அழைப்பு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 14 in the series 13 டிசம்பர் 2015

மாதவன் ஸ்ரீரங்கம்

வின்சென்ட் காலிங்பெல்லை அழுத்திக் காத்திருந்தான். வீட்டிற்குள்ளிருந்து டீவி இரைந்தது. இவனுக்கு கால் வலித்தது. பொறுமையாகக் காத்திருந்தான். இரண்டு நிமிடம் கழித்து மறுபடி முயற்சித்தும் யாரும் வராமல்போக, இரும்புக்கதவில் தட்டி சத்தமெழுப்பியபடியே குரல் கொடுத்தான்.

“சார்…”

உடனே பதில்வந்தது. “ஒரு நிமிஷம்.”

வெளியே வந்த பெண்மனி நடுத்தர வயதிலிருந்தார். புருவம் சுருக்கினார்,

“யாருங்க ?

“கோபாலன் சார் வீடு ?”

“இதுதாங்க. இருங்க வறேன் என்று உள்ளே சென்று சாவிகொண்டுவந்து கேட்டைத்திறந்துகொண்டே “நீங்க “? என்றாள்.

“என் பேரு வின்சென்ட். பெங்களூர்லயிருந்து வறேன். என் அப்பா சார்கிட்ட படிச்ச ஸ்டூடன்ட்”.

“ஓ. அப்படிங்களா ? உள்ளவாங்க. உக்காருங்க”

ஹால் கொஞ்சம் அகலமாக இருந்தது. டீவியில் 20/20 கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த பைய்யனுக்கு பதினாறோ பதினெட்டோ வயதிருக்கும். அவள் தண்ணீர் தம்ளரோடு வந்ததாள்.

“ஸ்ரீ… டிவி வேல்யூம் ரெட்யூஸ் பண்ணு.”

“பாவம் பையனை தொந்திரவு பண்ணவேணாம் மேடம். சின்னப்புள்ளைங்கதானே ?”

அவள் எதுவும் பேசாமல் சன்னமாக புன்னகைத்தபோது அழகாக இருந்தாள்.
வின்சென்ட் ஆரம்பித்தான்,

“நீங்க சாரோட டாட்டர்ங்களா ?”

“இல்லங்க நா அவரு மருமக.”

“சார் நல்லா இருக்காருங்களா ?”

” நல்லான்னு சொல்லமுடியாது. இப்ப கொஞ்சநாளா முடியறதில்லை. இப்பக்கூட பக்கத்துல அவரைக்கூட்டிடு ஹாஸ்பிடல்தான் போயிருக்காரு. வரநேரந்தான்.”

“அடடா. ஒடம்புக்கு என்னங்க ?”

“வயசாயிடுச்சில்லிங்களா, அதான். அப்பப்ப எதாச்சும் சிரமம். நைட்டு கொஞ்சம் மார்வலின்னு சொல்லிட்டிருந்தாரு. இப்பத்தான் போன்பண்ணாங்க. ஒன்னும் பிரச்சனையில்லன்னு.”

டீவியில் யாரோ சிக்ஸர் அடிக்க அந்தப்பையன் ‘ஹே’ வெனத்துள்ளினான்.

“என்ன சாப்பிடுறீங்க டீ காபி ?”

“வேணாங்க. ஒங்களுக்கு ஏன் வீண்சிரமம்.”

“அதெல்லாம் ஒன்னும் சிரமமில்ல. ஒரேநிமிஷம் வந்துடுறேன்” என உள்ளே சென்றுவிட்டாள்.

வீடு நல்ல வெளிச்சமும் காற்றோட்டமுமாயிருந்தது. பெங்களூரில் இதுமாதிரியான வீட்டிற்கு சாதாரணமாக முப்பதாயிரம் ரூபாய் வாடகை கேட்பார்கள். ஹாலில் செல்போன் ஒலித்தது.

“ஸ்ரீ யாருன்னு பாரு”.

“மா ரேவதி ஆன்ட்டி. ஹலோ, ஒன் மினிட் ஆன்ட்டி. மம்மிட்ட தறேன்.”

அவள் ஹாலுக்கு வந்து போனை காதில்வைத்துத் தோளில் அழுத்தியபடியே சமையலறைக்குச் சென்றாள். உள்ளிருந்து அவள் பேசுவது ஹால்வரை கேட்டது.

“இல்லப்பா கெஸ்ட் வந்திருக்காங்க. இல்ல… என் பாதரின்லாவுக்கு தெரிஞ்சவங்களாம்”

உள்ளிருந்து காபியின் மணம் வெளிப்பட்டது. வின்செண்ட் தன் கைப்பையிற்குள் கைவிட்டு பத்திரிக்கைகளைத் துழாவினான். ஏதேதோ பெயர்கள் எழுதிய பத்திரிக்கைகள் கிடைத்தன. இறுதியாக ‘கோபாலன் வாத்தியார்’ என்று எழுதபட்ட பத்திரிக்கையை சுலபமாக எடுக்கும்படி வைத்துக்கொண்டான். அவள் காப்பியுடன் வந்தாள்.

“உங்களுக்கு ஒரே பையனா”?

” ஆமாங்க” என்றபோது அவள் முகம் சற்றே கவலைகொண்டது. காப்பி சுலபத்தில் ஆறுவதாகத் தெரியவில்லை. வின்செண்ட் டவராவில் நன்றாக ஆற்றினான். அவள் சுவரில் சாய்ந்துகொண்டு டீவியையும் இவனையும் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இப்புடித்தான் அடிக்கடி வருங்களா”?

” இப்ப கொஞ்சநாளாத்தாங்க”

அவன் என்ன பேசுவதென்று தெரியாமல் காபியை உறிஞ்சத்துவங்கினான். தொலைவில் எங்கோ பலமாக இடி இடித்தது. காற்று வாசற்புழுதியை வாரி பால்கனியில் கொண்டுவந்து போட்டது. ஒரு பெரும் மழைக்கான முஸ்தீபுகள் தெரிந்தன.

“ஸ்ரீ… மாடில துணி காஞ்சிட்ருக்கு போயி எடுத்துட்டுவாப்பா”

அவன் சலித்துக்கொண்டே எழுந்து மாடிக்குச்சென்றான். மழைத்துளிகள் மெல்ல மெல்ல விழத்தொடங்கி பெரிதாகக்க்கொட்ட ஆரம்பித்ததும் அவள் கைகளைப் பிசைந்தாள்.

“கொடை எதாச்சும் கொண்டுபோயிருக்காங்களா”? என்று இவன் கேட்டுமுடிப்பதற்குள் வாசலில் டூவிலர் ஹாரனடித்தது. மழையில் நனைந்தபடி அந்த பெரியவர் உள்ளே நுழைய, பின்னாலேயே பைக்கை ஸ்டான் இட்டுவிட்டு அவரும் நுழைந்தார். வின்செண்ட் எழுந்து பெரியவரை வணங்கினான். அவள் கொடுத்த துவாலையால் துவட்டியபடி அருகிலிருந்த மர நாற்காலியில் சாய்ந்துகொண்டார். இவனை யார் என்பதுபோல அவளிடம் பார்வையை வீசினார்.

” மாமா இவுரு உங்களுக்காகத்தான் வந்திருக்காரு. உங்க ஸ்டூடண்டோட மகனாம்” என்று சத்தமாகக் கூறினாள். பவர் கட்டாகி டீவி அணைந்துவிட அந்தப்பையன் ‘ச்சே’.. என்றபடி எழுந்து உள்ளே சென்றான்.

“என் ஸ்டூடண்ட்னா யாரு”?

வின்செண்ட் சொன்னான்,

” உங்ககிட்ட லெவந்த் டுவெல்த் படிச்சாரு. சூசையப்பர்னு பேரு’

“கொஞ்சம் சத்தமா பேசுங்க. அவருக்கு கொஞ்சம் காது சரியா கேக்குறதில்ல இப்பல்லாம்” என்றாள் அவள். அவன் இம்முறை சத்தமாகச் சொன்னான்.

“சூசையப்பனா”? என்றபடி யோசிக்கத்துவங்கினார் பெரியவர்.

“ஒரு பையன் இருந்தான். சுப்பிரமணியன்னு. அவன் நேவில இல்ல இருந்ததாக் கேள்வி. அப்பா பேர் என்ன”?

“தேவசகாயம். கும்மோணத்துல மொதலியார் கடையில கணக்கப்பிள்ளையா இருந்தாரு”

அவருக்கு இன்னும் பிடிபடவில்லை என்று புரிந்தது. அவர் மகன் வேறு உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்து இவர்கள் பேச்சில் கலந்துகொண்டார்.

“அப்பாக்கு இப்பல்லாம் சரியா ஞாபகம் இருக்கிறதில்ல. நாலு மணிக்கி காபி சாப்டு நாலறை மணிக்கு ஏன் இன்னும் காப்பி தரலைன்னு சண்டைக்கு வருவார். பாவம் வயசாச்சில்லிங்களா”?

வின்செண்ட் அவரை ஆமோதிப்பதுபோல மென்மையாக புன்னகைத்தார். பெரியவர் இன்னும் புருவம் சுருக்கி தனக்குள் ஆழத்தில் அமிழ்ந்தார். ஜன்னல்வழியே மழைச்சாரலும் குளிர்காற்றும் ஹாலை நிறைத்தது. சட்டென்று மின்விசிறி ஒருமுறை சுழன்றுவிட்டு மறுபடி பவர் கட்டானது.

வின்செண்ட் தாமதமாவதை உணர்ந்துகொண்டு எழுந்து பைக்குள்ளிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.

“வீடு கட்டிருக்கேன். ஒப்பனிங் பங்சன். பெங்களூர்லதான். அப்பா அவசியம் சாரைக் கூப்டுகிட்டு வரச்சொன்னாரு”

அவர் பத்திரிக்கையை வாங்கி மேலோட்டமாக ஒரு பார்வையிட்டுவிட்டு பெரியவரிடம் கொடுத்தார். பெரியவர் ஒருமுறை பார்த்துவிட்டு அந்தப்பெண்ணிடம் கொடுக்க, அவள் அதைக்கையில் வைத்துக்கொண்டே கேட்டாள்.

“அப்பாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாங்களே. மாமா சந்தோஷப் பட்டிருப்பாரு”

வின்செண்ட் முகம் சட்டென்று இருண்டது.

“மூணுமாசமா அவரு நடமாட்டமில்லங்க. பராலிஸிஸ்”

“அடடா !”

சிலவிநாடி யாரும் பேசாமலிருக்க, தெருவில் யாரோ டூவிலரில் விடாமல் ஹாரனடித்துசென்றார்கள்.

“அக்கா கல்யாணத்துக்கே கூப்பிடனும்னு சொல்லிட்ருந்தாரு. எவ்ளவோ முயற்சி செஞ்சோம். அட்ரஸே கெடைக்கல”

அவர்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“போனமாசம் அப்பாவோட கிளாஸ்மேட் ஒருத்தரு வந்திருந்தாரு. அவருதான் சொன்னாரு. சார் இங்க இருக்கிறதா”

மகன் கேட்டார்.

“நீங்க என்ன பண்றீங்க”?

” ஆடிட்டரா இருக்கேன் சார்”

“சூசையப்பன்னா.. இல்லியே அவன் போஸ்டாபீஸ்லல்ல வேல பார்க்கிறதாச் சொன்னான்.. ஆனா அவம்பேரு வேற என்னமோல்ல சொன்னதா ஞாபகம்” என்று பெரியவர் தனக்குத்தானே முனகிக்கொண்டிருந்தார்.

அந்தப்பெண்மணி சொன்னார்,

“ஆனா இந்தக்காலத்திலும் வாத்யார்ங்களை ஞாபகம் வச்சிருக்கிறதே பெரிசுதான்”

“எங்கப்பா சாரைப்பத்தி நிறைய சொல்லியிருக்காரு. படிக்கிற காலத்தில நெறைய உதவி செஞ்சிருக்காராம். பலதடவை ஸ்கூல் பீஸெல்லாம் சார்தான் கட்டினதாச் சொல்லிருக்காரு. அப்பாக்கும் இன்னும் சில வசதியில்லாத பசங்களுக்கும் ப்ரீயா டியூசனெல்லாம் எடுத்திருக்காரு”

அவர்கள் அமைதியாக இருக்க வின்செண்ட் தொடர்ந்தான்.

“அப்ப அப்பா கோவிந்தபுரத்துல இருந்தாராம். சைக்கிள்ல தாத்தாகூட ரதவீதி ஸ்கூல் வரை வருவாராம். தெனம் லேட்டா போவாராம். சார் புரிஞ்சிண்டு திட்டாம விட்ருவாராம்”

இப்போது மகன் குழப்பத்துடன் சொன்னார்,

“ரதவீதியா ? எங்கப்பா மாடவீதிலதானே டீச்சரா இருந்தார்”?

பெரியவர் கேட்டார்,

” ஏம்பா உங்கப்பா எந்த கோபாலண்ட்ட படிச்சார் ? ஏன்னா அங்க ராம கோபாலன்னு ஒருத்தன் ஹிஸ்ட்ரி டீச் பண்ணிட்ருந்தான். என் பேரு சேஷகோபாலன்”

வின்செண்ட் திறுதிறுவென விழித்தான். அந்தப்பெண்மணி காபி தம்ளரை உள்ளே எடுத்துச்சென்றாள்.

வின்செண்ட் தயக்கத்துடன் சொன்னான்..

“இல்ல அப்பா படிச்சது ராஜகோபாலன் சார் கிட்டன்னு சொன்னதா ஞாபகம்”

அவன் சொன்னது பெரியவருக்கும் கேட்டிருக்கவேண்டும்.

“அதான பார்த்தேன். ராஜகோபாலனா ? இவண்டா… வெடவெடன்னு ஒசரமா மாநெறமா இருப்பானே, ரதவீதி ஸ்கூல்ல இருந்தானே… அதாண்டா யானையடி குதிரையடிட்ட குடியிருந்தானே ? ரெண்டு பசங்கன்னு நெனைக்கிறேன். ஆனா அவன் ரெண்டுவருசம் முன்னாடியே போயிட்டதா சென்னாங்களே” என்றார் தன் மகனிடம். அவர் புரிந்துகொண்டதாகத் தலையாட்டினார்.

சட்டென்று அங்கே நிலவிய மவுனத்தை கலைத்தது மின்சாரம் வந்து ஓடத்தொடங்கிய டீவி.

வின்செண்ட் மெல்ல எழுந்துகொண்டான்.

Series Navigationதுன்பம் நேர்கையில்..!பாதிக்கிணறு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *