ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 16 of 22 in the series 16 நவம்பர் 2014

கடிதங்கள்
அ. செந்தில்குமார்

[ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.]

கடிதங்கள் எழுதுவதற்கு எளிமையானவை ‘நலம்’, ‘நலமறிய அவா’ என்று இரண்டே சொற்றொடர்களில் முடித்து விடலாம். அல்லது ‘அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம், நான் எழுதுவது என்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கடிதம்’ என்று சுவையாகத் தொடங்கி சுவையாக முடிக்கலாம். இவ்வாறு கடிதங்கள் எழுதுவதற்காக! இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

செய்யுள்களைப் போல செறிவான இலக்கணக் கட்டுகளோ, கவிதைகளைப் போன்ற இலக்கிய அந்தஸ்தோ, கட்டுரைகளைப் போல பரந்துபட்ட தளமோ, கதைகளைப் போல கற்பனை வளமோ கடிதங்களுக்குத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. அதற்காக கடிதங்கள் ஆறாம் விரல் போல அவசியமற்றதாகவும் அமையவில்லை. பின் கடிதங்களில் என்ன தான் இருக்கிறது? பிர்லா சிமெண்ட் விளம்பரங்களில் சொல்வது போல, கடிதங்களில் உயிர் இருக்கிறது. உண்மை இருக்கிறது. கடிதங்கள் பொதுவாக ஒருவர் மற்றொருவருக்கு எழுதும் தனிமொழி என்பதால் உயிரோட்டமும், உண்மையும் உள்ளதாக அமைகின்றது. கவிஞர் புவியரசு ஒரு ஆடல்மாதைப் பார்த்து சொல்வார் “கனத்த படிம ஆடை அணிகலன் நீக்கி, உன் உண்மை முகம் பார்க்க காத்திருக்கிறேன், ஒப்பனை அறையின் பின்வாயிலில்” என்று. அது போல், படைப்பு மொழிக்கே உரிய அணிகள், உவமை, உருவகம் என்று அலங்காரங்கள் இன்றி எளிமையாய், உண்மையாய் இருப்பவை கடிதங்கள். இந்த உயிரோட்டமும், உண்மையுமே கடிதங்களின் பலமும், பலவீனமுமாக அமைகின்றன.

இன்னொரு வகையில் சொன்னால், ஒரு கலை வடிவமாக இல்லாது காலத்தின் கட்டாயமாகத் தோன்றியவையே கடிதங்கள். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு அப்போது வாய்வழிச் செய்தியும், அந்தச் செய்தியை அனுப்புவதற்குத் தூதர்களுக்கும்; இவையே வரலாற்றுக் கால வழிகளாக அமைந்தன. நமக்குத் தெரிந்த வரலாற்று நாவல்களில், வரலாறு இருக்கின்றதோ இல்லையோ, கண்டிப்பாக நெடுஞ்சாலைகளில் கடிது செல்லும் ஒரு புரவி வீரனும், அவனது இடுப்பில் சொருகிய அரச முத்திரையிடப்பட்ட ஓலைச் சுருளும் கட்டாயம் இருக்கும். இந்த ஓலைச் சுருள்கள் மற்றும் திருமுகங்களின் வளர்ச்சியே பின்னாளில் கடிதமாக அமைந்தது.

சங்க கால இலக்கியங்களில் அகவிடுதூதாகவும், புறவிடுதூதாகவும் பொருண்மை இலக்கியங்களில் காணப்பட்டதே இன்று கடித இலக்கியமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அசோகவனத்தில்சிறைப்பட்டிருந்த சீதாபிராட்டியைக் கண்டு அனுமன் காட்டிய கணையாழியின் விளக்கவுரையே இன்றைய கடிதம் ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லின் செல்வன் விளக்குவதே, இன்றைய “Hi, Reached” என்கின்ற மின்னஞ்சல். காலம் மாறுகின்றது; வடிவம் மாறுகின்றது; இருந்தும் கடிதத்தின் செய்தி சொல்லும் பயன்பாடு மாறவில்லை.

அடுத்தபடியாக கடிதம் காட்டும் பாவனைகள் ; கடிதங்கள், இங்குள்ள செய்திகளை அங்கு கொண்டு சேர்க்கும் எளிமையான சாதனங்கள் என்று பார்த்தோம். ஆனால், கடிதங்களுக்குத்தான் எத்தனை பாவனைகள்.

உதாரணமாக, மாணவர் விடுதியிலிருந்து செல்லும் கடிதங்கள் “இந்தக் கடிதத்தை, சாதாரணமாகக் கடிதமாக பார்க்காமல் தந்தி போல பாவித்து உடன் பணம் அல்லது பதில்அனுப்புமாறு வேண்டுகிறேன்” என கடிதத்தை தந்தியாய் பாவனை.

இன்னொன்று இந்த மடலை சாதரண கடிதமாக நினைக்காமல், நாங்கள் நேரில் வந்து அழைத்ததாக கருதி, தாங்கள் தம்பதி சமேதராய் வந்து கெளரவிக்க வேண்டுமென கடிதத்தை Proxyயாக ஒரு பாவனை.

மற்றொன்று, கடிதத்தை அச்சுறுத்தும் ஆயுதம் அல்லது அட்சய பாத்திரமாக பாவனை. இந்த கடிதத்தை படித்த பத்து நாட்களுக்குள் எட்டு பேருக்கு நீங்கள் பிரதியெடுத்து அனுப்பி விட்டால்….. என கடிதத்தை அச்சுறுத்தும் ஆயுதமாகப் பிரயோகம். இப்படி கடிதத்திற்குத்தான், செய்தி சொல்வதைத் தவிர எத்தனை எத்தனை பாவனைகள்? இவற்றைப் பார்க்கும்போது கவிஞர் வைரமுத்து “மழையை யாரிங்கே மழையாய் பார்க்கிறார்கள்” என்றது போல, எனக்கும் “கடிதத்தை யாரிங்கே கடிதமாகப் பார்க்கிறார்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது.

நமது மனக்கண்ணில் கடிதம் என்றவுடன், 10 பைசா அஞ்சலட்டையும், நீலநிறக் கவரும், மஞ்சள் நிற உறையும், காக்கி நிற அலுவலக உறைகளும் தோன்றுகின்றன என்றால் அதன் பொருள் கடிதங்களின் பயன்பாடு. ஆனால் அதன் பொருள் கடிதம் என்பது இன்றோ, அல்லது உடன் நேற்றோ தோன்றிய வடிவம் என்பது அல்ல. கடிதம் என்பது தொன்று தொட்டு, எமது இலக்கியங்களில் திருமுகமாகவும், முடங்கலாகவும், சீட்டுக்கவியாகவும் வெளிப்பட்டுக் கொண்டே தான் வந்திருக்கிறது. எம்பெருமான் ஈசனே, அடியார்க்கு எழுதிய கடிதமாக பதினோராம் திருமுறையின் திருமுகப் பாசுரம் அமைந்து கடித வடிவின் தொன்மையையும், சிறப்பையும் காட்டுகின்றது.

திருவாரல்வாய்மொழியின் சோமசுந்தர ஈசுவரர், தமது அடியாராகிய பாணபட்டருக்கு உதவி செய்யும் பொருட்டு மற்றொரு அடியாராகிய அரசன் சேரமான் பெருமான் நாயனாருக்கு எழுதி அனுப்புவதாக (இறைவன் கைகளில் இருந்து) அமைந்ததிருமுகப் பாசுரமே முதல் கடித இலக்கியம் எனலாம்.

“மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு அன்மை” எனத் தொடங்கும் பாடல் “பண்பால் யாழ்வயில் பாணபத்திரன், தன்போல் என்பால் அன்பன்” என்று கூறி அவருக்குப் போதிய உதவிகள் செய்ய சேரமான் நாயனாருக்கு ஆணையிடுகின்றார்.

மற்றொரு கடிதத்தில் “அடியார்க்கு எளியான், சிற்றம்பலத்தான் , கொற்றங்குடியாருக்கு எழுதிய கைச்சீட்டு,”பெத்தான் சாம்பனுக்கு பேதமற முத்தி கொடுக்க முறை” என திருச்சிதம்பரம் கோவிலுக்கு, விறகுச்சுமை கொணரும் ஒரு எளியோனுக்கு முக்தி கிட்ட ஆணையிட்டு கைச்சீட்டு அனுப்புகின்றார். இந்த இரண்டுகடிதங்களுமே விளித்தல், வினவுதல், உட்பொருள் உரைத்தல்,நலம் பகர்தல், தன்னை உணர்த்துதல் என்று கடிதத்தின் அத்துணைகூறுகளையும் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக கடிதங்களும், காதலும் :

ஒரு காலகட்டத்தில் கடிதங்களால் காதல் வளர்ந்ததா, இல்லை காதலால் கடிதங்கள் வளர்ந்தனவா என்று உணர முடியாத சூழல். தூது சொல்ல ஒரு தோழி இல்லையென்று துயர் கொண்ட தலைவிகளுக்கும், ஓடும் மேகங்களிடம் கேட்கச் சொல்லும் தலைவர்களுக்கும் கிடைத்த வரம். சங்கப் பாடல்களில் வரும் விறலி விடு தூது என்பதைப் போல கடிதங்கள் மனம் விடு தூது சொல்ல மறந்ததை, நேரில் சொல்ல முடியாததை, சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டதை, தான் நேசிப்பவருக்குத் தெரியப்படுத்தக் கிடைத்த அற்புதமான சாதனம்.

இதில் மனம் மகிழ்ந்து தான் காதல் மனம் கொண்ட கவிஞர்கள் “தபால்காரனும் தெய்வமாகலாம்” என கடிதத்தைக் கொண்டு வருவோரை, கடவுளுக்குச் சமமாக உயர்த்தி விடுகின்றார்கள். கவிஞர். மு. மேத்தா அவர்களின் கவிதைத் தொகுப்பான “நடந்த நாடகங்களில்” பரணின் மீது கிடைத்த பழைய கடிதம் ஒன்றைக் கண்டு பரவசப்பட்டு, கடிதம் எழுதப்பட்ட அ ந்த கால கட்டத்திற்கே சென்று, கடிதத்தை தானிய மணிகளின் இடையே கண்ட தங்க மணியாய் கருதி, கடிதத்தை நேசித்து, பூசித்து தவமிருப்பார். காலஞ்சென்ற வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள், காதல் கடிதங்கள் என்ற பெயரில், ஒரு அருமையான கடிதத் தொகுப்பையே இரு காதலர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக் கொள்வது போல அமைத்திருந்தார்.

வளர்ந்து வரும் கவிஞர்களாகிய அ.வெண்ணிலா, ஆர். முருகேஷ் ஆகிய இரு கவிஞர்களுக்கு இலக்கியத்தின் மூலம் பரிச்சயம் ஏற்பட்டு, நட்பு வளர்கின்றது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மலர்வதற்கு கடிதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. இந்தக் கடிதங்கள் மிகவும் பிரத்தியேகமானவை என்ற போதும், கவிஞரிருவரும் தங்கள் திருமணத்திற்குப் பின் காதல் வளர்த்த கடிதங்கள் என்றும், இதுவும் ஓர் இலக்கிய முயற்சி என்றும் குறிப்பிட்டு புத்தகமாக வெளியிட்டு உள்ளார்கள். இப்புத்தகம்,
“கல்யாண்ஜி” என்கிற வண்ணதாசனின் தவிப்பான முன்னுரையுடன்; தவிப்பு ஏனென்றால் அவர் “உள்வீட்டு செய்திகளை ஊரம்பலத்து உரைக்கலாமா, இந்தக் காதல் கடிதங்களை அச்சுக்குக் கொண்டு வரலாமா, இவை இருவருக்கே உரித்தானது அல்லவா?” என்ற வினாவுடன் முன்னுரையளித்திருக்கின்றார்.

அடுத்ததாக, “கடிதமல்லாத கடிதங்கள்”. நமது அரசியலின் எத்தனையோ இசங்களைப் போல இது என்ன குழப்பம் என நினைக்க வேண்டாம் ;

இதுவரை பார்த்த கடிதங்கள் செய்தியை, கட்டளையை, ஆசைகளை தெரிவிக்கும் சாதனங்கள். இப்போது நாம் பார்க்கப் போவது எடுப்பார் கைப்பிள்ளையாக அமைந்த கடிதவடிவம். எடுப்பார் கைப்பிள்ளை என்றதும் ஏளனமாக எண்ணி விட வேண்டாம். எவ்வாறு நீர், எளிதாக தனது வடிவத்தைப் பாத்திரத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக் கொள்கின்றதோ, அதைப் போலவே கடிதமும்.பேச்சுத் தமிழ் கவிதை வடிவில் இருந்தால், கடிதங்களும் சீட்டுக் கவியாக அமையும். பேச்சுத் தமிழ் இலக்கிய வடிவில் இருந்தால், கடிதங்கள் பாசுரங்களாக அமையும். உரைநடை வடிவில் இருந்தால்,கடிதம் பேச்சுத் தமிழாகவே இருக்கும்.

இந்த எளிமை கருதியே, பல இலக்கிய ஆர்வலர்கள், முன்னோடிகள் பல்வேறு சோதனை முயற்சிகளை கடிதங்களில்கையாண்டு இருக்கிறார்கள். தனித்தமிழ் வளர்த்த மறைமலையடிகள்,’கோகிலாவிற்கு கடிதங்கள்’ என்ற பெயரில் ஒரு புதினத்தையும், ‘மறைமலையடிகள் கடிதங்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை வடிவங்களையும் (அன்பு பழம் நீ) தமிழ் உலகத்திற்கு அளித்திருக்கின்றார்.

ஒரு வழிப்பயணம் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும், என்பதனை சிவகனலி மு.சுப்பையா அவர்கள் ‘ஸ்ரீகாசிவழித் துணை விளக்கம்’ என்ற நூலில் கடித வடிவில் வெளிப்படுத்தி உள்ளார்.

திருக்குறள் நெறிகளை தமது அனைத்து படைப்புகளின் வாயிலாகவும், பரப்பிய மு. வ அவர்கள் தங்கைக்கு, தம்பிக்கு, அன்னைக்கு, நண்பர்க்கு என நான்கு கடிதத் தொகுப்புகளை, குறள் நெறிகளையும், இல்வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் பற்றிய அறிவுரைகளைக் கூற பயன்படுத்தியுள்ளார்.

சமகால எழுத்தாளர் சுஜாதா அவர்கள் “இரு கடிதங்கள்” என்ற தலைப்பில் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் வேதியியல் பேராசிரியையான ஒரு விதவைத் தாய்க்கும், மணவாழ்வில் வெறுப்படைந்த ஒரு மகளுக்கும் இடையே எழுதப்பட்ட இரு கடிதங்கள் வழியாக ஒரு நல்ல சிறுகதையைப் படைத்திருக்கிறார்.

கடிதங்கள் இலக்கு நோக்கிய ஏவுகணைகளைப் போல ஒருவரையோ, ஒரு குறிப்பிட்ட சாராரையோ அழைத்து, தமது கருத்துக்களைச் சொல்லும் போது நல்ல பயன் தருகின்றன என்பதனால் இந்த உத்தி எழுத்தாளர்களால் கையாளப்பட்டது.

அடுத்தபடியாக இரு பெரிய தலைவர்கள் அல்லது இலக்கியவாதிகளின் இடையே எழுதப்படும் கடிதங்கள். அவற்றுள் சில கடிதங்கள் பொது நோக்கிலேயே எழுதப்பட்டவை. ஆகவே அவை, வெளியிடப்படும் போது அவை பொதுவானவையாகவே அமைந்தன. ஜவகர்லால் நேரு அவர்கள் தனது மகள் இந்திரா பிரியதர்சினி பள்ளிக்கு செல்ல இயலவில்லை என்ற ஆதங்கத்தில் அவருக்கு எழுதிய கடிதங்களே “Discovery of India” என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. தத்துவ அறிஞர் லியோ டால்ஸ்டாய்க்கும், மோகன் தாஸ் காந்தி என்றும் இளைஞருக்கும் இடையே நடைபெற்ற கடிதங்கள், கொள்கை தீபங்களாக விளங்குகின்றன.

இவை தவிர, இரண்டு இலக்கியவாதிகளிடையே எழுதப்பட்ட கடிதங்கள், பிற்காலத்தில் பிரசுரிக்கப்படும்போது, அவை அவ்வாறு அச்சிடப்படலாமா என்ற கேள்வியைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவை இலக்கிய உலகிற்கு ஒரு காலக் கண்ணாடியாக அமைகின்றன.

பாரதி அறிஞர் ரா. அ. பத்மநாபன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருக்கும் “பாரதியின் கடிதங்கள்” என்ற அருமையான புத்தகத்தில் பாரதியார், பரலி சு. நெல்லையப்பப்பிள்ளைக்கும்,எட்டயபுரம் ஜமீன்தாருக்கும் எழுதிய கடிதங்கள் ஒரு சுதந்திரப் போராட்ட மகாகவியின் வாழ்வின் சில பக்கங்களை காட்டும்
கண்ணாடியாக உள்ளது. அதே போல் அரசியலுக்கும்,கடிதங்களுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, தினசரி காலையில் முரசொலி மூலமாக ‘எனது அருமை உடன்பிறப்பே’ என தனது கரகரத்த குரலை தனது தொண்டர்களின் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி; அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், “இந்த நாற்பதாண்டு கால அரசியல் வாழ்வு எனது கடிதங்களைப் படித்தாலே தெரியும் ” என கடிதங்களின் மூலம் அரசியல் அரியணையைப் பிடித்த கலைஞர் ஒரு புறம். தாம் எழுதிய கடிதங்களை, தமது மன எண்ணங்களின், எழுச்சிகளின், வேட்கைகளின் கோபதாபங்களின் வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி, அவற்றை அனுப்பாமல் விட்ட வெற்றிகரமான இன்னொரு அரசியல்வாதியாக வின்ஸ்டன் சர்ச்சில் உலகஉருண்டையின் மறுபுறம்.

இன்னமும் பேசுவதற்கு எவ்வளவோ இருந்தபோதிலும், நேர அவகாசம் கருதி விடைபெறுகிறேன்.

கடிதங்களை ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக பயன்படுத்தி, மாற்றங்களுக்கும், வளர்ச்சிளுக்கும் காரணியாக அமைக்க முடியும் எனக் கூறி அமைகிறேன். வணக்கம் !

asenth@rediffmail.com

(நவம்பர் 11, 2006 அன்று நடந்த ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘அபுனைவு’க் கூட்டத்தில் பேசியது)

[தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு:mu.ramanathan@gmail.com]

Series Navigationதேன்சங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *