இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்

author
1
0 minutes, 5 seconds Read
This entry is part 11 of 16 in the series 3 ஏப்ரல் 2016

முருகபூபதி

இலங்கையில் மூவினத்தவர்களினதும் அரசியல் வாழ்வை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துப்பாக்கியின் வேட்டுக்கள் புரட்டிப்போட்ட சம்பவம் நடந்த வடஇலங்கையின் யாழ்.குடாநாட்டுக்கு வடமேற்கே அமைந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் பற்றி அறிந்தவர்கள் அநேகர்.
1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனின் கரத்திலிருந்த துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா அன்றைய யாழ்ப்பாணம் நகரமேயரை உலகிலிருந்து விடைபெறச்செய்தது.
Late Varathar 01அன்று தொடங்கிய பிரபாகரன் முன்னிலை வகித்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வருவதற்கு ஏறக்குறைய நான்கு தசாப்தங்கள் சென்றன. அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையில் தொடர் எழுதிய அற்புதனும் துப்பாக்கி வேட்டிலேயே விடைபெற்றார்.
இலங்கை அரசியல் வரலாற்றினை உன்னிப்பாக கவனித்தால், சில தமிழ்த்தலைவர்கள் கோயில்களிலும் தேவாலயத்திலும் வழிபடச்சென்றவிடத்து தமது உயிரைக் காணிக்கையாக்கியிருப்பது தெரியவருகிறது.
அவ்வாறே காத்தான்குடி மசூதியில் தொழுகை நடத்தச்சென்ற முஸ்லிம் சகோதரர்களும் துப்பாக்கி வேட்டுக்களுக்கு தமது இன்னுயிரை காணிக்கையாக்கியிருக்கின்றனர்.
அல்பிரட் துரையப்பாவில் தொடங்கி ஜோசப் பரராஜசிங்கம் மகேஸ்வரன் வரையில் இக்காணிக்கை நீடித்திருக்கிறது. இம்மூவரும் கோயில் வளாகத்தில் பரகதியடைந்தாலும் இச்சம்பவங்களின் சூத்திரதாரிகள் இதுவரையில் சட்டத்தின் கையில் சிக்கி சரியான முறையில் நீதியினால் தண்டிக்கப்படவில்லை. பிரபாகரன்தான் துரையப்பாவைக்கொன்றார் என்ற தகவல் காலம் கடந்தே கசிந்தது.
இவ்வாறு அரசியல் ஏடுகளில் பதிவான பொன்னாலையின் சரித்திரத்தை இலக்கியமாக்கிய எம்மில் ஒருவர் பற்றியதே இந்தப்பதிவு.
அவர் தாம் பிறந்து தவழ்ந்த பொன்னாலைக்கிராமம் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார்.
” மிகச்சிறிய கிராமம். அப்போது மிக ஏழைக்கிராமம் என்றுகூடச்சொல்லலாம். ஏழைக் கிராமமாக இருந்தபோதிலும் அதற்கு ஒரு செல்வாக்கும் நல்ல வரலாறும் உண்டு. அந்தப்பெருமையைத்தந்தது பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயம். அந்தச்சுற்றுவட்டாரமெங்கும் மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம்.
ஏதோ ஒரு காலத்தில் அந்தக்கோயிலுக்கு பிரமாண்டமான கட்டிடங்களும் ஏழு வீதிகளும் இருந்ததாகச் சொல்வார்கள். கடைசியாக ஒல்லாந்தர் அந்தக்கோயிலை இடித்து சங்கிலித்தொடராக ஆட்களை நிறுத்தி அந்தக்கற்களைச் சங்கானைக்கும் வேறு இடங்களுக்கும் கொண்டுசென்று வேறு கட்டிடங்கள் கட்டியதாகச் சொல்வார்கள்.
சிறுவயதில் எங்களுடைய விளையாட்டுக்களம் அந்தக் கோயிலும் அதன் வீதிகளும்தான் ” என்று 1928 ஆம் ஆண்டளவில் நான்கு வயதுச்சிறுவனாக இருந்த காலத்தில் அந்தப்பொன்னாலை வரதரதராஜப்பெருமாள் ஆலயம் எவ்வாறு இருந்தது என்று 1991 ஆம் ஆண்டு எழுதுகிறார் அவர்.
இன்று அந்த ஆலயம் 108 அடி உயரமான இராஜகோபுரத்துடனும் புதிய மணிமண்டபத்துடனும் காட்சி அளிக்கிறது.
ஆனால் , அந்தக்காட்சியை காண்பதற்கு அவரும் இல்லை. அந்த இடத்தில் பலியான அல்பிரட் துரையாப்பாவும் இல்லை. அவரை பலிகொண்டவரும் இல்லை. புகலிடத்திலிருந்து நாம் அந்த ஆலயத்தின் தற்போதைய தோற்றத்தையும் அதன் கீர்த்தியையும் இணையத்தில் பார்க்கமுடிகிறது.
—————-
Latevarathar Bookதாம்பிறந்த பொன்னாலை ஊரின் மகிமையை வாசகர்களுக்கு நீண்ட பதிவில் (மல்லிகை – மார்ச் 1991) சொல்லியிருக்கும் அந்த அன்பருக்கும் எனக்கும் இடையிலான இலக்கிய நட்புறவு சாசுவதமானது.
அவருடைய தலைமையில் எனக்கு வரவேற்புக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் 1986 ஆம் ஆண்டு நடந்தது. பின்னர், பல ஆண்டுகள் கடந்து, 1999 இல் கொழும்பில் எனது தலைமையில் அந்த அன்பருக்கு வரவேற்புக்கூட்டம் நடந்தது.
இரண்டையும் ஒழுங்குசெய்தவர் மல்லிகை ஜீவா. அதன்பின்னர் நான்கு ஆண்டுகள் கடந்து 2003 ஆம் ஆண்டு அவருக்கும் எனக்கும் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விருதுகள் கிடைத்தன.
வழங்கியவர் தற்பொழுது பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கா. (2003 இலும் ரணில்தான் பிரதமர்) அந்த அன்பருக்கு அந்த ஆண்டுக்கான சாகித்தியரத்தினா விருது வழங்கப்பட்டது. இலங்கை கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட சாகித்திய விருதுவழங்கும் விழாவுக்கு இந்தியாவிலிருந்து பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பேராசிரியரும் எழுத்தாளருமான கன்னட இலக்கிய மேதை யூ.ஆர். அனந்தமூர்த்தி.
அன்றைய விழாவில் அந்த அன்பருக்கான சாகித்தியரத்தினா விருதுக்குரிய சிறப்புரையை சாகித்திய அமைப்பின் தமிழ்ப்பிரிவுச்செயலாளர் பேராசிரியர் க.அருணாசலம் தமிழில் நிகழ்த்தினார். அரசியல் தலைவர்களும் பௌத்த பிக்குகளும் தமிழ், முஸ்லிம், சிங்கள எழுத்தாளர்களும் நிறைந்திருந்த அந்த மண்டபத்தில் அந்த ஆண்டின் சாகித்தியரத்தினா அமைதியாக அமர்ந்திருந்து பூமாலையையும் விருதையும் சான்றிதழையும் பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்.
மறுநாள் கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் நண்பர் ஸ்ரீதரசிங்கின் இல்லத்தில் இலக்கிய நண்பர்கள் இணைந்து அந்த அன்பருக்கு தேநீர்விருந்துபசாரம் வழங்கினோம்.
அதிர்ந்துபேசத்தெரியாத அந்த அன்பர் ஈழத்தின் மூத்த இலக்கியவாதி. எழுத்தாளர், பதிப்பாளர், இதழ்களின் ஆசிரியர். அத்துடன் ஒரு அச்சகத்தின் அதிபர். எந்தவொரு எழுத்தாளருடனும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
எனக்கு அவரை 1975 ஆம் ஆண்டு முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் மல்லிகைஜீவாதான். அவருடைய ஆனந்தா அச்சகத்திற்கு அழைத்துச்சென்ற ஜீவாவிடம், ” இவர் யார்? ” என்று கேட்டபோது, ” பூபதி இவர்தான் எங்கள் வரதர் ” என்றார்.
அவரை அதற்கு முன்னர் எங்கோ பார்த்ததுபோன்ற நினைவு கனவாக மனதில் விரிந்தது. எங்கள் ஊரில் நான் பாடசாலை மாணவனாக இருந்த காலப்பகுதியில் எமது தாய்மாமனாரிடம் கடற்கரைவீதியில் ஒரு பலசரக்கு அரிசிக்கூப்பன் கடை இருந்தது. அதனை பாலா கடை என்று ஊரில் அழைப்பார்கள். நாம் எமது மாமாவை பாலா மாமா என்போம்.
இலங்கையிலிருக்கும் தமிழ்க்கடைகள், மற்றும் தமிழர்களினால் நடத்தப்படும் அமைப்புகள், கோயில்கள், முதலானவற்றைப்பற்றிய விபரங்களை முகவரிகளுடன் வெளியிட்ட வரதர் பலகுறிப்புகளையும் இலங்கையின் அனைத்துப்பிரதேசதங்களிலும் வதியும் தமிழ் மக்கள் பற்றிய தகவல்களையும் வரிசைக்கிரமமாக தொகுத்தவர்தான் இந்த வரதர்தான் என்பதையும் அன்றைய சந்திப்பில் அறிந்துகொள்ள முடிந்தது. வரதர் பலகுறிப்புகள் என்ற பெரிய தொகுப்பு நூலில் எமது மாமாவின் கடை முகவரியும் அவர் பற்றிய விபரங்களும் இருந்தன.
இலங்கையின் மேற்குக்கரையில் வாழ்ந்த தமிழ்மக்களைப்பற்றிய குறிப்புகளை தேடிவந்து சேகரித்த வரதர் – அந்தக்காலத்தில் பஸ்ஸிலும் ரயிலிலும் கால்நடையாகவும் அலைந்து அலைந்து தகவல் திரட்டி அந்தக்குறிப்புகளை தொகுத்து அழகாக பைண்ட் செய்துவெளியிட்டு எமது தமிழ்மக்களின் பயன்பாட்டுக்கு உதவினார்.
இன்று தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர் வழிகாட்டி நூல்கள் பல ஆண்டுதோறும் வெளியாகின்றன. அவுஸ்திரேலியாவில் வெளியாகும் Yellow Pages முதலான தொகுப்புகளுக்கு ஈடானது வரதரின் பலகுறிப்புகள்.
varathar Book 01அதற்காக அவர் செலவிட்ட நேரம் பெறுமதியானது. அவரிடம் சொந்தமாக ஆனந்தா அச்சகம் யாழ்ப்பாணத்தில் இருந்தது. அதனால் ஆனந்தன் , தேன்மொழி, வெள்ளி, புதினம், அறிவுக்களஞ்சியம் முதலான இதழ்களையும் நடத்தியவர்.
1946 ஆம் ஆண்டளவில் வெளியான மறுமலர்ச்சி என்ற இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம்வகித்தவர். தேன்மொழி இதழுக்கு வரதருடன் இணையாசிரியராக இருந்தவர் மகாகவி உருத்திரமூர்த்தி.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அக்காலத்தில் உந்துசக்தியாக விளங்கிய யாழ். மறுமலர்ச்சிச் சங்கத்திலும் வரதர் இணைந்திருந்தவர். பின்னாளில் பல எழுத்தாளர்களின் நூல்களை பதிப்பித்தும் வெளியிட்டிருக்கிறார்.
எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டை கொழும்பில் நடத்தியபொழுது வெளியிட்ட புதுமை இலக்கியம் மாநாட்டு மலரையும் வரதரே அச்சிட்டுத்தந்தார். அவர் எமது சங்கத்தில் இணைந்திருந்தார் என்று ஜீவாவின் ஒரு குறிப்பு சொல்லியிருந்தாலும், நான் அறிந்தமட்டில் அவருக்கு எமது சங்கத்துடன் அடிப்படையில் தீவிரமான உறவு இருந்ததா என்பது சந்தேகமே. கம்யூனிஸ்டுகள் அதிகம் அங்கம் வகித்த அச்சங்கத்தில் வரதர் அதிகம் ஈடுபாடு காண்பிக்காதுவிட்டாலும், யாழ். இலக்கிய வட்டத்தில் இணைந்திருந்தார். வரதர் முற்போக்கான சிறுகதைகளை எழுதியிருந்தபோதிலும் தன்னை ஒரு முற்போக்குவாதி என்று பிரகடனம் செய்துகொண்டதில்லை. வரதரின் கற்பு என்ற சிறுகதை குறிப்பிடத்தகுந்தது.
1975 ஆம் ஆண்டு முதல் முதலில் நான் அவரைச் சந்தித்தபொழுது எனது முதல் நூலின் பிரதிகள் சிலவற்றை வாங்கி தமது அச்சகத்தில் அமைந்த புத்தகக்கடையில் விற்பனைக்கு வைத்தார். அவற்றை கண்ணாடி அலுமாரியில் காட்சிப்படுத்த முன்னர் ஒரு பிரதியை பணம்கொடுத்து வாங்கினார். ஒராண்டு கழித்து எனது நூலின் பிரதிகள் விற்ற பணத்தை கழிவுகள் எதுவும் இன்றி கையிலே தந்தார். தமிழ் எழுத்தாளன் வாழ்வை நன்கு தெரிந்த எழுத்தாளர் வரதர்.
அவருடன் நான் அதிகம் பேசியதில்லை. ஆனால், அவருடைய அமைதியும் நிதானமும் அவர் காட்டிய பரிவும் முன்மாதிரியானவை. 1983 ஆம் ஆண்டு முற்பகுதியில் எமது சங்கம் கொழும்பில் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒழுங்குசெய்திருந்த ஈழத்து எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சிக்காக படங்கள் சேகரிப்பதற்கு யாழ்ப்பாணம் சென்றவிடத்தில் வரதரிடம் படம் பெற்றபொழுது விழாவுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் தமக்குச்சொல்லுமாறு தெரிவித்தார்.
அவருடைய நற்பண்பை கொழும்பு வந்ததும் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜியிடம் சொன்னேன்.
நூற்றாண்டு விழாவுக்காக சென்னையிலிருந்துவரும் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன் யாழ் வரும்பொழுது தங்குவதற்கு உதவுமாறு பிரேம்ஜி வரதருக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
நான் ரகுநாதனை கல்முனை, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு அழைத்துச்சென்றுவிட்டு, அங்கிருந்து யாழ் திரும்புவதாக நிகழ்ச்சியிருந்தது.
நாம் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட நாளன்று மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் விழா நிகழ்ச்சியிருந்தது. நாம் வந்த வாகனம் முறிகண்டியில் பழுதடைந்து பயணம் தாமதித்தது. வரதர் எமது வரவுக்காக நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு மண்டபத்திற்கு சென்றுவிட்டார்.
நாமும் வரதரின் வண்ணார்பண்ணை வீட்டைச் சென்றடைய தாமதமானது. அங்கு வந்தவுடன் குளித்து உடைமாற்றிக்கொண்டு மண்டபத்திற்கு புறப்படும் தருணம், ரகுநாதன் வரதரின் வீட்டின் சுவரில் இருந்த ஒரு படத்தையே கண்வெட்டாமல் பார்த்து பரவசமடைந்ததுடன் எனக்கும் காண்பித்தார்.
அந்தப்படத்தில் ரகுநாதனின் இளமைக்காலம் தெரிந்தது. அவருடைய மடியில் ஒரு பெண்குழந்தை. ரகுநாதன் அந்தக்குழந்தைக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்கிறார். அந்தப்படம் ரகுநாதன் 1956 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த எமது சங்கத்தின் பாரதி விழாவுக்கு வந்தசமயத்தில் எடுக்கப்பட்டது ரகுநாதனின் மடியில் அமர்ந்து வரதரின் பெண்குழந்தை தமிழ் கற்றது.
அதனைக்காண்பித்த ரகுநாதன், ” தமிழ்நாட்டில் ஈழத்து படைப்புகளை எழுத்தின் ஊடாகவே மனதில் சுமக்கின்றோம். ஆனால், ஈழத்தில் எங்களையே தங்கள் மனதில் இருத்தி தங்கள் இல்லங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் ” என்று பெருமிதம் பொங்கக்கூறினார்.
அன்று திருமதி மகாதேவி வரதர் அவர்கள் எம்மை உபசரித்து வீரசிங்கம் மண்டபத்திற்கு வழிசொல்லி அனுப்பிவைத்தார்.
வரதரைப்பற்றி இந்தப்பதிவை எழுத முற்படுகையில் வரதர் பற்றிய நினைவுகளுக்குள் சஞ்சரிக்கின்றேன்.
கயமை மயக்கம் (சிறுகதை) நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்னா, மலரும் நினைவுகள் , பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் முதலான நூல்களை வரவாக்கியிருக்கும் வரதரை கௌரவிக்கும் பொருட்டு மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான காலப்பகுதியில் ஒரு சிறுகதைப்போட்டியை ஜீவா அறிவித்தார். கதைகளும் வந்தன. எதிர்பாராதவிதமாக போர் உக்கிரமடைந்து ஷெல் வீச்சில் மல்லிகை காரியாலயமும் பாதிக்கப்பட்ட வேளையில் அந்தப்போட்டிக்கு வந்த கதைகளும் எரிந்து சிதிலமாகிவிட்டன. அதன் பின்னர் அந்தப்போட்டி நடக்கவில்லை. இதனால் கவலையுடன் இருந்த ஜீவாவை தேற்றி ஆறுதல் சொன்ன வரதர், ” நீங்களும் அச்சுக்கோப்பாளர் சந்திரசேகரமும் உயிர் தப்பியதே பெரிய விடயம். போட்டியை எப்பொழுது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம்” என்றார்.
ஆனால், அந்தச்சிறுகதைப்போட்டி அதன் பிறகு நடக்கவே இல்லை.
அவ்வேளையில் நான் அவுஸ்திரேலியாவில் இருந்தேன்.
தியாகர் சண்முகம் வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர், பொன்னாலையில் 01-07-1924 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய 65 ஆவது பிறந்த தின விழா 01-07-1989 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒட்டுமடம் வீதியில் சிவலிங்கப்புலியடியில் அமைந்திருந்த இலக்கிய அன்பர்கள் சோமகாந்தன் – பத்மா தம்பதியரின் இல்லத்தில் பெரிய விருந்துபசாரத்துடன் (வடை – பாயாசத்துடன்) நடந்ததாக நெல்லை.க.பேரனின் குறிப்புகள் சொல்கின்றன.
பேராசிரியர் சிவத்தம்பியின் தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சொக்கன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், மல்லிகை ஜீவா, ஏ.ரி. பொன்னுத்துரை, சோ. பத்மநாதன், மௌனகுரு, நீர்வைபொன்னையன், பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங், கோகிலா மகேந்திரன், தெணியான், சாந்தன், நெல்லை க. பேரன், கம்பவாரிதி ஜெயராஜ், ஈழநாடு மாணிக்கம், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் ஆகியோர் உரையாற்றி வரதரை வாழ்த்தியிருக்கிறார்கள்.
இந்தப்பெயர் பட்டியல் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னர் இங்கு குறிப்பிடுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.
இவர்களில் சிலர் இன்று எம்மத்தியில் இல்லை. சிலர் நோய் உபாதைகளுடன் காலத்தை ஓட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் இலக்கியத்தில் — கோட்பாடுகளில் ஒத்த கருத்துள்ளவர்களும் இல்லை. ஆயினும், சகோதர எழுத்தாளனுக்கு பிறந்தநாள் என்றவுடன் ஒன்றுபட்டுச்சென்றுள்ளார்கள். வாழ்த்தியிருக்கிறார்கள்.
அதற்கு வரதரின் இயல்புகள் மாத்திரம் காரணம் அல்ல.
போரின் நெருக்கடி உக்கிரமடைந்திருந்த வேளையிலும் இவர்கள் மத்தியில் நிலவிய சகோதரவாஞ்சையை — போர் முடிவுற்றுள்ள சூழலில் முகநூல் கலாசாரத்தில் மூழ்கி உமிழ்ந்துகொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்கள், ஒரு காலத்தில் ஈழத்து இலக்கிய உலகம் எப்படி இருந்திருக்கிறது ? என்பதை தெரிந்துகொள்ளவும் வேண்டும்.
வரதர் 21-12-2006 ஆம் திகதி மறைந்ததும் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் இலக்கிய நண்பர் கானா. பிரபா தமது வலைப்பதிவில் வரதர் பற்றிய அழகிய சித்திரம் வரைந்திருக்கிறார்.
வரதர் எப்பொழுதும் தகவல் திரட்டி ஆவணப்படுத்தும் இயல்புள்ளவராகவே வாழ்ந்தவர். அதனால்தான் அவரால் பலகுறிப்புகள் மாத்திரமன்றி, மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் அந்தக்கால யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பதையும் அம்மகளின் வாழ்க்கை முறைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
எவரும் தாம் பிறந்த ஊரை மறக்கமாட்டார்கள். வரதரும் அவ்வாறே தமது பொன்னாலை கிராமத்தை உயிர்ப்போடு பல அரிய தகவல்களுடன் ஆவணமாக பதிவுசெய்துள்ளார். வரதர் பிறந்த 1924 ஆம் ஆண்டு காலத்தில் அந்த ஊரை புன்னாலை என்றே அழைத்திருக்கிறார்கள்.
புன்னாலைக்கோயில், புன்னாலைச்சாமி என்றெல்லாம் உரையாடல் வழக்குகள் இருந்திருக்கின்றன. “உந்தப்புன்னாலைச் சாமியாரறிய ” என்று அக்காலத்தில் மக்கள் சத்தியங்கள் (பொய்ச்சத்தியங்கள்) செய்வதும் சாதாரணம் என்கிறார் வரதர்.
அத்தகைய புன்னாலையை, பொன்னாலை என்று பெயர் மாற்றுவதற்கும் தாம் முயன்ற கதையையும் வரதர் சொல்கிறார்.
இன்று பொன்னாலை தான் வழக்கிலிருக்கிறது.
ஆனால், வரதர்தான் எம்மத்தியில் இல்லை.
நண்பர் , பேராசிரியர் மௌனகுரு சொல்வதுபோன்று –
” காலம் தனது கடமையைச்செய்துகொண்டிருக்கிறது.”
—-0—–

Series Navigationவட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்நான்கு கவிதைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    arun says:

    A moving article! Many things are said without being said. Reading in-between the lines- a classic example is this article. Excellent way of writing. what all have been unsaid is equally important as that of what is said. These writings show how our Tamilnadu and tamli writers of Taminadu have become very commercial and focusing on superficial things.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *