நிச்சயம்

This entry is part 1 of 24 in the series 25 அக்டோபர் 2015

 

”இந்த மூணு மாசத்துல நீங்க இப்ப போறது நாலாவது தடவை; இந்தத் தடவையாவது ஒரு நிச்சயம் பண்ணிட்டு வந்துடுங்க. ஆமா சொல்லிட்டேன்” என்றாள் சகுந்தலா.

அவள் முகத்தைப் பார்த்தேன். மிகத் தீவிரமாய் இருந்தது. “எத்தனை மொறை போய் வந்திருக்கேன்னு சரியா கணக்கு வச்சிருக்கியே?” என்றேன் சிரித்தபடி.

அவளுக்குக் கோபம் வந்ததுபோல் தெரிந்தது. “ஆமாம், இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; நீங்க சரியாப் பேசிட்டு வரீங்களா? இல்ல, நானும் வரட்டுமா?” என்று கேட்டாள் அவள்.

“வேணாம், வேணாம்; நானே கண்டிப்பாய் பேசிட்டுக் கொஞ்சம் கையில வாங்கிட்டும் வந்திடறென்; போதுமா?” என்றேன். அவள் ஒரு மாதிரியாகத் தலையைச் சாய்த்துச் சந்தேகத்துடன் “நிச்சயமா?” என்று கேட்டாள்.

“ஆமாம், ஆமாம்” என்றேன் உறுதியான குரலில். அவளோ தொடர்ச்சியை விட்டு விடாமல், ”இப்ப மட்டும் நீங்க நிச்சயம் செய்யாம வந்தீங்கன்னா அப்புறம் நானே போக வேண்டி இருக்கும்” என்றாள்.

என் மனைவி அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான் இந்த ’நிச்சயம்’ என்பது. ஒரு சில பேர் தங்கள் பேச்சு வழக்கில் அடிக்கடி சில சொற்களைத் தங்களை அறியாமலே கையாள்வர். எனக்குத் தெரிந்து ஒரு வைணவர், “அப்புறம் திருமல; நீ நேரா போய் திருமல கேட்டுப் பாரு; ஆமாம் திருமல; அவன் தராட்டா திருமல; நீ எங்கிட்ட சொல்லு திருமல; நான் பேசிக்கிறன் திருமல; “ என்பார். சில மேடைப் பேச்சாளர்கள் கூட அடிக்கடி ‘ஆகவே” என்றும், “நான் சொல்வது என்னவென்றால்” என்றும், “நீங்களே எண்ணிப் பாருங்கள்” என்றும் பேசுவார்கள்.

என் மனைவி சகுந்தலா சொல்லும் இந்த நிச்சயம் என்ற சொல்லுக்குக் கட்டாயம், உறுதி, கண்டிப்பு, போன்ற பல பொருள்களைக் காணலாம். இத்துடன் நிச்சயம் பற்றிய புராணம் போதும் என்று நினைக்கிறேன்.

பேருந்து மாயவரம் விட்டுக் கிளம்பியது. என்னதான் ‘மயிலாடுதுறை’ என்று பெயர் மாற்றினாலும் இன்னும் ‘மாயவரம்’ என்பது மனத்தை விட்டு அகல மறுக்கிறது. பழமையையே போற்றும் அவர்களில் நானும் ஒருவன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.

இன்னும் ஒருமணிநேரத்தில் திருவிடைமருதூர் வந்துவிடும். அங்கு சன்னதித் தெருவில் உள்ள எனது பூர்வீக வீடுதான் எனக்கும் என் மனைவி சகுந்தலாவிற்கும் பேச்சுப்பொருளாக அமைந்தது.

அந்த வீட்டில் என் நண்பன் கண்ணனைக் குடி வைத்திருந்தேன். வீடு பெரிய இரண்டி கட்டு ஓட்டு வீடு; எல்லா வசதிகளும் உடையது. அவன் தன் மனைவி மற்றும் வயதுக்கு வந்த இரண்டு பெண்களுடன் அங்கு இருந்தான். அவன் ஆறு மாதமாக வாடகையை என் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை. போய்க் கேட்டேன்.

‘மொத மாதம் அம்மா சாவு; ரெண்டாவது மாதம் பொண்ணைக் காலேஜில சேக்கணும்; மூணாவது மாதம் பொண்டாட்டிக்கி ஆப்பரேஷன்; நாலாவது மாதம் அவனுக்கே விபத்தில் கால் முறிவு”. இப்படிப் பல சேர்ந்து விட்டன. ஐந்து மற்றும் ஆறாவது மாதங்களில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ஒருவேளை என் மனைவி நிச்சயம் ஞாபகம் வைத்திருப்பாள். அவளுடன் பேசிப்பேசி எனக்கும் ‘நிச்சயம்’ பிடித்து விட்டது.

வாடகை ஒன்றும் அதிகம் இல்லை; எல்லாரும் இரண்டாயிரம் கேட்கலாம் என்றபோது நான் கண்ணனுக்காக ரூபாய் ஐநூறு குறைத்து வெறும் ஆயிரத்து ஐநூறுக்குதான் விட்டிருந்தேன். அதற்கும் ஒரு கதை இருக்கிறது.

கதைக்குள் கதை இருப்பதுதானே இன்றைய நவீ(ன எழுத்தாளர்கள் கடைப்பிடிக்கும் உத்தி.

படிக்கும்போது அவன் உண்மையிலேயே கண்ணனாகவும், நான் குசேலனாகவும் இருந்தோம். பெரும்பாலான நாள்களில் என் மதிய உணவை அவன்தான் எடுத்து வருவான். எனக்கு அவ்வப்போது சில நோட்டுகளும் வாங்கித் தருவான். வேண்டாம் வேண்டாம் என்றாலும் எனக்காகச் சுற்றுலாப் பணம் கட்டுவான். இத்தனைக்கும் அவன் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை. ஆனால் அவனது வீட்டுக்கும் அவனுக்கும் பெரிய மனம் இருந்தது.

நானும் ஒன்றும் பரம ஏழையில்லை. என் அப்பாவும் உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். திருவிடைமருதூரில் வீட்டுத் திண்ணைகளெல்லாம் மிகப் பெரியவையாய் இருக்கும். அவற்றில் ஏழெட்டுப்பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டு காசு வைத்து ‘ரெம்மி’ ஆடிக் கொண்டிருப்பார்கள்.

என் தந்தையைப் பார்த்ததும், “யோ வாத்யாரே! வா ஒரு கை கொறையுது” என்று அழைப்பார்கள். அவர்கள் அழைக்காவிட்டாலும் அவர் போய் ஆடக் கூடியவர்தாம். போய் உட்கார்ந்து விட்டால் அதிலேயே அவர் மூழ்கிவிடுவார். அவர் மூழ்கியதோடு மாதச் சம்பளமும், வீட்டின் பித்தளை மற்றும் வெள்ளிப் பாத்திரங்களும் மூழ்கிவிடும். வீடு உயரம் அதிகமானதால் மூழ்காமல் தப்பித்தது.

கண்ணனுக்குப் படிப்பு ஏறவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் தேறாமல் அவன் அப்பாவும் திடீரென்று இறந்துவிட மளிகைக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.

நான் இப்போது சற்று வசதியாக வேலை பார்க்கும் பெண்ணை மணந்து வங்கிப் பணியில் இருக்கிறேன். எனக்கு என்ன கோபம் என்றால் ஒருமாதம் கூட ”இம்மாதம் தர முடியவில்லை; அடுத்த மாதம் சேர்த்துத் தருகிறேன்” என்று7 அவன் சொல்லாததுதான்.

ஒவ்வொரு முறை போகும்போதும் ஏதோ ஒரு சாக்கு சொல்வான். நான் மேலே வாடகை கேட்காதபடி அது என் வாயை அடைத்துவிடும். இப்படியே ஆறு மாதங்கள் ஓடி விட்டன.

“எனக்கு இந்த வாடகைப் பணம் பெரிதில்லை என்று நினைக்கிறானா? என்னை ஏமாளி, சுலபமாக ஏமாற்றலாம் என்று திட்டமிடுகிறானா? முன்பு எனக்குச் செய்த உதவிகளுக்கு இது பதில் என்று கருதுகிறானா?” என்றெல்லாம் யோசித்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

”ஆனால் இந்த முறை உறுதியுடன் கண்டிப்பாய்க் கேட்டு விட வேண்டும். வாடகை பாக்கி வராவிட்டாலும் அவனைக் காலி செய்யச் சொல்லி விட வேண்டும். என் மனைவி சொல்லியது போல ‘நிச்சயம்’ செய்து விட வேண்டும்” என்றெல்லாம் நினைத்துக் கொண்டே இருந்தவனின் காதில் நடத்துநர் ‘திருவிடைமருதூர்’ என்று சொன்னது பட்டென்று கேட்டது.

மலை மணி ஆறு ஆகி இருந்தது. “சீக்கிரம் போய்ப் பேசி விட்டுக் கிளம்ப வேண்டும்; நேரம் ஆக ஆகப் பேருந்துகள் கிடைக்காது” என்று வேகமாக நடந்தேன்.

கிழக்கு வீதியிலிருந்து திரும்பி சன்னதித் தெருவில் நுழைதேன். எதிரே தெரிந்தவர்கள் பலர் வந்தனர். இப்பதான் வர்றீங்களா?” என்று கேட்டனர்.
ஆமாம், ஆமாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னவனுக்கு என் வீட்டைப் பார்த்ததுமே என்னவோ போலிருந்தது.

நான்கைந்து வீடுகள் தள்ளி வரும்போதே என் வீட்டின் முன்னால் போடப்பட்டிருந்த சிறு பந்தலும் கட்டியிருந்த வாழை மரங்களும் என் கவனத்தை ஈர்த்தன.

”சரி, வீட்டில் ஏதோ விசேஷம் போல் இருக்கிறது; அப்புறம் வேறு ஒரு நாளில் வரலாமா?” என்று யோசித்தவனுக்கு “இதெல்லாம் செய்பவனுக்கு வாடகைப் பணம் தர முடியவில்லையா?” என்று கோபமும் வந்தது. “எது நடந்தாலென்ன? கண்ணனுடன் தனியாய்ப் பேச ஒரு ஐந்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போகும்” என்று தோன்றிய எண்ணம் போகச் செய்தது.

வீட்டினுள் நுழைந்தேன். முதல் கட்டின் கூடத்தில் பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டு பல ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த தட்டுகளில் வெற்ரிலை, பாக்கு, பழங்கள், புதிய துணிமணிகள் இருந்தன.

திடீரென்று என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து “வா, வா, வா, இப்பத்தான் வர்றியா?” என்ற கண்ணன் “இப்படித்தான் சரியான நேரத்துக்கு வர்றதா? கொஞ்சம் முன்னாலெயே வந்தா என்னவாம்? என்று ஏதோ அழைப்பு விடுத்தவன் போல் கேட்டான்.

”முன்னாடி வந்திருந்தால் மட்டும் என்ன? வாடகை பாக்கியைத் தரவா போகிறாய்?” என்று எண்ணிக் கொண்டே சிரிப்புடன் கை குலுக்கினேன்.

என்னை அழைத்துக் கொண்டு போய் “இவன் எனக்கு ரொம்ப வேண்டிய நண்பங்க; இவன் இல்லாம நான் இல்ல” என்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி என்னை முன் வரிசையில் உட்கார வைத்தான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “பெரிய பொண்ணு நிர்மலாவுக்கு வெத்தில பாக்கு மாத்த வந்திருக்காங்க” என்று என் காதோடு அவன் சொன்னபோது ஓரளவு புரிந்த மாதிரி இருந்தது.

அதற்குள் “அப்புறம் சொல்லுங்க கண்ணன்” என்று அங்கிருந்த பெரிய மனிதர்களில் ஒருவர் கேட்டார்.

“நான் என்னங்க சொல்லப் போறென்; முன்பே சொன்னதுதான்; இதுக்கு மேல முடியாதுங்க; இன்னும் ஒரு பொண்ணு இருக்குதில்ல” என்றான் கண்ணன் சிரித்தபடி.

“அஞ்சு பவுனுக்குப் பாக்காதீங்க; ஒங்க பொண்ணுக்குத்தான போடப் போறீங்க” என்றார் கேட்டவர்.

கைகள் மேல் மறைவாகத் துணியை போட்டுப் பேசவில்லையே தவிர மாட்டுத்தரகு ஒன்று நடப்பது தெளிவாகத் தெரிந்தது.

கண்ணன் மிகத் தீர்மானமான குரலில், “ஐயா, ஒங்க எடம் பெரிய எடம்தான்; எனக்கும் இஷ்டமாத்தான் இருக்கு; ஆனா என்னா செய்யறது? எனக்குன்னு இருக்கறது சின்ன மளிகைக் கடையும் சொந்தமான இந்த வீடும்தான்; வேணும்னா இவனையே கேட்டுப்பாருங்க” என்றான்.

அவர் என்னைப் பார்க்க நான் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். சாப்பிடும்போது கூட கண்ணனைத் தனியே சந்திக்க முடியவில்லை. பேருந்து பிடித்து ஊர் வர நடுநிசியாகி விட்டது.

வீட்டினுள் நுழைந்தவுடன் சகுந்தலா “என்னா செஞ்சிட்டு வந்தீங்க” என்று கேட்க “நிச்சயம் பண்ணிட்டுதான் வந்திருக்கேன்” என்றேன்.

————————————————————————————————————————–

 

 

Series Navigationதொடர் மூக்கு அழற்சி ( Chronic Simple Rhinitis )
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *