திடீர் போராட்டம் ஏன் – திமுக தலைவர் ஒருவரோடு உரையாடல்

author
2
0 minutes, 40 seconds Read
This entry is part 13 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

ஆனந்த கணேஷ் வை
ஆகஸ்டு 8ம் தேதி, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை “சனாதன கல்விக் கொள்கை” என அழைத்து, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் திமுகவினர்.

திமுகவினர் இதை எதிர்ப்பதற்கான காரணம், மத்திய அரசுப் பள்ளிகளில் செம்மொழி (ஸம்ஸ்கிருதத்தினை) விருப்பப்பாடமாக வைக்க அரசு செய்த முடிவே.

இதுவரை ஜெர்மன், ஃப்ரெஞ்ச் போன்ற திமுக தலைவர்களின் தாய்மொழி வைக்கப்பட்டு இருந்தன. அதனால் இதை திமுக தலைவர்கள் எதிர்க்கவே இல்லை. இப்போது, திராவிடர் இயக்கத் தலைவர்களுக்குப் பிடிக்காத இந்த மண்ணின் மொழியையும் கற்க வாய்ப்பு தரப்படுகிறது.

திமுக தலைவர்கள் எதிர்க்கும் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை அறிய: http://www.financialexpress.com/industry/jobs/draft-national-education-policy-2016-20-salient-features/301984/

இதில் செம்மொழியை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பற்றிய தகவல்:

//11. d) Keeping in view special importance of Sanskrit to the growth and development of Indian languages and its unique contribution to the cultural unity of the country, facilities for teaching Sanskrit at the school and university stages will be offered on a more “liberal” scale.//

இதற்கு எதிரான போரட்டத்திற்குத் தொண்டர்களை அழைத்துள்ளார் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான்.  வெற்றிகொண்டான் ஜி.

இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் நான் ஃபேஸ்புக்கில் நடத்திய உரையாடலை உங்களோடு பகிர்கிறேன். வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் என்னைவிடப் பலமடங்கு பெரியவரான அவர் நாகரிகமாகவும், சம மரியாதையுடனும் என்னுடன் உரையாடினார். இப்பண்பினால் திமுக தலைவர்கள் மேலான என் மதிப்பு இன்னும் ஒரு படி அதிகரித்தது. அவருக்கு மரியாதை கலந்த நன்றிகள்.

இனி எங்களுக்கு இடையே நடந்த ஃபேஸ்புக் உரையாடல்.

Vetri Kondaan: ஆகத்து 8 ஆம் திகதி, நாளை மத்திய அரசின் தேசிய கல்விகொள்கை என்று சொல்லப்படும் சனாதன கல்விகொள்கையை எதிர்த்து இந்தியாவில் முதல் இயக்கமாக திராவிட இயக்கம் போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவித்து உள்ளது, கலைஞர் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது உள்ளார்.

Ananda Ganesh பாடத் திட்டத்தில் அரபி, ஃப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை வைத்துவிட்டு இந்திய மொழிகளை நீக்கினால் அது தூய செக்யூலரிச கல்விக்கொள்கையாகி விடும். அதற்காகப் போராடுவது நல்லதே.

Vetri Kondaan அதுவெல்லாம் கட்டாய பாடமாக இருக்கிறதா? விருப்ப பாடமாக இருக்கிறதா?

Ananda Ganesh செம்மொழி (ஸம்ஸ்கிருதம்) கட்டாயப் பாடமாக அனைத்து பள்ளிகளிலும் இருக்கிறதா இல்லை விருப்பப்பாடமாக இருக்கிறதா ?

Vetri Kondaan சென்சஸ் கணக்குப்படி 22,000 பேர் பேசும் மொழி சமஸ்க்ரிதம் எதற்கு பயன்படும்?

Ananda Ganesh: சென்சஸ் கணக்குப்படி ஓவிய விற்பன்னர்களின் எண்ணிக்கை 2000ம் கூட இருக்காது. அதனால், அதை எங்கும் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லலாமா ?

அளவில்லா பலம் வாய்ந்த சிறுபான்மை மதத்தினருக்கு ஆதரவாக அளவற்று நடக்கும் நீங்கள், பலமற்ற சிறுபான்மை மொழிக்கு எதிராக நடப்பது சரியா Vetri Kondaan சார் ?

Vetri Kondaan: மொழியும் ஓவியமும் ஒன்றா?

Ananda Ganesh: கற்றலும், கற்றலைக் காமுறுதலும் ஒன்றுதான். ஜெர்மனையும், தமிழையும் கற்பதை  ஒன்றாகப் பார்க்கும்போது மொழியையும் ஓவியத்தையும் கற்பதை  ஒன்றாகப் பார்க்கலாம்.

கல்வி வேட்கை கொண்டவன் அவன் கற்க விரும்புகிற செம்மொழியையோ, ஓவியத்தையோ கற்கவே விரும்புவான். அவன் கல்வி ஆர்வத்தை நாம் ஏன் தடை போட வேண்டும் ? ஓவியம் கற்க விரும்புபவனை கற்கத் தடை செய்வதும், செம்மொழி கற்க விரும்புபவனை கற்கத் தடை செய்வதும் அவர்கள் இருவருக்கும் ஒரே வகைத் துயரம்தான்.

Vetri Kondaan: கோவிலில் மணியாட்ட பயன்படும் என்றால் அதற்கு அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுவதை எதிர்கிறீர்களே? ஏன்?

Ananda Ganesh: செம்மொழி (ஸம்ஸ்கிருதம்) கோயிலில் மணியாட்ட மட்டுமே பயன்படும் என்கிற புரிதல், தமிழ்க் காப்பியங்கள் படிப்பது கோயிலில் ஓத மட்டுமே பயன்படும் என்கிற புரிதல் தரத்தில்தான் இருக்கிறது.

அனைத்து சாதியினரும் பூஜாரிகளாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். அனைத்து சாதி பூஜாரிகளுக்கும் தேவையான பயிற்சிகளை விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தந்து வருகின்றன.

அதன் வெற்றியைப் பார்த்து, திரு. வெற்றி கொண்டானின் கட்சித் தலைவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைக் கொண்டு வந்த போது, மனமுவந்து பாராட்டியது இந்துத்துவ அமைப்புகள்தான்.

ஆனால், அதிமுகத் தொண்டர்களுக்கு திமுக ஏற்பாடு செய்த பயிற்சி போல, சட்டமன்றத்தில் தீர்க்கப்பட்ட பொதுமக்கள் குறைகள் போல, திமுக தலைவர்களின் புதல்வ/புதல்விகளின் ஹிந்தி எதிர்ப்பு போல, இந்த அர்ச்சகர் பயிற்சி என்பது வெறும் கேலிக்கூத்து நாடகமாக இருப்பதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். ஏன் இந்தப் போலித்தன நடிப்பு ?

Vetri Kondaan: ஆகமம் தான் படித்தார்கள் சமஸ்க்ரிதம் அல்ல,

Ananda Ganesh: ஆகமும் படிக்கவில்லை. ஏனெனில், அங்கு ஆகடியம் மட்டும்தான் கற்பிக்கப்பட்டது.

Vetri Kondaan: மத்தியில் பரிவார ஆட்சிதானே சுப்ரீம் கோர்ட் தடையை உடைக்க ஏன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதை சட்டமாக்க கூடாது?

Ananda Ganesh: திமுகவில் அனைவரும் கட்சித் தலைவராகலாம் எனும் நிலை வரும்போது, கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் நிலை வந்தே தீரும்.

Vetri Kondaan:சமஸ்க்ரித்த மொழி அழிந்ததற்கு சூத்திரர்களா காரணம், அடுத்தவனுக்கு கல்வி மறுத்து பார்பனர்களே அதை கொன்றார்கள்.

Ananda Ganesh: அந்தப் படுபாவி பார்ப்பனர்கள் கட்டையிலே போகட்டும் சார். அவர்கள் யார் நம்மைத் தடுக்க ?

நாம் நமது மாநில, மத்தியப் பள்ளிகளில் செம்மொழியைச் சொல்லித் தருவோம். எந்தப் பார்ப்பான் தடுக்கிறான் என்று ஒரு கை பார்த்திடுவோம்.

சூத்திரருக்கும் உரிமையுள்ள செம்மொழி அனைவருக்கும் கிடைக்கட்டும்.

Vetri Kondaan: சமஸ்க்ரிதம் அப்படியா? கழுதை தேய்ந்துகொண்டு அல்லவா போகிறது,

Ananda Ganesh: கழுதை தேயாது. தேய்ந்திருந்தால் இன்று இல்லாது போன உயிரினமாகி இருக்குமே.

ஆனால், செம்மொழி பெரிதாய் வளரும் எறும்பு. செம்மொழி பேசும் எறும்புகளின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

1960களில் செம்மொழி பேசிய பார்ப்பனர்களின் எண்ணிக்கையை விட, 2016ல் செம்மொழி படிக்கும், ஹிந்தி பேசும் திமுக தலைவர்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை பல பல பல பல பல மடங்கு அதிகம்.

Vetri Kondaan: 70 வருடமாக பல்லாயிரம் கோடி செலவிட்டும் அந்த மொழி முன்னேறவில்லையே ஏன்?

Ananda Ganesh: பல்லாயிரம் கோடியை யார் செலவழித்தார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால், பலகோடி கோடி பில்லியன்கள் செலவழித்து திமுகவினரால் நடத்தப்படும் சன் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளினிகளும், செய்தி தருபவர்களும் பேசும் “டமிளை”க் கேக்கும்போது, இயக்கத்தின் நிறுவனங்களிலேயே தமிழ் மொழி வளர்ச்சிக்காக 2 பைசாக்கள்கூட செலவழிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

Vetri Kondaan: வட இந்தியாவில் 20 30 ஆண்டுகளாக பரிவாரம் ஆட்சி செய்யும் மாநிலங்களில் புதிதாக ஒரு 5000 பேர் சமஸ்க்ரிதம் படித்து விற்பன்னர்கள் ஆகிவிட்டார்கள் என்று காட்ட முடியுமா?

Ananda Ganesh: காட்டுவது நிச்சயமாகக் கடினம்தான். ஏனெனில், செம்மொழியானது வட இந்திய மொழி அல்ல. தென்னிந்திய மொழியும் அல்ல. அது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு வித்தியாசம் பாராமல் இந்தியா முழுமைக்குமான மொழி.

தென்னிந்தியா போலவே வட இந்தியாவிலும் செம்மொழி படித்து விற்பன்னர்கள் ஆவது குறைவுதான். ஏனெனில், இது வட இந்திய மொழி இல்லை. இது தென்னிந்திய மொழியும் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு பாராமல் பரந்த இந்திய மொழி இது.

அக்காலத்தில் இருந்தே துறைசார் அறிஞர்களுக்கான மொழியாக இருந்ததே அன்றி, பாமர மக்களின் மொழியாக அது இருந்தது இல்லை. ஆதித் தமிழகத்தில் இருந்த துறைசார் விற்பன்னர்களும் தங்கள் துறை சார் அறிவை செம்மொழியிலேயே பதிந்தார்கள்.

அக்காலத்தில் துறைசார் வல்லுனர்களின் கல்விக்கான மொழியாகவும் அது இருந்தது. தமிழகத்து ஆய கலைகளும் செம்மொழியில் பதியப்பட்டன. பயிற்றுவிக்கப்பட்டன. ஒரியா மாகாணத்து துறைசார் வல்லுனர் தமிழகத்துத் துறைசார் வல்லுனருடன் கலந்துரையாடும் மொழியாக அது இருந்தது.

அது அறிஞர்களின் இணைப்பு மொழி. தமிழர் வளத்தினை மற்ற இந்தியருக்குக் காட்டிய இனிய மொழி. இந்தியாவை இணைக்கும் மொழி.

பொதுமக்களும் துறைசார் அறிவுடையோராய் சிறந்து விளங்க வேண்டுமெனில், செம்மொழி கற்றல் உதவும்.

இது பாமர மக்களுக்கும் கற்பிக்கப்பட்டால், அவர்களும் துறைசார் அறிவு பெற்றவர்களாவார்களே.

திமுக தலைவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாது தொண்டர்களின் பிள்ளைகளும் அறிவில் சிறந்தவர்களாக ஆகும் வாய்ப்பை ஏன் கெடுக்கிறீர்கள் திமுக தலைவரே ?

Vetri Kondaan: வேறு என்னென்ன பயன்பாடுகள் உள்ளது, சமஸ்ரிதம் படித்து யாரிடம் பேசுவீர்கள்?  சங்கராச்சர்யிடமா?

Ananda Ganesh: திமுக தலைவர்களின் பிள்ளைகளிடம் பேசலாம். தமிழ்நாட்டில் ஜெர்மன் படித்து அதில் பேசுகிறவர்களை விட, செம்மொழி படித்து அதில் பேசப் பலர் கிடைப்பார்கள்.

கே. ஆர். நாராயணன் என்று இந்தியாவின் ஜனாதிபதி ஒருவர் இருந்தார். ஹரிஜனர். அவரின் தந்தை செம்மொழி விற்பன்னர். அலெக்ஸாண்டர் என்றொரு கவர்னர் தமிழ்நாட்டில் இருந்தார். கிறுத்துவர். அவர் தந்தை செம்மொழி விற்பன்னர்.
நாராயண குரு என்றொரு மாபெரும் ஆத்ம ஜோதி இருக்கிறது. அது உடலுடன் இருந்த போது செம்மொழிப் புலமை கொண்டு, அவர் ஜாதியினரான ஈழவர் அனைவருக்கும் அதை எடுத்துச் சென்றது.

அயலார் அரசாண்ட போது கொண்டு வந்த கொள்கையால் புலையாராய் ஒடுக்கப்பட்ட அந்த ஜாதியினர் இன்று வீறுகொண்ட புலியாய், வளமும் பலமும் கொண்ட அறிஞராய் விளங்குகிறார்கள். வைக்கம் போராட்டத்தினை வேடிக்கை பார்க்கப் போன ஈவெரா கண்டவர்களா இப்போது இருக்கும் ஈழவர்கள் ? இல்லையே.

இதுதான் செம்மொழி தரும் ஏற்றம். அதனால்தானே திமுக தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை ஹிந்தியும், செம்மொழியும் சொல்லித் தரும் மத்திய அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர் !

Vetri Kondaan: சிறுபான்மை மதத்தினரின் மொழி என்று நீங்கள் குறிக்கும் அரபோ, உருதோ பல கோடி மக்களால் பேசப்பட்டு நாளுக்கு நாள் அதிகம் பேர் பயன்படுத்தும் உலக மொழியாகவல்லவா இருக்கின்றன.

Ananda Ganesh: நான் சிறுபான்மை மதத்தினரின் மொழி பற்றிப் பேசவில்லை. முக்கியமாக உருது பற்றிச் சொல்லவே இல்லை. அது இந்திய மொழி. அது கற்பிக்கப்பட வேண்டும். அனைவரும் கற்கவும் வேண்டும் – தமிழைத் தடையறக் கற்ற பின்னர்.

நான் சொன்னது ஆதிக்க அயலார் மொழியான ஜெர்மனையும், ஃப்ரெஞ்சையும் எதிர்க்காத நீங்கள் நம் முன்னோர் மொழியான செம்மொழியை எதிர்ப்பது தவறு என்பதையே.

செம்மொழியை வெளியேற்று என நீங்கள் ஜெர்மனை வரவேற்றுச் சொல்வது சரிதானோ ?

பேசுபவர் பலகோடி என்பதால் அரபு உலக மொழியாக இருக்கிறது என்கிறீர்கள். அரபும், உருதும் உலக மொழியாக இருக்கின்றன என்பதே எனக்குப் புதிய செய்தி.

அரபு உலக மொழியல்ல. ஹிந்தி பேசினால் புரிந்துகொள்ளும் அரபிகள் இருக்கிறார்கள். ஆனால், அரபி பேசினால் புரிந்துகொள்ளும் தமிழர்கள் இல்லை.

பேசுபவர்களின் எண்ணிக்கைதான் அடிப்படை விதி என்றால், அரபு, உருதுவை விட ஹிந்தி பேசுகிறவர்கள்தான் உலகில் அதிகம். அது உலக அளவுக் கணக்கில்.

இந்திய அளவில், உருது பேசுபவர்களை விடவும் ஹிந்தி பேசுபவர்கள்தான் அதிகம்.

அதிக அளவு பேசப்படுவதுதான் அளக்கும் அடிஸ்கேல் என்றால், நீங்கள் ஹிந்தியை அல்லவா ஆதரிக்க வேண்டும் ? உருதுவை ஆதரிப்பதாக அல்லவா வாய்மொழி சொல்கிறீர்கள் ?

ஹிந்தி அல்லவா மாநிலப் பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் ? ஏன் தமிழக அரசு உருதுப் பள்ளிகளை நடத்துகின்றது ?

Vetri Kondaan: சமஸ்க்ரிதம் சொல்லிகொடுக்கும் வேதபாட சாலையில் அணைத்து இந்துக்கும் அனுமதி உண்டா? விலாசம் தர இயலுமா?

Ananda Ganesh: தாராளமாக. மகிழ்ச்சியாகத் தருகிறேன். செம்மொழி சொல்லித் தரும் அமைப்புகள் நிறையவே இருக்கின்றன. வருடத்துக்கு 500 பேரையாவது, சாதி மதம் இனம், பாராமல் அங்கு நீங்கள் அனுப்புவீர்களா ? கற்றுக் கொள்ள அனுப்புவதைப் பற்றிச் சொல்கிறேன். கலாட்டா செய்வதற்கு அல்ல. :)

அனுப்புவேன் என்று மட்டும் நீங்கள் சொல்லுங்கள். உடனடியாக விலாசங்கள் தருகிறேன்.

Vetri Kondaan: முதலில் சமத்துவம்தான் ஒரு மொழிவளர்ச்சிக்கு உதவும் என்பதை உணருங்கள்.

Ananda Ganesh: முற்றிலும் ஆமோதிக்கிறேன். ஆதிக்க அயலவர் மொழியான அரபு, ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு சமமாக இந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், செம்மொழி, மராட்டி போன்ற மொழிகளுக்கும் மத்திய அரசுப் பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

அது போலவே, சமத்துவத்தைத் தர, மாநிலப் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலத்துக்கு சமமாகச் செம்மொழியானது சொல்லித் தரப்பட வேண்டும்.

மாநிலப் பள்ளித் திட்டத்தில் செம்மொழியும் பயிற்றுவிக்கப்பட்டால், அது பார்ப்பனர்களின் மொழி என்கிற பொய்மையும், மாயையும் மறைந்துவிடும் அன்றோ !

Vetri Kondaan: சமஸ்க்ரிததை தூக்கி பிடிப்பவர்கள் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களின் வரியை வைத்து அவர்களின் மொழியை முதலில் உயிர்பிக்கட்டும்.

Ananda Ganesh: 100 % ஒத்துக் கொள்கிறேன்.

செம்மொழியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மட்டுமல்ல, என் மொழியான தமிழின் பெயரைப் பயன்படுத்தும் திராவிடக் கட்சிகளுக்கும் இதுவே கடமை.

எம்.எல்.ஏ., பதவிக்கு அடிப்படைத் தகுதி எண் சீர்க்கழிநெடிலடி விருத்தம் எழுதத் தெரியும் அளவு இல்லாவிட்டாலும், எளிய வெண்பா எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாய விதி வைக்கலாம். ஸ்டாலின் அவர்கள்கூட எம்.எல்.ஏ. ஆக முடியாத சங்கடம் வந்து சேரும். ஆனால், அவரும் தமிழ் கற்க ஒரு அவசியம் வருமே.

திமுக பேச்சாளர்கள் அனைவரும் தொல்காப்பியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கட்டாய விதி செய்யலாம். வெற்றி கொண்டான் ஜி போல நல்ல தமிழில் எழுதவும் பேசவும் அவர்களும் தெரிந்துகொள்வார்கள்.

திருமாலையும், மஹாலக்‌ஷ்மியையும், இந்திரனையும் போற்றும் ஹிந்து ரிஷியான திருவள்ளுவர் படைத்த திருக்குறளின் எந்தப் பாடலுக்கும் பொருள் சொல்லத் தெரிந்தவரே திமுகவின் அடிப்படை உறுப்பினராக முடியும் என்று விதி செய்யலாம். வள்ளுவம் அறிந்த பின் வல்லமை வந்து சேருமே கட்சிக்கு.

வார இறுதி நாட்களில் பண்டைத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை இலவசமாகச் சொல்லித் தர கோயில்கள் எங்கும் வகுப்புகள் நடத்தலாம். திருப்பாவையும், திருவெம்பாவும், திருவாசகமும், கம்ப ராமாயணமும், சீவக சிந்தாமணியும் கோயில்களில் மீண்டும் ஒலிக்கட்டுமே.

கோயில்களில் இங்கனம் காப்பியத் தமிழ் சொல்லித் தருபவர்களுக்கு தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சமமான சம்பளம் தரலாம்.

தமிழில் தேர்ச்சி பெற வேண்டுமெனில் திருவாசகம் படி என்று அறிஞர் அண்ணா தன் கட்சித் தலைவருக்கு சொன்ன்ன அறிவுரை நினைவுக்கு வருகிறது.

Vetri Kondaan: மத்திய அரசிற்கு தமிழர்கள் வரி வேண்டும், தமிழாசிரியருக்கு மத்திய அரசு வேலை தரமாட்டார்கள்.

Ananda Ganesh: தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகளில் தமிழும் விருப்பபாடமாக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்குக் கிடைக்காத வேலை வாய்ப்பு, ஜெர்மன் ஆசிரியர்களுக்கு கிடைப்பது உங்களுக்கு ஏன் தவறாகத் தெரியவில்லை ?

Vetri Kondaan: 8 கோடி தமிழர்களின் வரி 22ஆயிரம் சமஸ்கிரிதம் பேசுபவர்களில் உள்ள சிலநூறு ஆசிரியர்களுக்கு செலவிடப்படும்.

ஜெர்மன் ஆசிரியர் தமிழராக கூட இருக்க வாய்ப்புள்ளது. சமஸ்க்ரித்த ஆசிரியர் பார்பனர்தான்

Ananda Ganesh திமுக தலைவர் வீட்டுப் பிள்ளைகள் பலர் தரம் வாய்ந்த மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படிப்பவர்கள்தானே. அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களா ?

Vetri Kondaan: Ananda Ganesh அந்த திமுக சமஸ்க்ரித்த பண்டிதர்கள் யார்? கொஞ்சம் பெயர்களை சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

Ananda Ganesh திமுகவில் முன்பிருந்த அளவு தமிழ்ப் பண்டிதர்களை இப்போது காட்டுவதே கடினம். செம்மொழிப் பண்டிதர்களைக் காட்டுவது எப்படி சாத்தியம் ? நான் தலைவர்களின் பிள்ளைகள் பற்றியல்லவா பேசுகிறேன்.

திமுக தலைவர்களின் பிள்ளைகள் மாநில அரசுப் பள்ளிகளில் படிக்காமல் மத்திய அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். அங்கே அவர்கள் ஹிந்தியோ, செம்மொழியோ படிக்கவில்லை என்று நீங்கள் சொல்லுங்களேன்.

ஏன் திமுக தலைவர்களின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் மாநில அரசுப் பள்ளிகளில் படிக்கவில்லை ?

கழக்த் தலைவரின் சமச்சீர் கொள்கை கொண்டு சீரும் சிறப்பும் பெற்ற பின்பும்கூட ஏன் அங்கே வெயிலுக்கும் ஒதுங்குவதில்லை ?

மத்திய அரசின் கல்விக் கொள்கையை மாநிலத்துக் கட்சி ஏன் எதிர்க்கிறது ?

ஏனெனில், மாநிலக் கட்சியான திமுக தலைவர்களின் பிள்ளைகள் அனைவரும் மத்திய அரசின் பள்ளிகளில்தான் ஜெர்மனோ, ஃப்ரெஞ்சோ விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கிறார்கள்.
இதுவரை ஜெர்மன், ஃப்ரெஞ்ச் போன்ற வாய்ப்புகளோடு செம்மொழியும் வாய்ப்பாக வைக்கப்படுமானால், தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இதுவரை படித்ததோடு செம்மொழியும் கற்று கஷ்டப்பட வேண்டி வருமே.

அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால், தலைவர்கள் சும்மா இருக்க முடியுமா ?

அத்துடன், பெரும்பாலான திமுக தலைவர்களின் குடும்பத்தார் பள்ளிகள் நடத்துகின்றனர். அவை தலைவர் கலைஞர் ஸ்ரீமான் கருநாநிதி ஜி செம்மாந்து கொண்டு வந்த சமச்சீர் கல்வி நடாத்தும் மாநில அரசுப் பள்ளிப் பாடத்திட்டப்படியான பள்ளிகள் அல்ல.

நிறைய டொனேஷன்கள் கேட்கும், பணக்கார  வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும்  மத்திய அரசுப் பாடத்திட்டம் உள்ள பள்ளிகள். ஜெர்மன், ஃப்ரெஞ்ச் ஆசிரியரோடும் இப்போது செம்மொழிக்கும் ஒரு ஆசிரியரைப் போட்டு அவருக்கு சம்பளம், போனஸ், பொங்கல்/தீபாவளிப் படிகள் உள்ளிட்டவற்றையும் தரவேண்டும்.  இத்தனை ஆசிரியர்களை வைத்து சம்பளம் கொடுத்துப் பணம் செலவழிக்க மனம் வருமோ ?

இதோ எழுந்தது சனாதனக் கல்வி கொள்கைக்கு எதிராகப் போராட்டம் ! :)

திமுக தலைவர்களின் குடும்பத்தார் நடத்தும் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க முடியாத கழகத் தொண்டர்களே, திரண்டு வாரீர் !

Series Navigationஅமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  ராஜேந்திரன் says:

  இது பார்ப்பனரின் குலக்கல்விக்கு எதிரான போர். கலைஞரின் மகன், அண்ணன் வீரமணியின் மகன் தலைமையில் தொடரும் போர். நாளை இவர்களது பேரன்கள் தலைமையில் குலக்கல்வி எதிர்க்கப்படும். போர். போர்.

  1. Avatar
   BSV says:

   தன்னையறியாமலே சரியாகச் சொல்லி விட்டார் திரு இராஜேந்திரன் என்று நினைக்கிறேன். இறுதிச்சொற்களில்…”போர்…போர்.”

   மார்க்ஸ் நம் வாழ்க்கையே ஒரு வர்க்கப்போராட்டம் என்றார். அதன் உட்பொருள் யாதெனில், மனித சமூகம் வர்க்கப்பேதங்களினால் இறுகியே வாழ்ந்து கொண்டேயிருக்கும். அப்பேதங்களினடியில் நைந்து உழல்வோர் தங்களை விடுவித்து விடுதலைக்காற்றை சுவாசிக்க, தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்க வேண்டும். மார்க்ஸ்சைப் பொறுத்தவரை, இப்போரட்டம் ஒரு நாள் வெற்றி காணலாம். அவர்களுக்கு விடுதலை கிடைக்கலாம் என்று நம்பிக்கை கொள்ளலாம். (நம்பிக்கை இல்லையென்றால் எவருமே போராடமாட்டார்கள் என்பது வேறு கதை :-)) என்னைப்பொறுத்தவரை போராட்டம் ஒரு தொடர்கதை.

   இங்கேயும் அதுவே. பொருளாதாரா வர்க்க பேதத்தைச் சொன்னார் அவர். இங்கு பொருளாதாரத்தை வசதியாக நிலைநாட்டிக்கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்யும் வர்க்கம் பல கரணிகளை வைத்து விளையாடுகிறது. அதொலொன்றுதான் கல்வி. கல்விக்கொள்கை என்றுமே சமன்செய்து சீர் தூக்கும் நிலைக்கு வராமல் தடுக்க வலிமை வாயந்த வர்க்கங்கள் முன்னிற்கும். அதனால் நலிந்துவிடாமல் தம்மைக்காத்துக் கொள்ளத்துடிக்கும் கீழ்நிலைக் குடிகள், த‌ம் வரும்சந்ததி அழிந்து நைந்துவிடக்கூடாதே என அபயக்குரலை எழுப்பும் போராட்டத்தை இராஜேந்திரன் சார் அழகாகச் சொல்லி விட்டார். அதாவது போர் போர் பல வரும் தலைமுறைகளாக.

   போர் ஓயாது. ஓய்ந்தால் அழிந்தோம். வாழ்க்கைப்போராட்டத்தில் சோர்ந்துவிடாதீர். என்ற உன்னதமான சிந்தனையை முன் வைத்த இராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த‌ நன்றிகள்.

   //இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
   கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
   எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்//

   இல்லையா சார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *