நாமே நமக்கு…

This entry is part 5 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கே.எஸ்.சுதாகர்

நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அப்போது அய்ரோப்பாவில் கோடை காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பிரான்சில் எனது பாடசாலை நண்பன் குநேசன் இருக்கின்றான். பிரான்சை நான் முதலில் தெரிவு செய்தது, முதற்கோணல் முற்றும் கோணல் என்றாகிவிட்டது.

வாழ்வில் எத்தனையோ நாட்கள் வருகின்றன, போகின்றன. ஆனால் அன்றையநாள் ஒரு மறக்கமுடியாத நாள் ஆகிவிட்டது.

பிரான்சில் எனது இன்னுமொரு நண்பன் செளந்தர்ராஜன் வீட்டில் ஆரம்பித்த கவலை, பிரயாணம் முழுவதும் தருமனைப் பின் தொடர்ந்த நாய் போலத் துரத்தியது. அதை என் வாழ் நாளில் என்றும் இறக்கி வைக்க முடிந்ததில்லை.

முதல் இரண்டு நாட்களும் பிரான்சில் நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. அங்கே போன பின்னர்தான் செளந்தர்ராஜன், ஸ்ரீபாஸ்கரன் என்று மேலும் இரண்டு பள்ளி நண்பர்கள் இருப்பது தெரியவந்தது. குகநேசன் எங்களை மூன்றாம்நாள் செளந்தர்ராஜனின் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். அங்கே இரவுச் சாப்பாடு. நண்பன் ஸ்ரீபாஸ்கரன் குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தார்கள். படிக்கும் காலங்களில் செளந்தர்ராஜன் ஒரு குறும்புக்காரன். மூக்கைத் துடைத்து அடுத்தவர்களின் மேல் பூசுவான். எச்சிலைத் தொட்டுத் தடவுவான். ஆனால் அவன் அங்கே ஒன்பதாவது வரையும்தான் படித்தான். அதன்பின்னர் வெளிநாடு போய் விட்டான்.

குடியும் கூத்துமாக அன்றைய இரவு செளந்தர்ராஜன் வீட்டில் கழிந்தது. சாப்பாட்டின் பின்னர் கை கழுவுவதற்காக குசினிக்குள் சென்றபோது சுவரில் தொங்கிய அந்தப் படத்தைக் கவனித்தேன். மூன்று முதியவர்களின் படங்களுடன் கிருஷ்ணவேணியின் இளமைக்காலத்துப் படமும் மாலையிட்டு இருந்தன.

வெறி மயக்கத்திலும் திடுக்கிட்டுப் போனேன். இருபது வயதிற்குள் புன்னகை பூத்த முகத்துடன் சுவரில் தொங்கியபடியே கிருஷ்ணவேணி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்ன கிருஷ்ணவேணி இறந்துவிட்டாளா?” ஆச்சரியத்தில் கத்தினேன்.

“ராஜா இங்கே வாடாப்பா… இது கிருஷ்ணவேணிதானே! எப்படி அவளை உங்களுக்குத் தெரியும்? அவளுக்கு என்ன நடந்தது?”

“அவள் எனது மனைவியின் தங்கை” என்றான் செளந்தர்ராஜன்.

நானும் ராஜனும் கதைத்துக் கொண்டு இருக்கும்போது அவனின் மனைவி அங்கே வந்தாள். ராஜன் கதை சொல்வதை திடீரென்று நிறுத்தினான்.

“என்னுடைய தங்கைச்சி அகால மரணமடைந்து விட்டாள்” சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “இஞ்சாருங்கோ இந்த டெஷேற்றை எல்லாருக்கும் குடுங்கோ” என்று ராஜனை அவள் கூட்டிச் சென்றாள். அவளதும் ராஜனதும் முகத்தில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை. அவை செத்துப் பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். எனக்குத்தான் எல்லாம் புதிது.

என்னால் அந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. கிருஷ்ணவேணியின் படத்தைப் பார்த்தபடி நின்றேன்.

நெஞ்சை நிமிர்த்தி, தலை நிமிர்ந்து நேர்கொண்ட பார்வை. பொட்டு வைத்த கள்ளம் கபடமற்ற முகம். புன்னகை பூத்த உதட்டின் வலதுபக்க முடிவிடத்தின் சிறு மச்சம். இரட்டைப் பின்னல் என பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படம் அது.

“வாடா வா… ஐஸ்கிறீம் வட்டிலப்பம் சாப்பிடுவோம்” எனது தோள்களை அணைத்து முன் ஹோலிற்குள் கூட்டிச் சென்றான் ராஜன்.

செளந்தர்ராஜனின் வீட்டைவிட்டுப் புறப்படும்போது எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

“மச்சான்… நீ பேஸ்புக் வச்சிருக்கிறியா?” என்றான் ராஜன். நான் எனது பேஸ்புக் முகவரியை அவனிடம் கொடுத்தேன்.

“எல்லாத்தையும் பேஸ்புக்கிலை போடு. எங்களோடை படிச்ச எல்லாரும் பாக்கட்டும்”

அந்தப் படத்தைப் பார்த்த நேரத்தில் இருந்து என் மனதைக் குடைந்த ஒரே கேள்வி கிருஷ்ணவேணி எப்படி இறந்தாள் என்பதுதான்.

எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான ஒளிவு மறைவுகளும் இருந்ததில்லை. கிருஷ்ணவேணியைப் பற்றி எனக்குத் தெரிந்தளவு மனைவிக்கும் தெரிந்திருந்தது.

கிருஷ்ணவேணி என்னுடைய திருமண பந்தத்தில் வந்த முதல் பெண்.

”ஒவ்வொருவருக்கும் எது எது அமைகின்றதோ அதுவே விதியாகும்” என்கின்றாள் மனைவி.

அன்று இரவு எவ்வளவு முயன்றும் தூக்கம் வர மறுத்தது. கண்ணை இறுக மூடினால் கிருஷ்ணவேணி எதிரில் வந்து நிற்கின்றாள். நித்திரை கொள்வது போல பாசாங்கு செய்தேன். கிருஷ்ணவேணியை நான் எப்பொழுது சந்தித்தேன்?

86ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் புலிகள் இயக்கம், மாற்று இயக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தடை செய்து கொண்டு வந்தது. அந்தக்காலப் பகுதியில் நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். பேராதனை ஏனைய பிரதேசங்களில் இருந்தும் தனிமைப்பட்டு இருந்தது. செய்தித்தாள்கள் வானொலி தவிர்ந்த வேறு ஊடகங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாட்டிலே என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம் அங்கே படித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இருக்கவில்லை.

1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருக்கும். பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் பொறியியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். படித்து முடித்தாயிற்று. வேலையும் ஒன்று கிடைத்துவிட்டது. இனியென்ன திருமணம்தானே!

எனக்கு முதன்முதலாக தையிட்டி என்ற இடத்திலிருந்து ஒரு சம்பந்தம் வந்தது. அப்பாவின் நண்பர் ஒருவர் கொண்டுவந்த சமபந்தம் அது.
எல்லாரும் சொல்வதைப் போல நானும் “எதுக்கு இப்ப இந்தக் கலியாணம்?” என்று பாசாங்கு செய்தேன். அம்மாவும் விடாப்பிடியாக சாதகமும் படமும் வந்திருக்கு என்று சொல்லியபடி இருந்தார். இடையிடையே ‘வடிவான பெட்டை’ என்றார். எனக்கு ஏதாவது காதல் இருக்கா என்று நோட்டம் விடுவதாகவும் இருக்கலாம்.

அம்மாவின் தொணதொணப்பு தாங்காமல், ஒருநாள் அந்தப் படத்தையும் சாதகத்தையும் எடுத்துப் பார்த்தேன்.

ஆகா… வார்த்தைகளால் சொல்ல முடியாத சொப்பன அழகி அவள்.

இருபது வயதிற்குள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி நான் அப்படிச் சொல்லமாட்டேன். அவளில் ஏதோ ஒன்று இருப்பதாகவே உணர்ந்தேன்.

‘ஓம்’ என்று உடனேயே சொல்லிவிட்டேன். அதன் பின்னர் சாதகம் வீட்டிலும் அவளின் புகைப்படம் எனது பொக்கற்றினுள்ளும் இருந்தன.

என்னுடைய சாதகத்தையும் படத்தையும் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களும் பூரண சம்மதம் என்றார்கள். 87 சதவிகிதம் பொருத்தம் என்றார் சாத்திரி.

எல்லாம் கைகூடி வந்ததால், மாவிட்டபுரத் திருவிழாவின்போது இரண்டு குடும்பத்தாரும் சந்திப்பது என்று முடிவெடுத்தோம். அவள் தனது அப்பா அம்மா அண்ணா தம்பியுடன் வந்திருந்தாள். கொழும்பில் வேலை செய்யும் அவளது தந்தையார் திருவிழாவிற்காக லீவில் வந்து நிற்பதாகச் சொன்னார். எங்கள் வீட்டிலிருந்து அம்மா அப்பா தம்பி தங்கை போயிருந்தோம். அம்மா அவளின் காதில் தொங்கியிருந்த தோட்டைப் பிடித்துப் பார்த்து வடிவா இருக்கு என்று சொல்லிக் கொண்டார். முன்பக்கத் தலைமயிரை நெற்றியின் கீழ்புறமாக ஒரு நேர்கோட்டில் வெட்டி தொப்பியும் போட்டிருந்தாள் அவள். நெற்றியில் விபூதி சந்தணம் துலங்கியது. அடிக்கடி தனது தாயாரின் பின்னாலே ஒளிந்து கொண்டாள்.
“கொலுசு போட்டிருக்கிறியா?” என்று அம்மா கேட்க பாவாடையை மெல்லத் தூக்கிக் பாதங்களைக் காட்டினாள். வெள்ளையும் மஞ்சளும் கலந்த ஒரு கலவையில் மின்னி மறைந்தன கால்கள். அங்கே ஒற்றைக் கொலுசு கண் சிமிட்டியது. அம்மா காலில் ஏதாவது ஊனம் இருக்கின்றதா என்று பார்ப்பதற்காகத்தான் கொலுசைக் கேட்டார் என்பதை அவள் அறியாள். நானும் அவளும் ஒருதடவை ‘ஹலோ’ சொல்லிக் கொண்டோம். அவளின் அண்ணாவும் தம்பியும்கூட அவளின் நிறத்தில்தான் இருந்தார்கள். அன்று முழுவதும் சப்பறத் திருவிழாவைப் பார்ப்பதை விட்டு அவளைத்தான் ஒளிந்து ஒளிந்து பார்த்தேன்.

“இனி எப்ப கோயிலுக்கு வருவியள்?”
“நாளைக்குக் காலமை ஃபிறன்ஸ்சோடை வருவேனே!”

தேருக்காக நான் லீவு எடுத்திருந்தேன். மறுநாள் நானும் குகநேசனும் சதீசனுமாக கோவிலுக்குச் சென்றோம். சதீசன் எனது இன்னுமொரு பள்ளி நண்பன். எட்டுக்கால் மண்டபத்தின் உச்சியில் இருந்து நாலைந்து சிநேகிதிகளுடன் கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. நான் கடலை, சோளம் பக்கற்றுகளுடன் எட்டுக்கால் மண்டபத்தின் கடைசிப் படியில் நின்றேன். நண்பர்கள் சற்றுத்தூரத்தில் நின்றார்கள். என்னைக் கண்டதும் ஒவ்வொரு படிக்கட்டுகளாகத் துள்ளித் துள்ளிக் கீழ் இறங்கி வந்தாள். மற்றப் பெண்கள் எல்லாரும் அவளையே பார்த்தபடி நின்றார்கள். நான் கொண்டு சென்றவற்றை அவளிடம் நீட்டினேன். மூன்றாவது படிக்கட்டில் நின்று அதை வாங்கிக் கொண்டாள். “நில்லுங்கோ வாறன்” சொல்லிவிட்டு படிக்கட்டுகள்மீது தாவி ஓடினாள். திரும்பி வந்தபோது அவளின் கைகளில் ‘தும்புமுட்டாஸ்’ இருந்தது. அதை வாங்கிக் கொள்ளும் சாட்டில் என் கைகள் அவளைத் தீண்டின. வெட்கத்தில் என்னைப் பார்த்துவிட்டு ஓடிச் சென்றாள்.

“கடலைக் கொட்டைக்கு தும்புமுட்டாஸ்… உம்” என்றார்கள் நண்பர்கள்.

முதலில் கலியாண எழுத்து வைப்பதாக இருந்தது. அவள் கொம்பியூட்டர் படிப்பிற்கு போய்க் கொண்டிருந்தாள். நான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன்.

இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் மதியம் இரண்டுமணி இருக்கும், வீட்டின் முன்னால் சில பெண்களின் கலகலப்புக் குரல்கள் கேட்டன. ‘கிருஷ்ணவேணி’ என்று கத்திவிட்டு அவர்கள் சைக்கிளில் ஓடினார்கள். வெளியே சென்று பார்த்தபோது அவர்களுள் கிருஷணவேணியும் இருந்ததைக் கண்டேன்.

ஒருநாள் வேலை முடிந்து வீடு வந்தபோது, வீடு என்றுமில்லாதவாறு அமைதியாக இருந்தது. தங்கை ஒரு கதிரையில் இருந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கலியாணம் குழம்பிவிட்டதாக அம்மா குண்டைத் தூக்கிப் போட்டார்.

இயக்கம் ஒன்றில் இருந்தாள்; கூட்டங்களுக்குப் போய் வந்தாள்; கொடி பிடித்தாள்; பயிற்சி பெற்றாள் – இவைதான் அவள்மீதான குற்றச்சாட்டுகள்.

அப்பா தன் நண்பன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்று கொதித்தெழுந்தார். இன்னும் இரண்டுகிழமையிலை எழுத்து, அதுக்குள்ளை இப்படியாப் போச்சு என்று அம்மா மூக்கால் அழுதார்.

என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டார்கள். கேட்டுவிட்டு,
“உனக்கொரு தங்கை இருக்கின்றாள். அவளைப் பற்றியும் யோசிக்க வேண்டும்” என்றார்கள். நான் அவளைத்தான் கலியாணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி நான் நடந்து கொள்ளவில்லை. உங்களின் விருப்பப்படியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

பிறிதொருநாள் அப்பாவின் நண்பர் மீண்டும் வந்தார். எப்போதும் அவருடன் கலகலப்பாகப் பேசும் அப்பா, அன்று அவருடன் முகம் கொடுத்துக் கதைக்கவில்லை. “நான் உதிலை கோயிலுக்குப் போட்டு வாறன்” அம்மாவிற்கு ரகசியமாகச் சொல்லிவிட்டு அருகில் இருந்த கோவிலுக்குப் போய்விட்டார். அம்மாவும் வேண்டா வெறுப்பாகவே அவருடன் நடந்து கொண்டார். அவர் கேட்டதற்கெல்லாம் அம்மா மெளனம் சாதித்தார்.

”ஊர் மக்களுடைய வேலை எல்லாத்தையும் தன்னுடைய தலையில் போட்டுக் கொள்ளுவாள். சமூகசேவை, கோயில்பணி எதுவெண்டாலும் முன்னுக்கு நிண்டு செய்வாள். அவள் ஒரு மான்குட்டி போல” தனக்குள் புற்புறுத்துக் கொண்டே எழுந்து போய் விட்டார் அவர்.

எல்லாம் நன்மைக்குத்தான். இதைவிட இன்னும் எத்தனையோ நல்ல சம்பந்தங்கள் வரும் என்று பெற்றோர் அந்தச் சம்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

வேலை செய்யும் இடத்தில்கூட எல்லாரும் ஒளித்துப் பிடித்தே விளையாடினார்கள். இந்தியன் ஆமி வரும். புலிகள் வருவார்கள். ஈ.பி.டி.பி வருவார்கள். அடிக்கடி மாநாடு நடத்துவார்கள். எல்லாரும் ஒரே நேரத்தில் வந்தது கிடையாது. கள்ள எண்ணத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார்கள்.

எல்லாம் இப்படி நடந்து கொண்டிருக்கும்போது பலாலியைச் சுற்றியிருந்த கிராமத்தவர்கள் எல்லாரும் தொண்ணூறுகளின் மத்தியில் இடம்பெயர்ந்து போனோம். இடம்பெயர்ந்திருந்த காலங்களில் மூன்று சம்பந்தங்கள் வந்து, ஆரம்ப நிலையிலேயே குழம்பிப் போய்விட்டன. அய்ந்தாவது தடவைதான் சரிவந்தது. எல்லாருக்கும் முதல் தடவையிலேயே கலியாணம் அமைந்து விடுவதில்லை.

வாழ்க்கைப் போராட்டத்தில் ‘கிருஷ்ணவேணி’ என்ற பாத்திரம் மெல்ல மெல்லக் கரைந்து போய்விட்டது.

மறுநாள் காலையில் I –pad ஐத் திறந்தபோது ராஜன் என்னுடன் இணைவதற்கான விண்ணப்பத்தை அனுப்பியிருந்ததைப் பார்த்தேன். இணைந்த மறுவினாடி எனது பேஸ்புக்கிற்கு ஒரு இணைப்பு செய்தியாக வந்திருந்தது. “பேப்பரில் அந்நாளில் வந்த செய்தி ஒன்றினை இணைத்துள்ளேன். இதுபற்றி மேலதிக விபரங்களை என்னிடமோ மனைவியிடமோ கேட்க வேண்டாம்” என்று ஒரு மர்ம முடிச்சையும் போட்டிருந்தான் ராஜன்.

புதர்ப்பற்றைக்குள் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது ஒரு பெண்ணின் உடல். பாதங்கள் பற்றைக்குள் மறைந்திருந்தன. உடலும் முகமும் ஊதிப் பருத்து, ஆடைகள் கலைந்து அம்மணமாக, விழிகள் நிலை குத்தி இறுதிவரை மானத்தைக் காப்பாற்றப் போராடியதற்கான முகக்கீறல்களுடன் அந்த உடல் இருந்தது. உடலில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டிருந்த அடையாளங்கள் வெளித் தெரிந்தன.

‘வீமன்காம்ம் கொலணி புதர்ப்பறைக்குள்ளிருந்த அந்த உடல், தையிட்டியைச் சேர்ந்த சதாசிவம் கிருஷ்ணவேணி என்று தெரிய வருகின்றது. கடந்தவாரம் இயக்கம் ஒன்றினால் அவள் கடத்திச் செல்லப்பட்டிருந்தாள்…’ என்று தொடர்ந்தது செய்தி.

“இவள் கிருஷ்ணவேணி இல்லை” மனம் கத்தியது.

மனைவியைக் கூப்பிட்டு அந்தப் படத்தையும் செய்தியையும் காட்டினேன். கூர்ந்து அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அவள் போய்விட்டாள்.

சிறிது நேரத்தில் குகநேசன் தேநீருடன் எனது அறைக்குள் வந்தான். எனக்கு ஒன்றும் சொல்லாமல் போன மனைவி, குகநேசனிடம் சேதி சொல்லி அவனை அனுப்பியிருந்தாள். அவன் என் காதிற்குள் குனிந்து, இரகசியமாக ஒரு இயக்கத்தின் பெயரைச் சொல்லி, பின் சத்தமாக
“எல்லாம் அவங்கட வேலைதான் மச்சான்” என்றான்.
“பிரான்ஸ் வந்தாப்போலைதான் எனக்கும் எல்லாமே தெரிஞ்சது. ராஜன் தான் எல்லாவற்றையும் சொன்னான். அவன் தானே உனக்கு கிருஷ்ணவேணியை திருமணம் பேசவும் ஒழுங்கு செய்தவன்.”

நீண்ட மெளனம். அந்த மெளனத்தின் பின்னால் எத்தனையோ நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன.

“கிருஷ்ணவேணி ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தாள். ராஜன் இன்னொரு இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தான். ராஜனிட்டை வந்து போன இயக்கப்பெடியன்களிலை ஒருத்தன் கிருஷ்ணவேணியிலை கண் போட்டிட்டான்.

அவள அவனுக்கு மறுப்புச் சொல்லியிருக்கிறாள். காத்திருந்து ஒருநாள் கடத்திக் கொண்டு போய் றேப் பண்ணி சாக்காட்டிப் போட்டான்கள். இப்படித்தான் எனக்கு ராஜன் சொன்னான்” என்றான் குகநேசன்.

ஒருவேளை நான் அவளை முதல் தடவையிலே திருமணம் செய்திருந்தால், இவை எல்லாம் நடந்திருக்குமா? நெஞ்சு வலித்தது. என்னையும் அறியாமல் உதடுகள் துடிக்கின்றன.

கிருஷ்ணவேணியை சிங்கள இராணுவம் கொல்லவில்லை. ஆயுதம் எடுத்தோம். நாமே நமக்கு எதிரியானோம். இவ்வளவு கொடூரமாக அவளைக் கொல்வதற்கு அவள் செய்த குற்றமென்ன? யாரிடம் இதற்கான நீதியை நான் கேட்பேன்.

Series Navigationஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்வியாழனுக்கு அப்பால்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *