ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?

This entry is part 1 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

அன்புள்ள ஆசிரியருக்கு

சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன் உருவாக்கப்பட்டது என்று அறியாதவர்கள் தான் இவ்வாறு கூறுவர். இதை ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா,ஷண்முகம்,ஸரஸ்வதி,ஹரிஹரன்,லக்ஷ்மி,ஸ்ரீதேவி என்ற பெயருள்ளவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமா? கருணாநிதி, தயாநிதி,கலாநிதி,உதயநிதி என்போர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஸம்ஸ்க்ருதப் பெயர்களில் கிரந்த எழுத்துகள் இல்லையே.

தமிழில் 30 எழுத்துகள் உள்ளன. ஸம்ஸ்க்ருதத்திலும் அதைச்சார்ந்த வட இந்திய மொழிகளிலும் 51 எழுத்துகள் உள்ளன. ஆனால் அவற்றில் எ,ஒ, ழ இல்லை. ழ தமிழ் மலையாள மொழிகளில் மட்டுமே உள்ளது. தமிழில் க,ச,ட,த,ப, என்ற எழுத்துகளின் ஒலிகள் சொல்லின் இடத்திற்குத் தக மாறுகின்றன. மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் ஸ்ம்ஸ்க்ருதத்தில் உள்ளது போலவே மேற்காணும் 5 மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் நான்கு வரி/ஒலி வடிவங்கள் உள்ளன. மேலும் ஒப்பு நோக்கினால் தமிழில் கீழ்க்காணும் (அலங்கடைகள்) தவிர்ப்புகள், தடைகள் உள்ளன.

தமிழில் –

௧- மெய்யெழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா. தொல் காப்பியம் சூ 60: உயிர் மெய்யல்லன மொழிமுதலாகா.

௨- இரண்டு வெவ்வேறு மெய்யெழுத்துகள் சேர்ந்து வாரா. ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு வெவ்வேறு மெய்யெழுத்துகள் கூட சேர்ந்து வரும்.

௩- எல்லா மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் வாரா. பத்து மெய்யெழுத்துகள் மட்டும் மொழிக்கு முதலில் வரும். அவற்றிலும் சில, எல்லா பன்னிரண்டு உயிரெழுத்துகளோடு மொழிக்கு முதலில் வாரா.

இதனால் மற்ற மொழிகளில் உள்ள பெரும்பாலான பெயர்களைத் தமிழில் சரியாக எழுதவோ பேசவோ இயலாது.

ஸம்ஸ்க்ருத எழுத்து அமைப்பை, தமிழ் தவிர எல்லா இந்திய மொழிகளும் ஏற்றுக்கொண்டன. ஸம்ஸ்க்ருதம் எழுத வட இந்தியாவில் நாகரி எழுத்துக்களும் தமிழ்நாட்டில் (பல்லவ) கிரந்த எழுத்துக்களும் உருவாக்கப்பட்டன. கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்துகளாவும் பின்பு மலயாள எழுத்துகளாவும் மாறின.

தமிழ் நாட்டுக் கோவில்களில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகளில் கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்து உள்ளன. எல்லா இந்திய மொழிகளிலும் ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள ஒலிகளை சரியாக எழுதி (transliteration) பேச முடியும். தமிழர்கள் , தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவி்ப்பாளர்கள் வேற்று மொழிப்பெயர்களைத் தவறாகவே கூறுகின்றனர். இருபத்தியாறே எழுத்துகள் கொண்ட ஆங்கிலச் சொற்களையும் தமிழில் எழுத/ஒலிக்க இயலாது. இந்த குறைபாட்டிற்கு என்ன தீர்வு.

1. வழக்கிலுள்ள ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் எழுத்துக்களை முழுவதும் ஏற்றுக்கொள்ளவேண்டும்’

2. வேற்று மொழிச்சொற்கள் வருமிடத்து ka,kha,ga,gha,ca,cha,ja,jha போன்ற ஒலிகளுக்கேற்ப தேவையானவிடங்களில் க1, க2, க3, க4 , ச1,ச2,ஜ1,ஜ2 என்று எழுதவேண்டும்.

3. நாகரியையோ கிரந்தத்தையோ கற்றுக்கொள்ளவேண்டும். வேண்டாமெனில் சில நுற்றாண்டுகளுக்கு முன்பே தமிழிலிருந்து பிரிந்து சென்ற மலையாளத்திலிருந்து ക,ഖ,ഗ,ഘ, ച,ഛ,ജ,ഝ போன்ற எழுத்துக்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.

1. (நான் மலையாளம் படிக்க பதினைந்தே நாட்களில் கற்றுக்கொண்டேன். என் தாய்மொழி தெலுங்கு.)

ஸு.கோவிந்தஸ்வாமி

Series Navigationஓநாய்கள்

8 Comments

  1. Avatar BS

    ஒரேவரியில் சொல்லிவிடலாம்: ஒரு புதிய தமிழை உருவாக்க வேண்டும்.

    சமஸ்கிருதமும் நன்கு தெரிந்தால் மலையாளம் எளிதாகப்படிக்கலாம்.பேசலாம். தமிழை விட தெலுங்கும் மலையாளமும் சமஸ்கிருத்தால் விரவப்பட்ட மொழிகளே.

  2. Avatar Mahakavi

    >>மெய்யெழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா<>எல்லா மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் வாரா.<<

    Conflicting statements. Need rewording to distinguish between "mei" and "uyirmei"

  3. அனைத்து எழுத்துக்களையும் ஏற்க வேண்டியது இல்லை.ஒரு எழுத்து மாற்றத்தால் பொருள் மாறவில்லையென்றால் கிரந்த எழுத்துக்களில் சிலவற்றை நீக்கி விடலாம்

  4. ஜெயலலிதா,ஷண்முகம்,ஸரஸ்வதி,ஹரிஹரன்,லக்ஷ்மி,ஸ்ரீதேவி

    இதில் சண்முகம், சரசுவதி, லட்சுமி என்றால் எல்லோருக்கும் புரியும். எனவே இந்த எழுத்துக்கள் தேவையா என யோசிக்கலாம்.தனித் தமிழ் எழுத்துக்களாக உபயோகப்படுத்தும் போது ஜெயலலிதா போன்ற பெயர்கள் புரியாமல் போய்விடும்.அதற்கு ஒரே வழி தூய தமிழ் பெயர் வைத்துக் கொள்வதே.

  5. Avatar க்ருஷ்ணகுமார்

    தமிழும் ஸம்ஸ்க்ருதமும் கலந்து தமிழில் மணிப்ரவாளம் என்ற மொழிநடை புழங்கியுள்ளது. தமிழுடன் ஸம்ஸ்க்ருதமும் கலந்த மொழிநடை என்றபடிக்கு இது தமிழ்நாட்டுக்கே உரியது. பிற்காலத்தில் குணங்குடி மஸ்தான் சாஹிபு, சதக்கத்துல்லாஹ் அப்பா போன்ற இஸ்லாமிய அவுலியாக்கள் தமிழ் மொழியில் தங்களது இஸ்லாமிய மத நூற்களை படைக்குங்கால் இந்த மணிப்ரவாள நடையுடன் உர்தூ மொழிச்சொற்களும் இந்த சான்றோர்களது பனுவல்களில் கலந்தன.

    எந்த ஒரு மொழியையும் அல்லது மொழிநடையையும் ஒரு ஜாதி அல்லது மதம் இவற்றுடன் பொருத்தி விடுவது அறியாமையின் பாற்பட்டது.

    மணிப்ரவாள மொழிநடையில் சைவ வைஷ்ணவ இலக்கிய நூற்களுடைய ஒரு பெரும் களஞ்சியம் உள்ளது. அது மட்டுமன்று மணிப்ரவாள மொழிநடையில் தமிழகத்து பௌத்த மற்றும் ஜைன சமய இலக்கிய நூற்களும் உள்ளன.

    ஒரு சில க்றைஸ்தவ பிரிவினர் முனைந்து தமிழார்வம் காரணமாக தூய தமிழ் மொழியில் விவிலியத்தைச் சமைத்திருக்கின்றனர். ச்லாகிக்கத் தக்க முயற்சியே. ஆயினும் க்றைஸ்தவ சஹோதரர்களது வெகுஜனப்புழக்கத்தில் இருக்கும் விவிலியம் மணிப்ரவாளத்தில் அமைந்ததே. பொதிகை தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் ராத்திரி 10.30 மணிக்கு பாஸ்டர் சாம் செல்லதுரை அவர்களது ப்ரசங்கத்தின் ப்ராரம்பத்திலும் முடிவிலும் அன்னார் மேற்கத்திய இசையுடன் இசைக்கும் பெரும்பாலான க்றைஸ்தவப் பாடல்கள் ரெவரெண்டு வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற க்றைஸ்தவ சான்றோர்களாலும் ஏனைய க்றைஸ்தவ சான்றோர்களால் இயற்றப்பட்டவை. புழங்கிவரும் மற்ற க்றைஸ்தவ சேனல்களிலும் வெகுஜனப்புழக்கத்தில் உள்ளது மணிப்ரவாள பைபள் என்பதும் வெள்ளிடைமலை.

    எனக்கு கண்டஸ்தமான ப்ராபல்யமான சில மணிப்ரவாள க்றைஸ்தவ கீர்த்தனைகளிலிருந்து ஒரு துளிகள் :- (வார்த்தைகளில் பிழைகள் இருக்குமானால் டாக்டர் ஸ்ரீ ஜான்சன் மஹாசயர் அவர்கள் திருத்தம் செய்யலாம்)

    பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
    பரமபதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
    காரோன் அனுகூலனுக்கு கன்னிமரிசேயனுக்கு
    கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு

    சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்

    ஸர்வலோகாதிப நமஸ்காரம் ஸர்வ ச்ருஷ்டிகனே நமஸ்காரம்
    தரைகடலுயிர்வாழ் ஸகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம்

    இந்த மணிப்ரவாள நடையுடன் தமிழகத்து சொத்தான இஸ்லாமிய தமிழிலக்கிய நூற்களில் மணிப்ரவாளத்துடன் உர்தூ பாஷையின் சொற்களும் உள்ளன.

    இப்படி தமிழகத்தில் புழங்கிய ஹிந்து மதத்தின் அனைத்து சமயத்து நூற்களையும் மற்றும் க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமிய இலக்கிய நூற்களையும் அடக்கிய மணிப்ரவாளத்து மேலும் கலப்பு மொழிநடையினைச் சார்ந்த நூற்களை உள்ளது உள்ளபடி போஷிக்க பல்லவ க்ரந்த எழுத்துக்கள் நிச்சயம் தேவை. இந்த எழுத்துக்கள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு இவை நிச்சயம் இல்லை. இந்த எழுத்துக்கள் தேவை என்று கருதுபவர்களால் இவை தொடர்ந்த் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் சமயங்கள் கடந்த மதங்கள் கடந்த தமிழகத்தின் ஒரு மிகப்பெரும் கலைக்களஞ்சியம் மணிப்ரவாள / கலப்பு மொழிநடையில் உள்ளது என்ற கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இவை தமிழகத்தின் தமிழ் மொழி பேசும் ஹிந்து, முஸ்லீம், க்றைஸ்தவ சஹோதரர்களது ப்ரத்யேகமான சொத்து என்பதையும் யாரும் மறுதலிக்க முடியாது. தமிழகத்தின் ப்ரத்யேகமான இந்த சொத்தை ரக்ஷிக்க முனைபவர்கள் நிச்சயமாக இந்த பல்லவ க்ரந்த எழுத்துக்களையும் ரக்ஷணம் செய்வது அவச்யமாகிறது.

  6. Avatar govindkarup

    எழுத்துக்கள், வார்த்தகைள் எதுவும் எங்களுக்கு புதிதாய் தேவையில்லை என்பவர்கள், முதலில் அம்மொழி பேசுபவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்வதை நிறுத்தட்டும். கம்யூட்டர் கண்டுபிடிக்க முனைப்பு காட்டாமல், அதற்கு தன் மொழியில் பெயர் சூட்டுவதை சாதனையாகச் சொல்லும் ஒரு மனநிலை ஏனோ..?

  7. Avatar S. Krishnamoorthy

    வாஷிங்க்டன் என்பதை வாசிங்க்டன் என்றும், மாஸ்கோ என்பதை மாசுகோ என்றும், பரத்வாஜ் என்பவரை பரத்வாச் என்றும் ஜம்மு கஷ்மீரை சம்மு காசுமீர் என்றும் எழுதுவது அநாகரிகம் என்று கருதுபவர்கள் நிச்சயம் ஆசிரியரின் கருத்தை ஆதரிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *