காத்திருத்தல்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 16 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

sivakumarsalem

சேலம் எஸ். சிவகுமார்

1.

முடிவில்லா எண்ணங்கள்

முடிச்சுகளாய் மாறி

முள் கூர்மைத் தூரிகையாய்

மூளையைப் பிறாண்டியது  ;

 

முடிகொட்டிய எந்தன்

மொட்டைத் தலைக்கும்

முட்டி தேய்ந்த எந்தன்

முழங்காலுக்கும்

முடிச்சு போடப் பார்த்தது – கடையில்

 

முழக்கயிறு வாங்கி வந்து

மொட்டைத் தலை போட்ட

முழு நீளச் சுருக்கு

முழங்கால் எட்டாமல்

மேல் தூக்கிப் போட்டதனால்

விட்டத்தில் விழுந்து என்

மொட்டைத்தலை இறுக்கியது – உயிர்

 

விடுதலைக்கு நேரம்

இதுவல்ல என்றே

அவசரமாய்க் கைகள்

அவிழ்த்திட்ட கயிறு

இரும்புச் சங்கிலியாய்

இடம் மாறி உடனே

சரியும் முழங்காலைச்

சடுதியில் கட்டியது – நானும்

 

முழங்காலில் முகம் புதைத்துக்

கண்மூடிக் காத்திருந்தேன்  – முடிவு

 

அதிகாலை ஒளியில்

புதிதாய்த் தொடங்குமென .

 

2.

ஜனனமும் மரணமும் ஒன்றுதான்

– காத்திருத்தலில்
முன்னதற்காக நாமும்,
பின்னது நமக்காகவும் .

 

3.

முதுமைப் போதி மரத்தடியில்,
முதுமைப் பாறை மேலமர்ந்து
காத்திருக்கிறேன் – எப்படியும்
ஞானம் பிறக்குமென்று !

4.

சிவப்பு விளக்கில்

எல்லோரும்

காத்திருக்கிறார்கள் ;
விபத்து
நிகழாதிருக்க பலரும்,
நிகழ்ந்தததனால் சிலரும் .

 

5.

இக்கணமே உயிர் பிரிந்தால்
இனிது இனிது என
எக்கணமும் காத்திருந்தேன்
வரவேற்க ;
அக்கணம்தான் எப்போதோ !
என்றே அறியாது
தூக்கத்திலும் விழித்திருந்து .

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *