முருகபூபதி – அவுஸ்திரேலியா
‘ இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க ”
தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல்.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 1955 ஆம் ஆண்டு பிறந்த குணசேகரன், நாட்டுப்புற பாடல்கள் ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
காலம் காலமாக நீடித்த முன்னைய மரபார்ந்த அரங்கவியலுக்கு மாற்றாக தலித் அரங்கவியல் கோட்பாட்டை உருவாக்கியவர் குணசேகரன்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் கலை இலக்கிய அமைப்புகளின் மாநாடுகளில் இவருடைய நிகழ்ச்சிகளின் அரங்காற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.
தன்னானே என்னும் பெயரில் நாட்டுப்புறக்கலைக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் தலித் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய சமூகப்போராளி. நாட்டுப்புறக்கலைகள் தொடர்பாக ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த குணசேகரன் எழுதிய ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்‘.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. புதுவை அரசின் கலை மாமணி விருதும் பெற்றவர்
“ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் முன்னெடுத்தபோது தங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது ‘மனுசங்கடா‘ ஒலிநாடாவுக்கும் ‘பலி ஆடுகள்‘ நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. ” என்று முன்னாள் சட்டசபை உறுப்பினரும் எழுத்தாளரும் நிறப்பிரிகை ஆசிரியருமான தோழர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தி இந்து நாளேட்டின் சார்பில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் நேற்று (17-01-2016) மாலை குணசேகரன் நீதியரசர் கே.சந்துரு தொல். திருமாவளவன் ஆகியோருடன் தாமும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் அதற்குள் இப்படியொரு செய்தி வந்துவிட்டது எனவும் ரவிக்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்த்துக்கலைப் பள்ளியின் (நாடகத்துறை) தலைவர் குணசேகரன், புதுவை பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாநாட்டில் (1990 இல்) தோழர்கள் அறந்தை நாரயணன் – பொன்னீலன் – தோழர் நல்லகண்ணு – தனுஸ்கோடி ரமாசாமி முதலானோருடன் குணசேகரனையும் சந்தித்து உரையாடியிருக்கின்றேன்.
தனது வாழ்நாளில் தலித்மக்களின் போராட்டங்களுக்காகவும் ஏழை விவசாய தொழிலாள பாட்டாளி வர்க்க மக்களின் வாழ்வுக்காகவும் தனது கலகக்குரலை அரங்காற்றுகையாக நிகழ்த்திவந்த கலைஞர் குணசேகரனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம்.
முருகபூபதி – அவுஸ்திரேலியா
—-0—-
- நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- இதோ ஒரு “ஸெல்ஃபி”
- இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி
- சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது
- திரை விமர்சனம் தாரை தப்பட்டை
- நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்
- ரிஷியின் 3 கவிதைகள்
- தாரை தப்பட்டை – விமர்சனம்
- தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்
- நல்வழியில் நடக்கும் தொல்குடி!
- மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி
- சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா
- ஒலியின் வடிவம்
- சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)
- தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி
- “அப்துல் கலாமின் ஐஸோகண்கள்”
/இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க//
இவரை எனக்குத் தெரியாது. அரசியலில் ஒரு கால்; இலக்கியத்தில் இன்னொரு காலென்பது ஆற்றிலொரு கால் சேற்றிலொரு கால் என்பதைப்போல. எனவே தெரியாமற் போய் விட்டார். மேற்சுட்டிய பா, பட்டுக்கோட்டை, ஜீவானந்தம், கொத்தமங்கலம் சுப்பு வரிசையில் இவரை வைக்கிறது. ஆயினும் இங்குள்ள நால்வரிகளில் நான்காவதே ஏற்புடைத்து.
– இந்து மதம் எப்படி சிறையானது? சிறை என்றால் கட்டாயப்படுத்தி உள்வைத்தல். எவரேனும் தலித்துகளை இந்துவாகத்தான் இருக்கவேண்டுமென கட்டாயப்படுத்தினரா? இல்லவேயில்லை.
– இயறகையின் படைப்பின் மனிதர்கள் சமமல்ல என்பதை சமூகமும் விஞ்ஞானமும் எடுத்தியம்புகின்றன. பிறப்பிலேயே ஏழை, எப்படி வளர முடியும்? அல்லது பிறப்பினிலேயே நொண்டி; அவன் எப்படி என்னைப்போல ஓட முடியும்? இவர் சுட்டுவது இந்துமதம் வருணசிரமம் இவரைப்போன்றோரை நால்வகை வருணத்திலும் சேர்க்காமல் போனதைப்பற்றி. அழத்தேவையேயில்லை. அவ்வருணாசிரம் இன்று இல்லை. சமத்துவம் இல்லாகாரணங்கள் மதத்தால் இன்று வருவதில்லை. எந்த பார்ப்பானும் தன்னை உயர்வாக நினைத்துக்கொண்டால் இந்தப் பறையனுக்கு என்ன வாழ்ந்தது? நீ அவனை விட உசத்தீன்னு நினைச்சுக்கோ!
சொந்த மண்ணின் சுதந்திரமாக வாழ முடியவில்லை. அஃதாவது இவர் கூறும் அடிமைத்தனம், கொத்தடிமைத் தொழிலாளரகளைப் பற்றி. திருவண்ணாமலை மாவட்டத்துக் கொத்தடிமைகள் 21 பேர் திருப்பதி காட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவருமே தலித்துக்கள் என்றால் இவர் சொன்னது சரியாகும்.
வெள்ளைக்காரன் தில்லியில் ஒரு பெரிய அலுவலக நுழைவாயில் இப்படி எழுதிப்போட்டு விட்டுப்போய் விட்டான். இன்றும் அது நிற்கிறது.
Liberty does not descend to a people. People should rise to liberty themselves.
கொடுத்துப்பெறுவதன்று சுதந்திரம். நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் சாரம். சும்மா உட்கார்ந்து சுகங்காணும் மூடர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் சொல்லப்பட்டது இது. இதுவே தலித்துக்களுக்கும் பொருந்தும்
Educate agitate and organize என்பது அம்பேத்கர். கல்வியை முதலில் போட்டார். ஏனெனில் கல்லாமாந்தர்கள் கூழாங்கற்கள். வெறுமனவே புலம்பும் கூட்டமது. எனவே உன்னை கல்வியால் உசத்திக்கொள் முதலில் என்றார். அவர் செய்தே காட்டினார். இலண்டனில் வழக்கறிஞர் பட்டம். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம். பின்னர்தான் அரசியல்?
அடங்க மறு என்பது திருமாவளவன். இவர் பேச்சைக்கேட்டால், தலித்து என்றால் கூழங்கற்கள் என்ற வசவு வேண்டுமா? சிந்திப்பீர்.
கட்டுரையாளர் இவரை முன்பே அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆள் போனபின் திண்ணையில் கட்டுரை போடுவது too little too late, Sir.
ஒரு நேரடியான விடயத்தைத் தெளிவாகக் குழப்பித் தவறாக முடிவு சொல்லும் முறையை உங்கள் ஒவ்வொரு பதிவிலும் காண்கிறேன். மனிதனை சாதிய, வருண அடிப்படையில் தாழ்வுபடுத்துகின்ற முறை மற்றும் அவனுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைகளைத் தட்டிப் பறிக்கும் வழக்கம் போன்றவை இந்த நவீன காலத்திலும் நம் தேசத்தில் அழிந்துவிடவில்லை. பல இடங்களில் உயிா்ப்புடன் அவற்றைக் காணமுடியும். உதாரணமாக, “தெய்வத்தை நான் எட்ட நின்றுதான் தொழவேண்டும், கருவறைக்குள் சென்று அருகில் நின்று வழிபட்டால் தீட்டாகிவிடும்” என்ற அடிப்படையில்தான் பெரும்பான்மையான கோவில்களின் கருவறைகளுக்குள் பாா்ப்பனரைத் தவிர வேறு யாராலும் அா்ச்சகராக நுழையமுடிவதில்லை தொிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற பல தீண்டாமை உதாரணங்களை என்னால் காட்ட இயலும். இந்து என்பது பல இன, சமய மக்களின் கூட்டமைப்பு. அக்கூட்டமைப்பில் இவைபோன்ற சாத்திர விதிகள் சீா்படுத்தப்படவேண்டும். சமயம் மனிதனை நல்வழிப்படுத்தவே. அவனைத் தீண்டத் தகாதவன் என்று சொல்வதற்கல்ல. இந்து சமயம் பன்முகத் தன்மை கொண்டது. சித்தா்களில் சிலா் உருவழிபாட்டினை ஏற்பா். வேறு சிலா் உருவ வழிபாட்டினை மறுப்பா். ஆனால் இவ்விரு பிாிவினரும் இந்து சமயத்திற்குள் அடக்கம். ஆகம விதிகளின் அடிபடையில் அமைக்கப்பட்ட இந்துக் கோவில்களில் பெரும்பாலும் அா்ச்சகா்களாகப் பாா்ப்பனா்கள் இருப்பா். குலதெய்வக் கோவில்களில் பெரும்பாலும் அக்குலங்களுக்குாிய கோவில் பூசை உாிமையுடையோா் பூசை செய்வா். ஆனால் ஆகமக் கோவில்கள், குலதெய்வக் கோவில்கள் போன்ற அனைத்தும் இந்து சமயத்திற்குள் அடக்கம். இப்படிப் பல்வேறு நுட்பமான விடயங்கள் சமய வழிபாடுகளில் உள்ளன. இவற்றையெல்லாம் நடுநிலைத் தன்மையுடன் ஆராய்ந்து பதில் எழுதுங்கள். எடுத்த எடுப்பில் இப்பொழுது தீண்டாமை இல்லை என்று ஆராயாமலும் சமயம் சாா்ந்த வரலாறுகளையும் நடைமுறைகளையும் அறியாமலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது போதும்.
\\எவரேனும் தலித்துகளை இந்துவாகத்தான் இருக்கவேண்டுமென கட்டாயப்படுத்தினரா? இல்லவேயில்லை\\
எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது? ஒடுக்கப்பட்டவா்கள் தீண்டாமை போன்ற வன்கொடுமைகளை ஏற்றுக்கொண்டு பிடித்தால் இந்து மதத்தில் இருங்கள். இல்லையென்றால் வெறியேறிவிடுங்கள் என்பது போன்ற மிரட்டல் தொனியாக இருக்கிறதே. இது சாியல்ல.
\\கொடுத்துப்பெறுவதன்று சுதந்திரம். நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் சாரம். சும்மா உட்கார்ந்து சுகங்காணும் மூடர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் சொல்லப்பட்டது இது. இதுவே தலித்துக்களுக்கும் பொருந்தும்//
ஒடுக்கப்பட்டவா்கள் சும்மா உட்காா்ந்து சுகம் காண்பவா்களும் அல்ல. மூடா்களும் அல்ல. முதலில் இதைப் புாிந்து கொள்ளுங்கள். சுதந்திரத்தைத் தலித்துகள் தாங்களே எடுத்துக்கொள்ளவேண்டுமாயின் அது சமூக அடிமைச் சட்டங்களிலிருந்து அடங்க மறுத்தால் மட்டுமே முடியும். அப்படி அடங்க மறுக்காமல் அவா்கள் எப்படி சுதந்திரம் பெறுவாா்கள் என்று ஒரு தலைசிறந்த கட்டுரையைத் தயவுசெய்து அடுத்த திண்ணை இதழில் முடிந்தால் தெளிவாக எழுதுங்கள். அல்லது பதிலுரையுங்கள்.
விடுதலை என்பது கேட்டுப்பெறுவதன்று. தாங்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் எடுத்துக்கொண்ட பொருளில் வராது. ஆழ்ந்து படிக்கவேண்டும்.
இன்றைய இந்திய ஜனநாயகத்தில் அனைவரும் சமம் சட்டத்தின் முன் மட்டும்தான். மற்றபடி அச்சம நிலைக்கு ஒவ்வொருவரும் தன்னைத் தகுதியுடைவராக்குவதற்கு உழைக்க வேண்டும். அல்லும் பகலும் கல்லாய் இருந்துவிட்டு, பின்னர் அல்லும் பகலும் உழைத்து முன்னேறி முதனிலை அடைந்தவனைப்பார்த்து அவன் தட்டிப்பறித்துக்கொண்டான்; நான் ஒடுக்கப்பட்டேன் எனக்கதை விடுபவர்களை ஏற்பீர்களா? இல்லை மூடர்கள் எனத்திட்டுவீர்களா? பட்டுக்கோட்டைப் பாவலர் தமிழகமே முழங்கும்படி இச்சோம்பேறிகளைத் திட்டி ஒரு பாட்டே எழுதினார் இல்லையா?
அரசு கொடுத்த உரிமைகளை நன்கு பயன்படுத்திக்கொண்டு அவற்றின்மேல் தம் உழைப்பைக்கொட்டி முன் வருபவன், தனக்கு விடுதலை இல்லையே என ஒப்பாரி வைக்கமாட்டான். விடுதலையை அவன் உழைத்துப்பெற்றான் என்னும் பொருளே, விடுதலை எடுத்துக்கொள்ளப்பட்டது. கேட்டுக்கொண்டு நிற்பதன்று என்று சொல்லப்படுகிறது என்னால்.
இன்றைய கோயில்களுக்குள் தலித்துக்கள் உள்ளுழையக்கூடா என்றில்லை. ஆனால் ஜாதிக்கோயில்கள் அரசுக்கோயில்கள் அல்ல. அவை தனியார்க் கோயில்கள்; அங்கு அஜ்ஜாதிக்காரர்களும் அன்னாருக்கு வேண்டியவர்கள் மட்டுமே நுழையலாம். தலித்துக்களை இந்துமதம் இன்று சிறை வைக்கவில்லை. இப்படியிருக்கும்போது இம்மதம் எம்மைச் சிறைவைத்தது எனப் பாடுவது எப்படி பொருந்தும்.?
கோயிலில் அர்ச்சகராக பிறப்பால் பார்ப்பனராக இருக்கவேண்டும் என வருணசிரமத்தை நீதிமன்றமே உறுதிசெய்திவிட்டது தெரிந்ததே. ஆனால், தலித்துகளை மட்டுமா அத்தீர்ப்பு பாதிக்கிறது?. பார்ப்பன்ரல்லா அனைவரையுமே வெளியில் நிற்க வைத்து விட்டதே? அவர்கள் போக, பார்ப்பனருள் எல்லாருமே உள்ளுழைந்து அர்ச்சனை சிலைகளைத்தொடக்கூடா என்னும்போது பார்ப்பனருமல்லவா பாதிக்கப்பட்டோர். இவர்களெல்லாம் தேமே வென இருக்க தலித்துக்கள் மட்டும் அய்யோ முறையோ எனக் கூப்ப்பாடு போடுவது எங்ஙனம்?
இந்துமதம் ஒவ்வொரும் தமர்தமர் வழிகளில் செல்ல தடையேதும் போடவில்லை. பார்ப்ப்னர்கள் அழிச்சாட்டியம் பண்ணுவது பிடிக்காதோர் பிரிந்து சென்றார்கள்: வள்ளலார்; நாராயணகுரு போன்றோர். இந்த மடமில்லாவிட்டால், சந்தைமடம் என்பது தமிழ் முதுமொழி. நாராயண குரு, தாமே ஒரு கோயிலைக்கட்டி சிவலிங்கத்தை அங்கு வைத்தபோது, மலையாளப்பார்ப்ப்னர் கேட்டார்: உமக்கு உரிமை உண்டா இப்படிச்செய்ய? நாங்கள் பார்ப்பனர்கள். நாங்கள்தானே சிவலிங்கத்தை கோயில்களில் வைப்பது? // குரு சொன்னார்: உண்மைதான். சிவலிங்கம் உங்கள் சிவலிங்கமாக இருப்பின்.; நான் வைத்தது அஃதன்று. இது பிள்ளைகளின் சிவலிங்கம். இதை பிள்ளையான நான் வைப்பதில் எந்தத் தெய்வக்குற்றமுமில்லை. என்றார். அவர் கட்டிய கோயில் நெய்யாட்டின்கரையில் இருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயில். தற்போது அங்கும் பார்ப்பனரும் சென்று தொழுகிறார். எப்படி சாத்தியமானது?
அப்படியே தலித்துக்களுக்கும் சாத்தியாமாகும். தங்களுக்கான இந்துமதப்பிரிவை உருவாக்கி இறைவனைத் தொழுதெழுதால், இறைவன் சீ போ…எனத் தள்ளிவிடுவானா? மாட்டான்.
குணசேகரன் பாட்டே கோழைத்தனமாகத்தான் எனக்குப்படுகிறது. தலித்துகளுக்குத் தன்மான உணர்ச்சியை ஊட்டுவதற்குப் பதில் ஒப்பாரி வைக்கும் கோழைத்தனத்தையல்லவா போதிக்கிறார்?
//அவ்வருணாசிரம் இன்று இல்லை. சமத்துவம் இல்லாகாரணங்கள் மதத்தால் இன்று வருவதில்லை. எந்த பார்ப்பானும் தன்னை உயர்வாக நினைத்துக்கொண்டால் இந்தப் பறையனுக்கு என்ன வாழ்ந்தது? நீ அவனை விட உசத்தீன்னு நினைச்சுக்கோ!…//
BSV ஸார்! வ.வே.சு. ஐயர், தாழ்த்தப்பட்டவனுக்கு பூணுல் போட்டு உயர்த்தினார்.நம்ம பாரதி இவர்களை ஆலயங்களுக்குள் நுழையச் சொல்லி சமப்படுத்தினார்.நம்ம காந்தி எல்லோருக்கும் மேலாக வேசிப் பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டவர்களை..நீங்கள் அப்படி நினைத்துக்கொள்ளவேண்டாம்.நீங்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் “ஹரிஜன்” என்று சொல்லி பார்ப்பனர்களோடு சமபந்தி நடத்தி உயர்த்தினார்.
இவ்வளவு நடந்தும் இன்றையவரை பள்ளனும் பறையனும்,சமமாக முடியவில்லை கள்ளனும் மள்ளனும் சமமாக முடியவில்லை.கடவுளின் தேரைக் கூட இழுக்க முடியவில்லை ஆனால் எரிக்க முடிகிறது உத்தபுரத்தில். இதைத்தான் குணசேகரன் இப்படிப் பாடுகிறார். //இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க…// நீங்க மிக எளிமையாக சாதி வர்ணப்பூசலை ஒழித்து விட்டீர்கள்…. // இந்தப் பறையனுக்கு என்ன வாழ்ந்தது? நீ அவனை விட உசத்தீன்னு நினைச்சுக்கோ!…//
இப்படி நினைத்து உச்ச நீதிமன்றம் போனவர்கள்தான் நாலாம் வர்ணத்து அரசு அர்ச்சகர்கள்.ஆனால் என்ன ஆனது.? நீங்கள் இன்று இல்லை என்று சொன்ன வர்ணாசிரமம் அரசியல் சட்டத்திற்குள் ஒழிந்து கொண்டு ஆகமச் சட்டத்தால் அர்ச்சகர்களை அடித்து விரட்டியது.
இப்ப வருணாசிரமம் கோயில் கருவறையில் இல்லை.இ பி கோ.விலில் இயங்கி வருகிறது.
வழக்கறிஞர்,கொலம்பியா முனைவர் பட்டம் பெற்றும் அம்பேத்காருக்கு வர்ணாசிரமம் வழி விடவில்லை.
ஆக,கல்வியில் என்ன உச்சம் எட்டினாலும் பார்ப்பானும் பள்ளனும் ஒருநாளும் சமமாக முடியாது.உச்சி நீதி மன்றம் உயிர்ப்போடு இருக்கும்வரை….
இதற்கு எதிர்வினை வைக்க திரு கிருட்டிணக்குமார் அவர்களை விண்ணப்பித்துக் கொள்கிறேன். திண்ணை வாசகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து காத்திருக்கிறது: a heady cocktail of Sanskrit and Tamil. என்னைவிட திரு ஷாலிக்கு நறுக்நறுக்கென பதில் சொல்பவர் அவர் என்பது தெரிந்ததே.
//கே.ஏ.குணசேகரனின்
”பாவாடை சட்டை கிழிஞ்சி போச்சுதே…
என்ன பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே…”
எனத்தொடங்கும் பாடல் பலரும் கேட்டு கண்ணீர் வடித்த பாடல். மன்னார்குடியில் ஓர் இசை நிகழ்ச்சியில் பாடியதைக் கேட்ட ஒரு ஜவுளிக்கடை அதிபர் இவ்வரிகளைப் போட்டு, ”கவலைப்பட வேண்டாம். எங்கள் ஜவுளிக்கடைக்கு வாருங்கள்” என்று விளம்பரம் போட்டாராம். ஒரு பாடலை வணிக நோக்கில் சிதைக்கக் கூடிய போக்கு இது. ஆனாலும் இப்பாடல் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லையே எனும் வருத்தம் உண்டு. அதனால், ”ஏ ஆக்காட்டி, ஏ…ஆக்காட்டி…” என்ற நாட்டார் பாடலை முடிக்கிற போது நம்பிக்கை வரிகளைச் சேர்த்து முடிக்க வேண்டும் என்ற தோழர் எஸ் ஏ பெருமாளின் ஆலோசனையின் பேரில் கே ஏ குணசேகரன் இப்படி முடித்திருப்பார்:
”கத்துக்குருவியே நீ கதறியழக் கூடாது…
ஏழைக்குருவியே நீ ஏங்கியக்கூடாது…
வலையென்ன பெருங்கனமா…
அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா…’
என்ற நம்பிக்கை வரிகளோடு முடித்திருப்பார். காலம்சென்ற பி எல் சாமி இந்த ஆக்காட்டிப் பாட்டு தமிழக மெங்கும் என்னென்ன மாறுதல்களோடு பாடப்படுகின்றது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பேராசிரியர் லூர்து இப்பாடல் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறார். மக்களிடம் நாம் செய்த இம்மாற்றத்தோடு இப்பாடலைக் கொண்டு சேர்க்கிற போது அவர்களுக்கு அது நம்பிக்கை யூட்டுவதாக அமைந்து போனது. இது ஒருவகையில் ‘ரீ மேக்’ போன்றதுதான். ஆனால் இப்படிப்பட்ட மாற்றம்தான் மறுவாசிப்பு என்பது…//
— பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனின் வாசிப்பும் மறுவாசிப்பும் என்ற தலைப்பில் செம்மலர் ஜனவரி இதழுக்குக் கொடுத்த பேட்டி.
சிறப்பான நினைவு கூறல். நன்றிகள் பல பேராசிரியர் ஆ சிவசுப்பிரமணியன் அவர்களே.
இன்று கே ஏ குணசேகரன் இருந்திருந்தால், இத்திண்ணைக்கட்டுரையின் தொடக்கத்தில் போடப்பட்டிருக்கும் அவர் பாடலை நம்பிக்கையூட்டியே முடிக்கும்படி நான் கேட்டிருப்பேன்.
”…பார்ப்ப்னரின் வருணாஷிரம் நிறைந்த மதம் நமக்கு வேண்டாம்
நம் கைகளில் சந்தணமில்லை; பூமணமுமில்லை
சாக்கடை நாற்றமும் கருவாட்டு நாற்றமுமே.
இறைவன் பேதம் பார்ப்பதில்லை.
நம் கைகளின் ஏந்திநிற்பவை அவனுக்கு பெருமணமே
செல்வோம் வாருங்கள். நம் விதியை நாமே தீர்மானிப்போம்.
என்ற இக்கருத்துபடும்படி, அவரின் அட்டகாசனான நெஞ்சைப்பிழியும் வரிகளால் நம்மைத்துவட்டி எடுத்திருப்பார்.
நான் புதியவன் இப்படிப்பட்ட நவீன பாவலர்களப்பற்றியறிந்திருக்கவில்லை:-(. இனியாவது அவர்கள் இருக்கும்போதே இப்படிப்பட்ட பாவலர்களை அறிமுகப்படுத்தி விடுங்கள் என்னைவிட தமிழ் படித்தவர்களே…!