ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 5 வினா-விடை: ப குருநாதன்

author
1 minute, 31 seconds Read
This entry is part 17 of 23 in the series 14 டிசம்பர் 2014

தொகுப்பு: மு இராமனாதன்

 

 

[ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது.  தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.]

(ஹாங்காங் இலக்கிய வட்டம் நவம்பர் 11, 2006 அன்று அபுனைவு என்ற பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)

சில நாட்களுக்கு முன்னால், நண்பர் திரு. இராமனாதனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘non-fiction’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியானத் தமிழ்ச் சொல் என்னவென்று வினவினேன். அதற்கு அவர், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், அச்சொல்லுக்கு ‘அபுனைவு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்று கூறினார். ‘அபுனைவு’ என்ற சொல் வேண்டுமானால் ‘புனைவு’ என்பதற்கு எதிர்மறைச் சொல்லாக இருக்கலாம். அது எப்படி ‘non-fiction’ என்பதற்குரியத் தமிழ்ப் பதமாக இருக்கக்கூடும் என்று என் சிற்றறிவிற்கு எட்டவில்லை. என்னைப் பொறுத்தவரை, அபுனைவு என்ற சொல் அபொருத்தமாகவே தோன்றுகிறது.

‘Fiction’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியானத் தமிழ்ச் சொல் ‘புனைவு.’ எனவே, ‘non-fiction’ என்பதற்கு ‘புனைவற்றது’ என்ற சொல்லே சரியானது, நேரானது, பொருத்தமானது என்பது என் தாழ்மையானக் கருத்து.

இது ஒரு இலக்கிய வட்டக் கூட்டமென்பதால், புனைவற்ற எழுத்தியல் வடிவங்கள் யாவை என்பது பற்றி சற்று பொதுவாகவும், அதில் ஒன்றைப் பற்றி குறிப்பாகவும், என்னுடைய கருத்துக்களை இவ்வுரையின் மூலம் உங்களிடையே சமர்ப்பிக்கலாம் என எண்ணுகின்றேன். கூட்ட ஒருங்கிணைப்பாளர் இவைகளைப் பற்றியெல்லாம் முன்பே பேசியிருக்கக் கூடும். எனினும், அவர் சொன்னவற்றைச் சார்ந்தும், விடுப்பட்டவைகள் ஏதும் இருந்தால் அவைகளைச் சேர்த்தும், மேலும் சற்று விரித்தும் இவ்வுரையைத் தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

புனைவற்ற எழுத்தியல் வடிவங்கள் என்பவை யாவை? பெருமளவிற்கு அவைகளைப் பொதுவாக, பொதுப்படையாக வரிசைப்படுத்திவிடலாம்.

முதலில், கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பார் கவிஞர் வைரமுத்து. இது எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்துமென்பதுதான் மிகப் பெரிய பொய்! பொய், புரட்டு, புளுகு, புனைவு சற்றுமில்லாத எத்தனையோ அழகான கவிதைகள் தமிழில் உண்டு. இன்றைக்கு வருகின்ற புதுக்கவிதைகளில் பல பொய்மையோ அல்லது புனைவின் கலப்போ இல்லாதனவே. ஏன், நம் திருக்குறளில் இல்லையா புனைவு சற்றுமில்லாதக் கவிதைகள்? ‘குழலினிது, யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.’ இது ஒர் அழகான, நயமிகு, புனைவு இல்லாதக் கவிதையல்லவா?

இரண்டாவதாக, கட்டுரைகள். கலை, அரசியல், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், சமயம், சமூகம், பயணம், பொருளாதாரம், இசை என்ற பல துறைகளைச் சார்ந்த பல்வேறு கட்டுரைகளும் இந்த வகைக்குள் அடங்கும். ஜெயகாந்தன் போன்றவர்களால் எழுதப்பட்டு, தொகுக்கப்பட்ட உன்னதமான முன்னுரைகளின் தொகுப்பு கூட இந்த வகைக்குள் வந்துவிடும்.

மூன்றாவதாக, தலையங்கம் எனப்படும் எடிட்டோரியல். அதாவது, ‘ஏடு இட்டோர் இயல்’. மேலை நாடுகளில் உள்ளது போலவே, தமிழிலும் பத்திரிக்கைகள் தலையங்களுக்காகவே படிக்கப்பட்டிருகின்றன, படிக்கப்படுகின்றன. தமிழில் பாரதி, கல்கி, தினமணி ஏ.என். சிவராமன் போன்றோரின் தலையங்கங்கள் பெரு வரவேற்பைப் பெற்று, பெருவாரியாகப் படிக்கப்பட்டு, பெரும் புகழ் எய்தியவை.

நான்காவதாக, கடிதங்கள். சில கடிதங்கள் எழுதப்பட்ட பின்பு இலக்கியமாகின்றன.  சில இலக்கியமாவதற்காகவே எழுதப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரையில், பழந்தமிழ்த் தூதுக்களைத் தவிர்த்துப் பார்த்தால், தமிழில் சிறந்த இலக்கியத் தரமிக்க கடிதங்கள் என்பவை கி.ராஜநாரயணன், கு. அழகிரிசாமி இவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டவையாகும்.

ஐந்தாவதாக, அகராதிகள் மற்றும் கலைக் களஞ்சியங்கள். முன்பெல்லாம், ‘கலைக்கதிர்’ என்ற ஒரு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது.  அதில், தமிழ் கலைச்சொற்களைத் தந்துவந்த விதமே ஒரு கலைநயம் மிக்க செயலாக்கம்.  தமிழில் பல்கலைக் கழக அகராதி, தமிழ்ச் சொற்களைத் தேடிக்கண்டு, வகைப்படுத்தி, பகுத்தும் தொகுத்தும், எடுத்துக்காட்டுகளுடன் தந்திருக்கின்ற விதம் குறிப்பிடத் தக்கது. போற்றிப் பாராட்டத் தக்கது.

ஆறாவதாக, நேர்காணல் எனப்படுகின்ற பேட்டிகள். தரமான, சுவையான பேட்டிகள், கேட்கப்படுபவரின் திறமையையும் ஞானத்தையும் பண்புகளையும் சார்ந்து மட்டுமே அமையாமல், கேட்பவரின் திறமையையும் அறிவையும் தெளிவையும் சார்ந்தும் அமைகின்றன. உண்மையும் நேர்மையும் உள்ளீடாகக்கொண்ட நேர்காணல்களே சிறப்பாக அமைகின்றன. பெரும்பாலும் அரசியல்வாதிகளின், சினிமாக்காரர்களின் பேட்டிகளெல்லாம் வழிசல் மிகுந்த, நேர்மை சிறிதுமில்லாத, உப்பு-சப்பற்றனவாக இருப்பது வழக்கம்.   இருந்தும், அந்தக் குப்பைகளையெல்லாம் படிப்பதற்கும் ஒரு கூட்டம் இருப்பதும் உண்மையே! இன்றைக்கு, சில திறன்மிகு, புத்திலக்கியக் கர்த்தாக்களும் கூட, அற்பத்தனமாக, சிற்புத்திக்காரர் களாக இருக்கின்றார்கள் என்ற உண்மை அவர்களின் பேட்டிகளில் வெளிப்படுவது ஒரு கொடுமையே!

கடைசியாக, வினா-விடை அல்லது கேள்வி-பதில்கள். இன்று,  இவையில்லாத தினப்பத்திரிக் கைகளோ, வாராந்திரிகளோ இல்லை என்றே சொல்லலாம்.இன்றைக்கு, நான் இவ்வுரையில் கூறவிருப்பது புனைவு சாரா வினா-விடைகள் பற்றியே.

மனிதனின் வளர்ச்சியில், வரலாற்றில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று ‘Evolution.’ மற்றது ‘Revolution.’ Evolution is a natural biological process, necessitated by the dynamics of changes over a period of time. ஆனால், ‘Revolution’ அப்படியல்ல.  மனிதனைப் படிப்படியாகப் பண்படுத்தியதும், நாகரிகமுள்ளவ னாக ஆக்கியதும், காலம் காலமாக நிகழ்ந்துகொண்டு வந்திருக்கும் ‘Revolutions’ எனப்படுகின்ற புரட்சிகளே! காலத்தின் பல்வேறு கட்டங்களில், பல்வேறு துறைகளில், பலவிதங்களில் நிகழ்ந்த புரட்சிகளுக்கெல்லாம் காரணம், ‘ஏன்’, ‘எப்படி’, ‘எதற்காக’ என்ற கேள்விகள் எழுப்பப்பட்டதா லேயே!  மனித வாழ்வு வளம்பெற, நிலைபெற, நிறைவுபெற, மனிதனிடம் ஒரு தேடுதல் துடிப்பு என்றும் தொடர்ந்து இருத்தல் வேண்டும். அத்துடிப்பின் தொடக்கமே வினா தொடுப்பதுதான்! தொடர்ந்து, தொய்வின்றி வினாக்கள் தொடுக்கப்பட்டு வருவதால்தான்!! Einstein said, ‘The important thing is not to stop questioning…Never lose a holy curiosity. Raise new questions, rise up and reach out to new horizons, for life is not stationary.’

எனவே, ‘கேள்வி கேட்டல்’ என்பது மனித வரலாற்றின் ஆரம்பம் முதல், காலம் காலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவது. ஏன், கடவுள் மனிதனையும் மனிதன் கடவுளையும் கேள்வி கேட்டு, பதில் பெற்றதாக நாம் படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தனக்கு நினைவு தெரிந்தது முதல் இறக்கும் வரை, எதைப் பற்றியாவது கேள்வி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். அவன் ஞானியாய் இருந்தாலும் சரி, அறிவுச் சோனியாய் இருந்தாலும் சரி. எனவே, கேள்வி கேட்பதும், பதில் பெருவதும் மனித வாழ்வில் அன்றாடம் இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி. ஆதலால், எழுத்துலகில், எழுத்தியலில் வினா-விடை வடிவம் இடம் பெற்றதும், அது இன்றியமையாததாக ஆனதும், இன்றைக்குப் பெருவாரியாக விரும்பிப் படிக்கப்படும் ஒரு பகுதியாக இருப்பதும், ஒரு இயல்பான, இயற்கையான நிகழ்வென்றே எனக்குத் தோன்றுகிறது.

எழுத்துலகில் வினா-விடை என்பது ஒரு தனித்தன்மை உடையது. மற்ற எழுத்து முறைகளில் ஒருவர் எழுதுவார், மற்றவர்கள் படிப்பார்கள். பேட்டியில்கூட ஒருவர் கேள்வி கேட்பார்; மற்றவர் பதில் சொல்வார். ஆனால், வினா-விடை வகையில், ஒருவர் பல கேள்விகளுக்கு, பலரின் கேள்விகளுக்கு, பலதரப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வருவார். இதில், துணைக் கேள்வி, இடைக் கேள்வி, எடக்குக் கேள்வி, மடக்குக் கேள்வி என்றுவேறு தனியாக தொடர்வதும் உண்டு. காலப்போக்கில், கேள்வி கேட்பவர்க்கும் பதில் அளிப்பவர்க்கும் இடையே ஒருவித பாசமும், நேசமும் கூட உண்டாவதுண்டு! ஒருவரே தொடர்ந்து கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்புவதும், பல பத்திரிக்கைகளுக்கும் கேள்விகளையனுப்பி, கேள்வி கேட்பதையே ஒரு முழுநேர வேலையாகக் கொண்டு, தானே ஒரு கேள்விக்குறியாக விளங்குபவர்களும் உண்டு.

ஒருவர் தான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய கேள்விகளையும், அவைகளுக்குக் கிடைத்த பதில்களையும் தொகுத்து ஒரு புத்தகம் போட்டிருக்கிறார். பத்திரிக்கைகளில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே கேள்வி கேட்பவர்களும் உண்டு. கேள்வி கேட்பதற்கென்று ஒரு தனித் தகுதி வேண்டுமென்ற அவசியமில்லை. ஆர்வமும், ஓரளவிற்கு எழுதத் தெரிந்திருப்ப தும், கடிதம் எழுதியனுப்ப கையில் காசும் இருந்தால் போதும். நடிகைகளிடையே யார் கவர்ச்சியாக இருக்கிறார், யார் கண் அழகு, யார் இடுப்பழகில் எடுப்பாக இருக்கிறார் என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதற்கு என்ன சிறப்புத் தகுதியோ, திறமையோ, அறிவோ வேண்டும்?

எனவே, மற்ற புனைவற்றவைகளைப்போல் அல்லாமல், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற வசதி வினா-விடை வகையிலேயே உண்டு என்று சொன்னால் அது மிகையில்லை. குட்டி நடிகை முதல், க்வாண்டம் தியரி வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பதிலளிப்பதும் அளிக்காததும், விடையளிப்பவ ரின் விருப்பம். பேட்டியைப் போல் இல்லாமல், வேண்டிய நேரம் எடுத்துக்கொண்டு, உரிய பதிலைத் தேடிக்கண்டு, வேண்டும்போது, வேண்டுமென்றால் எழுதகிற வசதியும் இதில் உண்டு.

வினா-விடை வகை சுவையானதும், சுவாரஸ்யமானதும் கூட! ‘திருவிளையாடல்’ திரைப் படத்தில் எது சிறந்த பகுதி என்றால், எல்லோரும் ஒருமித்தக் குரலில், நாகேஷ் கேள்வி கேட்டு, சிவாஜி பதில் சொல்லும் பகுதி என்று அடித்துச் சொல்வார்கள். அதுபோல், ‘சக்கரவர்த்தி திருமகள்’ என்றொரு படம். அதில் MGR-NS கிருஷ்ணன் ஒருவருக்கொருவர் கேள்வி-கேட்டு பதில் சொல்வதுபோல் ஒரு பாடல் இருக்கும். சிறிய வயதில் அதில் நான் கேட்ட ஒரு பகுதி, இன்றும் நன்றாக என் நினைவிலிருக்கிறது. MGR, ‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?’ என்று கேட்பார். அதற்கு NSK, கத்தி, கோடாரி, அக்னி திராவகம் என்று பல ஆயுதங்களைப் பதிலாகக் குறிப்பிடுவார். இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த அணுகுண்டு, WMD என்கிற பேரழிவுக் கணைகள் என்பதெல்லாம் படத்தின் கதை நடந்த காலத்தில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  அதானால், NSK -யும் அவைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. NSK தந்த எல்லா பதில்களையும் மறுத்துவிட்டு, MGR, ‘நிலைகெட்டுப் போன மனிதர்களின் நாக்குதான் அது’ என்று அவரின் கேள்விக்கு அவரே பதிலளிப்பார். இது, அந்தக் காலத்தில் பரவலாக ரசிக்கப்பட்ட காட்சி.

‘சாரதா’ என்றொரு படம். நான் பள்ளியில் படிக்கும்போது பார்த்தது. அதில், ஒரு கல்லூரியின் வகுப்பறைக் காட்சி வரும். அதில் வந்த காட்சியும், உரையாடலும் இன்னும் மறக்காமல் என் நினைவில் நிற்பதற்குக் காரணம், அவைகள் ஒரு வினா-விடை வடிவத்தில் இருந்ததினால் தான் என்றுகூட கூறலாம். அதில் SSR என்ற நடிகர் நடித்தது ஒரு கல்லூரி பேராசிரியராக. தன் வகுப்பில், அவர் தாய்மையின் சிறப்பைப் பற்றி விளக்கிக்கொண்டிருப்பார். ‘அன்பும், கருணையுமே தாய்மை. அந்த அன்பும், கருணையும், தானே ஈன்றவற்றையும் தாண்டி, தரணி முழுவதிலும் உள்ளவற்றையும் பாரிக்கும் தன்மையது. ஒரு உன்னதமான தாய்க்கு, வன்மமும் வன்முறையும் வெறியும் யாரிடமும், எப்போதும், எதற்காகவும் இருக்காது; இருக்கவே முடியாது’ என்று ஆணித்தரமாக ஆசிரியர் விளக்குவார். மாணவியாக வகுப்பிலிருக்கும் விஜயகுமாரி, ‘ஐயா! நீங்கள் என்னவென்றால் ஒரு சராசரி தாயே கருணை வடிவானவள் என்கின்றீர்கள்! ஆனால், லோகமாதா என்ற அழைக்கப்படுகிற பார்வதி ஏன் முருகனுக்கு வேலைக் கொடுத்து, சூரனை கொல்லச் சொன்னாள்?’ என்ற கேள்வியைக் கேட்பார். அதற்கு SSR, ‘சக்தி கொடுத்தது ஆயுதமல்ல. அது ஞானத்தின் குறியீடு. வேல் வடிவத்தில் ஆழ்ந்து, அகன்று, கூர்மையாக இருப்பது. ஞானமும் அப்படியே. சக்தி கொல்லச் சொன்னதும் சூரனையல்ல. சூரன் ஆணவத்தின் குறியீடு. அன்னை அழிக்கச் சொன்னது ஞானத்தைக் கொண்டு அறியாமையையும் ஆணவத்தையுமேயன்றி ஆளையல்ல,’ என்று பதில் அளிப்பார்.

கேள்விகளுக்குப் பதிலளித்து பழகியவர்களுக்கு, தன்னிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை யென்றால், உலகம் ஸ்தம்பித்து விட்டதாகவும்,  தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர்வார்கள் என்று நினைக்கிறேன். ‘முத்தமிழ் வித்தகர்’ என்று அழைக்கப்படும் ஒருவர், பத்திரிக்கைக்காரர்கள் யாரும் என்றாவது தன்னிடம் கேள்வி கேட்க வரவில்லையென்றால், உடனே தவித்துப்போய், தன் தவிப்பு அடங்க, தானே ஒரு கேள்வி-பதில் தொகுப்பைத் தாயாரித்து, பத்திரிக்கைகளுக்கு அனுப்பவது வழக்கம்.

வினா விடுப்பதும் விடையளிப்பதும் அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இருவரையும் தவிர, அவைகளைக் கேட்கின்ற, படிக்கின்ற, பார்க்கின்ற பெரும்பாலானவர்களையும் கவர்ந்து, கற்பித்து, களிக்கச் செய்து, கனியவும் செய்வனவே.  அதானால்தான் இன்றைக்கு, சில பத்திரிக்கைகள், ‘கேள்வி-பதில்’ பகுதிகளுக்காவே நன்றாக விற்பனையாகின்றன!

நம்முடைய நான்கு மறைகளும், 18 புராணங்களும் வினா தொடுக்கப்பட்டு, விடையாகப் பகரப்பட்டனவே. இரண்டு இதிகாசங்களிலும் கூட கேள்வி-பதில் கட்டங்கள் பல உண்டு. அதில் ஒன்றுதான் ‘பகவத் கீதை’ என்று நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரிய வேண்டும்? ஞானிகள் கூட தன் சீடர்களின், அடியார்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, படிப்பித்து வந்திருக்கின்றனர். நபிகள் நாயகம், ‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என்ற ஒரு சீடரின் வினாவிற்கு அது தாயின் காலடியில் இருப்பதாக விடை கூறி, அறிவுறுத்தினார் என்றும் நாம் படித்திருக்கிறோம்.

சிலபேர், ஞானிகளைச் சோதிப்பதற்கென்றும், அவர்களை மட்டம் தட்டவேண்டும் என்றும் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஒருவன் ஒரு பட்டாம்பூச்சியை தன் உள்ளங்கைப் பிடியில் மறைத்து வைத்துக்கொண்டு, ஒரு ஞானியிடம் சென்று, அவரிடம், ‘என் கையில் என்ன இருக்கின்றது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?’ என்று கேட்டான். ஞானி உடனடியாக, சரியாக, ‘உன் கையிலிருப்பது ஒரு பட்டாம்பூச்சி’ என்று சொல்லிவிட்டார். அவன் விடவில்லை. ‘அது உயிரோட இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா? என்று மேலும் கேட்டான். ஞானி, பூச்சி உயிரோடு இருக்கின்றது என்று சொன்னால், அதை நசுக்கிக் கொன்றுவிட்டு, அவரின் கூற்றைப் பொய்ப்பித்துவிடலாம். அல்லது, அவர் இறந்துவிட்டது என்று சொன்னால், கையைத் திறந்து பட்டாம்பூச்சியை விட்டுவிட்டு, அவரைப் பார்த்து நகைக்கலாம் என்று அந்த கெட்டிகார முட்டாள் நினைத்தான். ஆனால், ஞானி ‘அது உன் கையில் இருக்கிறது’ என்று சொல்லி அவனைத் திகைக்க வைத்துவிட்டார்.

யாரிடத்தில், எந்தக் கேள்வியை, எப்போது கேட்க வேண்டும் என்று தெரிந்தால்தான், உரிய, உயரிய விடை கிடைக்கும். இல்லாவிட்டால், இலக்கில்லாமல், ஏனோதானோ என்று எய்த அம்பின் பயனே கிட்டும்.

தமிழ் எழுத்துலகத்தில், வினா தொடுப்பதும், அதற்கு விடை அடுப்பதும், தொல்காப்பிய காலம் தொடங்கி, சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இயக்க காலம் என்று தொடர்ந்து, இன்றைய புத்திலக்கிய காலம் வரை இருப்பதென்பது பெரும்பாலான நூல்களில் காணக்கிடக்கும் பேருண்மை.

வள்ளுவப் பெருந்தகை கூட வினா எழுப்பி, அதற்கு விடை பகருகிறார். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று கேள்வி கேட்டு ‘ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்’ என்று அவரே அதற்கு விடையும் தருகிறார். இந்தக் குறளுக்கு தவறான ஒரு பொருளை உரையாசிரியர்கள் பலவுரைகளில் தந்திருகிறார்கள். ‘தாழ்’ என்ற சொல்லின் உரிய பொருளை, உண்மைப் பொருளைத் தெரிந்துகொண்டுவிட்டால், இந்தக் குறளின் வியக்கவைக்கும், உணர்வையும் அறிவையும் ஒருங்கே பயக்க வைக்கும், பெரும் பொருள் கிட்டும்.

இன்றைய பத்திரிக்கைகளின் வினா-விடைப் பகுதிகளுக்கு முன்னோடி, இலக்கிய உலகில் பல புதுமைகளுக்கு வித்திட்ட மகாகவி பாரதி என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய பத்திரிக்கையிலே, கட்டுரைகளின் மூலம் பலரின் வினாக்களுக்கு விடையளித்து வந்திருக்கிறார் பாரதி.

எடுத்துக்காட்டாக, ஒரு கேள்வியும் அதற்கு பாரதி அளித்த பதிலும்: ‘எல்லா சான்றோர்களும் சினத்தை கைவிடச் சொன்னால், நீங்கள் ‘ரெளத்திரம் பழகு’ என்று எழுதியிருக்கிறீர்களே ஸ்வாமி?’ இது கேள்வி.

பாரதி தன் பதிலை ஒரு கதை மூலம் தருகிறார்.  ஒரு ஊரில் ஒரு பாம்பு எல்லோரையும் கடித்துத் துன்புறுத்தி வந்தது. ஊரார் அந்தப் பாம்பிற்கு பால், முட்டை என்று தாரளமாகத் தந்து, அதை யாரையும் கடிக்காமல் இருக்கும்படி வேண்டி, விண்ணப்பித்தினர்.   இருந்தும், தொடர்ந்து பாம்பு தொல்லை தந்து வந்தது. அப்போது, அந்த ஊருக்கு ஒரு மகரிஷி வந்தார். ஊராரின் வேண்டுதலுக்கிணங்க அவர் பாம்பிடம், ‘யாரையும் இனிமேல் கடிக்கக்கூடாது, கடித்தால் நீ இறந்துவிடுவாய்!’ என்று கட்டளையிட்டுவிட்டு, வேறோர் ஊருக்குச் சென்றுவிட்டார்.   ஒரு வாரம் கழித்து, அந்த மகரிஷி அதே ஊருக்குத் திரும்பி வந்தபோது, அதே பாம்பு வாடி, வதங்கி, சோம்பிக் கிடந்தது. மகரிஷியைக் கண்டதும், ‘ஸ்வாமி, முன்பெல்லாம் நான் நன்றாய் இருந்தேன். கடிக்கக் கூடாதென்று கட்டளையிட்டீர்கள். இப்போதெல்லாம் ஒருவரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. பாலில்லை, முட்டையில்லை. என் அவல நிலையைப் பார்த்தீர்களா?’ என்று புலம்பியது.  மகரிஷி சொன்னார்: ‘நான் உன்னை மனிதர்களைக் கடித்து, அவர்களைப் பிணமாக்க வேண்டாமென்றுதான் சொன்னேன். அவர்களைப் பார்த்து சீற வேண்டாமென்று சொன்னேனா? நீ கடிப்பதுபோல் அச்சுறுத்தி, சீறியிருக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்திருந்தால், உனக்கும் கொண்டாட்டம். உயிர்களும் பிழைக்கும்.’

“அதுபோல், நான் ‘ரெளத்திரப்படு’ என்று சொல்லவில்லை. ‘ரெளத்திரம் பழகு’ என்றுதான் சொன்னேன். சிறுமைகளைக் கண்டு சீறச் சொன்னேன். ரோஷத்துடன் இரு என்றேன். இதில், என்ன தவறு?” என்று பாரதி ஒரு counter-question கேட்டு முடித்திருக்கிறார்.

‘தீபம்’ இலக்கிய இதழில், காலம்சென்ற நா. பார்த்தசாரதி மிகச் சுவையாக, எளிமையாக, தெளிவாக தமிழ் இலக்கியங்களைப் பற்றி வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார். அவரின் இப்பகுதியே ஒரு இலக்கியமெனலாம்! ஒருமுறை அவரிடம் ஒருவர் கேட்டார்: ‘எது நிறைந்த செல்வம்?’ அக்கேள்விக்கு நா.பா. அவர்கள் தன் பதிலில், ‘செல்வம் என்பது சிந்தனை நிறைவு’ என்ற குமரகுருபரரின் வாக்கை மேற்கோளிட்டுக் காட்டி, “எல்லா செல்வங்களும் அளவிற்கு அதிககமாக நிறைந்திருந்தும், தருமனைப் பார்த்துப் பொறாமையுற்ற துரியோதனனையே, பாஞ்சாலி சபதத்தில் ‘ஏழையாகி இரங்குதல் உற்றான்’ என்பார் பாரதி,” என்று விளக்கியிருந்தார்.

இதைப் போலவே, எதையும் நகைச்சுவையுடன் எழுதும், உண்மையிலேயே பேராசிரியரான கல்கி, ஒரு கேள்விக்குப் பதிலாக எழுதினார்: ‘தரித்திரம் வேறு, தரித்திரப் புத்தி வேறு. தரித்திரன் பாவமானப் பாவி. தரித்திரப் புத்தியுள்ளவன் படுபாவி. எல்லாமிருந்தும் தரித்திரப் புத்தியுடன் இருந்தால் அவன் தரித்திரனைவிட தரித்திரன். வெற்றிலைப் பெட்டியில் நல்ல வெற்றிலையும் வதங்கிய வெற்றிலையும் இருந்தால், நல்ல வெற்றிலையை நாளைக்கென்று விட்டுவிட்டு, வீணாகிப் போய்விடக்கூடாதென்று வதங்கிய வெற்றிலையைப் போடும், வெள்ளிப் பெட்டிக்காரர்கள் எத்தனை பேர்களை நாம் பார்த்திருக்கிறோம்? இன்றைய நல்ல தளிர் வெற்றிலை நாளைக்கு வாடிவிடாதா? இன்று வாடியதைத் தூக்கியெறிந்துவிட்டால், பிறகு நாளும் நல்ல தளிர் வெற்றிலை போடலாமே!’

‘செருப்பை வாங்கிவிட்டு, அது தேய்ந்துவிடுமே என்று கையிலே எடுத்து போகிறவர்களும், இவர்களுக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்பது போலிருந்தது கல்கி அவர்களின் பதில்.

கவிஞர் கண்ணதாசன் ‘தென்றல்’ என்றொரு இலக்கியப் பத்திரிக்கையை நடத்தி வந்தார். அவர் அந்த மாத இதழில், இலக்கியம் சார்ந்த கேள்வி-பதில் பகுதி ஒன்று நடத்தி வந்தது நினைவிலிருக்கிறது. இடக்காகவும் இனிமையாகவும் தெளிவாகவும் தைரியாமாகவும் தன் கருத்துக்களை முன் வைப்பது அவர் வழக்கம். இடையிடையே, அரசியல் அங்கதமும் நாத்திக நெடியும் இழையோடும். நம் ஹாங்காங்கில், தெருக்களிலே வறுத்து விற்கப்படும் குடலைப் புரட்டும் நாற்றமடிக்கும், ஆனால் அதே நேரத்தில் சுவையாக இருக்கும், சோயாவில் செய்யப்பட்டத் தின்பண்டத்தைக் காணும் போதெல்லாம், கண்ணதாசனின் நாத்திக நெடி வீசும் எழுத்துக்கள் என் ஞாபகத்துக்கு வரும். அவரது எழுத்தின் நாத்திக மணம் எனக்கு பிடிக்காமல் போனாலும், அவை சுவையாகவும் இருப்பதுண்டு. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ‘கடிதம்’ என்றே ஒரு பத்திரிக்கையை நடத்தி வந்தார்.

இதே கண்ணதாசன், ஆத்திகராக மாறிய பின்பு, பகுத்தறிவாளர்களைப் பார்த்துக் கேட்கிறார்:

பல்சான்றீரே! பல்சான்றீரே!
பகுத்துத் தொகுக்கும் பல்சான்றீரே!
கல், மண், தீ, நீர், காற்றெனப் புவியோர்
சொல்பொருள் அனைத்தும் தோன்றியது எங்ஙனம்?
வானும் மதியும் மண்ணிடைக் கடலும்
தானே இயங்கும் தத்துவம் யார் செயல்?
சந்திர மண்டலம் தழுவிய ஞானம்
சாவைத் தடுக்கச் சக்தி இல்லாததேன்?

‘மஞ்சரி’ என்ற ஒரு உயர்தர மாத இதழில், கி.வா.ஜ அவர்கள் யாப்பிலக்கணத்திற்கான கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். அவரின் வினா-விடையிலிருந்துதான் எழுத்தெண்ணிப் பாடுவது என்றால் என்னவென்றும், சீர் பிரிப்பதில் மோனை அமைதி எவ்வளவு முக்கியம் என்பதையும், நான்குவகைப் பாட்களுக்கும் உரிய மலர்கள் என்ன என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். அவரே மிக எளிமையாக யாப்பிலக்கண விதிமுறைகளைக் கற்பிக்கக் கூடியவராக இருந்தும், எளிமையாக யாப்பிலக்கணம் கற்க, இன்னொரு ஆசிரியரான விசாகப் பெருமாள் ஐயரின் யாப்பிலக்கண நூலைப் படிக்குமாறு பரிந்துரைக்கின்ற அவரின் பெரும் பாங்கினையும் அறிந்துகொண்டேன்.

வெகுஜனப் பத்திரிக்கைகளில், ‘குமுத’த்தில் வருகின்ற ‘அரசு கேள்வி-பதில்’ பகுதி மிகவும் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அரசு என்பவர் யார் என்ற ஒரு சுவாரஸ்யமான புதிர் ஆரம்பகாலத்தில் இருந்தது. உலகத்தில் உள்ள மற்ற எல்லாவற்றையும் போலவே, இந்தப் பகுதியில் வந்த, வருகிற கேள்வி-பதில்களில், சில மிகவும் உயர்தரமானவை; பல தரமற்றவை. என்ன செய்வது? பத்திரிக்கை என்பது படிப்போர் மாட்டே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘நடிகை ரம்பாவிற்கும், காரிகை வெண்பாவிற்கும் தொடைதான் அழகு’ என்பது போன்ற குறும்புத்தனமான பதில்கள் பல தருவது அரசுவின் தனித்தன்மை. சென்னைத் தமிழில் கேள்வியும் பதிலும் முதலில் தோன்றியது இந்தப் பகுதியில்தான். இந்தப் பகுதியில் பதிலளிப்பதற்கு எத்தகைய முயற்சியை இந்தப் பத்திரிக்கையின் முதல் ஆசிரியர் எடுத்துக்கொண்டார் என்பது, அவர் இறந்த பிறகே தெரிந்தது. மிகச் சிறப்பான புத்தகங்கள் பலவற்றைப் பற்றி, இந்தப் பகுதியிலிருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். அரசுவின் வினா-விடை அரசவையில் நான் ரசித்த சில: ‘உண்மையிலேயே எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா? -இது கேள்வி. ‘ஓ! எப்போதோ!! அதன் பெயர் ஒழுக்கம்’ – இது பதில். ‘மனிதனுக்கு, ஒரு தாரம் போதுமா?’ – இது கேள்வி. ‘ம்ஹ¤ம்! போதவே போதாது!! எல்லோருக்கும் இரண்டு தாரம் கட்டாயம் வேண்டும். ஒன்று சுகாதாரம், இன்னொன்று பொருளாதாரம்.’ -இது பதில். அரசுவின் வினா-விடைப் பகுதியில் சுவையுண்டு, சரக்குண்டு. ஆனால், சத்து உண்டா? இது கேள்வி. இதையும் அரசுவிடம்தான் கேட்க வேண்டும்.

இப்போது ‘குமுத’த்தில் வந்துகொண்டிருக்கின்ற, ‘தகவல் தமயந்தி’ கேள்வி-பதில் பகுதி தமிழுக்குப் புதுமையானது. வேண்டியவர்களுக்கு வேண்டிய, பயன்படத்தக்க தகவல்களைத் தேடிக்கண்டு, தகவல் தருகின்றவரையே கொண்டு பதில் எழுதவைப்பது இப்பகுதியின் சிறப்பு.

‘ஆனந்த விகட’னில் வருகின்ற ‘ஹாய் மதன்’ பகுதியில் (அது என்ன ‘ஹாய் மதன்’ என்ற தலைப்பு? அவருக்கே வெளிச்சம்! தமிழில் வேறு தலைப்பா இல்லை?) வருகின்ற பல கேள்வி-பதில்கள் பொதுஅறிவை வளர்க்கத் தக்கன. சில கேள்விகளுக்கு தக்க பதிலளிக்க, மதன் இரண்டு வருடம் போல எடுத்துக்கொண்டதுண்டாம்! என்ன, நகைச்சுவை என்ற பெயரில் சில சமயம் சற்று அசடுவழிவார் மதன். அதிலும்கூட அவருக்கு ஒருவித பெருமையே! ஒருவரிடம் வழிந்து காரியம் சாதித்துக்கொள்வதற்கு ‘காக்காய் பிடிப்பது’ என்று கூறுவதுண்டு. பாவம் காகம்! அதற்கும், வழிதலுக்கும் என்ன தொடர்பு? மதன், அதை ‘கால்-கை பிடித்து’ என்பதன் திரிபு என்று ஒருமுறை சரியாக விளக்கியிருந்தார். அண்மையில் நான் ரசித்த ஒரு விடை: ‘மனிதன் முதன்முதலில் கேட்டக் கேள்வி எதுவாக இருக்கும்?’ என்று ஒருவர் கேட்டதற்கு, அளிக்கப்பட்ட பதில்: ‘எவ(ள்) இவ(ள்)?’

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய ‘அம்பலம்’ வலையிதழிலும், ‘குமுத’த்திலும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார். அணமையில் ‘குமுத’த்தில் அவர் அளித்துவந்த, விஞ்ஞானத் துறை சார்ந்த, கேள்வி-பதில் பகுதி சிறப்பாக இருந்தது. அவருக்கே உரித்தான முறையில், ஒரு மெலிதான நகைச்சுவை இழையோட பதில் எழுதிவந்தார் சுஜாதா. ஒருவர் கேட்டிருந்தார்: ‘சிப்பியில் முத்து எப்படி உருவாகிறது?’ அதற்கு சுஜாதா, ‘சிப்பியின் கண்ணீரைக் கொண்டே முத்து உருவாகிறது. சிப்பியின் கண்ணிர் முத்துக்களைக்கொண்டு, மனைவியின் கண்ணீர் முத்துக்களைத் துடைக்கலாம்,’ என்பது போன்று எழுதியதாக எனக்கு நினைவு.

‘துக்ளக்’ பத்திரிக்கையில் வரும் ‘சோ’ ராமசாமியின் அரசியல் சார்ந்த கேள்வி-பதில் பகுதியும் வெகுவாக விரும்பிப் படிக்கப்படுவது. நான் ‘துக்ளக்’ வாங்கியவுடன் படிப்பது, அதிலுள்ள தலையங்கத்தையும் கேள்வி-பதில்களையுமே. அரசியலை உன்னிப்பாகக் கவனித்து, நுணுக்கமாக ஆராய்ந்து, கூர்மையாகக் கணித்து, அச்சமின்றி, தயவு தாட்சண்யமின்றி, ஓரளவு நகைச்சுவையுடன் அவர் இப்பகுதியை வழங்கி வருகிறார். பெரும்பாலும் அவர் கணிப்பு பொய்ப்பதில்லை. பத்திரிக்கையின் சார்பில், வருடாவருடம் ஆண்டுவிழா எடுத்து, வாசகர்களைக் கூட்டி, அக்கூட்டங்களிலும் வாசகர்களின் கேள்விகளுக்கு live-வாக பதில் அளித்து வருபவர் ‘சோ’ மட்டுமே. சமீபத்தில் நான் ‘துக்ளக்’ இதழில் ரசித்த ஒரு பதில். சோ இப்பொழுது நடந்துவரும் தி.மு.க அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர். தி.மு.க அரசு நன்றாக நடந்துவருகிறது என்று நினைக்கின்ற ஒரு வாசகர் சோவிடம் கேட்கிறார்: ‘நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! கடந்த நான்கு மாதங்களில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி?.’ சோ அதற்குச் சொல்கிறார்: ‘இதோ, நெஞ்சில் கை வைத்துவிட்டேன். ஐயையோ! திக் திக் என்றிருக்கிறது!’ என்ன சொல்லவேண்டுமென்று நினைத்தாரோ, அதைச் சுருக்கமாக, நயமாகச் சொல்லிவிட்டர் சோ.

கேள்வி-பதில் பகுதியில், தனக்கென்று ஒரு தனி வழியைக் கடைப்பிடித்து, ஒரு ரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டி வைத்திருப்பவர் நடிகர் பாக்கியராஜ். அவரின் ‘பாக்கியா’ இதழலில் அவர் நடத்திவரும் கேள்வி-பதில் பகுதி குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது. எல்லாவற்றிற்கும், ஜெயலலிதா போல், குட்டிக்கதை ஒன்றைச் சொல்லி, எதையுமே நீட்டி முழக்கி, கூட்டிப் பெருக்கி பதில் அளிப்பது இவரின் தனி ஸ்டைல். பாலியல் சாமாச்சாரத்தை அதிகமாகத் தன் பதில்களில் கலப்பதும் இவரின் தனித்தன்மை. ஒருவர் கேட்டார், ‘ரத்தினச் சுருக்கமாக ஏதாவது சொல்லக்கூடாதா? என்று. பாக்கியராஜ் வழக்கம்போல் அந்த வேண்டுதலுக்கும் ஒரு பதிலை 15 வரிகளில் எழுதி, கடைசியில், ‘எதையும் சுருக்கமாகச் சொல்லிப் பழகவேண்டும்’ என்று ஒரு புத்திமதி வேறு வழங்கி, முடித்திருந்தார். ஆனாலும், இவர் சுவாரஸ்யமாக பதில் அளிப்பதில் கில்லாடி என்றுதான் சொல்ல வேண்டும்.

பாக்கியராஜிடம் ஒருவர் கேட்டார்: ‘யோவ்! எதைய்யா வெறுப்பேத்தும் குசும்பு?’  அதற்கு அவர் எழுதினார்: “ஒருத்தன் டிக்கட்டில்லாம, ரயில்ல ஏறி, TTR-ரிடம் மாட்டிக்கிட்டான். அவன்கிட்ட, ‘ஏன்டா திருட்டு ரயில் ஏறினே’ என்று TTR கேட்டார்.  அதற்கு அவன், ‘சாமி! சத்தியமா இது திருட்டு ரயில்ன்னு எனக்குத் தெரியாது’ என்றான்.   இது TTR-ஐ வெறுப்பேத்தும் குசும்புதானே?”

இன்னொரு பத்திரிக்கையில், புதுக்கவிதைக் கேள்விகளுக்கு புதுக்கவிதையிலேயே பதில் அளித்திருந்தார்கள்! கேள்வி: ‘செத்தவர்கள் பிழைப்பது தேர்தல் அன்றுதானே?’ பதில்: ‘ஆமாம்; ஒட்டுப் போட்டுவிட்டுத் திரும்பி வந்த பிணம் திடுக்கிட்டது. அதன் கல்லறையில் இன்னொரு பிணம்.’ வெண்பாவில் வினா தொடுத்து, வெண்பாவிலேயே விடை கிடைக்கப் பெற்றவர்களு முண்டு.

சமயம் சார்ந்த ஒரு இலக்கிய இதழில், சிந்தனையைத் தூண்டும் உயர்ந்த கருத்துக்களை, ஆன்மீக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு, ஒரு பெரியவர் விடையாக அளித்து வந்தார். ஒரு கேள்வி: ‘படிப்பதனால் அறிவு வருமா?’.அக்கேள்விக்கு அவர் அளித்த பதில்: “வராது! படிப்பதினால் அறியாமை விலகும்!! ஏனென்றால், அறிவு என்பது உயிருள்ள எல்லாவற்றிற்கும் பிறவியிலேயே இருப்பது. ஓரறிவிலிருந்து, ஆறறிவுள்ள உயிர்கள் எண்ணில் கோடி உள்ளன. அவைகளில், மனிதன் மட்டுமே படிக்கிறான். ஆனால், மற்ற உயிரினங்கள் படிப்பதில்லை. இருந்தும் அவைகளுக்கும் அறிவுண்டு என்பது, விஞ்ஞானம் ஆய்ந்தறிந்து, உறுதி செய்த ஒரு உண்மை. அதானால், படிப்பதால் அறிவு வரும் என்பது தவறு. படிப்பதினால் அறியாமை விலகும். படிக்கப் படிக்க அதுவரை அறியாதிருந்தவகைகளைப் பற்றிய அறியாமை விலகும். அவைகளைப் பற்றிய தெரிவும் தெளிவும் கிட்டும். அறியாமை என்பது அழுக்கு. ஆன்மா என்பது ஆடை. ஆடையில் அழுக்கு. ஆடையைத் தோய்க்க அழுக்கு விலகும். கற்ற கற்க அறியாமை என்னும் கசடு நீங்கும். இதைத்தான் வள்ளுவர், ‘கற்க கசடற’ என்றும், ‘கற்றனைத்து ஊறும் (வரும் அல்ல) அறிவு’ என்றும் குறிப்பிடுகிறார். சுவாமி விவேகாநந்தரின் வார்த்தைகளில் ‘education is inculcation of knowledge already in men’ too reveal this fact.”

கேள்வி-பதில்களைப் படிப்பதில் ஒருவத குறுகுறுப்பு உணர்வு எழுவதுண்டு. கிட்டத்தட்ட,   வம்பு பேசுவதிலும் அரட்டையடிப்பதிலும் உள்ள குறுகுறுப்பும் சுகமும் சுவாரஸ்யமும் இதிலுமுண்டு.  ஆனாலும், பல செய்திகளை, விஷயங்களை சுலபமாக, சுருக்கமாக, சுவையாக, தெரிந்துகொள்வதற்குரிய தொகுதி, வினா-விடைப் பகுதி என்பது என் கருத்து.

தனித்தன்மை வாய்ந்த வினா-விடைப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பத்திரிக்கைகளில் பெரும்பாலும் இது ஒரு பல்சுவை, பல துறைப் பகுதி. பொதுவாக, எல்லோருக்குமே தன்னிடம் கேள்வி கேட்பவர்களைக் கட்டோடு பிடிக்காது. இது கருப்பையில் இருக்குபோதே இருந்து, பள்ளி-கல்லுரிப் பருவங்களில் வளர்ந்து, கல்லறையில் அடங்கும் வரை இருப்பது. அப்படியிருக்கும்போது, ஒருவர் விரும்பி கேள்விகளை வரவழைத்து, தேடித் தேடி விடைகண்டு, அவ்விடைகளை சுவையுடனும் செறிவுடனும் தொடர்ந்து வழங்கி வருவது, சிந்தித்துப் பார்த்தால் ஒருவகை அதிசயமென்றே தோன்றுகிறது! அதற்கு, வணிக நோக்கம் ஒரு காரணமாக இருந்தாலும் கூட!!

விளித்தல், வினவுதல், விசாரித்தல், தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல் என்பது ஞானத்திற்கான ஏழு படிகள், நிலைகள். வினா-விடை பகுதிகள் இந்த எழுமைக்கும் ஏது செய்வதென்பதே இந்த எளியேனின் கருத்து.ஒரு வினாவின் முடிவு ஒரு விடை; ஒரு விடையின் முடிவு மீண்டும் ஒரு வினா! சிந்தனை வளர்ச்சியும், சித்தாந்த எழுச்சியும் இந்த வினா-விடை-வினா என்ற தொடர்ச் சுழலின் விளைவுகளல்லவா?

guru@nhcl.com.hk

 

(ஹாங்காங் இலக்கிய வட்டம் நவம்பர் 11, 2006 அன்று அபுனைவு என்ற பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)

 

******
 [தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com]

Series Navigationமரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]நிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின்  புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்  முதல் சோதனை முடிந்தது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *