_ ‘ரிஷி’
என்னருமைத் தாய்த்திருநாடே
உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து
தோளில் தொங்கி
முதுகில் உப்புமூட்டையாகி
முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே
உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு
சுவாதீனத்தோடு, சுதந்திரத்தோடு
சாகும்வரையான உரிமையோடு
உன் மீது சேற்றை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.
உன்னை அறம்பாடுவதே தங்களுக்குப் பெருமை சேர்ப்பதாய்
அங்கிங்கெங்கிலும் உன் புகழை மங்கவைக்கக்
கங்கணம் கட்டித் திரிகிறார்கள் –
காறித்துப்பித்துப்பியே கர்ம வீரர்களாகிவிட்டவர்கள்.
உன்னை மதிப்பழிப்பதே மாபெரும் புரட்சியாய்
மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மனிதநேயம் பேசிக்கொண்டே
உன் மலைகளும் காடுகளும் மரம் செடி கொடிகளெல்லாம்
அழிந்துபோகட்டும் என்று ஆங்காரக்குரலில்
மண்ணைவாரித் தூற்றியவர்கள் உண்டு.
உன் உன்னதங்களெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை
கண்டனத்துக்குரியவை.
உன் பெருமைகளெல்லாம் அவர்க்குச் சிறுமைகள்.
பல்மொழிப் பேசும் உன் பிள்ளைகளிடையேயான பிணைப்பு
அவர்களுக்கு உவப்பான விஷயமல்ல.
உன் பிள்ளைகளிடையே இல்லாத சண்டையை உண்டுபண்ணி
உன் வளர்ப்பு சரியில்லை, பாரபட்சமானது என்று
ஆசைதீர வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மதச் சார்பின்மை என்றால் அவர்களைப் பொறுத்தவரை
இந்துமதத்தை நிந்தித்துக்கொண்டேயிருத்தல்;
கடவுள் இல்லையென்று சொல்லியபடியே
தன்னை யாராவது கற்பூரம் காட்டி வழிபட மாட்டார்களா என்று
எந்நேரமும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்;
உன் அர்த்தங்களையெல்லாம் அனர்த்தமாக்கிக்காட்டுவதே
வாழ்வின் பொருளாக
கரித்துக்கொட்டுகிறார்கள் உன்னை-
கடல் கடந்த அரங்குகளிலும்.
அரிப்பெடுத்துக்கொண்டேயிருக்கும் தங்கள் ஆணவச்
சொறி சிரங்குகளுக்கு
உன்னை மட்டந் தட்டித் தட்டி
மருந்திட்டுக்கொள்கிறார்கள்.
சாதிகள் உள்ள ஒரே நாடு சபிக்கப்பட்ட இந்தியா என்பார்;
வேதங்களால் விளைந்ததே பெண்ணடிமைத்தனம் என்பார்’
மீதமுள்ள நிலங்களிலெல்லாம்நிலவுகிறதோ
சுபிட்சமும் சமத்துவமும் பூரணமாய்
எனக் கேட்கத் துணிவோர்
போலி பிற்போக்கு, சனாதனி, மட சாம்பிராணி.
அன்னபிற வார்த்தைகளை ஆங்காரமாய் வீசியெறிந்துவிட்டு
கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொள்வார்
மின்னும் கோணவாய்ச் சிரிப்புடன்
‘க்ளிக்’ செய்யக் காத்திருக்கும் புகைப்படக்காரர்கள் இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது ஸெல்ஃபி.
‘பாப் மாகஸீன்’ தரும் பிசாத்து விருதுகளையெல்லாம்
இரு கரம் நீட்டி வாங்கிப் பூரித்துப்போகிறவர்கள்
யாருக்கேனும் இந்திய அரசின் விருதளிக்கப்பட்டால்
உடனே இகழத்தொடங்கிவிடுவார்கள்.
உலகிற் சிறந்த படைப்பாளிகளெல்லாம் இவர்களுக்கு வெறும்
முத்திரை வாசக ‘சப்ளையர்கள்’;
உயிரை உருக்கி அவர்கள் எழுதிய வரிகளிலிருந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டியெடுத்து
மேற்கோள்களாகக் காட்டிக்காட்டியே
அறுபத்துநான்கு கலைகளையும் அதற்கு மேலும்
கக்கத்தில் இடுக்கிக்கொண்டிருக்கும் மேல்தாவி ’பாவ’ம்
தொக்கிநிற்க
மெத்தப்படித்தவராகத் தம்மை நிலைநாட்டிக்கொண்டுவிடுவார்
முகநூலில்.
பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்றெல்லாம்
நீட்டி முழக்குபவர்கள்
ஒரு மாற்றுக்கருத்தைக் கேட்டாலோ
என்னமாய் காச்சுமூச்சென்று கத்துகிறார்கள்!
பிறர் குரல்வளையை நெரித்தபடியே
குரலற்றோரின் குரல் என்று தனக்குத்தானே
கிரீடம் சூட்டிக்கொள்வார்கள்.
இந்தியச் சுதந்திரம் என்றாலோ உடனே
நிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்.
குடியரசு தினம் என்றால் கேட்கவே வேண்டாம் –
தடியெடுக்காத குறைதான்.
என்னருமைத் தாய்த்திருநாடே
இன்றளவும் உன் வளங்களையெல்லாம் நன்றாய்
அனுபவித்தவண்ணம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு உன்னை
எள்ளிநகையாடிக்கொண்டிருப்போரின் கயமையை
என்னென்பது?
சுதந்திரப் போராளிகள்
எல்லைகாக்கும் படைவீரர்கள்
உணவளிக்கும் விவசாயிகள்
என உன் அருமை பெருமை அறிந்து
கடமையாற்றும் பெருமக்கள் ஏராளம் உண்டிங்கே!
உனக்கென்ன குறைச்சல்!
இல்லையென்பது இல்லையாக
நீயும் உன் மக்கள் நாங்களும் ஊரும் பாரும்
சீறும் சிறப்புமாய்
வாழ்வாங்கு வாழியவே!
- அழகுநிலாவின் “ஆறஞ்சு”
- புழுக்களும் மனிதர்களும்
- தொடுவானம் 105. குற்ற உணர்வு
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்
- திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு
- காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்
- இரு கவிதைகள்
- திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா
- அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்
- ‘கலை’ந்தவை
- “கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”
- இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!
- அடையாளங்களும் அறிகுறிகளும்
- சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்
- கோணங்கள்
- பிரிவின் சொற்கள்
- English translation of Tamil Naaladiyaar
- மகாத்மா காந்தியின் மரணம்