தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.

This entry is part 12 of 17 in the series 1 பெப்ருவரி 2015

கோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும் குளத்தங்கரையில்தான் கிடைத்தது.அவள் என்னிடம் எதையோ சொல்ல வருகிறாள் என்பது எனக்குத் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள நானும் ஆவல் கொண்டிருந்தேன்.

அன்று பால்பிள்ளையும் நானும் குளத்தங்கரை அரசமரத்தடியில் நின்று தூண்டில் போட்டுக்கொண்டிருந்தோம்.தொலைவில் வயல் வெளியின் வரப்பில் கோகிலம் வருவதைப் பார்த்தேன்.அவளுடைய இடுப்பில் கூடை. அதில் நிறைய பசும் புல். அவர்களுடைய வீட்டில் கறவைப்  பசுக்கள் இருந்தன.

” அண்ணே.. வரப்பில் கோகிலம் வருது. உங்களிடம் ஏதாவது பேசும். நான் அந்தப் பக்கம் போய் விடுறேன். ” இவ்வாறு கூறியவன் கையில் தூண்டிலுடன் குளத்தின் மறு கரை பக்கமாக நடை போட்டான்.நாங்கள் பேசுவது அவனுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தேன். ஒருவேளை கோகிலம் அவனிடம் சொல்லியிருப்பாளா என்பது தெரியவில்லை.

அரசமரத்தடியில் வந்ததும் அவள் நின்றாள். நாணத்தால் தலை குனிந்தாள். அப்போது அவள் வேறு விதமாகத் தோன்றினாள். கலகலவென்று சிரிக்கவில்லை. அந்த நிலையில் அவளைக் கண்ட எனக்கும் என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன். எங்களை அந்த நிலையில் ஊரார் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற பயம் எனக்கு. அவளோ அந்த பயம் கொஞ்சமும் இல்லாதவள் போன்றே தோன்றினாள்.

”  தூண்டில் போட்டு முடிந்ததா? கைகளைக் கையை கழுவி விடவா? ” பழைய கிண்டல் வெளிவந்தது.

” இல்லை. அதெல்லாம் வேண்டாம். அங்கே  பால்பிள்ளை இருக்கிறான். ” எச்சரித்தேன்.

அவளோ அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப் படவில்லை.

” இருந்தா இருந்துட்டு போவட்டுமே? உங்களிடம் நான் ஒண்ணு சொல்லணும். அதை இப்போதே சொல்லிடுறேன். உங்களைப் பார்த்ததிலிருந்து எப்போதும் ஒங்க ஞாபகம்தான்.நீங்கள் நம்பமாட்டீங்க. அதுதான் உண்மை.” சர்வ சாதாரணமாகவே பேசினாள். எனக்கோ அது கேட்டு உடலில் லேசான நடுக்கம் உண்டானது!

” நீ சொல்ல வருவது எனக்கு ஓரளவு தெரியுது. ஆனால் இது தவறு. நீ திருமணம் ஆனவள்.அதிலும் புதுப் பெண்.இப்படி நீ எண்ணுவதும் சொல்வதும் சரியில்லை.உன் எண்ணம் விபரீதமானது. ”  நான் உண்மை நிலைமையை விளக்க முயன்றேன்.

” நீங்கள் இப்படிதான் சமாதானம் சொல்லுவீங்க என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் எல்லாப் பெண்களையும் போலல்ல. நான் வித்தியாசமானவள்! அதை நீங்கள் போகப்போக புரிந்து கொள்ளுவீங்க. நான் சொல்வது உண்மை. எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை!”

” ஏன் பிடிக்கலை? இந்த ஊர் பிடிக்கலையா? அல்லது உன் வீடு பிடிக்கல்லையா? அல்லது உன்னைக் கைப்பிடித்த கணவன் ஏகாம்பரத்தைப் பிடிக்கலையா? எது பிடிக்கலை? ” வாழ வேண்டிய வயதில் வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்கிறாளே.

” எனக்கு எல்லாமே பிடிக்கலை. நான் விரும்பியா இந்த வாழ்கையை ஏற்றேன்? இங்கே பெண்ணுக்கு எந்த சுதந்திரம் இருக்கு? எப்போதுமே அடுத்தவருக்காக வாழவேண்டி இருக்கு. நானா கேட்டா பிறந்தேன். எப்படியோ பிறந்துட்டேன். எப்படியோ  ஒரு ஏழை வீட்டு பெண்ணாக வளர்ந்துட்டேன். வரதட்சணை இல்லை என்று ஒருவனுக்கு வாழ்நாள் முழுசும் வாழணும் என்பதுதான் தலை எழுத்தா? பிடிக்காத ஒருவனுடன் சேர்ந்து படுத்து குழந்தை பெற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையா? இதுதான் தலையெழுத்து என்றால் அதை நான் மாற்றிக்காட்ட விரும்புறேன். ” கிராமத்து கோகிலமா இவ்வளவு தத்துவம் பேசுகிறாள் என்று நான் வியந்துபோனேன். அவளுக்கு பதில் கூறவும் தடுமாறினேன்.

அப்போது குளத்தின் மறு கரையிலிருந்து பால்பில்லை கை தட்டி எச்சரித்தான்.தெருவிலிருந்து யாரோ வருவது தெரிந்தது.

”  சரி.சரி. நான் வரேன். ‘ அவள் என்னைக் கடந்து சென்றாள்.

அன்று இரவு திண்ணையில்  படுத்த பின் வெகு நேரம் குளத்தங்கரையில் கோகிலம் சொன்னது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தேன். எவ்வளவு பெரிய உண்மையை ஒரு சாதாரண கிராமத்துப் பெண் சொல்லிவிட்டாள்! நான்கூட அது பற்றி அதுவரை எண்ணியதில்லை. இதுதான் நம் தலையெழுத்து என்று நம்பி தமிழகத்து கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயிரமாயிரம் பெண்கள் எண்ணிப்பார்க்காத ஒன்றை இந்த கோகிலம் சர்வ சாதாரணமாக கேட்டுவிட்டாளே?

அவள் சொன்னது உண்மைதான். நாம் என்ன கேட்டா இந்த உலகில் நம் பெற்றோருக்கு பிள்ளையாகப் பிறந்தோம்? கடவுளா அப்படி நம்மைப் பிறக்க வைக்கிறார்? நாம் இவ்வாறு பிறப்பதில் ஒரு அர்த்தம் அல்லது காரணம் உள்ளது எனில், பசி பட்டினி பஞ்சத்தில் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கும், கடவுள் எந்த நோக்கத்துடன் பிள்ளைகளைத் தந்து கொண்டிடுக்கிறார்? அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு என்ன எதிர்காலம் வைத்துள்ளார்? சில ஆப்பிரிக்க நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு  பால் மாவு கூட இல்லாமல் இறக்கும் குழந்தைகளை கடவுள் ஏன் அவர்களுக்குத் தந்து அவ்வாறு பட்டினியால் இறக்க வைக்கிறார்? அதுவும் ஆண்டவரின் செயல்தானா? இது என்ன ஆண்டவருக்கு ஒரு திருவிளையாட்டா? நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. குழந்தை உற்பத்தியாவதற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு இதுவே ஆதாரம். மற்ற உயிரினங்களைப்போல் ஆண் பெண் உடலுறவு வைப்பதால்தான் குழந்தை உற்பத்தியாகிறது.அப்படி உருவானதும் நாம் வணங்கும் ஆண்டவருக்கு நன்றி சொல்லி மகிழ்வதில் தவறில்லை.

ஆனால் கோகிலம் என்னிடம் கேட்ட கேள்விகள் வேறு விதமானது.அவள் ஏன் பிறந்தேன் என்று மட்டும் கேட்கவில்லை. பெண்ணாகப் பிறந்ததின் பயன் என்னவென்று கேட்கிறாள்!

ஆண்களின் வாழ்க்கையைப் போலல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது.நாம் என்னதான் ஒரு வீட்டில் பிறந்து வளர்ந்தாலும் நம்முடைய சகோதரிகள் கடைசிவரை நம்முடனேயே நம்முடையே வீட்டிலேயே வாழ்ந்துவிட முடியாது. அதை அவர்களும் விரும்ப மாட்டார்கள். சமுதாயமும் அதை ஏற்காது. பருவம் வந்ததும் பெண்ணை ஒருவனுக்கு மணமுடித்து வேறு வீட்டுக்கு அனுப்பி வைக்கவே வேண்டியுள்ளது.அவளுக்கு வாய்க்கும் கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,விரும்புவது போன்று நடித்துக்கொண்டுதான் வாழ்நாளை அவள் கழிக்க வேண்டியுள்ளது. அவளைத்தான் சமூகம் நல்ல குடும்பப் பெண் என்று போற்றுகிறது. கணவனைப் பிடிக்கவில்லை, அவன் குடிகாரன், சோம்பேறி, முரடன், சமூக விரோதி, அடித்து துன்புறுத்துகிறான் என்று கூறி அவனுடன் வாழ விரும்பாமல் பெண் தாய்வீடு திரும்பிவிட்டால் ,அவளை வாழாவெட்டி என்றுதான் தூற்றுகிறது  இதுவே இன்றைய பெண்களின் நிலைமை.

மணமான ஒருத்தி தன்னுடைய கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்று என்னிடம் சொல்கிறாள். அவள் என்னிடம் எதை எதிர்ப்பார்க்கிறாள்? அவளுக்கு என்னால் எப்படி உதவ முடியும்? நானோ கல்லூரி மாணவன்தான். அவளுக்கு எப்படி நான் ஆறுதல் கூற முடியும்?

சென்னை செல்ல இன்னும் சில நாட்களே இருந்தன.நாளுக்கு நாள் அவளுடைய நெருக்கம் அதிகமானது.அது எனக்குள் ஒருவித அச்சத்தை உண்டு பண்ணியது.

அவள் சாதாரண கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் தாலி கட்டிய கணவனையே வேண்டாம் என்று சொல்லும் துணிச்சல்காரியாக உள்ளாளே. அதை என்னிடம் சொல்லவேண்டிய காரணம் என்ன? என் மீது அவளுக்கு காதலா? அவளுடைய செய்கைகள் அனைத்துமே அப்படிதான் இருந்தது.( காதல் எப்படியெல்லாம் எழும் என்பது எனக்குத் தெரியாதா என்ன? இருந்தும் அது பற்றி தெரியாததுபோல்தான் நடித்தேன்.) அவள் என்னிடம் எதிர்பார்ப்பது நிறைவேறாது என்று தெரிந்தும் இப்படி பிடிவாதாக என்னையே நாடி வருகிறாளே! சென்னை சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று தைரியமடைந்தேன்.

சென்னை திரும்பும் நாளும் வந்தது.இரவு ஏழு மணிக்கு புகைவண்டி நிலையத்தில் இருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு கூண்டு வண்டி தயார் நிலையில் இருந்தது.பிரயாணப் பெட்டியை ஏற்றிக்கொண்டேன். வீட்டு வாசலில் அம்மா,அண்ணி, தாத்தா, மாமா, தங்கைகள், இராசகிளி, கோகிலம் ஆகியோர் வழியனுப்ப காத்திருந்தனர். நான்  வண்டிக்குள் ஏறியதும் எல்லாரும் கையசைத்து வழியனுப்பினர்.நான் அவளைப் பார்த்தேன். அவளுடைய பார்வையில் ஏக்கமும் சோகமும் கண்டு வருந்தினேன். அவளுடைய மனநிலையை ஒரளவு அல்ல, முழுதுமாக தெரிந்து வைத்திருந்தேன்.கணவன் மீது கட்ட முடியாத அன்பையும் காதலையும் அவள் என்னிடம் காட்ட முற்படுகிறாள்! நானோ அவளை நட்டாற்றில் விட்டுவிட்டு சென்னை செல்கிறேன்! நிச்சயம் அவள் வீடு திரும்பியதும் விம்மி விம்மி அழுவாள்!

தெருக்கோடியில் வண்டி திரும்பும்வரை அவள் மட்டும் தொடர்ந்து கையசைப்பது தெரிந்தது.

பாவம் அவள்! அவள் என்ன செய்வாள்? அன்பைத்தானே என்மீது  பொழிகிறாள்? அது தவறா? இந்த அன்புதான் எவ்வளவு பொல்லாதது! இது எங்கு, எப்போது,யார் மீது உண்டாகும் என்பது தெரியவில்லை. ஒருவர் மீது அன்பு செலுத்துவது நல்லது என்றாலும் அதற்கும் ஒரு வரம்பு உள்ளதே! எல்லார் மேலும் அன்பு செலுத்த முடியாது போலிருக்கிறதே! அதற்கு சமுதாயக் கட்டுப்பாடு உள்ளதே. அவளை எனக்குப் பிடித்தாலும் நான் அவள்மீது அன்பு செலுத்த முடியாது. அவள் மணமானவள். அவளுடைய கணவன்தான் அவள் மீது அன்பு செலுத்தவேண்டும்.அந்த அன்பு அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு ஆணிடம் அன்பு செலுத்தக்கூடாது என்பதே சமூக நியதி. அதையே தலை எழுத்தாக ஏற்று அவள் நடித்துக்கொண்டுதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இதில் கோகிலம் என்னிடம் எதிர்பார்ப்பது அன்போடு இணைந்த காதல்! இது எப்படி சாத்தியமாகும்? இருந்தாலும் அவள் காட்டும் அன்பையும் காதலையும் ஏற்க முடியாத நிலையில் அவள் மீது பரிதாபப்பட்டேன்.

எங்கள் வீட்டுக் காளைகள் இரண்டும் என்னுடைய மனவோட்டத்தை அறிந்து கொண்டதுபோல் சிதம்பரம் நோக்கி ” ஜல் ஜல் ” என சலங்கைகள் ஒலிக்க துரிதமாக ஓடின!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகாணவில்லைஅவள் பெயர் பாத்திமா
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *