இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு

This entry is part 19 of 26 in the series 22 பெப்ருவரி 2015

 

 

சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு தெருவாக வந்து போவதற்குள் நடு இரவு வந்து விடும். எனவே அவன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே அவனைக் கண்டு விட தலைவி எண்ணுகிறாள். இதோ வீட்டுக்கு அருகில் மன்னன் வரும் ஒலிகள் கேட்கின்றன. மனமானது அந்த மன்னனைக் காணும் ஆசையால் தெரு வாசலுக்கு விரைகின்றது.

ஆனால் நாணமானது அந்த மனத்தைப் பின்னுக்கு இழுத்து வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. மீண்டும் அவன் மீது கொண்ட காதலானது மனத்தை முன்னே செல்லத் தூண்டுகிறது. அத்துடன் கண்களும் அந்த சோழ அரசனைக் காட்டு என்று வேண்ட மறுபடியும் மனம் வாசலுக்குச் செல்கிறது. நாணமோ மறுபடியும் உள்ளே இழுக்கிறது. இப்படியே உள்ளே போவதும் வருவதுமாக இரு பக்கமும் நெருப்பு உள்ள கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல என் மனம் தவிக்கிறதே என்று அத் தலைவி எண்ணுகிறாள். முத்தொள்ளாயிரம் காட்டும் காட்சி இது.

நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்

காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற —- யாமத்[து

இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்

திரிதரும் பேரும்என் நெஞ்சு.

{ முத்தொள்ளாயிரம்—100 }

திருவாசகத்திலும் இதே உவமை

”இருதலைக் கொள்ளியின் உள்எறும்[பு] ஒத்து நினைப்பிரிந்த

விரிதலையேனை விடுதி கண்டாய்”

என்று வருவதும்,

“இருபாடெரி கொள்ளியினுள் எறும்பேபோல்

உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழிமுதல்வா”

என்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இதே உவமையைப் பயன்படுத்தி திருமங்கையாழ்வார் பாடுவதும் நினைக்கத்தக்கது.

இதுபோன்ற நிலையில் தலைவனைக் காட்டும் ஒரு காட்சி அகநானூற்றிலும் காட்சி வருகிறது. அங்கே பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு எழுந்த தலைவனின் ஆண்மை “பொருள் தேடப் போவோம்; வா” என்று முன்னே இழுக்கின்றது. ஆனால் தலைவியின் மீது கொண்டுள்ள காதலோ “போகாதே; வா இல்லத்திற்கு” என்று இழுக்கின்றது. அவன் மனமோ இப்போது அவ்விடத்திற்கும் இவ்விடத்திற்கும் போவதும் வருவதுமாக ஊசலாடுகிறது. நரைமுடி நெட்டையார் எனும் புலவர் இதைப்பாடி உள்ளார்.

“ஆண்மை வாங்கக் காமம் தட்பக்

கவைபடும் நெஞ்சம் கட்க ணகைய

இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி” என்பன அப்பாடல் அடிகளாகும்.

”இரு தலைக்கொள்ளி எறும்பென்னும்” என்னும் உவமை எல்லாப் புலவர்களையும் கவர்ந்து எடுத்தாளச் செய்திருக்கிறது என்று நாமும் மகிழ்வோம்.

Series Navigationஇலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணிவிதைபோடும் மரங்கள்
author

வளவ.துரையன்

Similar Posts

7 Comments

 1. Avatar
  mahakavi says:

  What i understand about இருதலைக் கொள்ளி எறும்பு is that there is a species of ant (a genetic aberration) which has 2 heads fused together. The name கொள்ளி எறும்பு is the identity of the particular species. இருதலை means two heads. கொள்ளி in this usage has nothing to do with fire.

  Usually it is the head which directs its motion. When there are 2 heads and each one wants to go in a different direction the ant is in a quandary—unable to proceed. As a support for this concept there are two-headed snakes too which make them go randomly directed by the two heads.

  Is there any evidence to believe that the statement has its origin in an ant facing fire on both sides and hence is in distress? Who saw that ant in distress?

 2. Avatar
  ஷாலி says:

  // மனமானது அந்த மன்னனைக் காணும் ஆசையால் தெரு வாசலுக்கு விரைகின்றது.
  ஆனால் நாணமானது அந்த மனத்தைப் பின்னுக்கு இழுத்து வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது.//

  சோழ மன்னன் கிள்ளியின் மீது காதல் கொண்ட இளம்பெண்ணின் தவிப்பு இருதலைக்கொள்ளி எறும்பு போல இருப்பதாக முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலில்,
  தலைவியின் மனநிலைக்கு எறும்பின் மனநிலை ஒப்புமை காட்டப்படுகிறது.

  தலைவன் வீதியில் வலம் வருகிறானாம்…
  தலைவிக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை..
  போ…!போ….! சென்று பார் என்று ஒரு மனம் சொல்கிறது….

  கூடாது ! சென்று பார்க்கக் கூடாது அது பெண்மைக்கு அழகல்ல….
  என்று நாணம் ஒருபக்கம் தடுக்கிறது……….

  இதையே நமது கவிஞர் கண்ணதாசன் இப்படி திரைக் கவிதையாக்குகிறார்.

  வா என்றது உருவம்-நீ
  போ என்றது நாணம்
  பார் என்றது பருவம்-அவர்
  யார் என்றது இதயம்.

  கண் கொண்டது மயக்கம்-இரு
  கால் கொண்டது தயக்கம்.
  மனம் கொண்டது கலக்கம்-இனி
  வருமோ இல்லையோ உறக்கம்.

  ஆசை என்றது நிலவு
  ஆம் அதுதான் என்றது மனது
  ஏதோ ஒருவகை எண்ணம்
  அதில் ஏதோ ஒருவகை இன்பம்.

  திரைப்படம்: காத்திருந்த கண்கள்.(1967)

 3. Avatar
  ஷாலி says:

  இறைவன் மீது காதல் கொண்டாலும் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைதான் என்கிறார் மாணிக்கவாசகர்.

  “இருதலைக் கொள்ளியின் உள்ளேறும் பொத்து நினைப்பிரிந்த
  விரிதலை யேனை விடுதி கண்டாய்வியன் மூவுலகுக்
  கொருதலை வாமன்னும் உத்தர கோச மங்கைக்கரசே
  பொருதலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!”

  இருதலைக்கொள்ளி எறும்பு போல நான் இருக்கின்றேன்.உனைப்பிரிந்து தலைவிரி கோலமாய் அலைகின்றேன்.மூன்று உலகங்களுக்கும் தலைவனே, என்னை கை விட்டு விடாதே! திரி சூலம் கையில் ஏந்திப் பொலிபவனே!

  இப்பாடலின் இருதலைக்கொள்ளி எறும்புக்கு பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் கொடுக்கும் அழகிய விளக்கம்.

  “ இரண்டு பக்கங்களிலும் நெருப்பு உள்ள குச்சி ஒன்றின் மீது எறும்பு இருந்தால், இரண்டு பக்கத்திலும் போக முடியாமல் தவிக்கும் என்றாலும், இரண்டு மூலைக்கும் போகாமல் நடுவிடத்தின் ஓரத்திலிருந்து எவ்வாறாவது குதித்து தப்பித்து கொள்ளுதல் முடியும் ஆனதால் இதனை விளக்கவே,
  “கொள்ளியின் உள் எறும்பு” என மாணிக்கவாசகர் கூறுகிறார்.”

  கட்டுரையாசிரியர் திரு.வளவ.துறையன் எடுத்துக்கொண்ட “இருதலைக்கொள்ளி” எறும்பையே இரண்டு தமிழ் பெருமக்கள் கட்டுரையாக்கியுள்ளனர்.திருநீலக்குடி.மா.உலகநாதன்.மற்றும் முனைவர்.இரா.குணசீலன்.கீழ் உள்ள இணைப்பில் படித்து ரசிக்கலாம்.

  http://www.dinamani.com/editorial_articles/article954200.ece?service=print
  http://www.gunathamizh.com/2009/08/blog-post.html

 4. Avatar
  BS says:

  செக்குலர் – டிவோஷனல். இரண்டையும் இணைக்கக்கூடாது. வளவ துரையன் இணைக்கிறார். மனிதர்கள் காதலையும் ஆழ்வார் (பரகால நாயகியாக) தன் இறைவனின் மேல் கொண்ட காதலையும் இணைக்கிறார். திருவாசகத்தையும் சேர்க்கிறார். ஆக, சைவர், வைணவம் எதுவுமே இவருக்குப்பிடிக்காது போலிருக்கிறது!

  மதம்சாரா – செக்குலர் கவிதை. மதம் சாரந்த (டிவோஷனல்) கவிதை.

  ஒருகவிதை வரிகளை விஞ்ஞான உண்மைகளின் மூலம் பார்க்கக்கூடாது. கவிதையின் அனுபவத்தளம் வேறு. எனினும் இருதலைக்கொள்ளி எறும்புகளையே இக்கவிதைகள் குறிப்பிட்டன என்றாலும் சொல்லவந்த பொருள் மாறாது.

  திருமங்கையாழ்வார் சொன்ன உவமைக்கு வளவதுரையன் தரும் பொருளாகாது. பரகால நாயகிக்கு எத்தடையும் இல்லை. சோழ இளவரசிக்கு வீட்டுக்கட்டுப்பாடும் சமூகக்கட்டுப்பாடும் உணடு. எப்படி ஒரு ஆடவனை நேராகப்பார்ப்பது? சமூகம் அதை அனுமதிப்பதில்லை. என்பதால் வரும் தடை. இன்னொரு தடை இயற்கையாக வரும் நாணம். அது பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை உண்மையிலே பிடித்தவன் என்றால், அவந்தான் கணவன் என்றால், நாணம் பிய்த்துக்கொண்டுவரும்.

  ஆக, இருதடைகள். செயறகையாக, இயற்கையாக. ஆனால், இவை மனிதர்களுக்கு மட்டுமே. ஆழ்வாருக்கோ, மாணிக்கவாசகருக்கோ இல்லை. அங்கே இறைவனே ஆடவன். அவனிடம் செல்ல பார்க்க என்ன நாணம் இருக்க முடியும் பரகால நாயகியான பெண்ணுக்கு? பின் என்ன தடை? ஆம், தான் ஒரு தகுதியில்லா பெண் நம்பியைக்காதலிக்க! அய்யோ! என்னை ஏற்பரோ? சென்று கேட்கலாமா? மறுத்துவிட்டால் யான் என் செய்குவேன்?

  இத்தடைகள் தன்னை மதிப்பீடு செய்வதால் ஆழ்வாருக்கு வருகிறது. இதை ஆழ்வார், பரகால நாயகியாக இல்லாமல் பரகாலனாக (அவரது இயற்பெயர் பரகாலன்) நின்றுஎழுதிய பாசுரங்களிலும் தன் இறுதி யாத்திரைப்பாசுரங்களிலும் சொல்லி அழுகிறார்: அதாவது எனக்கு இன்னும் தகுதியில்லை. என்னை ஏற்பாயோ? பக்தியின் உச்ச கட்டமிது. ஆழ்வார் தங்களை நாய்கள் என்றும் பேய்கள் என்றும் குறைத்தே அழைத்துக்கொண்டனர். நாயினும் கடையனானேன் (திருமழியிசை) பேயானேன் (குலசேகராழ்வார்); உள்ளேவந்து உன்னை பார்க்க எனக்குத் தகுதியில்லை இங்கேயே படியாகக்கிடந்து உன்னைப்பார்த்துக்கொள்கிறேமண் (குலசேகரர்) என்னை அடித்தாலும் மிதித்தாலும், தாயைக்கட்டிக்கொள்ளும் குழந்தை நான். நீயே அத்தாய்! நெறிகாட்டி நீக்குதியோ? (இது நம்மாழ்வார்)

  இதுதான் தடை. இதை எப்படி மனிதர்களோடு இணைக்கிறார்? போகட்டும். நம்மாழ்வாரும் இப்படியே சொல்கிறார். ஆண்டாள் மட்டுமே விதிவிலக்கு, Her way is totally different from the men alvars.

 5. Avatar
  BS says:

  இருதலைக்கொள்ளி எறும்புக்கு செட்டியார் கொடுத்த விளக்கத்தின்படி (refer Shali’s) , எறும்பு இங்கும் அங்கும் போக விரும்பவில்லை; போனால் மரணம்; இதிலிருந்து தன்னைக் காப்பாற்ற எறும்புக்கு முடியும் அதாவது, கீழே குதிக்க வாய்ப்புண்டு என்கிறார். இந்த விளக்கம் இறைப்பாடல்களை இழிவுபடுத்துகிறதெனலாம்.

  ஆழ்வார் பாட்டில் ஓபனாகவே உருகி நிற்கிறேன் என்று சொல்லிவிட்டார் (பாடல் வரியைப்பார்க்கவும்). என்ன பொருள் தமக்கு செட்டியார் சொன்ன வழியொன்று – கீழே குதித்தல் – இருக்கிறது என்றா? கீழே குதித்தல் என்றால் இறைவன் எமக்குத் தேவையில்லை என்றேயாகும். நாயன்மார், ஆழ்வார் பக்தியை இழிவுபடுத்தும்.

  அதே சமயம் மனிதரைக்காட்டும் (சோழ இளவரசி) பாடலில், அத்தவிப்பே காதலுக்குச் சுவைகூட்டுகிறது. All kinds of pains, – sufferings, lost opportunities, being away for long, expectations belied, he continues to disregard me – major and minor pains and sufferings – enrich the experience of the romance and love, from women’s perspective. To love and suffer is a woman’s whole existence and for man, it is just a part of his affairs. (Byron). எனவே சோழ இளவரசியின் சங்கடப்படுகிறார். நமக்கு அதுவே இலக்கிய இன்பாகிறது.

  ஆனால் இறைப்பாடலகளில் அச்சுவை தேவையில்லை. இப்பாடல்களில் வேதனையே வெளிப்படும்.

  எனவேதான் என் எச்சரிக்கை: — மனிதரைப்பாடும் பாடல்களை விளக்கும்போது இறைப்பாடல்களை இணைக்காதீர்.

 6. Avatar
  mahakavi says:

  I am afraid BS is on a hunt for nitpicking—again. VaLava duraiyan’s article title is இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு. To substantiate that analogy he is quoting from ancient Thamizh literature–be it sangam literature, divya prabhandam, or tiruvAchagam. The way I read his article: He is not saying the love that an AzhwAr has towards god is the same as a young maiden has towards her hero or the thalaivan has towards his beloved. The dilemma of what to do under the trying circumstances is the thread that is occupying the minds of the characters portrayed. That is all the take-home-lesson. No need to look for a mismatch when there is none. I hope VaLava duraiyan provides a rejoinder here.

 7. Avatar
  ஷாலி says:

  இருதலைக்கொள்ளி உள் எறும்பு என்னும் உவமை அகநானூறில் தலைவனின் மன நிலைக்கும், முத்தொள்ளாயிரத்தில் தலைவியின் மன நிலைக்கும் உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.

  ஒரு மூங்கில் குழலின் இருபுறமும் நெருப்பு எரிகின்றது.இடையில் மாட்டிய எறும்பு எங்கே போகும்?ஒரு பக்கம் ஓடும்,அங்கே சூடு அதிகம் என்று மறு பக்கம் ஓடும் மாறி மாறி ஓடி முடிவில் நெருப்பில் மடிந்து போகும்.

  மனிதனுக்குத்தான் எத்தனை ஆசை,கண்டதன் பின்னே ஓடுகின்றோம்.பின் அது சுடுகிறதே என்று இன்னொரு புறம் ஓடுகின்றோம்.பின் அதுவும் சுடுகிறதே என்று மீண்டும் மறுபுறம்.

  இதுதான் என் வாழ்வின் லட்சியம் இது அடைந்து விட்டால் பின் வேறு எதுவும் வேண்டாம் என்று ஆசை ஆசையாய் அடைந்த எத்தனை விசயங்கள் பின் துன்பமாக மாறிப்போகும்.இதைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார். (திரு.B.S.கூறும் ஆழ்வார் அல்ல)

  இருதலைக்கொள்ளி எறும்பு போல் இருக்கின்றேன்,உனைப்பிரிந்து தலைவிரிகோலமாய் அலைகின்றேன்.இத்துன்பத்தீக்கு மத்தியில் உள்ள இறைவனை தஞ்சமடைவதன் மூலமே தப்பிபிழைப்பது சாத்தியம் என்பதையே உள் எறும்புக்கு பண்டிதமணி விளக்கம் கொடுப்பதாக அறியலாம்.

  இவ்விளக்கப்படியே கீழ்காணும் கொள்ளிப் பாடல்களும் உள்ளன.

  கொள்ளித்தலையில் எறும்பு அது போலக் குலையும் என்றன்
  உள்ளத்துயரை ஒழித்தருளாய் ஒரு கோடி முத்தம்
  தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
  வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே! 106.

  கந்தர் அலங்காரம்- அருணகிரி நாதர் அருளியது.

  உள் குவா ருள்ளத் தானை
  யுணர்வெனும் பெருமையானை
  உள்கினே ணானுங் காண்பா
  யுருகினே னூறி யூறி
  எங்கினே னெந்தை பெம்மா
  னிருதலை மின்னு கின்ற
  கொள்ளி மே லேறும் பெறும்பெனுள்ள
  மெங்ஙனம் கூடுமாறே! – பன்னிருதிருமுறை-731.

  இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல்,
  உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா.
  -நாலாயிர திவ்யபிரபந்தம்.2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *