கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3

This entry is part 2 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

ஸிந்துஜா

3

 

இரண்டாம் வகுப்புக்குப்  போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை  ஒத்துக்  கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வீட்டில் இருந்த இன்னொரு பையனான மணியுடன் போகிறேன் என்று அழுது ஆகாத்தியம் பண்ணினேன். அவன் அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் தனது சுதந்திரத்தைக் காத்துக் கொள்ளும் விதமாக என்னை ஸ்கூலுக்கு ” இழுத்துக்”  கொண்டு போக மாட்டேன் என்று விட்டான் .வேறு வழி இல்லாமல் ‘அ ‘ கூடத்தான் போக வேண்டியிருந்தது.

 

நாங்கள் ஸ்கூலுக்குப் போகும் வழியில் நாடாரின் கடை இருந்தது. அது என் வீட்டுக்கு ரொம்பப் பக்கமும் கூட. அங்கே கிடைக்காத சாமான் இல்லை. பின்னாட்களில் மால் என்று எல்லாம் வந்து போய்ப் பார்த்த போது நாடார் கடை அன்றைய மால் என்றுதான் தோன்றியது. எப்போதும் ஜே ஜே    என்று கூட்டம்.  நாடாரின் பையன் வேலு படிக்காமல்  கடையில்தான் வேலை பார்த்தான். என்னை விட ஐந்தாறு வயது பெரியவன். அம்மா நாடார் கடையில் போய் தேங்காச்  சில் அல்லது பச்சை மிளகாய் வாங்கிண்டு  வா என்று அரையணா  கொடுத்தனுப்புவாள் . அதை வாங்கும் போது நாடார் கடையில் இருந்தால் என் கையில் உடைந்த ஆரஞ்சு மிட்டாய் இல்லாவிட்டால் கொஞ்சமாக  நிலக் கடலை என்று ஓசியில் சாப்பிடக் கொடுப்பார். வேலு மட்டும் இருந்தால் அப்படித் தர மாட்டான். என்னைப் பார்க்கும் போது ” என்னடா அய்யரே ‘ என்றுதான் கூப்பிடுவான்.

 

ஸ்கூலுக்கு அகல்யாவுடன் போகும்போது ” டேய்  தேவதாஸ் பார்வதி ஸ்கூலுக்கு போறிங்களா ? ” என்று கிண்டல் பண்ணுவான். எனக்கு கோபமாக வரும் . இதுவும் நான் அகல்யாவுடன் ஸ்கூலுக்கு போக மறுத்ததற்கு ஒரு காரணம். ஒரு நாள் அகல்யா அவனைப்

பார்த்து ” உன்னோட காந்தா  எங்கேடா ? ” என்று கேட்டாள் .

 

வேலு ஒன்றும் புரியாமல் ” என்னாது என்னாது ? ” என்று கேட்டான்.

 

” ரத்தக் கண்ணீர் காந்தாடா ” என்று சொல்லி விட்டு விறு விறு என்று என்னை இழுத்துக் கொண்டு போய் விட்டாள்.

 

நான் அவளிடம் ” யார்  இது காந்தா ? ” என்று கேட்டேன்.

 

” அவ அந்த படத்தில கெட்டவ ” என்றாள்

 

அன்று சாயந்திரம் அவள் என்னைக் கூப்பிட்டு “இதைக் கேளு “என்றாள் . எங்கள் தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு

கல்யாண வீட்டில் ஒலி  பெருக்கி இரைந்து கொண்டிருந்தது.  சினிமாப்  பட வசனம் எல்லாம் அதில் போடுவார்கள்  ஒரு நிமிஷம்

கழித்து ” அடி தேவடியா பெற்றெடுத்த திருமகளே காந்தா “என்று ஒலி  பெருக்கி கத்திக்  கொண்டிருந்தது.

 

” அப்படின்னா ? ” என்று அவளிடம் கேட்டேன்.

 

” கெட்ட வார்த்தை ” என்று தணிந்த குரலில் சொன்னாள் .

 

அதோடு நான் விட்டிருக்க வேண்டும். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தலை வெடித்து விடும் போலிருந்தது.

என் அண்ணாவிடம் போய் ” தேவடியான்னா என்ன அர்த்தம் ? ” என்று கேட்டேன். அப்போது அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் .

 

அவன் நேரே போய் என் அம்மாவிடம் சொல்லி விட்டான்

 

என் அம்மா முகமெல்லாம் சிவக்க என் கிட்டே வந்து காதை பிடித்துத் திருகி ” நாயே, யார்ரா உனக்கு இதை சொன்னா ? ” என்று கன்னத்தில் பட்டென்று அடித்தாள் .

 

நான் அழுது கொண்டே சாயந்திரம் ஒலி பெருக்கியில் கேட்டதை அப்படியே கக்கினேன்.

 

அப்பா வந்ததும் இந்தக் கதை அவர் காதுக்கும் போயிற்று. அவர் ஏற்கனவே எங்கள் வீட்டில் ரேடியோ வாங்கக்  கூடாது, குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகும்  என்று தடை செய்திருந்தார். ஆனால் தெருவில் ஒலி பெருக்கியைத் தடை செய்யும் அதிகாரம் அவருக்குக்

கிட்டியிருக்கவில்லை.

 

மறுநாள் நானும் அகல்யாவும் ஸ்கூலுக்குப் போகும் போது நாடார் கடையில் வேலு இருந்தான்.  அவனது அப்பா கடையில் இல்லை. ஆனால் அவன் வழக்கமாய் என்னைப் பார்த்துக் கத்தும் வார்த்தைகளை இழந்து விட்டவன் போல என்னைப் பார்த்து விட்டு வேறெங்கோ பார்த்தான்.

 

நான் தைரியம் பெற்றவனாக அவனைப் பார்த்து ” காந்தா , காந்தா ” என்று ஓங்கிய குரலில் கத்தினேன்,

 

வேலு அதற்கு முன்தினம்தான்  ராத்திரியில் செவிடாய்ப் போய் விட்டவன் மாதிரி உப்புப் பொட்டலம் மடித்து யாருக்கோ கொடுத்துக் கொண்டிருந்தான் .

 

இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு முதல் வகுப்பில் படித்ததெல்லாம் இப்போது நன்றாக விளங்கியது . இப்படியேதான்

என் படிப்புக்  காலம் முழுவதும்  முந்திய  வகுப்பைப் பார்த்தவாறு இருக்கும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. என் அம்மா சொன்னதுபோல நான் இன்னும் ஒரு வருஷம் ஒண்ணாம் வகுப்பிலேயே படித்திருந்தால், எஸ்.எஸ்.எல் ஸி பரிட்சையில் ஸ்டேட் பர்ஸ்ட் வந்திருப்பேனோ என்னவோ ! விதி யாரை விட்டது ?

 

எனக்கு என் சிறு வயது வாழ்க்கையில் மிகவும் பிடித்த பொழுதுகள் மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி

வரை (விளையாட்டு நேரம் ) , இரவு ஒன்பதிலிருந்து காலை ஆறு  மணி வரை ( தூங்கும் நேரம் ). இந்த நேரங்களில் படிடா,

படிடா என்கிற கழுத்தறுத்து சுத்தமாகக்  கிடையாது. ஜாலி லைஃப் . விளையாடும் போது என்னை இட்லி குண்டா ( நான் ரொம்பக் கொழு கொழு அப்போது ) என்று கூப்பிட்டு மற்றவன்கள் என்னை வெறுப்பேத்துவான்கள்.விளையாட்டிலும் நான் உப்புக்குச்

சப்பாணிதான் . பொறுத்துக் கொள்வேன். இவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டுக்குப்  போனால் படிக்க வேண்டுமே .

 

இருந்தாலும் எனக்கும் இந்த மாதிரி மற்றவன்கள் என்னை மதிக்காமல் இருப்பது போரடித்து விட்டது. அதனால் மாற்று வழி ஒன்றைக் கண்டு பிடித்தேன். அங்கு இன்னொரு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெண்களிடம் போய்ச் சேர்ந்தேன்.அங்கு அகல்யாதான் லீடர். ஆனால் அவள் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் மற்றவர்கள் எல்லாம் கப்சிப் . பல்லாங்குழி, தாயக்  கட்டம், பாண்டி இவற்றில் எல்லாம் நான் எப்பவும்அகல்யாவுக்கு அடுத்து இருப்பேன் . ஏனென்றால்  பர்ஸ்ட் அகல்யாதான் வர வேண்டும் . பின்னாளில் நான் பார்த்த, கேள்விப் பட்ட இந்திரா காந்தியின் அச்சு அசல் அன்று அகல்யாவாக இருந்தாள் .

 

ஆனால் க்ளாசில்  படிப்பில் அவள்தான் எப்போதும்  பர்ஸ்ட்டாக இருந்தாள் . இது என் நிம்மதியை என்னிடம் இருந்து

பிடுங்கினாலும் , இதுதான் உண்மை. ” அந்தக் குட்டியோட விளையாடறதுக்கு மட்டும் போறயே , படிக்கறதையும் அவள்டேர்ந்து கத்துக் கோயேன் ”  என்று என் அப்பா வெறுப்படிப்பார். வெள்ளைத் தாமரையில் உட்கார்ந்து கொண்டு வீணை செய்யும் ஒலியில் இருந்தவளும்  கூட கேர்ள்ஸுக்குத்தான் ரொம்ப உதவி செய்கிறாள் ,  என்ன ஒரே வஞ்சனை என்று எனக்கும் அப்பப்போ கோபம் வரும் .  இயற்கை  படிப்பதற்கென்று  ஒரு ஆண் கடவுளை உண்டாக்கவில்லை என்பதிலிருந்தே ஆண்களுக்கும் படிப்புக்கும் உள்ள உறவும் ஆண்களுக்கு படிப்பின் மேல் உள்ள குறைந்த நாட்டமும் தெரியவில்லையா என்று என் அப்பாவிடம் கேட்க வேண்டும் போல எனக்கு இருக்கும். ஆனால் அவரது பெல்ட்டை நினைத்துப் பேசாமல் இருக்க வேண்டியதாய் இருந்தது.

 

 

 

வேலு அதற்கு முன்தினம்தான்  ராத்திரியில் செவிடாய்ப் போய் விட்டவன் மாதிரி உப்புப் பொட்டலம் மடித்து யாருக்கோ கொடுத்துக் கொண்டிருந்தான் .

 

Series Navigationரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடுஅணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *