உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’

This entry is part 12 of 12 in the series 22 மே 2016

கே.எஸ்.சுதாகர்

 

வட துருவ நாடான பின்லாந்தின் – பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது.

 

ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல நாவல்களைத் தந்தது.

என் இளமைக்காலத்தில் பல வீரகேசரிப்பிரசுர நாவல்களைப் படித்திருக்கின்றேன். நாவல்களின் சாரம் என் நினைவில் இல்லாவிடினும், நாவல்களின் பெயர்கள் என் நினைவில் நிழலாடுகின்றன. அந்த நாவல்களில் ‘அந்தரங்க கீதம்’, ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவல்களை எழுதிய உதயணன் என்பவர் இந்த நூலின் ஆசிரியர். இராமலிங்கம் சிவலிங்கம் என்னும் பெயருடைய இவர் அன்றிலிருந்து இன்றுவரை ‘உதயணன்’ என்ற புனைபெயரில் எழுதி வருகின்றார். மூத்த எழுத்தாளரான இவர், ஈழ இலக்கியத்தின் முக்கிய சஞ்சிகையான ‘கலைச்செல்வி’யை சிற்பியுடன் ஆரம்பித்து நடத்தியவர்.

 

’பொன்னான மலரல்லவோ’, ’அந்தரங்க கீதம்’ என்பவற்றைவிட, ’கலேவலா’ – பின்லாந்தின் தேசிய காவியம் கவிதைநடைத் தமிழ் மொழிபெயர்ப்பு, உரைநடையில் ‘கலேவலா’, மற்றும் ’உங்கள் தீர்ப்பு என்ன?’, ’பிரிந்தவர் பேசினால்’ என்ற இரண்டு சிறுகதைத்தொகுப்புகளையும் அவர் மேலும் வெளியிட்டுள்ளார் என்ற தகவலையும் சொன்னார்.

 

இனி பின்லாந்தின் பசுமை நினைவுகள்…

– ENDLESS MEMORIES OF FINLAND –

 

ஒருவர் எவ்வளவுதான் நிரம்பிய அறிவைப் பெற்ற போதிலும், அவரின் எழுத்துநடை சரிவர அமையாதுவிடில் அவரது படைப்பு வாசகனை வாசிப்பதற்குத் தூண்டாது. அ.முத்துலிங்கத்தின் அங்கதச்சுவைக்கு இணையாக வாசகரை கவர்ந்து இழுக்கும் நகைச்சுவை உணர்வுடன்கூடிய எழுத்து இவருடையது, அடுத்தவரை நோகடிக்காத உரத்த தொனியில்லாத விறுவிறுப்பான நடை – புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை.

 

கனடாவில் பி.ஜெ.டிலிப்குமார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘தாய்வீடு’ (www.thaiveedu.com) பத்திரிகையில் தொடராக வெளிவந்த 45 கட்டுரைகளின் தொகுப்பு இது.

 

1955இல் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் தமிழ் கற்பித்த ஆசிரியர், 1983 இல் இலங்கையில் நடந்த இனக்கலவரங்களின் கொடுமையில் இருந்து தப்பித்து பின்லாந்து செல்கின்றார். பின்லாந்தில் குடியேறிய முதல் தமிழர் பட்டியலில் இடம்பெறுகின்றார். அங்கே இருபத்தைந்து வருடங்கள் அஞ்ஞாதவாசம் புரிகின்றார். அந்தக் காலத்தில் அவர் அங்கே சும்மா இருந்துவிடவில்லை. ’கலேவலா’ என்ற பின்லாந்தின் தேசிய காவியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கின்றார்.

 

பேராசிரியர் அஸ்கோ பாப்பொலா, இவரை ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆசிய ஆபிரிக்க கல்வி மையத்தில் தமிழ் மொழியைக் கற்பிக்க உதவி புரிகின்றார். அங்கே மீண்டும் 1986 இல் இருந்து 2005 வரை தமிழ் போதிக்கின்றார். தற்போது ஓய்வுபெற்ற பேராசிரியர் அஸ்கோ பாப்பொலா இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

 

உதயணன் தனது முன்னுரையில்,

|எப்படியான சூழ்நிலையில் எப்படியான மனநிலையில் பின்லாந்தை விட்டுக் கனடாவுக்குப் புறப்பட்டோம் என்று இந்நூலின் கடைசிக் கட்டுரையில் எழுதி இருக்கின்றேன்.| என்று குறிப்பிட்டிருந்தார். என் மனம் அவசர அவசரமாக இறுதிக் கட்டுரைக்குப் பாய்கிறது.

 

அங்கே உலகளவில் பெரும்புகழ் பெற்ற பின்லாந்து எழுத்தாளர் மிக்கா வல்தரி பற்றியும், அவர் எழுதிய ‘சினுஹே என்னும் எகிப்தியன்’ என்ற சரித்திர நாவல் பற்றியும், இந்த நாவலை தமிழுக்கு மொழிபெயர்க்க எடுத்த முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். முயற்சி தடைப்படுகின்றது. மனம் சஞ்சலம் கொள்கின்றது மூன்றில் ஒரு பாகம் நிறைவுற்ற நிலையில், ஏன் அவர் கனடா செல்கின்றார் என்பதை நீங்களே புத்தகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

 

|கலங்கிய குளத்தின் சுவடாக, குழம்பிய கனவின் நினைவாக ‘சினுஹே’ என்னுள் வாழ்கின்றது.” என்று முடிக்கின்றார்.

 

கலங்கிய கண்களுடன், மீண்டும் நான் முதல் கட்டுரையில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.

 

இவரது பேனா, இவர் பின்லாந்து நாட்டுக்குள் நுழைந்தது முதல் அந்த நாட்டை விட்டு வெளியேறும் வரை எழுதிச் செல்கின்றது.

 

பின்லாந்து நாட்டைப் பற்றியும், அங்குள்ள மக்கள் அவர்கள்தம் வாழ்க்கை முறை பற்றியும் சொல்கின்றார். அங்குள்ள இயற்கைக் காட்சிகள், மலைகள், ஏரிகள், காட்டு வளம், காகித ஆலைகள் பற்றியெல்லாம் விவரித்துக் கொண்டே செல்கின்றார்.

 

|பின்லாந்து மக்கள் மாசிலா மனமுடையவர்கள். மனித மனங்களை மதிக்கும் மரியாதை தெரிந்த மரபுடையவர்கள். உள்ளத்தில் குடிபுகுந்தால் உயிரையே தருவார்கள்| என்கின்றார் இவர். இப்படிப்பட்ட மக்கள், ஒரு காலத்தில் லஞ்சம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்திருக்கின்றார்கள் என்பதில் வியப்பேதும் இல்லை.

 

இந்தப் புத்தகத்தில் மாறிற் ஆத்தரில்லா (செஞ்சிலுவைசங்க நிர்வாகி), லொயிட் சுவான்ஸ், அஸ்கோ பார்பொலா (Prof Asko Parpola) என்பவர்கள் அடிக்கடி வந்து போகும் முக்கியமான பாத்திரங்கள்.

 

இதில் பேராசிரியர் அஸ்கோ பார்பொலா பற்றி சில விசேடமான தகவல்களைக் குறிப்பிடல் வேண்டும். முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தமிழ்மொழி செம்மொழி விருதினை முதன் முதல் பெற்றவர் இவர்தான். இந்தியத் தொன்மவியல் துறையின் சிறப்புப் பேராசிரியராக ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க ஆய்வு மையத்தில் வேலை செய்யும்போது செய்த ஆய்வுகளுக்காக இவர் இந்த விருதினைப் பெற்றார். மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம், உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ ஆகிய மூன்று தமிழ் நூல்களையும் பின்னிஸ் மொழிக்குக் கொண்டு வந்தார். உதயணன் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்ததுடன், பேராசிரியரின் இந்த மொழிமாற்றும் செயலுக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.

 

உதயணன் அங்கிருக்கும் காலத்தில், ‘கலேவலா’ என்ற பின்லாந்தின் தேசிய காவியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். ‘கலேவலா’ என்றால் பின்லாந்தியரின் மூத்த குடிகள் (கலேவா இனத்தவர்) வாழ்ந்த இடம் என்பதைக் குறிக்கும். யாப்பு முறையில் இருந்த இந்தக் காவியத்தை, எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வகையில்  பின்னர் உரைநடையிலும் வெளியிட்டார். ‘உரைநடையில் கலேவலா’ என்ற இந்த நூல் 1999 இல் இலங்கை சாகித்திய விருது பெற்றது.

 

’சவுனா’ (sauna) என்னும் நீராவிக்குளியல் பின்லாந்தின் கலாசாரம். சவுனா என்னும் வார்த்தை உலகமொழிகளுக்கு பின்லாந்து வழங்கிய ஒரு கொடை. இதைப்பற்றி ஒரு அதிகாரத்தில் விளக்கிச் செல்கின்றார் ஆசிரியர்.

 

இந்தப் புத்தகத்தில் இருக்கும் சில சுவையான சம்பவங்களில் மாதிரிக்கு சில வகையறாக்களை எடுத்து விடுகின்றேன்.

 

பின்லாந்தின் எட்டாவது ஜனாதிபதி மன்னர் உர்ஹோ கெக்கொனென்  (urho Kekkonen) பற்றிய ஒரு சுவையான சம்பவம். இது வெளிநாட்டவருக்கான பின்னிஷ் பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இவர் ஒருதடவை பின்லாந்தின் கிராமங்களை தரிசித்து அங்குள்ள மக்களைச் சந்திக்க விரும்பினார். பெரிய நாடு, சனத்தொகை குறைவு. ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும். இடையே தங்குமிட வசதிகள் எதுவும் இல்லை. ஒரு முதிய தம்பதியினரின் வீட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கே சிறிது நேரம் இளைப்பாறி செல்ல விரும்பினார். குறிப்பிட்ட நாளில் மன்னர் குழுவினரை வரவேற்று பெரும் தடல்புடலான விருந்துபசாரம் செய்தார்கள் அந்த முதிய தம்பதியினர். மன்னர் கோப்பியை எடுத்துக் கப்பினுள் ஊற்றும்போது, கோப்பியில் சிறிதளவு விலையுயர்ந்த  மேசைவிரிப்பின்மீது சிந்திவிட்டது. மன்னர் பதறிக் கவலைப்பட்டபோது அந்த முதிய பெண்மணி, ”இது என்ன பெரிய மேசை விரிப்பு, இது போனால் இன்னொன்று… நீங்கள் கவலைப்படாமல் கோப்பியை அருந்துங்கள்” என்று சமாதானம் செய்தார். எல்லோரும் கோப்பி சிற்றுண்டிகளை எடுத்துக் கொண்டதும், வீட்டின் முதியவர் கடைசியாக வந்து கோப்பியை ஊற்றும்போது அவரும் மேசை விரிப்பில் சிந்திவிட்டார். இப்பொழுது அந்த முதிய பெண்மணிக்கு சினம் தலைக்குமேல் ஏறி கோபம் அடைந்து “இங்கை பார் அடுத்த முட்டாளை” என்று அவளையறியாமல் சொல்லிவிட்டாள். இதை ஒருவரும் கவனிக்கவில்லை. விருந்து சிறப்பாக நடந்து முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். அடுத்தவாரம் அந்த முதியபெண்மணிக்கு ஒரு பார்சல் அனுப்பியவர் பெயரின்றி வந்தது. உள்ளே மிகமிக விலையுயர்ந்த மேசை விரிப்பு. கூடவே ஒரு சிறு காகிதத்தில், “இது அந்த முதலாவது முட்டாளின் அன்பளிப்பு” என்றிருந்தது.

 

இன்னொரு சம்பவம். நாவலப்பிட்டியில் இவர் ஆசிரியராக இருந்தபொழுது சக ஆசிரியருக்கு நடந்தது. “இன்றைக்கு நாங்கள் அந்தமான், நிக்கோபார் தீவுகளைப்பற்றி படிக்கப் போகின்றோம்” என்று ஆசிரியர் தொடங்க, மாணவன் ஒருவன் எழுந்து நின்று “அது எனக்குத் தெரியுமே! இராமாயணத்தில் வரும்” என்றானாம். “எங்கே சொல் பார்க்கலாம்” என்று ஆசிரியர் சொல்ல, “சீதை தனக்கு முன்னால் நின்ற மாயமானைப் பிடித்துத் தரும்படி இராமரிடம் கேட்டாள். இராமர் மானைத் துரத்திக் கொண்டு போனார். மான் இராமரை அலைக்கழித்துவிட்டு மறைந்து கொண்டது. இராமர் அங்கே நின்ற ஒருவனைக் கை தட்டிக் கூப்பிட்டு. |அங்கே ’அந்தமான்’ ’நிற்கோ பார்’| என்று கேட்டார். சரிதானே சேர்”

 

இப்படியாக பல சுவையான சம்பவங்களால் நிறைந்து செல்கின்றது இந்தப் பசுமை நினைவுகள். ஒரு குறை – புத்தகத்தில் இருக்கும் அத்தனை படங்களும் கறுப்பு – வெள்ளை. அழகான பின்லாந்தையும் அதன் இயற்கைக் காட்சிகளையும்  வர்ணப்படங்களில் பார்த்து இரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

’காலம்’ பத்திரிகையின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் அவர்கள் இந்த நூலை அறிமுகம் செய்யும்போது ஒரு இடத்தில்,

|என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய பேராசிரியர் அஸ்கோ பார்பெலாவின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் எழும்பி நின்று சொன்னால் நல்லது என்பது போல உதயணனின் மொழிநடை இருந்தது| என்கின்றார்.

 

எனக்கு இவரின் ஒவ்வொரு கட்டுரைகளைப் படிக்கும்போதும், எழுந்து நின்று ‘நல்லா இருக்கின்றது’ என்று சொல்லவேண்டும் போல இருக்கின்றது. நீங்களும் ஏதாவது சொல்ல விரும்பினால் Rama.sivalingam@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.  அவ்வளவு பவ்வியமான எழுத்து.

 

 

Series Navigationகாப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *