கெட்டிக்காரன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 13 in the series 28 பெப்ருவரி 2016

 

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

 

“ஆனந்த்தோட சைக்கிள் காணாமல் போய் விட்டது’ என்று கோயம்புத்தூரிலிருந்து செல்வம் போன் பண்ணினார். மருதமலை அருகில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு புறநகர் பகுதியில் செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

“எப்படி காணாமல் போனது? ஆனந்த் எப்பவும் சைக்கிளைப் பூட்டித்தானே வைத்திருப்பான்” என்றேன்.

“பூட்டை உடைத்து திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்”

“கம்ப்ளைன்ட் பண்ணினீர்களா”

“ஸ்டேஷனில் போய் சொன்னோம். பக்கத்தில்தான் எங்காவது இருக்கும். தேடிப்பாருங்கள். கிடைக்கவில்லை என்றால் நாளை வந்து கம்ப்ளைன்ட் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்”

செல்வம் என்னுடைய மைத்துனர். போன வாரம் சாமி கும்பிடச் சென்ற நாங்கள், இரண்டு நாட்கள் அவருடைய வீட்டில் தங்கி இருந்து விட்டு முந்தாநாள் தான் ஊருக்குத் திரும்பி இருந்தோம். இப்போது பார்த்தால் சைக்கிள் காணவில்லை என்று சொல்கிறார்.

அந்த சைக்கிளைப் பற்றி நினைத்தால் இப்போதும் எனக்குச் சிரிப்பு வருகிறது. வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் சென்று வருவதற்காக ஆனந்திற்கு அந்த சைக்கிளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் செல்வம்.

ஆனந்த் அவருடைய இளைய மகன். ப்ளஸ் டூ படிக்கிறான். அந்த சைக்கிளில் ஸ்டைலாக அவன் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்து எனக்கும் அந்த சைக்கிளை ஓட்டிப் பார்க்க ஆசை வந்தது.

சாயங்காலம் கடைக்குப் போகலாம் என்று அந்த சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு போனேன். ஆனால் ஓட்டும்போது ஏன்டா அந்த வண்டியை எடுத்தோம் என்று ஆகி விட்டது. கொஞ்சமும் பராமரிப்பே இல்லாமல் இருந்ததால் சைக்கிளை மிதிக்கவே கஷ்டமாக இருந்தது.

நான் அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் லட்சணத்தைப் பார்த்த சிலர், “டேய், ஆனந்த் வண்டிடா” என்று தங்களுக்குள் ரகசியச் சிரிப்புடன் பேசிக் கொண்டார்கள்.

கொஞ்ச தூரம் போய்விட்டு வருவதற்குள் அரை மணி நேரம் கடினமாக உடற்பயிற்சி செய்தது போல் ஆகி விட்டது.

‘டேய், வண்டியை இன்னிக்காவது துடைச்சி வைடா’ இது ஆனந்திற்கு தினமும் அவன் அப்பா சொல்லும் அறிவுரை.

சரிப்பா’ என்றபடி கிளம்புவான். ஆனாலும் செய்ய மாட்டான்.

‘அவன் வண்டியை ஒரு நாளும் துடைத்ததில்லை’ என்று செல்வம் சொன்னார்.

“இந்த வயதில் விளையாட்டுத் தனமாகத்தான் இருப்பான். படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறானல்லவா?” என்றேன்.

“அவனுடைய வீடடுப் பாடத்தைக் கூட தன்னுடைய அண்ணனையோ அல்லது நண்பனையோ எழுத வைத்து விடுவான். அது எப்படி என்று புரியவில்லை”

“ஒருவேளை சைக்கிளைத் துடைப்பதற்கு யாரும் இதுவரை சிக்கவில்லையோ என்னவோ” என்று சிரித்தேன்.

“ஐஐடியில் சேர்ந்து படிக்கப் போகிறேன் என்கிறான். ஆனால் தன்னுடைய வேலையை அடுத்தவன் தலையில் சாமர்த்தியமாக சுமத்தி விடுகிறான். என்னதான் செய்யப் போறானோ” என்று புலம்பினார்.

“கவலைப்படாதீர்கள். அவன் புத்திசாலி எப்படியும் நினைத்ததை சாதித்து விடுவான்” என்றேன்.

“ம்… நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும்” என்று அங்கலாய்த்தார்.

ஒருவேளை தன்னுடைய சைக்கிள் மீது யாரும் ஆசைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி வைத்திருக்கிறானோ.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நடந்த விஷயங்கள் ஞாபகம் வந்தது.

அப்போது நான் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தேன். பொதுத்தேர்வு என்பதால் பள்ளியில் தினமும் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி முதல் படிக்க வர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருந்தார்கள்.

எங்கள் கிராமத்திலிருந்து நான் படித்த பள்ளி இரண்டு கிலோமீட்டர் தூரம் என்பதால் இரவு படிப்புக்குச் சென்று வருவதற்காக என்னுடைய அப்பா புதிதாக ஒரு சைக்கிள் வாங்கித் தந்திருந்தார். என்னுடன் படித்த இன்னொரு நண்பனும் சைக்கிள் வைத்திருந்தான். அது கொஞ்சம் பழைய சைக்கிள். ஆனால் என்னுடைய சைக்கிள் பளபளவென்று கண்ணைப் பறிக்கும்.

அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு இப்போது போல அதிகச் சம்பளம் கிடையாது. அதனால் பெரும்பாலும் எல்லா ஆசிரியர்களும் சைக்கிள்கூட இல்லாமல் நடந்துதான் பள்ளிக்கு வருவார்கள். ஆசிரியர்களே அப்படி என்றால் மாணவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சைக்கிள் வைத்திருக்கும் மாணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

எங்களுக்கு ஒரு தமிழாசிரியர் இருந்தார். புலவர் பட்டம் பெற்றவர். நல்ல மனிதர். பாடங்களை ரசிக்கும்படி நடத்துவார். பிரபலமான சினிமா மெட்டுக்களில் சொந்தமாக பாட்டெல்லாம் எழுதிப் பாட வைப்பார்.

அவருக்கு சினிமா பார்ப்பதில் மிகுந்த விருப்பம். மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்ப்பதற்கு சைக்கிளில் சென்று வருவார். அது போன்ற சமயங்களில் என்னிடம் தான் சைக்கிள் கேட்பார். நானும் கொடுப்பேன்.

அப்படி ஒருமுறை சினிமாவிற்குச் சென்றபோது சைக்கிள் பெடலில் புதிதாக மாட்டியிருந்த பச்சை நிறக் கவரை தொலைத்து விட்டார். அது எங்கே என்று அப்பா கேட்டால் என்ன சொல்வது என்று எனக்கு பயம். ஆனால் அதை தமிழாசியரிடம் போய்க் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

ஏனென்றால் அன்று காலையில்தான் தங்கமணி என்ற மாணவன் அவரிடம் செமத்தியாக உதை வாங்கி இருந்தான். அது ஒரு வேடிக்கையான சம்பவம். இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

என்னுடன் படிக்கும் செந்தில் என்பவன்தான் தமிழாசிரியருக்கு பிரதான சிஷ்யன்., அவருடைய வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தருவான். ஒரு எடுபிடி போல அவர் சொல்வதை எல்லாம் செய்வான். அன்று காலை கொஞ்ச தூரத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த செந்திலைப் பார்த்து தங்கமணி, “எங்கேடா அவசரமா போற” என்று கேட்டிருக்கிறான்.

“தமிழ் வாத்தியார் பொண்ணு, வாத்து முட்டை கேட்டுச்சுடா” என்று போகும் அவசரத்தில் சொல்லி இருக்கிறான் செந்தில்.

அதைச் சரியாக காதில் வாங்காத தங்கமணி, “என்னது, தமிழ் வாத்தியார் பொண்ணு வாத்து முட்டை போட்டுச்சா” என்று கேட்க,

அவனும் சரியாக கேட்டுக் கொள்ளாமல், “ஆமாண்டா” என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான்.

அந்த வயதிற்கே உரிய குறும்போடு இந்த விஷயத்தை தங்கமணி, வகுப்பில் மற்றவர்களிடம் சொல்லி, எல்லோரும் சிரித்து கிண்டல் பண்ண, விஷயம் தமிழாசிரியர் காது வரை போய்விட்டது.

அவர் செந்திலையும், தங்கமணியையும் கூப்பிட்டு விசாரித்து, தங்கமணியை அடித்து துவைத்து விட்டார்.

இப்படி இருக்கையில் பெடல் கவர் தொலைந்ததை எப்படிப் போய் கேட்பது? இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் போய்க் கேட்டேன். ஆனால் அவரோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “ஐம்பது பைசா கவர்தானடா, நீயே வாங்கி போட்டுக்கொள்” என்று சொல்லி விட்டார்.

அன்றிலிருந்து எப்போது கேட்டாலும், அவருக்கு நான் சைக்கிள் தருவதில்லை. அதனால் மற்ற எல்லாப் பாடங்களிலும் நான் முதல் மார்க் வாங்கினாலும், தமிழில் மட்டும் எனக்கு இரண்டாவது மார்க் தான் போடுவார். அது தனிக்கதை.

இந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வந்த போது, பளீரென ஒரு எண்ணம் தோன்றியது. சைக்கிள் பளிச்சென இருந்தால்தான் மற்றவர்கள் அதன் மேல் ஆசைப்படுவார்கள்.

ஒருவேளை ஆனந்த் தன்னுடைய சைக்கிளை இப்படி வைத்திருக்கும் காரணம் அதுதானோ? அதனால்தான் எல்லோரும் கிண்டல் பண்ணினாலும் சட்டை செய்யாமல் இருக்கிறானோ.

அவனுடன் படிக்கும் நண்பன்கூட ஒருமுறை சொன்னானாம்.

‘டேய், உன்னோட சைக்கிளைத் திருடன்கூட எடுத்துட்டுப் போக மாட்டான்’

அப்படிப்பட்ட சைக்கிள்தான் இப்போது காணாமல் போய் விட்டது.

அடுத்த இரண்டு நாட்கள் எந்த தகவலும் இல்லாமல் ஓடி விட்டது. ஆனால் மூன்றாவது நாள் ஆனந்தே போன் பண்ணினான்.

“மாமா, காணாமல் போன் என்னோட சைக்கிள் கிடைத்து விட்டது”

“எப்படிடா கிடைச்சது”

“அந்த சைக்கிளை ஒருவன் ஓட்டிக் கொண்டு போனதை என்னோட நண்பன் பார்த்திருக்கிறான். அந்தப் பையன் ஏற்கெனவே இதுபோல ஒரு தடவை சைக்கிள் திருடி இருக்கிறானாம். அவன் வீட்டுக்கு நேராகச் சென்று கேட்டபோது, முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் போலீஸில் சொல்லி விடுவோம் என்றவுடன், ஒரு புதரில் ஒளித்து வைத்திருந்த சைக்கிளை எடுத்துக் கொடுத்து விட்டான்” என்றான்.

“ஆச்சரியமாக இருக்கிறதே. என்னால் நம்ப முடியவில்லை” என்றேன்.

“உண்மைதான் மாமா. அவனுக்கு தெரிந்த ஒரு சைக்கிள் கடையில் கொடுத்து, எண்ணைய் எல்லாம் போட்டு சைக்கிளை சர்வீஸ் செய்து வைத்திருக்கிறான். இப்போது புதிது போல் பளிச்சென்று இருக்கிறது” என்றான்.

“சரி, ரொம்ப சந்தோஷம். இனிமேல் ஜாக்கிரதையாக இரு” என்று போனை வைத்தேன்.

ஆனால் உள்ளுக்குள் அந்த சந்தேகம் வலுத்தது. திடீரென சைக்கிள் காணாமல் போகிறது. அதை மற்றவன் பார்க்குமாறு இன்னொருவன் ஓட்டிக் கொண்டு போகிறான். பிறகு அவனிடம் கேட்டு திருப்பி வாங்குகிறார்கள். இது தற்செயலாக நடந்ததா, அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

ஒரு வாரம் கழித்து வேறு விஷயமாக செல்வத்துக்குப் போன் செய்தபோது, ஆனந்த் கூடவும் பேசினேன்.

“என்ன ஆனந்த், அந்த சைக்கிள் திருடனை மறுபடியும் எங்காவது பார்த்தாயா?”

“ஓ.. பார்த்தேனே. அவன் எப்பவும் நான் ஸ்கூலில் இருந்து வரும் வழியில்தான் ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பான். தினமும் பார்ப்பேன்”

“அப்படியா, பரவாயில்லை. அவனை வைத்து உன்னுடைய சைக்கிளை துடைத்து புதிது போல் ஆக்கி விட்டாய்” என்றேன்.

“போங்க மாமா, கிண்டல் பண்ணாதீங்க”

“கிண்டல் இல்லை ஆன்ந்த். உண்மையை சொல்கிறேன்”

“மாமா, என்ன சொல்றீங்க” என்று அதிர்ச்சி அடைந்தான்.

“என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்கிறேன். உன் நண்பனுடன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போது, நீயும் அவனும் உன் சைக்கிளைப் பற்றி பேசிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்”

அவன் அமைதியாக இருந்தான்.

“டேய், உன்னோட சைக்கிளைத் திருடன்கூட எடுத்துட்டுப் போக மாட்டான் என்று அவன் சொன்ன போது, அப்படி யாராவது எடுத்துட்டுப் போனால் நல்லது. அதன் பிறகுதான் அப்பா எனக்குப் புது சைக்கிள் வாங்கித் தருவார் என்று சொல்லி இருக்கிறாய். இதை எல்லாம் அவன் காதுபடச் சொல்லி இருக்கிறாய்”.

“அப்படி எல்லாம் இல்லை மாமா” என்றான் தயக்கத்துடன்.

“அது அவனுக்கு ஆசையைத் தூண்டி இருக்கிறது. உன் சைக்கிள் காணாமல் போனால் அதைத் தேடமாட்டார்கள் என்று நினைத்து, சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் எண்ணெய் எல்லாம் போட்டு ரெடி பண்ணி ஒளித்து வைத்திருக்கிறான். உனக்கு வேறு சைக்கிள் வாங்கித் தந்த பிறகு அதை எடுத்து ஓட்டலாம் என்று நினைத்திருக்கிறான். ஆனால் அதற்குள் அதைக் கண்டு பிடித்து கொண்டு வந்து விட்டான் உன் நண்பன்” என்றேன்.

“மாமா, நீங்கள் துப்பறியும் கதையெல்லாம் எழுதுவீர்களா” என்று சிரித்தான்.

“பேச்சை மாற்றாதே. நான் சொன்னது எல்லாம் உண்மைதானே”

“அது வந்து…”

“உன்னுடைய வேலையை மற்றவன் மூலம் செய்து கொள்ளும் உன்னுடைய கெட்டிக்காரத் தனத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்த முறை எப்பொழுதும் சரியாக இருக்காது. விளையாட்டுத்தனமாக இல்லாமல் எச்சரிக்கையாக இரு” என்றேன்.

“சரி மாமா, இதை அப்பாவிடம் சொல்லாதீர்கள்” என்றான்.

“ஆனந்தின் புத்திசாலித் தனத்திற்கு அவன் எப்படியும் ஐஐடியில் இடம் பிடித்து விடுவான். கவலையை விடுங்கள்” என்றேன் செல்வத்திடம்.

Series Navigationபொக்கிஷங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வுஎங்கே அது?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *