பலி

This entry is part 14 of 26 in the series 22 பெப்ருவரி 2015

யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ் அதிகாரியும் அதனிலிருந்து இறங்கி நிற்கிறார்கள். ஹெட் கிளார்க் அந்த எபனேசர் மேடம் வீட்டு வாசலில்தான்.
‘ன்’ என்றோ ‘ர்’ என்றோ ஒருவரின் பெயர் முடிந்தால் அது ஆடவரைமட்டும்தான் குறிக்குமா என்ன . அப்படி சட்டென்று யாரும் ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். விஷயம் தெரிந்தவர்கட்கு இது தெரியும். கொஞ்சம் தெரியாதவர்கட்குமட்டுந்தானே நானும் எப்போதும் சொல்கிறேன்.
சமுத்திர குப்பம் கோர்டர்சில் டெலிபோன் ஊழியர்களுக்கு என்று ஒரு நூறு வீடுகள் இருக்கலாம்.சின்னதும் இல்லை பெரிசும் இல்லை. ஒரே சீராகத்தான் அவை. ஒரு தொழிலாளருக்கு குடும்பத்தில் எத்தனை பேர் என்பதெல்லாமா ஒரு கணக்கு,சம்பளம் உனக்கு எத்தனை பெரிதாக வருகிறதோ அத்தனை பெரிய வீடு அந்த க்ஷத்ரிய அரசன் மனு சொன்ன படிக்குத்தான் எல்லாம்.
( மனு அவன் பார்ப்பனன் இல்லை அவன் அசல் க்ஷத்ரியன் என்று ஒரு உண்மையைச் சொன்னால் விவரணையில் ஒரு சின்ன மிளகு சேர்த்தமாதிரி . இதே போல் இன்னொன்று மட்டுமாவது சொன்னால் தேவலை. இதிகாச நாயகன் தசரத சக்கரவர்த்தி குமாரன் அந்த அயோத்தி . ராமபிரான் மனையாள் சீதையை அலாக்காகத்தூக்கிக்கொண்டு கொழும்புக்கு வான் வழிப்.போன அந்த பத்துத்தலை ராவணன் ஒரு பார்ப்பனன். தமிழ் நாட்டில் நூற்றுக்கு தொண்ணூத்து ஒன்பது பேருக்கு இந்த நல்ல(?) விஷயம் தெரியாது அப்படியே தெரிந்தாலும் ஒத்துக்கொள்ள மனம் ஒப்பாது.சோற்றால் மடை அடைக்கும் சோழ நாட்டில் பிறந்து வயிற்றுச் சோற்றுக்கு நடு நாட்டு வெண்ணை நல்லூர் சடையப்பரிடம் வந்து கவி பாடிய அந்தக்கமப நாடனுக்கு விஷயம் அத்துப்படி.ஆக யாருக்கும் பிரச்சனை இல்லை.)
அந்த மனு சாத்திரத்தில் மக்களை எப்படி எப்படி எல்லாம் பிரித்து வைத்தானோ அப்படித்தான் அந்த வெள்ளைக்காரனும் தொழிலாளர்களை நான்கு வர்ணமாய் பிரித்து பிரித்து வைத்தான் நாமும் அந்தப்படிக்குத்தான் அய்யா இன்னும் போக வேண்டியிருக்கிறது. சாமி கும்பிடப்போனால் என்ன சரக்கு க்கடைக்குப்ப்போனால் என்ன ஏ பி சி டி என்கிற பிரிவு பிரிவு மட்டும் சாசுவதம். சரக்கின் வீர்யம் தலைக்கு ஏறிவிட்டால் அது தலையிலிருந்து இறங்கும் வரை ‘ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே’ தான் அந்தக்கதை வேறு.. இந்த நான்கு பிரிவுக்கு மேலாக அதிகார மைதானத்தில் ஒரு தேவ ஜாதி யை அறிவீர்கள்.அது யுபிஎஸ் சி என்னும் டில்லிப்பரிட்சை எழுதிப் பாஸ் செய்துவிடக்கிட்டுவது.அது கிட்டிவிட்டால் அப்புறம் அந்த ஆசாமிக்குக் கால்கள் தரையில் பாவாது அவரவர் கையால் தரையிலிருந்து மூன்று சாண்களுக்கு மேலேதான் கால்கள் நிற்கும் கண்களும் இமைக்காது கழுத்தில் அணியும் மலர் மாலைகள் வாடுவதுவும் இல்லை. இது நிற்க. .
மெயின் விஷயத்துக்கு வந்துவிடுவோம்..இந்த சமுத்திர குப்பம் டெலிபோன்கோர்டர்சில் ஊழியர்களில் மூன்றாம் பிரிவுக்காரர்களுக்கு மாத்திரமே வீடுகள் கட்டப்பட்டிருந்தன.இப்படிக்கட்டியதில் எதுவும் உள்குத்து இருக்கலாம்..யாரோ ஒரு உள்ளூர் பிரகஸ்பதியின் பிரத்யேக யோசனை என்கிறார்கள்..
இந்த கோர்டர்சின் தரைதளத்தில் எபனேசரின் வீடு.அது மட்டுமே இரு சக்கர வண்டிகள் நிறுத்தும் ஷெட்டின் எதிரே இருந்தது. அவ்வீட்டின். பக்கத்தில் ஒரு பெரிய அரச மரம். நூற்றாண்டுகள் சில பார்த்து முடித்து விட்ட அந்த மரத்தின் வேர் ப்பகுதியில் அம்மிக்குழவி போலே கருங்கற்கள். இரண்டு. குத்துக்கல் கணக்காக அவை நடப்பட்டுத்தான் இருந்தன.அண்ணனும் தம்பியும் தாம் அவை என்று காலம் காலமாய் வாழும் அந்த சமுத்திர குப்பத்து சனங்கள் பேசிக்கொள்வார்கள்….
கூடை முடையும் அம்மி,குடைக்கல் கொத்தும் குறவர்களுக்கு அவை குடி சாமி. சாமி கும்பிட இன்னும் விட்டு விடாமல் வரும் அந்த முண்டாசு கட்டிய குறவர்கள் உயர உயரமான காம்பவுண்டு சுவருக்கு வெளியே மட்டுமே அவர்கள் சிரத்தையோடு கொண்டு வந்த சாமிச்சேவல்களை அறுத்த்ப் படைத்து விட்டு செல்வதுண்டு.
எபனேசருக்கு பெரிய அஞ்சலகம் பக்கமாயிருந்த தொலைபேசி மேலாளர் கட்டுமான அலுவலத்தில் தலைமை எழுத்தர் வேலை.எபனேசர் பற்றிச்சொல்லிவிடலாம் முதலில். சொந்த ஊர் திருநெல்வேலி. சரியாகச்சொன்னால் அங்கு ஜங்க்ஷன். அந்த ஊரில் ஜங்க்ஷன் என்றால் ரயில்வே ஜங்க்ஷனை மட்டும் அது குறிப்பதில்லை அந்தப்பகுதி மக்கள் வாழும் பகுதிக்கே ஜங்க்ஷன் என்கிற அந்தப்பெயர்தான்.ஐந்தாம் நெம்பர் டவுண்( வட தமிழ் மண்ணில் -ன்) பஸ் பிடித்து ஏறினால் வழியில் வருமே அந்த சாராடக்கர் பெண்கள் கல்லூரியில் மூன்றாண்டுகள் வேதியியல் பட்டம் படித்து முடித்த எபனேசர் டெலிபோன் இலாகாவில் சம்பந்தமே இல்லாத எழுத்தர் வேலைக்குச்சேர்ந்தார்.
.திருநெல்வேலிச்சீமையிலே அந்தப்படிக்கு வேலைக்கு வருவதற்கு ஒருவர் எப்படியெல்லாம் கண் விழித்துப்படித்திருப்பார் தேர்வில் மதிப்பெண் மொத்தமாய் வாங்கியிருப்பார் எனபது தாமிரபரணித் தண்ணீர் எடுத்துப் புழங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியவரும்.
அதே டெலிபோன் இலாகாவில் பணிபுரிந்த ஜேம்ஸ் என்னும் பெயர் கொண்ட சமுத்திர குப்பத்துக்காரரை எபனேசர் மணந்துகொண்டார்..அவருக்கும் டெலிபோன் ஆபிசில் அதே எழுத்தர் வேலை. சமுத்திர குப்பம் டெலிபோன் குவார்டர்சிலேதான் வீடு.எபனேசர் திருமணம் முடிந்த கையோடு சமுத்திரகுப்பம் மாற்றலாகி வந்தார். அதுதானே முறையும்.ஆண்டுகள் சில உருண்டன,அன்பின் விளைச்சலாய் ஒரு பிலிப்பை ப்பெற்றார்கள். நிறைவாக வந்தது இருவரின் சம்பளம். அவர்களுக்கு நன்றாகத்தான் ஓடியது காலம் எனும் மாயச் சக்கரம்.
யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள் இப்படி எல்லாம் ஒருவர் வாழ்க்கையில் நடந்து விடும் என்று.இறைவன் என்ன நினைத்தானோ ஒரே ஒரு நாள் காய்ச்சலில் ஜேம்சை அந்த இறைவன் நிரந்தரமாய் நித்திரைக்கு அழைத்துக்கொண்டார். சமுத்திர குப்பத்து மனித முயற்சிகள் தோற்றுப்போயின
எபனேசர் ஒண்ணரை வயது குழந்தை பிலிப்போடு வாழ்க்கையில் சுருங்கிப்போனாள்.எபனேசருக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம் அவ்வளவுதான். பெண்ணை .என்றும் கலாசார விலங்கிடும் இந்திய மண். எபனேசர் அவள் கணவனில்லாதவள். கைக்குழந்தைக்காரி. எப்படி எல்லாமோ சமூகம் அவளைச் சிறுமைப்படுத்தியது.சின்னப்பட்டாள்.சின்னத்தனங்கள் அரங்கேற எத்தனையோ பேர் நாக்கைத்தொங்க விட்டு சுற்றி சுற்றி வந்தார்கள். ஆடவரின் மனம் நாய் மனம். ரொம்பவும் நல்லது போல் பாசாங்கு மட்டுமே காட்டும். இவை அத்தனைக்கும் மத்தியில் எபனேசர் நெருப்பென வாழ்ந்தாள். அவள் தன் தனித்த இருப்புக்கு பண்பாட்டு மெருகு சேர்த்தாள்.பிலிப்பின் தாய் அல்லவா அவள்.
எபனேசரை த்தவறாக யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாதபடிக்கு அவளின் நடப்பு இருந்தது மகன்.பிலிப் வளர்ந்தான். அவள் அவனைத்தன்அலுவலகத்துக்குக்கூட்டி வருவாள்.எபனேசர் பிள்ளை என எல்லோருக்கும் அந்த பிலிப் அறிமுகம் ஆனான்.அவன் மறைந்த சக தோழன் ஜேம்சின் பிள்ளையும்தானே ஆக எல்லோரிடமும் அனபாகப்பழக முடிந்தது.
யாருக்கும் செல்லப்பிள்ளையானான் பிலிப்.அவன் பெரியனாகி தன் தாய் எபனேசரை மிதி வண்டியில் வைத்து அலுவலகத்துக்கு கூட்டி வருவான்.எபனேசர் அலுவலத்தில் ஒரு ஸ்கூட்டர் லோன் போட்டுக்காத்திருந்து அது வாங்கித்தந்தாள்.எபனேசரை அந்த ஸ்கூட்டரில் பிள்ளை பிலிப் தாயைஅமரவைத்து டெலிபோன் கட்டுமானஅலுவலகம் வந்து போவான். உருவில் தந்தை ஜேம்ஸ் போலவே அவன் வளர்ந்து ஆளானான். கடலெனக்கிடக்கும் உள்ளூர் செயின் ஜோசெப் பள்ளியில் படித்து முதல் மாணாக்கன் எனப்பெயர் எடுத்தான். எபனேசரின் மொத்த அலுவலகம் அவனை உச்சிமேல் வைத்துக்கொண்டாடியது.பொறியியல் படித்தான். கணிப்பொறி பாடத்தில் சிறப்பு நிலை எய்தி சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் விண் முட்டும் மென்பொருள் அலுவலகம் ஒன்றில் பணிக்குச்சேர்ந்தான். கை நிறைய சம்பளம் வாங்கினான்.எபனேசர் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு நியாயத்தீர்ப்பு கிடைத்து விட்டதாக மனப்பூர்வமாக எண்ணினாள்.
மண வயது நெருங்க பிலிப்புக்கு த்திருமணம் ஆனது. சென்னையில் அவனுக்கு இறை விருப்பபடி ஒரு பெண் கிடைத்தாள்.தொலைபேசி ஊழியர்கள் அதிகாரிகள் ஒருவர் பாக்கி இல்லாமல் பிலிப்பின் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினர். சமுத்திர குப்பத்து ரெட்டியார் மண்டபத்தில் மகிழ்ச்சியாய் பெரு விருந்து உண்டனர். ஜேம்சும் எபனேசரும் அவர்களோடு உடன் பணியாற்றியவர்கள் ஆயிற்றே. பாவம் ஜேம்ஸ்தான் எப்போதோ முடிந்து போனான்.
எபனேசருக்கு அத்தனை நல்லபெயர் அலுவலகத்தில். சுனாமியும் தானேப்புயலும் கொஞ்சி விளையாடிய சமுத்திரகுப்பத்தில் அவள் தொலைத்தகவல் நிர்மாணிப்பு திட்டமிடல் செக்ஷனில் பணியாற்றினாள்.மாநிலத்திலேயே சமுத்திரகுப்பத்து அந்தத்திட்டமிடல் பணி பாராட்டப்பட்டது எபனேசருக்கு மாநில நிர்வாகம் .’தொலைத்தகவல் திரு’ என்கிற கவுரவம் தந்தது..எப்போதேனும் ஒரு முறை தகுதியானவர்களுக்கும் அது கொடுக்கிறாகள். பாராட்டத்தான் வேண்டும்.
அதெல்லாம் சரி இப்போது என்ன நடக்கிறது எபனேசர் வீட்டு வாயிலில்.அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள் கூடி நின்றார்கள்.
சென்னையிலிருந்து வந்திருந்த காவல் ஆய்வாளர் இப்படிச்சொன்னார்.
‘வரதட்சிணைக்கொடுமையில் இந்த எபனேசர் இப்போது கைது செய்யப்படுகிறார்.இவர் மகன் பிலிப் நேற்றே சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்குப்போயாயிற்று. எபனேசர் மருமகள் எஸ்தர்ராணி கொடுத்த மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கை இது. கைது உத்தரவுகள் இதோ.யாருக்கும் ஏதும் அய்யம் இருந்தால் பார்க்கலாம். இங்கு எல்லோரும் படித்தவர்கள். எங்களுக்கும் தெரியும் எபனேசர் எங்கு பணியாற்றுகிறார். இனி அவர்மீது எடுக்கப்பட இருக்கும் இலாகா ஒழுங்கு நடவடிக்கைகள், தொடரும் பணி நீக்க உத்தரவு பிற எல்லாமும். வேறு என்ன செய்வீர்கள்’
மகளிர் காவலர் ஒருவர் கைகளில் விலங்கிட்டு எபனேசரை போலிஸ் வேனில் ஏற்றினாள். எபனேசரின் அந்த க்குனிந்த தலை. அது தரையை மட்டுமே பார்த்தது.
கூடியிருந்த பெண்கள் கண்ணீர் சிந்தினார்கள்.’ எபனேசர் இருப்பதோ சமுத்திர குப்பத்தில்.ரூபாய் ஐம்பதாயிரம் மாத சம்பளம், மரியாதையோடு அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். ஒரு கைம்பெண்.தன் மகனை ஒன்ற்ரை வயதிலிருந்து வளர்த்து ஆளாக்கிய ஒரு உத்தமி. வரதட்சணையாம் கொடுமையாம் ஆக எபனேசர் கைதாம் என்ன அக்கிரமம் இது.என்ன உலகமடா இது’ பேசிக்கொண்டே இருந்தார்கள்.
‘நீதி மன்றம் இவ்வழக்கை விசாரித்து எது சரியோ அதனைச்சரி என்று சொல்லும், நானும் நீங்களும் ஒன்றும் செய்யமுடியாது’ சொல்லிய காவல் ஆய்வாளர் வேகமாக அந்த வண்டியில் ஏறினார் வண்டியின் கதவுகள் அடைக்கப்பட்டு அது எபனேசரோடு புறப்பட்டது.
‘நீதி மன்றம் எப்போது தீர்ப்பு சொல்லும்’ துணிச்சலாய் கூடியிருந்தவர்களில் ஒரு நான்காம் பிரிவு ஊழியன் காவல் ஆய்வாளரைக்கேட்டான்.
‘விசாரணை முடிந்து பின் தீர்ப்பு சொல்லும்’ ஆய்வாளர் பதில் சொன்னார்.
‘எப்போது விசாரணை முடியும். மீண்டும் அந்த நான்காம் பிரிவு ஊழியன் கேட்டான்.
வண்டி நகர்ந்துபோயிற்று.டெலிபோன் குவார்டர்ஸ் ஒட்டிய வள்ளலார் தெருவில் கிளி ஜோஸ்யக்காரன் தன் கிளிச்செல்வத்தோடு ‘சோசியம் கிளீ சோசியம் பாக்குறது பட்சீ சாஸ்திரம் பாக்குறது’ சொல்லிக்கொண்டே நடந்து போனான்.
எபனேசருக்கு ஒரு மாதம் நண்பர்கள் போராடி ஜாமின் வாங்கினார்கள்.இன்னும் அதிகமாய் ப்போராடித்தான் அந்த பிலிப்புக்கு ஜாமின் வாங்கினார்கள்.இப்போது கோர்ட்டுக்கு மட்டுமே போய்வருவது அவள் பணி.
தான் குற்றம் அற்றவள் என்று உலகத்திற்கு நீருபிக்கும் வேலை இன்னும் பாக்கியிருக்கிறது. சமுத்திரகுப்பத்து வேலை போயிற்று குவார்டர்ஸ் காலி செய்தாள்..வயதாகி த்தலை நரைத்த எபனேசருக்கு இலாகா பணி ஓய்வும் வந்தது.நீள மூக்குக் கணக்கு அதிகாரிகள் அலசி ஆராய்ந்து எபனேசருக்கு அரைகுறையாய் ஒரு பென்ஷன் தருகிறார்கள்.
அவள் அவமானத்தை த்தலையில் சுமந்துகொண்டு கையில் இருக்கும் சில காசுகளோடு சென்னையில் வானம் பார்க்கும் அந்த சிவப்புச்சுவர்களை சுற்றி சுற்றி வருகிறாள்.வாய்மை எப்போதாவது வெல்லட்டும்.
———————————————————–

Series Navigationபிறவி மறதிவைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *