரவேற்பு நிகழ்த்தும்.
நானும் சாமா மாமாவும் ஆளுக்கொருமுருங்கை மரக்கன்று நர்சரியில் வாங்கினோம்.
நன்கு விசாரித்துத்தான் வாங்கினோம். அது என்ன விசாரித்து என்று கேட்டால் கீரை ருசி எப்படி, காய் நீட்டம் எத்தனை ,மர உயரம் எவ்வளவு, காய்ப்பின் தொடர்ச்சி இத்யாதி திசா புக்தி பலன் எல்லாம் விசாரித்துத்தான்.
‘யாரு சார் முருங்கை ச்செடி வாங்க இங்க வர்ராங்க அவுங்க அவுங்க ஒரு கிளையை ஓசியில ஒடிச்சி தன் தோட்டத்துல மண்ண நோண்டி சொறுகிட்டாபோதுமே. இங்க நர்சரிக்கு எல்லாம் எதுக்கு வரணும். ஒங்களைமாதிரிக்கு யாராவது அதிசியமா வந்தாத்தான் உண்டு. நாங்க முருங்க செடி விக்கறதும் இல்லை. ஏதோ எப்பவோ கொண்டாந்ததுல இன்னும் ரெண்டு பாக்கி கெடக்கு வாங்கிகினு போங்க. யார் யாருக்கு என்ன பொசுப்புன்னு யாரு கண்டா, இதுங்க நல்லா வரும்.ரெண்டும் ஒரு சாதிதான்.’
‘இதுல கூடவா சாதி உண்டு’
நர்சரிக்காரர் என்னை ஒரு முறை முறைத்தார். அது தான் எனக்குப்பதில் என நினைத்துக்கொண்டேன்.
பக்கத்து வீட்டுக்காரரும் நானும் ஆளுக்கொரு முருங்கைச்செடியைக்கையில் பிடித்துக்கொண்டு நடந்தோம்.அப்போதே முருங்கைக்காய்கள் அவரவர் தோட்டத்தில் காய்த்து தொங்குகிறமாதிரி மனத்தில் கனவு. கையில் தூக்கிக்கொண்டுவரும் அந்தக்குழந்தைச்செடியை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.எனக்கு சிரிப்பாக வந்தது.
‘என்ன சிரிப்பு ஓய்’
‘ ஒன்றும் இல்லை இப்போதே வீட்டிற்கு ப்போவதற்குள் இந்த செடி ஏதும் காய்த்துவிட்டதோ என்கிற மாதிரி ஒரு நினைப்பு’
‘அடி செக்க பனங்கொட்டை ,அப்படியா இன்னும் எவ்வளவோ இருக்கு. ஓய் அதுக்குள்ளயா ‘..அவர் எனக்குப்பதில் சொன்னார்.
நான் முருங்கைச்செடியோடு வீட்டுக்குப் போனேன்.சிறிய தோட்டம்தான் என்றாலும் ஒரு வாழை ஒரு துளசி ஒரு கறிவேப்பிலை ஒரு முருங்கை வைக்க ஒன்றும் கஷ்டம் இல்லை.இந்த நான்கும் வைத்திருக்க பிறகு என்ன வேண்டும் சொல்லுங்கள். தூதுவளையும் பிரண்டையும் வேலியில் இருப்பதுவும் எவ்வளவோ ஒத்தாசை.
என் சிற்றறிவுக்கு எட்டியமட்டில் பள்ளம் தோண்டிச் செடியை அதனுள்ளாக வைத்து மண்மூடி தண்ணீர் விட்டேன்.செடி கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது.நர்சரிக்காரனைவிட்டு பிரிந்த அந்த சோகம் கொஞ்சம் இருக்கக்கூடும்.ஒரு பெண் பிள்ளையின் தகப்பன் போல விதை போாட்டு முளைகண்டு அதனை வளர்த்து நர்சரிக்காரன் நம்மிடம் கொடுக்கிறான். ஆகச்செடிக்கும் ஏதும் வருத்தம் இருக்கலாம். பார்க்கலாம் இன்னும் ரெண்டு நாள் போனால் தெரிந்து விடுகிறது மனம் சமாதானம் சொல்லியது
தினம் தினம் தண்ணீர் ஊற்றுவதும் காலை எழுந்தவுடன் செடியின் வளர்ச்சி என்ன என்று பார்ப்பதும் எனக்கு வழக்கமாகிவிட்டது.நர்சரியிலே பாக்கெட் செய்து கொடுத்த எரு என்று ஏதோ ஒன்று வாங்கி வந்தும் போட்டேன். முருங்கை நல்ல உயரம் போனது. இலை தழைத்தது.காய்க்கின்றவரை இலை பறிக்கக்கூடாது என வீட்டில் இருந்தவர்களுக்கும் உத்தரவு போட்டேன்.ஒரு பூ கூட கண்ணில் படவில்லை.லேசாக அச்சம் வந்தது. போகட்டும் என்ன அவசரம் என்று இருந்தேன்.
ஒரு நாள் காலைபக்கத்து வீட்டு சாமா மாமா நான்கு நீளப் பச்சைபசேல் முருங்கைக்காயை வாழை இலையில் சுருட்டிக்கொண்டு ( பார்க்கிற ஜனம் பார்த்து கண் கிண் பட்டால் என்ன ஆவது) என் வீடு வந்தார்.
‘என்ன ஓய் முருங்கை மரம் என்ன ஆச்சு’
‘இன்னும் பூ விடலயே’ பதில் சொன்னேன்.
‘ஒரு பிஞ்ச செருப்பு இல்லைன்னா ஒரு மொறம் இல்லைன்னா ஒரு விளக்குமாறு அந்த மரத்துல கட்டித்தொங்க விடுமே’
‘எதுக்கு மாமா அதெல்லாம்’
‘அப்பத்தான் காய்ப்பு பிடிக்கும்’
‘ நீங்க’
‘ஓ ரைட்டா ஒத்த செறுப்ப முருங்கை மரத்துல கட்டித் தொங்க போட்டேன். அத நீ பார்க்கலபோல’
காய்கள் காய்த்து இருப்பது மட்டும்தானே என் கண்ணில் பட்டது.செறுப்பு முறம் விளக்கமாறு சமாச்சாரம் என் கண்ணில் படத்தான் இல்லை. சாமா மாமாவுக்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தேன்
‘ எரு சரியா வச்சீரா ஊத்தற தண்ணீய அளவா ஊத்தும் தெரியறதா. இந்தாரும் இத சாம்பார் வச்சி இப்பக்கி சாப்புடும். மேலைக்கு .உங்க வீட்டு மரம் காய்க்கட்டும் நீர் எனக்கு கொடுமே நானும் வாங்கிக்கறேன்’
அவர் ஆசிர்வாதம் செய்தார்.யாருக்கு எது எப்பொழுது பிராப்தமோ என மனம் குறைபட்டுக்கொண்டது.நாட்கள் போயின மாதங்கள் ஆண்டுகள் ஒன்றிரெண்டு கடந்தது. முருங்க மரத்தின் அடி உருட்டாக மாறி நின்றது. மொக்கு வந்து பூத்தால்தானே காய்க்கிற சமாச்சாரம் எல்லாம். இது ஒண்ணும் காய்க்கிற மரம் இல்லை இலை கீரை க்குத்தான் ஆகும் என்று சொல்லி அக்கம் பக்கத்துக்காரர்கள் முடிந்த மட்டும் ஒடித்துக்கொண்டு போனார்கள். போகட்டும் என்று விட்டு விட்டேன்.
வேலியை சரி செய்ய வைத்த ஆள் ஒருவன் ‘ இது எதுக்கு சாரு ஒரு தண்டமா’ என்றான். ‘உன் இஷ்டம்’ என்றேன். முருங்கை.மரம் அடியோடு தரைக்கு வந்தது. கீரையை ஆடுமாடுகள் காலி செய்தன. தெருவிலே போனவர்களில் பார்த்தவர்கள் கீரை பறித்துக்கொண்டு போனார்கள்,அவ்வளவுதான்.
சாமா வீட்டு மரம் என் வீட்டிலிருந்து பார்த்தாலே கண்ணுக்கு தெரிகிறது. மரம் பளு தாங்க முடியாமல் காய்த்துத்தான் தொங்குகிறது.அப்படிக்காய்ப்பது கூட மரம் வைத்திருப்பவனுக்கு இம்சையாகத்தான் இருக்குமோ. யார் இந்த முருங்கைக்காய் வியாபார மணியம் எல்லாம் செய்து அப்பாடா என்று உட்காருவது.
சாமா மாமாவிடம் ஒரு முருங்கைக்கிளை வாங்கி என் வீட்டில் வைத்து தண்ணீர் ஊற்றி ப்பார்க்கலாம்தான். மனம் ஏதோ யோசனை சொன்னது.நம் வீட்டில்தான் மரம் காய்க்கவில்லை அதனையும் வெட்டி ஆயிற்று.அவரே ஒரு கிளை ஒடித்து ‘இந்தா உன் தோடத்துல இத வை’ என்று கொடுக்கலாம் . ஏன் அவர் இதைச்செய்யக்கூடாது..அவர்தான் செய்யவில்லையே.நானே அவரிடம்’ ஒரு கிளை எனக்குத்தாரும்’ என்று கேட்டுவிடலாம் ஆனால் மனம் கேட்க ஒத்துக்கொன்டால்தானே. மனம் மிக மிக நல்லது மாதிரித்தான் தெரியும். ஆனால் அது தோற்றப்பிழை. ஆக நான் கேட்கவில்லை.இப்படியேதான் காலம் போய்க்க்ண்டிருந்தது.
ஒரு நாள் சுழற்காற்று.. பட பட என தொடர்ந்து ஒரு ஆலங்கட்டி மழை.. மரங்கள் அங்கங்கே முறியும் சத்தம். சாமா வீட்டை எட்டிப்பார்த்தேன். வீட்டு வாசலில் முருங்கை மரம் சாய்ந்து கிடந்தது.தெருவில் போவோர் வருவோர் காய்களை கிளைகளை ஒடித்துக்கொண்டு போனார்கள்.சாமா வேடிக்கை மட்டும்தான் பார்த்தார். ஒரு வழியாக மரம் அதன் வீழ்ந்த ஆரவாரம் அடங்கியது.முருங்கை மரத்தின் அடிக்கிளை மாத்திரம் பாக்கி இருந்தது.மற்றயவை எல்லாம் காலி.
ஒரு பத்து நாட்களில் அதே முருங்கை மரத்தின் அடி க்கட்டை த்துளிர்த்து சாமா வீட்டில் ‘ மீண்டும் கோகிலா’ வந்துவிடலாம்..
சுழற்காற்று வீசியதே இப்போதாவது ஒரு கிளை எடுத்து வந்து சாமா மாமா எனக்கு க் கொடுக்கலாம். அவர் செய்யவில்லை.அவர் ஏன் இதைச் செய்யவில்லை.மனம் குறு குறு என்றது..
சாமாமாமா எங்கோ கிளம்பி வெளியில் போய்க்கொண்டிருந்தார்.அவர் கையில் பை நிறைய முருங்கைக்காய்களும் பயணமாகிக்கொண்டிருந்தன.அவர் வீட்டில் இப்போது யாரும் இல்லை.வீட்டின் கதவு மூடி இருந்தது நான் .பைய நடந்து அவர் வீட்டு வாசலில் முருங்கைமரம் வெட்டப்பட்ட குப்பையை நோட்டம் விட்டேன்.ஒன்றிரெண்டு கொம்புகள் இன்னும் யாரும் எடுத்துச்செல்லாமல் பாக்கி இருந்தன.ஒன்றை எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.சாமா மாமா பார்க்காமல் இருந்தால் போதாதா எனக்கு.
கிடு கிடு என என் வீட்டுக்கு வந்து பழைய முருங்கை மரத்தின் அடிக்கட்டை இருக்கும் அதே இடத்துக்குப்பக்கத்தில் நட்டுத்தண்ணீர் ஊற்றினேன் நான் எடுத்து வந்து நட்ட அந்த முருங்கைக்கொம்பு என்னைப்பார்த்து ஏளனமாய்ச் சிரித்த மாதிரி இருந்தது..ஏதோ அசிங்கத்தை மிதித்து விட்டுக் கால் கழுவி வீட்டுக்கு உள்ளே வந்தபடிக்கு உண்ர்ந்தேன். நாடகள் உருண்டன.
முருங்கை தழை வைத்தது. ஜோராகப் பூ வந்தது. பிஞ்சும் காயுமாக முருங்கை மரம் கம்பீரமாய் என் தோட்டத்தில் வந்தும் விட்டது. சாமா மாமாவுக்கு இது எல்லாம் எங்கே தெரியும்..செருப்பு முறம் விளக்கமார் வகையறா எல்லாம் முருங்கை மரத்தில் நான் மரத்தில் கட்டவும் இல்லை. சமத்தாகக்காய்த்தது மரம்.
‘ ஒரு நான்கு நீள பச்சை முருங்கைக்காய்களை ப்பறித்து நானும் வாழை இலையில் சுருட்டிக்கொண்டு( என் வீட்டு முருங்கை மரத்திற்கு மட்டும் கண்ணாறு படாதா என்ன) சாமா மாமா வீட்டுக்குப்போய்க்கொடுத்துவிட்டு ‘மாமா சாம்பார் வச்சி சாப்புடுங்கோ. இதுக எங்காத்துல காச்சது’ என்றேன்
‘பேஷ் பேஷ். என்னைக்கேட்டிருந்தா ஒரு முருங்கைக் கொம்பு உனக்கு நானே குடுத்து இருப்பேன். நீ தான் அண்ணைக்கு எங்காத்து குப்பையிலேந்து ஒரு முருங்கைக்ககிளையப் பொறுக்கி எடுத்துண்டு போனயாம் எங்காத்து மாமி.என்னண்ட அப்பவே சொன்னாடா’
நான் ஆறு அடிக்கு உயரம். இப்போது நான்கு அடியாய் என் உயரம் சுறுங்கி விட்டிருக்குமோஎன்னவோ..
‘கேட்டு வாங்கி கொம்பு நட்டா காய்ப்பு எடுக்காது ஒரு கொம்பு மரத்துக்காராளுக்கு தெரியாம நாம் எடுத்துண்டு வந்து நம்மாத்து தோட்டத்துல நட்டுடணும் அப்பத்தான் அது நன்னா காய்க்கும்னு எங்காத்துல ஒரு பேக்கு இருக்கே அதுதான் சொல்லித்து மாமா’ என்றேன்.அசல் மான் மார்க் பொய்தான்.
சாமா மாமா ஒன்றும் லேசுபட்டவரும் இல்லை. அவரின் கண்கள் என்னிடம் பேசுகிறதே
.’ என் வீட்டில் இருக்கும் அந்த பேக்கிற்கு இது விஷயம் எல்லாம் தெரிந்துவிடுமா என்ன?’
—————————————————————————————–

Series Navigation
author

எஸ்ஸார்சி

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *