சாவடி

This entry is part 22 of 22 in the series 16 நவம்பர் 2014

2008082108kq2alsjn02

காட்சி 1

காலம் காலை களம் வெளியே

மேடை இருளில். பின்னணியில் திரை ஒளிர்கிறது. முதல் உலக யுத்தக் காட்சிகள். போர்க்காலச் சென்னை (1914) காட்சிகள் நகர்கின்றன.

வர்ணனையாளர் குரல் :

மனித குல வரலாற்றில் உலக நாடுகள் இரண்டு தொகுதிகளாக அணிவகுத்துப் போர் புரிந்த முதலாவது உலக யுத்த காலத்தில் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. அப்போது பாரதம், பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தில் இருந்த அடிமை நாடு . இங்கிருந்தும் ஆயிரக் கணக்கான ஏழை எளியவர்கள் யுத்தத்துக்குப் போனார்கள். போருக்குப் போனால் காசு கிடைக்கும், பட்டினி போகும் என்ற எதிர்பார்ப்போடு போர்முனையில் பலியாடுகளாகப் போய் நின்றார்கள்.. யாருக்கும் யாருக்கும் சண்டை, ஏன் வந்தது என்பது பற்றிய குறைந்த பட்ச அறிவும். எங்கே போகிறோம், எப்போது திரும்பலாம், திரும்ப முடியுமா, என்ன என்ன அபாயங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்ற கேள்விகளுக்குப் பதிலும் இவர்கள் வசம் இல்லை.

திரையில் -செப்டம்பர் 22, 1914 செவ்வாய்க் கிழமை. காட்சி ஜெர்மன் போர்க் கப்பல் எம்டன்.

வர்ணனையாளர் குரல் தொடர்கிறது :

Old Chennai - 1செப்டம்பர் 22, 1914 – இன்றைக்கு நூறு வருடம் முந்திய மறக்க முடியாத செவ்வாய்க் கிழமை அது. போரின் நேரடி பாதிப்பை, பயத்தை மதராஸ் ராஜதானியில், அதாவது தமிழ்நாட்டில் உணர வைத்த ராத்திரி அது. அந்த இரவில் தான் ஜெர்மானியப் போர்க் கப்பலான எம்டன் வங்காள விரிகுடா மாகடலில் முன்னேறி வந்து சென்னைத் துறைமுகத்தைக் குண்டு வீசித் தாக்கியது.

திரையில் நகரும் காட்சிகள் :
எம்டன் தாக்குதல் படம். பர்மாஷெல் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் சேகரித்துத் துறைமுகத்தில் வைத்திருந்த ராட்சத பீப்பாய்கள் வெடித்துச் சிதறி எரியும் படங்கள். சென்னைத் தெருக்களில் விழுந்த குண்டுகளின் படங்கள். சேதமான கட்டிட முகப்பு. (அணிவகுப்பு இசை, நீண்ட குழலொலி, பாரா உஷார் குரல்கள், குண்டுகள் வெடித்துச் சிதறும் ஒலி, கடல் ஒலி).

சென்னை மாநகரை விட்டு உயிருக்குப் பயந்து பல நகர வாசிகள் தற்காலிகமாக பக்கத்து ஊர்களுக்கு பாதுகாப்புக்காகக் குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார்கள். இன்னொரு தாக்குதல் நடந்தால் திரும்பி வரச் சென்னை ந்கரம் இருக்காது என்று அனைவர் நெஞ்சிலும் கனமாகப் பயம் படர்ந்து கவிந்தது. என்றாலும் நகரம் இயங்கிக் கொண்டு தான் இருந்தது..

காட்சி மாற்றம். 1914-ல் கொத்தவால் சாவடி. காலை நேரம். சில தலைச்சுமை கூலிகள் தலையில் பெரிய காய்கறிக் கூடைகளோடு நடந்து வருகிறார்கள். இரட்டை மாட்டு வண்டி ஒன்று மேடை ஓரமாக, வண்டிக் கூடு மட்டும் தெரிய நிற்கிறது. வண்டி மாடுகளின் ஒலி கேட்கிறது.

காட்சி நிலைத்து மேடை ஒளிர திரைக் காட்சி நகலெடுத்தாற் போல் மேடையில் விரிகிறது. : சந்தை ஒலிகள்.

கூலி 1: ஒரே சென்ராயா … ரம்மய்யா..

கூலி 2: (குரல் மட்டும் திரை மறைவில் இருந்து) வந்தாச்சுய்யா

கூலி 1: அத்தயே சொல்லிக்கினு இரு.. அடுத்த குண்டு போட்டுடுவான் .

கூலி 2: வக்காளி, வய்க்கல் அவனா போடுவான்?

கூலி 1: ஆருக்குடா?

கூலி 2: ஆருக்கா? மாட்டுக்கு’பா.. வாயில்லாத சீவன்.. நாம் தான் எதமா பதமா எரை எடுத்து வைக்கணும்

கூலி 1: இன்னாது? மாட்டுக்கு ஊட்டி விட்டுக்கினு கீறேயா? ..

கூலி 2 : அக்காங்…. லாலா கடயிலொ நீவு அலுவா சேசி சென்ன இண்டி அம்மாயிகு ஊட்றே பாரு.. அத்தப் போல

கூலி 1: த்தா.. நான் என் தொடுப்புக்கு ஊட்டறதை நீ எப்படா பாத்தே?

கூலி 2: இன்னாத்துக்குப் பாக்கணும்? அவ தான் என்னை மடியிலே போட்டுக்கினு ஊட்டக் கொள்ள சொன்னாளே..

கூலி 1: அடீங்கோத்…

மாடு அழைக்கும் சத்தத்தில் அவன் குரல் அமுங்கிப் போகிறது. இன்னும் இரண்டு கூலிகள் ஆளுக்கு ஒரு பெரிய பிரப்பங்கூடையோடு அவசரமாக வருகிறார்கள்

கூலி 1 : இன்னாடா கண்றாவி..ஊரு முச்சூடும் ரயிலைப் பிடி, பஸ்ஸைப் பிடி, வண்டியைக் கட்டு, நடராஜா சர்வீஸ்னு ஜூட் விட்டுக்கினு கீறான்…. நாம இன்னாடான்னா… வெங்காய மூட்டை தூக்கிக்கினு.. மாட்டுக்கு வெக்கல் போட்டுக்கினு.. செட்டியார் கடையிலே கடனுக்கு பீடி வாங்கி வலிச்சிக்கினு.. படா பேஜார்’பா

கூலி 3 : அவுனய்யா.. வைக்கலு.. மாடூ.. நீவு.. நாவு.. இக்கடகெ கெடந்து சாகணும்னு .. தலகா பைன சரிகா ரா லேதய்யா

கூலி 1 : வூட்டுலே ஒரே அலப்பாரை.. இப்பவே கிளம்பறியா இல்லே உன்னிய வுட்டுட்டு புள்ளைங்களோட போவட்டுமாங்கறா..

கூலி 3 : நீவு ஏமி செப்பிந்தி?

கூலி 1 : இன்னாத்த சொல்ல? அவ சொல்றாப்பல கஞ்சீவரம் போய் மாமியார் தங்காச்சி வீட்டுலே ஒண்டிக்க வேண்டியதுதான்.. கிளம்புங்கய்யா.. உசிரு முக்கியமா.. மத்தது முக்கியமா

கூலி 2 : நான் எங்கேயும் போறாப்பல இல்லே.. எம்டனா, எமன் வந்தாக்கூட மயிரே போச்சு

கூலி 4 : (நடந்தபடி) ஒரே.. ஒரே.. ஜருகு.. ஜருகு.. நட்ட நடுவிலே நொட்டிக்கிட்டு நின்னா போறவன் வர்றவன் என்னா செய்யிறது .. தொப்ப சூடு.. புள்ளாரு கணக்கா

கூலி 1 : புள்ளார் ஏண்டா கொத்தவால் சாவடியிலே மூட்டை தூக்கி கயிட்டப்படறாரு.. நமக்கு சாமி நாம தாண்டா..

கூலி 4 : (கூலி 1-இடம்) ஒரே.. மேக்கத்தி மூலையிலே வண்ணாரப்பேட்டையார் கடை போடற இடம் காலியாத்தானே கெடக்கு?

கூலி 1 : டேய் பன்னாடை.. காய் வாங்க வர்ற சனத்தையே பாதி காணோம்.. எல்லாக் கூட்டமும் எயும்பூர் ஸ்டேஷன்லே பொட்டி சட்டியோட நிக்குது.. இங்கே கடை போட இன்னா கஷ்டம்?

கூலி 4 : (கூலி 3-இடம்) நேரே மேக்கு மூலைக்குப் போயிடு.. ஏம்’பா..அந்த ஊமையன் ….அம்பேல் ஆயிட்டானா? .எம் பின்னாடியே தானே வந்துக்கினுருந்தான் கஸ்மாலம்..

கூலி 3 : மெள்ளமா வந்துக்கினு கீறாண்டா..மொதக்கா வரான்..பட்டணத்தை பாக்கத் தாவலை..

கூலி 4 : வேடிக்கை பாக்க நல்லா நேரம் பாத்தாண்டா .. . அவனெ வுடு.. அந்தப் பொண்ணு எங்கேடா பூடுச்சு, அவன் பொஞ்சாதி?

கூலி 3 : அவன் கூடத்தான் வருது…புத்ஸா கண்ணாலம் கட்டிக்கின் சோடி’பா (கூலி 1-இடம்) அண்ணே ஒரு ஊமையன் . கூடவே பெப்பெப்பேன்னு முளிச்சுக்கினு ஒரு பொண்ணு… இந்தாண்ட வந்தா..

கூலி 1 : பொண்ணா .. நானாச்சு அனுப்பி வைக்கறேன் பத்திரமா.. நீ போய் மூட்டை எறக்கு.. ஆமா, எந்த ஊருடா இதுங்க?

கூலி 3 : எவரிகி ஏமி தெல்சு? சோடி பட்டணத்துக்குப் புச்சு

கூலி 1: நட்டு களண்ட கேசாடா? இவன் பட்டணத்துக்கு வர நேரம் காலம் இப்பத்தானா கெடச்சது..

கூலி 4 : எம்டன் குண்டு போட்டா கண்ணாலம் நிக்குமாண்ணே?

கூலி 1 : பகல்லே போட்டா அது நிக்குமோ என்னமோ நடு ராத்திரியிலே போட்டா மத்த எல்லாம் நின்னு போகும்..ஒரே சென்ராயா…. இன்னமாடா மாட்டைக் கட்டறே

கூலி 2 : (குரல்) முட்ட வருதுய்யா முட்டாக்கூ மாடு.. சே..கால்லே சாணி

கூலி 3 (குரல்): கூடையைப் பிடி.. கவுத்துடலாம்.. அடீங்க என்ன வாடைடா வெண்டிக்கா..

கூலி 4(குரல்) : கிராமத்து சரக்கு ஆச்சே.. நிமிந்து நீட்டி திம்முனு நிக்குது பாரு

கூலி 1: நிக்கும்டா நிக்கும்.. .ஆர்பர்லே ஜெர்மன்காரன் சுகூரா நொளஞ்சு அடுத்த குண்டு போடட்டும்.. பொறவு பாரு..

கூலி 4 : உனுக்கு எம்டன் பயம் தலைக்கேறி நிக்குதுடா பேமானி ..சாராய ஊரல்லே தலையையே வுட்டாலும் தீராது போ

பெண் சிரிப்பு சத்தம். கையை கண்ணுக்கு மேலே ஷேடு கட்டிக் கொண்டு மேடையின் இடது பக்கம் பார்க்கிறார் கூலி 1

பெண்: (குரல் மட்டும் முன்னால் வருகிறது) முதல்லே விக்கற காசு காளியாத்தா கோவில்லே..சரி பாதி.. ஒத்த ரூபாயாவது..
(மேடையில் நுழைகிறாள்)
பெண்: எங்கே போனாங்க இந்த ஆளுங்க..

கூலி 1: மேக்காலே திரும்பி நேரா போம்மா.. வெண்டிக்கா தானே.. மேக்குன்னா வடக்குலே திரும்பறியே.. அங்கே மாடு தான் கட்டி வச்சிருக்க்கும்..டேய் சென்ராயா..வா போகலாம்.. இன்னாடா மாட்டை முட்டிட்டியா..சென்ராயா..டேய்..
——————————————–

காட்சி -2

காலம் காலை களம் உள்ளே

அய்யங்கார் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறார். கையில் 1914 செப்டம்பர் 24 ஹிந்து பத்திரிகை. அதில் எம்டன் குண்டு விழுந்தது பற்றிய படங்கள்.

அய்யங்கார் மனைவி ரங்கநாயகி (நாயகி) காப்பித் தம்ளரும் தலைகுளித்து வேடு கட்டிய கோலமுமாக வருகிறாள். (அய்யங்கார் வயது 55; நாயகி :50)

நாயகி : இப்படி டோலாயா டோலாயான்னு ஆடிண்டு இருந்தா காப்பியை எங்கே வைக்கறதாம்?

அய்யங்கார் : மேஜை எதுக்குப் போட்டு வச்சிருக்காம்?

நாயகி : அது கேஸ் கட்டு அடுக்கி வைக்கன்னு நினைச்சுண்டிருந்தேன்

அய்யங்கார் : நாயகி, நானும் அதுக்காகத் தான் தச்சனைக் கூப்பிட்டேன்.. எழைச்சு வைடாப்பா.. கட்சிக்காரா ஏகத்துக்கு வந்து நிக்கப் போறா.. அவா கண்ணுலே படற மாதிரி நடு செண்டர்லே போட்டு வைக்கணும்னு ஏற்பாடு..காசு கொட்டு கொட்டுன்னு கொட்டி…

நாயகி : காப்பி கொட்டிடுத்துன்னா வேறே கேக்காதீங்கோ.. டபராவை நேரா பிடியுங்கோ..இன்னிமே காப்பி கேட்டா, டிகாஷன், காப்பிப்பொடி இல்லே சொல்லிட்டேன்.

அய்யங்கார்: உனக்கு ஒரு காப்பியே ஜாஸ்தின்னு பொடி வச்சு பேசறியோடி (பாட்டு)..சித்தாதே பேசாதே செல்லப் பெண்டாட்டி நீஇஇஇ

(நாயகி அவருக்கு அழகு காட்டி விட்டு ஊஞ்சல் பக்கத்தில் வரும்போது அய்யங்கார் பக்கம் டபரா டம்ளரை ஜாக்கிரதையாக வைக்கிறாள். பின்னே போகிற ஊஞ்சலோடு கூடவே நகர்ந்து அது தரைக்கு இருபது டிகிரி சாய்வாக இருக்க, வழிமறித்து நிறுத்துகிறாள். இருவரும் மேடையைப் பார்த்தபடி. அய்யங்கார் பேப்பரை விரித்தபடி ஊஞ்சலில் வைத்து விட்டுக் காப்பி குடிக்க ஆரம்பிக்கிறார்)

நாயகி : நானும் நமக்கு கல்யாணம் ஆன இந்த முப்பது வருஷத்துலே இருபது ஜாகை மாத்திட்டேன். பால்காரன் டாண்ணு பாக்கி கேட்டு வந்துடறான். தயிர்க்காரி தடதடன்னு வந்து புளிச்ச தயிரைத் தலையிலே கட்டிட்டுப் போயிடறா.

அய்யங்கார்: நல்லதா போச்சு.. தலைமுடி நீளமா வளரும்.. சீயக்கா செலவு மிச்சம். என்ன, எறும்பு வராம பாத்துக்கணும்..வாச நறுங்குழல் ஆய்ச்சியர் போல

நாயகி: இந்த எகத்தாளத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே. யார்யாரோ வரா, இந்தக் கட்சிக் காரன்னு ஒரு கூட்டம் வக்கீல் ஆபீஸ்லே எல்லாம் நிக்குமே. அவாதான் அடிக்கடி வரமாட்டேங்கிறா..

அய்யங்கார்: நேத்து தான் போஸ்ட் கார்ட் வந்துது.. லண்டன்லேருந்து பந்து மித்ர விரோதிகள் சகிதம் புறப்பட்டு வந்துண்டிருக்காளாம்.. அது போகட்டும் .. இந்த எம்டன் பாத்தியோ?

நாயகி : கட்சிக்காரனா கடன்காரனா?

அய்யங்கார் : ஜெர்மன்காரன்.. தோ.. இங்கே பாரு

(காப்பி டம்ளரைப் பிடித்தபடி மறு கையால் பத்திரிகையைப் பிரித்துக் காட்டுகிறார். ஊஞ்சலோடு முன்னும் பின்னும் அசையும் நாயகி)

நாயகி : இவனா? கொசகொசன்னு எருமை மாடு கன்னு போட்டாப்பல இருக்கு.

அய்யங்கார் : நாசமாப் போச்சு.. அது கோடவுன். சாளேஸ்வரக் கண்ணாடி போடணும் உனக்கும்..

யாரோ படி ஏறி வந்து ‘அய்யங்கார் சாமிகளே’ என்று அழைக்கும் சத்தம். வீட்டு சொந்தக்காரர் சர்க்கரைச் செட்டியார் வாசலில். நாயகி வாசலைப் பார்க்கிறாள்.

நாயகி : நம்மாத்து சொந்தக்காரர் சக்கரை செட்டியார் பராக் பராக்.. வாடகை கொடுத்தாச்சோனா இந்த மாசத்துக்கு?

அய்யங்கார் : எல்லாம் ஆச்சு.. (வந்தவரிடம்) வாங்கோ வாங்கோ.. காப்பி சாப்பிடறேளா? ஏ ஒன் ப்ளாண்டேஷன் காப்பிக் கொட்டை.. ஆத்துலேயே அறைச்சது.. நாயகி, நம்ம செட்டியாருக்கு..

செட்டியார் (உள்ளே வந்து) : இருக்கட்டும்.. அம்மா …சக்கரை தூக்கலா..

(நாயகி உள்ளே போகிறாள்)

அய்யங்கார்: சொல்லுங்கோ

செட்டியார் : இப்பத்தானே சொன்னேன்.. சக்கரை தூக்கலா

அய்யங்கார் : நீங்களே சக்கரைச் செட்டியார். உங்களைத் தூக்கி காப்பியிலே போட்டு… ஆமா உமக்கு வியாதியிலே சக்கரை இல்லியே..

செட்டியார் : வக்கீல் சார், ஹாஸ்யமா, பேஷ்.. ஒரு பத்து நாள் செல்லட்டும். உசிரோட இருக்க எம்டன் பய விட்டா ஆர அமர சிரிக்கறேன். இப்ப கொஞ்சம் வருத்தத்தோடு ஒண்ணு சொல்ல உத்தரவாகணும்

அய்யங்கார் : எம்டன் தானே.. எனக்கும் வருத்தம் தான்.. இங்கிலீஷ்காரனுக்கும் ஜெர்மன்காரனுக்கும் லடாய்னா எதுக்குங்காணும் நம்மாத்துக் கொல்லையிலே குண்டு போடணும்.?

செட்டியார் எம்டன் எக்கேடும் கெடட்டும்.. நாம உடனே கெளம்பணும்

அய்யங்கார் : பேஷா ஜெர்மனி போய்ட்டு வாங்கோ. அது சரி, .நாமன்னா?

செட்டியார்: நான், நீங்க … அடுத்த வீட்டு ராவ்ஜி, கோடி வீட்டு சலசலனம் அய்யர்..

அய்யங்கார்: அவர் ஸ்தலசயனம் அய்யங்கார்.. உக்காந்த எடத்துலே தூங்கிடுவார்.. பொருத்தமான பேரு..

செட்டியார்? நான் கேட்டானா சாமி? தூங்கினவனும் முளிச்சுக்கிட்டு சொத்து பத்தெல்லாம் வந்த விலைக்கு வித்துட்டு உசிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு ஓடற் நேரம் காணும் இது…

அய்யங்கார் : எங்கே ஓடறது?

செட்டியார்: கெட்டுது குடி. (ஊஞ்சலில் பத்திரிகையைக் காட்டி) அது இன்னிக்கு பேப்பர்தானே? வக்கீலய்யா எந்த லோகத்திலே இருக்காப்பலே . புறப்படுங்க சாமி..

அய்யங்கார் : அடடா நானும் இவளும் கூட கிளம்பிடுவோம்.. கோர்ட் விட மாட்டேங்கறதே.. அது விட்டாலும் உங்காத்து ஊஞ்சல்.. போகாதே போகாதேன்னு காலைப் பிடிச்சு இழுக்கறது.. என்னமா ஒரு ஆட்டம்..

செட்டியார் :ஆட்டமெல்லாம் சரிதான்….வீட்டையே வித்துடலாம்னு இருக்கேன்.. ஊஞ்சலை வேணும்னா எடுத்துக்கும்.. சல்லிசா தரேன்…

அய்யங்கார் (கொஞ்சம் அதிர்ச்சியோடு) : எதுக்கு? பீப்பிள்ஸ் பார்க்லே கட்டி ஆடவா? எனக்கு ஏது ஓய் போக்கிடம்? வீட்டை வித்துட்டா, நான் எங்கே போவேன்?

செட்டியார்: நீங்க இந்த வீட்டுக்கு எப்போ வந்தீங்க?

அய்யங்கார் : போன மாசம்.. மறந்து போச்சா செட்டியார்வாள்?

செட்டியார் : மறந்தாத்தான் நல்லா இருக்குமே.. கிடக்கு.. வாரக்குள்ள என் கிட்டே நீங்க யார்னு முழுசா சொன்னீங்களா?

அய்யங்கார் : இல்லாமலா வள்ளிசா ஐம்பது ரூபாய் மாசம் குடக்கூலி மூணு மாசம் அட்வான்ஸ்னு வாங்கிண்டு சாவி கொடுத்தீர்?

செட்டியார் : நீங்க யாருன்னு தெரியும். (உள்ளே – அய்யங்கார் மனைவியை சைகையால் குறிப்பிட்டு) அவங்க?

அய்யங்கார் : எம் பொண்டாட்டி. ஊர் முழுக்க தண்டோரா போடணுமா?

செட்டியார் : நீங்க ஐயர்சாமி.. நான் தெலுங்கு செட்டி… ஒரு விதத்துலே உம்ம விட உசந்தவன்.. அது கிடக்கட்டும்.. அவங்க.. உங்க சம்சாரம்?

அய்யங்கார் : ஆமய்யா ஆமா.. அவ ஆடற குலம். நான் அக்னி ஹோத்ரி.. ஆத்துலே அக்னியை அணையாம நமஸ்காரம் பண்ற பரம்பரை. அக்னியும், ஆஹுதியுமா அணைச்சுண்டுட்டோம்.. அக்னி யாரோ ஆஹுதி யாரோ ..யாருக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்?…

செட்டியார் : சேர்ந்தது தான் சேர்ந்தீங்க.. ஒரு சொந்த வீடு வாங்கி அங்கே சேந்திருக்கப் படாதா? எத்தனை தபா வீடு மாறியிருப்பிங்க?

அய்யங்கார் : வீடு வாங்கலை தான்.. தொழில் மேன்மை வரும்னு ஜோசியன் ஒவ்வொரு வருஷப் பொறப்புக்கும் சொல்றான்.. மாங்காப் பச்சடியிலே வேப்பம்பூ போட்டு சாப்பிட்டு ஏப்பம் விட்டு பகல் தூக்கம் போடறோம்.. அவாவா இப்படி வந்து மெரட்டறா.. வீடு மாத்தறோம்.

செட்டியார் : தேவ.. தாசி.. சாமிக்கு தேவலோகத்திலே வேணும்னா சரிப்படும். இந்த ஆசாமிகள் லோகத்திலே ஒத்து வராது. தெருவிலே எல்லா வீடும் ஒரு ரேட்டுக்கு போனா நம்ம வீட்டுக்கு அதுலே பாதிதான் மதிப்பு.. காரணம் (உள்ளே பார்க்கிறார்)

அய்யங்கார் என்ன சொல்ல வர்றேள்?

செட்டியார் :நீங்க அக்னியை அவுசை பவுசை எல்லாம் வேறே எங்கெனாச்சும் கும்புடுங்கோ..இங்கே வேண்டாம். தெர்தா? புண்ணியமாப் போவும்.. இன்னும் ஒரு மாசத்திலே காலி பண்ணிடுங்க…

அய்யங்கார்: இல்லேன்னா?

செட்டியார்:. நான் வந்த வெலைக்கு வித்துட்டு கெளம்பிடுவேன். சரியா… வாங்கினவன் போங்க சாமின்னு தன்மையா சொல்றானோ போம் ஓய்னு கும்மோண மருவாதியா சொல்றானோ இல்லே

அய்யங்கார் : போடா நாயேன்னு வெரட்டறானோ..

செட்டியார்: நாகு தெல்லேது ஸ்வாமி..

அய்யங்கார்: சட்டப்படிக்கு எனக்கு குடித்தன பாத்யதை இருக்கு

செட்டியார்: உசிரே உமதில்லைன்னு ஆவுது.. சட்டத்தை அல்பாகா கோட்டுலே செருகி அய்கோர்ட்டுலே விட்டத்திலே தான் மாட்டி வைக்கணும்.. வீட்டை காலியான ஸ்திதியிலே கொடுத்தா பத்தாயிரம் தரேன்கறான் ஒரு வடக்கத்தியான்.. அதிலே உமக்கு ஆயிரம் தரேன்

அய்யங்கார் : பிச்சையா? நான் உம்மைக் கேட்டேனா ஓய்?

செட்டியார்: அப்ப பத்தாயிரம் கொடுத்துட்டு நீரே வாங்கிக்கும்.. சொன்னேன் இல்லே சாமி, ஒரு வாரம் டைம்..

செட்டியார் கிளம்புகிறார். நாயகி காப்பியோடு வருகிறாள்

அய்யங்கார் : காப்பியைக் குடிச்சுட்டுப் போம். உமக்குன்னு கலந்துது. அதுங்கூட என்ன விரோதம்?

செட்டியார் : உங்க கூடத்தான் என்ன விரோதம்? (நாயகி கையில் இருந்து டப்ரா செட்டை வாங்கிக் கொள்கிறார். காப்பி குடிக்கும்போது, முகம் மெல்ல மலர்கிறார்) இன்னும் பத்து நாள் நம்ம வீட்டுலே காலம்பற காப்பி குடிச்சா வீட்டையே உமக்கு எழுதி வச்சுடுவேன்.

அய்யங்கார்: காலம்பற மட்டும் ஏன், சாயந்திரமும் பேஷா சாப்பிடும்.. தொண்டயார்பேட்டை வீட்டையும் அப்படியே எழுதி வச்சிடும்.

இருவரும் சிரிக்கிறார்கள். செட்டியார் போகிறார்.

நாயகி : வீடு வாங்க காசா இருக்கு? காலி பண்ணனும்.. திரும்ப மூட்டை கட்டணும். வர்ற போற தீத்தாராண்டி எல்லாம் ஜாதியைச் சொல்லிக் காட்டுவான்..

அய்யங்கார்: சொன்னா சொல்லிட்டுப் போகட்டும்.. நீ பொண்ஜாதி.. நான் ஆண்ஜாதி.. அம்புட்டுதான்..

நாயகி : ஜாதி வழக்கப்படி பொட்டுக் கட்டிண்டு நிம்மதியா இருந்திருப்பேன்.. நீங்க தான் தாலி கட்டிக் கூட்டிண்டு வந்துட்டேள் …

அய்யங்கார் அசடு… விட்டுத் தள்ளு.. செட்டியாருக்கும் மத்தவா எல்லாருக்கும் அஸ்தியிலெ ஜுரம் கண்ட மாதிரி எம்டன் பயம்.. எம படன் பயம் எம்டன் வந்தான்.. போனான்.. ஓவர். ஊரெல்லாம் வீடு.. காசை விட்டெறிஞ்சா நூறு கிடைக்கும்..

நாயகி: கிடைக்கும்.. ஆனா.. அய்யங்கார்வாளுக்கு ஐவேசு..

அய்யங்கார்: சந்தேகமென்ன என் கண்ணம்மா.. கூரையைப் பொத்துண்டு கொட்டப் போறது… அதுக்குள்ளே. மார்க்கெட்டுக்குப் போயிட்டு வந்துடறேன்.. பையை எடு.

வெற்று ஊஞ்சல் ஆடுகிறதைப் பார்த்தபடி நாயகி நிற்கிறாள். அய்யங்கார் சட்டையை மாட்டிக் கொள்கிறார்.

(காட்சி முடிவு)

காட்சி -3

காலம் காலை காட்சி வெளியே

இடம் கொத்தவால் சாவடி முகப்பு (ஹைகோர்ட் பக்கம் – பிராட்வே – தற்போதைய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீதி).

போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் நாயுடு (வயது 58) உத்தியோக சின்னங்கள் ஏதும் தரிக்காமல், தட்டுச் சுற்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மேலே பழைய காக்கி சட்டையோடு வருகிறார். கையில் கித்தான் பை.

நாயுடு கூலி 1, 2 வியர்வையைத் துடைத்த மேல் துண்டை தலைக்கு மேல் காய வைப்பது போல் விசிறியபடி நடந்து போவதைப் பார்க்கிறார்.

கூலி 1: சலாம் தொரே

கூலி 2: கும்புடறேன் சாமியோவ்

நாயுடு: ஏமிறா, ஊரே பர்த்தூனி உந்தி (ஏண்டா, ஊரே லபோ திபோன்னு ஓடினு கீது..) நீங்க இங்கே இன்னாடா கோமணத்தை காயப்போட்டுக்கினு நிக்கறீங்க?

கூலி 1: சாமியோவ்..காசு இருந்துச்சுன்னா நானும் தான் ஓடுவேன்.. ஆயிரம் பேரு ஆர்பர்லே காலியாமில்லே

நாயுடு: டேய் பேக்கூ- தீ பிடிச்சது. ஆர்பர்லே. அங்கே ஆயிரம் பேத்துக்கு எங்கேடா போக? சீமெண்ணெயும் பெட்ரோலும் பீப்பா பீப்பாயா வச்சிருந்தான் பர்மாஷெல் காரன்.. ஜெர்மன்காரன் எறிஞ்ச குண்டுலே அதெல்லாம் தீவிளி மாதிரி கொளுத்திக்கிச்சு.. கண்டுக்கினியா?

கூலி 2: போலீசு ஜீப்புக்கு எண்ணெய் கபால் ஆயிடுமா சாமியோவ்?

நாயுடு: போலீசு ஜீப்பை எல்லாம் இனிமே கொழும்புத் தேங்கா எண்ணெய் ஊத்தித்தான் ஓட்டணும்..பஜ்ஜி வாடை திம்முனு வரும்

கூலி 1: வெள்ளைக்காரன் பஜ்ஜி தின்பானா தொரே?

நாயுடு: ஆங்க்.. கீரை வடை துண்ணுவான்.. போடா…

கூலி 2 : வண்ணாரப்பேட்டையிலே ஒரு கெயவி நெல்லுக் குத்தினுருந்துச்சாம்..அதும் வயித்துலே குண்டு வுளுந்து அம்போவாமே..

நாயுடு : : ஒரேய் புத்திலேனி காடித (டே தற்குறிப் பயபுள்ளே..) ராத்திரி ஒம்போது மணிக்கு எவ’டா நெல்லுக் குத்துவா? அதது வூட்டுலே மல்லாந்து … … நன்னு மாட்லாட பெட்த்தாவு ச்சூடூ (வாயிலே வார்த்தை என்னமா வர வைக்கறே பாரு..) பேமானி

கூலி 1: சாமி வராங்க ஐயா

வாசலில் வண்டிகள் வந்து நிற்க கூலிகள் ஓடுகிறார்கள்.

குரல்: நாயுடுகாரு.. குட் மார்னிங்.. என்ன நேத்துக்கு ஆளைக் காணோம்.. எம்டன்னு சொல்லிடாதேயும்.. அவா நாயுடுவைத் தேடி வரலே.. சர்வ நிச்சயமாத் தெரியும்..

நாயுடு: (திரும்பப் பார்த்து) வக்கீலு.. வாருமய்யா….எம்டனோ எளவோ.. நாயுடு இங்கே தொழுத்துலே கட்டின மாடுதான்.. எல்லாப் பயக்களும் எவாக்கு … ஏமி செப்பு (என்னா அது)

அய்யங்கார்: எவாகுவேஷன்.. மயிலாப்பூர்லே பாதி நேத்தே காலி.. மாம்பலம் பக்கம் திண்டுக்கல் பூட்டே கிடைக்கலியாம்.. வீட்டுக்கு ஒண்ணுக்கு நாலா பூட்டு போட்டுட்டு தெக்கு பக்கமா வண்டி பிடிச்சுப் போயிண்டிருக்கா..

நாயுடு: அட நீர் போலீஸ் விஜிலனுசை விட விவரமா இருக்கீரே.. அவத்தல (அப்புறம்?)

அய்யங்கார்: எவ தல?

நாயுடு : லேதய்யா… தரவாத .. முளிக்கிறீரே .. அப்பாலிக்கி?

அய்யங்கார்: அப்பாலிக்கு ஏமி? புளியந்தோப்புலே பகல்லே நரி ஓடுதாம்.. நீங்கள்ளாம் போலீசுலே என்ன பெரிசா கிழிக்கறேளோ

நாயுடு: ஏன்’யா ஆ ஊன்னா போலீசுதான் திருட்டுப்பய.. அதானே

அய்யங்கார்: அதி லேதய்யா.. சௌகார்பேட்லே எம்டன் கலாட்டாவை சாக்கா வச்சு, கடை கடையா ராத்திரி கன்னக்கோல் போட்டுண்டு இருக்கானாம்.. வீட்டுக்குள்ளே புகுந்து பொம்மனாட்டிகள் கழுத்துலே காதுலே இருக்கப்பட்ட நகையைப் பறிச்சுண்டு ஓடுறதா வேறே பிரஸ்தாபம்..

நாயுடு: நாலே நாலு எம்டன் குண்டு விழுந்ததா.. ஊர்லே என்ன பேச்சுன்னு கணக்கு இல்லே..

அய்யங்கார்: ஊர் விஷயம் இருக்கட்டும். நீர் எங்கே நேத்து காணாமப் போயிட்டீர்னு கேட்டேனே.

நாயுடு: அதா? நேத்து விடிகாலையிலேயே ஆர்பர் டியூட்டின்னு தொரை அனுப்பிச்சுட்டாரு..

அய்யங்கார்: ஏன் ஹெட் கான்ஸ்டபிளுக்கு வேறே காரியம் இல்லியா ப்ராட்வே ஸ்டேஷன்லே?

நாயுடு: ஏட்டுன்னா நாய் மாதிரி.. ரன்னுனா ஓடணும்.. காட்ச்னா வாயிலே கவ்விக்கினு காலடியிலே கொணாந்து போடணும்..ஆர்பர் நேத்து இருந்துச்சே அந்த கந்தர்கோளத்துலே

அய்யங்கார்: பஞ்ச பஞ்ச உஷத் காலத்துலே ஆர்பர் போயிருக்கீர்.. சாதா நேரம்னா கப்பல்லே வந்த பரதேசி எல்லாம் வெளிக்குப் போக வழிச்சுண்டு பிருஷ்ட தரிசனம் கொடுத்திருப்பான்.. நேத்திக்கு ஆள் அரவமே இருந்திருக்காதே

நாயுடு: நீர் ஒண்ணு.. .. களேபரம்

அய்யங்கார்: கந்தர்கோளம்னீரே

நாயுடு: ரெண்டும் ஒண்ணு தான் ஓய்..அரியும் செவனும் ஒண்ணு மாதிரி…ஆர்பர்லே. இன்னான்னு கேளும்..

அய்யங்கார்: இன்னா?

நாயுடு: ஏன் கேக்கறீர்..பேய்க் கூட்டம்….

அய்யங்கார்: ஓட்டேரி மசானத்துலேருந்து சப்ஜாடா வந்ததோ?

நாயுடு: லேது சாமி.. ஓடறதுக்கு முந்தி ஒரு வாட்டி வேடிக்கை பாக்கணும்னு வந்த நம்ம மகா ஜனங்க தான்..

அய்யங்கார்: ஒரு கப்பல் ராபணான்னு மாட்டிண்டுடுத்தாமே..

நாயுடு: ஆமா.. வழியெல்லாம் என்ன பார்த்தேன்கிறீர்?

அய்யங்கார்: (திகிலோடு) பொணமா?

நாயுடு: குண்டுய்யா.. சமுத்திரக் கரையெல்லாம் சிதறிக் கிடந்துச்சு.. எனக்குக்கூட். ரோசனை..துண்டுலே பொறுக்கிப் போட்டுக் கட்டி எடுத்துப் போய் வூட்டுப் பரண்லே வச்சா நாளைப்பின்னே காயலாங்கடையிலே கொடுத்து காசு பொரட்டலாம்..

அய்யங்கார்: நீரும் உம்ம கணக்கும்.. வெடிச்சுத் தொலைக்கும் நம்ம போறாத நேரம்.. இன்னிக்கு இல்லாட்ட உம்ம பேரன் காலத்திலே வெடிக்கும்.. வேறே வினையே வேணாம்..

நாயுடு: நான் தொடலியே.. போலீஸ்காரனாச்சே.. சர்க்கார் உத்தியோகஸ்தன்.. சந்தேகபஸ்தமானதையெல்லாம் கையால தொடுவானா.. அதுவும் எதிராளிப் பயபுள்ளே எறிஞ்ச குண்டு.. அந்தக் கண்றாவி கெடக்கு.. சம்பவம் நடந்த ஸ்லத்திலே நிப்பாட்டி வச்சிருந்தானுகளே அந்தக் கப்பல்லே ஏறிப் பாக்கலாம்னு பார்த்தா, என்னத்தைச் சொல்ல எல்லாத்தையும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வாரி எடுத்துக்கினு போய்ட்டானுங்களாம்..

அய்யங்கார்: ஸ்தலம்.. கடவுள் இருந்தாலும் ஸ்தலம்.. கப்பல் நின்னாலும் ஸ்தலம்.. என்ன பாஷையோ

நாயுடு: எல்லாம் அய்யமார் சர்க்காருக்குச் சொல்லிக் கொடுத்த பாஷைதான். தொரையா கண்டுபிடிச்சான்? நீங்க போட்டது தானே சட்டம்?

அய்யங்கார்: ஆமா இதே பஜனை தான் எப்பவும்..

(தலையில் காய்கறிக் கூடையும் இடுப்பில் பூசணியுமாக வேகமாக வந்த கூலி 4 இடம்) காலை மிதிக்காம போடா குருட்டுப் பயபுள்ளே

கூலி 4: ஏட்டையா தான் ஒதுங்கி நிக்கறது.

நாயுடு: அடீங்க..

(நடக்க ஆரம்பிக்கிறார்கள்)

Series Navigationபாலகுமாரசம்பவம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

4 Comments

 1. Avatar
  மணிகண்டன் says:

  தமிழில் நாடகங்கள் எழுதுவதும், நடிப்பதும் அருகிவிட்டது.
  இந்த நாடகம் தமிழ் நாடகக்கலைக்கு புத்துயிர் அளிக்கட்டும்.

 2. Avatar
  ramu says:

  There is one thing called anachronism > When you write a play or a novel as far as possible you may avoid this I was a student of Indian History for 4 years in my college days and I did not remember to have come across the” evacuation during the first world war There was evacuation and house owners especially i Tripicane Mylapore and areas near sea shore sold houses cheaply and went away

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *