(1)
ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்
ஒரு
விநோதமான இரவு.
முதல்
யாமம்.
யாரோ கைகளாலல்ல
ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும்.
இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை.
நடு
யாமம்.
யாரோ கைகளாலல்ல
ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும்.
இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை.
கடைசி
யாமம்.
யாரோ கைகளாலல்ல
ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும் மறுபடியும்.
இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை.
விடியலில் தென்பட்ட நிலா களைத்து மிகவும்
வெளிறியிருக்கும்.
ஒரு வேளை
’விருந்தாளியாய்’ நிலா தான் இரவில் வந்து கதவைத் தட்டிப் போயிருக்குமோ?
எப்படிச்
சொல்ல முடியும்?
’வா’ என்று
வருவிருந்தாய் அழைப்பேன் பன்முறை பின்.
நிலாவோ கருமேகங்களைக் கூப்பிட்டு ஒளிந்து கொள்ளும்.
உலகெல்லாம்
ஒளி வீசும்.
என் மன வெளியில் மட்டும் ஒளி வீசாமல் வெற்றிடம் விட்டுச் செல்லும்.
நிலாவின் மறுபக்கம் போல் தெரியவில்லை
ஏனென்று.
அந்த இரவுக்குப் பின்
எந்த இரவிலும் கதவு தட்டப்படுவது நின்று போயிருக்கும்.
(2)
விட்டில் பூச்சியின் விடுதலை
விட்டில் பூச்சியே!
சுடர் விளக்கில் சூட்சுமமாகும் ஒளிக் கண்ணாடியில்
என்ன கண்டாய்?
உன்னையா?
இல்லை
நீ உன் கனவென்றா?
உன்னைக் காணாவிட்டாலும்
நீ
உன் கனவென்று காணாமல் இருக்கக் கூடாதா?
ஒளி சிதறும் சிறு துகள்களில் ஞானத்தின் முழுமை தேடி முற்றும்
விழைந்தாயா?
உன் சிறகுகள் காற்று வெளியில்
விடுதலைக்கு வழி நடத்திச் செல்லுமென்பது உனக்குத் தெரியாதா?
எதை விட்டு விடுதலையாக வேண்டி மயக்குற்று ஒளிக் கண்ணாடியில் இப்படி விடாது பால் முட்டி மோதினாய்?
உதிர்ந்து கிடக்கும்
உன் சிறகுகள் சொல்லும்.
உடைந்து போனது
நீ.
நீ
உன் கனவென்ற கனவல்ல.
(3)
கூண்டில்லாத கூண்டு
கூண்டு
திறக்கிறது.
கூண்டுக்குள்ளிருக்கும் கூண்டிலிருந்து
வெளியே வா.
விட்டு
விடுதலையாகிப் போ.
பசுஞ்சோலையில்
பறந்து திரி.
கனிகளைக்
கொத்தி உண்.
’கீச் கீச்’சென்று
உன் கூட்டத்தோடு காற்றின் மொழி பேசிச் சிரி.
கானம்
பாடு.
கலந்து
உறவாடு.
சீட்டெடுத்துக் கொடுப்பதற்கு உன் சிறகுகளை விலை கொடுத்து விடாதே.
அலகிலா வானம் ‘ பறக்க மாட்டாயா நீ’ என்று காத்திருக்கிறது.
சுதந்திரம்
விழை.
ஒடுக்கப்பட்ட உன் சிறகுகள்
பறக்கும்.
உண்மையில் உன் சிறை
கூண்டல்ல.
கூண்டில்லாத
கூண்டு.
ஒரு பெண்ணைத் தவிர யார் இதை உனக்குச் சொல்ல முடியும் எனதருமைக் கூண்டுக் கிளியே?
கு.அழகர்சாமி
- தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்
- காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’
- பட்டிமன்றப் பயணம்
- பூசை
- ஆனந்த பவன் நாடகம்
- அந்திமப் பொழுது
- தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு
- வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை
- ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்
- நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- பண்டைய தமிழனின் கப்பல் கலை
- வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.
- ஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3]
- தேன்
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்
- சங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்
- நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்
- நிலையாமை
- பாலகுமாரசம்பவம்
- சாவடி