அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

This entry is part 15 of 24 in the series 25 அக்டோபர் 2015

அதங்கோடு கிராமம் குமரி மாவட்டத்தில் உள்ளது. அனிஷ்குமார் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுக் கல்லூரியில் பணிபுரிகிறார்.
‘ நிறங்களின் பேராசைக்காரர்கள் ‘ என்ற தொகுப்பில் 51 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளில் சில புரியும். சில பூடகத்தன்மை அல்லது
இருண்மை கொண்டு கடினமாக இருக்கும் பொதுவாக , சொற்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. சக மனிதர்களை விமர்சிக்கும் உள்ளடக்கம்
கொண்ட கவிதைகள் சில உக்கிரம் மிக்கவை !
‘ விலங்கிடும் விலங்குகள் ‘ மனிதக் குணக்கேடுகளைக் காட்டும் விமர்சப் பாங்கானது.
வெறுப்புகள் வெடிக்கும்
பிரதேசம் ஒன்றில்
பிணைக் கைதியாய் நிற்கிறேன்
……… எனக் கவிதை தொடங்குகிறது.
சுற்றிலும்
மனிதர்களென விலங்குகள்
விலங்குகளென மனிதர்கள்
…….. என்ற வரிகள் ஒரு நெருக்கடி நிலையை உணர்த்துகின்றன. இக்கவிதையின் கருப்பொருள் தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட
ஒருவன் பஞ்சாயத்தில் சிக்கிக்கொள்கிறான் என் யூகம் செய்யலாம். தார்மீகக் கோபம் வெளிப்பட்டுள்ளது.
குருதி தோய்ந்த வார்த்தையொன்று
அவசரமாய் வெளியேறும்
உங்களுக்கும் எனக்கும் இடையில்
நெடுஞ்சுவரென வளர்ந்து நிற்கும்
எனக் கவிதை முடிகிறது. கவிதையின் கருப்பொருள் காதல் சார்ந்தது என்று நினைக்கவும் இடமிருக்கிறது.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ நிறங்களின் பேராசைக்காரர்கள் ‘ !
இருளின் கருமையில்
கண்கள் குத்திட்டு நிற்கும் பொழுதுகளில்
மின்னும் மிருக விழிகளைச்
சந்திக்க நெர்கையில்
பார்வை விரல்கள்
ஒளி தேடிப் பயணப்படும்
……… என்று கவிதை தொடங்குகிறது. இக்கவிதையின் 5 பத்திகளுள் முதல் 4 பத்திகள் இதை ஒரு பாலியல் கவிதையாக இனங்காட்டுகிறது
கடைசிப் பத்தியை இணைத்துப் பார்க்கும்போது , வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் பிய்ப்பவர்களைப் பற்றிப்பேசுவதாக முழுமை கொள்கிறது.
இவ்வித நூதனக் கட்டமைப்பு இக்கவிதையை வித்தியாசப்படுத்துகிறது.
இருள் போர்த்திய உடலில்
கரப்பான் பூச்சியின் நகர்தலாய்
உன் கை விரல்கள்
உடல் வெளியெங்கும் வியாபிக்கையில்
இச்சைகளைக் கொச்சைப் படுத்தியபடி
இதயம் வெளி தேடி வெளியேறும்
…….. என வண்ணத்துப் பூச்சியின் தன் கூற்றாகக் கவிதை வளர்கிறது. சற்று ஆழ்ந்து சிந்தித்தால் ‘ வண்ணத்துப் பூச்சி ‘ என்பது குறியீடு
எனக்கொள்ளலாம். அப்போது இது முழுமையான பாலியல் கவிதையாக அமையும். கவிதை வெளியீட்டு முறையில் காணப்படும்
சொற்களின் அடர்த்தியே வாசகனுக்குப் பகையாகி , மனத்தில் எதையும் தங்கவிடாமல் செய்துவிடுகிறது.
‘ காத்திருக்கும் காலம் ‘ என்றொரு கவிதை !
நெடுஞ்சாலையென
நீண்டு கிடக்கிறது வாழ்க்கை
தகமெடுக்கும் நாக்கிற்கு
தகவல் அனுப்புகிறது கண்
கானலை நிஜமென
,,,,,,,, கடைசி மூன்று வரிகள் புத்தம் புதியன : நல்ல வெளிப்பாடு.
கால் கிழித்துக் கடந்து போகும்
கால் தடங்களில்
இடறுகிறது என் மெளனம்
……… ‘ கால் கிழித்து ‘ என்பது புதிய சொற்சேர்க்கை. படிமமும் நன்றாக இருக்கிறது.
உலலெங்கும் ஒலி பரப்பாகிறது
களைப்பின் வலியும்
தாகத்தின் ஒலியும்
……… ‘ தாகத்தின் ஒலி ‘ என்பது தேடலின் உக்கிரம். இது மாறுபட்ட சிந்தனை !

விக்கலை வேறு யாரும் இப்படச் சுட்டியதில்லை !
பார்வைகளை என் மேல் கவியவிடுகிறது
தலைக்கு மேல் வட்டமிடும் கழுகு
…….. கூரையான குறியீடு சார்ந்த படிமம் நல்ல தொனிப் பொருள் கொண்டது
ஓநாயின் உருவெடுத்து
கொடும் பசி போக்க
கானல் நீரை நாக்கில் வழியவிட்டபடி
நிற்கிறது காலம்
……… என்பது உவமை சார்ந்த முத்தாய்ப்பு ! பிரச்சனையின் இறுக்கத்தில் கவிதை சொல்லியை நிறுத்துகிறது. ‘ பிரச்சனைகள்
ஒரு போதும் முடிவதில்லை ‘ என்பதுதானே வாழ்க்கையின் சாரம் !

‘ எல்லை மீறும் முதல் தீண்டல் ‘ பாலியல் கவிதையாகும். தீண்டலை இவர் ஏன் ஏற்கவில்லை என்பது தெளிவாக இல்லை. உறவு ,
சமூக அங்கீகாரம் பெறவில்லையா என்ன ?
ஒரு மழைக்கால பின்னிரவொன்றில்
ஆழ்ந்த நித்திரையை
என் ஆடை மீறிப்
படரும் உன் விரல்கள்
கலைத்துப் போட்டன.
……. என்பது கவிதையின் தொடக்கம்.
கவிதையின் மூன்றாம் பத்தி இக்கவிதை ஆண் குரலில் அமைந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
உன் அறியாமையின் நகலை
இரவுகளின் மூர்க்க கணங்களில்
கிரகிக்கும் இந்தச் சுவர்கள்
…….. என்பது நல்ல காத்திரமான வெளிப்பாடு ! அவசியமான சொற்கள் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்துள்ளன.
‘ ஆயுத வார்த்தைகள் ‘ —- காதல் கவிதை ! காதலைச் சொல்லாமல் மனம் புரண்டு தவிப்பதைச் சொல்கிறது.
சந்திப்பின் கடைசி நொடியில்கூட
சொல்ல முடிந்ததில்லை
கொண்டு வந்த வார்த்தைகளை
……. என்பது தொடக்கம்.
மன அவஸ்தை , அழுத்தமான உவமைப் படிவத்தால் சுட்டப்படுகிறது.
தாளில்லாத குளியறைக் கதவை
காற்று திறந்துவிட
தன் நிர்வாணம்
வெளியேறி அலைவதை
யாரோ அறிய நேரிட்ட அவஸ்தையில்
திரும்புகிறேன்
கனக்கும் வார்த்தைகளோடு
……. என்பதோடு கவிதை முடிகிறது. ‘ நிர்வாணம் வெளியேறி அலைவது ‘ என்பது கவித்துவ வெளிப்பாடு. பின்வரும் பத்தி — முத்தாய்ப்பு
கூடுதல் விளக்கமாக அமைந்துள்ளது.
தனிமை வெளிகளில்
என்னைக் குரூரமாய்
குத்திக் கிழித்து
கூத்தாடுகிறது
உச்சரிக்கப்படாத வார்த்தைகளின்
உக்கிரம்
அனிஷ்குமார் கவிதைத் தலைப்புகள் சில கவனத்தை ஈர்க்கின்றன. ‘ கடலின் நிறம் சிவப்பு ‘ , ‘ அவதானிப்புகளுக்கும் அப்பால் ‘ ,
‘ இயந்திர இருளில் ‘ , ‘ நின்றெரியும் ஒரு வார்த்தை ‘ என…….
இவர் கவிதைகள் பல , மீள்வாசிப்பைக் கோருகின்றன. எளிமையற்ற வெளிப்பாடு பல இடங்களில் காணப்படுகிறது. படிக்காமல்
ஒதுக்கிவிட முடியாத தொகுப்பு இது !

Series Navigationதொடுவானம் 91. தேவை ஒரு பாவைஅதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *