பீகே – திரைப்பட விமர்சனம்

This entry is part 22 of 33 in the series 4 ஜனவரி 2015

ராம்ப்ரசாத்

17pk-poll1படம், விண்ணிலிருந்து ஒரு விண்வெளிக்களம் வழியாக அமீர்கான் பூமியில் ராஜஸ்தானில் ஒரு ரயில் பாதைக்கருகில் இறங்குவதில் துவங்குகிறது. பிறந்த மேனியாக இறங்கும் அமீர்கானின் கழுத்தில் அந்த விண்கலத்தை இயக்கும் ரிமோட் தொங்குகிறது. அமீர் இறங்குவதை பங்கஜ் உதாஸ் பாடலை கேட்டுக்கொண்டே நடை போடும் ஒரு ராஜஸ்தானி பார்க்கிறான். (பங்கஜ் உதாஸ் எத்தனையோ பாடல்களை தந்திருந்தாலும் ‘தும் தோ டஹரு பர்தேசி’ பாடலையே ஏன் அவருக்கு அடையாளமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஷாரூக்கானின் குச்குச் ஹோத்தா ஹை, பீகே என ஒரு லிஸ்டே போடலாம் போல)

அந்த ரிமோட்டை ஏதோ விசேஷக்கல் என்று நினைக்கும் அந்த ராஜஸ்தானி, அமீரிடமிருந்து அந்த சாவியை நொடிப்பொழுதில் பறித்துவிட்டு, கடந்து போகும் ரயில் தப்பிச் சென்றுவிட, சாவியின்றி விண்கலத்தோடுனனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, அமீர் ராஜஸ்தானிலேயே தங்க நேர்கிறது.

நாம் எல்லோரும் எப்படி டிசைன் டிசைனாக விண்வெளி ஓடங்கள் செய்து, குப்பைபோட்டு வீணாக்க இன்னொரு கிரகம் கிடைக்கிறதா என்று தேடுகிறோமோ, அதே போல், அமீர் வேற்றுகிரகத்திலிருந்து, பூமையை வந்தடைபவர். அவரது கிரகத்தில் எல்லோரும் பிறந்த மேனியாகவே இருக்கிறார்கள். பாஷை என்று ஏதும் இல்லை. டெலிபதியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டாலே, அவர் ஆழமனதிலிருந்து, மொழி உள்பட எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

சாவி தேடி ராஜஸ்தானில் சுற்றுகையில் சஞ்சய்தத் சினேகம் கிடைக்கிறது. அங்குள்ள மக்களை மேலதிகம் தெரிந்துகொள்ள அமீர் ராஜ்ஸ்தான் பெண்களின் கைகளை பிடிக்க முயல, கலவரம் வந்துவிடுமோ என பயந்து, சஞ்சய் தத் அமீரை ஒரு ஆடல் மகளிர் விடுதியில் விட, ஒரு விபச்சாரியின் கைகளை விடியும் வரை பிடித்து, பாஷையையும் (போஜ்பூரி) கற்றுக்கொள்கிறார் அமீர்.

ரிமோட்டைத் தேடி தில்லி பயணிக்கிறார் அமீர். அமீர். தில்லியில் ஒரு போலீஸ்காரரிடம் ‘ரிமோட் காணவில்லை’ என்ற சொல்ல, ‘குடித்திருக்கிறாயா?’ என்று போலீஸ் கேட்கிறார். (குடித்துவிட்டு வந்திருக்கிறாயா என்பதை ஹிந்தியில் பீகே ஆ ரஹே ஹோ க்யா என்பார்கள். அந்த பீகேவைத்தான் படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள்.). தில்லியில், அனுஷ்காவின் அப்பா வழிபடும் சுவாமிஜியிடம், அமீரின் ரிமோட் அகப்பட, சுவாமிஜியுடன் கடவுள் இருக்கிறாரா இல்லையா கேள்விகளின் மூலமான போரில் , இறுதியில், அனுஷ்காவின் காதல் கைகூடுகிறது. ஒரு தலைக்காதலுடன் அமீர் தனது கிரகம் திரும்பிச்செல்வதாக படம் முடிகிறது.

குலுங்கும் கார்களில் கசமுசா செய்யும் காமுகர்களிடமிருந்து ஆடைகளை கவர்ந்து செல்வதன் மூலம், ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதமான ஆடைகளையும், ஆடைகளின் நிறங்களை வெவ்வேறு மதங்கள் எப்படி அடையாளப்படுத்துகின்றன என்கிற காட்சிகளின் மூலமாக ஒரே நிறத்துக்கு எப்படி வெவ்வேறு விதமான கற்பிதங்கள் என்பதை பகடி செய்கிறார்கள்.

எந்த பகவானை கும்பிட்டால் தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல், எல்லா பகவானையும் கும்பிட்டால் யாரேனும் தனக்கு வழிகாட்டுவார்கள் என்றெண்ணி, கங்கையில் முங்குவது, லிங்கம் மற்றும் புத்தருக்கு பாலாபிஷேகம் செய்வது, இரும்பால் தன் உடலை தானே வருத்திக்கொள்வது காலணிகளை சுத்தம் செய்வது என அமீர் செய்யும் செயல்களில், மனித மனம், இலக்கற்று தெளிவற்று, குழப்ப நிலையில் இருக்கையில் பற்றிக்கொள்ள கழுகொம்பு தேடி, தான் இறைவன் என்கிற கற்பிதம் பிறக்கிறது என்பதைக் காட்டுகிறார்கள். .

என்னைக் கேட்டால், முதலில் எது எதன் மீதோ நம்பிக்கை வைக்கத்துவங்கி, ஒரு கட்டத்தில் நம்பிய எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை பொய்த்து போகையில் தான், மனித மனங்களுக்கு இறுதியாக பொய்க்கவே முடியாத‌ நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், மனிதன் ஆறறிவு படைத்தவன் அல்லவா. எதை நம்ப எத்தனித்தாலும், அதையும் நோண்டிப் பார்க்கத் தோன்றுவது இயல்பு. அது அடுத்து என்ன? அடுத்து என்ன? என்கிற தேடலின் இயல்பு. நோண்டிப் பார்க்க முனைந்தாலும் அகப்படாத ஒன்றே “அடுத்து என்ன” என்கிற கேள்விக்கான பதிலை மட்டுப்படுத்துவது, தாமதப்படுத்துவது. அது ஒரு தந்திரம் மட்டுமே. மனிதனின் நம்பிக்கைக்கான இறுதி வடிவம் என்பது கேள்விக்கான பதிலைத்தராமல் இழுத்தடிப்பது. பதில் என்ற ஒன்று இல்லை என்பதாலேயே அது பொய்க்க முடியாததாக ஆகி விடுகிறது. அதுவே அதை வெல்ல முடியாததாகவும் ஆக்குகிறது. இதுவரை கண்டிராத, ஆராய வாய்ப்பளிக்காத, நோண்ட வாய்ப்பளிக்காத, ஆனால் மனிதனின் வியப்பை சம்பாதிக்கக்கூடிய‌ ஒன்று மட்டுமே தான், அந்த பொய்க்கவே முடியாத நம்பிக்கையினை தர இயலும். அது தான் இறைவன் என்கிற கற்பிதம் என்பேன்.

இழுத்தடிக்கும் ஒன்று ஈர்க்கவும், அதே நேரம் ஆச்சர்யப்படவும் வைத்தால், அது கடவுள். இழுத்தடிக்கும் ஒன்று அதே நேரம் பயப்பட வைத்தால், அது சாத்தான். புரிகிறதா?

‘அடுத்து என்ன? அடுத்து என்ன?’ என்கிற கேள்வி மனிதனை துரிதப்படுத்துகிறது. இன்றைய நவீனத்துவ உலகில், சுற்றுப்புறவியலாளர்கள் சொல்வது என்னவெனில், இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்த நூறு ஆண்டுகளில் தான் பூமி மிக மிக அதிகமாக மாசுபட்டிருக்கிறது என்பதுதான். கடந்து நூறு ஆண்டுகளில் தான் மனிதன் பற்பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான். ஆனால் விளைவு, அடுத்தென்ன என்கிற மனிதனின் தேடல், அழிவை துரிதப்படுத்துகிறதே அன்றி வேறில்லை. இந்த வேகம் ஏன் என்கிற கேள்வியை அமீர்கானின் ‘பீகே’ எழுப்பவில்லை என்பதே நான் அவதானித்தது. பிறக்கும் அனைத்தும் அழியத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த பூமியில் எல்லோருக்குமான உணவை இயற்கை உணவுச்சுழற்சி முறையாக வைத்திருக்கிறது.ஆக உண்ண உணவு இருக்கிறது. வசிக்க இருப்பிடம் இருக்கிறது. அப்படியிருக்க, ஏன் துரிதப்பட வேண்டும்?

இப்போதிருக்கும் இயற்கை யாரோ ஒரே நொடியில் சொடுக்கி உருவாக்கியதல்ல. பல்லாயிரங்கோடி வருடங்களாக நடந்த பல நிகழ்வுகளின் விளைவே இது. பேரண்டத்தின் ஆயுளை மொத்தமாக கணக்கில் கொண்டு ஒரு வருடத்தை உருவாக்கினால், மனிதன் தோன்றியது அந்த ஒரு வருடத்தின் கடைசி நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் தான். அப்படி இருக்க, மனிதன் கடைசி ஒரு மணி நேரத்தில், உலகை ஆராய்ந்து கண்டுபிடித்த கோட்பாடுகள், கற்பிதங்கள், அனுபவம் எல்லாம் இயற்கையின் பல்லாயிரங்கோடி வருட அனுபவத்திற்கு எப்படி ஈடாகும்? மனிதம் பிழைத்திருக்க வேண்டாமா? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். பல்லாயிரங்கோடி வருடங்கள் இப்பிரபஞ்சத்தின் வயது. இந்த காலகட்டத்தில் எதை எதையோ உருவாக்கி, எப்படியெப்படியோ அழித்திருக்கிறது. மனிதன் பிற விலங்குகளை விடவும் உயர்வானவனே. ஆனால், அது பிரபஞ்ச விதிகளிலிருந்து எவ்விதத்திலும் மனிதனை விலகி இருக்க, தகுதியாக்கப்போவதில்லை.

“பிரபஞ்சங்களுக்கும், கோள்களுக்கும், பூமிக்கும், அதனுள் நமக்கும், நம் அத்தனை செயல்களுக்கும் கடவுள் தேவையில்லை. இயற்பியல் விதிகளே போதும்” என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்வதை நினைவூட்ட விரும்புகிறேன்

“காட்டில் ஒரு மரம் வீழ்கிறது. அதை எந்த மனிதனும் பார்க்கவில்லை என்றால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அதே மரம் விழுவதை ஒரு மனிதன் பார்க்கிறான் எனில், அதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறது. மனிதன் தரும் அர்த்தங்களை அன்றியும் வேறு அர்த்தங்கள் இப்பூவுலகிற்கு இல்லை ” என்கிறார் சார்த்தர். ஒரு மனிதனுக்கு கஷ்டங்கள் வருவது இன்னொரு மனிதனாலே தான். ஏனெனில், கஷ்டங்களை உருவாக்குவது இயற்கை அல்ல, மனிதனின் அர்த்தங்களே. பேருண்மை என்னவெனில், மனிதனுக்கு எட்டாத அர்த்தங்களையும், இந்த இயற்கை தன்னுள்ளே அடக்கித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் செய்வது வெறும் டிகன்ஸ்ட்ரக்ஷன் (deconstruction) மட்டுமே. அதுகூட முழுமையாக அல்ல.

அந்த‌ அர்த்தங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறது பீகே.

இன்னொன்றை பற்றி மிக முக்கியமாக சொல்ல வேண்டும்.

‘எங்கள் கிரகத்தில் எல்லோரும் அம்மணமாகவே இருப்பார்கள். பறவைகள், விலங்குகள் எல்லாம் அம்மணமாகத்தானே இருக்கின்றன‌’ என்பார் அமீர். இது குறித்து ‘ஏவாளின் ஆப்பிள்கள்’ என்றொரு கவிதை கூட எழுதியிருக்கிறேன். அந்தக் கவிதையின் சாரம் இதுதான்.

மனிதன் தவிர வேறு எந்த விலங்கினத்திலும், வன்புணர்ச்சி என்பது இல்லவே இல்லை. பெண்ணை கவர ஆண் விலங்குகள் தான் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும். இறுதியில் வெல்பவருக்கே பெண். தோற்ற ஆண் விலங்குகள் வேறு ஜகா மாற்றிக்கொள்ளும். பைபிளில் வரும். ஆப்பிளை உண்ட பின், ஏவாளுக்கு குறிகள் பற்றிய பிரஞை ஏற்பட்டு, மறைக்க எத்தனிக்கிறாள். வன்புணர்ச்சிக்கான விதை அந்த இடத்தில் தான் விழுந்திருக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில், அத்தருணத்தில் குறிகள் பற்றி கவலைப்படாத வேறு எந்த விலங்கினத்திலும், வன்புணர்ச்சி இல்லை. இன்னும்சொல்லப்போனால், டார்வினின் பரிணாமக்கொள்கையின்படிகூட ஆண்டாண்டுகால உயிர்மலர்ச்சி வேறுபாடுகளால் வெவ்வேறு இனங்கள் உருவானதே ஒழிய, வன்புணர்ச்சி உருவாகவே இல்லை.

ஒரு சமன்பாடு சொல்கிறேன் கேளுங்கள்.

பெண்மை நிர்வாணத்திலிருந்து குறிகளை மறைக்கத்துவங்குகிறது. ->
மறைத்து மறைத்தே அதை பிரத்தியேகப்படுத்துகிறது. ->
பிரத்தியேகப்படுவது வெல்ல வேண்டியதாகி விடுகிறது. ->
வெல்வதற்கு ஆண் இன‌ம் முகமூடி அணிகிறது. ->
பெண்மை ஏமாறுகிறது. ->
ஏமாந்த பெண்மை மேலும் மறைக்கிறது. ->
மறைத்து மறைத்தே அதை பிரத்தியேகப்படுத்துகிறது. ->…………………..

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

வெற்றுகிரகத்திலிருந்து வருவதாகச் சொல்லும் அமீருக்கு பூமி மனிதர்களைப் போலவே கண்கள், கால்கள், கைகள் என எல்லா உடலுறுப்பும்.

பூமி ஒரு ப்ரத்தியேக கிரகம். சூரியனுக்கு மிக மிக சரியான தூரத்தில் நிற்பதால், குளிரில் உறையாமலும், உஷ்ணத்தில் எல்லாமே ஆவியாகி ஜூபிடர், சாடர்ன் போல வெறும் வாயு கிரகமாகிவிடாமலும் இருக்கிறது. சிலிக்கான் அடிப்படைத்தாது. கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியன அடிப்படையாக இருப்பதால் தான் மனிதனுக்கு மெல்லிய தோலினூடே எலும்பு, மஜ்ஜை என உருவாகியிருக்கின்றன.

அமீர் போல, பூமி மனிதன் போலவே ஒரு ஏலியன் இருக்க, வாய்ப்புக்கள் மிக மிக குறைவு. ஏனெனில், நான்காவது பரிமாணமான காலம் என்பது. பூமி போலவே ஒரு கிரகம் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும், நான்காவது பரிமாணமான காலம் அங்கும் பூமியில் போல் இருக்காது. அதற்கு என்ன காரணம் என்று எழுதப்போனால், தனியாக ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டியிருக்கும் என்பதால் விட்டுவிடலாம். சூரியன் மற்றும் நிலவுடனான தூரத்தில் இம்மி மாறினாலும், ஈர்ப்பு விசையில் மாற்றம் வரும். அப்படி வந்தால், மனிதனின் உருவம் நிச்சயமாக இருக்காது. செல்வ ராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இந்த தவறை செய்திருப்பார்கள். ஒரு காட்சியில், இரண்டாம் உலகில் தலைக்கு மேல், இரண்டு பெரிய நிலாக்கள் தெரியும். அத்தனை பெரிய நிலாக்களை ஈர்க்கும் கிரகத்தில் மனிதர்கள் சித்திரக்குள்ளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், பூமியில் பார்த்த அதே ஆர்யா, அனுஷ்கா அங்கும் இருப்பார். அதே உயரத்தோடு.

‘ப்ரிடேட்டர் 2’ படத்திலும் இப்படி செய்திருந்தார்கள். ஒரு காட்சியில், காட்டின் எல்லைக்கு வந்து பார்த்தால் தலைக்கு மேல் இரண்டு கிரகங்கள் தெரியும். ஆனால், அதே பூமி மனிதர்கள். இதை சரியாகக் காட்டியது ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தில் தான். இந்த லாஜிக் ஓட்டை சிக்கல்களையெல்லாம் தவிர்க்கத்தான், ஜேம்ஸ் கேமரூன் மிக மிக புத்திசாலித்தனமாக, மனிதர்கள் அவதார் எனப்படும் உடற்கூடுகள் மூலமாக ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதாக காட்டியிருப்பார். மிக மிக நல்ல தந்திரம் அது. அந்த கிரகத்தில், ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், அவதார்கள் உயரமாக இருப்பார்கள். தொங்கும் பாறைகள் இருக்கும். போதாத குறைக்கு, படத்தின் வில்லன் ஒரு காட்சியில் உடற்பயிற்சி செய்துகொண்டே வசனமாகவும் சொல்வார். ‘அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையெனில் தசைகள் வலுவிழக்கின்றன’ என்கிற அர்த்தத்தில்.

பீகே, இரண்டாம் உலகம் போன்ற படங்கள், திரைப்படங்கள் எடுக்க கற்பனை வளமும், படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால் மட்டும் போதும், என்றே நினைக்க வைக்கின்றன. உலகத்தரமான படம் உருவாக்க வேண்டுமெனில், வெறும் கற்பனை மட்டும் போதாது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகிறது.

காண்டம் வைத்து பத்திரிக்கை அலுவலகத்தில் அமீர் கேட்கும் கேள்விகள் நெத்தியடி.
“செக்ஸ் வைத்துக்கொள்ள இருக்கிறேன் என்று இத்தனை பகிரங்கமாக நாங்கள் பேசுவதில்லை”
“அட!!.. மேளம் கொட்டி ஊருக்கெல்லாம் சொல்லி, திருமண நாளன்று மட்டும் பகிரங்கமாக ஏன் சொல்கிறீர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள இருக்கிறேன் என்று”

அமீரின் இதே வசனத்தை, பூப்பு நீராட்டு விழாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் விரும்பத்தகாதவைகள் ஒருபக்கம் எனில், விரும்பத்தக்கவைகளும் இருந்தன தாம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

முன்னெல்லாம், பெண் பார்க்க சென்றால் பெண்ணை பாடச்சொல்லியோ, அல்லது வந்தவர்களுக்கு கேசரி செய்து தர சொல்லியோ சொல்வார்கள். பெண் சுதி தப்பாமல் பாடிக்காட்ட வேண்டும். வந்திருப்பவர்கள் எத்தனை எண்ணிக்கையோ அதற்கேற்றார்போல் கேசரி செய்ய வேண்டும். அந்த நாளில், பதட்டத்துடன் உறவுகள் மத்தியில் சுதி பிசகாமல் பாடுவது அத்தனை லேசல்ல. அதற்கு மிகப்பல பயிற்சி வேண்டும். அதேபோல, திடீரென்று கேசரி செய்யவும் ஒரு பயிற்சி வேண்டும். அந்த நாள் வரையில் அந்தப் பெண், தனது நேரத்தை எப்படி செலவு செய்திருக்கிறாள், கற்றலில் எத்தனை துல்லியம் என்பன போன்றவைகளை தெரிந்துகொள்ளும் புத்திசாலித்தனமும், செளகர்யமும் இணைந்தே இருந்தது.. அதோடு அந்தப் பெண்ணின் கேசம், அதன் அடர்த்தி, இன்னும் பல விஷயங்களைக் கொண்டும் கூட அந்தப் பெண் பற்றி பல விஷயங்களை அவதானிக்க முடிந்தது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், திடுமென ஒரு பெண்ணை பார்க்க கிடைக்கும் சில மணி நேரங்களில் அவளைப் பற்றி மிக துல்லியமான அனுமானம் கொள்வது எப்படி என்கிற கேள்விக்கு ஒரு ப்ராசஸ் இருந்தது. என்னதான் அது மனிதன் உருவாக்கிய கடவுள் என்கிற கற்பிதத்தை சார்ந்து இருந்தது என்றாலும், இந்த சிந்தனாமுறை, அக்காலத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கும் ஒரு புத்திசாலித்தனத்தை வழங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அது ஆரோக்கியமான சிந்தனையாக இருந்தது. மெளனமான நாகரிகமான முறையில் அனுமானத்திற்கு வழிவகை செய்தது.

நான் தொன்மைகளை மீள்கட்டமைப்பு செய்வதாக யாரும் நினைக்க வேண்டாம்.

இதெல்லாம் பழசு என்று இப்போது ஒதுக்கியாகிவிட்டது. இதனால் பல குடும்பங்களில் குழப்பங்கள் தாம். வெளியே சொன்னால் வெட்க்ககேடு என்று பல விஷயங்கள் வெளியே வருவதில்லை. ஆனால், அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள் , தற்கொலைகள், குடும்பம் என்னும் அமைப்பு மேல் பெருகி வரும் நம்பிக்கையின்மை இந்த புத்திசாலித்தனமின்மையின் ஒரு சரியான பொருத்தமான‌ குறியீடு என்றே நான் நினைக்கிறேன்.

மனிதன் உருவாக்கிய கடவுள்கள் , மதங்கள் போன்றவைகளை , அவைகளின் குறைகளுக்காக, பிற்போக்குத்தனங்களுக்காக, கைவிடுவது சரியே. ஆனால், கடவுள் பெயரால், மதங்கள் பெயரால் நமக்கு நாமே இதுகாறும் உருவாக்கி வைத்திருந்த இது போன்ற செளகர்யமான, புத்திசாலித்தனமான முறைகளை கைவிடாமலோ, அல்லது அதற்கு சமமான முறைகளை நவீன உலகில் கட்டமைத்தோ பயணித்தலே பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்த மனித இனத்தின் அனுபவ அறிவை நாம் பாதுகாத்துக்கொள்வதும், சரியாக பயன்படுத்திக்கொள்வதுமாகும். இல்லையெனில், பாஸ்மதி அரிசியின் வரிசையில் மேலும் பல சேரலாம்.

பீகே இந்த கோணத்தில் எதையும் சொல்லவில்லை.

அமீர்கான், விரைத்தபடியே, கைகளை அசைக்காமலே ஓடுகிறார். திரைப்படம் முழுவதும் கண்களை சிமிட்டாமல் விரைத்து பார்க்கிறார். (ஆனால், க்ளைமாக்ஸ் காட்சி பேட்டியில் மட்டும் இயல்பாகவே அழுதபடி பேசுகிறார்) செவிகள் விடைத்திருக்கின்றன. டெர்மினேட்டர் படத்தில் அர்னால்டுக்கு கிடைத்த செளகர்யம் அமீருக்கு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

சமூக நடைமுறைகளை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் தான். ஆனால், பீகே எழுப்பும் கேள்விகளை, இதற்கு முன்னும் பலரும் பல படங்களில் காட்டியிருக்கிறார்கள்.

“பாலை ஏன் கருங்கல்லுக்கு ஊற்றுகிறீர்கள்.. பசியோடிருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுங்கள்”
“கடவுள் ஒன்றுதான். மனிதர்கள் உருவாக்கும் கடவுள்கள் தேவையில்லை”
“பெண் வயசுக்கு வந்ததைப்பற்றி சத்தம்போட்டு சொல்வானேன்”
“செக்ஸை ஏன் பாவமாக, பகிரங்கமாக பேசக்கூடாத விஷயமாக்குகிறீர்கள்”
“வெறும் கல்லை, கடவுளாக்காதீர்கள்”

இந்தக் கேள்விகளை பீகே தான் முதன் முதலாக முன்வைக்கிறது என்றில்லை. சாமான்யர்கள், இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்கள் கூட இத்தகைய கேள்விகளை கேட்பார்கள் தாம். அதோடு அவர்களின் பார்வைக்கோணம் முடிந்துவிடும். அதே போலவே பீகேவும் முடிந்துவிட்டதுதான் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு  உலை முழுத்திறனில் இயங்குகிறதுMuylla Nasrudin Episodes by jothirlatha Girija
author

ராம்ப்ரசாத்

Similar Posts

2 Comments

 1. Avatar
  Re.Karthigesu says:

  நல்ல அறிவுபூர்வமான கட்டுரை. ஒரு விமர்சனத்துக்கும் மேலான அலசல். படக்கதையின் தத்துவார்த்த விஷயங்களை அலசுகிறீர்கள். அவை தீவிர சிந்தனைக்குரியன. ஆனால் இது ஒரு அறிவியல் புனைவுதானே! புனைவு என்பதினால் அதற்குரிய குறைகளும் இருப்பது இயல்பே. இது 100 விழுக்காடு அறிவியல் உண்மைகளுக்கு ஒத்துப்போவது தேவையில்லை. படைப்பாளர் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம்.

  வேற்றுக் கிரகவாசிகள் எப்படி இருப்பார்கள் என்பதே ஹேஷ்யம்தான். அறிவியலாளர்களின் அந்த ஹேஷ்யங்களை வைத்துத்தான் புனைவாளர்கள் தங்கள் கோட்டைகளைக் கட்டுகிறார்கள். அபத்தங்கள் சிறந்த ஆங்கிலப் படைப்புக்களிலும் உண்டு. எல்லா வேற்றுக் கிரகவாசிகளும் அங்கே சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அனைவருக்கும் கை கால்கள் உண்டு.

  கார்ல் சாகன், ஆர்தர் சி.கிளார்க் போன்றவர்களிடம் உள்ள புத்திசாலித்தனம் மற்ற புனைவாளர்களிடம் கிடையாது. ஆனால் பீகே இந்திய சினிமாவில் அறிவியல் புனைவை முன்வைத்ததே பெரிய விஷயம்தான்.

  அரிய சிந்தனைகளை எழுப்பிய உங்கள் கட்டுரைக்கு நன்றி. ரெ.கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *