சிமோனிலா கிரஸ்த்ரா

author
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 26 in the series 10 மே 2015

மாதவன்

ஒலிப்பதிவு கருவியை ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு நான் அவரிடம் கேள்வி கேட்கத்தொடங்கினேன்.

“உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்”

அவர் எச்சில் விழுங்கிவிட்டு பதில் சொல்லத்தயாரானார்.

“ஒரு மிக அழகான மலைகிராமத்தில்தான் நான் பிறந்தேன். மொத்தமாக நூறுகுடும்பங்கள் இருக்கும். எவ்விதமான மருத்துவவசதிகளுமற்ற அந்த ஊரில் நான் பிறந்தபோதே பிரசவத்தில் இறந்துவிட்டாள் என் அம்மா. என்னை வளர்த்தது எல்லாமே என் அவ்வாதான். என் அவ்வா ஒரு மிக ஆச்சரியங்களும் துணிச்சலும் நிரம்பிய பெண்மணி. என்மீது கொள்ளை பிரியம் அவருக்கு. எங்கள் ஊருக்கு வாகன வசிதிகள் எல்லாம் கிடையாது. முப்பது மைல்கள் முட்டிதேய நடந்து இறங்கினால் அடிவாரத்திலிருக்கும் சிறிய நகரம் வரும். சர்க்காரின் ரேஷன்முதலான அனைத்து சலுகைகளுக்கும் அங்குதான் செல்லவேண்டும். பிழைப்பு என்று பார்த்தால், காட்டில் ஈட்டிய தேன் கிழங்குகள் மூங்கில்கள் மிளகு மாதிரியான பொருட்களை எடுத்துக்கொண்டு அடிவார நகரத்திற்கு சென்று விற்றுவிட்டு வருவதுதான். என் தந்தைக்கு என்னை கண்டாலே வெறுப்பு. பிறக்கும்போதே தாயை விழுங்கிவிட்டேனென்று. எப்போதும் குடித்துவிட்டு போதையிலேயே இருப்பார். அதனால் என் குடும்பம் சார்பாக அவ்வாதான் கீழே நகரத்திற்கு சென்றுவருவாள். சிறுமியான நானும் சிலசமயங்களில் அவளுடன் சேர்ந்து செல்வதுண்டு. அப்படியான ஒரு தருணத்தில்தான் அது நிகழ்ந்தது”

தன் பேச்சை சற்று நிறுத்திக்கொண்டு தன் நினைவுகளை சேகரிப்பதற்காக சற்றுநேரம் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருக்க நான் காத்திருந்தேன். முற்பகலின் வெயில் அறைக்குள் ஒரு ஓரங்க நாடகம் நிகழ்த்தியதை ரசித்தபடி இருந்தார். பிறகு மறுபடி தொடங்கினார்.

“அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. அடிக்கடி எங்கள் தலைக்குமேலே ஏதேனும் போர்விமானம் பறந்தபடியிருக்கும். எங்கள் ரேடியோப்பெட்டிகளின் செய்திகளில் போர்நிலவரம் குறித்த செய்திகள்தான் அதிகம் கரகரக்கும். அவ்வாவும் நானும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் எங்களுக்கு விஷயம் தெரிந்தது. எதிரில்வந்த எங்கள் கிராமத்து ஆட்களின் கைகளில் எஞ்சிய கொஞ்சம் பொருட்களும் உயிரும் கலவரமும் வைத்திருந்தார்கள். ஊரில் குண்டுவிழுந்து வெடித்ததில் என் கிராமத்தில் பெரும்பகுதி அழிந்துவிட்டதாக அறிந்துகொண்டோம். அவ்வா அப்போது ஒரு காரியம் செய்தாள். தடுத்தவர்களையும் கேளாமல் என்னையும் அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு சென்றாள். ஊரே உருக்குலைந்து கிடந்தது. கருங்கல்லும் களிமண்ணும் குழைத்து கட்டப்பட்டிருந்த எங்கள் வீடுகளில் ஒன்றுகூட இடியாமல் முழுமையாக இல்லை. பெரும்பாலான வீடுகள் எரிந்துபோய் கரிக்கட்டைகளாகக் கிடந்தன. இறந்துவிட்டவர்களுகாக அவசரமாக தோன்றிய புதைமேட்டில் கிடந்த பூக்கள் இன்னும் வாடியிருக்கவில்லை. அவ்வா துளிகூட அழவேயில்லை. மெல்ல மண்டியிட்டு சற்றுநேரம் கண்மூடி அமர்ந்திருந்தாள். பிறகு என்னையும் அழைத்துக்கொண்டு நகரம் நோக்கி வேகமாக கீழிறங்கத்தொடங்கினாள்”.

உதவியாளர் தேநீர் கோப்பைகளுடன் வர பேச்சை சற்று நிறுத்தினார் அவர். நான் எனது கோப்பை பருகத்துவங்கினேன். உதவியாளர் குனிந்து அவர் காதிக் எதையோ சொல்ல மெல்ல ஒரு புன்னகையை வெளிப்படுத்தினார். தேநீர் இடைவெளி புயலுக்கு முந்தைய அமைதியின் கனத்துடன் நகர்ந்தது. இறுதித்துளி தேநீர்வரை தீர்த்துவிட்டு ஒரு சிகரெட்டினை பற்றவைத்துக்கொண்டார் அவர். அதற்காக என்னிடம் வேண்டிய அவர் மன்னிப்பில் நாகரீகம் தொனித்தது. எனக்கு புகைப்பழக்கம் இல்லாததால் அவர் நீட்டிய சிகரெட்டை புன்னகையுடன் மறுத்துவிட்டேன். அவர் புகையை ஆழமாக சுவாசித்தபடி கதையை விட்ட இடத்திலிருந்து துவங்கினார்.

“அடிவாரத்தில் நகரம் அலங்கோலமாக அலைந்தது. எங்கு பார்த்தாலும் எங்களைப்போலவே சுற்றியிருந்த மலைப்பகுதி மக்கள் அனைவருமே அங்குதான் குழுமியிருந்தார்கள். யாருக்கும் எங்கு செல்வது யாரிடம் என்ன கேட்பதென்று தெரியாமல் அந்த சிறிய நகரத்தையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். என் விரல்களை இறுகப்பற்றியிருந்த அவ்வாவின் விரல்களை விடாமல் பிடித்துக்கொண்டேன். ராணுவ உடுப்புகளுடன் வண்டிவண்டியாய் சிப்பாய்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒலிபெருக்கியிக் அலறியபடியே ஒரு ராணுவ வாகனம் வந்தது. அந்த இடத்தில் ராணுவம் முகாமிட்டிருப்பதால், உயிர்ச்சேதத்தை தவிர்க்க அனைவரையும் வேறெங்காவது இடம்பெயரச்சொல்லி கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் பசியிலும் களைப்பிலும் சொந்தங்களை பறிகொடுத்த வேதனையிலும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத பயத்திலும் குழப்பத்திலும் இருந்தோம். ஒரு லாரியில் உணவு வந்தது. இரைக்கு அடித்துக்கொள்ளும் பறவைகளைப்போல ஜனங்கள் முட்டிமோதிக்கொண்டு பெரிய கலவரம் நிகழ்ந்தது. ராணுவத்துப்பாக்கியின் சில தோட்டாக்களும் சில உயிர்களும் மண்ணில் வீழ்ந்தபின்புதான் கூட்டம் ஒரு ஒழுங்கிற்கு வந்தது. ஒருவழியாக எனக்கும் அவ்வாவிற்கு சில ரொட்டித்துண்டுகளும், கொஞ்சம் இறைச்சியும் கிடைத்தது. அவ்வா தனது பங்கையும் எனக்கே கொடுத்துவிட்டு பட்டினியாய் கிடந்தார். அன்று இரவுதான் என் அவ்வா இறந்துபோனார்”.

கதையை நிறுத்திய அவர் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் விழுந்தது. எனக்கும்சற்று அழவேண்டும்போலிருந்ததை சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டேன். அறைக்குள்ளிருந்த வெப்பம் சற்று அதிகரித்ததுபோலிருந்தது. மெல்லமெல்ல புழுக்கம் அதிகமாகி எனக்கு வியர்க்கத்தொடங்கியது. அவர் இன்னுமொரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டார். அவர் இருமியபோது ஒலியுடன் கூடவே கொஞ்சம் புகையும் வழிந்தது. கண்ணீரை துடைத்துக்கொள்ளாமல் அவர் தொடர்ந்தார்.

“என் அவ்வா ஒரு அழகான கதைசொல்லி. எரிமலை குழம்புகளைப்போக சதா அவளிடம் கொப்பளித்துக் கொண்டேயிருக்கும் கதைகள். வீரமும் பிரியமும் கருணையும் செறிந்த அவள் கதைமாந்தர்களோடுதான் கழிந்திருக்கிறது என் பால்யம். அவளது அனைத்து கதைகளின் நாயகியாக இருந்ததும் நான்தான். பறவைகளின் சிறகுகளால் கோர்க்கப்பட்ட கிரீடங்கள் கொண்டு என்னை ராணியாக்குவாள். கூழாங்கற்கள் நிரம்பிய மலையருவியின் அருகே எனக்கான ராஜ்ஜியத்தை கட்டமைத்துக் கொடுப்பாள். இரவின் குளிர்பூசிய பெரும் பாறையொன்றில் எனக்கான சிம்மாசனத்தை உருவாக்குவாள். காட்டுமலர்களில் கட்டிய மாலைகளை எனக்கு அணிவித்து அழகுபார்ப்பாள். ஒளிரும் நிலவையும் மினுங்கும் நட்சத்திரங்களையும் என் இரவுறக்கத்திற்கு துணைசேர்ப்பாள்…

நகரம் முழுக்க இரைச்சலும் புழுதியும் அலைய என் அவ்வாவின் உடல் குளிர்காய்ச்சலால் நடுங்கியது. ஒட்டுமொத்த அகதிகளுக்கும் தங்குவதற்கான இடமில்லாமல், அவரவர் கிடைத்த இடத்தில் தங்கிக்கொண்டோம். எனக்கும் அவ்வாவிற்கும் தங்கக் கிடைத்தது ஒரு மாட்டுத்தொழுவம். விடிந்ததும் மாடுகளும் மனிதர்களுமென எல்லோருமே அங்கிருந்து கிளம்பவேண்டிய நிலையில்கூட அந்தவீட்டு எஜமானர் சற்று அலுப்புடன்தான் அனுமதித்தார். எங்களுடன் இன்னும் சிலருமாக தொழுவத்தின் மாட்டுமலத்தின் வழுக்கல் தரையில் ஒரு மூலையில் முடங்கிக்கொண்டோம். ஒரு கிழவர் என் அவ்வாவை தொட்டுப்பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினார். பேசமுடியாமல் கண்களில்நீர்வழிய என் கைகளை பற்றியிருந்த அவ்வாவின் நடுக்கம் நின்றபோதுதான் அவள் இறந்துவிட்டதை உணரமுடிந்தது. அப்போது எனக்கு வயது ஒன்பது”.

நான் அவர் மறுபடி தொடர்வதற்காக காத்திருந்தேன்.

“மறுநாள் ஒரு பெரிய அதிகாரி வந்தார். எங்கள் எல்லோரைப்பற்றியும் விபரங்கள் குறித்துக்கொண்டு நகரத்தைவிட்டு வெளியேற்றிக்கொண்டிருந்தார். என் முறைவந்தபோது எனக்கென்று யாருமில்லாததை புரிந்துகொண்ட அந்த அதிகாரி, சற்றுத்தொலைவிலிருக்கும் அவர் ஊருக்கு தன்னோடு என்னை அழைத்துச்சென்றார். அதிகாரியின் மனைவிக்கு என்னை முதல் பார்வையிலிருந்தே பிடிக்காமல் போனது ஏனென்று இன்றுவரை புரியவில்லை. அவர் போருக்கு சென்றபின்புதான் அவள் தன் சுயரூபத்தை எனக்கு காண்பித்தாள். காலை எழுந்ததுமுதல் இரவு களைத்துப்போய் படுக்கையில் விழும்வரை வேலை வேலை வேலை ஓயாமல் வேலை. அப்போதெல்லாம் நான் அவ்வாவை நினைத்து அழாத நேரமென்று ஒன்று இல்லவேயில்லை. கொஞ்சநாட்கள் நரகமாக கழிந்தது. அதிகாரி வரும்போது மட்டும் அவள் தன் முகத்தில் மிக அழகான நல்லகுணங்களை வரவழைத்துக்கொள்வாள். ஒன்றிரண்டு நாட்களில் அவர் திரும்பியதும் பழையபடி மாறிவிடுவாள். எனக்கும் போக்கிடம் ஏதுமில்லாததால் அவள் தந்த எத்தனை கடினமான பணிகளையும் செய்துகொண்டு, அவள் வசைபாடல்களை ஏற்றுக்கொண்டு கிடந்தேன். அந்த சமயத்தில்தான் அவளது இன்னொரு முகம் எனக்கு தெரியவந்தது. தன் கணவனின் நண்பனுடனான அவள் கள்ளத்தொடர்பு. எனக்கு அப்போதெல்லாம் அத்தனை விபரமில்லாததால் ஒருமுறை நான் ஏதோ உளறியதில் விஷயம் அதிகாரிக்கும் தெரிந்துவிட்டது. வீட்டிக் ஒரே குழப்பமும் சன்டையுமாக இருந்தது. அந்தமுறை போருக்குச்சென்ற அதிகாரி மறுபடி திரும்பவில்லை. போரில் இறந்துவிட்டதாக தந்தி வந்தது. அன்றிரவுதான் நான் முதல்முறையாக கற்பழிக்கப்பட்டேன்”

“ஒரு கற்பழிப்பின் வலியையோ இழிநிலைத்துயரத்தையோ வார்த்தைகளால் பகிர்ந்துகொள்ளவே இயலாது. என் உடலெங்கும் அந்த மனித மிருகத்தின் எச்சில் ஈரம். அப்போதுதான் முளைக்கத்தொடங்கியிருந்த என் முலைக்காம்புகளில் பல்தடங்களின் குருதித்தீற்றல். என் பிட்டத்தில் சிகரெட்டின் நெருப்புமுனை சுட்ட வடுக்கள். வலிந்துப் பிளவுண்ட என் யோனியின் வழியெங்கும் வலியின் நாவுகள். கதறக்கூட திராணியற்ற என் குரல்வளைக்குள் திணிக்கப்பட்டிருந்தது அவனுக்கான சுவர்க்கம். இரவு பகல் பேதமின்றி எப்போதுவேண்டுமானாலும் புசிக்கக்கூடிய உணவாகக் கிடந்தேன். இது அனைத்துமே அந்த அதிகாரிமனைவியின் கள்ளக்காதலனால் அவள் முன்னிலையிலேயே நிகழ்ந்தது. என்மீது எனக்கே அருவருப்பு தோன்றிய தருணங்கள் அவை. தற்கொலை செய்துகொள்ளவேண்டுமென்றுகூட எண்ணம் தோன்றாத வயது அது. கோபம் வெறுப்பு பயம் அழுகை பசி எல்லாமும் கலந்து மாற்றிமாற்றி என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்த என்னை அந்த நரகத்திலிருந்து விடுவித்துச்செல்ல ஒரு மீட்பன் வந்தான். அப்போது எனக்கு வயது பதிமூன்று”

உதவியாளர் வந்து போன் வந்திருப்பதாக சொன்னதும் அவர் எழுந்து சென்றார். மின்விசிறி அறையிலிருந்த வெப்பக்காற்றை சுழற்றித்தந்தது. நான் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துகொண்டேன். உள்ளறையிலிருந்து அவர் போனில் பேசிக்கொண்டிருந்தது ஹால் வரை கேட்டது. சற்றுநேரத்தில் திரும்பிவந்து சொல்லத்தொடங்கினார்.

“எங்கு நிறுத்தினேன்”?

“ஒரு மீட்பன் வந்ததாக.. ”

“ஓ எஸ்.. ஆமாம். அங்குதான். அப்போது எனது பணிகளில் ஒன்று பண்ணைக்குச்சென்று பழங்கள் பறித்துவருவது. ஆமாம். அதிகாரிக்கு ஒரு ஆரஞ்சு தோட்டம் இருந்தது. அங்கு பணிபுரியும் ஆட்களுடன் நானும் வேலை பார்ப்பேன். அவர்களில் ஒரு பெரியவருக்கு என்மீது மிகுந்த பிரியம். அவ்வாவிற்குப்பிறகு நான் சந்தித்த ஒன்றிரண்டு நல்ல மனிதர்களில் ஒருவர் அவர். வீட்டிலிருந்து அவருக்கு உணவு கொண்டுவரும் அவர் பேரனுக்கு என்னைவிட சிலவயதுதான் அதிகம். அருகாமையிலுள்ள ஒரு பெருநகரத்தில் தாய்தந்தையருடன் வசிப்பவன், எப்போதாவது விடுமுறையை கழிக்க தாத்தாவீட்டிற்கு வருவான். முதல் சந்திப்பிலிருந்தே எனக்கு அவனை பிடித்துப்போயிற்று. சிரிக்கச்சிரிக்க பேசுவான். என்னையும் சிரிக்கவைப்பான். என்னை அனுவனுவாய் ரசிப்பான். அவன் தாத்தா என் கதைமுழுக்க அவனிடம் சொல்லியிருக்கவேண்டும். என்னை பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு பரிதாபம். திடீரென்று ஒருநாள் என்னை காதலிப்பதாக சொன்னபோது அதை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை எனக்கு.

எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தான். அளவான உயரத்தில், மிக வசீகரமான கண்களுடன், எப்போதும் புன்னகைவழியும் உதடுகளுடன் உற்சாகமாக இருக்கும் அவனை யாருக்குத்தான் பிடிக்காது ? நான் என் சம்மதத்தை தெரிவித்தபோது அவன் கண்களில் வழிந்த வெளிச்சத்தையும் பரவசத்தையும் இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாயிருக்கிறது. ஆனால் அதுவரை பிரியமாக இருந்த அவன் தாத்தா அதற்குப்பிறகு என்னிடம் கன்டிப்புடன்தான் நடந்துகொண்டார். எனக்கு உண்பதற்காக ஆரஞ்சுப்பழங்கள் ஒளித்துவைத்து தந்த மனிதராக அவர் இல்லை. முகம்கொடுத்து பேசக்கூட விரும்பவில்லை என்பதை குழப்பத்துடன்தான் எதிர்கொண்டேன். அவன் தோட்டத்திற்கு வருவதையும் அவர் தடை செய்தார். ரகசியமாக நிகழும் எங்கள் சந்திப்புகளின்போது அவன்தான் எனக்கு இதையெல்லாம் கூறினான்.

அவன் என்னோடு நிறைய பேசுவான். தூரத்தில் தெரியும் என் கிராமமிருந்த மலைகளின் திசையைக்காட்டி அவன் அடிக்கடி சொல்வான். ஒரு நாள் தான் பறக்கும் குதிரையுடன் வந்து என்னை அங்கே அழைத்துச்செல்வதாக சத்தியம் செய்தான். எனக்காக எதையும் செய்யக்காத்திருக்கும் அவனுடன் ஒருநாள் துணிவுடன் ரயிலேறி பெருநகரம்நோக்கி பயணித்தேன்”.

அவர் கொஞ்சம் நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார். சிகரெட் ஒன்றை பற்றவைத்துக்கொண்டபோது நான் அவரிடம் சொன்னேன்.

“நீங்கள் அதிகம் புகைக்கிறீர்கள். அது நல்லதல்ல. இப்படி சொல்வதற்காக என்னை தவறாக நினைக்காதீர்கள்”.

அவர் மவுனமாக புன்னகைத்துவிட்டு பதிலளித்தார்.

“இது அவன் கற்றுக்கொடுத்த பழக்கங்களில் ஒன்று. முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் விடமுடியவில்லை”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக காத்திருந்தேன்.

“அவன் பெற்றோர் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிதாக எங்களை சபித்து வீட்டைவிட்டு துரத்தினார்கள். பெருநகரத்தின் கடைக்கோடியில், மிக மலினமான பிரதேசத்தில் எங்களுக்கான அறையொன்றை தெரிவு செய்து குடியேறினோம். அப்போதிருந்த பெரும் பிரச்சனைகளில் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். அவனுக்கு படிப்பும் முழுமையாக இல்லாததால் உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவ்வப்போது கிடைத்த வேலைகளை செய்து கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. முக்கால்வாசி நேரம் பட்டினிதான். ஆனால் அப்போதுகூட என்னுடன் மிகுந்த பிரியத்துடன்தான் இருந்தான். என் அவ்வாவை போலவே அடிக்கடி கதைகள் சொல்லி என்னை அழாமல் பார்த்துக்கொள்வான். ஒரு நாள் அவன் நன்றாக குடித்துவிட்டு வந்தநாளிலிருந்துதான் எனக்கான இன்னொரு நரகம் உருவானதை நான் உணர்ந்துகொண்டேன். அதற்குப்பிறகு அவன் தினமும் குடித்தான். குடித்துவிட்டு வந்தபோதெல்லாம் காரணமின்றி என்னோடு சன்டைபிடித்தான். அடித்தான். எப்போதும் வெடிக்கக்காத்திருக்கும் வெடிகுண்டுபோலவே சுற்றிக்கொண்டிருந்தான். அப்போது என் கருவில் அவன் சிசுவை சுமந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது பதினாறு.

குழந்தை பிறந்து கொஞ்சகாலம் சரியாக இருப்பதுபோலத்தான் தோன்றியது. நிலைமை கொஞ்சம் நார்மலாகி வேலைக்கெல்லாம் ஒழுங்காகச் சென்றான். பிறகு மறுபடி மதுவிற்கு அடிமையான அவனை அதற்குப்பிறகு என்னால் மீட்கவே முடியவில்லை. குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் என்னையும் குழந்தையையும் அடித்துத் துவைப்பான். ஆமாம் நான் அப்போது ஒரு நாடக கம்பெனிக்கு பணியில் சேர்ந்திருந்தேன். எடுபிடியாக ஏதேனும் வேலைகள். கொண்டுவரும் பணத்தையெல்லாம் வாசலிலேயே பிடுங்கிக்கொண்டு குடிக்க சென்றுவிடுவான். சட்டென்று ஒருநாள் நாடக கம்பெனி முதலாளி ஒருத்தி வரவில்லையென்று என்னை நடிக்கவைத்தார். நானும் ஒருமாதிரி சமாளித்து நடித்துவிட்டு கிளம்பினேன். அன்றுதான் ஒரு விபத்தில் அவன் இறந்துபோனான்.

அவன் இருந்தவரை பெரிதாக எந்த தொல்லையும் இல்லாத எனக்கு. அவன் இறந்தபின்புதான் ஒரு தனியான பெண்ணுக்குண்டான பிரச்சனைகள் வெடிக்கத்தொடங்கின. பெருநகரத்தின் பல்லாயிரம் நாவுகளும் என்னை நெருங்கத்தொடங்கின. நள்ளிரவுகளில் என் அறையின் கதவுகள் பலமாக இடிக்கப்பட்டன. நாடகக்கம்பெனியிலும் வேலையில்லை என்று அனுப்பிவிட்டார்கள். குழந்தையின் பசிக்கதறல் சகித்துக்கொள்ளமுடியாதபடி இருந்தது. எனக்குமட்டும் ஏன் இத்தனை வலிகள் துயரங்கள் என்னும் கேள்வி மட்டும் என் இதயத்தை இறுக்க நெருக்கின. உடல் சோர்வும் மனச்சோர்வுமாக அடிக்கடி மயங்கி விழுந்தேன். எங்கும் வேலை கிடைக்கவில்லை. அப்படியான ஒரு நாளில்தான் எனக்கான ஒரு புராதன பிழைப்பை தொடங்கினேன். இடிக்கப்படும் என் கதவுகளை சற்றே திறந்துவைத்து ஒரு வேசியானேன்.

அவர் சற்றுநேரம் பேசுவதை நிறுத்திவிட்டு மவுனமாக இருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ “போதும் இத்துடன் முடித்துக்கொள்ளலாம்” என்றார். நான் தயக்கத்துடன் “விஷயம் பாதியிலேயே நிற்கிறதே” என்றேன். அவர் சிரித்தார்.

“அவசியம் முடிவு தேவையா என்ன” ?

நான் மவுனம் காத்தேன்.

“அதற்குப்பிறகு வேறு என்ன பெரிதாக சொல்ல இருக்கிறது ? வேசியானபின் எவருக்கும் நிகழக்கூடியவைதான் எனக்கும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எழுதப்பட்ட என் சுயசரிதைக்கு பெரிய விருது கிடைத்ததெல்லாம் தெரியாமல்தான் என்னை சந்திக்க வந்தீர்களா என்ன”?

அவரிடம் விடைபெற்று மெல்ல கிளம்பினேன். வாசல் கேட்டிலிருந்து கையசைத்து எனக்கு விடைகொடுத்தபோது அவர் பத்துவயது சிறுமிபோலிருந்தார்.

பேச்சின் நடுவில் அவர் தன் பெயருக்கான அர்த்தத்தை மலைகிராம மொழியில் இப்படி வருமாம்.

‘ஆசீர்வதிக்கப்பட்டவள்’.


s.madhavanforyou@gmail.com

Series Navigationசிறுகதைகள் மூன்றுபறவை ஒலித்தலின் அர்த்தங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *