-எஸ்ஸார்சி
அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவாள்.ஒரு நாள் ரேஷன் கடைக்காரர் முத்துலச்சுமியிடம்’ கார்டுகாரங்க யாரோ அவுங்க ரேஷன் கடைக்கு நேரா வரட்டும் இந்த கார்டுக்கு சாமானுங்க தர்ரது எல்லாம் அப்புறம் பாக்கலாம் இண்ணைக்கு இந்த கார்டுக்கு சாமான் தர முடியாது’ என்று சொல்லியதாக அவனிடம் சொன்னாள்.
முத்துலச்சுமி ஒன்றும் சும்மா போய்வருபவளும் இல்லை எங்கு போகச்சொன்னாலும் அதில் ஒரு கணக்கு இல்லாமல் இருக்காது.அவனுக்கு ரேஷன் கடையில் சர்க்கரை அல்லது திருனெல்வேலிக்காரர்கள் பாஷையில் சொன்னால் சீனி மட்டும் போதும்.சீனி மட்டும் எதற்கு என்று யாரும் கேட்டுவிடவேண்டாம். ரேஷன் கார்டில் அவனுக்குள்ள பாத்தியதையை எப்படி சமூகத்துக்கு அவன் அறிவிப்பது. அவனுக்கும் கூட சர்க்கரை வியாதி. அது யாரை விட்டு வைத்து இருக்கிறது.எனக்குரொம்ப நாளாக ஒரு ஐயம் இதனை அந்த தாமிரபரணிக்காரர் சீனி வியாதி என்று சொல்லாமல் சர்க்கரை வியாதி என்று ஏன் சொல்கிறார்களோ.
அவனுக்கும் அந்த ரேஷன் கடை சர்க்கரை வாங்கி ஒன்றும்பெரியதாக ஆக வேண்டியதில்லை.ஆனாலும் தமிழ் நாட்டில் இன்கம்டாக்ஸ் கட்டுபவர்கள் வீட்டில் நூற்றுக்கு தொண்ணூத்து ஒன்பது சதவிகிதம் விலையில்லா மின்விசிறி ,மிக்சி கிரைண்டர் ,எல்லாம் சமத்தாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆயுத பூஜை அன்று சந்தனம் குங்குமம் வைத்து படையல் நடக்கும்போது அவைகட்கும் மாலை மரியாதை கற்பூர ஆரத்தி எல்லாம் உண்டு
ரேஷன் கடைக்காரர்கள் அவனை எதற்கு வரச்சொன்னார்களோ அவன் யோசித்து யோசித்துபார்த்தான். ஒன்றும் கதையாகவில்லை.நேராக ரேஷன் கடைக்கே இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டுபோனான்.ரேஷன் கடையில் பில் போடுவதற்கு ஒரு க்யூவும் சாமான்கள்கொடுப்பதற்கு இன்னொரு க்யூவும் இருந்தது.அவ்ன் அவ்விடம் வருவதை வரிசையில் நிற்பவர்கள் யாரும் விரும்பவில்லை.அவர்கள் முக லட்சணம் அதை அறிவித்தது.
‘பன்னெண்டு மணிக்கு ரேஷன் கடைக்கு வந்தா இங்க யாரு வுடுவா’
‘நான் சாமான் வாங்க ஒண்ணும் வருல. ஒரு விவரம் கேக்கத்தான் வந்தேன்’அவன் ஒரு பெரியவருக்குப்பதில் சொன்னான்.பில்போடுபவர் எட்டிப்பார்த்தார்.
‘சாருக்கு என்ன சேதி’
‘நேரா வரச்சொன்னிங்களாம் அதான் வந்தேன்’
‘யாரு சொன்னா?’
‘பக்கத்து வீட்டு அம்மா சொன்னாங்க’
‘கார்டு எதுக்கு அவுங்ககிட்ட கொடுத்தீங்க’
அந்த விஷயம் எல்லாம் பில் போடுபவருக்கு சொல்லவா முடியும்.அவன் வாய் திறக்காமல் அப்படியே நின்றான்.பில் போடுவதற்கு வரிசையில் நின்ற கூட்டம் அவனை வேண்டா வெறுப்பாக பார்த்தது.
‘போயி நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு இங்க வாங்க மத்ததை பேசிக்குலாம்’ பில் போடுபவர் பதில் சொன்னார்.க்யூ வரிசையில் நின்ற மனிதர்களுக்குச்சின்ன மகிழ்ச்சி. அவன் அவர்கள் முகங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
‘சரி நாளைக்கு வர்ரன்’
பதில் சொல்லிப்புறப்பட்டான்.
மறு நாள் காலை ஒன்பது மணிக்கு முன்பாகவே சென்று ரேஷன் கடை வாயிலில் பார்த்தான். அந்தக்கடை வாயிலில் யாரும் இல்லை.ஒரு பெண் நாயைச்சுற்றி சுற்றி நான்கு ஆண் நாய்கள் வட்டமிட்டு நின்றன.உயரம் அதிகமான நாயுக்கு அங்கே கொஞ்சம் மரியாதை அதிகம்போல் தெரிந்தது.அந்த அளவுக்கு உயரம் இல்லை என்றாலும் சுறுசுறுப்பு அதிகம் உள்ள நாய் ஒன்று அதன் பக்கத்தில் நின்றது. நானும் ஒன்றும் சளைத்துவிடமாட்டேன் என்று சொல்லிக்கொண்ட மாதிரி வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது. நான்கு நாய்கள் சுற்றி இருப்பதில் பெண் நாயுக்கும் அதிக இம்சை இல்லை ஒரு சவுகரியம்தான்
ரேஷன் கடைமற்றபடி வெறிச்சோடிக்கிடந்தது
. . . .
..’அப்புறம் வரலாம் இப்போது ஒன்றும் அவசரமில்லை’ என்ற முடிவோடு வீட்டுக்குத்திரும்பி வந்தான்.
பணி ஓய்வு பெற்றதிலிருந்து அவனுக்குப் பத்து மணிக்குத்தான் சாப்பாடு அந்த பழக்கம் இப்போதுதான் வந்தது.காலை எட்டு மணிக்கு சமையல் ரெடியாகி அவனைச்சாப்பிட அழைத்தவர்கள் பத்து மணியானாலும் இப்போதெல்லாம் கவலைப்படாமல்தானே இருக்கிறார்கள்.பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை ஆக அதுவும் சரியாகவே இருக்கும் அவன் நினைத்துக்கொள்வான்.
ரேஷன் கடைக்குப்போகவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவனுக்கு நான்கு சப்பாத்தி தயார் செய்து கொடுத்தார்கள்.ஊறுகாயைத்தொட்டுக்கொண்ட அவன் அதனைச்சாப்பிட்டுவிட்டு நேராக ரேஷன் கடைக்குப்போனான். ரேஷன் கடை வாயிலில் இப்போது பத்து பேருக்கு அதிகமாக வரிசையில் நின்றார்கள்..அவன் பதினோறாவது நபராக வரிசையில் நின்றான்.அவனுக்குப்பின்னால் யாரும் இல்லை. இனி வருவார்கள். துர்ரமாக பத்து பேருக்கு நின்று கொண்டு ஊர் கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் இந்த க்யூவில் இடமுண்டு எனபதைத் தெரிந்துகொண்டான். கால் வலியோ இல்லை எதுவோ ஒரு காரணம் சொல்லிக்கொண்டு அவர்கள் மரத்தடியில் நின்றார்கள்.மெட்ராஸ் அய்.வந்து இருப்பதாகவும் அதனால் தள்ளி நிற்பதாகவும் சொல்லிய இரு பெண்கள் அங்கே தெரிந்தார்கள். க்யூவில் அவர்கள் முறை வந்துவிட்டால் அவர்கள் டாண் என்று பில் போடுபவரின் அருகே வந்து நின்றுவிடுவார்களாம் இது விஷயம் அங்கு வரிசையில் இருந்தவர்கள் சன்னமாய்ப் பேசிக்கொண்டார்கள்.
க்யூவில் நிற்கின்றவர்களுக்கு ரிலிவர் என்றபடி வசதி எல்லாம் உண்டு. அவன் கேள்விப்பட்டான். தண்ணீர் மோட்டார் போட்டுவிட்டு வந்தேன் இல்லை அடுப்பில் குக்கர் வைத்து இருக்கிறது என்பார்கள்.பையன் வரிசையில் நிற்பான் அவனுடைய அப்பா வந்து ரிலிவ் செய்வார்.மாமியார் நிற்பாள் மருமக்ள் ரிலிவ் வந்து செய்வாள். பக்கத்துவீட்டுக்காரர் க்யூ வரிசையில் நிற்பார் பிறகு அவர் தூக்கிக்கொண்டு நிற்கும் அந்த ரேஷன் கார்டின் ஒரிஜினல் உரிமையாளர் வந்து அவரை ரிலிவ் செய்வார்.
‘கார்டு யாரு பேருல இருக்கோ அவுங்க மட்டும் வருணும் அப்பத்தான் வெரிபிகேஷன் பண்ணினதா கணக்கு ஆவும்’ ரேஷன் கடைக்காரர் ஓங்கிக்கத்திக்கொண்டிருந்தார்.
‘கார்டு எம் பையன் பேருல இருக்கு அவன் வரமுடியாது. தினம் முப்பது மைலு தாண்டி வேலைக்கு போயாவுணும் நான் அவன் ஆத்தா காமாட்சி .எம்பேரும் கார்டுல இருக்கு நானு என்ன செய்வேன்’ ஒரு கிழவி புலம்பிக்கொண்டிருந்தாள்.
‘எனக்கு மேல இருந்து என்னா உத்தரவோ அது தான். தெரிதா நீ சொல்றது எல்லாம் எனக்கு உத்தரவு இல்லே. கார்டு யாரு பேருல இருக்கோ அவுங்க வருணும்’
‘சாரு அவுனுக்கு லீவு கெடையாது எப்படி இங்க வ்ருவான்’
‘ஞாயித்துக்கிழமைக்கு நாங்க ரேஷன் கடக்கி வேலைக்கு வரம் உன் பையன இங்க வரச்சொல்லு பாட்டி , ஒண்ணும் பேசாத கெளம்பு கெளம்பு’ ரேஷன் கடைக்காரர் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தார்.
அவன் அந்த கிழவியையேபார்த்துக்கொண்டிருந்தான்.அந்தக்கிழவி கால்கடுக்க ஒரு மணி நேரமாவது க்யூவில் நின்று இருக்கலாம்.அவனுக்குப்பாவமாக இருந்தது.
அவனுக்கு அலுவலகத்தில், மேல் அதிகாரியாய்ப்பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஒருவர் ரேஷன் கார்டும் கையுமாக ரேஷன் கடைக்கு இப்போதுதான் வருகிறார்.
‘யாரு சந்திரனா’ அவனைக்கேட்டார்.
‘ஆமாம் சார் வணக்கம்’ அவன் பதில் சொன்னான்.
அவனுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்த புதிய மனிதரை ஏற இறங்க பார்த்தனர்.
‘நீங்க ரிடையர் ஆகி பத்து மாசமா’
‘ஆமாம் சார்’
‘ நீங்க நவம்பர் நா..மார்ச் செட்டில்மென்ட் எல்லாம் முடிஞ்சிதா பென்ஷன் ரெகுலராவருதா’
அவனுக்கு மகிழ்ச்சியா இருந்தது.இப்படி எல்லாம் யாரும் அவனை எங்கே கேட்டார்கள்.அவன் பென்ஷன் வாங்குவது யாருக்கும் பிடிக்கவில்லையோ என்னவோ.
‘ பென்ஷன் வருது. எனக்கு பணம் வந்ததை பேங்க்குல போட்டு இருக்கன்’
‘ இங்க பக்கத்துல ஐயொபி பேங்குலதான் நான் பென்ஷன் வாங்குறன்’
‘நான் கொஞ்சம் தள்ளி போயி இந்தியன் பேங்குல வாங்குறன்’
‘பசங்களுக்கு செய்யவேண்டியக்கடமை எல்லாம் முடிஞ்சி போச்சுதா’
அவனை யாரும் இப்படி அப்படி எல்லாம் கூட யாராவது கேட்டார்களா என்ன? பற்கள் அத்தனையும் வெளிக்காட்டினான்.’ சாரு முடிச்சூரு கிராமத்து அந்த ரெட்டை அய்யனாரு புண்யம் ரெண்டு பொண்ணுவுளயும் கட்டிக்குடுத்துப்புட்டன் நல்லா இருக்குதுங்க’
‘வேற என்னா வேணும்,உங்க சம்சாரம் எப்படி உடம்பு சொகமா சுகர் கிகர் உண்டுமா’
‘எனக்கு சுகர் எட்டிபாக்குதுன்னு டாக்டரு சொன்னாரு.மருந்து சாப்புடறன்.என் மனைவிக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. அப்ப அப்ப கொஞ்சம் முட்டிகாலு வலிம்பா அதான்’
‘ஏன் வாகிங்க் கீகிங்க் கூப்பிட்டு போறதுதானே,என்ன செய்யுறுறீரு வூட்டுல’ அந்த அதிகாரி பவ்யமாக விசாரித்தார்.அப்போதுதான் அவன் பார்த்தான்.அந்த அதிகாரி அவனுக்கு முன்பாக க்யூ வரிசையில் இப்போது தன்னைப்பொறுத்திக்கொண்டு விட்டார்..சுற்றும் முற்றும் பார்த்தான் அவரவர்கள் அவரவர்களின் வேலை எதனையோ கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த அதிகாரி போலவே இன்னும் ஓரிருவர் வரிசையில் நைசாக நுழைந்து தங்களை பத்திரமாகபொறுத்திக்கொண்டனர். வரிசையில் நின்ற சிலருக்கு இது விஷயம் எல்லாம் தெரியாமலும் இல்லை.மனம் பொறுக்க முடியாதவர்கள் சிலரின் முகங்கள் மட்டும் வீங்கி இருந்தன.
அந்த அதிகாரியின் ரேஷன் கார்டில் விலையில்லா மின் விசிறி, கிரைண்டர், மிக்சி வேட்டி சேலை.இவை வழங்கப்பட்டதற்கான முத்திரைகள் அழகாக இருந்தன. எட்டிப்பார்த்ததில் இதுகள் தெரிந்தன. ஒரு மாவட்டத்துக்கே அதிகாரி. சம்பளம் மாதம் ஒரு லட்சம் தாண்டியும் இருக்கலாம்.
‘பென்ஷன் அய்யாவுக்கு எவ்வளவு வருது’ தைர்யத்தை வரவழித்துக்கொண்டு அவரைகேட்டு விட்டான்.
‘இதுவரைக்கும் யாரும் இப்படிக்கேட்டதில்ல. இருந்தாலும் நீங்க கேட்டாச்சி.நான் சொல்லுணும் மாசம் அம்பது வருது அப்புறம்’ அதிகாரி அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
கால் வலிக்காரர்கள் கண் வலிக்காரர்கள் எல்லோரும் பில் போட்டு வாங்கிக்கொண்டார்கள் அல்லது கார்டு வெரிபிகேஷன் முடித்துக்கொண்டார்கள்.அந்த உயர் அதிகாரி உலக நடப்பு எல்லாம் அவனோடு பேசினார். அவனும் தன் பங்குக்கு உலக் செய்திகளை தெரிந்தவரை சொல்லி மகிழ்ந்துகொண்டான்.மலாலா நோபல்பரிசு வாங்கியது, மீனவர்கள் அய்ந்து பேருக்குத்தூக்குத்தண்டனை விதித்த சீலங்கா ராஜபக்சே அரசின் கொடூரம், சிவசேனைக்கு இப்போது என்ன ஆயிற்று மும்பையில், முல்லைப்பெரியாறு அணை உயர்த்திக்கட்டப்பட்ட விவகாரம்,பெங்கலூரு பார்ப்பன அக்கிரகாரத்து சிறைக்கூட வாஸ்து விஷயங்கள்,ஒன்று விடாமல் அவனும் அந்த அதிகாரியும் அலசிக்கொண்டிருந்தனர்.ரேஷன் கடையில் கூடியவர்கள் அவர்கள் இருவரின் சம்பாஷணையைக்கேட்டு கண்களை மூடி மூடி த்திறந்து அதிசயித்துப்போனார்கள். வரிசையில் நிற்காமல் பாதியில் அவர் நுழைந்தது எல்லாம் இனி யாரும் பேசிவிடத்தான் முடியுமா என்ன?
அந்த அதிகாரியின் கார்டு வெரிபிகேஷனும் முடிந்து,
‘அப்ப நான் கிளம்புகிறேன்’ என்று அவனிடம் விடை பெற்றுக்கொண்டார். அவன் நேற்று கடைக்கு வந்து திரும்பிப்போனான். இன்று வந்து க்யூவில் நின்று அந்த அதிகாரிக்கு வழி விட்டான். இப்போது பில் போடுபவர் முன்னால் நின்று வெரிபிகேர்ஷன் முடித்துக்கொண்டிருந்தான். இந்த மாத ரேஷன் சர்க்கரைக்கு அவன் பில் வாங்கிக்கொண்டான்.அவனுக்குப்பின்னால் ஒரு பத்து வயது பையன் நின்று கொண்டிருந்தான்.
‘ஏன் சாமான் வாங்கதானே வந்த தம்பி கையில பை ஒண்ணும் இல்ல’ அவனிடம் கேட்டுவைத்தான் அவன்.
‘சாமான் வாங்கியாச்சி இப்ப வெரிபிகேஷனுக்கு நிக்கறன்’ பையன் அவ்னுக்குப்பதில் சொன்னான்.
‘கார்டு யாருபேருல இருக்கோ அவுங்க வருணும் தெரியாதா தம்பி’ அவன் விஷயம் தெரிந்த மனிதனாய் அவனிட்ம் காட்டிக்கொண்டான்.
‘பில்ல்லு போட்டாச்சின்னா சாமானுவ வாங்கறத பாக்குணும்’ பில் போடுபவர் அவனுக்கு சட்டென்று பதில் சொன்னார்.அவன் ஒன்றும் பேசாமல் பில்லை சாமான் போடுபவரிடம் கொடுத்துவிட்டு கொண்டு வந்த பை ஒன்றின் காதுகளை அகட்டி சர்க்கரை எடை போடும் இயந்திரம் முன்னால் நின்று கொண்டு இருந்தான்.
‘சக்கரை மட்டுமா’
‘ஆமாம்’ அவன் எடை போடுபவருக்கு ப்பதில் சொன்னன்.
சர்க்கரை இரண்டு கிலோ எடை போட்டு அவன் பையில் அவர் கொட்ட அது அவன் முன்பாகவே நாலா பக்கமும் சிதறி ஓடியது. பையின் இரண்டுகாதுகளும் அவன் கையிருகக் கீழே பார்த்தான் மஞ்சள் பையின் அடிப்பகுதி முழுவதும் கிழிந்து விட்டிருந்தது. அதன் ஓட்டை வழி பாக்கி சர்க்கரையும் கீழே விழுந்தபடி இருந்தது.
‘சாமான வாங்குனா பட்டு பட்டுன்னு நவுறுணும்’ என்றார் அடுத்து லயுனில் இருந்த ஒரு முதியவர்.
அவன் அங்கயே நின்றான். கீழே குனிந்து கொட்டிக்கிடக்கும் சர்க்கரையை கைகளால் கூட்டிக் கூட்டி அள்ளினான்.அதை எடுத்துப்போவதற்குத்தான் பை சரியில்லயே ஆக ஒரு பக்கமாக ஓரம் செய்து விட்டு யாரும் பை ஏதும் தருவார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பத்து வயதுப்பையன்தான் ஒரு பிளாஸ்டிக் பையை த்தன் டிராயர் பையிலிருந்து எடுத்து அவனுக்குக்கொடுத்தான்
பில் போடுபவர் விடு விடு என்று எழுந்து வந்தார். அந்த ப்பையன் கொடுத்த பிளாஸ்டிக் பையினுள் அவன் தரையில் சிந்தவிட்ட அந்த சர்க்கரையை அள்ளிப்போட்டு அவன் கையில் கொடுத்து ;’ரேஷன் கார்டை பத்திரமா வூட்டுக்கு எடுத்துப்போங்க சாரு அது ரொம்ப முக்கியம்’ சொல்லி நிறுத்தினார்.
முல்லைபெரியாறு அணை உசந்து போனது மலாலா நோபல் வாங்குனது எல்லாம் தெரியுது ஆனா கையில இருக்கிற மஞ்ச பை அடி கிழிஞ்ஜி போனது மட்டும் அய்யாவுக்குத் தெரியல’ எடை போடுபவர் அவனைப்பார்த்துச் சொல்லிவிட்டு எடைபோட்டுக்கொண்டே இருந்தார்.அவ்ன் ‘வூட்டுக்குப்போனதும் பாரு அந்தப்பொட்டக்கழுதைக்கு இண்ணைக்கு பூசை வசமா இருக்கு’ அவன் முணு முணுத்துக்கொண்டே தன் வீடு நோக்கி நடக்கிறான்..
- தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்
- காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’
- பட்டிமன்றப் பயணம்
- பூசை
- ஆனந்த பவன் நாடகம்
- அந்திமப் பொழுது
- தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு
- வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை
- ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்
- நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- பண்டைய தமிழனின் கப்பல் கலை
- வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.
- ஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3]
- தேன்
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்
- சங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்
- நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்
- நிலையாமை
- பாலகுமாரசம்பவம்
- சாவடி