சி. பந்தோபாத்யாயா
மெயின்ஸ்ட்ரீம், வால்யும் XLVIII, No 34, ஆகஸ்ட் 14, 2010
ஞாயிறு 22 ஆகஸ்ட் 2010
(தமிழில்: அருணகிரி)
கொலை என்கிற கொடூரமான குற்றத்தை ”அரசியல் கொலை” என்று தனியே வகைப்படுத்துவதா என்று ஒருவர் கேட்கக்கூடும். ஒரு குற்றம் என்றால், அதன் பின்னுள்ள நோக்கமே அதைத் தனியாய் வேறுபடுத்திக்காட்டுகிறது. சட்டத்திற்கான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி ”அரசியல் குற்றம்” என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது: ”அரசியல் காரணத்திற்காக அல்லது அரசியல் நோக்கால் ஈர்க்கப்பட்டு செய்யப்படும் குற்றம். அந்தச் செயல் அரசியல் காரணங்களுக்காக ஆனால் சட்டத்திற்குப்புறம்பாக செய்யப்படும் குற்றச்செயலாக இருக்கலாம், அல்லது குறுகிய அரசியல் செயலாகவோ, அரசியல் நிர்வாகம் அல்லது தனிப்பட்ட தாக்குதல்களிலிருந்த தப்பிக்கும் பொருட்டு செய்யப்படும் குற்றச்செயலாகவோ அல்லது இவற்றின் கலவையாகவோ இருக்கலாம்” (பக். 410). அதாவது, சாதாரண கொலை என்பது தனிப்பட்ட லாபம் கருதியோ, பேராசை, பழிவாங்கல் ஆகிய தனிப்பட்ட காரணங்களுக்காகவோ செய்யப்படுவது. அரசியல் கொலை என்பது அரசியல் லாபம் கருதியோ அரசியல் இலக்கை அடையும் பொருட்டோ அல்லது எதிர் கொள்கை கொண்டிருக்கும் தரப்பினை உயிர் பயத்தில் ஆழ்த்துவதற்காகவோ செய்யப்படுவது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவல் (1848) கீழேயுள்ள வழிகாட்டு வாசகங்களுடன் முடிவடைகிறது:
“கம்யூனிஸ்டுகள் தங்களது கருத்துகளையும் இலக்குகளையும் ஒளித்துக்கொண்டு செயல்படுவதை வெறுக்கிறார்கள். தற்போது நிலவும் அத்தனை சமுதாய நிலைகளையும் வன்முறையாகத் தூக்கியெறிவதன்மூலம் மட்டுமே அவர்தம் குறிக்கோளை எட்ட முடியும் என்று வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆளும் வர்க்கங்கள் கம்புனிஸப்புரட்சியைக்கண்டு நடுநடுங்கட்டும்”. ஆக, வன்முறை வழிகளின் மூலம் அதன் நோக்கத்தை அடைவது என்பது எந்த கம்யுனிஸ்ட் குழுவுடனும் இறுகப்பிணைந்த ஒரு நடைமுறையே. முழுமையான ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தின் வழி வர்க்கபேதங்களற்ற சமுதாயம் ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டிருக்கும் வரை வன்முறையைக் கைக்கொண்டு (கம்யுனிஸ) அமைப்பு ஒருவேளை இயங்கலாம். ஆனால் எப்போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது மார்க்ஸீய சோஷலிஸத்திலிருந்து விலகி, முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளின் வழி நடக்கத்தொடங்குகிறதோ அப்போதே அது கம்யுனிஸ்ட் அமைப்பு இல்லை என்றாகி விடுகிறது. இந்தியாவின் மார்க்ஸீய கம்யுனிஸ்ட் கட்சி மார்க்சிஸத்தை வெளிப்படையாகவே கைவிட்டு விட்டது. சோஷலிஸத்தை அப்பட்டமாய்க் கைகழுவி விட்டு, முதலாளித்துவத்தை தனது புதிய மந்திரமாக அது ஏற்றுக்கொண்டு விட்டது. அப்படிப்பட்ட கட்சி இனி கம்யுனிஸ்ட் கட்சியே கிடையாது என்ற நிலையில், மார்க்ஸிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ள முடியாது. ஆனால் தேர்தலுக்கான பிரபல அடையாளமாக மார்க்ஸீய கம்யுனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) என்கிற பிராண்டை அது பயன்படுத்து வருகிறது. அதே சமயம் (கம்யுனிஸ்ட் கட்சிக்கான) வன்முறைப்பாதையிலேயே அது இன்னமும் தொடர்கிறது. இன்றைய நிலையில் அது பாஸிஸ்ட் மற்றும் மாஃபியா ஆகிய இருநிலைகளுக்கு இடையே இயங்கும் ஒரு கட்சி மட்டுமே. அதுவும் பொது வெளியில் மாக்ஸிஸ்ட்காரர்களின் செயல்பாடுகள் மாஃபியா குண்டர் அமைப்பு ஒன்றின் செயல்பாடுகளை ஒத்ததாகவே உள்ளது.
1977-இல் (மேற்கு வங்கத்தில்) இடது முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு பல வருடங்கள் முன்பாக 1970இலேயே சிபிஎம் கட்சித்தலைவர்கள் கொலை என்பதை அரசியல் ஆயுதமாக்கத் தொடங்கி விட்டார்கள்; 1970-இல் பர்த்வான் ஊரில் சயின் குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர்களான இரண்டு முக்கிய காங்கிரஸ்காரர்களைப் படுகொலை செய்தனர். அந்தக்கொலைகள் செய்யப்பட்ட விதம் கொடூரமானது: கொலைசெய்யட்ட சயின் சகோதரர்களின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட சோற்றை அவர்களின் தாயை உண்ண வைத்தனர். இதன் விளைவாக மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது தாய் பத்தாண்டுகள் கழித்து அந்த நிலையிலிருந்து மீளாமலேயே இறந்து போனார். இந்தக்கொலைகளில் அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பினாய் கொனார், கொக்கொன் என்கிற நிருபம் சென், மாணிக் ராய் ஆகியோர். பினாய் கொனார் இன்று மேற்கு வங்கத்தின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவர். கொன்னொன் என்கிற நிருபம் சென் இன்று மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் மற்றும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர். மாணிக் ராய் (போலீஸ் ரிக்கார்டுகளில் தலைமறைவானதாய் அறிவிக்கப்பட்டவர்) தன் பெயரை இருமுறை மாற்றிக்கொண்ட பின் அனில் போஸாக வெளிவந்தார்- மிகப்பெரும் அளவில் தேர்தல் மோசடி செய்து லோக்சபா தேர்தலில் மாபெரும் ஓட்டு வித்யாசத்தில் வென்று சிபிஎம் கட்சியின் பாராளூமன்ற எம்பி ஆனார். அந்தக்கொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கூட இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.
உயர்ந்த தத்துவங்கள், கொள்கைகள் என்று எதுவும் இல்லாது, வன்முறையை மட்டுமே கைக்கொண்டு 1978-இலிருந்து மார்க்ஸீய கம்யுனிஸ்ட் கட்சி படுகொலைகளை அரசியல் கருவியாக்கி அமைப்புரீதியாக இயங்கி வருகிறது. உட்கட்சி தகராறுகளால் விளைந்த கொலைகளை கண்டுகொள்ளாமல் விட்ட மார்க்ஸிஸ்ட் கட்சிக்காரர்கள் சுந்தர்பன் மரிச்சிபி தீவில் கொலை செய்வதை அராஜக அரசியல் கருவியாக்கினார்கள். அந்தப்பெரும் கதைக்குள் நாம் செல்ல வேண்டாம். சிபிஎம் கட்சியின் வழிகாட்டுதலின் பேரில் தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகதிகளின் மீது (அக்கட்சி ஆட்களால்) கட்டவிழ்த்து விடப்பட்ட மாபெரும் காட்டுமிராண்டித்தனத்தை சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுள்ளன. இதையடுத்த குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த குழுப்படுகொலை என்றால் அது ஆனந்த மார்க்கத்தைச்சேர்ந்த துறவிகளையும், பெண் துறவியர்களையும் கொன்று குவித்ததைக் குறிப்பிடலாம்.பதினேழு ஆனந்த மார்க்கிகள் அடித்துக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களை எரிப்பதற்காக அவர்களது உடல்களை பொதுவில் வைத்து பெட்ரோல் ஊற்றினார்கள்.
அதன்பின் தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்த முக்கிய சம்பவம் என்றால் பண்டாலாவின் கற்பழிப்பு மற்றும் கொலைச் சம்பவத்தைக் குறிப்பிடலாம். தெற்கு 24-பர்கானா மாவட்டத்தில் சிபிஎம் கட்சியைச்சேர்ந்த அமைப்பொன்று ஐநா சபையின் நிதிகளை மிகப்பெரும் அளவில் கையாடியிருப்பதை யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி ஒருவரும் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவரும் கண்டுபிடித்தனர். அதற்கான பெரும் ஆவண ஆதாரங்களுடன் அவர்கள் பயணத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர்களது வாகனம் பாண்டலா அருகே வைத்து மார்க்ஸிஸ்ட் கம்புனிஸ்ட் கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டது. ஆவண ஆதாரங்களுடன் சேர்ந்து வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் வந்த பெண் அதிகாரிகளைக்காக்க முயன்ற கார் ஓட்டுனர் கொல்லப்பட்டார். பெண் அதிகாரிகள் கற்பழிக்கப்பட்டனர். ஒரு பெண் அதிகாரி கொல்லப்பட்டு அவரது உடையற்ற சடலம் வெட்ட வெளி வயல்பரப்பில் போடப்பட்டது. அன்றைய முதல் அமைச்சரான ஜோதிபாசுவிடம் இந்த சம்பவம் பற்றி சொல்லப்பட்ட போது அவர் பத்திரிகையாளர்களிடம் கிண்டலாகச்சொன்னார்: “இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன, இல்லையா?” இப்படிப்பட்ட கிண்டல் எதிர்வினையின் வழியாக கொலையுடன் கூட, கற்பழிப்பையும் அரசியல் அராஜகக் கருவியாக்குவதற்கு அதிகாரபூர்வ ஆதரவை அவர் அளித்தார்.
சச்சாபுரில் சிபிஎம் கட்சியின் நிலப்பிரபுக்களிடமிருந்து அரசு நிர்ணயித்திருந்த குறைந்த பட்ச கூலியைக் கேட்ட பதினோரு முஸ்லீம் விவசாய கூலிகளை கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் அடுத்தாய் நிகழ்ந்த கொலைச்சம்பவமாகும்.
அதன் பின் கொலை, கற்பழிப்பு, கலவரம், சூறையாடிக் கொள்ளையடிப்பது ஆகிய வழிமுறைகளின் மூலம் சிபிஎம் கட்சி ஒவ்வொரு பிராந்தியமாகக் கைப்பற்றத் தொடங்கியது. கர்பேட்டா, கேஷ்புர், பிங்கா சபாங்க், சோட்டோ அங்காரியா, கோட்டல்புர், கானக்குல், கோகட் ஆகிய பெரும் பிராந்தியங்கள் – பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தில் பழங்குடி நிலங்களில் முன்பு நடந்ததைப்போன்ற தொடர் தாக்குதல்கள் வழியாக- எதிர்க்குரல்களே இல்லாத வகையில் சுத்திகரிக்கப்பட்டன. இவையெல்லாவற்றின் உச்சகட்டம்தான் சிங்கூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வருட தொடர் கொலைகள். திட்டமிட்டு ஆனால் தனித்தனி நிகழ்வுகளாய் நடந்த இந்த கொலைச்சம்பவங்கள் எல்லாம் உண்மையில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி நடத்திய கொலைகளின் பெரும் அளவைக் குறித்த தெளிவான சித்திரத்தை அளிப்பதில்லை.
*
இந்த அரசியல் படுகொலைகளின் அளவையும் விரிவையும் இப்போது கணக்கிடுவோம். 1997-இல் புத்ததேப் பட்டாச்சார்ஜி சட்டசபையில் ஒரு கேள்விக்கான பதிலில் 1977-இல் (சிபிஎம் கட்சி பதவிக்கு வந்ததிலிருந்து) 1996 வரை 28,000 அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார். இப்படி ஒரு மொட்டையான பதிலை மட்டும் வைத்து சிபிஎம் கட்சியின் குற்றபோதத்தை அளவிட்டு விட முடியாது. இந்த எண்ணிக்கையின் அர்த்தம் என்னவென்றால், சராசரியாக ஒவ்வொரு மாதமும் 125.7 கொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் 4 கொலைகள். வேறு விதமாகச்சொன்னால், 1977-லிருந்து 1996 வரையிலான 19 வருட காலகட்டத்தில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு அரசியல் படுகொலை நடந்துள்ளது. இப்படிப்பட்ட ”அமைதிப்பூங்காவில்” எதிர்க்கட்சியின் எந்த உறுப்பினராவது பாதுகாப்பாய் உணர முடியுமா என்ன?
90களின் இறுதிகளில் சிபிஎம் கட்சி வணிகத்தை துரிதப்படுத்தும் விதமாக தனது வேலைத்திறனை அதிகப்படுத்தும் என்று கூறியது. இதில் சிபிஎம் கட்சியின் வேலைத்திறன் அதிகரித்ததோடு கொலைகளின் விகிதமும் அதிகரித்தது. அதுகுறித்து மாநில அரசின் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, 2009-இல் மேற்கு வங்க சட்டசபைக்கூட்டத்தில் புத்ததேப் பட்டாச்சார்யா கீழ்க்கண்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டார். அது பின்வருமாறு:
i) கொலைகள்- 2284
ii) அரசியல் கொலைகள்- 26
iii) கற்பழிப்புகள்- 2516
iv) பாலியல் அத்துமீறல்கள்- 3013
v) மணப்பெண்மீதான சித்ரவதைக்கொடுமைகள்- 17571
vi) மாவோயிஸ்ட் செயல்களால் விளைந்த சாவுகள்/கொலைகள்- 134
(மூலம்: தைனிக் ஸ்டேட்ஸ்மேன், கொல்கொத்தா, ஜுலை 16, 2010)
இந்த புள்ளிவிவரத்தின் உண்மைத்தனம் குறித்த ஒரு குறிப்பு இப்போது அவசியமாகிறது. அரசியல் கொலைகள் 26 மட்டுமே என்று கணக்குக்காட்டி இருக்கிறார். இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடம் தருகிறது. 1977-க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சராசரியாக வருடாந்திர அரசியல் கொலைகளின் எண்ணிக்கை 1473. பத்தொன்பது வருடங்களாக இருந்த போக்கு திடீரென்று 26ஆக ஆகியிருக்க முடியாது. இதனை புள்ளிவிவர பிறழ்வு என்றே கொண்டு புறக்கணிக்க வேண்டும். 1997-இல் அதிக அளவில் அரசியல் கொலைகளின் எண்ணிக்கையை வெளியிட்டதற்காக புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அதன் விளைவாக (2009-இல்) உள்துறை அமைச்சர் அரசியல் படுகொலை கணக்கைத் திரித்து வெளியிட்டதாகக்கொண்டு இந்த எண்ணிக்கையைப்புறம் தள்ள வேண்டும்.
எது எப்படி இருந்தாலும், 1997-இலிருந்து 2009-வரை கொலைகளின் எண்ணிக்கையை நம்பகத்தன்மையுடன் கணக்கிட, வருடாந்திர கொலைகளின் சராசரி எண்ணிக்கையாக 2284-ஐ எடுத்துக்கொண்டால், இந்த காலகட்டத்திய அரசியல் கொலைகளின் கணக்கு 27,408 ஆகிறது. ஆக, 1977-லிருந்து 2009வரையிலான அரசியல் கொலைகளின் மொத்த எண்ணிக்கை 28,000+27408= 55408. அதாவது, சராசரியாக ஒவ்வொரு வருடமும் 1787 கொலைகள். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 149 கொலைகள். சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 கொலைகள். வேறுவகையில் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தில் இந்தக்கால கட்டத்தில் ஒவ்வொரு 4 மணி நேரம் 50 நிமிடங்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு மணிநேரத்திற்கு ஒருகொலை என்று இல்லாமல், நான்கு மணிநேரம் 50 நிமிடங்களுக்கு ஒரு கொலை என்று ஆக்கியதை வேண்டுமானால் சிபிஎம் கட்சி தன் சாதனையாகக் காட்டிக்கொள்ளலாம். என்ன ஒரு சாதனை!
கடந்த 31 வருடங்களாக, இந்த 55,408 கொலைகளுக்காக எந்த கொலைகாரனும் தண்டிக்கப்படவில்லை. இந்த கொலைகளில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது வாசகரின் யூகத்தைப்பொறுத்தது. ஒரு கொலைக்கு ஒரு கொலைகாரன் எனக்கொண்டாலும் ,கொலைகாரர்கள்து எண்ணிக்கை 55,000ஐத்தாண்டும். இத்தனை கொலைகாரர்கள் சுதந்திரமாகத்திரிகையில், எந்த அரசும் (2011-இல் அரசு மாறும் என்று யூகம் செய்தாலும் கூட) சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த முடியாது. இந்தக்கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முப்பதாண்டுகளாக சிபிஎம் கட்சியால் ஆபத்தான வகையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள காவல்துறையை இந்தக்கொலைகளை புலனாய்வு செய்யவோ கொலையாளிகள்மீது வழக்குத் தொடரவோ நம்ப முடியாது. பல காவலர்களும் காவல் துறை உயரதிகாரிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இக்குற்றங்களில் பங்கெடுத்துள்ளனர். அவையும் புலனாய்வுக்குட்படுத்தப்பட்டு வழக்கிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். இன்றைய நிலையில் ஏற்கனவே குற்ற நீதிமன்றங்கள் பழைய வழக்குகளின் சுமையில் திணறிக்கொண்டுள்ளன. இதில் இன்னும் முப்பது அல்லது-40000 புதிய வழக்குகளும் சேர்ந்தால் அவை மாபெரும் தாமதத்தையே விளைவிக்கும். எனவே புதிய அரசு இந்த வழக்குகளை புலனாய்வு செய்யவும் வழக்குத்தொடரவும் விசாரணை செய்யவும் புதிய முறையொன்றை வடிவமைக்க வேண்டும்.
2009-இல் திருத்தப்பட்ட, பங்களாதேஷின் 1973 சர்வதேச குற்ற (ட்ரிப்யுனல்) ஷரத்து, மேற்கு வங்காள அரசியல் குற்ற (ட்ரிப்யுனல்ஸ்) சட்டத்திற்கான பரவலான ஒரு வரையறையைத் தர வல்லது. இந்த சட்டமானது குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட பெஞ்சுகளை உருவாக்க வழி தர வேண்டும். அதற்கென்று தனியே புலனாய்வு ஏஜென்ஸியும், அதில் பணிபுரிய பிரபல அரசுசாரா அமைப்புகளும், களப்பணியாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
பங்களாதேஷைப்பொறுத்தவரை 1973-இல் இது புதியதொரு வகையான முதல் சட்டமாக அன்று இருந்தது. நம் விஷயத்தில் இப்படி உருவாக்கப்பட வேண்டிய சட்டம் ஏற்கனவே உள்ள நம் அரசியல் அமைப்புச்சட்டங்கள், சிபிஸி, இபிகோ மற்றும் பல குற்றப்பரிவு சட்டங்களுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும். இது கஷ்டமான ஒரு சட்ட முனைப்பாகத்தான் இருக்கும், ஆனால் முடியாத ஒன்று கிடையாது. கடந்த முப்பதாண்டுகளாக மேற்கு வங்காளத்தில் அரசு இயந்திரத்தின் துணையுடனும் (சிபிஎம்) கட்சியின் துணையுடனும் மானுடத்திற்கு எதிரான போரை நடத்திவந்த இந்த கொலைகாரர்களையும், கற்பழிப்பாளர்களையும், கலவரக்காரர்களையும், சூறையாடிகளையும் தனி சிறப்பு சட்ட வழிமுறை அல்லாது வேறு எந்த வகையிலும் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடியாது.
—
D. BANDYOPADHYAY was the Secretary to the Government of India, Ministries of Finance (Revenue) and Rural Development, and the Executive Director, Asian Development Bank, Manila
—
மூலம்
- 1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு
- ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்
- மிதிலாவிலாஸ்-23
- தொடுவானம் 73. இன்பச் சுற்றுலா
- தூக்கத்தில் தொலைத்தவை
- சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து
- காஷ்மீர் மிளகாய்
- “உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11
- சீப்பு
- இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்
- சங்க இலக்கியத்தில் வேளாண் பாதுகாப்பு
- நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1
- புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.
- அமராவதிக்குப் போயிருந்தேன்
- பா. ராமமூர்த்தி கவிதைகள்
- செய்தி வாசிப்பு
- வேர் பிடிக்கும் விழுது
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்
- கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்
- பிரம்மலிபி- நூல் மதிப்புரை
- மஞ்சள்
- வால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது