யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

author
8
0 minutes, 37 seconds Read
This entry is part 14 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

 

 

பி.ஆர்.ஹரன்

 

ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறிவருகிறார்கள். மறுபக்கம், கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்காமாகும் என்றும், யானைகளை கோவில்களிலிருந்து விடுவிப்பது அந்தப் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். யானைகளின் நலனைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஹிந்து கோவில்களையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள் ஆன்மிக ஆர்வலர்களும், ஹிந்து அமைப்பினர்களும். இதற்குச் சான்றாக, ஆதாரமாக, சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையையும், ஆவணப்படத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

இந்தியாவிலேயே கேரளத்தில் தான் அதிகமான அளவில் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இருக்கின்றன என்பதையும், அதிகமான அளவில் அவை துன்பத்திற்குள்ளாகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகவே, அம்மாநிலம் பிராணிகள் நல அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கவனத்திற்குச் சென்றதில் வியப்பில்லை.

 

லிஸ் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய கட்டுரையாளர் கேரள மாநிலத்திற்கு வந்து தான் கண்ட சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நிலையைக் குறித்து இங்கிலாந்து நாட்டில் வெளியாகும் “தி மெயில்” (The Mail) பத்திரிகையில், இந்திய சுதந்திர தினமான 15 ஆகஸ்டு 2015 அன்று, “சுற்றுலாப் பயணிகளுக்காக சித்திரவதை செய்யப்படும்; 20 ஆண்டு காலம் ஒரேயிடத்தில் சங்கிலியால் கட்டுண்டு கிடக்கும்; ரகசிய வன பயிற்சி முகாம்களில் அடித்து அடிமையாக்கப்படும்; இந்திய யானைகளின் கொடூர நிலை” என்கிற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிட்டார்.

Liz Jones

அதே போல, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போது கனடா நாட்டுக் குடியுரிமை பெற்றவருமான சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளர், 2013-ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையாரின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது தன் பூர்வீகமான கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், கோவில்களில் யானைகள் கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்க்க நேர்ந்ததாகவும், அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் முடிவு செய்தபடியே, “விலங்கிடப்பட்ட கடவுள்கள்” (Gods in Shackles) என்கிற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

 

ஆன்மிக ஆர்வலர்களும், ஹிந்து அமைப்பினரும், தங்களுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, லிஸ் ஜோன்ஸின் கட்டுரையையும், சங்கீதா ஐயரின் ஆவணப்படத்தையும் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

 

கட்டுரையும் கட்டுரையின் பாதிப்பும்

 

இந்திய யானைகளின் கொடூர நிலையைப் பற்றி எழுதியுள்ளதாகக் கூறப்படும் தன்னுடைய கட்டுரையில் லிஸ் ஜோன்ஸ் பின்வரும் சில முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறார்.

 

  • ஜனவரி 2015-ல் “ஆசிய யானைகளைக் காப்பாற்றுவோம்” (Save The Asian Elephants) என்கிற அமைப்பைத் தோற்றுவித்த லண்டன் வழக்கறிஞரான டன்கன் மெக்னாய்ர் என்பவருடன் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.
  • கேரளக் கோவில்களில் யானைகள் மரங்களுடன் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கட்டப்பட்டுள்ளன. உலோக அங்குசங்களால் அடித்தும் குத்தியும் துன்புறுத்தப்படுகின்றன.
  • கோவில்களில் பணிபுரியக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, யானைகள் ரகசிய வனமுகாம்களில் வைக்கப்பட்டு “பயிற்சி” என்கிற பெயரில் கொடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. கேரளாவில் மொத்தம் 12 “ரகசிய” முகாம்கள் இருக்கின்றன.
  • குருவாயூர் கோவில் வாசலில் தேவி என்கிற யானை 35 வருடமாக ஒரே இடத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. கோவில் தலைவர்களாக இருக்கும் வியாபாபாரிகளும் அரசியல்வாதிகளும் தேவியை நடைப்பயிற்சிக்குக்கூட விடுவிப்பதில்லை.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை யானைகள் 100 முதல் 150 திருவிழாக்களில் கலந்துகொள்கின்றன. இதற்காக அவை 3750 கிலோமீட்டர்கள் பயணத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன.
  • யானைகள் எப்போதும் பாகன்களைச் சார்ந்து இருக்கவேண்டும் என்பதற்காக அவைகளின் கண்கள் அடிக்கடி தற்காலிகமாகக் குருடாக்கப்படுகின்றன.
  • ஆண் யானைகளின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு ஊசிகள் மூலம் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் யானைகள் இறந்தும்போகின்றன.
  • யானைகளுக்குத் தென்னைமட்டைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. விதம் விதமான புற்களும், காய்கனிகளும், கீரைகளும் சாப்பிடும் வனவிலங்கான யானைக்கு வெறும் தென்னை மட்டைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும் யானைகளுக்கு திருச்சூர் பூரம் திருவிழாவில் 5 முதல் 10 லிட்டர் வரை தான் குடிநீர் வழங்கப்படுகின்றது.
  • ஒரு யானையின் விலை 68 லக்ஷம் ரூபாய்கள் (80,000 பௌண்டுகள்); விழாக்களில் ஒரு மணிநேரத்திற்கு யானையின் வாடகை 4,25,000 ரூபாய் (5000 பௌண்டுகள்).
  • குருவாயூர் கோவிலில் சில குடும்பத்தினரைக் கேட்டபோது சிலர் யானைகளுக்காகப் பரிதாபப்பட்டாலும் பலர் யானைகள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உலகெங்கிலிருந்தும் ஹிந்துக்கள் கோவில்களுக்கு நிதி அனுப்பினாலும், இவர்கள் கட்டணம் கட்டித்தான் கோவிலுக்குள் நுழைந்துள்ளார்கள்.
  • வெங்கடாசலம் என்கிற ஒரு யானை நிபுணரைச் சந்தித்தேன். கோவில்களில் யானைகள் நடத்தப்படும் விதத்தை விமரிசனம் செய்து கண்டித்தால், அச்செயல் ஹிந்து மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானதாகப் பார்க்கப் படுமா என்று அவரிடம் கேட்டேன். அவர் அதை மறுத்தார். அதற்கு நேர்மாறானது என்றார். 1969க்கும் முன்பு குருவாயூர் கோவிலில் யானைகள் கிடையாது என்றும் நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோதுதான், ஹிந்துக்கள் யானைகளைப் பராமரிக்க முடியாமல் கோவில்களுக்கு அளித்தனர் என்றும் கூறினார். திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது 1970 களில் தான் ஆரம்பித்தது என்றார்.
  • 12 ரகசிய முகாம்களையும் இழுத்து மூடவேண்டும்; குருவாயூர் கோவிலிலிருந்து 57 யானைகளையும் விடுவிக்க வேண்டும்; விடுவிக்க வேண்டும்; விடுவிக்க வேண்டும்.

Punnathur Kotta - Guruvayur

இப்பேர்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய, யானைகளின் துன்பம் மிகுந்த வாழ்க்கையை விவரிக்கும் ஒரு சோகமயமான கட்டுரையைப் படிப்பவர்கள் மனதில் கேரளக் கோவில்கள் மீதும், கோவில் திருவிழாக்கள் மீதும், கோவில் நிர்வாகங்கள் மீதும், ஆன்மிகப் பாரம்பரியம் மீதும் ஒரு வெறுப்பும் ஆத்திரமும் இயற்கையாகவே ஏற்படத்தான் செய்யும். அதுவும் அந்தக் கட்டுரையில் யானைகள் துன்புறுத்தப்படும் படங்களையும் இணைத்திருந்ததால் பார்த்துப் படிப்பவர்கள் மனம் மேலும் பாதிப்படையும் என்பதில் சந்தேகமில்லை.

 

இந்தக் கட்டுரை விஷயத்தில் அது உண்மையாகவே நடந்தது. இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி இந்தியப் பத்திரிகைகள் பல கட்டுரைகளைப் பிரசுரம் செய்தன. இந்தக் கட்டுரை மற்ற இணையதளங்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. பிராணிகள் நல அமைப்புகள் இந்தக் கட்டுரையைப் பரப்பின. உலகெங்கும் உள்ள மக்களின் மனதில் கேரளக் கோவில்கள் பற்றியும், கோவில் திருவிழாக்கள் பற்றியும் ஒரு தவறான எண்ணத்தை இந்தக் கட்டுரை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

 

மறுப்புக் கட்டுரைகள்

 

அதே சமயம் இந்தக் கட்டுரைக்கு மூன்று பேரிடமிருந்து மறுப்பு வந்தது. முதலாவதாக, இந்தக் கட்டுரை வெளியான மூன்றாவது தினமே, அதாவது ஆகஸ்டு 18-ம் தேதியே, Peepli.org என்கிற இணையதளத்தின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான பிரேம் பணிக்கர், லிஸ் ஜோன்ஸின் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்து கட்டுரை வெளியிட்டார். லிஸ் ஜோன்ஸ் தன் கட்டுரையில் பாதி-உண்மைகளையும் கற்பனைகளையும் கலந்து எழுதியுள்ளார் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி அந்த மறுப்புக் கட்டுரையை எழுதியுள்ளார் பிரேம் பணிக்கர்.

Prem Panicker

லிஸ் ஜோன்ஸின் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ள பொய்கள் பின்வருமாறு:

 

  • லிஸ் ஜோன்ஸ் எழுதியது: – குருவாயூர் கோவில் வாசலில் தேவி என்கிற யானை 35 வருடமாக ஒரே இடத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. கோவில் தலைவர்களாக இருக்கும் வியாபாபாரிகளும் அரசியல்வாதிகளும் தேவியை நடைப்பயிற்சிக்குக்கூட விடுவிப்பதில்லை.

பணிக்கரின் மறுப்பு: – குருவாயூர் கோவிலுக்கு இரண்டு வாயில்கள் இருக்கின்றன. பிரதான வாயில் கிழக்கைப் பார்த்தும், மேற்குப்புறம் ஒரு வாயிலும் இருக்கின்றன. கோவில் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை வாயிலில் யானைகள் கட்டப்பட்டதில்லை. உண்மை இவ்வாறு இருக்கும்போது, தேவி என்கிற யானை 35 வருடமாக, கோவில் வாயிலில் ஒரே இடத்தில் கட்டப்பட்டிருந்தது என்பதாக அவர் எழுதியது அப்பட்டமான பொய். மேலும், தினமும் கோவிலில் ஸ்ரீவேலி ஊர்வலத்தில் நடுவில் ஆண்யானையும் இரு பக்கமும் பெண்யானைகளுமாக மூன்று யானைகள் இறைவன் திருவுருவை ஏந்திச் செல்லும். தேவி என்கிற யானையும் இவ்வூர்வலத்தில் பலமுறை பங்கேற்றதுண்டு. உண்மை இவ்வாறாக இருக்கும் பக்ஷத்தில், தேவியின் நடைப் பயிற்சிக்குக்கூட நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதும் பொய்யான செய்தியே.

 

  • லிஸ் ஜோன்ஸ் எழுதியது: – யானைகளுக்குத் தென்னைமட்டைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. விதம் விதமான புற்களும், காய்கனிகளும், கீரைகளும் சாப்பிடும் வனவிலங்கான யானைக்கு வெறும் தென்னை மட்டைகள் மட்டுமே கொடுகப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும் யானைகளுக்கு திருச்சூர் பூரம் திருவிழாவில் 5 முதல் 10 லிட்டர் வரை தான் குடிநீர் வழங்கப்படுகின்றது.

பணிக்கரின் மறுப்பு: – தென்னை மட்டைகள் யானைகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் ஒன்று. தென்னை மட்டைகளைத் தும்பிக்கையில் ஏந்திக்கொண்டு யானைகள் நடந்து செல்வது கேரளாவில் சர்வசாதாரணமான காட்சி. ஆனால் குருவாயூர் கோவில் யானைகளுக்கு, தென்னை மட்டைகள் மட்டுமல்லாமல், வாழைத்தார்களும், கோரைப் புற்களும், காய்கறிகளும், பழங்களும், ராகி அரிசி கலந்து சோறுகளும் கூட கொடுக்கப்படுகின்றன. மேலும் “ஆனையூட்டு” என்கிற ஒரு சம்பிரதாயமும் கோவில்களில் உண்டு. பக்தர்கள் வேண்டிக்கொண்டு யானைகளுக்குப் பலவிதமான உணவுகளை ஊட்டுவார்கள். இவ்வளவு விதம்விதமான உணவுகளைக் கொடுப்பவர்கள் குடிநீர் கொடுக்காமல் இருப்பார்களா? யானைகளுக்கு வேண்டிய அளவு குடிநீரும் கொடுக்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் யானைகளுக்கு “சுக சிகிச்சை” என்கிற ஆயுர்வேத அடிப்படையிலான புத்துணர்ச்சி முகாமும் நடத்தப்படுகின்றது.

 

  • லிஸ் ஜோன்ஸ் எழுதியது: – குருவாயூர் கோவிலில் சில குடும்பத்தினரைக் கேட்டபோது சிலர் யானைகளுக்காகப் பரிதாபப்பட்டாலும் பலர் யானைகள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உலகெங்கிலிருந்தும் ஹிந்துக்கள் கோவில்களுக்கு நிதி அனுப்பினாலும், இவர்கள் கட்டணம் கட்டித்தான் கோவிலுக்குள் நுழைந்துள்ளார்கள்.

பணிக்கரின் மறுப்பு: – லிஸ் ஜோன்ஸ் பார்த்துப் பேசிய குடும்பத்தினர் எதற்காகச் சிரித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்திக் கோவிலுக்குள் வந்தார்கள் என்று அவர் எழுதியிருப்பது தான் சிரிப்பாய் சிரிக்கத் தகுந்தது. குருவாயூர் கோவிலுக்குள் நுழைய கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பது உலகுக்கே தெரிந்த உண்மை.

 

  • லிஸ் ஜோன்ஸ் எழுதியது: வெங்கடாசலம் என்கிற ஒரு யானை நிபுணரைச் சந்தித்தேன். கோவில்களில் யானைகள் நடத்தப்படும் விதத்தை விமரிசனம் செய்து கண்டித்தால், அச்செயல் ஹிந்து மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானதாகப் பார்க்கப் படுமா என்று அவரிடம் கேட்டேன். அவர் அதை மறுத்தார். அதற்கு நேர்மாறானது என்றார். 1969க்கும் முன்பு குருவாயூர் கோவிலில் யானைகள் கிடையாது என்றும் நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோதுதான், ஹிந்துக்கள் யானைகளைப் பராமரிக்க முடியாமல் கோவில்களுக்கு அளித்தனர் என்றும் கூறினார். திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது 1970 களில் தான் ஆரம்பித்தது என்றார்.

பணிக்கரின் மறுப்பு: – கோவில்களில் யானைகள் நடத்தப்படுவது குறித்து விவாதிப்பது ஹிந்துக்களின் கோவத்தை சம்பாதிக்காது. அதைப் பற்றிப் பிறகு பார்ப்போம். கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது 1970களில் தான் என்று திரு.வெங்கடாசலம் சொன்னதாக எழுதியுள்ளார். குருவாயூர் கோவிலில் 1928 ஜனவரி 27-ம் தேதி பத்மனாபன் என்கிற யானை இறந்துள்ளது. குருவாயூர் கேசவன் என்று பெரும்புகழ் பெற்ற யானை 1922-லேயே கோவில் பணிக்கு வந்துவிட்டது. நிலாம்பூர் மகாராஜா ஸ்ரீ மானவேதன் கேசவனை நன்கொடையாகக் கொடுத்தார். மேலும் கோவில் திருப்பணிகளில் யனைகள் 19-ம் நூற்றாண்டிலிருந்தே இருந்துள்ளதை கொட்டாரத்தில் சங்குன்னி என்கிற எழுத்தாளர் தன்னுடைய ஐதிஹ்யமாலா என்னும் நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

 

இவை போல லிஸ் ஜோன்ஸ் எழுதியுள்ள மேலும் சில திரிபுகளையும் கற்பனைகளையும் சுட்டிக்காட்டிய பிரேம் பணிக்கர் பின்வருமாறு தன் கட்டுரையில் எழுதுகிறார்: –

 

“லிஸ் ஜோன்ஸின் கட்டுரையைப் பொருத்தவரை, கேரள மாநிலத்தவனாகவும், கோவில்களுக்குச் சென்று வரும் ஹிந்துவாகவும் என்னுடைய எதிர்வினை என்னவென்றால், இக்கட்டுரை வேடிக்கையாக பொழுதைப் போக்க உதவியது என்பதாகும். ஆனால் ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில், என்னுடைய எதிர்வினை உள்ளுணர்வுகள் சார்ந்ததாகவே இருக்கும். திரிபுகள், கற்பனைகள், மிகைப்படுத்தல்கள் என்று இந்தக் கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது. ஆனால் இன்றைய இண்டர்நெட் யுகத்தில், சில நிமிடங்களிலேயே இந்தக் கட்டுரை பொய்கள் நிறைந்தது என நிரூபித்துவிட முடியும். மேலும், இக்கட்டுரை ஒரு விதமான இனவெறியுடன் எழுதப்பட்டுள்ளது. யானைப் பாகன்களை யானைகளின் துன்பத்தில் மகிழும் வனவாசிகள் என்று குறிப்பிடுகிறார். இவர் உண்மையைக் கண்டு எழுதுவதற்காக இங்கே வரவில்லை, இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற முன்முடிவுடன் இங்கே வந்ததாகத் தெரிகிறது. இவருடைய கட்டுரையின் தொனியும் அப்படித்தான் இருக்கிறது”.

 

“குருவாயூரிலும் கேரளாவிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குத் துன்பம் இழைக்கப்படுவதில்லை என்று நான் சொல்லவில்லை. இங்கே பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் லிஸ் ஜோன்ஸ் எழுதியுள்ளது போல அல்ல. இருக்கின்ற பிரச்சனைகளைப் பலமுறை பிராணிகள் நல ஆர்வலர்கள் ஆவணப்படுத்தியுள்ளார்கள். 2012-ல் இந்திய விலங்குகள் நலவாரியம் (AWBI), Wildlife SOS அமைப்பைச் சேர்ந்த டாக்டர்.அருண் ஷா, CUPA அமைப்பைச் சேர்ந்த Suparna Ganguly ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளார்கள். அவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது”.

 

“இவையெல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமென்றால் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும். அதற்கு உண்மையான தகவல்கள் அடங்கிய செய்திக்கட்டுரைகள் மக்களைச் சென்றடையவேண்டும். கற்பனைகளும், பாதி உண்மைகளும், பொய்களும் கலந்த, முன்முடிவுகள் கொண்ட, சுயநலன் சார்ந்த லிஸ் ஜோன்ஸ் எழுதியதைப் போன்ற கட்டுரைகள் கூடாது”.

 

லிஸ் ஜோன்ஸின் கட்டுரையைப் படித்த போது நமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் வேதனையும், பிரேம் பணிக்கரின் கட்டுரையைப் படித்தவுடன் அப்படியே மறைந்துவிடுகின்றன. லிஸ் ஜோன்ஸின் கட்டுரையில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், பணிக்கர் சுட்டிக்காட்டி நிரூபித்துள்ள பொய்கள், லிஸ் ஜோன்சின் கட்டுரையின் பின்னேயுள்ள மறைமுக நோக்கத்தை நமக்கு எடுத்துக்காட்டி விடுகின்றது.

 

கல்யாண் வர்மாவின் மறுப்புக் கட்டுரை

 Kalyan Varma

கல்யாண் வர்மா கேரளாவைச் சேர்ந்த சிறந்த வனவுயிரினங்கள் புகைப்பட பத்திரிகையாளர்களுள் (Wildlife Photojournalist) ஒருவர். மிகவும் திறமையும் அனுபவமும் வாய்ந்தவர். ஆய்வாளரும் கூட. இவரும் லிஸ் ஜோன்ஸின் கட்டுரை வெளியானா மூன்றாவது நாளே, அதாவது ஆகஸ்டு 18-ம் தேதியே (2015) ஒரு கட்டுரை வெளியிடுகிறார். அதில் லிஸ் ஜோன்ஸின் கட்டுரையின் பின்னணியையும், நடந்த உண்மையையும் இவர் பின்வருமாறு தெளிவாக விளக்குகிறார்:

 

“லிஸ் ஜோன்ஸின் கட்டுரை காலவரிசைப்படி தவறாகவும், உண்மைகளை மறைத்தும் எழுதப்பட்டுள்ளது. அடிப்படை பத்திரிகை தர்மம் இல்லாமலும் எழுதப்பட்டுள்ளது. இதைச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம் இல்லை. இருந்தாலும், உண்மையின்றி கற்பனைகளை அதிகமாகக் கொண்டும், பரபரப்பை நோக்கமாகக் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையினால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்கு நன்மைகளைவிட பாதிப்புகளே அதிகம் ஏற்படக்கூடும் என்பதால் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்”.

 

“கர்நாடக மாநிலம் ஹஸ்ஸன் பகுதியில் சில யானைகள் வனத்துறையினால் சிறைப்பிடிக்கப்பட்டதை, அவர்களுடன் இருந்த நான், புகைப்படங்களுடன் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையைப் பார்த்த டன்கன் மெக்னாய்ர் என்பவர் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். தான் இங்கிலாந்தில் வழக்கறிஞராக இருப்பதாகவும், ஆசிய யானைகளின் பாதுகாப்புக்காக “Save The Asian Elephants” (STAE) என்கிற அமைப்பை நடத்தி வருவதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டார். தான் இந்தியா வருவதாகவும், கேரளக் கோவில்களிலும் கர்நாடக முகாம்களிலும் உள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆய்வு செய்யவும் விரும்புவதாக எழுதியிருந்தார். நானும் நம்பிக்கையின் பேரில் அவருக்குச் சில தகவல்களைக் கொடுத்தேன்”.

 

“சில வாரங்கள் கழித்து டன்கன் மெக்னாய்ர் இந்தியா வந்தார். ஆனால் என்னிடம் சொல்லியது போல தனியாக வரவில்லை. தன்னுடன் லிஸ் ஜோன்ஸ் என்கிற புகைப்பட நிருபரையும் அழைத்து வந்திருந்தார். இது நான் சற்றும் எதிர்பாராதது. இருப்பினும் அவர்களுடன் நன் பல மணிநேரங்கள் யானைகள் பற்றியும், மனிதருக்கும் யானைகளுக்கும் இடையேயான போராட்டங்கள் பற்றியும், யானைகள் வசப்படுத்தப்படுவது பற்றியும் விவாதித்தேன். மெக்னாய்ர் ஓரளவுக்கு கவனத்துடன் புரிந்துகொண்டாலும் லிஸ் ஜோன்ஸ் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் இருந்தது போலத்தான் எனக்குத் தோன்றியது. நானோ, பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மற்ற சிலரோ எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், அவர்கள் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த முன்முடிவுகளையோ, அவர்கள் கொண்டிருந்த அரைகுறையான தகவல்களையோ எங்களால் மாற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை”.

 

“லிஸ் ஜோன்ஸ், டன்கன் மெக்னாய்ரின் நிதியுதவியுடன் இங்கே வந்துள்ளார். யானைகளின் சித்திரவதையைப் பற்றி எழுதுவதையே நோக்கமாகக் கொண்டு அவர் வந்துள்ளார். அவர்களைப் பெங்களூரில் தான் முதலில் சந்தித்தேன். கர்நாடகத்தில் யானைகள் வியாபாரமயமாக்கப் படவில்லை. இங்கே சித்திரவதைகள் செய்வதில்லை என்று நான் சொல்லியதை லிஸ் ஜோன்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பல கேள்விகள் கேட்டாலும் என்னுடைய விவரமான பதில்களை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர் தான் என்ன எழுதவேண்டும் என்பதை முன்பாகவே முடிவு செய்துவிட்டது போலவும் அதற்கான சான்றுகள் தான் அவருக்குத் தேவைப்படுகிறது என்றும் எனக்குத் தோன்றியது”.

 

மேற்கண்டவாறு கூறியுள்ள கல்யாண் வர்மா, பிரேம் பணிக்கரைப் போலவே பின்வருமாறு லிஸ் ஜோன்ஸின் கற்பனைகளை சுட்டிக்காட்டுகிறார்:

 

  • லிஸ் ஜோன்ஸ் எழுதியது: கோவில்களில் பணிபுரியக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, யானைகள் ரகசிய வனமுகாம்களில் வைக்கப்பட்டு, “பயிற்சி” என்கிற பெயரில் கொடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. கேரளாவில் மொத்தம் 12 “ரகசிய” முகாம்கள் இருக்கின்றன.

கல்யாண் வர்மாவின் மறுப்பு: இந்த யானை முகாம்களில் எந்த ரகசியமும் இல்லை. வனத்திலிருந்து பிடித்து வரப்பட்ட யானைகள் என்பதால், புதிய சூழ்நிலைகளுக்கு மாறும் நிலையில் அவை உள்ளன. இந்த இடைமாறுபாட்டுக் காலத்தில் (Transitional Phase) அவைகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொது மக்களை அனுமதிப்பதில்லை. மேலும் இந்த முகாம்களில் யானைகள் சுதந்திரமாக உலவ அனுமதிக்கப்படுகின்றன. எப்போதும் பாகன்கள் அவைகளுடன் இருப்பதில்லை. ஆகவே சுற்றுலா பயணிகளை உள்ளே அனுமதித்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றபடி இம்முகாம்களில் லிஸ் ஜோன்ஸ் சொல்வது போல எந்தவிதமான ரகசியமும் இல்லை.

 

  • லிஸ் ஜோன்ஸ் எழுதியது: – இந்த முகாம்களில் குடிசைகளில் வாழும் பாகன்கள் குடும்பத்துக் குழந்தைகள் யானைகள் மீது கற்களை எறிந்து

விளையாடுகின்றனர். சங்கிலிகளால் கட்டுண்டுகிடக்கும் யானைகள் பயத்தில்

நடுங்கிப் பின்வாங்குகின்றன. தங்களுடைய நவீன கைப்பேசியில் (Smart Phones)

யானைகளின் சித்தரவதை வீடியோவைப் பார்த்து மகிழ்கின்றனர் பாகன்கள்.

கல்யாண் வர்மாவின் மறுப்பு: பாகன்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்

மற்றும் யானைகளுக்குமான உறவு பிரமாதமானதாகும். பாகன்கள் வீட்டுச்

சிறுவர்கள் பெரிய ஆண்யானைகளுடன் சேர்ந்து காடுகளுக்குள் செல்வதை

நானே பலமுறைப் பார்த்திருக்கிறேன். ஆகவே குழந்தைகள் யானைகள் மீது

கற்களை எறிந்து விளையாடுகின்றனர் என்பதெல்லாம் மிகைப்படுத்திக்

கூறப்படுபவை. மேலும் பாகன்கள் கைப்பேசியில் வீடியோ காட்சிகளைப்

பார்த்தபோது நானும் லிஸ் ஜோன்ஸுடன் இருந்தேன். பாகன்கள்

பார்த்துக்கொண்டிருந்தது நான் எடுத்த வீடியோ படத்தைத்தான். அந்தப்

படக்காட்சிகளில் அவர்களும் இருந்ததால், மகிழ்ச்சியுடன் அதைப்

பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

மேற்கண்டவாறு மேலும் சில விஷயங்களை விளக்கும் கல்யாண் வர்மா, இறுதியாக, “சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பராமரிப்பில் நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவைகள் துன்பம் அனுபவிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. யானைகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது, பாகன்களையும், வனத்துறையினரையும் நம் வழியில் கொண்டு வந்து, தேவையான பயிற்சிகளைக் கொடுத்து, யானைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். லிஸ் ஜோன்ஸின் கட்டுரையின் நோக்கத்தைப் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், பரபரப்புக்காக கற்பனைகள் கலந்து எழுதப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பத்திரிகையாளராக இருப்பவர்களுடைய முதன்மையான பொறுப்பு உண்மையை திரிக்காமல் நேர்மையாக எழுத வேண்டும் என்பது தான். பிராணிகள் நலனை நோக்கமாகக் கொண்டு எழுதும்போது உண்மையைத் திரித்தும், பொய்களைச் சேர்த்தும் எழுதினால் அந்த நோக்கமே கெட்டுப்போகும்” என்று கூறி தன் மறுப்புக் கட்டுரையை முடிக்கிறார்.

 

ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணனின் மறுப்புக் கட்டுரை:

Sreedhar Vijaykrishnan

ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்த வனவுயிரியல் வல்லுனர் (Wildlife Biologist). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பராமரிப்புத் துறையில் பணி புரிந்து வருகிறார். இவர், லிஸ் ஜோன்ஸின் கட்டுரை வெளியான அடுத்த நாளே, அதாவது 2015 ஆகஸ்டு 16-ம் தேதியே ஒரு திறந்த மடலைக் கட்டுரையாக எழுதியுள்ளார். அதில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பிரச்சனைகளைத் தெளிவாக அணுகி நமக்கு பின்வருமாறு விளக்குகிறார்.

 

“சமீப காலங்களில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் குறித்து வெளியாகும் கதைகளும், தகவல்களும் அரைகுறையானதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கின்றன. நேரிடையான அனுபவமும் இன்றி, முறையான ஆய்வும் இன்றி, அவரவர் தங்கள் இஷ்டத்துக்கு எழுதுகின்றனர். தொடர்பில்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்படங்களை எடுத்துப் போட்டு கற்பனைகளைக் கலந்து எழுதுகின்றனர். இது மிகவும் அபத்தமாக இருக்கிறது. இது தவறான போக்காகும். இந்த மாதிரியான ஒரு கட்டுரைதான் லிஸ் ஜோன்ஸின் கட்டுரையும்”.

 

“இந்த மாதிரி மனம்போன போக்கில் எழுதுவதும், சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக்கொள்வதும், சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்கு எவ்விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை. நம் முன்னே இருப்பது ஓரிரண்டு யானைகள் அல்ல. நூற்றுக்கணக்கான யானைகள். இந்த யானைகளை ஒரே நாளில் வனத்திற்கு அனுப்ப முடியாது. சிறைப்படுத்தப்பட்ட நிலையில் பழக்கப்பட்டுவிட்ட யானைகள் திடீரென்று சுதந்திரமான வனச்சூழலுக்கு ஒத்துப்போக மிகவும் சிரமப்படும். அவைகளை மீட்டு, புத்துணர்வு கொடுத்து அவைகளுக்கு மறுவாழ்வு அமைத்துக்கொடுக்க வேண்டும். நம்மிடையே இருக்கும் நூற்றுக்கணக்கான சிறைப்படுத்தப்பட்ட யானைகளை மீட்டுக் கொண்டுபோவதற்குத் தேவையான அளவு புனர்வாழ்வு மையங்கள் இந்தியாவில் இல்லை. இது கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாகச் செய்ய வேண்டிய காரியம். சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பெரும்பான்மையானவை காச நோயினால் (TB) பாதிக்கப்பட்டவை. இவைகளை வனத்தில் கொண்டுவிட்டால் அங்கேயுள்ள மற்ற யானைகளுக்கும் சுலபமாக காச நோய் பற்றிக்கொள்ளும். இது யானைகளின் ஜனத்தொகைக்கே பேராபத்தாக முடியும். ஆகவே, உடனடியாக இந்த யானைகளை வனத்திற்கு அனுப்புவது என்பது இயலாத காரியம்”

 

“சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பராமரிப்பு என்பது பெரும்பாலும் பாகன்களைச் சார்ந்த விஷயமாகும். பாகன்கள் தங்கள் யானைகளுடன் ஒரு நெருங்கிய உறவைக் கொண்டுள்ளனர். தாம் பழக்கிய யானை இறந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்ட பல பாகன்களை நான் பார்த்திருக்கிறேன். யானைகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் தங்கள் குடும்பங்களை இழந்த பாகன்களையும் எனக்குத் தெரியும். அதே நேரத்தில் சமீப காலங்களில் பாகன்கள் யானைகளைக் கொடுமைப் படுத்துவதையும் நான் மறுக்கவில்லை. இது வியாபாரமயமாக்கலால் வந்த வினை”.

 

“எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு வேண்டுமென்றால் அந்தப் பிரச்சனையின் அடிவேருக்குச் சென்று புரிந்துகொள்ள வேண்டும். யதார்த்த நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சமீபத்தில் வெளியான லிஸ் ஜோன்ஸ் கட்டுரை போன்று உண்மைக்குத் தொடர்பின்றி, புறச்சாய்வுடன் எழுதப்படுபவைதான் தற்போது வெளிவருகின்றன. அவற்றைப் புறந்தள்ளி, பிரச்சனையை நியாயமாக அணுகி சம்பந்தப்பட்டவர்களையும் அருகில் கொண்டு சில நடவடிக்கைகளை எடுப்பதே நல்லது”.

 

“வியாபாரமயமாக்கலைக் கட்டுப்படுத்துவது, யானைகளின் வேலைப்பளுவைக் குறைப்பது, பாகன்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பது, பணிகள் தொடர்பான அழுத்தத்தைக் குறைப்பது, மேற்கொண்டு யானைகள் சிறைப்படுத்தப்படுவதை முற்றிலுமாகத் தடைசெய்வது போன்ற முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறும் ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன், மேற்கொண்டு மேலும் சில தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்ல முடிவு கண்டு யானைகளின் நலனைப் பாதுகாக்க முடியும் என்று எழுதியுள்ளார்.

 

என் கருத்து:

 

லிஸ் ஜோன்ஸின் கட்டுரையையும், அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட பிரேம் பணிக்கர், கல்யாண் வர்மா, ஸ்ரீதர் விஜய் கிருஷ்ணன் ஆகியோரின் கட்டுரைகளையும் படித்த பிறகு, லிஸ் ஜோன்ஸின் நோக்கம் யானைகளின் நலன் தானா அல்லது இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்துக்கு எதிரானதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.. விலங்குகள், குறிப்பாக யானைகள் பற்றிய அறிவும் இல்லாமல், நமது கோவில்கள் மற்றும் நமது ஆன்மிகப் பாரம்பரியம் பற்றியும் ஒன்றும் தெரியாமல், நம் நாட்டையும், நம் கலாச்சாரத்தையும், கலாச்சாரச் சின்னங்களான கோவில்களையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் எழுதியுள்ளதைப் போல் இருக்கிறது.

 

அவர் தன்னுடைய கட்டுரையை பின்வரும் வாசகத்துடன் முடிக்கிறார்:

 

“குருவாயூர் கோவிலில் உள்ள 57 யானைகளையும் நாம் விடுவிக்க வேண்டும்; மொத்தம் இருக்கும் 12 ரகசிய முகாம்களையும் இழுத்து மூடவேண்டும்; இந்த யானைகளை எடுத்துக்கொள்வதாக Wildlife SOS அமைப்பு என்னிடம் கூறியுள்ளது. நாம் இவைகளை விடுவிக்க வேண்டும்; நாம் இவைகளை விடுவிக்க வேண்டும்; நாம் இவைகளை விடுவிக்க வேண்டும்”.

 

லிஸ் ஜோன்ஸ் வெறும் பத்திரிகையாளர் மட்டுமே. ஆனால் டன்கன் மெக்னாய்ர் பிராணிகள் நல ஆர்வலராக அனுபவம் பெற்றவர். அப்படி இருக்கும்போது, இந்தியாவுக்கு வரும்போது லிஸ் ஜோன்ஸ் என்கிற பத்திரிகையாளரை அவர் எதற்காக அழைத்துவந்தார்? என்கிற கேள்வி நம் மனதில் எழுகின்றது. லிஸ் ஜோன்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு எழுதி வெளியிட்டிருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு டன்கன் மெக்னாய்ரின் நோக்கம் மீதும் நமக்கு சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் இவர்களின் நாடான இங்கிலாந்தில் இருக்கும் பிராணிகளின் நலன் பற்றிக் கவலைப்படாமல் இந்திய யானைகளின் நலன் பற்றிக் கவலைகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும் எழுகிறது.

 

அன்னிய நாடுகளின் NGOக்களும், அன்னிய நாடுகளின் நிதியுதவியைப் பெற்று இந்தியாவில் செயல்பட்டு வரும் NGOக்களும் பல துறைகளில் இந்திய விரோத செயல்களில் ஈடுபட்டுவருவதை நாம் பார்க்கிறோம். தற்போதைய மத்திய அரசும் அவற்றுக்கு எதிரான நவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி உதவி, மருத்துவ உதவி, மனித உரிமை, மதச்சார்பின்மை போன்ற போர்வைகளில் ஆயிரக்கணக்கான NGOக்கள் நமது தேசத்திற்கு விரோதமான நட்வடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், பிராணிகள் உரிமை என்கிற பெயரிலும் அவைகள் இயங்கமாட்டா என்று சொல்ல முடியாது. ஆகவே, இவ்விஷயத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.

 

அதே சமயம், சிறைப்படுத்தப்பட்ட யானைகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிற நிதர்சனமான உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. பிரேம் பணிக்கர், கல்யாண் வர்மா மற்றும் ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணனும் அந்த உண்மையை மறுக்கவில்லை. சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். அதைப் பற்றி மேலும் பார்ப்போம்.

 

 

(தொடரும்)      

 

 

குறிப்புகள்: –

 

லிஸ் ஜோன்ஸின் கட்டுரை:

 

http://www.dailymail.co.uk/news/article-3199391/Tortured-tourists-Chained-spot-20-years-Beaten-submission-secret-jungle-training-camps-terrible-plight-Indian-elephants-LIZ-JONES.html

பிரேம் பணிக்கரின் கட்டுரை:

http://peepli.org/blog/2015/08/18/temple-elephants-and-what-lies-beneath/

கல்யாண் வர்மாவின் கட்டுரை:

http://peepli.org/blog/2015/08/18/an-open-letter-to-dailymail/

ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணனின் கட்டுரை:

https://matangalila.wordpress.com/2015/08/16/an-open-letter/

Series Navigationஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இங்கே நிகழும் சிறு தவறுகளும் குற்றங்களும் வெள்ளையர்களுக்கு மிகவும் வசதியாகப்போய்விடுகின்றன. அதை ஊதிப்பெருக்கி அவதூறு பரப்பி அதில் தமது குறுகிய குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்கின்றனர். துறைசார் வல்லுனர்கள் மறுப்பு கொடுத்திருந்தாலும் இந்த அம்மாளின் ”கட்டுரை” அவர் விரும்பின பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இது போன்ற கருகிய மனசுக்காரர்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுமதிப்பதே பிழை.

    1. Avatar
      ஷாலி says:

      //இங்கே நிகழும் சிறு தவறுகளும் குற்றங்களும் வெள்ளையர்களுக்கு மிகவும் வசதியாகப்போய்விடுகின்றன. அதை ஊதிப்பெருக்கி அவதூறு பரப்பி அதில் தமது….//

      திரு.பொன்.முத்துக்குமார் அவர்களே! வெள்ளைக்காரன் யானைகளைப் பற்றிய தகவல் சேகரித்து கட்டுரை எழுதுகின்றான்.அவனுக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் நூறு சதம் உண்மையாக இருக்கும் என்பதை அவனும் நம்ப மாட்டான்.படிக்கும் வாசகர்களுக்கும் அது தெரியும்.படி அரிசி அள்ளிப்போடும் போது பத்து அரிசி சிந்தத்தான் செய்யும்.சிந்திய அரிசியை பொறுக்கி பொங்கி எழுவது ஏன்? உலகத்தில் எழுதப்படும் எல்லா கட்டுரைகளுக்கும் இது பொருந்தும்.

      ஆன்மீகத்தின் பேரால் அப்பாவி ஜீவன்கள் வதை படும் அசலான கருத்தை வெள்ளைக்காரன் பெயரில் திசை மாற்றி விடுவது ஏன்?சிறு தவறுகளை வெள்ளைக்காரர்கள் ஊதிப்பெருக்குகிறார்கள். சரி..உங்கள் வாதப்படியே..நமது நாட்டுக்காரர்,தமிழர் திரு.பி.ஆர்.ஹரன் அவர்கள் ஆறு வாரங்களாக தமிழக கோயில் யானைகள் படும் கொடும் வதையை விலாவரியாக விளக்கினாரே! அதையாவது உண்மை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கும் போலி ஆன்மீக குருட்டு தேச பக்தி கண்ணை மறைக்கிறதா?

      திரு.ஹரனின் ஆறு வார கால ஆனை அலசலுக்கு ஏன் ஒரு ஆன்மீக அன்பரும் எதிர்வினை ஆற்றவில்லை?கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. சாமியின் பெயரால் கடவுளின் பெயரால் அப்பாவி ஆனைகளை வதைப்பதை நிறுத்த குரல் கொடுங்கள்.இது ஒன்றும் சாமி குத்தமாகிவிடாது.

      வெள்ளைக்காரன் சொல்வதையெல்லாம் வேதம் என்று எடுத்துக்கொள்ளச் சொல்லவில்லை.அவைகளின் அசல் நோக்கத்தை ஆன்மீக போர்வை போட்டும், போலி தேசபக்தி முகமூடி போட்டு மறுப்பது அழகல்ல.”எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு!”.

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        // இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கும் போலி ஆன்மீக குருட்டு தேச பக்தி கண்ணை மறைக்கிறதா? //

        அவதூறு பரப்பும் ஒரே நோக்கத்தோடு மட்டுமே எழுதப்பட்ட கட்டுரையை – ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து வந்து எழுதப்படும் ஒரு கட்டுரையின் பின்னுள்ள நோக்கத்தை கண்டித்தால் அநாவசியமாக அநாகரிகமாக தனிமனித தாக்குதலில் இறங்கி பொங்கவேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் ?

        1. Avatar
          BSV says:

          அதைக்கண்டிக்கும் அதே வேளையில் அவ்விலங்குகளுக்காகவும் இறைவனின் பெயரால் இறைவன் படைத்த அப்பாவி ஜீவன்களுக்காகவும் பேசியிருக்க வேண்டும். பேசவில்லை.

          எனவே எக்காரணத்திற்காக (அதாவது உள்ளோக்கம்) அவர்களைக் கண்டித்தீர்களோ, அதே காரணத்திற்காக நீங்களும் கண்டிக்கப்படவேண்டும். அதை ஷாலி செய்ததாக உணர்கிறேன்.

          1. Avatar
            பொன்.முத்துக்குமார் says:

            நான் பேசவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது ? இனி நான் இடும் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் உங்கள் இருவரிடமும் காட்டி ஆசியும் ஒப்புதலும் சான்றிதழும் பெற்றபிறகு இடவா ?

  2. Avatar
    BSV says:

    ஆனைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதை இலிஸ் ஜோன்சுக்கு மறுப்புரை எழுதிய மூவரும் மற்றும் இக்கட்டுரையாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். பலே பலே…! பின் என்ன? அவ்விலங்குகளை விடுத்துக் காட்டுக்குள் விட வேண்டியதுதானே? அவை உடனே காட்டு வாழ்க்கைக்கு அட்ஜஸ்ட் பண்ணாதென்றால், கொஞ்சம்கொஞ்சமாகி பழக்கிவிடவேண்டியதுதான்.

    பாரம்பரியம், ஆன்மிகம் என்பவர்கள், இந்துமதத்தில் எங்கேயாயினும் கோயிலுக்குள் ஆனை கண்டிப்பாக இருக்க வேண்டுமென்று போட்டிருக்கிறதா? நண்பர்கள் ஹரனும் பொன் முத்துக்குமாரும் சொன்னால் நன்று.

    குருவாயூர் கோயில் வாயிலில் சிறைப்படுத்தப்படவில்லை என்று பெரிய கண்டுபிடிப்பைச் செய்த பணிக்கர், அதை எங்கே பிடித்தாலென்ன? கோயில் வளாகத்துக்குள்தானே சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது எனபதை வசதியாக மறைக்கிறார். குருவாயூர் கோயிலுக்கு நான் சென்றிருக்கிறேன். சாலையிலேயே நுழைத் தோரணவாயில் உண்டு. அதிலிருந்து தொடங்கும் சிறுசாலையில் நடந்து கோயில் முகப்புக்கு வரவேண்டும். அலலது கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வரிசையில் நிறகுமிடத்துச் செல்லலாம். அதற்கு முன் அச்சாலை முடியுமிடத்தில் பக்கவாட்டில் இருக்கும் மண்டபத்தில் ஆனை கட்டப்பட்டிருப்பதைப் பார்கலாம். இதைத்தான் இலின்சு கோயில் வாயில் என்று சொல்லிவிட்டார். அவர் வெள்ளைக்காரர். சாலை தொடங்குமிடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் வாயில் என்றே சொல்லியிருப்பார். இதையெல்லாம் பணிக்கர் சீரியசாக எடுத்து உண்மையைக்கண்டுபிடிக்கிறாராம். :-)

    வெள்ளைக்காரன் சொன்னாலென்ன? கறுப்பன் சொன்னாலென்ன? எவர் சொன்னாலென்ன? ஆனைகள் கோயில்களில் இரும்புச்சங்கிலிகளால் கட்டப்பட்டு துன்புறுத்தப்படுகின்றன எனபதை எல்லாருமே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். உண்மையா? பொய்யா?

    கேரளாவில் இக்கோயில் ஆனைகள் மதம் பிடித்துப் பலரைக்கொள்வது அடிக்கடி நடப்பது. கோயிலுக்கு ஆனைகள் தேவையில்லை. மதம் கட்டாயப்படுத்தவில்லை. ஆனை, குரங்கு, – இவை இம்மதத்தில் இறைவன் தொடர்புடைய விலங்குகள். அதனால் அவற்றைபிடித்துச் சிறைப்பிடித்துதான் வணங்க வேண்டுமெனப்தே இல்லை. வானத்தில் பறக்கும் கருடனை வைணவர்கள் பார்த்து வணங்குவது உண்டு. அதைப்போல ஆனையை, குரங்கை சிலைகளாக வணஙகிக்கொள்ளலாம்.

    இந்துமதம் எப்போதுமே ஓடா சாக்கடையாகத் தேங்கி நிற்பதில்லை. நில்லாமல் தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் தெளிந்த நீரோடை. அதாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற கொள்கைப்படியே ஓடுவது. இன்று மனிதனுக்கு எப்படி உரிமைகளோ அப்படி விலங்குகளுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்பது நம் மனித பண்பாட்டு வாழ்க்கையின் நல்ல பரிணாம வளர்ச்சி. பாரம்பரியம், ஆன்மிகம் என்று சொல்லி பழைமையில் மதத்தைப் போட்டு நாறடிக்காமல், விலங்குகள் கோயிலுக்குத் தேவையில்லை என்று புதிய வழி செய்வதே இந்துமதத்தை எதிர்காலத்தில் முன்னெடுத்துச்செல்லும்.

    இவ்விழிப்புணர்வை இலிஸ் ஜோன்சு, மெக்நாயர், மற்றும் சங்கீதா ஐயர் தத்தம் முயற்சிகள் வழியாகச் செய்திருந்தால், அவர்கள் நம் நன்றிகள்.

    — பால சுந்தர விநாயகம்.

    1. Avatar
      Radha Rajan says:

      Well said! Truth is truth no matter who says it. If Liz Jones is saying it and you font like it, then Haran is saying it and it is black. You have the truth in black and white.

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // பாரம்பரியம், ஆன்மிகம் என்பவர்கள், இந்துமதத்தில் எங்கேயாயினும் கோயிலுக்குள் ஆனை கண்டிப்பாக இருக்க வேண்டுமென்று போட்டிருக்கிறதா? நண்பர்கள் ஹரனும் பொன் முத்துக்குமாரும் சொன்னால் நன்று. //

    பாரம்பரியம் என்றோ ஆன்மீகம் என்றோ நான் சொல்லவில்லை. கோயிலுக்குள் யானை இருந்தாகவேண்டுமா என்ற கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது. நான் கண்டனம் தெரிவித்தது இந்த வெள்ளைத்தோலம்மாள் தங்களைத்தவிர மற்றவர்களை நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் – விளிம்புநிலை மனிதர்கள் என்று சித்தரிக்கும் அடிமுட்டாள்தனத்தைத்தான்.

    யானைகளை நாம் வதைக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ’வதைக்கமட்டுமே செய்கிறோம்’ என்று எழுதுவதற்காகவே ஆயிரக்கணக்கில் இந்த அம்மணி வந்திருக்கிறார்போல தெரிவதாக கல்யாண் வர்மா கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

    // கர்நாடகத்தில் யானைகள் வியாபாரமயமாக்கப் படவில்லை. இங்கே சித்திரவதைகள் செய்வதில்லை என்று நான் சொல்லியதை லிஸ் ஜோன்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பல கேள்விகள் கேட்டாலும் என்னுடைய விவரமான பதில்களை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர் தான் என்ன எழுதவேண்டும் என்பதை முன்பாகவே முடிவு செய்துவிட்டது போலவும் அதற்கான சான்றுகள் தான் அவருக்குத் தேவைப்படுகிறது என்றும் எனக்குத் தோன்றியது //

    நான் கண்டிப்பது இந்த வக்கிரமான உள்நோக்கத்தைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *