தோரணங்கள் ஆடுகின்றன‌!

This entry is part 4 of 14 in the series 14 ஆகஸ்ட் 2016

 

தேசத்தின் தலைநகரின்

அகன்ற வீதியில்

அலங்கார வண்டிகள்

மிதந்து செல்கின்றன.

நம் சுதந்திரத்தின்

வரலாற்றுப்பாதையில்

ரத்தச்சேறுகள் புதைகுழியாய்

நம்மை அமிழ்த்த‌

கண்ணீர்ப்படுகுழிகள்

நம்மை மூழ்கடிக்க‌

ஒரு நள்ளிரவில்

விண்ணின் துணி கிழிந்து

வெளிச்சம் மூன்று வர்ணத்தில்

நம் கண் கூச வைத்தது.

இருட்டு மட்டும் நம் மீது

இன்னும்

நான்கு ஐந்து வர்ணங்களில் தான்.

அவமானப்பட்ட நம் தாயின் தலை

கண்ணீர் வழிய‌

குனிந்தே தான் இருக்கிறது

எழுபதாவது  வானம்

இப்போதும்

விடிவெள்ளியை

நம் முகத்திற்கு எதிராய்

மினுக்குகிறது.

தினம் தினம்

விடிவெள்ளிகள்

நமக்கு இடி வெள்ளிகள் தான்.

குடல் கிழிக்கும் அவதாரங்கள்

தலை அறுக்கும் அவதாரங்கள்

போர் என்று தர்மம் சொல்லி

பிணங்கள் குவிக்கும் அவதாரங்கள்

இன்னும் இன்னும்

இந்த ஆயுதக்குவியல்கள் ஏன்?

யாரை? எதற்கு நான் கும்பிடவேண்டும்?

என் சிந்தனைகளும்

மூளைக்கருவூலங்களும்

எனக்கு வழிகாட்டும்போது

எதற்கு இந்த புகைமூட்டங்களையும்

நெய்யூற்றி கூச்சல் போட்டு

வளர்க்கும் தீ நாக்குகளையும்

வளைந்து வளைந்து

வணங்க வேண்டும்.?

வெறும் சோற்றுக்கு

இந்த விலங்குகளை அடித்து நொறுக்கவில்லை.

மன ஊற்றுக்குள் சுரக்கும்

அறிவின் சுடர்க்கொழுந்துகளுக்கு

சிறைக்கூடங்கள் தயார் செய்யும்

மதக்கிடங்கில்

வீழ்ந்து கிடக்க‌

நாம் பெறவில்லை இந்த சுதந்திரம்!

வானம் முட்ட முட்ட‌

பறப்போம் நாம்.

நம் சிறகுச் சத்தங்கள்

எத்தனை கோடி ஒளியாண்டுகளும்

கடந்து அதிரும்.

பாழ்வெளி மணலும் கூட

நம் காகிதங்களே

நாம் எழுதும் வரலாற்றுவரிகள்

அங்கே காத்திருக்கும்

அங்கிருந்து நீட்டும்

நேசக்கரங்களுடன் கை கோர்க்க‌

நாம் எப்போதும் காத்திருக்கிறோம்.

அதை வரவேற்கும்

புன்னகை நெளிப்புகளாக‌

இந்த தோரணங்கள் ஆடுகின்றன!

Series Navigationமதம்கவி நுகர் பொழுது-7 (வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் ,’மெல்லின தேசம்’, கவிதை நூலினை முன் வைத்து)
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *