This entry is part 4 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

சேயோன் யாழ்வேந்தன்

அவசரமாய்ச் சென்றாலும்

அச்சாரம் கன்னத்தில்

ஒற்றாமல் நீ சென்றதில்லை

நீங்கள் சாப்பிட்டாச்சா என்று

கேட்காமல் நீ உண்டதில்லை

தொலை தூரத்தில் இருந்தபோதும்

அலைபேசியில் அழைக்காமல்

ஒருவேளையும் உண்டதில்லை

உன் உணவு நேரத்தை

தள்ளிப் போடவேண்டாமென்பதால்,

பல தடவைகள் நாங்கள் பொய் சொன்னதுண்டு

பெற்ற பிள்ளையிடம்

பொய் சொல்ல வேண்டாமென்று

பல விரதங்களை

உன் அம்மா கைவிட்டதும் உண்டு

இரவு பகல் நமக்கு எதிராக மாறிப்போக,

பல்லாயிரம் மைல்களுக்கப்பால்

நீ சென்றபோதும்

நாங்கள் உறங்கிக்கொண்டிருக்கும்

உன் உணவு வேளையில்

“சாப்பிட்டீங்களா”” என்று

அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத்தான்

நீ சாப்பிடவே உட்காருவாய்.

அந்தக் குறுஞ்செய்தின்

“குக்கூ” ஓசை கேட்டபிறகுதான்

எங்களுக்கு உறக்கம் வரும்

மனமாற்றம் வருவது

மண்ணுலகில் இயற்கைதான்

திருமணம் இப்படியும்

ஒரு மனிதனை மாற்றுமா?

எல்லாப் பெற்றோர்களையும் போல்

தாமதமாகத்தான் இந்த (ஏ)மாற்றத்தை

நாங்களும் புரிந்துகொண்டோம்

நாளுக்கு ஒருமுறை நலம் விசாரிக்கவும்

இப்போதெல்லாம் உனக்கு நேரமில்லை

பின்னாளில் பிள்ளைகள்

மாறிப்போகும் இந்த வாழ்வைவிட,

பதின்பருவத்தில் பிள்ளைகள்

பெற்றோரைப் பிரிந்து சென்று

நீ யாரோ நான் யாரோ என்று வாழும்

மேனாட்டு வாழ்க்கை தேவலைபோலும்!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஅணுயுகப் பிரளய அரங்கேற்றம் !பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்