நெசம்

This entry is part 26 of 29 in the series 19 ஜூலை 2015

எஸ்ஸார்சி

ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு செந்நெல் என எல்லாம் விளையும் வயல்கள். வயல் வெளியிலிருந்து பார்த்தால் கேப்பர் மலை தூரத்தில் சிரியதாகத் தெரியும். அங்கேதான் வெள்ளைக்காரன் கட்டிய கேப்பர் குவாரி ஜெயில் இருக்கிறது. மாகவி பாரதியாரும் புதுச்சேரி விட்டு புறப்பட்ட சமயம் கைதாகி அங்குதான் சிறையில் இருந்தார். முழுப்புரட்சி என க்குரல் தந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனும் தான் அங்கே சிறைவாசமிருந்தார். பாரதியை இன்னும் துளி துளி ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறோம் ஆனால் அந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனை யாரேனும் நினைவில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களா என்ன?.இந்தியத்திருநாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்த அந்த இந்திரா அம்மையார் மட்டும்தான் அவரைப் பூரணமாக அறிவார்.
ராமாபுரம் ஊரின் மத்தியில் அத்தைக்கு நாட்டோடு போட்ட இரண்டு கட்டுவீடு. அத்தை குடியிருக்கும் அந்த வீடு கட்டி நூறு ஆண்டுகள் கடந்துமிருக்கலாம். அத்தை வீட்டுத்தோட்டத்தில் பாக்குவெட்டி பம்ப் ஒன்று. அது. கை பம்புதான். அதனைத்தான் பாக்கு வெட்டி பம்ப் என்று சொன்னேன். அது அரைகுறை உப்புத் தண்ணீரை வழங்கிக்கொண்டிருந்தது.நான்கு பெண் இர்ண்டு ஆண் குழந்தைகள் அத்தைக்கு.எல்லாம் அது அது அங்கு அங்கு செட்டில் ஆகிவிட்டபடியால் ஒன்றும் செய்யவேண்டிய பெரிய கடமை என்று சொல்லிக்கொள்ளுகிறமாதிரிக்கு பாக்கி இல்லை.
அந்த ராமாபுரம் அத்தையின் சின்ன பையன் ஒரு நாள் திடிரென என் வீட்டிற்கு வந்தான். அப்படி யெல்லாம் அடிக்கடி வருபவன் இல்லை அவன்.தலை கலைந்து கிடந்தது.போட்டிருக்கும் சட்டை அழுக்காகி சகிக்க முடியாமல் கண்ணுறாவியாக இருந்தது.
‘மாமா அப்பாவுக்கு ஆக்சிடன்டு ஆயிடுச்சி. பெரிய ஆஸ்பத்திரியில சேத்துட்டு வரன்’ கண்கள் நிறைத்துக்கொண்டு வந்தது.அழ ஆரம்பித்தான்.
‘என்னப்பா ஏன் என்ன ஆச்சி அம்மா எங்க’
‘அம்மா ஆஸ்பத்திரியில இருக்கு. நீ வா மாமா. எனக்கு பயமா இருக்கு.அப்பா பொழப்பாரா மாட்டாரான்னு.தெரியல.நா என்ன செய்யப்போறன்’
நான் அவனோடு பெரிய ஆஸ்ப்த்திரிக்கு க்கிளம்பினேன். நடந்துபோகும் தூரம்தான்.
ராமாபுரத்திலிருந்து சமுத்திர குப்பம் கிளம்பிய அத்தையின் கணவர் ஆதி மாமா இரு சக்கர வாகனத்தில் சாலை ஓரமாகத்தான் வந்து இருக்கிறார்.ராமாபுரம் பகுதியில் விளைந்த கரும்பினை வெட்டி ஏற்றிக்கொண்டு அருகே இருக்கும் நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்கள் செல்வது வழக்கம்.கரும்புச்சுமை இழுக்கும் டிராக்டர் எஞ்சினுக்குப் பின்னே டிரக்கில் கரும்புக்ள் அரவைக்கு ஏற்றப்பட்டிருக்கும்.சாதாரணமாக ஒரு டிரக்கை பூட்டிகொண்டு நெல்லிக்குப்பம் புறப்படும் டிராக்டர்களில் சில பேராசையில் இரண்டு சுமை டிரக்குகளை கோத்துக்கொள்ளும்.அப்படி இரண்டு டிரக்குகளை பூட்டிக்கொண்ட டிராக்டரின் இரண்டாவது டிரக் முன் சக்கரத்தில் தன் இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டார் அத்தையின் கணவர். டிராக்டரின் இரண்டாவது டிரக் ஏறி இறங்கிய அவரின் உடலைத்தூக்கிகொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார்கள்.முனபாக ஒரு தனியார் மருத்துவ மனைக்கும் போயிருக்கிறார்கள். அங்கு அவன் முடியாது என்று கையை விரித்து விடவே சமுத்திரகுப்பம் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார்கள்.
நானும் என் அத்தை பையனும் நடந்து கொண்டிருந்தோம்.என் அத்தையின் சின்ன மகன் சமுத்திரகுப்பம் சிப்காட் எனும் தொழிற்பேட்டையில் ஒரு வெல்டிங்க் கம்பெனியில் வேலை பார்த்தான்.பெரிய சம்பளம் என்று இல்லை.அதை விட்டாலும் வேறு என்ன வழி இருக்கிறது.அவன் சகோதரன் ரயில்வேயில் வேலை பார்க்கிறான். இவனும் எழுதி எழுதி போட்டான் தேர்வு வந்தது. எழுதிப் பார்த்தான். வேலைக்கான தேர்வுகள் எல்லோருக்குமா பலன் தந்து விடுகின்றன.அவன் சகோதரனுக்குத் தற்காலம் எங்கோ வடக்கே சந்திரபுர்ம் என்னும் ஊரில் ரயில்வே சிக்னல்லிங்கில் மெக்கானிகல் வேலை.
அத்தையின் க்தறல் ஒலி எனக்குக் கேட்கிறது.
‘என்னப்பா அத்தை குரல் மாதிரி இருக்கு’
‘ஆமாம்’
அத்தை பிணவரை வாயிலில் விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்தாள்.மாமா காலமாகி அவர் சடலம் பிண்வரைக்கு க்கொண்டு வந்திருப்பார்கள்.இல்லை என்றால் அத்தை இந்த கட்டிடத்தின் வாயிலுக்கு வ்ரவேண்டிய அவசியமே இல்லை இரண்டு போலிசுகாரர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அவர்களோடு ஒரு கருப்பு அங்கி அணிந்த வக்கீல் ஏதோ இடை இடையே குறுக்கிட்டுப்பேசினார்.இந்த மூவரையும் சுற்றி இன்னும் நான்கைந்து பேருக்கு நின்று வேடிக்கை பார்த்தார்கள்’
‘தம்பி அப்பா நம்பள ஏமாத்திட்டு போயிட்டாரு என் தலையில கல்லு தூக்கி போட்டுட்டாரு. இனி நானு என்ன செய்யுவேன் ஏது செய்யுவேன்’.அத்தை ஓப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தாள். ஆதி மாமாவின் சடலம் பிண்வறையில் கிடத்தப்பட்டுகிடந்தது.அவரே போட்டிருந்த உருட்டைய்பூண் நூல் வைத்து அவர் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டியிருந்தார்கள்.அருகே கிழவி ஒருத்தியின் நிர்வாணச்சடலம்.அந்த சடலம் அருகே ஒரு சிறுவன் உட தலை நசுங்கிய நிலையில் கிடந்தது.சுவர் ஓரமாக வாலிப வயதுப்பெணொருத்தியின் தீயில் கருகிய சடலம்.தரையெல்லாம் கரி. துர் நாற்றம் குப் குப் என்று வந்துகொண்டிருந்தது. பிணவறையின் தரையில் ரத்தம் நிணம் சிந்திக்காய்ந்து போன அசூசைகள் சகிக்கவே முடியாமல் இருததை நானும் என் அத்தை பையனும் அச்சத்தோடு பார்த்தோம்.அவன் தந்தையின் உடலைத்தொட்டுப்பார்த்து ஓ அப்பா என்று கூவிக்குரல் தந்தான்.
‘யார்ரா இது சுதி மதி இருக்குதா இல்லையா’ பிணவறைக்காவலாளி குரல் எதிர் கொடுத்தான்.உள்ளே போய் பிணம் பார்த்த நபர்கள் அவனுக்கு தலா பத்து ரூபாய் கொடுத்தனர். அவன் வாங்கி சட்டைப்பையில் திணித்துக்கொண்டான்.
‘நாதியில்லா பொணம் ஆ உள்ள கெடக்கு யாரு வரா பாக்குறா அது அது கொடுப்ப்னை இருக்குணும்.தல மாட்டுல குந்தி ரெண்டு உறவு சனம் அழுவுலன்னா அந்த பொணம் எப்பிடி என்னா பொணம் பூமிக்கு நாம வரகுள்ள என்னாத்த வரமுன்னு வாங்கிகினு வந்தமோ அதான்’ பிணவறைக்காவலன் சொல்லிக்கொண்டான்.
.பிணவறையின் முன்பாக இருந்த நான்கு வேப்ப மரங்கள் காய்களை கொத்து கொத்தாகத் தம் கிளை முழுவதும் வைத்துக்கொண்டிருந்தன.காக்கைகள் பழுத்த வேப்பங்காய்களை க்கொத்திதின்பதில் போட்டி போட்டன வேப்ப மர வேர்களில் நான்கு நாய்கள் ஒவ்வொன்றும் ஒரு திசை பார்த்து உறக்கத்தில் இருந்தன.
அத்தை மகனும் நானும் போலிசுகாரர் எங்களைக்கூவி அழைக்க அவரிடம் சென்று நின்றுகொண்டோம்.
‘தம்பி அப்பா போயிட்டாரு ஆகவேண்டியது பாக்குணும்’
‘சொல்லுங்க் சார்’
‘முதல்ல எஃப் ஐ ஆர் போடுணும். உங்க கம்ப்ளயின்ட சரியா இல்ல அதை மாத்தி நா சொல்லுறது மாதிரிதான் எழுதி தரணும்’
‘எப்பிடி’ என்றான் அத்தை மகன்.
‘அப்பா அடி பட்டது ரெண்டாவது டிரக்குல ஒரு டிராக்டருக்கு ஒரு டிரக்குதான் கோக்குலாம் சட்டம் . ரெண்டாவது டிரக்கு கோத்தா அது..தப்பு. கேசு எடு படாது. கைக்கு காசு வராது இன்சூரன்சுகாரன் ஒத்துகமாட்டான் வண்டி ஆர் சி பூடும் டிரைவர் லைசென்சு காலியாயிடும் என்ன செய்வே’
‘இல்லையே. ரெண்டாவது டிரக்குலதான் அடிபட்டு இறந்து இருக்குறாரு அப்பா. அப்படித்தான நான் எழுதணும்’
‘ இந்த ராமாயணம் பாரதம் எல்லாம் எனக்கும் தெரியும்’
‘ அந்த டிரைவரையே கேளுங்க சொல்லுவாரு நேரா பாத்த ஜனம் இருக்குதே’
நான் கொஞ்சம் குறுக்கிட்டேன்.’தம்பி கொஞ்சம் நிதானமா பேசுங்க. அப்பா இறந்துபோனதுல்ல துக்கத்துல இருக்க்றீங்க. பட படன்னு பேசக்கூடாது’
‘ஸ்டேஷன்ல இருக்குறாரு டிர்ராக்டரு ஒட்டுன அந்த டிரைவரு. நாங்க புடிச்சி வச்சிருக்கம் சும்மா வுட்டுற முடியுமா ? அவுரு என்னா சொல்ல் இருக்கு. உங்க வூட்டுல கரும்பு ஆலை அரைவைக்கு வெட்டுனா நீங்களும் டிரைவருக்கு கூட அய் நூறு கொடுப்பிங்களாம். அப்பிடி ரெண்டு டிரக்கு செம கோக்குற்து உண்டாமே’
‘யாரு சொல்றது.அப்பிடி எல்லாம் இல்ல.எங்க அப்பா அப்பிடிபட்ட ஆளு கெடயாது’
பதில் சொன்னான் அத்தை மகன் போலிசாரிடம்.
‘ உங்க அப்பா இல்லன்ன உங்க ஆத்தா கொடுத்துருக்கும்.இது எதுக்கு அறியாபுள்ளகிட்ட நாம பேசிகிட்டு. வக்கீலு வந்து இருக்குறாரு. அவர வச்சி பேசிக்குலாம்’
என்றார் போலிசுக்காரர்.
ஒரு டூவீலர் ஒன்றில் வெள்ளைச் சட்டை முழுகையாக போட்டுக்கொண்ட மூத்த வக்கீல் ஒருவர் சரியாக அவ்விடம் வந்து சேர்ந்தார்.
‘செரு பையன் கிட்ட என்ன பேச்சு.கெழவி இருக்குல்ல அதுகிட்ட பேசுங்க.காசி வாங்கப்போறது அதுதான்.எங்க அந்த அம்மா,அத இங்க கொண்டாங்க.அது எங்கயானு முகாரி ராகம் வுட்டுகினு கெடக்கும். புருசன் உசுரா இருக்கக்குள்ள ரவ தண்ணி சாச்சிக் கொடுத்துதுவோ இல்லையோ யாரு கண்டா காசு வாங்குணும்னா அய்யா வே துரையே என் சாமின்னு ஆரம்பிச்சுடுமாச்சே’
‘என்ன பேசுறீங்க தப்பு தப்பா பேசுறீங்க் நீங்க யாரு’ என்றான் அத்தை பையன்.
‘ செறு பையன் அம்மாம் வொலக அனுபவமில்லாத ஆளு போல. வுடு.ஆவுற காரியத்த பார்ப்போம்’
என்றார் மூத்த வக்கீல்.தயாராக தான் எழுதி வந்திருக்கிற வெள்ளை பேப்பரில் அத்தையிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.அத்தை பேப்பரை அவசர அவசரமாக வாங்கினாள் கையெழுத்து போட்டாள்.
‘ ஆயிரம் சொன்னாலும் மூத்தது பக்குவம்தான்’ என்றார் வக்கீல்.
‘என்ன எழுதியிருக்குன்னு பாக்காம கை எழுத்து போடுலாமா’ என்றான் அத்தை பையன்.
‘தம்பி நா பெத்த மொவனே நீ செத்த சும்மா இரு என் தெய்வமே என்னை வுட்டுட்டு பூட்டுது.தோ பாரு உள்ளார கசமாலத்தோட கசமாலமா கெடந்து நாறுது. சொறிநாயிவெட கேபுலம் அது அங்க கெடக்குற கெடப்பு நீ பாக்குல ஆவுறது ஆவுட்டும் போவுறது போவுட்டும் எல்லாம் அந்த தலைவாசல் பெரியஆலமரத்தடி கருப்பண்ணன் என் குல தெய்வம் அறிவாரு வுடு’
அத்தை சொல்லித்தரைமீது புரண்டாள்.
என்னிடம் ஒருவர் வந்தார். யாரென்று கூட எனக்குத்தெரிந்தால்தானே. சில சேதிகள் சொல்லி அந்த ப்பையனிடம் சொல்லிவையுங்க என்றார் காக்கி சட்டைக்காரர். இடுப்பில் பச்சைக்கைலி .வக்கில் குமாஸ்தாவா இல்லை இந்த காரியங்க்ளுக்கு எல்லாம் இந்த வட்டாரத்தின் ஏஜன்ட் யாரேனுமா எனக்குத் தெரியவில்லை.
‘கேசு முடிய ஆறு மாசம் ஆவும்..ஒண்ணரைக்கு கொறையாம கைக்கு வரும் செத்த ஆளு வயிசு சம்பாத்தியம் எல்லாம் இருக்குதுல்ல அதுதான் வரப்போற காசிக்கு கணக்குக்குப் பேசும். ஆம்பளய தொலச்ச அந்த அம்மாவுக்கு முக்காலு ரூவா வரும் அப்பிடிஇல்லைன்னா ஒண்ணுக்குள்ள வரும். சொச்சம் இருக்குறது அதுஅது அங்க அங்க போவேண்டிய எடம்போயிடும் எல்லாம் நாங்க பாத்துகுவோம். அயிசு பொட்டில ராசா கணக்கா அய்யாபொணத்தை வச்சி எடுத்துகிட்டு ராமாபுரம் போங்க கொற கதயும் பாருங்க’
இதுதான் அந்த பச்சைகைலி என்னிடம் சொன்ன சேதி.
நான் பொறுப்பானவன் அத்தை பையனோடு கூட இருப்பவன் என்பதாக ஒரு போலிசுகாரர் மூத்த வக்கீலிடம் விளக்கிச்சொன்னார்.
அந்த மூத்த வக்கீல் என்னிடம் சொன்ன விஷயம்.’ இறந்துவிட்ட ராமாபுரம் ஆதி அய்யாவுக்கு டூவீலர் வண்டி ஓட்டுற லைசன்ஸ், வண்டிக்கான இன்சூரன்சு, ஆர் சி புக் இதுங்க பக்காவா ரினுவல் ஆகி இருக்குதா வண்டி கண்டிஷனா இருந்திச்சா,அய்யா.கண் பார்வை எப்பிடி ரத்த கொதிப்பு எப்பிடி சுகர் மயக்கம் இருந்துதா மருந்து மாத்திரை உடாம சாப்புடுறாரா, காலு நரம்பு சுருட்டிகுமா தண்ணி கிண்ணி பொழக்கமுண்டா பான் பராக் சமாச்சாரம் தொடுவாரா இன்னும் ஆயிரம் கேள்விங்க வரும் அத்தினியும் நான் கோட்ர்டுல சமாளிக்கணும் ஒண்ணு மறந்துட்டேன்.ஓமியோபதி படிச்சி இருக்குறாரா இல்ல சும்மா கதை வுட்டுகினு அலோபதி மருந்து குடுக்குற டுபாக்கூர் டாக்டரான்னு கூட அங்கு கேப்பாங்க’
இது அத்தனையும் அமைதியா காது கொடுத்துக் கேட்ட அத்தை.’ வக்கீல் அய்யா என் பெரிய மொவன்ன அது தினுசு வேற அவந்தான் கிட்ட இல்ல எங்கயோ எட்டத்துல வடக்க கெடக்குறான்.என் சின்ன மொவன் செறு புள்ள வெள்ளந்தியா மனசுல பட்டது பேசுவான் எம் புருஷன் கணக்கு அவன். இந்நேரம் அவனுக்கு குடும்பம் கிடும்பம்னு ஆயி இருக்குமே. நெசம் நெசம்னு நெசத்த பேசி பேசித்தான் இப்ப சந்தியில நிக்குறான். அவரும் தோ போயிசேந்துட்டாரு இது நிக்குது அந்தராசியா வக்கீல் அய்யா கொவிச்சிகிடாதிங்க நீங்க எப்பிடி சொல்றீங்களோ அதான் எங்க முடிவு.அய்யா நீங்க சமுத்திரகுப்பத்துல ஆயிரம் கேசுவ பாத்து இருப்பிங்க இது என்னா புதுசா’ சொல்லி மூக்கை சீந்தினாள். மீண்டும் ஒங்கி மார்பில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். போஸ்ட்மார்ட்டம் எனும் சடங்கு முடிந்தது. டாக்டர்கள் பிணவறைவிட்டுக்கலைந்தனர், எங்கும் த்லைவலித்தைல நாற்றம். லைஃப்பாய் சோப்பின் நெடி.வேப்ப மர வேர் படுத்த நாய்கள் சட்டென்று இடத்தைக்காலி செய்தன.
‘பொணம் வெளிய வந்துதுன்னா நாயுவ இந்த வாடைக்கு பயந்துகிட்டு கெள்ம்பிடுதுவ’ ஆஸ்பத்திரி சிப்பந்திகள் பேசிக்கொண்டு லேசாக ச்சிரித்தனர்.செவிலியர்கள் யாரும்தான் கண்ணில் படவேயில்லை. .
வெள்ளைத்துணி சுற்றிய ரெண்டு அடிக்கு நீளம் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பொட்டலத்தை அய்ஸ் பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அத்தையையும் அத்தை பையனையும் கூடவே ஆம்புலன்சு வண்டியில் அழைத்துக்கொண்டார்கள்.
இப்ப ஆன செலவுக்கு அயியாரம் கொடுத்துட்டு நீங்க வண்டிய நவுத்தலாம்’ என்றான் ஆம்புலன்சிலிருந்து இறங்கிய அந்த காக்கி சட்டை போட்ட பசைக்கைலி. தலை மொட்டையாக இருந்தது.
‘எல்லாம் பெரிய அண்ணந்தான்’ என்றான் அந்த மொட்டைத்தலையைப்பார்த்துக்கொண்டே நின்றிருந்த பிணவறைக்காவலாளி.
‘நான் இந்த அஞ்சி ரூவாயுக்கு பொறுப்பு வண்டி நகரட்டும்’ என்றேன்.
‘சரி ஒரு நமோதான ஆளு சொல்லுது வுட்டுடு வண்டியை’ சொன்னது காக்கி சட்டை போட்ட பச்சைக்கைலி.ஆம்புலன்சின் டிரைவர் வண்டியைக்கிளப்பினார்.
என் சட்டைப்பையிலிருந்தது என் ஏ டி எம் கார்டை எடுத்துக்கொண்டு மெயிரோடுக்கு வந்தேன்.. ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்தேன். காக்கி சட்டைபோட்ட பச்சைக்கைலியிடம் கொடுத்து முடித்தேன்.என் வீடும் அருகில்தானே இருந்தது. என் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஆம்புலன்சின் பின்னே மெதுவாகச் சென்றுகொண்டிருந்தேன்.ராமாபுரம் செல்லும் வழி எல்லாம் மக்கள் கூடி ‘ஓமியோபதி டாக்டரு பூட்டாராமே. கரும்பு டிரக்கு ஏறிீடிச்சாம் ஊருக்கெல்லாம் வாத்தியாருதான் இப்ப என்ன செய்வ ‘ சொல்லிக்கொண்டே ஆம்புலன்சை வேடிக்கை பார்த்தனர்.அத்தை ஆம்புலன்சு உள்ளே தன் இரு கண்களையும் பொத்தி அழுதுகொண்டே இருந்தாள்.
‘இந்தகண்ணுறாவிய நான் பாக்குணுமா இதுதான் என் குடுப்பினையா என்ன பெத்த ஆத்தாவே என் அப்பாரே இது அடுக்குமா’ மீண்டும் மீண்டும் அழுது புலம்பினாள்.என் அத்தையின் பையன் நான் வண்டி பின்னே டூ வீலரில் தொடர்ந்து வருவதை மட்டும் உறுதிசெய்து பார்த்துக்கொண்டே இருந்தான்.
———

Series Navigationநேர்த்திக் கடன்வழி தவறிய பறவை
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *