சோம.அழகு
அன்புள்ள பாரதி,
உன் நினைவு தினத்தில் உன் நினைவு வந்தது. அதற்காகத்தானே ‘நினைவு தினம்’ ! விண்ணுலகிலும் இணைய வசதி உண்டு என்று ஊர்க்குருவி சொன்னதால், உனக்கு இந்த மின்னஞ்சல். வள்ளுவனை உதாசீனப்படுத்தியதைப் போல் உன்னையும் உதாசீனப்படுத்த மனம் ஒப்பவில்லை எங்களுக்கு.
“மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்”
என்ற அப்பேதையின் கூற்றை ஆரூடமாகக் கருதி, அவனினும் பெரும்பேதைகளாய் அதையே பத்தாண்டுத் திட்டத்தின் இலக்காக நிர்ணயித்து அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் ‘புனிதமான’ பணியை சிரமேற்கொண்டு செயல்படும் உன்னதமான(!?) கர்மவீரர்களால் இலக்கு அதிவேகமாக நிறைவற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதியாக, உனக்கு இதைத் தெரியப்படுத்துவது என் கடமை.
எங்கு தொடங்கலாம்……..? மழலையிலிருந்தே தொடங்குவோம். Daddy, Mummy, Moon, Crow, Cow என எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே சொல்லிக்கொடுக்கிறோம். திசைகளில் கூட முதலில் ‘West’ ஐ தான் அறிமுகப்படுத்துகிறோம். இவ்வளவு ஏன்….? வலிக்கும் போது “Aw! Ouch!” என்றும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது “Please, Save me!” என்றும் கத்தினால்தான் ஆன்மா சாந்தியடையும் என்று நம்பி உயிர் துறப்….dead ஆவோம். தாய்மொழி என்ற ஒன்றே பிள்ளைகளுக்கு இல்லாதபடி செய்து அதிலும் பெருமை கொள்ளக் கற்றுக்கொடுக்கிறோம். எல்லா உணர்வுகளையும் கூறு போட்டு விற்கத் தொடங்கிவிட்டபடியால் “தாய்மொழியை விட வேறு எந்த மொழியிலும் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது” என்னும் மூடநம்பிக்கை எங்களுக்குக் கிடையாது. பள்ளிகளிலும் தமிழ் வராதபடி பார்த்துக்கொள்கிறோம். பள்ளிகளில் ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் இருப்பின் ஒன்றாம் வகுப்பிலேயே தமிழுக்கு டாட்டா பைபைதான். “நிலா நிலா ஓடி வா…..” என நிலவை வரவேற்ற நாங்கள், “Rain rain go away” என மழையைத் துரத்தி அடிக்கிறோம். தாத்தா-ஆச்சி Grandpa-Granny ஆனார்கள். மாமா-அத்தை, சித்தப்பா-சித்தி, பெரியப்பா-பெரியம்மா எல்லோரையும் ‘Uncle-Aunt’ல் அடக்கி விட்டோம். ‘பத்தாவது வரை கட்டாயத் தமிழ்க்கல்வி’ சட்டத்தில் துளையிடும் அரும்பணி சில தனியார் பள்ளிகளால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்யன், மாண்டரின், சில்போ(விசில் மொழி), யுபிக், ரோடோகாஸ்,……..இவ்வளவு ஏன், கோய்சான் (நாக்கைச் சொடுக்குவதால் ஏற்படும் ஒலிகளால் ஆன ஆப்பிரிக்க மொழி) மொழியைக் கூட கற்போம். ஒருபடி மேலே சென்று ஜீவசமாதியான பழங்குடி மொழிகளைக் கூட கற்றாலும் கற்போமே தவிர தமிழை…….சிவ! சிவா!….மனதாலும் நினைக்கமாட்டோம். ‘ஜீவசமாதியடைந்த ஒரு மொழியைக் கற்றால்தான் வேலை’ என்ற சட்டம் இன்னும் 6 மாதங்களில் அமலுக்கு வர இருக்கிறது.
பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதை நிறுத்தச் சொல்லி இரகசிய அவசரச் சட்டத்தை ஐந்து ஆண்டுளுக்கு முன்பே பிரகடனம் செய்தாயிற்று. எனவே ஷ, ஸ, க்ர, த்ர, ஹ்ர போன்று அப்பத்தாக்களின் வாயில் நுழையாத, தமிழுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒலிகள் பெயரில் இல்லையென்றால், “இன்னிலருந்து 150 வருசம் இவன தள்ளி வைக்கிறேன். இவனுக்கு ஆரும் தண்ணி கொடுக்கக்கூடாது…… பேசக்கூடாது….. மீறுறவங்களையும் தள்ளி வைப்போம்” என 11 பேர் கொண்ட குழு உடனடி நியாயம் வழங்கிவிடும். மக்களும் நன்றாகவே ஒத்துழைப்பு தருகிறார்கள். பாட்டன், பூட்டன் பெயரைப் பிள்ளைக்கு இட விரும்பும் பழைமைவாதிகள் கூட, முனியம்மா ஆச்சி பெயரை ‘முனித்ரா’ என்றும், குப்புசாமி தாத்தா பெயரை ‘குப்ரீஷ்’ என்றும் இடும் அளவிற்கு மனப்பக்குவமும் முதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். பெயருக்குப் பொருள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் மிலேச்சர்களாகிய எங்களுக்கு முக்கியமில்லை. குப்ரீஷை, குப்புசாமி என்ற பெயரிடம் இருந்து மட்டுமல்ல….. ஆசையாக ‘குப்ரீஸு…’ எனக் கூப்பிடும் குப்புசாமி தத்தாவிடமிருந்தே பிரித்துதான் வைக்கிறோம். அவரிடம் இருந்து இவன் ஏதாவது தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு விட்டால்….? தமிழை மறக்கடிக்கப் பள்ளிக்குச் செலுத்தியிருக்கும் லட்சங்கள் பாழ்.
வீட்டிலும் இயன்ற வரை ஆங்கிலமே. (எங்களில் பெரும்பாலானோர்க்கு ஆங்கிலமும் சரிவர தெரியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும். நீ தயவுசெய்து எங்கள் ஆங்கிலத்தைத் தப்பித் தவறி கூட கேட்க முயலாதே. உனது முண்டாசையும் தாண்டி பாய்ந்து வழிந்து சட்டையை நனைக்கும் இரத்தம் ). எங்களுக்குத் தெரிந்த ஒன்றாம் வகுப்புப் பாட புத்தகத்தில் உள்ள அறிமுக ஆங்கிலச் சொற்கள், கைபேசியில் இருக்கும் அகராதி செயலி, ’30 நாட்களில் ஆங்கிலம்’ போன்ற கவித்துவமான புத்தகம் – இவற்றை வைத்துக்கொண்டு தப்பும் தவறுதலுமாக இழுத்திழுத்து முடியைக் கோதி ஒதுக்கி விட்டுக் கொண்டே பேசினால் அது சரியான நல்ல ஆங்கிலமாக மாறி அருமையாக உருவெடுத்துவிடும் என்பதை அரைகுறை ஆங்கிலம் தெரிந்த நடிகைகள், பலரின் ஆழ்மனதில் ஆணி போல் அடித்துப் பதித்திருக்கிறார்கள். இரண்டு ஆங்கில வாக்கியங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாத அந்தத் தருணம் தமிழுக்கு மாறுவோம். மறு நொடி மீண்டும் ‘செம்மொழி’ ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் உணர்வு தலைதூக்கும். இப்படியாக ‘நானும் ஷேக்ஸ்பியர்தான்’ என ஆங்கிலப் பருந்துகளாக ஏமாற்றுவதிலும் வெற்றி கண்டுவிட்டோம்.
பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியின் வளத்தையும் சிறப்பியல்புகளையும் அறிய வாய்ப்பளிக்காததால் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு……முதலிய சங்க இலக்கியங்கள் பக்கம் தலைகூட வைக்க மாட்டார்கள். “பட்துப்பாட்? ஏதாவது grilled சிக்கன் அயிட்டமா?” எனக் கேட்கும் அளவுக்குப் பிள்ளைகளின் உலக அறிவை வளர்த்தெடுத்திருக்கிறோம்.
“ உலகம் பிறந்தது எனக்காக ஓடும்
நதி களும் எனக்காக “ – இதைத் திருக்குறள் என்றும் ‘மூஞ்சி கழுவாத மூதேவி’ என்னும் வசவைப் பழமொழி என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள், இலக்கை நோக்கிய எங்கள் வேலைப் பளுவை வெகுவாகக் குறைக்கிறார்கள். இதையெல்லாம் மீறி (பொருளாதாரச் சூழ்நிலையால்) தமிழில்தான் படிப்பேன் என அடம்பிடிப்பவர்களை எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அடையச் செய்து, பத்தாம் வகுப்பில் படிக்காதவர்களுக்கும் மதிப்பெண்களை வாரி வழங்குவதால் எழுத்துப் பிழையில்லாமல் ஒரு வார்த்தையைக் கூட எழுத இயலாத ஜென் நிலைக்கு உயர்த்திவிட்டோம் எங்கள் எதிர்காலத்(!?) தூண்களை. மன்னிப்புக் கடிதத்தில் “மந்ணிப்பு கோட்டு கெல்கிரேன்” என எழுதும் அளவிற்கு அவர்களுக்குக் கற்பூர புத்தி. வாழ்விற்குத் தேவையான உயர்ந்த மதிப்பீடுகள், வாழ்வின் அழகியலை ரசிக்கத் தேவையான ரசனைகள் – இவை தமிழ் இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் கொட்டிக் கிடப்பதை அள்ளி மண்ணில் போடும் வேலைதான் மிகக் கடினமாக இருக்கிறது. வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற் போல் பாடல் இயற்றி வைத்திருக்கின்றனர் படுபாவிகள். அதையெல்லாம் மறக்கடிப்பதற்காகத்தான் தன்னம்பிக்கை புத்தகம், தும்பிக்கை புத்தகம் எனப் பலவற்றை வணிகத்திற்கு உட்படுத்தி, SWOT analysis, KNOT analysis, POT analysis என கண்ட கழுதை மந்திரத்தையெல்லாம் பிரபலமாக்குகிறோம்.
குயில் பாட்டின் கவிஞனே! நீ பல மொழிகளில் சிறந்து விளங்கி இருக்கலாம். ஆனால் எங்களைப் போல் எந்த வார்த்தையைக் கொடுத்தாலும் உன்னால் உரையாற்ற இயலாது. உதாரணத்திற்கு PIZZA என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். P-Punctuality, I-Intelligence, Z-Zeal…….அடுத்த Zக்கு என்ன போடுவது என்று தெரியவில்லை என்றால் Z-Zimbabwe என்றும் A-Aandippatti என்றும் பீட்சாவை விரித்து, “வாழ்க்கை என்பது பீட்சாவைப் போல. முதல் மூன்றும் இருப்பின் ஆண்டிப்பட்டியிலிருந்து ஜிம்பாவேக்குக் கூடச் செல்லலாம்” என்று தத்து பித்தாக உளறிக் கொட்டிப் பிழைப்பு பார்க்க உதவுகிறது ஆங்கிலம்.
தமிழை டமிலாக தமிழர்கள் நாவில் புரளச் செய்தது எங்கள் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கது. ழகரத்தைச் சரியாக உச்சரித்தால் நாக்கு கழன்று விழுந்துவிடும் என்று எல்லோரையும் மனதார நம்ப வைத்துவிட்டோம். ஆனால் பிரெஞ்சு zhaவைச் சரியாக உச்சரிப்போம். தன் மொழி தனக்கு வராது (“என்கு டமில் வராது”……) என்று புளகாங்கிதம் அடையும் ஒரே இனம் இப்போது உலகில் தமிழினமாகத்தான் இருக்க முடியும். Entrepreneur, Comparable போன்றவற்றைத் தவறாக உச்சரிப்பவர்களை ஏற இறங்க ஏளனமாகப் பார்த்து அவமானப்படுத்தும் ஒலிப்பியல் வல்லுநர்களாகிய நாங்கள், பளம், பலக்கம், ஸோரு என்று முத்துக்களாக உதிர்ப்பவர்களை பல்லிளித்துக் கொண்டே உற்சாகப்படுத்துவோம். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வானொலி, தொலைக்காட்சி, பண்பலை ஆகியவற்றில் வேலை தந்து லகர, ளகர, ழகர வேறுபாடின்றி அலற விடுவோம். “வநக்கம் தோலா…….இந்த காலைப் பொலுதுல உங்கலோட பேசிட்டிருக்குரது நான் உங்க க்ரூப்பன் சாம்” (கருப்பண்ணசாமியா இருக்குமோ?) என்று பண்பலையில் விடியற்காலை கேட்கும் பொழுது…..அட! அட! அட!…….உனக்காவது காதில் மட்டும்தான் பாய்ந்தது. எங்களுக்கோ தினந்தினம் இந்த ஸென்டமில் தேன் கடலிலேயே நீந்தும் பேறு.
தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் பலரும் இந்தத் ‘தமிழ் அழிப்பு’ போராட்டத்திற்குப் பெரிதும் உதவுவதால் ஒவ்வொருவரின் பெயரையும் தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க 50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இந்த இடத்துல நீங்க ‘எப்படி உதவுறாங்க’னு கேக்கணும்ங்க…..பாமரர்களாகிய எங்களுக்கு ஆங்கிலத்திற்குத் தமிழை ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளும் அந்த வித்தையைக் கற்றுத் தந்ததே இந்த உயர்ந்த உள்ளங்கள்தாம். இவர்கள் எவ்வளவு அழகாகத் தொகுத்து வழங்குகிறார்கள் என்றால் பார்க்கும் எங்களுக்குச் சமயத்தில் (தரங்கெட்ட) ஆங்கிலச் சேனலைப் பார்ப்பது போலவே தோன்றும். உதாரணமாக, சமையல் வல்லுநர்களைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். தம் சமையலைத் தாமே நொடிக்கு நூறு முறை பாராட்டி, “Fry பண்ணி…..boil பண்ணி……..saute பண்ணி” என்று ‘பண்ணி’ பாஷை பேசுவார்கள் இந்த (தேவர் அனையர்) ‘வராகர்’கள். மிளகு ரசத்தைத் தவிர எல்லாவற்றையும் சீஸ் மழையில் குளிப்பாட்டும் சிலர், இஞ்சிப்பூண்டு விழுதைக் கூட ‘Ginger-Garlic paste’ என்றால்தான் சமைக்கும் உணவு ருசிக்கும் என ‘Fantastic’ ஆக நிலை நாட்டிவிட்டனர். எல்லாவற்றையும் தாண்டி எங்கள் ஆச்சிகளின் அஞ்சறைப் பெட்டியை Cumin seeds, Fenugreek, Star anise, Pepper, Asafoetida, Cardamom, Cinnamon முதலியவற்றால் நிரப்பிப் புரட்சி செய்துவிட்டார்கள். Basil leaves எனத் துளசியை அறிமுகப்படுத்திய ஒருவரின் நுண்ணறிவைக் கண்ட போதுதான் தமிழ் அழிப்பிற்கான எங்கள் வேகம் போதவில்லை என உணர்ந்தோம். உனது பாடலில் உள்ள ‘மெல்ல’ என்னும் வார்த்தையை ‘24G வேகத்தில்’ (இதை எழுதும் போது 4G தான். பிரசுரமாகுகையில் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குச் சென்று விட்டால்….?) என மாற்றிய எங்கள் விடி வெள்ளி(கள்) ‘இவை’.
இப்படியாக நாங்கள் இரத்தம் சிந்திப் பாடுபட, அவ்வப்போது தரமான இலக்கியக் கூட்டங்கள் நடத்தி எங்கள் இலக்கின் ஆணி வேரையே பிடுங்கப் பார்க்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். தமது வேர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழப்பதை மனவேதனையோடு மிஷேல் ஒபாமா முன் கவிதையாய் வடித்த அமெரிக்க வாழ் தமிழரான மாயா ஈஸ்வரன், சங்கரன்கோவிலில் ‘தமிழ்ப் பள்ளி’ நடத்தும் சங்கரராமன் போன்றோர் உன்னை அவ்வப்போது ஞாபகப்படுத்துவார்கள். இவர்களை நிரம்பத்தான் பாராட்டுகிறார்கள். இவர்களுக்கு மட்டும்தான் மொழியுணர்வு உண்டோ? உ.வே.சா அவர்களுக்கும் தான் தமிழ் மொழி உணர்வு அதிகம். இதை வாசிப்பவர்களுக்கு “பாரி யொருவனு மல்லன் ; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே” என்னும் கபிலரின் சங்கப்பாடல் வரிகள் நினைவுக்கு வருமாயின் நான் பொறுப்பல்ல.
ஐயா பாரதி ! நீ சொன்ன அப்பேதையின் முதல் வரி 70 விழுக்காடும் இரண்டாம் வரி 50 விழுக்காடும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த அறிக்கையை இன்னும் ஐந்து ஆண்டுகளில் சமர்ப்பிக்கிறேன். நன்றி!!!
அன்புடன்,
அலகு.
( இப்படித்தான்பா கூப்புடுறாங்கோ !)
- சோம.அழகு
- நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்
- திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை
- தொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்
- பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்
- அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்
- இரு கவிதைகள்
- பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா
- காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்
- டமில் வலர்க!!!
- கைப்பிடிச் சோறு
- கவி நுகர் பொழுது-9 அகிலா
- கேள்வியும் பதிலும்
- உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்
- பெண்மனசு
- சில மருத்துவக் கொடுமைகள்
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9