முருகபூபதி
” இனியும் அந்தப்புறா வந்தால் அதன் மூக்கில் விக்ஸ் தடவுவேன்“
அந்த மூன்றரை வயதுக்குழந்தை சற்று உரத்தகுரலில் சொன்னது.
” புறாவுக்கு என்ன நடந்தது ? அதற்கு தடிமன் வந்துவிட்டதோ ?” என்று யோசித்தேன்.
சிட்னியில் பிரமாண்டமான கட்டிடங்கள் நிரம்பிய பரமட்டா என்னும் இடத்தில் அமைந்திருந்த ஒரு பாதுகாப்பான மாடிக் குடியிருப்பில்தான் எனக்கு அந்த யோசனை பிறந்தது. பரமட்டா ரயில் நிலையத்திற்குச் சமீபமாக அமைந்த அடக்குமாடித் தொடர் குடியிருப்புக்கு அருகில் பொலிஸ் தலைமையகத்தின் கட்டிடத்தொகுதி.
சமீபத்தில்தான் அவ்விடத்தில் துப்பாக்கிச்சூடும் நடந்திருக்கிறது.
ஒரு தீவிரவாதி ஒரு பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றதையடுத்து அந்த தீவிரவாதியும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அதன்பின்னர் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அறிந்துகொண்டேன்.
அந்தப்பகுதியில் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் மற்றுமொரு மக்கள் குடியிருப்பு மாடிக்கட்டிடம். சில நாட்கள் நான் அங்கு தங்கியிருந்தமைக்கு சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் காரணம்.
எனது பத்திகள் சிலவற்றிலும் நினைவுக்கோலங்கள் தொகுப்பிலும் அடிக்கடி வரும் முருகானந்தன் என்ற எனது மச்சான் (தாய்மாமா மகன்) தமிழ்நாட்டிலிருந்து தனது மனைவியுடன் பரமட்டாவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அனைவரையும் பார்க்கவேண்டும்.
எந்தவொரு பயணத்திலும் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்துவது எனது இயல்பு.
கவிஞர் அம்பியின் கொஞ்சும் தமிழ் நூலில் நூற்றுக்கணக்கான பிரதிகள் பல வருடகாலமாக சென்னையில் முடங்கி துயில் கொள்வதாகவும் மேலும் சிலரது நூல்களும் அத்தகைய சிறை வாழ்க்கை வாழ்வதாகவும் அறியக்கிடைத்தது. அவற்றை சிறை மீட்க அம்பிக்கு உதவவேண்டும்.
ஏறினால் கட்டில் இறங்கினால் சக்கர நாற்காலி என்று கடந்த சிலவருடங்களாக வீட்டினுள் முடங்கியிருந்து மனதளவில் நனவிடை தோய்ந்துகொண்டிருக்கும் மூத்த கவிஞர் அம்பியையும் பார்க்கவேண்டும்.
இறுதியாக சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் சந்தித்த எமது தாய் வழி உறவுகள் கனடாவிலிருந்து சிட்னிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களையும் சந்திக்கவேண்டும்.
எதிர்வரும் ஜூன், ஓகஸ்ட் மாதங்களில் எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கன்பரா, குவின்ஸ்லாந்து கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடலை சிட்னியில் வதியும் சங்க உறுப்பினர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளுடன் நடத்தவேண்டும்.
சில வானொலி நேர்காணல்களுக்குச்செல்லவேண்டும்.
நான் எழுதிவரும் பெண்ணிய ஆளுமைகள் தொடர் பத்தி தொடர்பாக மூத்த இலக்கியவாதி திருமதி பாலம் லக்ஷ்மணன் அம்மாவுடன் உரையாடவேண்டும்.
இலங்கையிலிருந்து வந்திருக்கும் ஞானம் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரன் தம்பதியருடன் கலந்துரையாடவேண்டும்.
சிட்னி – ஓபன் பூங்காவில் எனது பாசமலர் தங்கை ஜெயசக்தி ஒழுங்குசெய்திருந்த இலக்கிய ஒன்றுகூடல் விருந்தில் கலந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு பல வேண்டும்கள் வேண்டுதலாகியிருந்தன.
இந்த வேண்டுதலுக்குள் அந்த பரமட்டா மாடிக்குடியிருப்பின் பல்கணியில் தனது முட்டையை ஈன்று குஞ்சுபொரித்த முகம் தெரியாத அந்த சமாதானப்புறாவுக்கும் அதனால் அச்சுறுத்தப்பட்ட எனது பேரக்குழந்தைக்கும் இடையே நடந்த சமர்பற்றிய சித்திரம் வெகு சுவாரஸ்யமானது.
அந்தக்குழந்தையின் பெயர் வீவான். எனது மச்சான் முருகானந்தனின் மகள் நர்மதாவின் குழந்தை. கிருஷ்ணருக்கு வடமொழியில் அத்தகைய பெயரும் இருக்கிறது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று தேர்தல் கோஷமிடும் சீமான் பிறந்த தேசத்தில்தான் எங்கள் பேரன் வீவானும் பிறந்தான்.
ஆனால், குழந்தை வீவானுக்கு சீமானின் வீரத்தனம் தெரியாது. சிட்னியின் மாடப்புறாவின் சூரத்தனம்தான் தெரியும். அதனது சூரத்தனத்தை விக்ஸின் துணைகொண்டு அடக்கப்பார்த்திருக்கிறான் எங்கள் பேரன் வீவான்.
குழந்தைகளிடம் நாம் மென்மையாகவும் கனிவுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்பது வாழ்க்கைப்பாடத்தின் அரிச்சுவடி.
தனது குஞ்சுப்பறவையை ரசிப்பதற்குத்தான் இந்தக்குழந்தை அருகில் வந்திருக்கிறது என்பது எங்கிருந்தோ பறந்துவந்து அந்த மாடிக்கட்டிடத்தின் பல்கணியில் யாரும் அறியாதவேளையில் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சுபொரித்த அந்தப்புறாவுக்குத் தெரியாது.
உலகில் சமாதானத்தின் சின்னமாக புறாவை அறிமுகப்படுத்தியவர்களுக்கு அதன் இயல்பு நிச்சயம் தெரிந்தே இருக்கவேண்டும். புறாவிடத்திலும் மூர்க்க குணம் இருக்கிறது என்று முன்னர் படித்திருக்கின்றேன்.
எங்கள் மல்லிகை ஜீவாவுக்கும் புறாக்கள் பற்றிய நுண்ணிய அறிவு இருப்பது எத்தனைபேருக்குத்தெரியும். அவர் யாழ்ப்பாணத்தில் ரயில் நிலையத்திற்கு சமீபமாக தமது வீட்டில் பல வருடகாலமாக பல புறாக்களை வளர்த்து பராமரித்தவர்.
இங்கு சிட்னியில் பரமட்டா ரயில் நிலையத்திற்குச் சமீபமாக தனது குஞ்சைப்பொரித்திருக்கிறது ஒரு மாடப்புறா. இது புலம்பெயர்ந்த புறாவா, புகலிடம் பெற்ற புறாவா என்ற ஆராய்ச்சி மேற்கொண்டு, புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் பேசுபொருள் விவாதத்திற்குள் தள்ளவேண்டியதில்லை.
வீட்டுக்கு அரிசி வாங்கப் பணமில்லாத காலத்திலும் அந்தப்புறாக்களுக்கு வேளாவேளைக்கு தானியம் தந்தவர் மல்லிகைஜீவா. அவர் வளர்த்த புறாக்கள் இடம்பெயர்ந்தது போன்று மல்லிகை ஜீவாவும் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். ஆனால், அவர் நாட்டைவிட்டு புலம்பெயரவில்லை. புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகளுக்கு களம் தந்தார்.
எங்கள் பேரன் வீவான் தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பும் துடுக்காக தமிழில்தான் பேசுவான். அந்த மழலை மொழியை ரசித்துக்கொண்டே இருக்கலாம். தனது பெயரை படற்கையில் விளித்துப்பேசும் இயல்பு அவுனுடையது.
உதாரணமாக – வீவான் என்ன சாப்பிடுவான் … ? வீவான் இன்று வெளியே செல்வானா… ? வீவானுக்கு என்ன கிடைக்கும் ? வீவான் வந்தால் என்ன வாங்கித்தருவீர்கள் ? வீவானுக்கு இந்த உடை அழகாக இருக்கிறதா?
இவ்வாறு அந்தக்குழந்தை அந்த கட்டிடத்தின் பத்தாவது மாடி வீட்டினுள்ளே விளையாடிக்கொண்டு இருந்தவேளையில் திடீரென்று புறாவைப்பற்றியும் பேசினான்.
சில மாதங்களுக்கு முன்னர் அந்த மாடிக்குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச்சமர் பற்றி பெரியவர்கள் பேசினார்கள்.
அந்தச்சமர் தெரிந்த செய்தி.
” இனியும் அந்தப்புறா வந்தால் அதற்கு விக்ஸ் தடவுவேன்.” எனச்சொன்ன குழந்தை வீவானின் கோபம்தான் எனக்குத்தெரியவில்லை.
வீட்டிலிருந்தவர்கள் சொன்ன அந்தக்கதையின் பின்னணியில் சுவாரஸ்யமும் அர்த்தங்களும் பொதிந்திருந்தன.
நடந்த கதை இதுதான்.
அந்த மாடியில் பல்கனியின் மூலையில் பல நாட்களாக வீட்டுப்பாவவனப்பொருட்கள் சுமந்துவரும் சக்கரம் பொருத்தப்பட்ட சிறிய ட்ரொலி இருந்திருக்கிறது.
எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு மாடப்புறா அதில் ஒரு முட்டையை ஈன்று குஞ்சுபொரித்துள்ளது.
இதனைக்கண்டுவிட்ட குழந்தை வீவான், அதனைப்பார்க்க அருகில் சென்றுள்ளான்.
அந்தத்தாய்ப்புறா மூர்க்கமாக அச்சுறுத்தியிருக்கிறது. அதனால் அதன் அருகில் அவனால் செல்ல முடியவில்லை.
அந்தக்குஞ்சு வளர்ந்து பறக் கும் இயல்பு வரும் வரையில் அங்கேயே இருந்துள்ளது. தாய்ப்பறவை தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
குழந்தையும் தனது இயல்பை வெளிப்படுத்தி அந்த குஞ்சுப்பறவையை ரசிக்கத் துடித்திருக்கிறது.
அந்த மாடிவீட்டில் அவனுக்கு விளையாடவென ஏராளமான சின்னதும் பெரியதுமான விளையாட்டுக்; கார்கள் இருந்தபோதும் அவற்றால் பேசமுடிவில்லை என்பது அவனுடைய கவலை. கார்கள் இயக்கினால்தான் பேசும். இரையும். ஆனால், எவராலும் இயக்கப்படாமல் பேசும் புறாக்குஞ்சு அவனைக் கவர்ந்தமை இயல்பானது.
ஒருநாள் அவனுக்கு தடிமன் வந்திருக்கிறது. தாய் நர்மதா அவனுடைய நாசியருகே விக்ஸ் தடவியிருக்கிறாள்.
அது குழந்தைக்கு சற்று எரிச்சலைத்தந்துள்ளது.
விக்ஸ்ஸின் இயல்பைத்தெரிந்துகொண்ட குழந்தை, தன்னை அருகில் வரவிடாமல் விரட்டப்பார்க்கும் அந்த மாடப்புறாவுக்கு எதிராக விக்ஸை ஆயுதமாக்க முனைந்துள்ளது.
சில நாட்களில் அந்தத் தாய்ப்பறவை தனது குஞ்சுப்பறவையுடன் பறந்து சென்றுவிட்டது.
ஆனால் , அந்தக்குழந்தை விவான், இன்றும் அந்த மாடியின் பல்கணி அருகே வந்து நின்று குஞ்சுப்பறவைக்காக காத்து நிற்கிறான்.
என்றாவது ஒரு நாள் அந்தக்குஞ்சுப்பறவையும் வளர்ந்து, அந்த மாடிவீட்டுக்கு வந்து தனது குழந்தையை பெற்றெடுக்கலாம்.
அப்பொழுது விவான் தனது பெற்றவர்களுடன் வேறு ஒரு வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பான்.
நானும் அந்தப்பறவையைப்போன்று அனுபவங்களைத் தேடி நாடோடியாக பறந்துகொண்டிருக்கலாம்.
—–0—–
- முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்
- வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….
- கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016
- சோறு மட்டும்….
- ராப்பொழுது
- இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7
- வீண்மழை
- காப்பியக் காட்சிகள் 6.வீடுபேறடையும் வழி
- வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்
- செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக
- மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
- தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்
- வௌவால்களின் தளம்