பட்டிமன்றப் பயணம்

This entry is part 3 of 22 in the series 16 நவம்பர் 2014

வளவ. துரையன்
திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர் வருவார்கள். வளவனூர் கடைத்தெருவில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எங்கள் கூட்டத்தைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே “ஜமா இன்னிக்கு எந்த ஊரு போவுது?” என்று கேட்பார்கள். அப்பொழுது இலக்கிய வெறி பிடித்து அலைந்த காலம்; எல்லாரும் பேச்சுப் பயிற்சி பெற்ற காலம். எனவே வரும் வருவாயைக் கறாராகப் பேச மாட்டோம். அதற்காக எல்லாமே தேங்காய் மூடிக் கச்சேரிகள் அல்ல.
ஆனால் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் தரும் மூர்த்தி மூன்று விஷயங்கள் கண்டிப்பாய் வலியுறுத்துவார். நடுவருக்கு ஒரு மணி இருக்க வேண்டும். போடுகின்ற சிற்றுண்டி தரமானதாக இருக்க வேண்டும். அனைவர்க்கும் கண்டிப்பாய்த் துண்டு அணிவிக்க வேண்டும். வீட்டிற்கு அதையாவது கொண்டு போக வேண்டும் அல்லவா? எங்கள் குழுவில் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதால் தெரிந்தவர்கள் வழியாய் நிறைய வாய்ப்புகள் வந்தன.
திருக்கனூர் நிகழ்ச்சி நண்பர் ஜமால் மூலம் ஏற்பாடானது. கரகரவென்ற குரலில் மேடையில் பேசும் அவர் எம் குழுவில் ஒருவர். ஜமால் பெயரளவில்தான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். பிரதோஷ விரதம் இருக்கும் முஸ்லீம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவர் கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வார். ஜாதம் கணிப்பார். எங்கள் குழுவின் இஸ்மாயில் அவர்.
நான்கு மணிக்கு திருக்கனூர் போய்ச் சேர்ந்து விட்டோம். பட்டி மன்றம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்தது. மதகடிப்பட்டு வந்து இறங்கி வேறு பேருந்து மாறி புராணசிங்கு பாளயம் வழியாய் திருக்கனூர் அடைந்தோம். இரவு ஏழு மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிக்கு ஏன் நான்கு மணிக்கே வந்தோம் என்றால் ஒரு காரணம் இருந்தது. திருக்கனூரிலிருந்து குறுக்கே வரும் சங்கராபரணி ஆற்றைக் கடந்தால் அக்கரையில் திருவக்கரை இருக்கிறது. போக முக்கால் மணி; வர முக்கால் மணிநேரம் ஆகும். நாங்கள் பைகளை எல்லாம் கோயில் அறங்காவலர் வீட்டில் வைத்துவிட்டு திருவக்கரை நடந்தே போனோம்.
எல்லாரும் முதலில் கோயிலுக்குப்போக வேண்டும் என்றார்கள். அங்குள்ள சந்திரமௌலீஸ்வர்ர் கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள சிவனைவிட வெளியே இருக்கும் வக்ர காளிதான் மிகவும் புகழ் பெற்றதாகி விட்டது. எல்லாமே அங்கு வக்ரம்தான். அதாவது பொதுவாக இருப்பதற்கு நேர் மாறாக எல்லாம் இருக்கும். காளியின் தலை சாய்ந்திருக்கும். ஒரு காதில் குண்டலம். மற்றொரு காதில் குழந்தையின் சவம். கழுத்தில் மண்டையோடுகளால் மாலை. கோயிலின் உள்ளே இருக்கும் லிங்கத்திற்கு நேரே நந்தியோ, பலிபீடமோ, கொடிமரமோ இருக்காது. சற்று விலகியே இருக்கும். அமாவாசை இரவு 12 மணிக்கு அங்கு ஏற்றப்படும் தீபம் காண ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்.
சிற்றுண்டி முடிந்து இரவு 8 மணிக்குப் பட்டி மன்றம் தொடங்கினோம். தலைப்பு : செய்நன்றி காட்டுவதில் மிகச் சிறந்தவன் கும்பகர்ணனா? கர்ணனா? தலைப்பில் இந்த மிக மற்றும் சிறந்த என்ற சொற்கள் மிக முக்கியம். ஏனெனில் சில பேச்சாளர்கள் அதையே பிடித்துத் தொங்குவார்கள். அடியேன்தான் நடுவர். நடுவர் முன்னுரை பேசும்போது மிக ஜாக்கிரதையாய் அக்கம் பக்கம் பார்த்துத் திருடப் போகிறவன் போலப் பாதுகாப்பாகப் பேச வேண்டும். இல்லாவிடில் அணியைச் சேர்ந்தவர்களில் யாரவது ஒருவர் நடுவர் பேச்சின் ஒரு வார்த்தையைப் பிடித்து, அதனால் நடுவர் எம் அணிக்குத்தான் சாதகம் என்று தீர்ப்பை முன்கூட்டியே சொல்வதுபோல் பேசிவிடுவார். அணிக்கு மூன்று பேர் என்பதால் நிகழ்ச்சி முடியும்போது இரவு மணி பதினொன்று இருக்கும்.
”ரத்த பாசமே இல்லாதவருக்குச் செய்நன்றி பாராட்டியவன் கர்ணன்” என்று கூறியதோடு மேலும் சில காரணங்களும் சொல்லிக் கர்ணனுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தேன். எல்லாரும் ஆரவாரமாகக் கைதட்டியதால் என் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டதாக நினைத்தேன். அது தவறென்று பின்னால் தெரிந்தது. எல்லாரும் கலைந்து சென்றபின் ஒருவர் மட்டும் நேராக எங்களிடம் வந்தார். கேட்டார்.
”தீர்ப்பு சொன்னவரு எங்க சாரு?
நான் முன்னால் வந்தேன். “ஏம்பா? நான்தான் கர்ணனுக்குத் தீர்ப்பு சொன்னேன். என்னா விஷயம்?” என்று கேட்டேன்.
”என்னா சாரு? இது சரியான தீர்ப்பா? போன மாசம் புராணசிங்குபாளையம் திரௌபதியம்மன் தீமிதி விழாவில நீங்கதான் எல்லாரும் வந்து பேசினீங்க; அங்க நீங்கதான் கடைசீல கும்பகர்ணனுக்குத் தீர்ப்பு சொன்னீங்க: இப்ப மாத்தி கர்ணனுக்குச் சொல்றீங்க; இது என்னா ஊரு நியாயம் சாரு சொல்லுங்க?”
”இதோ பாருப்பா; இதெல்லாம் அவங்க அவங்க பேசற வாதத்தை வைச்சுச் சொல்றதுப்பா” என்றான் மூர்த்தி.
அது என்னா பக்கவாதமோ? இல்ல பிடிவாதமோ?” என்றான் அவன்.
அடுத்த ஒரு வாரமும் அவனிடமிருந்து கும்பகர்ணன் சார்பாக வக்கீல் நோட்டீஸ் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இருந்தேன் நான்.

Series Navigationகாலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’பூசை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *