‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !

This entry is part 3 of 10 in the series 8 மே 2016

 

 

மேற்கண்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் அதங்கோடு அனிஷ்குமார் . குமரி மாவட்டம்

அதங்கோட்டில் பிறந்த இவர் தற்போது பெரம்பலூர்க் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப்

பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘ ஆசைக்கு வறுமை இல்லை ‘  ,  ‘ நிறங்களின் பேராசைக்காரர்கள் ‘ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். எழுத்துக் களம் , இலக்கிய விருது வழங்கி இவரைச் சிறப்பித்துள்ளது.

கவிதைகளுக்கும் பரிசுகள் பெற்றுள்ளார்.

‘ சொற்கள் — எதிர்ச்சொற்கள் ‘ என்ற இக்கட்டுரைத் தொகுப்பில் 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலான கட்டுரைகள்  , ‘ நாளை விடியும்’ இதழில் வெளிவந்தவை.

சமூக நோக்கில் பெண்ணியம் சார்ந்தும் ,இலக்கிய நோக்கில் கவிதை விமர்சனப் பார்வையும்

இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. நூலாசிரியரின் வாசிப்பு அனுபவம் பரந்துபட்டுள்ளது மிகவும்

மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்க் கவிதைகளில் ஒலிக்கும் பெண் குரல்கள் சில விமர்சிக்கப்படுகின்றன. ” பெண் எழுத்தின் இலக்கு

ஆண்களைப் புறந்தள்ளும் செயல்பாடாகப் பார்க்கப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும் ” என்ற கருத்து

இவர் பார்வையைச் செம்மைப்படுத்துகிறது.

பெரும்பாலும்

தனக்குள்ளாகவே வசிக்க

நேரும்  நானும் என் மொழியும்

சற்று கடுமையாகவே வெளிப்படக்கூடும்

என்றைகேனும்

— என்ற சல்மாவின் எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளார் அனிஷ்குமார்.

பூனைகளிடமிருந்து எலிகளுக்கு விடுதலையா எனும் பொருளில் பெரியார் பேசியதை அனிஷ்குமார்

நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

” கற்பு பற்றிப் பேசும் போதெல்லாம் குடும்பம் எனும் கொடூர அமைப்பின் இருப்பு ஏற்படுத்தும் வலி

பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அதைப் பேசாமல் விடுவதுகூட ஆணாதிக்கப் போக்காகும் . ” என்று

அனிஷ்குமார் சொல்லும் போது , குடும்பமின்மை கூட கொடூரத்தின் பக்கம் வந்து நிற்பதை நாம் சிந்திக்க

முடிகிறது.

‘ தமிழ்த் திரை வெளியில் பொண்ணுடல் ‘ என்ற தலைப்பில் ஓர் அலசல் காணப்படுகிறது. ” இன்று

முதல் இரவு . நீ [ பெண் ] என் இளமைக்கு உணவு ” எனும் வரிகள் நெருடுகின்றன என்கிறார் அனிஷ்.

வணிக நோக்கமே இதற்குக் காரணம்.

” ஒரு விபசாரிக்குத் தேவை கவிதை அல்ல ; தண்டனை அல்ல ; வாழ்க்கை ” என்கிறார் இங்குலாப்.

பாலியல் தொழிலாளர்கள் மீது சமகால ஊடகங்கள் நிகழ்த்தும் வன்முறையின் கொடூரம் மிக எளிதாகப்

புறக்கணிக்கப்படுகிறது என்கிறார் அனிஷ் .  ஒருவரை ஒருவர் [ ஆண் – பெண் ] ஆளாமல் , ஒருவரை

ஒருவர் புரிந்து கொள்ளும் வாழ்வியல் முறையே தேவை என்னும் கட்டுரையாளரின் கூற்று ஏற்கக்கூடியது

தான்.

‘ நம் முன் நிற்கும் கேள்விகள் ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. தில்லிப் பெண் வன்புணர்ச்சி

இதில் சுட்டப்படுகிறது. சோகன் லால் பரத் வால்மீகி அருணாவிற்கு இழைத்த கொடுமையும் நம்மை

நிலை குலைய வைக்கிறது.

” எப்போது ஒருவர் தான் அடிமையாக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறாரோ அப்போதே

அடிமை நிலையைக் கடக்கிறார். ” என்று மார்கிரட் ஆட்வுட் கூற்று நம் கவனத்தைக் கவர்கிறது.

ஆதிக்கச் சொற்கள் இருக்கும் வரைக்கும் அதற்கான எதிர்ச்சொற்கள் இருந்தே தீரும் என்கிறார் அனிஷ்.

புத்தகத்தின் தலைப்பு இங்கு விளக்கப்படுகிறது.

கமலாதாஸ் கவிதைகள் பற்றிய சில குறிப்புகள் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. ‘ என் கதை ‘

என்ற இக்கவிஞரின் வாழ்க்கை வரலாறு இந்திய சமூக இலக்கிய வெளியைக் கலவரப்படுத்தும் கலகக்

குரலாகவே இன்றளவும் கருதப்படுகிறது என்கிறார் அனிஷ்குமார் .

கண்ணா

நான் உருகிக்கொண்டிருக்கிறேன்

உருகிக்கொண்டிருக்கிறேன்

உருகிக்கொண்டிருக்கிறேன்

எங்கும் நீயன்றி வேறெதுவுமில்லை

—- என்று வித்தியாசமாக , காதல் வயப்பட்ட கமலாதாஸ் குரலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

யமுனா இராசேந்திரன் மொழிபெயர்த்த கவிதை வரிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. மொத்தத்தில்

அனிஷ்குமாரின் இப்புத்தகம் பெண்ணியம் சார்ந்த திடமான குரலாக ஒலிக்கிறது. [ வெளியீடு : கோவை

மயூரா பதிப்பகம் , பதிப்பு : மார்ச் 2016 ,பக்கங்கள் 106 , விலை : 85 ]

Series Navigationநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4உரிமையில் ஒன்றானோம்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *