எங்கே அது?

This entry is part 13 of 13 in the series 28 பெப்ருவரி 2016

unnamed
==================================ருத்ரா இ.பரமசிவன்

அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில்
காப்பி தான் வந்தது?
மூலப்பிரதி இன்னும் வரவில்லை?
அதை “ஆத்மா” என்றார்கள்!
மன சாட்சி என்றார்கள்.
பிரம்மம் என்றார்கள்.
இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய்
ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌
மரப்பாச்சிகளாய்
உலா வருகின்றேன்.
எங்கே அது?
என்ன அது?
எதற்கு அது?
புரியவில்லை!
இருப்பினும் அந்த‌
மூலப்பிரதி இன்னும் வரவில்லை!
பெரிய பெரிய பரிய‌
மனிதர்கள் அது பற்றி
தேடுதல் வேட்டையில்
ஞானத்தை கூர் தீட்டுகிறார்கள்!
பாவம் என்கிறது அது!
இந்த உயிரின் “நுரைச்சங்கிலி” யின்
ஒரு முனை இங்கே
இன்னொரு முனை எங்கே?
“அதான்யா இது”
வாழைப்பழ ஜோக்காய்
சித்தாந்தங்கள் சிரிக்க வைக்கின்றன!
ஸார் என்ன பண்ணுகிறீர்கள்!
ஒரே சிந்தனை தானா?
அஹ்ஹ ஹா ஹா..
அட்டகாசமாய் சிரித்துக்கொண்டே வந்து
உட்கார்ந்தார் எதிர் வீட்டு நண்பர்.
அவர் சிரிப்பில் அந்த “அச்சு எந்திரத்தின்”
கடபடப்பு இல்லை!
ஆனாலும் மனிதர் சிரிப்பதை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அவர் மனைவிக்கு கேன்ஸர்.
அவருக்கு மூளையில் ஏதோ கட்டியாம்.
அவரது குழந்தைகளின் வாழ்க்கையோ
குடும்பச்சிறகுகள் பிய்ந்து போன‌
குருவிகளின் அவலத்துடிப்புகள்.
இதற்கெல்லாம் பயந்து போய்
நெய்த்தீபம் சனீஸ்வரச் சுற்றுகள்
அர்ச்சனைச்சீட்டுகள் என்று
அவர் அலைந்து பார்த்ததில்லை.
ஆனால் இந்த சிரிப்பை மட்டும்
அவர் எல்லோரிடமும்
ஊடுருவ விடுகிறார் ஒரு
“நியூட்டிரினோவைப்போல”
அவரால் இப்படி
வெள்ளையாய் கள்ளமின்றி
பளிச்சென்று எப்படிச்சிரிக்க முடிகிறது.
அவரோடு
நானும்
“அஹ்ஹ்ஹா ஹா ஹா..”
என்றேன்.
எனக்குப்புரியாதது
அவருக்கு புரிந்திருக்கிறது.
மூலப்பிரதி
எங்கோ அன்னத்தூவியிலும் அன்னத்தூவியாய்
அதோ “அடி முடி” காட்டாமல்
பறந்து போய்க்கொண்டிருக்கிறது.

Series Navigationகெட்டிக்காரன்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *