நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்

This entry is part 4 of 19 in the series 24 மே 2015

 

Neutrinos from Sun

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++

https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA

https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA

https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM

http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s

http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp

++++++++++++++

அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலத்தின்
சிற்பச் செங்கல் !
அண்டத்தைத் துளைத்திடும்
நுண்ணணு !
அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த
கோடான கோடி
அக்கினிப் பூக்கள் !
சுயவொளிப் பரிதிகளின்
வயிற்றில் உண்டானவை !
வலை போட்டுப் பிடிக்க முடியாத
வையகக் குஞ்சுகள் !
ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
கண்ணுக்கும் தெரியா !
கருவிக்கும் புரியா !
எதனுடனும் இணையா !
முன்னூறுக்கு மேற்பட்ட
நுண்ணணுக்கள்
விண்வெளியில் விளையாடும் !
பிரபஞ்சத்தின்
சீரமைப்பு முரணுக்குக்
காரணம்
நியூட்டிரி னோவா ?
பிரபஞ்ச மூலச் சிசுவைப் படம்
பிடிக்கப் போகிறார் !

++++++++++++++++++

Icecube Project

பனிப்பேழைத் திட்டத்தில் தூர விண்வெளி அரங்குகளிலிருந்து வரக் கூடிய 35 நியூட்டிரினோக்களைப் பதிவு செய்தோம்.  அவை மிக்க உயர் சக்தி உடையவை.  ஏனெனில் அவை வெகுதூரப் பயணத்தில் இயங்கி எவற்றுடனும் ஈடுபடாமல், பிரபஞ்சத் தகவல் கொண்டு வருபவை. மேலும் பூமியில் தோன்றும் நியூட்டிரினோக்களின் பண்பாடுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம், நீல்ஸ் போர்க் ஆய்வுக்கூடம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்]

வட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக மிவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos].  அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன.  இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.

ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]

தென் துருவத்தில் நியூட்டிரினோ பற்றிய பனிப்பேழை ஆராய்ச்சிகள்

2010 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட தென்துருவப் பனிப்பேழை [Icecube] நியூட்டிரினோ ஆராய்ச்சித் திட்டம் 12 உலக நாடுகளின் 44 ஆய்வுக் கூடங்கள் பங்கெடுத்துப் பிரபஞ்ச மர்மமான நியூட்டிரினோக்களைப் பற்றி ஆழ்ந்து உளவு செய்ய உருவாக்கப் பட்டது.

Fig 3 Catching High Energy Cosmic Rays

பனிப்பேழை மாபெரும் ஒரு துகள் கண்டுபிடிப்புச் சாதனம்.  அதில் 86 வடங்கள், ஒவ்வொன்றிலும் 60 டிஜிட்டல் ஒளிப்பதிவு அமைப்பைக் [86 cables each with 60 Digital Optical Modules ] கொண்டுள்ளன. பனிப்பேழை அமைப்பு பூமிக்குக் கீழே 1.5 கி.மீ. ஆரம்பித்து 2.5 கி.மீ. வரை முடிவது. ஒவ்வொரு வடமும் வெந்நீரில் தோண்டிய துளையில் 2.5 கி.மீ. தூரம் நுழைக்கப் பட்டுள்ளது.  நியூட்டிரினோ பனித்திரட்சியில் மிக அபூர்வமாக பிண்டத்துடன் பின்னி இயங்குகிறது.  அப்படி மோதி இயங்கும் போது கதிர் வீசும் மின்னேற்றத் துகள்  [Charged Particle] ஒன்று தோன்றுகிறது. அதைத் தான் டிஜிட்டல் ஒளிப்பதிவுக் கருவி கண்டுபிடிக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக [2011 – 2013] 5200 ஈடுபாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று வித நியூட்டிரினோக்கள்  இருப்பதாக நம்பப் படுகின்றன. அவை : எலெக்டிரான், மூவான், டௌ [Electron, Muon, Tau Neutrinos].  அவற்றைப் பற்றி பனிப்பேழைத் திட்ட துணைப் பேராசிரியர் ஜேஸன் கோசினென் கூறுகிறார்: “நாங்கள் கண்டுபிடித்து முடிவு செய்தது,  நியூட்டிரினோக்கள் [மூவான்கள்] உயர் சக்தி நிலையில் குவாண்டம் துடிப்பியக்கத்தில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ நியூட்டிரின்களாக மாறுகின்றன. பிரபஞ்சத் தூதாகக் [Messengers from the Universe] கருதப்படும் நியூட்டிரினோ பற்றி விஞ்ஞானிகள் இன்னும் பூரணமாக அறியவில்லை.  இந்த பனிப் பேழை ஆராய்ச்சிகள் அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள மட்டும் உதவுகின்றன.”

Icecube Neutrino Project

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sZPLcv-ASwc

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6P9fEhuyx50

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gssq7Kngyow

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gX7jxnDMSHw

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o-y4m6c2h8o

“அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ! ஃபெர்மி அந்த நுண்ணணு வுக்கு “நியூட்டிரினோ” என்று பெயரிட்டார் ! அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”

நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

“இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists). நியூட்டிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

Ice-cube observatory -2

புதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் !

பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது ! அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) ! புதிருக்குள் புதிரான நியூட்டிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் ! அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கி கள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார்.

சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கி கள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவுகின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது ! 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூட்டிரினோ வின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது !

பிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூட்டிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. சூரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூட்டிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூட்டிரினோக்களை வெளியாக்கி வருகின்றன ! எலெக்டிரானுக்கும் சிறிதான நியூட்டிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூட்டிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூட்டிரினோ, டௌ நியூட்டிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூட்டிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூட்டிரினோக் களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூட்டிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது !

நியூட்டிரினோவைக் கண்டுபிடித்த உலக விஞ்ஞானிகள் !

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூட்டிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன் முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மைக் கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது ! அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ! ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ! மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles).

இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூட்டிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவரும் முதன்முதலில் அணு உலையில் நியூட்டிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூட்டிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.

Fig 1B Neutrino Production

அகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூட்டிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன ! வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது ! பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன ! எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை ! சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை ! சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூட்டிரினோக் களை உற்பத்தி செய்கிறது ! வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூட்டிரினோக்களை வெளியாக்கும் ! சுமார் 65 பில்லியன் நியூட்டிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன !

கனடாவின் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNOLAB)

அமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூட்டிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.

அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா ?

பரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூட்டிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்படாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது ! வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்ப தில்லை ! மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ! ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது !

இப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வினாக்கள் இவைதான் ! இதுவரை அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா ? இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூட்டிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா ? அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி ! “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன் களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூட்டிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.

பிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது ? நியூட்டிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் ! பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் ! பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிர்ப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ! ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ! அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ! ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ?  ஒரு வேளை நியூட்டிரினோக் கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ! அது மெய்யானால் நமது உயிர்வாழ்வுக்கும் நியூட்டிரினோக்களே மூல காரணமாக இருக்கும் !

[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Do Neutrios Hold Secrets to the Cosmos ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 South Pole Neutrino Detector Could Yield Evidences of String Theory (www.physorg.com/)
20 Where Cosmology & Particle Physics Meet By : Paul Preuss – Science@berkeley Lab (Jan 30, 2006)
21 Fermi Lab – MINOS Experiment Sheds Light on Mystery of Neutrino Disappearance (Mar 30, 2006)
22 The Birth of Neutrinos (1930-1934)

23 Dept of Energy USA, Solar Neutrinos & Sudbury (Canada) Neutrino Observatory (SNO) By : Richard Halm, Minfang Yeh, Keith Rowley, Zheng Chang & Alexander Garnov (July 27, 2004)

  1.  http://www.ps.uci.edu/~superk/neutrino.html  [1998]
  2.  http://en.wikipedia.org/wiki/IceCube_Neutrino_Observatory  [February 21, 2015]
  3.  https://icecube.wisc.edu/masterclass  [March 18, 2015]
  4.  http://phys.org/news/2013-05-icecube-neutrino-observatory-evidence-extraterrestrial.html  [My 16, 2015]
  5.  http://en.wikipedia.org/wiki/Neutrino [May 19, 2015]
  6. http://en.wikipedia.org/wiki/Neutrino_detector  [May 20, 2015]
  7.  https://icecube.wisc.edu/outreach/neutrinos

******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com]  May 23, 2015

Preview YouTube video Neutrino, measuring the unexpected–IceCube

Preview YouTube video Flat Earth, Ice cube neutrino observatory looking DOWN NOT UP! into Antarctica monopole

 

Series Navigationஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015மிதிலாவிலாஸ்-20
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

5 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த
    கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதிகளின்
    வயிற்றில் உண்டானவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வையகக் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதனுடனும் இணையா !//

    அறிவியற் கவிஞர் பேராசிரியர் ஜெயபாரதன் அவர்கள்,எளிய தமிழில் ஒரு சில சொற்களில் ஆய்வக அறிவியலை அழகு தமிழில் வடிக்கிறார்.”வலைபோட்டு பிடிக்க முடியாத வையக குஞ்சுகளை” நமது தேனி மலைப்பகுதியில் பிடிக்க அரசு ஆவண செய்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.

    நியூட்ரினோ ஆய்வகத்தின் முடிவுகள் இறுதியில் நியூட்ரினோ ஆயுதம் தயாரிக்கத்தான் பயன்படப்போகிறது என்றும்,நியூட்ரினோவின் அதிதிறன் ஆற்றலைக் கொண்டு புதிய ஆயுதத்தை வடிமைக்கலாம் என முதன்முதலில் ஜப்பானின் அறிவியலாளர்கள் (Hirotaka Sugawara, Hiroyuki Hagura, Toshiya Sanami) 2003 ஆம் ஆண்டு கோட்பாட்டு அறிவியலின் (theoretical science) முடிவுகளின்படி ஆய்வுக் கட்டுரைகள் மூலம் உறுதி செய்கின்றனர். பார்க்க:http://arxiv.org/pdf/hep-ph/0305062%C3%B9

    அக்கட்டுரையில் அவர்கள் இத்தகைய ஆயுதம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை விளக்குவதோடு அதி உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களால் எத்தகைய கதிர்வீச்சு ஆபத்துகள் வரும் என்பதனையும் 1999 இல் வந்த கட்டுரையைக் கணக்கில் கொண்டு விளக்கப்படுத்தியும் உள்ளனர். பார்க்க: http://arxiv.org/pdf/hep-ex/0005006v1.pdf .
    செயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளது என்பதனை விளக்க எண்ணற்ற ஆய்வறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக,

    ஜப்பானிய அறிவியலாளர்கள் தங்களது கட்டுரையில் மேலும், “உலகின் எந்த ஒரு மூளையிலும் இருக்கும் பொருள், நபர், ஆயுதங்கள், அணு ஆயுதம் ஆகியவற்றை துல்லியமாக கணித்துவிட்டால், யாருக்கும் புலப்படாத வண்ணம் நிலத்தின் அடியிலேயே உலகத்தின் இன்னொரு மூளையில் இருந்து நியூட்ரினோவை செலுத்தி அழிக்க முடியும். அணு ஆயுதங்களை அழிக்கும்பொழுது முற்றிலும் செயலிழக்கச் செய்யும் என சொல்ல முடியாது. தற்போதைய தங்கள் கணக்குப்படி அணு ஆயுதத்தின் 3 வீதம் வெடிப்பு நிகழும். அதனை குறைக்க ஒருவேளை வருங்கால அறிவியல் உலகம் வழி செய்யலாம். ஆனாலும், நியூட்ரினோவின் பாதையில் கவசத்தை உருவாக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது என்பதாலும், நீயூட்ரினோ அணு ஆயுதத்தோடு புரியும் வினையில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் வெடிப்பை தவிர்க்க முடியாது” என்று தெரிவிக்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்கமாக தமிழ் மக்களுக்கு எழுதுங்கள்/

  2. Avatar
    சி.ஜெயபாரதன் says:

    மிக்க நன்றி ஷாலி. நியூட்டிரினோக்கள் பற்றிய மேம்பாட்டுத் தகவல் தந்துள்ளீர். தேனியில் வரப்போகும் ஆய்வகம் கனடாவில் உள்ளது போல் அடிப்படை ஆ ராய்ச்சியாக இயங்கப் போவது. இத்தீவிரத் திட்டம் 1945 லாஸ் அலமாஸ் மன்ஹாட்டன் அணு குண்டு திட்டத்தை விட 1000 மடங்கு முயற்சியில் நிகழ வேண்டியது. இது ஒருபோதும் நேராது.

    சி. ஜெயபாரதன்

    /// We emphasize that the whole technology is futuristic and the reason should be clear to all the accelerator experts. Actually, even the simplest prototype of our proposal, i.e. the neutrino factory of GeV range needs substantial R & D work. We also note that a 1000 TeV machine requires the accelerator circumference of the order of 1000 km with the magnets of ≃ 10 Tesla which is totally ridiculous. Only if we can invent a magnet which can reach almost one order of magnitude higher field than the currently available magnet, the proposal can approach the reality. Even if it becomes the reality, the cost of the construction is of the order of or more than 100 billion US$. Also we note that the power required for the operation of the machine may exceed 50 GW taking the efficiency into account. This is above the total power of Great Britain. This implies that no single country will be able to afford the construction of this machine and also the operation time must be strictly restricted. We believe the only way this machine may be built is when all the countries on earth agree to do it by creating an organization which may be called the “World Government” for which this device becomes the means of enforcement.///

  3. Avatar
    ஷாலி says:

    //லாஸ் அலமாஸ் மன்ஹாட்டன் அணு குண்டு திட்டத்தை விட 1000 மடங்கு முயற்சியில் நிகழ வேண்டியது. இது ஒருபோதும் நேராது.//

    நியூட்ரினோ ஆய்வு ஆயுதமாக மாற வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளீர்கள்.நன்றி!

    தேனியில் இந்த நியூட்ரினோ ஆழ் குழி ஆய்வானது ஐந்தாண்டு,அல்லது பத்தாண்டு காலத்திற்குள் நிறுத்தப்பட்டு,இந்த ஆழ்குழி சுரங்கத்தில் அணுக்கழிவுகள் கொட்டி வைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? முன்பு இந்த திட்டம் இமயமலை பகுதி கேரளாவில் எதிர்க்கப் பட்டு தமிழனின் தலையில் வைக்கபட்டுள்ளது.

  4. Avatar
    சி.ஜெயபாரதன் says:

    ///தேனியில் இந்த நியூட்ரினோ ஆழ்குழி ஆய்வானது ஐந்தாண்டு,அல்லது பத்தாண்டு காலத்திற்குள் நிறுத்தப் பட்டு,இந்த ஆழ்குழி சுரங்கத்தில் அணுக்கழிவுகள் கொட்டி வைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? முன்பு இந்த திட்டம் இமயமலை பகுதி கேரளாவில் எதிர்க்கப் பட்டு தமிழனின் தலையில் வைக்கப் பட்டுள்ளது. ///

    நண்பர் ஷாலி,

    நியூட்டிரினோ ஆராய்ச்சியில் இந்தியர் நவீன விஞ்ஞான வளர்ச்சி விளைவுகள் பெருகும். பல விஞ்ஞானிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிபிறக்கும்.

    நியூட்டிரினோ ஆராய்ச்சியால் கதிரிக்கக் கழிவுகள் விளையா. சிறிது சூழ்வெளிப் பாதிப்பு நேரலாம். விலங்கினங்கள் விரட்டப் படலாம்.

    உதாரணமாக சூழ்வெளிப் பாதிப்புகள் சிறிதும் இல்லாமல் மீதேன் எரிவாயு தஞ்சைப் புலத்தில் எடுக்க முடியாது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி எப்படி வெளிவந்தது அப்பகுதியில் ?

    அதுபோல் சூரியசக்தி மின்சாரம், அணைக்கட்டு மின்சாரம், நிலவள நீர்ப்பாசானம், அணுசக்தி மின்சாரம் ஆகியவைச் சிறிது சூழ்வெளிப் பாதிப்பின்றி கிடைக்காது.

    There is no gain without some pain in any modern Industrial undertaking.

    சி. ஜெயபாரதன்

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////தேனியில் இந்த நியூட்ரினோ ஆழ்குழி ஆய்வானது ஐந்தாண்டு,அல்லது பத்தாண்டு காலத்திற்குள் நிறுத்தப்பட்டு,இந்த ஆழ்குழி சுரங்கத்தில் அணுக்கழிவுகள் கொட்டி வைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? முன்பு இந்த திட்டம் இமயமலை பகுதி கேரளாவில் எதிர்க்கப் பட்டு தமிழனின் தலையில் வைக்கப் பட்டுள்ளது. ///

    நண்பர் ஷாலி,

    நியூட்டிரினோ ஆராய்ச்சியில் இந்தியர் நவீன விஞ்ஞான வளர்ச்சி விளைவுகள் பெருகும். பல விஞ்ஞானிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிபிறக்கும்.

    நியூட்டிரினோ ஆராய்ச்சியால் கதிரிக்கக் கழிவுகள் விளையா. சிறிது சூழ்வெளிப் பாதிப்பு நேரலாம். விலங்கினங்கள் விரட்டப் படலாம்.

    உதாரணமாக சூழ்வெளிப் பாதிப்புகள் சிறிதும் இல்லாமல் மீதேன் எரிவாயு தஞ்சைப் புலத்தில் எடுக்க முடியாது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி எப்படி வெளிவந்தது அப்பகுதியில் ?

    அதுபோல் சூரியசக்தி மின்சாரம், அணைக்கட்டு மின்சாரம், நிலவள நீர்ப்பாசானம், அணுசக்தி மின்சாரம் ஆகியவைச் சிறிது சூழ்வெளிப் பாதிப்பின்றி கிடைக்காது.

    There is no gain without some pain in any modern Industrial undertaking.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *