காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம்( 4 )

This entry is part 12 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

”கிளம்பிட்டீங்களா பாலன்…நானும் உங்க கூட வரலாமா? ” – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறாள் என்று புரிந்தது பாலனுக்கு. அன்று அவளின் நெருக்கம் சற்று அதிகமோ என்று தோன்றியது. ஏன் அவன் அண்ணனை அங்கு வரச்சொன்னாள். அவர் ஏன் தன்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்றார். அப்படியானால் அவர்கள் வீட்டில் முடிவே செய்து விட்டார்களா? இவர்களாக ஏதாவது தாறுமாறாய், தன்னிச்சையாய் நினைத்துக் கொண்டால் எப்படி? அவரின் பேச்சின் ஜாடை அப்படித்தானே இருந்தது. என் சிஸ்டரைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று என்னிடம் ஏன் கேட்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்தது? இதெல்லாம் என்ன முயற்சிகள்?
இங்க பார் நந்தினி…தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதே…உன்னை எனக்குத் திருச்சியிலிருந்தே தெரியும்ங்கிறது இங்க எல்லாருக்கும் தெரியும்ங்கிறதுனாலதான் நான் இத்தனை சாதாரணமா உன்கிட்டே பழகுறேன்…அதை வேறே ஏதுமாதிரியும் தயவுசெய்து அர்த்தப்படுத்திக்காதே…உங்க ப்ரதரை மதிச்சுதான் நான் அவரோட ஸ்நாக்சுக்காகப் போனேன். அதுக்கும் வேறே ஏதும் அர்த்தமில்லை. தயவுசெய்து புரிஞ்சிக்கோ…
நந்தினியின் முகம் சட்டென்று சுருங்குவதை இவன் கண்ணுற்றான். அனாவசியமாய் அவள்தான் தன்னை இந்த நிலைக்குத் தள்ளுகிறாள். திருச்சியில் இருக்கும்போதே தன்னைப்பற்றியும் தன் குடும்ப நிலை பற்றியும் தெள்ளத் தெளிவாக அவளிடம் சொல்லியிருக்கிறான். மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து எத்தனையோ முறை மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். குறைந்தது இரண்டு தங்கைகளுக்காவது திருமணம் செய்து விட்டுத்தான் தன் கல்யாணத்தைப் பற்றி தன்னால் யோசிக்க முடியும் என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் அப்பாவின் வருமானம் மட்டும் போதாது என்பதாக அவன் எண்ணமிருந்தது. ஒரேயொரு ஜவுளிக்கடை ஓட்டத்தில் என்னத்தைப் பெரிதாகச் சேர்த்து விட முடியும். குடும்பச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, பெண்டுகளுக்கும் நகை நட்டுகளைச் சேமிக்க வேண்டுமென்றால்? அப்பாவால் மட்டும் அது நிச்சயமாக இயலாது. தன்னின் தீவிர முயற்சியினால் மட்டுமே இவை சாத்தியம் என்று மிகுந்த மன உறுதியோடு இருந்தான்.
பிரதி மாதமும் வீட்டிற்குப் பணம் அனுப்பியதுபோக, மிகவும் சிக்கனமாய் இருந்து அங்கேயே ஒரு வங்கிக் கணக்குத் திறந்து, சிறிது சிறிதாக ஒரு தொகையைச் சேர்த்து, மாறுதலில் சொந்த ஊர் புறப்பட்டபோது உள்ளுருக்குக் கணக்கை மாற்றிக்கொண்டு, அப்பாவிடம் அந்தப் பாஸ் புத்தகத்தை முதன் முறையாகக் காண்பித்த அன்று என்ன ஒரு மகிழ்ச்சி அவரிடம்? கண்கள் கலங்க அவர் நின்ற காட்சி இன்னும் மனதில்.
சில ஆயிரங்களைச் செலவழிச்சித்தான் உனக்கு இந்த மாறுதலை வாங்கியிருக்கேன். அதுவே என் மனசை ரொம்ப உறுத்திட்டிருந்திச்சி. இப்போ நீ இதைக் காட்டின இந்த நிமிஷத்தில் என் மனசு நிறைஞ்சு போயிடுச்சு…ஏன்னா உழைச்ச காசு வீண் போகக் கூடாது பாரு…. என்றார்.
அப்போ ஏம்ப்பா பணமெல்லாம் கொடுத்து இந்த ஏற்பாடைப் பண்ணினீங்க…?அதுவா வரும்போது வந்திட்டுப் போகுதுன்னு விடவேண்டிதானே? உங்க சேமிப்பும் உழைச்ச காசுதானே? அதுவும் வீண் போகக் கூடாதுல்ல? என்றான் இவன்.
வாழ்க்கைல சில சமயங்களில் சமரசங்களைச் செய்துக்கத்தான் வேண்டியிருக்கு….தவிர்க்க முடியாமத்தான்…அப்படிச் செய்திட்டதுதான் இது…போனாப் போகுது….இப்போ நீ எங்ககூட இருக்கேல்ல…வீட்டைக் கவனிச்சிக்க ஒரு ஆம்பிளைப்பிள்ளை என் கூடவே இருக்காங்கிற தைரியத்துல நான் இருப்பேனே…என்றார் நாகநாதன்.
அப்பாவின் சுய முயற்சியில் பணம் விலை கொடுத்து வந்த அந்த மாறுதல் இன்றளவும் இவனுக்கு ஒப்புதல் இல்லைதான். எவ்வளவு கொடுத்தார் என்பதையும், யாருக்குக் கொடுத்தார் போன்ற விபரங்களையும் இன்றுவரை அப்பா சொன்னதில்லை.
அதெல்லாம் எதுக்கு உனக்கு? அது எம்பாடு…நீபாட்டுக்கு வேலையைப் பாரு…என்றுவிட்டார். இவனும் விட்டுவிட்டான் அத்தோடு.
தனக்குச் சற்று முன்னாலேயே மாறுதலில் இங்கு வந்துவிட்டவள் நந்தினி. அவளுக்கும் சொந்த ஊர் இதுதான்.
பேசாம அந்தப்பொண்ணையே கட்டிக்கப்பா…உனக்கு சரியான ஜோடிதான்…சொல்லு, வேணும்னா இங்கயே முடிச்சி விட்ருவோம்…என்றார்கள் நண்பர்கள்..
எதுக்கு மாறுதல்ல போறே…பேசாம இங்க திருச்சில சுப்ரமண்யபுரத்துல ஒரு ப்ளாட்ட வாங்கு…ஒரு உறவுஸ் பில்டிங் லோனைப் போடு…வீட்டைக் கட்டு…கல்யாணத்தப் பண்ணு…இங்கயே செட்டிலாயிடு….என்று தூண்டி விட்டார்கள். இவன்தான் அசையவில்லை. லேசாக இளநாக்கு அடித்திருந்தால் இழுத்துக்கொண்டு போய் நிறுத்தி ஏதேனும் ஒரு கோயிலில் வைத்துக் கூடத் தாலி கட்ட வைத்திருப்பார்கள். கில்லாடிகள் அங்கிருந்த நண்பர்கள். ஆனாலும் கழுவும் மீனில் நழுவும் மீனாயிற்றே இவன். ஆள விடுங்க சாமி என்று ஓடியே வந்துவிட்டான் சொந்த ஊருக்கு.
நீ கிளம்பு நந்தினி…நான் கொஞ்சம் பொறுத்துத்தான் வரணும்…நாளைக்கு பட்ஜெட் மீட்டிங்…மானேஜர் கூட நா பேச வேண்டிர்க்கு….என்றான் தலைகுனிந்தவாறே. தான் சொல்வது பொய் என்பது எங்கே அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னால் தன் கண்களைப் பார்த்து அவள் கண்டுபிடித்துவிடுவாளோ என்று பயந்தான். அவளின் கூர்மையான பார்வை இவனை என்னவோ செய்யத்தான் செய்தது. அதனால்தான் தானே அவளைப் பொறுத்தவரை அத்தனை மிருதுவாக நடந்துகொள்கிறோமோ என்றுகூட நினைத்திருக்கிறான். ஏன் அவளின் செய்கைகள் எதற்கும் தனக்குக் கோபமே வர மாட்டேன் என்கிறது. அலுவலகத்தில் பலரும் கவனிக்கும் நிலையில் கூட அதுபற்றிய சுரணை தன்னிடம் அதீதமாக இல்லையே, ஏன்? தன்னையறியாமல் தன் மனம் அவளிடம் நாட்டம் கொண்டிருப்பதை உணர்ந்தான் பாலன்.
ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்க் கொண்டிருந்தாள் நந்தினி. அவள் கண்கள் கலங்கியதை இவன் கவனிக்கவில்லை. ஆனால் அவளின் தயங்கிய நடை அவனை என்னவோ செய்தது.
சார்…பாலன் சார்…உங்க அப்பாரு நின்னாரே…பார்க்கலியா…உங்களப் பார்க்கத்தான் வந்திருப்பார் போலிருக்கு..? என்றவாறே ஓடிவந்த பியூன் ராமலிங்கம், பக்கத்துக் கடைல நின்னாரு சார்…டீ வாங்கிட்டு வர்றைல பார்த்தேனே…? என்றான்.
அப்பா ஏன் இங்கு வந்தார்? யோசனையோடேயே எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.
இன்னுமா நின்னிட்டிருக்காரு…அவரு போயிருப்பார் சார்…உங்களப் பார்க்க வந்தாரோ இல்ல வேறே ஏதாச்சும் வேலயா வந்தாரோ…
வாசலில் சென்று பக்கத்து டீக்கடையை எட்டிப் பார்த்தான் பாலன். காம்பவுன்ட் சுவற்றைத்தாண்டி இங்கிருந்து பார்த்தாலே தெரியும் அந்தக்கடை வாசலில் அப்பா இல்லை. எதற்காக வந்திருப்பார், ஒரு வேளை அந்தக் கான்ட்ராக்ட் சம்பந்தமாய் இருக்குமோ? வேறெதற்கு வரவேண்டும். அக்கோப்புதான் இன்னும் தன்னிடம் திரும்பவில்லையே? திரும்பவும் இருக்கைக்கு வந்தவன், என்று அனுப்பினோம் என்று டைரியை எடுத்துப் புரட்டினான்.
சாதாரணமாய் மூன்று நாட்களுக்குள் எந்தக் கோப்பும் மீண்டும் தன்னிடம் திரும்பி விடும்தான். இது ஏன் தாமதமாகிறது? அலுவலகத்திற்குள் நுழைந்து மேலாளரின் ட்ரேயில் ஒப்பமாகித் திரும்பியிருக்கிறதா என்று அலசினான். இல்லை. அலுவலரின் அறைக்குச் சென்று அவரது ட்ரேயில் ஏதும் இருக்கிறதா என்று கண்ணுற்றான். வேறு சில கோப்புகள்தான் இருந்தன. அதாவது அந்தக் குறிப்பிட்ட கோப்புக்குப்பின் அனுப்பிய கோப்புகள். அப்படியானால் இது என்னவாயிற்று?
சார், எதைத் தேடுறீங்க? உங்க பைலத்தான? கையெழுத்தாகி வந்ததுல ஒண்ணை மட்டும் மானேஜர் எடுத்து வச்சிருக்காரு…
எப்பப்பா வந்திச்சு? – புரியாமல் கேட்டான்.
இன்னைக்குக் காலைல நீங்க ஆபீஸ் வந்ததும் உங்க டேபிள்ல ஃபைல்ஸ் இருந்திச்சில்ல…அதோட வந்ததுதான்…நேத்து ராத்திரி கையெழுத்தானது…
மேலாளர் தன்னிடம் சொல்லாதது வியப்பாயிருந்தது இவனுக்கு. இதற்கு முன் ஒரு முறை இப்படி ஆகியிருந்தபோது அவர் சொன்னார்.
ஃபைனலா என்னிக்குக் கையெழுத்தாகுதோ அன்னிக்கு வரும்…அதுவரை பென்டிங்தான்….எனக்கு டிஸ்கஸ் போட்டிருந்தா அது முடியணும்…
மொட்டையாக அவர் இப்படிச் சொன்னது இவனுக்கு வெறுப்பாக இருந்தது. தன்னோடு பேச முடியாத சில அவருடன் விவாதிக்கப்படுகின்றன. இறுதியாகின்றன. ஆகட்டும். அதில் தவறில்லை. அது அலுவலரின் உரிமை. ஆனால் தன்னால் எழுதப்பட்டதே அதில் இல்லாததும், புதிதாக எழுதப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ, அல்லது கணினி அச்சிலோ தயாரானவைகள் உத்தரவாவதும், வெகு நாட்கள் கழித்து அவை தன் கைக்குக் கிடைப்பதுவும், இந்த அலுவலகத்தின் புதிய அனுபவமாக இருந்தன அவனுக்கு. பல சமயங்களில் கோப்புகள் மேலாளரிடமே இருந்து விடுகின்றன. அது அவருக்கும் அலுவலருக்கும் உள்ள டீல்.
இந்த லட்சணத்தில் அப்பா தன்னை அலுவலரின் வலது கை என்கிறார். எந்தக் கிறுக்கன் சொன்னது அப்படி? சிரிப்புத்தான் வந்தது. இவர்களாகவே ஊகித்துக் கொள்வார்களோ? மனதில் தோன்றுவதையெல்லாம் யாரிடமாவது சொல்லி வைப்பார்களோ? அப்படித்தான் இந்தப் பொய்ச் செய்தி அப்பாவையும் எட்டியிருக்குமோ? எல்லாமே இங்கு அரசியல் ஆகி விட்டது. நிர்வாகத்தில் அரசியல் புகுந்தால் விளங்கவா போகிறது? நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்றிருப்பவன் நான். என்னைப்போய் பீச்சாங்கை, நொட்டாங்கை என்றுகொண்டு? அப்படியெல்லாம் கேள்விப்படுவதற்கே மனது வெட்கிப் போவதை எண்ணிக் கொண்டான். ரொம்பவும் கேவலமாய்ப் போயிற்று எல்லாமும் என்று தோன்றியது.
அப்பா வந்து தன்னின் தேவையில்லாமலே விஷயத்தை முடித்துச் சென்றிருப்பாரோ என்று ஒரு சந்தேகம் முளைத்தது. அலுவலகத்தின் கட்டக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு நுழைவாயிலில் இருக்கும் அலுவலரின் அறையிலும் அதன் வெளியிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. என்ன நடந்தால்தான் என்ன? இவனுக்கு இவனுண்டு, இவன் வேலையுண்டு. எண்ணங்களில், சுதந்திரமாய்த் திரிபவன். தவறுகள் செய்ய வேண்டும் என்று இருப்பவர்கள்தான் மனசைக் குழப்பிக் கொள்ள வேண்டும். எது, என்ன, எங்கே, எப்போ என்று குயுக்தியாய் சிந்திக்க வேண்டும். தனக்கு அதெல்லாம் இல்லையே? எது விதியோ, எது முறையோ அதுதான் பாலன். மைன்ட் ஃப்ரீ பர்சன். தெளிந்த நீரோடையாய் இருக்கும் அவனுக்கென்ன கவலை?
நினைத்தவாறே கிளம்பி வீடு வந்து சேர்ந்தவனை உறாலுக்குள் நுழைந்தவுடன் நாகநாதனின் குரல் தடுத்து நிறுத்தியது.

Series Navigationடெங்கூஸ் மரம்உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *