பிரியாணி

This entry is part 24 of 25 in the series 3 மே 2015

முருகன் கோயிலுக்கு அருகில் இருக்கும் காய்கறிக்கடையில் வழக்கமாக நான் காய் வாங்குவது உண்டு. அன்றும் அப்படித்தான். ஆனால் இந்த முறை காலையில் ஒரு விசேசத்திற்குப் போய்விட்டதில், மாலைதான் போக முடிந்தது.
ஓய்வுக்குப் பிறகு இந்தப் புறநகர் வாழ்க்கை அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லாமல் இல்லை. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே ஓடியதில், பல சுவையான விசயங்களைத் தொலைத்து விட்டது இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது.
அலுவலகம் போன காலங்களில், ஆறு மணிக்கு மேல் தூங்க விடமாட்டாள் என் மனைவி. அவள் என்னை எழுப்புவதே கர்ண கடூரமாக இருக்கும்.
“ என்னா? இன்னிக்கு ஆபீஸ் லீவா? போகலியா? இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கறீங்க? “
பாதி தூக்கம் கலைந்த நிலையில் எழுந்து, பல் விளக்கி, காலைக்கடன்களை முடித்து, அதே அசுர கதியில் குளித்து, கும்பிடு போட்டு, குழாய் மாட்டுவதற்குள், காலைச் சிற்றுண்டியும், மதிய மோர்சாதமும் சாப்பாட்டு மேசையில் டப்பாக்களில் இருக்கும். அள்ளி எடுத்துக் கொண்டு ஓட வேண்டியது தான். புறநகரிலிருந்து வெளியேற பதினைந்து நிமிட நடை. பிறகு ஷேர் ஆட்டோ. அதற்குப்பிறகு பேருந்து என ஒன்றரை மணிநேரம் வாழ்வில் அவுட். இப்போது அதெல்லாம் இல்லை. இப்போது கடிகாரம் என்ன, நாட்காட்டியே பார்ப்பதில்லை.
என்னுடைய ஓய்வு வாழ்க்கையின் காலைகள் சுவையானவை. எட்டுமணிக்கு எழுச்சி. ஒன்பது மணிக்கு காலாற நடத்தல். பால், காய்கறி இன்னும் ஏதேதோ வீட்டு விண்ணப்ப நுகர்பொருட்கள் என்று ஒருமணிநேரம் போகும். வழியில் பல்லவனில் இருந்து ஓய்வு பெற்ற கபாலி, ஹிந்துவில் இருந்து விலகிய விசு, கனரா வங்கியின் சேது என அறுபது வயதுக்காரர்கள் யாராவது எதிர்படுவர். நாட்டு நடப்பு, சினிமா, ஊர் பேச்சு என பொழுது ரகளையாகப் போகும்.
வீடு திரும்பும் வழியில் தான் அந்தத் திருநெல்வேலிக்காரரின் கடை இருக்கிறது. பெயரே இல்லாத டிபன் கடை. அவரே வாசலில் நின்று பூரி பொரித்துக் கொண்டிருப்பார். உள்ளே இரண்டு மேசைகள், நான்கு நாற்காலிகளூடன் சாப்பிடும் இடம். நெருக்கமான இடம். ஒருவர் எழுந்தால் தான் அடுத்தவர் உள்ளே நுழைய முடியும். சுவர் பக்க இருக்கையாக இருந்தால் சாப்பிட்ட உடன் சட்டென்று எழுந்திருக்க முடியாது. அடுத்தவர் அப்போதுதான் வந்து அமர்ந்திருப்பார். அவரை எழுந்திருக்கச் சொல்லி, வெளியே வர வேண்டும். ஆனாலும் கிடைக்கும் இட்லியும் வடையும் பூரியும் கிழங்கும் அப்படி ஒரு சுவையாக இருக்கும். விலையும் மிக மலிவு.
உள்ளே சிற்றுண்டி எடுத்துக்கொடுக்கும் பெண் ஐம்பது வயதைக் கடந்தவர். கொஞ்சம் வெள்ளையாக, பல் எடுப்பாக இருந்தார். பேச்சும் போக்கும் கொஞ்சம் வெள்ளந்தியாக இருந்தது. ஆனால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது கவனித்து, “ என்ன கொடுக்கட்டும் “ என்று கேட்டு கொடுப்பார். கடை முதலாளி அடிக்கடி அவரைப் பார்த்து கத்திக் கொண்டே இருப்பார்.
“ தட்டை எடு! தண்ணி வை! நாலு இட்லி கட்டு. வடைகறியா? சாம்பாரா? கேளு!”
நான் போன அத்தனை நாட்களிலும் இப்படியேதான் நடக்கும். ஒரு முறையாவது அந்தப் பெண்மணியே சொல்லாமல் எதையும் செய்யமாட்டார். இடுப்பில் கை வைத்துக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்.
0
முருகன் கோயிலுக்கு பக்கத்து சந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். பையில் காய்கறிகள் இருந்தன. அது கொஞ்சம் இருட்டான சந்து. வழியெல்லாம் முத்திர வாசம் அடிக்கும். அந்தத் தெரு முனையில் பட்டாபி இருந்தான். என் பால்ய சிநேகிதன். பையன் வீடு கட்டியதால், வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே கழித்து விட மனமில்லாமல், அவன் இங்கு வந்திருந்தான். மாலைநேரங்களில் வெளியில் ஈசிசேரில் உட்கார்ந்திருப்பான். பிலிப்ஸ் ரேடியோவில், பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பான். எட்டு மணிக்குத்தான் அவனுக்கு உள்ளே அனுமதி. பேரப்பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருப்பார்கள்.
“ என்னங்க.. சார்! “
குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். அந்த டிபன் கடை பெண்மணி பின்னால் வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு தயக்கம் இருந்தது.
“ என்னம்மா?”
“ காஞ்சிபுரம் பக்கத்துல சொந்தக்காரவுக வீட்ல சாவு . போகலாம்னா அவுரு காசு கொடுக்கமாட்டேங்கறாரு”
நானே பார்த்திருக்கிறேன். காசு போட, அந்தக் கடையில் கல்லாப்பெட்டியெல்லாம் இல்லை. எல்லாக் காசையும், முதலாளியே வாங்கிச், சட்டைப்பையில் போட்டுக் கொள்வார். இந்தம்மா காசு வாங்கி நான் பார்த்ததேயில்லை.
“ நீங்க திருநெல்வேலி இல்லையா? “
“ இல்லீங்கய்யா.. நான் காஞ்சிபுரம் பக்கம். மக்க மனுஷா யாருமில்லைன்னு, வேலை கேட்டுக்கிட்டு இவராண்ட வந்தேன். அதுவரைக்கும் கடையிலேதான் தூங்கிக்கிட்டு இருந்தாரு. நான் வந்தப்புறம்தான் வீடு எடுத்தாரு. “
“ நான் என்னம்மா செய்யணும்? “
“ ஒரு இருபது ரூபா கொடுத்தீங்கன்னா ஊர் போய் வந்திருவேன். “
பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு அந்தப் பெண்மணியும் என்னோடுதான் வரவேண்டும் என எண்ணிக் கொண்டு நடக்கலானேன். காஞ்சிபுரம் பேருந்து பிரதான சாலையில் தான் வரும். நானும் அந்தப் பக்கம்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிறிது தூரம் போனவுடன் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்மணி எதிர் திசையில் வேகமாக நடந்து கொண்டிருந்தார்.
0
மறுநாள் வழக்கம்போல அந்த டிபன் கடைக்கு “ நாஷ்டா “ சாப்பிடப் போனபோது, அந்தப் பெண்மணி அங்கே இருந்தார். அதற்குள் காஞ்சிபுரம் போய் வந்திருக்க வேண்டும்.
“ சாருக்கு என்னான்னு கேளு.. மச மசன்னு ஏன் நிக்கற.. தண்ணி வையி.. “
நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அந்தம்மா குடம் எடுத்துக் கொண்டு தெருக் குழாயில் தண்ணீர் எடுக்கப் போனது. முதலாளி தனியாக இருந்தார்.
“ ஏங்க! சம்சாரத்துக்கு கைக்காசு எதுவும் கொடுக்கறதில்லையாமே நீங்க? எதுனா வாங்கணும்னா கூட கைக்காசு இல்லாம எப்படிங்க? “
முதலாளி கொஞ்சம் கற்பூரப் பேர்வழி. சட்டென்று புரிந்து கொன்டார்.
“ எவ்வளவு வாங்கிச்சு ஒங்ககிட்ட? “
“ இருபது ரூபா “
“ இந்தமுறை என்னா? புள்ளைக்கு ஒடம்பு சரியில்லையா? இல்ல எனக்கு ஏதாவது ஆகிப்போச்சா?”
“ சொந்தக்காரவுக சாவு .. “
“ கெட்டது குடி.. நாதியில்லாமதான் இங்கிட்டு வந்துச்சு. இல்லாத சொந்தக்காரவுக எப்படி சாவாங்க? “
எனக்கு ஆர்வம் மேலிட்டது. இங்கே ஒரு கதை இருப்பதாகப் பட்டது. ஏதும் பேசாமல் அவரையே ஏறிட்டேன்.
“ சார், நான் அசைவம் சாப்பிடமாட்டேன். இது எங்கிருந்து வந்துச்சுன்னு தெரியல.. இருபது வருசம் முன்னாடி, வேலை கேட்டு நாதியில்லேன்னு வந்துச்சு.. சரி பொட்டைப் புள்ளையை கடையில படுக்க வைக்கமுடியாதுன்னு வீடு எடுத்தேன். ஆனா அம்மணிக்கு அசைவம்னா உசுரு. வாரத்துக்கு ஒருக்கா சாப்பிட்டே தீரணும். எனக்கு அந்த வாடையே பிடிக்காது. அதான் கையில காசு கொடுத்தா, எங்காவது பிரியாணி வாங்கித் தின்னுப்பிட்டு, ஏப்பம் விட்டு, வீட்டையே நாறடிச்சிடும்னு, காசு கொடுக்கறதில்லே. அப்படியும் எங்கியாவது கடன் கேட்டு வாங்கித் தின்னுடுது . என்னா பண்றது? பழகின தோஷம், பொறுத்துகிட்டு போறேன். “
குடத்துடன் அந்த அம்மா வந்து, எதுவும் நடக்காததுபோல், வேலை செய்ய ஆரம்பித்தது. அவரும் அந்த அம்மாவை எதுவும் சொல்லவில்லை. சுவாரஸ்யம் குறைய நான் கை கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். சாப்பிட்டதற்கு காசை நீட்டினேன்.
“ இருக்கட்டும் சார் “ என்று மறுத்து விலகினார் முதலாளி.
சில அடி தூரம் சென்று கவனித்தேன். முதலாளியின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
“ பத்து மணியாவுது.. நாலு இட்லியை எடுத்து வச்சி சாப்பிடு! வயிறு காயுதில்லே “
உறவுகள் விசித்திரமானவை!
0

Series Navigationமிதிலாவிலாஸ்-12நற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    மாதவன் ஸ்ரீரங்கம். says:

    எக்ஸலன்ட் சார். எல்லோருக்கும்தான் வயதாகிறது. ஆனால் அவதானிப்பும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும்தான் வாழ்வை வசீகரமாக்குகின்றது. முதுமை பற்றிய நம்பிக்கைதரும் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *