வாழ்க்கை ஒரு வானவில் – 19

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 

கோயமுத்தூரைச் சேதுரத்தினம் அடைந்து நாகவல்லியின் வீட்டுக் கதவைத் தட்டிய போது, பணிப்பெண் கதவைத் திறந்து அன்று சொன்னது போன்றே தன் எசமானியம்மாள் ஊர்மிளாவுடன் அதே மருத்துவமனைக்குச் சென்றிருப்பதைத் தெரிவித்தாள். அவன் ஒரு டாக்சி பிடித்து விழுந்தடித்துக்கொண்டு அங்கே சென்றான்.

அவனை உள்ளெ விட மறுத்தார்கள். நாகவல்லியே வெளி வராந்தாவில் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். கலங்கி யிருந்த அவள் விழிகளைப் பார்த்து அவனுக்குப் பதற்றமாக இருந்தது. ஏதோ சிக்கல் என்று புரிந்தது. அவனது உடம்பு தலையிலிருந்து கால் வரை அதிர்ந்தது.

“என்னங்க ஆச்சு?” என்று வினவியவாறு அவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

“கொஞ்சம் சிக்கலான கேசா யிருக்கும் போல இருக்கு. ரொம்பவும் பயப்படுற பொண்ணா வேற இருக்கு அது.. நானும் அது இங்க வந்ததுலேர்ந்து தெனமும் அதுக்குத் தைரியம் சொல்லிண்டேதான் இருக்கேன்…. “

“ஆமாங்க. போன வாட்டி நான் வந்திருந்தப்ப கூட தனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு அவ வாய் விட்டே தன்னோட பயத்தைப் பத்தி எங்கிட்ட சொன்னா. நானும் அவளூக்கு எவ்வளவோ அறுதல் சொன்னேன். …அது சரி, டாக்டரம்மா என்ன சொல்றாங்க?”

“ஒண்ணும் சரியாச் சொல்ல மாட்டேன்றாங்க. இன்னும் அரை மணிப் பொழுதுக்குப் பெறகுதான் சொல்ல முடியும்கிறாங்க. கொழந்தை எசகு பெசகாத் திரும்பி யிருக்குதாம்…” – இவ்வாறு தொண்டை அடைக்கும் குரலில் சொல்லிவிட்டு நாகவல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டது அவனுள் கிலியைத் தோற்றுவித்தது. குழந்தை அதன் இயல்பான நிலையை விட்டுத் திரும்பினால் அறுவைச் சிகிச்சை வாயிலாகத்தான் அதை வெளியே எடுக்க வேண்டியது வரும் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான் அது தாய்க்கே கூட ஆபத்தாக முடியலாம் என்பதால் அவன் இதயம் தாளந்தப்பித் துடிக்கலாயிற்று.

`கொழந்தை போனால் போகட்டும். ஊர்மிளாவைக் காப்பற்றுங்கள், ஆண்டவனே!’ என்று சேதுரத்தினம் மனத்துள் திரும்பத் திரும்பச் சொல்லலானான். அவன் கண்கள் கலங்கின. அவற்றை இறுக மூடிக்கொண்டு தலையை இரு கைகளிலும் தாங்கியபடி அவன் உட்கார்ந்து போனான்.

…. “என்னங்க? அந்த உங்க ஃரண்டு – எங்க ஊர்க்காரர் சேதுரத்தினத்துக்குக் கொழந்தை பொறந்தாச்சா? கோயமுத்தூருக்குப் புறப்பட்டுப் போயிருக்கார்னு சொன்னீங்களே?” என்று சாப்பாட்டு மேசையருகே ரங்கனுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த லலிதா விசாரித்தாள்.

“கொழந்தை பொறந்ததும் தகவல் சொல்றேனிருக்கான். … ஆமா?…” என்ற அவன் தொடங்கியதை முடிக்காமல் வெட்கத்துடன் அவளை நோக்கினான்.

அவள் ஆர்வத்துடன் அவனைக் கவனித்தாள் அவன் எதைப் பற்றிப் பேசப் போகிறான் என்பது புரிந்துபோனதில் தட்டில் இருந்த சாதத்தைக் கிளறிகொண்டே, “சொல்லுங்க!” என்றாள்.

”நமக்கு… எப்ப….” என்று அவன் மறுபடியும் அரைகுறையாய் நிறுத்தினான்.

அவன் அதுகாறும் அவளது முகத்தில் பார்த்தே யறியாத வெட்கத்துடன், “நானே இன்னைக்குச் சொல்லலாம்னு இருந்தேங்க…. ரெண்டு மாசமாகுது. நேத்து நானே லேடி டாக்டர்கிட்ட போய் நிச்சயப்படுத்திண்டு வந்தேன்…வர்ற மார்ச் மாசத்துலே நீங்க அப்பாவாயிடுவீங்க. நானும் அம்மா வாயிடுவேன்…” -என்றாள் சன்னக்குரலில்.

அந்த அவளது வெட்கமும், சன்னக்குரலும் புதியவை என்பதால் ரங்கன் அவளைத் தானும் ஒரு புதிய அன்புடன் நோக்கினான்.

இடக்கையை நீட்டி அவளது கன்னத்தில் தட்டி, “தேங்க்யூ, லலிதா!” என்றான். “அது சரி, எந்த டாக்டர் கிட்ட போனே? உனக்கு எப்படி அவங்களைத் தெரியும்?” என்றான்

”இதுக்கு அவங்களை தெரிஞ்சிருக்கணுமா என்ன! நம்ம தெருக்கோடியில இருக்கிற டாக்டர் கல்யாணிங்கிறவங்கதான். ..”

“நீ இனிமே ரொம்ப கவனமா யிருக்கணும். வேளா வேளைக்குச் சாப்பிடணும்….. இன்னொரு நாள் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கு. நாம ரெண்டு பேருமாச் சேர்ந்து போய் டாக்டரைப் பார்க்கலாம்….”

“சரிங்க…. ஞாயித்துக்கிழமை பார்க்க மாட்டாங்க. மத்த நாள்ல ஒரு நாள் சாயந்தரமாப் போய்ப் பார்க்கலாங்க…”

“சரி…. நீ நிறைய பழங்கள்லாம் சாப்பிடணும். பால் சாப்பிடணும். என்ன, தெரிஞ்சுதா?’

“சரிங்க…”

….. சாப்பிட்டு முடித்ததும் சமையலறையைத் துப்புரவு செய்தவாறு அவள் டாக்டர் கல்யாணியிடம் தனது பழைய வாழ்க்கையில் நிகழ்ந்த தவறு பற்றிச் சொல்லிவிட்டது பற்றி நினைத்துப் பார்த்தாள். தன் கணவனுக்கு அது தெரியக் கூடாது என்று கண்ணீருடன் அவள் வேண்டிக்கொண்ட போது, ’கவலையே படாதேம்மா. நான் சொல்லவே மாட்டேன்,,,’ என்று டாக்டர் கல்யாணி வாக்களித்திருந்தாள். இதனால் லலிதா நிம்மதி யடைந் திருந்தாள்.

….சேதுரத்தினம் கோயமுத்தூருக்குச் சென்றிருந்ததால், கடற்கரையில் அவனுடன் கொஞ்ச நேரத்தைக் கழிக்கும் வேலை இல்லாத ராமரத்தினம் அன்று மாலை விரைவாக வீட்டுக்குப் போனான். பருவதம் சிரிப்புடன் அவனுக்குக் காப்பி கலக்கப் போனாள். கைகால் கழுவப் பின்கட்டுக்குப் போன அவன் அங்கே மாலாவைப் பார்த்ததும், “மாலா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்றான்.

“என்ன, ராஜா?” என்று கேட்ட அவள் முகத்தில் சட்டென்று தோன்றிய வெட்கமும் செம்மையும் அவனை வேதனைப்படுத்தின. `நான் ரமணியைப் பார்த்துப் பேசிவிட்டதாகவும், அவன் சம்மதித்து விட்டிருக்க வேண்டும் என்றும் இவள் நினைக்கிறாள் போலும்!’

“ரமணியை இனிமேதான் சந்திச்சுப் பேசணும்….உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும், மாலா….”

“என்ன?”

“எப்படிச் சொல்றதுன்னே தெரியல்லே. தயக்கமா யிருக்கு…”

“என்ன, ராஜா? எதுவானாலும் சும்மா சொல்லு.”

“எங்க ஆஃபீஸ்ல ஒரு மேலதிகாரி இருக்கார். அவருக்கு நாப்பத்தஞ்சு வயசு முடிஞ்சுடுத்து. போன வருஷம் அவரோட பொண்டாட்டி செத்துப் போயிட்டா. இருபது வயசுல அவருக்கு ஒரு பிள்ளை இருக்கான். ஆனா அவருக்கு மறு கல்யாணம் பண்ணிக்கணும்கிற எண்ணம் வந்திருக்கு….” – மேலே தொடராமல் நிறுத்திய அவனை மாலா திகிலுடன் பார்த்தாள்.

“எனக்கு ரெண்டு தங்கைகள் இருக்கிற விஷயம் அவருக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு. உன்னைப் பொண்ணு பார்க்க வர்றேன்னார். அம்மா கிட்ட வந்து பேசறேன்னார். இப்போதைக்கு சரின்னு சொல்லி வெச்சிருக்கேன். ஆனா, நீ ஒண்ணும் கவலைப்படாதே. உன்னை வேற ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறதா சொல்லிச் சமாளிச்சுடலாம். நீ அதுக்குச் சம்மதிச்சு இருக்கிறதாயும் ஆனா அந்த விஷயமே என்னோட மேலதிகாரியைப் பத்தி உங்கிட்ட சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கே தெரிய வந்ததுன்னும் சொல்லிடலாம்…உனக்கு முன் கூட்டி சொல்லி வைக்கணும்கிறதுக்காக இதைப் பத்திப் பேசறேன்.”

“எனக்கு அதிலே இஷ்டமில்லைன்னு நீ அவரு கிட்ட சொன்னா, உன்னோட வேலையை அது பாதிக்குமா, ராஜா?”

“அதெல்லாம் பாதிக்காது. அது வேறே, இது வேறே, மாலா. நீ மனசை அலட்டிக்காதே… அம்மா கிட்டயும் சொல்லி வெச்சுடலாம்னு இருக்கேன். ஏன்னா, எங்கிட்டயே சொல்லாம கொள்ளாம திடீர்னு அந்தாளு இங்கே வந்து நின்னா, அம்மா கண்டிப்பாச் சொல்லிடணும் – அவ வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறான்னு.. என்ன சொல்றே?”

“சரி, ராஜா.”

… அவன் காப்பி குடித்து முடித்த கணத்தில், “அண்ணா! உனக்கு ஒரு தந்தி வந்திருக்கு. நான் கையெழுத்துப் போட்டு வாங்கினேன்…” என்றவாறு கோமதி அவனிடம் அதை நீட்டினாள்.

“தந்தியா! யார் கிட்டேர்ந்து?” என்று வியப்புடன் கேட்டவாறு அதை வாங்கிப் பிரித்த ராமரத்தினம் அப்படியே தரையில் விழாத குறையாகச் சரிந்தான்.

“அம்மா! அண்ணா மயக்கமாயிட்டான்…” என்று கோமதி அலற பருவதம் சமையல்கட்டிலிருந்து விரைந்து வந்தாள். முதலில் அவன் முகத்தில் மாலா தண்ணீர் தெளித்துவிட்டு அந்தத் தந்தியை எடுத்துப் பார்த்தாள்.

(தொடரும்)

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *