`ஓரியன்’ – 2

This entry is part 7 of 13 in the series 20 ஜூன் 2016

 

” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், தத்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”—என்று ஜீவன் சிரித்தான்.

“அப்படியா? ஒரு சுலபமான கேள்வி. இதுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம். ஒத்துக்கறேன். ஏய் ஸீகம்—II..! காயத்திரி மந்திரத்தைச் சொல்லு.” —-ஒரு நிமிடம் அது வேலை செய்யாமல் ஸ்தம்பித்தது.

“பார்த்தியா இந்த டப்பா முழிக்குது. அது பேச்சு வழக்கில் இல்லாத ரொம்ப பழைய மொழி, சமஸ்கிருதம்.”—இமா சிரித்தாள். அதன் இயக்கங்கள் நின்று விட்டதோ?, இருவருக்கும் பயம் வந்துவிட்டது. பக்கங்களில் தட்டிப் பார்த்தார்கள். ஊஹும்.

“இதைவிஞ்ஞானின்னு சொன்னால் ஓரியனில் இருக்கிறவன் காரித் துப்புவான்.”–அதன் இயக்கங்கள்முடங்கி விட்டிருந்தன.

“என்ன கேப்டன்! ஒருவேளை இது போலி தயாரிப்போ?.”—– எப்படி இது நேர்ந்தது? ஜீவன் பலவிதமாய் முயற்சித்து விட்டு சோர்ந்து போனான்.. இதை அவன் எதிர்பார்க்க வில்லை. அவனும் பலவிதங்களில் முயற்சித்துத் தோற்றான். கொஞ்சநேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பூமிக்கு தகவல் அனுப்ப யத்தனித்த அந்த நிமிஷத்தில், திடீரென்று விளக்கெரிய அதன் இயக்கங்கள் உயிர் பெற்றன.. அதைத் தொடர்ந்து சில நொடிகளில் பாடல் வரிகள் திரையில் வர, அது கணீரென்று இசையுடன் பாட ஆரம்பித்து விட்டது.

“ஓம்பூர் புவனஸ்ஸுவ: ஓம் தத் ஸவிது வரேண்யம்: பர்க்க தேவஸ்ய தீமஹி: தியே யோந பர்ஸோத யாத்.”——-திகைத்து நின்றாள், அருமையிலும் அருமை. அது தேடுவதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது போல.” —இருவரும் வெளியே பார்த்துக் கொண்டு வந்தார்கள். ஆ..ஆ..! இமா பயத்தில் வீல் என்று கத்திவிட்டாள். ஜீவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஜீவனும் அதைப் பார்த்து விட்டான். வெளியே  ஒரு பிணம், ஆணோ,பெண்ணோ சரியாகப் பார்க்க முடியவில்லை. கை கால்களை பரப்பிக் கொண்டு ஏதோ ஒரு கோளின் ஈர்ப்பு விசைக்கேற்ப தன்கதியில் மிதந்தபடி விண்கலத்தை லேசாக உரசிவிட்டு ஹோ வென்று வேகமாக போய் கொண்டிருக்கிறது. இருவருக்கும் இது போதிக்கப்பட்டுள்ள செய்திதான் என்றாலும் திடீரென்று பார்த்ததும் ஏற்பட்ட அலறல்.

“ பயப்படாதே இமா. ஏதாவது கைவிடப்பட்ட விண்ணூர்தியில் இருந்திருப்பான் பாவம் இனிமேல் தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்ற நிலை புரிந்ததும், வெளியில் வந்து விண்வெளி உடையைக் களைந்து விட்டு மரணத்தை ஏற்றுக் கொண்டிருப்பான். குறைந்த வலியுடன் சில நொடிகளில் மரணம் சம்பவித்திருக்கும்.. இந்த விண்வெளியில் கணக்கில்லா விண்கலங்களும், அதிலிருந்த மனிதர்களும் கைவிடப்பட்டு அநாதையாக இந்த பிரபஞ்சத்தில் பிணங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் உடல்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் எதுவுமற்ற இந்த சூன்யப் பிரதேசத்தில் அழுகிப் போவதில்லை, மாறாக தொடர்ச்சியான அதீத சூரிய வெப்பத்தில் கருவாடாக உலர்ந்து போயிருக்கும்.. நம் சூரியக் குடும்பத்தின் எல்லைக்குள்தான் பிணங்கள் இன்னும் நிறைய எதிர்படும். பயம் கொள்ளாதே.”—-விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் சாகும் எலிகளாய் மடிந்து போகும் மனிதர்களை நினைத்து வருத்தப் பட்டாள். இப்போது தானும், ஜீவனும் கூட எலிகளாய்தானே வந்திருக்கிறோம்? என்று சுய இரக்கத்தில் அழுகை வந்தது. ஜீவன் அவளை தேற்றினான்.

“அழாதே நாம் சாதனையாளர் நிலைக்கு உயர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஓரியனின் பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டுவிட்டோமானால் எவ்வளவு ஓரியன்வாசிகள் நம்மை வாழ்த்துவார்கள்?. யோசித்துப் பார்.”

“ ஜீவன்! விஞ்ஞானிகளின் பார்வையில் நாம் அவர்களுடைய சோதனைக்கு உதவும் எலிகள்தான்..”—அவன் மவுனமாகி விட்டான்.

ஆயிற்று, அந்த நேரம் வந்து விட்டது. விண்கலம்– 838 பல்வேறு நிலைகளைக் கடந்து, இடையில் எதிர்ப்பட்ட விண்கற்கள், குறுங்கோள்கள், கருப்புத்துளை போன்றவைகளால் ஏற்படும் பல பல ஆபத்துக்களிலிருந்து தப்பித்து தன் நெடிய பயணத்தை முடித்துக் கொண்டு, ஓரியன் கிரகத்தில் ஒரு காலை மழை நேரத்தில் தரையிறங்க ஆரம்பித்தது. இங்கே அடர்த்தியான காற்று மண்டலம் உண்டென்பதால், விண்கலம் தன் இயக்கங்களை நிறுத்திக் கொள்ள, அதை ஒரு பெரிய பாரசூட் ஏந்திக் கொண்ட்து., விண்கலம் காற்றில் அலையும் ஒரு சிறகுபோல ஆடியாடி மெதுமெதுவாக இறங்க ஆரம்பித்தது. அவர்கள் இறங்க வேண்டிய கடற்கரைப் பகுதி தெரிய ஆரம்பித்ததும் மானிட்டர் எச்சரிக்கை ஒலி கொடுத்தது.

                    அவர்கள் பருந்து பார்வையாய் அந்த கிரகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆஹா என்ன அழகான ஓரியன் உருண்டை?. கோளின் மேல்,கீழ் பக்கங்களில் மூடிக் கொண்டிருக்கும் பனிப்பிரதேசம் வெள்ளைபூத்து பளீரென்று தெரிகின்றன. அல்டிமீட்டர் ரீடிங் விண்கலம் மூவாயிரம் அடி உயரத்தில் இருப்பதாக சொன்ன போது கீழே பசுமையான காடுகளும், செங்குத்தான  கட்டடங்களும் குட்டி குட்டியாய் மினியேச்சர் உருவங்களாக தெரிந்தன. இந்த கிரகத்தில் அடர்ந்த காட்டுப் பகுதி அதிகம் போல் தெரிகிறது. சற்று தள்ளி பிரமாண்டமாக நீல வண்ணத்தில் கடல் அலையடித்துக் கொண்டிருக்கிறது. பரிச்சயம் இல்லாத புதிய பூமி என்பதில் உள்ளே இனம்புரியாத கலவரம் எழுந்தது. விண்கலம் தரையைத் தொடும் முன்பாக மானிட்டர் லேண்டிங் செக் ஓகே என்றது. மெதுமெதுவாக இறங்கி, விண்கலத்தின் கால்கள் நீண்டு தரையில் அழுந்தப் பதிந்தன. அந்த இடம் ஒருஅடர்ந்த காடு போல் தெரிகிறது.

வெளியே பயங்கரமாக மழை. கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள்  அதீத டென்ஷனுடன் காத்திருந்தார்கள். ஆபத்து என்ன ரூபத்தில் வரும் என்று தெரியாது. இந்த காட்டில் என்ன மாதிரி மிருகங்கள் இருக்கிறதோ?. அதில்லாமல் மனிதகுல அழிவுக்குக் காரணம் ஏதாவது பெயர் தெரியாத வைரஸ்களின் கொடூர தாக்குதல்களாகக் கூட இருக்கலாம். பாதுகாப்பு கவசம் இன்றி இறங்க வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தார்கள். ஆட்டோ அனலைஸர் வெளிக்காற்றை உள்ளிழுத்து பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அறிக்கையை துப்பியது. பூமியைவிடஆக்ஸிஜன் அதிகம்,32%, நைட்ரஜன்—62%, ஆர்கான்—0.93%, கரியமிலவாயு மிகவும் குறைவு, 0.010%., அதனால்தான் இந்த குளிரும், அதிக மழையும் என்றான் ஜீவன். மழை ஓய்ந்து அவர்கள் மெதுவாக வெளிவாங்கி சரிந்து நிற்கும் படிகளில் இறங்கினார்கள். இறங்கும் முன் இருவரும் பாதுகாப்புக்காக லேசர் கன்னை எடுத்து செருகிக் கொண்டார்கள். ஓரியன் தலைமைக்கு தகவல் போயிருக்கிறது. உங்களை அழைத்துச் செல்ல ஆட்கள் தயாராக காத்திருப்பார்கள் என்றார்கள், ஆனால் அங்கே யாரும் இல்லை. இங்கே இவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான அனுபவம் காத்திருக்கிறது. ஆமாம் அவர்கள் மனிதரல்லாத மனிதர்களை இங்கே சந்திக்கப் போகிறார்கள்

இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.இதுபோன்ற ஒரு இடத்தை கற்பனை செய்வதற்குக் கூட அவர்களுக்கு கடினமாக இருந்தது. மனித சஞ்சாரமில்லாத,ஆனால் அவர்கள் வாழ்ந்த, வாழ்கிற, வாழப்போகிற இடங்களில்  உயர்ந்த காங்க்ரீட் கட்டடங்கள் நெருக்கமாய் நிற்க, அத்தனையும் நொறுங்கி, சிதைந்து, குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. இந்த இடம் ஒருகாலத்தில் வளர்ந்த நகரமாக இருந்திருக்க வேண்டும், இன்று சிதைந்த நிலையில் கிடக்கிறது. சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களாக, தார் கலவைகளும், சரளைக் கற்களும், சிதறிக் கிடக்கின்றன. அங்கங்கே சாலை இருந்த இடத்தை பிளந்துக் கொண்டு எழும்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள், செடி கொடிகள், புதர்கள். மழையினால் தேங்கி நிற்கும் வெள்ளக்காடுகள். சேற்றில் கால்கள் புதைகின்றன.. இங்கே அடிக்கடி மழை கொட்டுகிறது போல. எங்கும் பச்சைப் பசேலென்று விரிந்தோடும் காடுகள். பலத்த காற்றைத் தவிர, ஆள் அரவமில்லாத, பயமுறுத்தும் அமானுஷ்ய அமைதி.

“இமா! என்னை பலமாக பிடித்துக் கொள்.காற்று பலமாக அடிக்கிறது பார்.”—இமா அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அந்த இடிபாடுகளினூடே அவர்கள் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு அரைமணி நேரம் நடந்த பிறகும் எங்கும் மனிதர்களோ, விலங்குகளோ இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. பயமுறுத்தும் பயங்கர அமைதி. சுற்றி சுற்றி நாலாபுறங்களிலும் பார்வையை சுழலவிட்டபடியெ நடந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கங்கே கட்டட இடிபாடுகளுக்கிடையில் லேசாக தெரிந்த அசைவுகளை ஜீவன் பார்த்துவிட்டான்..

“இமா! சீக்கிரம் அவர்களை தொடர்பு கொள். இந்த குட்டிச் சுவர்களின் பொந்துகள் பக்கம் அசைவு தெரியுது பார். யாரோ அல்லது எதுவோ?. ஆ… மனுஷங்கதான். ஓ! அங்க பாரு அவங்க நம்மளை நோக்கித்தான் ஓடிவர்றாங்க. என்னா ஆவேசம் பாரு. ஆபத்து…ஆபத்து. இங்க காற்றில் பிராணவாயு அதிகம் என்பதால் உயிரினங்களின் பலம் நம்மைவிட அதிகம். நம்மால சமாளிக்க முடியாது.சீக்கிரம்…சீக்கிரம்.”—— அவர்கள் வித்தியாசமான உடையிலிருந்தார்கள். முட்டிவரைக்கும் தொளதொளவென்று ஒரு ஆடை, மேலே ஒரு துணியை போர்த்தியிருந்தார்கள்.

” இல்லை தொடர்பு கிடைக்கவில்லை. நாம இப்போது முடிந்த வரைக்கும் ஓடுவோம் வேறு வழியில்லை.” —- அவர்கள் இப்போது தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பின்னால் நாலு பேர் பேய்க்கூச்சல் போட்டபடி இவர்களைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்கள் மரணபயத்தில் ஓடி ஓடி…, கொஞ்ச நேர ஓட்டத்திற்கப்புறம் ஒரு அகன்ற சமவெளியை அடைந்தார்கள்.. அந்தப் பகுதியை அடைந்தபோது, ஒரு நாலைந்து  மனிதர்கள் எதிர்கொண்டு தடுத்தாட் கொண்டார்கள். கைகுவித்தபடி கிட்டே வந்தார்கள். துரத்தி வந்த மனிதர்கள் வேகத்துடன் ஜீவன், இமா, மேல் பாய, இமா வீல் என்று அலறினாள்.

Series Navigation“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *